You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Anbin Vazhiyathu - Episode 19

Quote

19

Trying to be a copy of someone else is nothing but devalue yourself

அங்கு வந்திருந்த அத்தனை குழந்தைகளும் அழுது அலப்பறை செய்து கொண்டிருக்கும் போது மதியழகி மட்டும்,

“பை அன்பப்பா… பை ம்மா” என்று உற்சாகமாகக் கையசைத்துவிட்டு உள்ளே சென்றாள். அவளின் ஆர்வத்தை நான் ஆச்சரியத்துடன் பார்த்து விட்டுத் திரும்பினால் மஹாவின் முகம் சுருங்கிக் களையிழந்து போயிருந்தது.

“ஏ மஹா” என்று நான் தோளைத் தொட்டதுமே அவள் விழிகளில் மளுக்கென்று கண்ணீர் மணிகள் உருண்டு விழ,

“நீ என்னடி குழந்தை மாதிரி?” என்று அவள் தோளை அணைத்துப் பிடிக்க, அவள் அழுகை அதிகமாகிவிட்டது.

“ஏய் லூசு... குழந்தையே அழாம போகுது... உனக்கு என்ன?” என,

“தெரியல... எனக்கு ஒரு மாதிரி இருக்கு அன்பு” என்று அவள் கலங்க,

“முதல கண்ணைத் துடை” என்று என் கைகுட்டையை எடுத்துக் கொடுத்த நான், 

“நீ முதல கிளம்பு... நீ அழுது அவளை அழ வைச்சுராதே” என்றேன்.

“கொஞ்ச நேரம் இங்கேயே நிற்கலாம் அன்பு... மத்தவங்க அழுறதைப் பார்த்து அவளும் அழுதானா” என்றவள் சொல்ல,

“அழுதா.... அப்படியே திருப்பிக் கூட்டிட்டுப் போயிடலாமா?” என்று நான் எள்ளலாகக் கேட்க அவள் தவிப்புடன்,

“இல்ல அன்பு... அவ அழுதா அப்புறம் யாராலயும் அவளைச் சமாதானப்படுத்தவே முடியாது” என்றாள்.  

“யாரு மதியா... அங்க பாரு... அவ இப்பவே ஒரு ஆளை ஃபிரண்டு புடிச்சிட்டா” என்று நான் காட்டிய திசையில் மதியழகி அழுது தேம்பி கொண்டிருந்த சிறுவனைச் சமாதானம் செய்து பேசிக் கொண்டிருந்தாள்.

“அவ செட்டிலாயிட்டா... நீ வா” என்று மஹாவின் தோள் பற்றி இழுத்து வரும் போது நிரஞ்சனா தோள் பையும் கையில் புத்தகமுமாக எதிரே நடந்து வந்தாள்.

நான் எதிர்பார்க்காத சற்றும் விரும்பாத சந்திப்பு. பார்த்தும் பார்க்காதது போல கடந்து விடலாம் என்று எண்ணிய போது, “அன்பு” என்று அழைத்தாள்.

நான் நிற்கவில்லை. ஆனால் மஹா நின்று, “நிரஞ்சனா க்கா” என, வேறு வழியில்லாமல் நானும் நின்றேன்.

“ஓ... நம்ம மதிக்குட்டியை இங்கதான் சேர்த்திருக்கீங்களா?” என்று நிரஞ்சனா விசாரிக்க,

“ஆமா க்கா” என்று மஹா அவளிடம் சகஜமாகப் பேச,

“நானும் இங்க இங்க்லீஷ் டீச்சரா ஜாயின் பண்ணி இருக்கேன்... மதியை நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.

“ஓ... சரிங்க க்கா” என்று மஹா அவளுடன் பேசிக் கொண்டிருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. எரிச்சலானது. 

 “மஹா போலாம்... ஆஃபிஸ்க்கு டைமாகுது” என்று விறுவிறுவென்று முன்னே நடந்து சென்று நான் காரில் ஏறிவிடவும் மஹா என் பின்னோடு வந்து அவளும் ஏறினாள்.

