You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

Aval Draupathi Alla - 14

14

சர்வாதிகாரி

சாரதி என்னதான் தீவிரமாய் யோசித்தாலும் வீராவைப் பற்றி தீர்க்கமாய் எந்த வித முடிவுக்கும் வர முடியவில்லை. ஒருவித குழப்பமான மனநிலையிலேயே இருந்தான். ஆனால் அதற்கு பிறகு அவனுக்கு வரிசைகட்டி நின்ற மற்ற வேலைகளில் கவனம் செலுத்தியதில், அவனின் எண்ணம் வீராவைக் குறித்த சந்தேகத்தைத் தவிர்த்து அப்போதைக்கு தள்ளி வைத்துவிட்டது.

வீராவிற்கோ அன்றைய நாள் பதட்டத்தில் தொடங்கி, பின்னர் சாரதியின் வசைகள் அதிகாரத்தில் சற்றே கடுப்பாய் முடிவடைந்திருந்தது.

வீட்டிற்கு வந்ததிலிருந்து தலையைப் பிடித்துக் கொண்டு, 'வாழ்வே மாயம்' என்றளவுக்கு அவள் அமர்ந்திருக்க, அமலாவும் நதியாவும் தன் தமக்கையின் பிரச்சனை என்னவென்று புரியாமல், அவளை உற்று பார்த்தபடி குழம்பிக் கொண்டிருந்தனர்.

"இன்னா க்கா ஆச்சு?... எதுக்கு இப்படி பேயறைஞ்ச மாதிரி உட்கார்ந்திட்டிருக்க" நதியா கேட்கவும்

அவர்கள் இருவருரையும் உருத்துப் பார்த்தவள், "போங்கடி! முதல் நாளே அந்த சாரதி என்னைக் கடுப்பேத்தி வெறுப்பேத்தி அனுப்பிட்டான்" என்றவள் சொல்ல இருவரும் ஆர்வமாய்,

"இன்னாக்கா ஆச்சு?!" என்று கதை கேட்கும் தோரணையில் அமர்ந்து கொண்டனர்.

"சரியான ரூல்ஸ் ராமானுஜம்டி அவன்" சினத்தோடு அவள் மூச்சிறைத்தபடி சொல்ல, "எவன் க்கா" என்று கேட்டாள் அமலா குழப்பமாக!

"அதான் அந்த சா... ரதி" என்று அவன் பெயரை அவள் கடித்துத் துப்ப,

"அவர்தானே க்கா உன் முதலாளி" என்று வினவினாள் நதியா!

"ஆமா... முத... லாளிதான்... சரியான சிடுமூஞ்சி... பேசுறான் பேசுறான் நிறுத்திக்காம பேசிக்கினே இருக்கான்... அதில்லாம நாம பதிலுக்கு திருப்பி எதுனாச்சும் பேசிட்டா... அப்படியே முறைச்சு பார்க்கிறான்... முதல் நாளே கடுப்ப்ப்ப்பேத்திட்டான்" என்று அவள் பொறுமிக் கொண்டு ஒற்றைக் காலை மடக்கித் தலையில் கைவைத்து கொள்ள,

அமலாவும் நதியாவும் மாறி மாறி சத்தம் வராமல் சிரித்துக் கொண்டனர். "சரி விடுக்கா... நீ வாங்காத திட்டா அடியா?!" அமலா சொல்ல நிதானித்து அவர்களைப் பார்த்தவள்,

"அதல்லாம் சரிதான்டி... ஆனா ஓவரா பேசுறான்... ரூல்ஸ் போட்டே கொல்றான்" என்று மேலும் வெறுப்பானாள்.

"யக்கா... இன்னைக்கு வரலாறு பாடத்தில படிச்சேன்... சர்வாதிகாரி... அப்படியா க்கா?" என்று அமலா கேட்க,

"ஹ்ம்ம் ஆமான்டி... சர்வாதிகாரி சாரதி... பேர் கூட ஒத்துப் போவுது" என்று வீரா அழுத்திச் சொன்னாள். ஏனோ அவளுக்கு சாரதியைப் பார்க்கும் போது ஓர் சர்வாதிகாரியைப் பார்க்கும் உணர்வுதான்!

