You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Anbin Vazhiyathu - Episode 2

Quote

2

There is a thin line between love and hate as both feeling are strong emotions that someone holds for another one…  

உயர உயரமான மரங்களும் அடர்ந்த முட்புதர்களும் சலசலத்து ஓடும் சிறிய ஓடைகளும் என அந்தப் பெருங்காடு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிழுத்து என்னை விழுங்கிக் கொண்டிருந்தது. நடக்க நடக்க அவ்விடத்தில் பரவிய அடர்ந்த இருள் என்னைக் குருடாக்கிவிட்டதைப் போன்றதொரு உணர்வை ஏற்படுத்திற்று. பாதைகள் தெரியவில்லை.

முட்களும் கற்களும் என் தோல்களை உரசித் தாறுமாறாகக் கிழிக்க,  உடலெங்கும் காயங்களும் வலிகளுமாக நடக்கிறேன். நடக்கிறேன். நடந்து கொண்டே இருக்கிறேன்.

எப்படி இந்த அடர்ந்த வனத்திற்குள் வந்து நான் சிக்கிக் கொண்டேன் என்று எனக்கே தெரியவில்லை. பாதைகள் முடிவில்லாமல் நீண்டு கொண்டே இருந்தது. எங்காவது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் புள்ளியாக ஒரு சிறிய வெளிச்சம் தெரியாதா என்ற நம்பிக்கையில் தளராமல் நடக்கிறேன்.

கால்கள் கெஞ்சி மனம் சோர்ந்து தளர்கையில் அந்தக் குருட்டு இருளில் ஒரு சிறு வெளிச்சம் புலப்பட்டது. மெல்ல மெல்ல அந்த வெளிச்ச புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

நான் தேடிய வெளிச்சம் இதுவல்ல. இவை எனது இரத்த வாடையை முகர்ந்தபடி வேட்டையாட தேடி வந்த மிருகக் கூட்டங்களின் ஒளிமிகுந்த விழிகள்.

இருளை விடவும் வெளிச்சங்கள் மோசமானது. ஒளிந்து கொள்ள கூட அங்கே இடங்கள் இல்லை.

ஓடித் தப்பிக்கக் கூட எனக்கு அவை வாய்ப்புத் தரவில்லை. நான் மிரண்டு பின்னுக்கு நகர்வதற்குள் அந்த இரத்தம் குடிக்கும் கூட்டம் என் மீது பாய்ந்து பிராண்டியது. பிய்த்து எரிந்தது. நான் தப்பிக்கும் வழியின்றி அவற்றிடம் சிக்கிக் கொள்ள, என் உடல் நார் நாராகக் கிழத்து எரியப்பட்டது. அது தன் கோர பசிக்கு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக இரையாக்கிக் கொண்டது.

நான் வலியால் துடித்துக் கதறினேன். அந்தக் கொடூரமான வலியைத் தொடர்ந்து என் மூளை செயலிழந்தது... மூச்சு நின்றது... உயிர் ஒடுங்கியது.

இல்லை... இல்லை... நான் சாகல.  நான் சாகல.

எனக்கு உயிர் இருக்கு... மூச்சு இருக்கு.

அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்து மூச்சு வாங்கிக் கொண்டேன்.  

ஊப்ஸ்... இங்கே எந்தக் காடும் இல்லை. எந்த மிருகக் கூட்டமும் என்னை வேட்டையாடவும் இல்லை. 

நான்... நான் எனது படுக்கையில்தான் படுத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நொடி உயிர் போய் உயிர் வந்துவிட்டது.

எல்லாம் கனவு. வெறும் கனவுதான். ஆனால் அதனைக் கனவென்று நம்ப முடியாதளவுக்கு அத்தனை உயிரோட்டமாகவும் வலி நிறைந்ததாகவும் இருந்தது. அதுவும் மரணத்திற்கு நிகரான வலி!

இன்னும் எனக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது.

நெற்றி மற்றும் கழுத்துப் புறத்தில் பிசுபிசுத்த வியர்வை துளிகளைத் துடைத்து விட்டுக் கொண்டேன். சரியாகத் தூங்கி இரண்டு வாரங்களுக்கு மேலானது.