காரை இயக்கிக் கொண்டே, “நீ மதியம் போல ட்ரைவரைக் கூட்டிட்டுப் போயிட்டு... மதிக்குட்டியைக்  கூட்டிட்டு வந்துடு” என,

“ம்ம்ம்” என்றவள் பின் மெல்ல, “ஏன் அவங்ககிட்ட அப்படி நடந்துக்குறீங்க... உங்களுக்கு என்னதான் பிரச்சனை” என்று கேள்வி எழுப்ப, நான் அவளை முறைத்துப் பார்த்தேன்.

“என்கிட்ட சொல்ல விருப்பம் இல்லனா போங்க... நான் கேட்கல” என்றவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள சில நொடிகள் அமைதியாக யோசித்த நான் பின்,

“சரி சொல்றேன்” என்று நடந்தவற்றை அன்புவின் பார்வையிலிருந்து விவரித்தேன்.

“நிரஞ்சனாக்கா வா... இப்படி பண்ணாங்க?” என்றவள் நம்ப முடியாமல் அதிர,

“அவளைப் பத்தி தெரியாது உனக்கு... அவ இதுக்கு மேலயும் பண்ணுவா... அறிவை வீட்டை விட்டு அனுப்புனதோட பிரச்சனை முடியல... நானும் வெளியே வந்துட்டான்... என் கூடவே அம்மாவும் வந்துட்டாங்க...  நாங்க முன்ன தங்கி இருந்தோம் இல்ல... அது எங்க அம்மம்மா வீடு... அதுவும் இல்லனா... நாங்க ரோட்லதான் நின்னு இருப்போம்.”

”படிப்பு வேலைன்னு நானும் அறிவும் மூணு வருஷம் எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு எங்களுக்குதான் தெரியும்... காலேஜ்ல இருந்து வந்ததும் வேலை... வேலை விட்டா காலேஜ்னு மாத்தி மாத்தி ஓடுவோம்.”

”அப்பா கிரி அங்கிளைத் தூது அனுப்பி எங்களைத் திரும்பி வரச் சொன்னாரு... ஆனா நாங்க போகல... கஷ்டமோ நஷ்டமோ அப்பாவோட காசை எதிர்பார்க்காம கெளரவமா வாழ்ந்தோம்”

”படிச்சு முடிச்சப் பிறகுதான் எங்க லைஃப் கொஞ்சம் பெட்டராச்சு...  நான் ஒரு கம்பனில ஐம்பதாயிரம் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன்... அறிவு கதை எழுதுனான்... பப்ளிஷிங் ஆஃபிஸ்ல வேலை பார்த்தான்... அப்புறம் சில சினிமா படத்துக்கு ஸ்க்ரீன் ப்ளே எழுதிக் கொடுத்துட்டு இருந்தான்” என்று சொல்லி முடிக்கும் போது கார் வீட்டை அடைந்திருந்தது.

நான் மஹாவைப் பார்த்து, “இப்ப சொல்லு... அறிவை அவமானப்படுத்தினது இல்லாம எங்களைத் திட்டம் போட்டு வீட்டை விட்டே துரத்தின அவளை எப்படி மன்னிக்கவும் சகஜமா பேசவும் முடியும்னு நீ நினைக்குற” என்று கேட்க மஹா வருத்தத்துடன் என்னை நோக்கி,

“சாரி அன்பு” என்றாள்.

“சரி பரவாயில்ல... அந்த விஷயத்தை விடு... நீ ஸ்கூலுக்குக் கொஞ்சம் சீக்கிரமாகவே போயிடு... முதல் நாள் இல்ல... சீக்கிரமா விட்டாலும் விட்டுடுவாங்க” என,

“சரி” என்றவள் காரிலிருந்து இறங்கிக் கொண்டாள்.  

“நான் ஆஃபிஸ்க்குக் கிளம்புறேன்” என்று அங்கிருந்து புறப்பட்டு அலுவலகம் வந்து சேர்ந்திருந்தேன்.