சாரதியின் மீதான இந்த எண்ணம்,  நாளாக நாளாக அவளுக்கு அதிகரித்துக் கொண்டே போனது. அவன் ஒருநாளும் இயல்பாக பேசவோ சிரிக்கவோ செய்ததில்லை. அவனிடமான இயந்திரத்தன்மை அவளுக்குள் வெறுப்பையே வளர்த்துவிட்டது. அதெல்லாம் தாண்டி அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று அவனைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க வீரா அவனுடன் இருக்கும் போதெல்லாம் ஒருவித ஜாக்கிரதை உணர்வோடு சாமர்த்தியமாய் நடந்து கொண்டிருந்தாள். ஆதலாலேயே அவனைக் காணும் போதெல்லாம் ஒருவித அச்ச உணர்வு தொற்றிக் கொள்ளும் அவளுக்கு!

வீரா அன்றும் எப்போதும் போல் சாரதி வீட்டிற்குள் நுழைந்தவள், தெய்வானை வாசலில் நின்று துளசி மாடத்தை சுற்றி வந்து கொண்டிருப்பதைப் பார்வையிட்டாள்.

"என்ன மாமி? இரண்டு நாளா ஆளையே காணோம்" என்று வீரா விசாரிக்க அவர் புரியாமல் குழம்பியபடி கடைசி சுற்றை  சுற்றி முடித்துவிட்டு, "யாருடா அம்பி நீ? புதுசா இருக்க" என்றார் அவர்.

"இன்னா மாமி நீங்க? நான் பத்து நாளா வந்து போயினிருக்கேன்... என்னைத் தெரியலயா?"

அவர் தாடையில் கை வைத்து யோசிக்க, "அதுவுமில்லாம நீங்க இல்லாததால காக்காங்கெல்லாம் எம்மா வருத்தப்பட்டுச்சு... தெரியுமா?!" என்க,

"என்னடா உளர்ற?... முதல்ல யாரு நீன்னு சொல்லு?" என்றார் அழுத்தமாக!

"சாரதி சாரோட டிரைவர் மாமி" என்று வீரா அறிமுகப்படுத்த அவர் முகம் அஷ்டகோணலாக மாறியது.

"ஆமா... மாமி... நீங்க இங்க இன்னா வேலை செய்றீங்க... சமையலா? ஆனா சாரதி சார் கவுச்சி எல்லாம் சாப்பிடுறாரே... நீங்க எப்படி மாமி?" என்று அவளாக யூகித்துக் கொண்டு கேள்வி எழுப்ப,

தெய்வானையின் முகம் உக்கிரமாய் மாறியது.

"என்னைப் பார்த்தா சமையல்காரி மாதிரி தெரியுதாடா நோக்கு" என்றவர் பொங்கி எழ, "இல்லைதான்" என்று யோசனையாய் பார்த்தாள் வீரா.

"அதுவும் அந்த கடன்காரனுக்குப் போய்" அவர் கோபம் தாளாமல் பேச, "சாரதி சார் உங்ககிட்ட கடன் வாங்கி இருக்காரா... இன்னா மாமி சொல்றீங்க?" குழப்பமாய் வினவினாள்.

"அவனை வளர்த்த பாவத்துக்கு ... என்னை இப்படி கொண்டாந்து நிக்க வைச்சுட்டான்... அவன் நன்னா இருப்பானா?!" சாரதி இல்லாத தைரியத்தில் தெய்வானை விரல்களைக் கோர்த்து சபித்துக் கொண்டிருக்க,

"நிஜமாவா மாமி? நீங்க சாரதி சாரை வளர்த்தீங்களா? நம்பவே முடியல" என்றாள் அவள்!