இன்றுதான் கொஞ்சமாக உறக்கம் வந்தது. அதுவும் பிரேமியின் தயவால்தான். அவள் மடியில் படுத்தப் பிறகுதான் எனக்குக் கொஞ்சமாக உறக்கம் வந்தது.

அவள் இப்போது அறையில் இல்லை. தரையில் சிதறிக் கிடந்த பணத்தாள்களும் இல்லை. என்னை உறங்க வைத்துவிட்டுச் சத்தமில்லாமல் அவற்றை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள். அவளும் என்னைத் தனியாக விட்டு விட்டுச் சென்றுவிட்டாள். சென்றுதானே ஆக வேண்டும்.

என்னுடனே நிரந்தரமாக இருக்க அவள் யார் எனக்கு?

தோழியா... காதலியா... இல்லை மனைவியா? இது எதுவுமே இல்லையே. ஆனால் காசுக் கொடுத்தால் இது எல்லாமுமாகவும் அவள் எனக்கு இருப்பாள். இருந்திருக்கிறாள்.

 பல நேரங்களில் என் புலம்பல்களைக் கேட்கும் தோழியாக, சில நேரங்களில் கைக் கோர்த்து கொண்டு ஊர் சுற்றும் காதலியாக, அவசியம் ஏற்படும் போது என்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் மனைவியாக,  எல்லாவற்றிற்கும் மேல் என்னை மடி சாய்த்து தூங்க வைக்கும் ஒரு அம்மாவாக...

மூன்று நாளாக அவளைத் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்கிறேன். இன்றுதான் வந்து சேர்ந்தாள். வீட்டிற்கு வந்தவளிடம் புலம்பித் தள்ளிவிட்டேன். இயல்பை விடக் கொஞ்சம் அதிகமாகவே... ஒரு வகையில் எல்லையை மீறிப் போய்விட்டது.

“அந்த மஹாவைப் போய் கல்யாணம் பண்ணிக்கப் போறானா...? அதுவும் அவளை” இப்படி பத்துக்கும் மேற்பட்ட முறை நான் அவளிடம் புலம்பித் தள்ளிவிட்டேன். என்னால் அந்தத் தகவலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதுவும் போயும் போயும் அந்த மஹாவைத் திருமணம் செய்யப் போகிறானாம்... அவன் திருமணம் செய்தாலும் கூட அவளைத் திருமணம் செய்யக் கூடாது என்று ஆணித்தரமாக என் மூளைக்குத் தோன்றியது.

ஆனால் என்னுடைய தவிப்பையும் அவஸ்த்தையையும் புரிந்து கொள்ளாமல் பிரேமி சாதாரணமாக,  “கல்யாணம் பண்ணிக்கப் போறன்னா நல்ல விஷயம்தானே... அதுக்கு ஏன் நீ இவ்வளவு டென்ஷனாகுற?” என்று கேட்கிறாள்.

எனக்குள் தீயாக  எரிந்து கொண்டிருக்கும் கோபத்தை உணராமல் அவள் பாட்டுக்கு அதில் பெட்ரோலை ஊற்றுகிறாள். எனக்குப் பற்றிக் கொண்டது.

“கல்யாணத்துல என்ன நல்ல விஷயத்தைக் கண்டுட்ட நீ...? காசுக் கொடுத்து நான் உன்னைப் பண்றேன்... அவன் காசுக் கொடுக்காம அவளைப் பண்ணப் போறான்... அவ்வளவுதான் வித்தியாசம்... வேறு என்ன மன்னாங்கட்டி இருக்கு அந்த இழவு கல்யாணத்துல?” என்று நான் சொன்னதும் உதட்டை அலட்சியமாகச் சுழித்தவள்,

“அதானே... உன்கிட்ட வேற என்ன விளக்கத்தை எதிர்பார்க்க முடியும்?” என்றபடி என்னை இளக்காரமாக ஒரு பார்வை பார்த்து வைத்தாள். அந்தப் பார்வை எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

“ஓ! அப்போ உனக்குத் தெரிஞ்சதைச் சொல்லு... உன் கல்யாண வாழ்க்கையைப் பத்தி சொல்லு...? உன் புருஷன் உன்னை எதுக்குக் கட்டிக்கிட்டான்...? உன்னை எப்படி பார்த்துக்கிட்டான்... சொல்லு?” என்று நான் கேட்ட நொடியில் அவள் நிலைகுலைந்துவிட்டாள்.