அன்று உற்பத்திப் பிரிவுகளை மேற்பார்வையிட சென்ற போது பிரேமி பேக்கிங் செக்ஷனில் இருந்தாள். முகத்திலிருந்த காயம் ஓரளவு ஆறியிருந்தது. அனுபவமிக்க பெண் ஊழியர்கள் அவளுக்கு வேலையில் பயற்சிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

வேலைக்கு வந்து சேர்ந்த இந்த மூன்று நாளில் அவள் இப்போது ஒருவாறு தெளிந்துவிட்டது போல தெரிந்தது. ஆரம்பத்தில் இருந்த பயம் தயக்கம் எல்லாம் இல்லை.

அப்போது சந்த்ரூ என் பார்வையை உணர்ந்தவனாக, “சார்... நீங்க ரெக்கமன்ட் பண்ண அந்த புது எம்பிளாயி... ஐடி காட்ஸ்... செர்டிபிக்கேட்ஸ் எதுவும் இல்ல” என,

“அதெல்லாம் ரெடி பண்ணிக்கலாம்” என்றேன்.

“இல்ல சார்... சேலரி அகௌன்ட் க்ரியேட் பண்ணனும்” என்றவன் சொல்ல,

“ஒரு இரண்டு மாசம் கேஷாவே கொடுத்துடுங்க... அதுக்குள்ள ரெடி பண்ணிடலாம்” என்றேன்.

“ஓகே சார்” என்றவன் சொல்லவும் அவ்விடத்தைக் கடந்த நான் தூரத்திலிருந்து பிரேமியின் முகத்தில் ஒளிர்ந்த புன்னகையைப் பார்த்த போது மனதில் இனம் புரியாத ஓர் உணர்வும் நிறைவும் ஏற்பட்டது.  

இது போன்று வாழ்க்கையில் தடம் மாறிச் சென்ற பெண்களுக்கு எல்லாம் உதவ முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஒரு எண்ணம் எட்டிப் பார்த்தது.  

அதன் பின் நான் அறைக்குத் திரும்ப, “சார்... ஹேட் ஏஜென்ஸில இருந்து வந்திருக்காங்க... கான்பரன்ஸ் ரூம்ல வெயிட் பண்றாங்க?” என்று சந்த்ரூ அறிவுறுத்த,

“தோ வந்துட்டேன்” என்று விட்டு அங்கே சென்றேன்.

எங்கள் நிறுவனத்திற்காக எடுத்த விளம்பரப் படம் திரையிடப்பட்டது. அதனைப் பார்த்ததும் எனக்கு முழு திருப்தி ஏற்பட்டிருக்க,

“குட் ஜாப்” என்று அவர்களுக்குக் கைக் குலுக்கினேன். அவர்களுடனான சந்திப்பும் பேச்சுவார்த்தையும் நல்லபடியாக முடிந்தது. நேரம் பதினொன்றைக் கடந்திருக்க மஹவுக்கு அழைத்து, “ஸ்கூலுக்குப் போயிட்டியா மஹா... மதிக்குட்டி வந்துட்டாளா?” என்று விசாரிக்க,

“ஆன் வந்துட்டா” என்றாள். அதன் பின் மீண்டும் தொடர்ந்த அன்றைய என்னுடைய அலுவல்கள் முடிய மாலையாகிவிட்டது.

“கிளம்புட்டீங்களா?” என்று கேட்டு மஹா குறுந்தகவல் அனுப்பிய போதுதான் கிளம்ப வேண்டுமென்று நினைப்பு வர, அவளுக்கு அழைத்தேன்.

“என்ன மஹா... ஏதாவது முக்கியமான விஷயமா?”

“முக்கியமான விஷயம்தான்... உங்க பொண்ணு உங்களை எதிர்பார்த்துக் காத்திட்டு இருக்கா... அவளுக்கு ஸ்கூலில் நடந்த கதை எல்லாம் அப்பாகிட்ட சொல்லணுமா” என்றாள்.