"அந்த கடன்காரன் என் ஆத்துக்காரோட அண்ணன் பையன்டா... அவங்க அப்பனுக்கு இவனை வளர்க்க துப்பில்ல... என் ஆத்துக்கார்தான் இவனுக்கு இரக்கம் பார்த்து வீட்ல சேர்த்துண்டார்... ஆனா எல்லாத்தையும் மறந்து படுபாவி இப்படி பண்ணிட்டான்"

"சாரதி சாரைப் பார்த்தா உங்க ஆளுங்க மாதிரி தெரியலயே மாமி... அதுவும் கறி மீனெல்லாம் வெளுத்து வாங்குறாரு"

"அபச்சாரம்! அபச்சாரம்!" என்று தெய்வானை காதை மூடிக் கொள்ள வீரா புரியாமல் விழித்தாள். தெய்வானை பின்னர் குரலைத் தாழ்த்தி வீராவிடம்,

"அவன் ஒண்ணும் எங்காளுங்க எல்லாம் இல்ல... அவங்க அம்மா வேற ஜாதி" என்றார்.

"ஓ!!" என்றவளின் முகம் ஆச்சர்ய தொனியில் மாறியது. அவள் ஏதேதோ யோசித்து மௌனமாகிட, "யாராண்ட பேசிட்டிருக்க?" என்று குரல் கொடுத்துக் கொண்டே சாரங்கபாணி வெளியே வர,

வீரா தலையை நிமிர்த்தி, "யாரு மாமி அவரு? உங்க வூட்டுக்காரரா?!" என்று கேட்டாள்.

"ம்ஹும்... என் ஆத்துக்காரர்" என்று தெய்வானை சொல்ல,

"இரண்டும் ஒண்ணுதான் மாமி" என்றாள் வீரா.

அதற்குள் சாரங்கபாணி நெருங்கி வர, "நான் யாரான்டையும் எதுவும் பேசிறக் கூடாது... மூக்குல வேர்த்திருமே" என்று தெய்வானை அலுப்பாய் சொல்ல,

வீரா சாரங்காபாணியை அளவெடுத்தது போல் பார்த்து தெய்வானை காதோடு நெருங்கியவள், "மாமா... உங்களவுக்கு இல்ல... நீங்கதான் சும்மா இந்த வயசுலயும் கிண்ணுன்னு இருக்கீங்க" என்றாள்.

தெய்வானை சலித்துக் கொண்டு உதட்டைச் சுளித்தபடி, "பின்ன... நேக்கும் அவருக்கும் பத்து வயசு வித்தியாசம்டா" என்றவர் புலம்பும் போதே சாரங்கபாணி வந்து நின்று,

"ஏன் தெய்வா? யாரன்ட பேசிட்டிருக்க? யாரிந்த அம்பி?" என்று கேட்டு வீராவைக் கூர்ந்து பார்த்தார்.

"சாரதிக்கு டிரைவரா சேர்ந்திருக்கானா ன்னா... நல்ல பையனா இருக்கான்" என்று தெய்வானை அவர் காதோரம் ரகசியமாய் சொல்ல, அது வீராவின் காதிலும் கேட்டது.

"ஆமா ஆமா நல்ல பையன்தான்" என்றாள் தலையசைத்தபடி!

சாரங்கபாணி தன் மனைவியின் கரத்தைப் பிடித்து ஓரமாய் இழுத்துச் சென்றவர், "நேக்கு புதுசா ஏதாவது வம்பு வளர்த்து வைச்சுடாதே... உன் திருவாயை மூடிட்டு உள்ள போறியா கொஞ்சம்" என்று உஷ்ணப் பார்வையோடு தன் மனைவியிடம் உரைத்தார்.

"ம்க்கும்" என்று உதட்டை சுளித்துக் கொண்டு வீட்டிற்குள் நடந்தார் தெய்வானை.

வீரா தன் குரலை உயர்த்தி, "இன்னா மாமி? காக்காவுக்கு எதுவும் வைக்காம போறீங்களே?!" என்றவள் கேட்க,

"இன்னைக்கு நான் விரதம்டா... சாயந்திரம்தான் சமைச்சு சாமிக்கு படைச்சிட்டுதான் எல்லாம்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றுவிட்டார் தெய்வானை!