அவளின் முந்தைய வாழ்க்கையைப் பற்றியும் அவள் கணவனைப் பற்றியும் பேசினால் அவளால் தாங்கவே முடியாது என்று நன்றாகத் தெரிந்ததுதான் அவள் மீது அந்த ஈட்டியைச் சொருகினேன். அவள் என்னை அத்தனை இளக்காரமாகப் பார்த்திருக்கக் கூடாது. பேசி இருக்கவும் கூடாது.

ஆனால் அவள் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் என் மனம் இறங்கிவிட்டது. கோபம் போய்விட்டது.

“சாரி பிரேமி” என்றேன் உடனடியாக.

அவள் அந்த மன்னிப்பை ஏற்கவில்லை. தன் கைப்பையை மாட்டிக் கொண்டு அவள் அமைதியாக வெளியேற போக, “பிரேமி நில்லு போகாதே... நீ போயிட்டா... இன்னைக்கு இராத்திரியும் என்னால தூங்க முடியாது” என்று அவள் கையைப் பிடித்து நிறுத்தினேன். எனக்குத் தெரியும். என் கெஞ்சலையும் மீறி அவளால் போக முடியாது. அப்படியே படுக்கையில் என் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“பிரேமி”

“ஏன் டா அதைப் பத்தி பேசுன...? ஏன் பேசுன...? வேணும்டே எனக்கு வலிக்கணும்தானே?” என்றவள் என் தோளில் ஓங்கித் தன் பையை வைத்து சகட்டு மேனிக்கு அடிக்க, எனக்கு வலித்தது. ஆனால் என் வலியை விட அவள் வாழ்க்கையின் வலியும் ஏமாற்றமும் மிக மோசமானது. எனக்குத் தெரியும்.

“சாரி ப்ரேமி... தப்புத்தான்” என்று அவளிடம் இறங்கிய குரலில் மீண்டும் மன்னிப்பு வேண்ட,

“யார் அப்படி பேசினாலும் நீ அப்படி பேசி இருக்கக் கூடாது அறிவு... என் வலி தெரிஞ்சும் நீ அப்படி பேசி இருக்கக் கூடாது” என்றவள் என்னை அடித்துக் கொண்டே அழத் தொடங்கிவிட்டாள்.

“சரி சரி... சாரி” என்று நான் அவளை அணைத்துக் கொண்டு சமாதானம் செய்யவும், அவள் என் தோள் மீது சாய்ந்து தேம்பினாள்.

அத்தனை சீக்கீரம் அழக் கூடிய பெண்ணல்ல அவள். ஆனால் அவள் குடும்ப வாழ்க்கையின் அதிமோசமான தோல்வியை நினைக்கும் போது அவள் துண்டு துண்டாகிப் போவாள் என்று தெரிந்தும் நான் அதைச் செய்தேன்.

இப்போது அவளை நான்தான் சமாதானம் செய்தாக வேண்டும். கண்கள் மூடிக் கண்ணீருடன் என் மீது அயர்ந்தவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டேன். மெல்ல மெல்ல என் அணைப்பில் அமைதியடைந்தவளின் முகமெல்லாம் முத்தமிட்டதும் அவள் கண்ணீர் மட்டுப்பட்டுவிட்டது.

மெதுவாக என் இதழ்கள் அவள் இதழ்களை நெருங்கி முத்தமிட தொடங்கிய பின் அவள் கோபம் வருத்தமெல்லாம் என்னிடம் சரணடைந்துவிட, அதன் பின் இருவருமாக உடலால் கரைந்து எங்கள் மனத்துயரங்களைச் சில நிமிடங்களுக்காய் மறந்திருந்தோம்.