“வேலை முடிஞ்சிடுச்சு மஹா... கிளம்பிட்டேன்... வந்துட்டே இருக்கேன்” என்றதும்,

“சரி சரி வாங்க” என்று அழைப்பைத் துண்டிக்க இன்டர்காமில் சந்த்ரூவை அழைத்து சில வேலைகளை நான் பட்டியலிட்டுவிட்டு, 

“சரி கிளம்புறேன்... நீ பார்த்துக்கோ... எனக்கு இந்த வேலை எல்லாம் நாளைக்கு முடிச்சுக் கொடுத்தா போதும்” என்று இருக்கையிலிருந்து எழுந்து கொள்ள,

“சார்” என்று இழுத்தான்.

“என்ன ஏதாவது சொல்லணுமா?”

“இல்ல... உங்களைப் பார்க்க அந்தப் புது எம்பளாயி பிரேமி வெயிட் பண்றாங்க... பார்த்து ஏதோ பேசணுமா? உள்ளே அனுப்பட்டுமா?” என்று தயக்கத்துடன் கேட்க நான் யோசனையுடன் நிமிர்ந்துவிட்டு,

“சரி உள்ளே அனுப்புங்க” என்ற மீண்டும் என் இருக்கையில் அமர,

பிரேமி உள்ளே வந்தாள்.

“உட்காரு பிரேமி”

“இருக்கட்டும் சார்... பரவாயில்ல... உங்களைப் பார்த்து நன்றி சொல்லணும்னு தோணுச்சு... அதான்” என்றாள்.

“நன்றி எல்லாம் அவசியம் இல்ல... நான் உன்னை நல்ல ஃபிரண்டாதான் பார்க்கிறேன்... நீயும் என்னை அப்படியே நினைச்சுக்கோ... உனக்கு என்ன தேவைனாலும் எந்தத் தயக்கமும் இல்லாம எனக்கு நீ நேரடியா ஃபோன் பண்ணி பேசலாம்.”

”அப்புறம் உன்கிட்ட எந்த ஐடி கார்டும் இல்லன்னு சந்த்ரூ சொன்னாரு... அதெல்லாம் ஒரு விஷயம் இல்ல... ரெடி பண்ணிடலாம்” என்றேன்.

அவள் என்னை வியப்புடன் பார்க்க நான் தொடர்ந்து, “உன் பையன் சிவா ஊர்ல படிக்கிறான் இல்ல... அவன் படிப்புச் செலவைப் பத்தி நீ எதுவும் கவலைபட வேண்டாம்... நான் பார்த்துக்கிறேன்” என அவள் அதீத ஆச்சரியத்துடன்,

“உங்களுக்கு சிவாவைத் தெரியுமா?” என்று கேட்டாள்.  

“உன்னைத் தெரியும் போது... உன் பையன் சிவாவைத் தெரியாதா எனக்கு” என்றேன். அவள் பார்வையில் நன்றி உணர்வு தளும்ப கைகள் கூப்பி நின்றவளிடம் சங்கடத்துடன்,

“பிரேமி... ப்ளீஸ் கையை இறக்கு” என்றேன்.

“இல்ல நீங்க எனக்கு செஞ்ச உதவி” என்று அவள் ஆரம்பிக்க,

“இந்த நன்றியுரை எல்லாம் வாசிக்காதே... இது உதவி நன்றி எல்லாம் இல்ல பிரேமி... நாம யாருக்காச்சும் கெட்டது செஞ்சா அது திரும்பி வர்ற மாதிரி நல்லது செஞ்சாலும் வரும்... நீ செஞ்ச நல்லதுதான் இன்னைக்கு உனக்கு திரும்பி வருதுன்னு நினைச்சுக்கோ” என்றேன்.

“என்ன நல்லது செஞ்சேன்? எனக்குப் புரியலயே”

“யாருக்கோ என்னைக்கோ நீ ஏதாவது நல்லது செஞ்சிருப்ப இல்ல? அதைச் சொன்னேன்”

“நான் யாருக்கும் அப்படி எந்த நல்லதும் செஞ்ச மாதிரி எனக்கு ஞாபகம் இல்ல”

“செஞ்ச உனக்கு எப்படி ஞாபகம் இருக்கும்... அதுல யார் பயனடைஞ்சாங்களோ அவங்களுக்குதான் ஞாபகம் இருக்கும்” என, அவள் என்னை ஆழ்ந்து பார்த்தாள். பின் ஒரு மௌன புன்னகையை  உதிர்த்துவிட்டு, “சரி சார்... நான் வர்றேன்” என்று திரும்பி நடந்தாள். 