"சே! இன்னைக்கும் வடபோச்சே" என்று வீரா ஏமாற்றத்தோடு நடக்கப் போனவள் வீட்டிற்குள் இருந்து சாரதி வருவதைப் பார்த்து மிரட்சியுற்று அமைதியாய் நின்றுவிட்டாள். அவன் என்றுமில்லாமல் இன்று  கேஷுவல்ஸில் இருந்தான். கூலர்ஸை தாங்கிய டீ ஷர்ட் பேண்ட் அணிந்து கொண்டு கையில் ஒரு பேகை தாங்கிவந்தான்.

அவன் நடந்து வந்த விதத்தில் வியப்பாய் அவனை அவள் பார்த்திருக்க, "என்ன பார்த்துட்டிருக்க? இந்த பேகை எடுத்துட்டு போய் பின்னாடி சீட்ல வைச்சிட்டு... காரை ஸ்டார்ட் பண்ணு"  அதிகாரமாய் உரைத்தவன் சாவியை அவள் புறம் தூக்கிப் போட,

அதனை இம்முறை சரியாய் பிடித்துக் கொண்டவள் அவனிடமிருந்து பேகை வாங்கிக் கொள்ள, அது ரொம்பவும் கனத்தது.

'ஆள் டிரஸுதான் மாறி இருக்கு... ஆனா அதே சிடுமூஞ்சிதான்... ப்பா இந்த பேக் வேற இன்னா கனம் கனக்குது... இன்னா வைச்சுக்கிறான் உள்ள' என்று புலம்பியபடி அதனைக் காரின் உள்ளே வைத்துவிட்டு,

காரை இயக்கி அவன் முன்னே எடுத்து வந்து நிறுத்தினாள். அவன் காரில் ஏறி அமர்ந்ததும் வீரா,

"இன்னைக்கு ஆபீஸ் போலயா சார்?" என்றவள் ஆர்வமாய் வினவ,

"வருஷம் முன்னூத்தி அறுபது நாளும் ஆபீஸ் வேலையே பார்த்துகிட்டிருப்பாங்களா?!" என்றான் அலட்சியத் தொனியில்!

"அப்ப எங்கே சார்... போகணும்?"

"ஈசிஆர் பீச் ரிஸார்ட் போ" என்றவன் தன் செல்பேசியை பார்த்துக் கொண்டே உரைக்க அவள் புருவங்கள் சுருங்க அவனைப் பார்த்தாள்.

"அங்க இன்னாத்துக்கு சார்... எதனாச்சும் மீட்டிங்கா?" என்றவள் அடுத்த கேள்வி எழுப்ப, அவன் பதில் சொல்லாமல் அவளை கூர்ந்து பார்க்க, அந்த பார்வைக்கு அர்த்தம்  மேலே பேசாமல் அவள் மௌனமாகிட வேண்டும் என்பதுதான்!

அதனை உணர்ந்தவள் அவள் வாயை மூடிக் கொள்ள, அவனும் மௌனமாக தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

காரும் மிதமான வேகத்தில் ஓடிக் கொண்டிருக்க சாரதி அவளிடம்,

"ஆமா கேட்கணும்னு நினைச்சேன்! வீட்ல அவங்ககிட்ட என்ன பேசிட்டிருந்த?" என்றவன் யோசனையாய் கேட்க,

அவள் முகம் சட்டென்று மாறியது. பதில் தெரிந்தாலும் "யாரு சார்?" என்றவள் வினவ அவன் புருவங்கள் நெறிய அவளை முறைத்துப் பார்க்கவும் மிரட்சியுற்றவள்,

"மாமிய சொல்றீங்களா சார்?" என்று அவளே வழிக்கு வந்தாள்.

"ஆமா... அவங்கதான்... உன்கிட்ட என்ன சொன்னாங்க அவங்க?" அவன் கூர்மையாய் பார்த்து அவளை வினவ,

"பெருசா ஒண்ணுமில்ல சார்" என்றாள் காரை இயக்கிக் கொண்டே!

"ஒண்ணுமில்லாததுக்கா அவ்வ்வ்வ்வளவு நேரம் பேசிட்டிருந்த" என்றவன் அழுத்தமாய் கேட்டு கூர்மையாய் பார்க்க, என்ன பதில் சொல்வதென்று புரியாமல் மௌனமாய் அமர்ந்திருந்தாள்.