சலனமற்ற ஓர் அமைதியுடன் எங்கள் கூடல் முடிந்திருக்க. அவள் மெதுவாக எழுந்து தன் உடைகளை அணிந்து கொண்டு, “நான் கிளம்புறேன் அறிவு... எனக்கு டைமாகுது” என்றாள்.

“போகாதே பிரேமி... ப்ளீஸ்... எனக்குத் தூக்கம் வரமாட்டேங்குது” என்று அவளை நிறுத்தினேன்.

“அதுக்கு நான் என்ன பண்றது...? தூக்க மாத்திரை போடு” என்றாள் அலட்சியமாக.

“போட்டேன்... அப்பவும் வரல” என, அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள்.

“பிரேமி இரு... போகாதே” என்றவள் கையைப் பிடித்து இழுக்க, 

“நான் இப்படி சொல்றேனேனு கோபப்படாதே” என்றாள்.  

என்ன சொல்லப் போகிறாள்!

“உன்னால அன்புவை இப்போ இல்ல... எப்பவும் பிரிஞ்சிருக்க முடியாது” என்றாள். அந்த வார்த்தைகளைக் கேட்ட நொடியே எனக்குக் கொதித்துவிட்டது. அவள் கையை உதறி விட்டேன்.

“அறிவு அவசரப்படாதே... நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளு”

“நீ எதுவும் சொல்ல வேண்டாம்” என்று உடனடியாக எழுந்து என் பர்ஸிலிருந்த ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களைக் கொத்தாக எடுத்து அவளிடம் நீட்டி, “கிளம்பு... கிளம்பிப் போயிட்டே இரு” என்றேன்.

அவள் அந்தப் பணத்தைத் தட்டிவிட்டாள். அது கீழே சிதறி விழ, “உனக்கு எவன்டா அறிவுன்னு பேர் வைச்சது... சரியான அறிவு கெட்ட முண்டம்டா நீ” என்றாள் பட்டென்று, எதிரே இந்த வார்த்தையைப் பேசியது வேறு யாராக  இருந்திருந்தாலும் அவன் மூஞ்சி முகரைச் சிதறியிருக்கும். ஆனால் அவள் பிரேமி!

“பிரேமி வேண்டாம்... இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன... அவ்வளவுதான்... ஒழுங்கா கிளம்பிப் போயிட்டே இரு”

“போக முடியாது... என்ன பண்ணுவ?” என்றவள் என்னைக் கடுப்பாக முறைத்தாள். உண்மையிலேயே அவளை என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை? நான் மூச்சிறைக்க மிரட்டலாகப் பார்த்து வைக்க, அதற்கெல்லாம் பயப்பட கூடிய ஆளா அவள்? திடமாக என்னை நேராகப் பார்த்துப் பேசினாள்.

“நீ என்கிட்ட என்ன வேணா புலம்புவ... ஆனா நான் ஒரு வார்த்தை கூடப் பேசக் கூடாதோ?!” என்று நிறுத்தி நிதானமாகக் கேட்டவள் மேலும். “நான் இப்போ பேசுறேன்... நீ அதைக் கேட்குற” என்றவள் என் கையைப் பிடித்து அருகில் அமர வைக்க,

“என்னை விடு பிரேமி” என்று முரண்டுப் பிடித்தேன்.

ஆனால்  அவள் விடவில்லை. இழுத்துப் பிடித்து என்னை அருகில் அமர்த்திக் கொண்டு,  “நீ அன்புவை வெறுக்கிறன்னு சொல்றதெல்லாம் பொய்... சத்தியமா பொய்... உனக்கு அவனைப் பிடிக்கும்... ரொம்ப பிடிக்கும்... இந்த உலகத்துல இருக்க எல்லாத்தையும் விட உனக்கு அவனைத்தான் பிடிக்கும்” என்றவள் அடித்துச் சொன்னாள்.

நான் ஏற்கவில்லை. “பிரேமி” என்று இடைமறிக்க,

“பேசாதே... நான் சொல்றதைக் கேளு” என்றவள் மிதமாக என் கையை அழுத்திக் கொண்டு, “நீ அவனை விட்டு வந்த இந்த இரண்டு வாரத்துல நீ எப்படி இருக்கன்னு யோசிச்சு பாரு” என்ற போது என் மனம் இந்த இரண்டு வார நாட்களை ஓட்டிப் பார்க்க, பித்துப் பிடித்தவன் போல நான் கிடந்ததுதான் என் நினைவுக்கு வந்தது.