அவள் பார்வையிலிருந்த கேள்வியை அவள் கேட்கவில்லை. ஒரு வேளை அவள் கேட்டிருந்தால் என்னால் உண்மையை மறைத்திருக்கவும் முடியாது.

சட்டென்று என் நினைவுகள் யோசனைகள் எல்லாம் பழைய நாட்களுக்குள் புகுந்துவிட, சிரமப்பட்டு அந்த நினைவுகளிலிருந்து என்னை மீட்டுக் கொண்டு அலுவலகத்திலிருந்து கிளம்பினேன்.

வீட்டிற்குச் சென்றதும் மதிக்குட்டி எனக்காகவே சொல்ல நிறைய கதைகள் வைத்திருந்தாள். தோட்டத்தில் ஊஞ்சல் ஆடியபடி அவளை மடியில் கிடத்திக் கொண்டு அவள் பேச்சை நான் கேட்க மஹா மகளுக்கு உணவு ஊட்டினாள். சாப்பிட்டு முடித்து சில நிமிடங்களில் அவள் என் மடியிலேயே படுத்து அயர்ந்து உறங்கிவிட நான் அறையில் தூக்கிச் சென்று அவளைப் படுக்க வைத்தேன்.

அதன் பின் நான் மஹா அப்பா மூவரும் ஒன்றாக உணவு உண்டு முடித்தப் பிறகு,

“குட்டிமா தனியா படுத்துட்டு இருக்கா... நீ மேலே போ... நான் அப்பாகிட்ட கொஞ்சம் பேசிட்டு வர்றேன்” என்று மஹாவை அறைக்கு அனுப்பிவிட்டு, நானும் அப்பாவும் அவர் அறையில் அமர்ந்து பேசினோம்.

அப்போது நிறுவனத்திற்காக எடுத்த விளம்பர படத்ததை என் மடிக்கணினியை இயக்கி அவருக்குப் போட்டுக் காண்பித்தேன்.

“ரொம்ப நல்லா இருக்கு அறிவு... கிரேட் ஐடியா” என்றவர் மேலும்,

“ஜி எம் இன்னைக்கு உன்னைப் பத்தி புகழ்ந்து பேசிட்டு இருந்தாரு... அந்த பில்டிங் வேலை செஞ்ச பையன் விழுந்துட்டான்னு நீ ஹாஸ்பிட்டலுக்கு நேர்ல போய் பார்த்துட்டு வந்தியாம்”

“போய் பார்த்துதானே ஆகணும்”

“நம்ம சூப்பர்வைஸரைக் கூட அனுப்பி இருக்கலாம்... ஆனா நீ நேர்ல போய் பார்த்தது கம்பனி எம்பிளாயிஸ்க்கு எல்லாம் பரவி... அவங்களுக்கு எல்லாம் உன் மேல நல்ல மதிப்பும் நம்பிக்கையும் ஏற்பட்டடிருக்குனு சொல்லி ஜி எம் உன்னைப் பாராட்டித் தள்ளிட்டாரு... எனக்குக் கேட்கவே பெருமையா இருந்துச்சு” என்று புன்னகையுடன் என் தோளைத் தட்டினார்.  

“தேங்க்ஸ் பா... ஆனா ப்ளீஸ் அறிவுன்னு திரும்ப கூப்பிடாதீங்க” என்றேன்.

அவர் முகம் வாட, “நானும் உன் பேரைக் கூப்பிடலனா உன் அடையாளத்தை நீ மறந்துடுவ” என்றார்.

“மறந்துதான் போகட்டுமே... அந்தப் பேர்னால எனக்கு என்ன உபயோகம்” என்று அலட்சியமாகக் கூறிய நான், “ப்ளீஸ் பா... இதைப் பத்தி நாம திரும்பத் திரும்ப பேச வேண்டாம்... நீங்களும் அந்தப் பேரை வைச்சு கூப்பிடாதீங்க” என்றேன்.