பிரேமி தொடர்ந்து, “பைத்தியம் பிடிக்காத குறைதான் உனக்கு” என்றாள்.

நான் அவளை நிமிர்ந்து முறைக்க, “நான் என்ன பொய்யா சொல்றேன்... இரண்டு வாரமா எப்படி எல்லாம் லூசு மாதிரி அன்பு அன்புன்னு புலம்பித் தள்ளிட்டு இருக்கன்னு நீயே யோசிச்சு பாரு” என்றாள்.

 அவள் சொல்வது ஒரு வேளை உண்மைதானா? என் மனம் இருவேறு விதமாகச் சிந்தித்தது.

என் ஈகோ குறுக்கே புகுந்து குழப்பியது. அன்புவை எனக்குப் பிடிக்க வாய்ப்பே இல்லை. இல்லவே இல்லை. இந்த உலகத்தில் நான் அதிகமாக வெறுக்கும் ஒரே ஜீவன் அவன் மட்டும்தான் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, “அறிவு படுத்துக்கோ” என்று அவள் என்னைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டாள்.

எனக்கும் அப்போது அத்தகைய மடி தேவையாக இருந்தது. அமைதியாகப் படுத்துக் கொள்ள அவள் தொடர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்.  

“உன்னால அன்பு இல்லாம இருக்க முடியாது... நீ இந்த உண்மையை ஏத்துக்கிட்டுதான் ஆகணும்” என்றாள். இம்முறை எனக்குத் துளி கூடக் கோபம் வரவில்லை. கண்களை மூடிக் கொண்டேன்.

அவள் என் தலையைக் கோதி விட நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

அவள் மெல்ல, “நீ என்னதான் என்கிட்ட புலம்பினாலும் வெளிப்படையா உன் மனவுணர்வுகளைச் சொல்றது இல்ல அறிவு...  நீ இப்படி என்கிட்ட மட்டும்தானா இருக்கியா? இல்ல எல்லார்கிட்டயுமான்னு எனக்குத் தெரியல?”

”யார்கிட்டாயாவது நீ உண்மையா இருப்பியா? அட்லீஸ்ட் உனக்கிட்டயாச்சும்... எனக்குத் தெரிஞ்சு உன்கிட்டயே கூட நீ பொய்யா நடிக்குறியோன்னுதான் தோணுது” என்று அவள் பாட்டுக்குப் பேசிய  போது விழிகளைத் திறந்து அவளை ஏறிட்டுப் பார்த்தேனே ஒழிய பேசவில்லை.

என்ன பேசுவது. உடலை நிர்வாணப்படுத்தி காட்டுவது போல என் மனதையும் நிர்வாணப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாளா? அது என்னால் முடியாது. எனக்கான மன வலிகள் எனக்கானது மட்டுமே. யாரிடமும் அதைச் சொல்லிப் பகிர்ந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை.

அன்புவை நான் இப்போதும் வெறுக்கிறேன். என் அடி ஆழ்மனதிலிருந்து வெறுக்கிறேன். அது மாற்ற முடியாத உண்மை.   

அதேநேரம் அவள் வார்த்தைகளிலும் உண்மை இருக்கத்தான் செய்தது. வெறுத்தாலும் விரும்பினாலும் அவன் இல்லாமல் என்னால் இருக்க முடியாதுதான். பிறந்ததிலிருந்து இருவரும் ஒன்றாக இருந்தே பழகிவிட்டோம்.

என் உடலில் இயங்கும் ஒரு உறுப்பைப் போலப் பிடித்தும் பிடிக்காமலும் எனக்குள் அவன் சத்தமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தான். ஆனால் அந்த மஹாவிற்காக என்னை உதறித் தள்ளிவிட்டு அவன் பிரிந்த நொடியிலிருந்து என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. அவனால் முடிகிறதோ என்னவோ?