அவர் என் கையைப் பற்றிக் கொண்டு, “தெரியாம உன்னை நான் அன்புன்னு கூப்பிட்டு இருக்கலாம்... தெரிஞ்சே என்னால இப்போ அப்படி பொய்யா கூப்பிட முடியல... எல்லாத்துக்கும் மேல காலையில உங்க அம்மா படத்துக்கும் உன் படத்துக்கும் மஹா மாலை மாட்டிட்டு இருந்த போது என் மனசுக்கு என்னவோ மாதிரி ஆகிடுச்சு” என்றார்.

“இந்த சென்டிமென்ட்ஸ் எல்லாம் எனக்கு இல்லபா... நீங்களும் ரொம்ப சீரியஸா இதைப் பத்தி எல்லாம் யோசிச்சுக்காதீங்க” என்ற நான் மேலும்,

“இனிமே நடந்த எதையும் மாத்த முடியாது... இருக்க மாதிரியே நாம பழகிக்குறதுதான் நல்லது... சும்மா மனசைப் போட்டுக் குழப்பிக்காம படுத்துத் தூங்குங்க” என்று விட்டு எழுந்து கொண்டேன். ஆனால் செல்லாமல் மீண்டும் அப்பாவின் புறம் திரும்பி,

“இன்னைக்கு மதியை ஸ்கூலில விட்டுத் திரும்பின போது நிரஞ்சனாவை அங்கே பார்த்தேன் பா... ஏதோ அந்த ஸ்கூலில் இங்கலீஷ் டீச்சரா வேலை பார்க்கிறன்னு சொல்றா... எனக்குப் புரியல.. அவளுக்கு வேலை பார்க்க வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு” என்று கேட்க,

“உன்கிட்ட நானும் சொல்ல மறந்துட்டேன்... அவ நான் கொடுக்குறன்னு சொன்ன சொத்து எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டா... கம்பனி பேர்ல இருந்த ஷேர்ஸ கூட அவளும் தேவியும் திருப்பி எழுதிக் கொடுத்துட்டாங்க” என,

“நிஜமாவா...! நம்ப முடியலேயே!” என்று நான் வியக்கும் போதே,

“அது மட்டும் இல்ல... ராஜேஷும் அவளும் பிரிஞ்சிட்டாங்களாம்... கேள்விபட்டேன்” என்றார்.

“ஓ” என்று கொஞ்சம் அதிர்ந்த நான் பின் ஒரு பெருமூச்சுடன், “சரி நீங்க படுத்துக்கோங்க” என்று அந்தப் பேச்சை அதோடு முடித்துக் கொண்டு என் அறைக்குச் செல்லப் படிக்கட்டு ஏறுகையில் நிரஞ்சனாவைப் பற்றிய யோசனை வந்தது.

அவளைப் பழி வாங்க வேண்டுமென்ற எண்ணத்துடன்தான் இந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தேன். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் நான் இதுவரையில் மேற்கொள்ளவில்லை. எல்லாம் அதுவாக நடந்திருக்கிறது. இருப்பினும் நடப்பதைக் குறித்து என் மனம் எந்தவித சந்தோஷமும் கொள்ளவில்லை.

யோசித்துக் கொண்டே அறைக்குத் திரும்பிய போது மஹா மதியழகியை அணைத்தபடி அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள். சத்தமில்லாமல் மதியழகியை ஒரமாக தலையணை வைத்து அணைப்பாகப் படுக்க வைத்துவிட்டு மஹா அருகில் நெருக்கமாக அவளை அணைத்துக் கொண்டு நான் படுத்துக் கொள்ள, அவளும் என் புறம் திரும்பி அணைத்துக் கொண்டாள்.

“தூங்கலையாடி நீ” என்று மெல்லிய குரலில் நான் கேட்க,

“நீங்க வராம எனக்குத் தூக்கம் வருமா?” என்றபடி என் தோளில் தன் தலையை வைத்து வாகாகப் படுத்துப் கொண்டாள்.

நமக்காகக் காத்திருக்கவும் நம்மை நேசிக்கவும் இப்படியொரு உறவு இருக்கும் போது வேறென்ன வேண்டும் வாழ்க்கையில்... இந்த அன்பிற்காக என்ன வேண்டுமானாலும் துறக்கலாம். என்னையே கூட துறக்கலாம்.

“லவ் யூ” என்று அவளை என் தோளோடு அணைத்து நெற்றியில் முத்தமிட பதிலுக்கு அவளும் என் கன்னத்தில் முத்தமிட்டு, “லவ் யூ” என்றாள். இருவரும் அந்தக் கதகதப்பான அணைப்பில் சில நொடிகளில் கண்ணயர்ந்து விட்டோம்.  

‘டேய் அறிவு... எங்க எல்லாம் உன்னைத் தேடுறது... எழுந்திருடா... வாடா போலாம்’

இந்த வார்த்தைகள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. என்னை உலுக்கியது. நான் விழித்துப் பார்த்த போது அவ்விடத்தில் யாருமே இல்லை. நட்ட நடுத் தெருவில் நான் மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறேன்.

என்னைச் சுற்றி இருட்டும் தனிமையும் மட்டுமே.

அங்கிருந்து எழுந்து ஓடிவிட வேண்டுமென்று மனம் பதறிய போதும் என் உடல் அசைய மாட்டேன் என்கிறது. அந்த இருள் என்னை முழுவதுமாக விழுங்கிக் கொள்வது போன்ற பிரமை உண்டானது. பயமும் நடுக்கமும் ஏற்பட,

“டேய் அறிவு” என்று மீண்டும் அந்தக் குரல் என் காதில் அலறவும் பதறித் துடித்து விழித்துப் பார்த்தேன். எல்லாம் கனவு.

ஏசியின் குளுமையிலும் என் கழுத்தெல்லாம் வியர்த்து நனைந்துவிட நிமர்ந்த பார்த்து போது நேர் எதிரே நானும் அன்புவும் இணைந்திருந்த புகைப்படம் கண்ணில் பட்டது. இரண்டு நாள் முன்பு மஹா இந்தப் படத்தை மாட்டி வைத்த போதே என்னவோ எனக்குச் சரியாகப் படவில்லை. இதில் அப்பா வேறு ஏதேதோ பேசித் தெளிவாக இருந்த என் மூளையைக் குழப்பிவிட்டார் என்று தோன்றியது.

மஹா மற்றும் மதியின் உறக்கம் கலையாமல் எழுந்து கொண்ட நான் அந்தப் படத்தைக் கழற்றி அலமாரியில் இருந்த என்னுடைய பையிற்குள் திணித்தேன்.

அப்போது என் கையில் ஒரு சிகரெட் துண்டு அகப்பட்டது. இந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டுமென்று நினைத்த போதும் அதனைப் பார்த்ததும் மனம் பரபரத்தது. பால்கனி கதவைத் திறந்து வெளியே வந்த நான் அந்த சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகைக்க ஆரம்பித்தேன்.

கொஞ்சமாக மனம் ஆசுவாசப்பட்டது.

முன்பு பல சூழ்நிலைகளில், ‘நான் அன்பு இல்ல அறிவு’ என்று பலரிடம் தெளிவுப்படுத்தி இருக்கிறேன். கடுப்புடன் கத்தி இருக்கிறேன்.

 ஆனால் இன்றைய சூழ்நிலையில், ‘நான் அறிவு இல்ல அன்பு’ என்று யாரிடமும் நானாகச் சொல்ல நேர்ந்ததில்லை. எல்லோருமே என்னை அன்புவாகவே நம்பவும் ஏற்றுக் கொள்ளவும் செய்துவிட்டார்கள்.

ஆனால் என்னிடமே நான் பல நூறு முறைகள். ‘நான் அறிவு இல்ல அன்பு’ என்று ஜபித்துக் கொண்ட போதும் என் ஆழ்மனம் அதனை ஏற்க மறுக்கிறது. அவ்வப்போது அது என்னை உலுக்கி எடுத்து என் நிம்மதியைக் குலைக்கிறது.

You cannot copy content