ஆனால் என்னால் உறங்க முடியாமல் சாப்பிட முடியாமல்... எழுத முடியாமல்... ஆமாம் பைத்தியம் பிடிப்பது போன்ற உணர்வுதான். நான் உண்மையில் அவனை வெறுக்கவில்லை. அவன் பெயரைதான் வெறுத்தேன்.

‘அன்பு உன்னை மேக்ஸ் மிஸ் கூப்பிடுறாங்கடா’

‘அன்பு வா... நம்ம விளையாடலாம்’

‘அன்பு நீ நோட்ஸ் முடிச்சிட்ட இல்ல’

இப்படி என்னிடம் பழகும் எல்லோரும் என்னையும் அன்பு அன்பு என்றுதான் விளித்தார்கள். எத்தனை பேரிடம் சொல்வது.

‘நான் அன்பு இல்ல அறிவு’ என்று!

அவர்கள் யாருக்கும் அறிவு என்ற என் பெயரைத் தெரியவில்லையே. ஆனால் அன்புவைத் தெரிந்திருந்தது. அன்புவை மட்டும்தான் தெரிந்திருந்தது.

என் அம்மாவும் கூட அதற்கு விதிவிலக்கில்லைதான். நூற்றில் பத்து தடவை என் பெயரைக் கூப்பிட்டால் மீதமுள்ள தொண்ணூறு தடவையும்  அவருக்கும் நான் அன்பு அன்பு அன்புதான்.

 ஏன் என்னை விட அவருக்கு அன்புவைதான் பிடிக்கும். அதை அவர் வாயாலேயே ஒருமுறை சொல்லி நான் கேட்டிருக்கிறேனே.

இதெல்லாம் கூடப் பரவாயில்லை. முதல் முறையாகப் பள்ளியில் ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு நான் பேசினேன். அதற்காக நான் எந்தளவு இரவு பகலாகப் படித்தேன் என்று எனக்குதான் தெரியும். என் முயற்சிக்கு வெற்றிக் கிட்டியது. என் பேச்சுக்கு வெற்றிக் கிடைத்தது. ஆனால் பரிசு அவன் பெயருக்கு அறிவிக்கப்பட்டது. இது என்ன அநியாயம்?

உள்ளூர என் ஆன்மா கருகி வெந்து சாம்பலாவது யாருக்காவது தெரியுமா? அல்லது புரியத்தான் புரியுமா?

இன்று வரையில் அந்தச் சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை. அன்பு நன்றாகப் படிக்கக் கூடியவன். அவனும் பள்ளியில் நிறைய போட்டிகளில் கலந்து கொள்வான்தான்.

ஆனால் எனக்கான அங்கீகாரத்தையும் வெற்றியையும் அவன் பறித்துக் கொள்ளும் போது அது எத்தனை வலி நிறைந்ததாக இருக்கும் என்று எனக்குதான் தெரியும்.

இதெல்லாம் ஒன்றுமே இல்லை. இதை விடவும் மோசமாக அன்பு என்ற ஒற்றைப் பெயர் என் வாழ்வில் வன்முறைகள் செய்துள்ளன. நான் காலத்திற்கும் மறக்க முடியாத இரணங்களை எனக்குள் ஏற்படுத்தி உள்ளன.

அன்பு இல்லாத உலகில் நான் வாழ விரும்புகிறேன்.

இப்படியாக மனம் வெந்து நொந்து நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது என்னை உறக்கம் தழுவிக் கொண்டது. அது பொறுக்காமல் அந்தக் கோரமான கனவு வந்து என்னை விழிப்படைய செய்துவிட்டது.

 அந்தப் பெருங்காடு வேறு எதுவும் இல்லை. இருளடர்ந்து போயிருக்கும் என் மனம்தான். அதில் வேட்டையாடியதும் வேட்டையாடப்பட்டதும் கூட நான்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிகளும் நானேதான் என்னை வேட்டையாடிக் கொண்டிருக்கிறேன். என் இரத்தத்தை நானே புசித்து உண்ணும் மிருகமாக மாறிக் கொண்டிருக்கிறேன். இன்று அந்த மிருகம் ஜெயித்துவிட்டது. எனக்குள் இருந்த மனிதன் தோற்றுவிட்டான்.

இறுதியாக என் உறக்கம் நிர்மூலமாகிவிட்டது. 

இனி மீண்டும் எனக்கு உறக்கம் வராது. வாய்ப்பே இல்லை.

எழுந்து அமைதியாக சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துப் பற்ற வைத்தேன். புகைத்துக் கொண்டே என் செல்பேசியைக் கையில் எடுத்தேன்.

அதில் என் புகைப்படம் இருந்தது. என்னைப் பார்க்கும் போதும் கூட அவன் நினைப்புதான் வருகிறது. அவன் முகமும் என் முகமும் ஒன்று போல இருப்பதுதான் அதற்கு காரணம்.

தோற்றத்தால் நான் என்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியாது. ஆனால் குணாதிசியத்தால் வித்தியாசத்தைக் காட்ட முடியும்தானே.

அன்புவோ உத்தம சீலன். ஒழுக்கவாதி. குடிக்கமாட்டான். சிகரெட் பிடிக்கமாட்டான். இப்படி எந்தக் கெட்டப் பழக்கமும் அவனுக்கு இல்லை. அதனாலேயே குடிப்பது சிகரெட் பிடிப்பது உட்பட அத்தனை கெட்ட பழக்கத்தையும் நான் கற்றேன்.

அப்போதும் கூட யாராவது என்னை அன்பு என்று அழைப்பார்கள்.  எனக்குக் கொலை காண்டாகும்.  

அன்பு... அன்பு... அன்பு...

ஒவ்வொரு நொடியும் அன்பு என்ற பெயர் என் உலகத்தை என் சந்தோஷத்தை நிர்மூலமாக்குகிறது.

எங்காவது தூரமாக ஓடிவிட வேண்டும். அன்பு என்ற பெயர் ஒலிக்காதத் தூரத்திற்கு ஓடிவிட வேண்டும். அவன் இல்லாத உலகத்தில் நான் வாழ வேண்டும் என்று நான் யோசித்தேன். அப்போது அந்த இரவையும் அதன் அமைதியையும் கிழித்துக் கொண்டு என் செல்பேசி ரீங்காரமிட்டது.

 அன்புவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அவன் பெயரை நான் பதியவில்லை. எனினும் அவனுடைய எண் எனக்கு மனப்பாடமாகத் தெரியும்.   

‘திங் ஆஃப் தி டெவில்... இப்போ எதுக்கு இந்த நட்ட நாடு இராத்திரில இவன் எனக்கு ஃபோன் பண்றான்?’ உதட்டைச் சுழித்துக் கொண்டே செல்பேசியை ஓரமாக வைத்தேன். மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து அடித்து ஓய ஒரு நிலைக்கு மேல் கடுப்பாகி அதனை எடுத்து, “எதுக்குடா எனக்கு ஃபோன் பண்ற?” என்று கத்தினேன்.

“சார்... நான் ஜி எச்ல இருந்து பேசுறேன்... அவரோட ஃபோன்ல பிரதர்னு உங்க கான்டக்ட் நம்பர் இருந்துச்சு” என்று அடையாளம் தெரியாத குரல் பேச,

சட்டென்று என் குரலும் கோபமும் அமிழ்ந்துவிட்டது. “அவனுக்கு என்ன?” என்று கேட்டேன் பதட்டத்துடன்.

“அவருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு.... லாரிக்கு அடில மாட்டி ஸ்பாட்லயே” என்று அவர் தன் வார்த்தைகளை முடிக்கும் முன்னர்,

“அன்...ப்.... பு....” என்று அவன் பெயர் என் தொண்டை குழியிலிருந்து கேவலுடன் வெடித்து வெளிவந்தது. நான் கதறிவிட்டேன்.

Quote

Hair cells stain intensely with the vital styryl dye FM1 43, a marker for apical endocytosis Fig priligy dapoxetine 60mg

Quote

Super ma 

Quote

reddit where to buy clomid This is predictable given the Na K ATPase role in primary active Na secretion into CSF and K removal from CSF

You cannot copy content