"வீரா" என்று அழைத்தபடியே அவன் பார்வை மேலும் கூர்மையாய் மாற,

'விடாகொண்டனா இருக்கான்... இப்ப இன்னா சொல்றது?' என்றவள் யோசித்தபடி அவன் புறம் திரும்பி, "அது" என்று அவள் விழித்தாள்.

அவனோ கைகளைக் கட்டி கொண்டு புருவத்தை நெறித்து அவளையே பார்க்க வீரா தயக்கத்தோடு, "நான் ஒண்ணுமே பேசல சார்... காக்காவுக்கு ஏன் நாஷ்டா வைக்கலன்னுதான் கேட்டேன்" என்று இறுதியாய் சொல்லி முடித்தாள்.

அவள் சொன்னதைக் கேட்ட மறுகணம் சாரதிக்கு கட்டுபடுத்த முடியாமல் சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது.

"லூசு... இதையா கேட்ட" என்று அவன் சில நொடிகள் விடாமல் சிரித்துக் கொண்டே இருக்க, வீரா அவனையே குறுகுறுவென பார்த்தாள்.

எப்போதும் இறுக்கமான முகம் ... சென்டிமீட்டர் அளவு சிரித்தே பார்த்தவளுக்கு அவனை இப்படிப் பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது. சில நொடிகள் அவனைத் திரும்பி பார்த்தபடி காரை ஓட்ட சட்டென்று எதிரே வந்த பெரிய வாகனம் அவர்களை தடாலடியாய் கடந்து போக,

"வீரா பார்த்து போ" என்று அதிர்ந்தான்  சாரதி.

அவள் சுதாரித்துக் கொண்டு சாலையைப் பார்க்க, "கண்ணை எங்க வைச்சு வண்டியை ஓட்டுற" என்று கடிந்து கொண்டவன் அதற்குப் பிறகு தொடர்ச்சியாய் திட்டிக் கொண்டே வர அது அவளுக்கு சற்றே பழகிப் போன விஷயம்தான்!

'ஆரம்பிச்சுட்டான்யா... இப்போதைக்கு நிறுத்த மாட்டான்' என்று மனதிற்குள்ளேயே அவள் கடுப்பாக,

சில நேர இடைவெளிகளில் அந்த ஈசிஆர் சாலைகளில் பயணித்த அவர்களின் கார் ஆடம்பரமான பீச் ரிஸார்ட்டுக்குள் நுழைந்தது. சாரதி விறுவிறுவென இறங்கிவிட்டு,

"காரை பார்க் பண்ணிட்டு அந்த பேகை எடுத்துட்டு வா" என்று சொல்லிவிட்டு இறங்கி செல்ல, அவளும் காரை நிறுத்திவிட்டு அந்த பேகைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அவனை சிரமப்பட்டு பின்தொடர்ந்தாள்.

போதாக் குறைக்கு வழியிலேயே நண்பர்கள் சிலர், "ஏய் சாரதி?... பார்த்தே ரொம்ப நாள் ஆயிடுச்சு" என்று வினவ,

"கொஞ்சம் பிஸி" என்று எல்லோரிடமும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லிக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்.

ஆடம்பரமான எல்லா வசதிகளும் அந்த ஒற்றை அறையிலேயே குடியேறி இருந்தது. 

"பேகை வைச்சுட்டு... நீ போ" என்றவன் அந்த அறையின் ஒருபுறத்தை கை காட்ட, அதனை வைத்துவிட்டு வெளியேறிவள் கார் இருக்கும் திசையை நோக்கி நடக்க,

பரந்துவிரிந்த அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரிய விளையாட்டுத் திடல்... நீச்சல் குளம் இவற்றை எல்லாம் பார்த்து பிரமித்தாள். 

அதே நேரம் அங்கே சூழ்ந்திருந்த கூட்டத்தைப் பார்கக அவளுக்கு அருவருப்பாய் இருந்தது. எல்லோரும் ஆடம்பரம் சோஷியலிஸம் என்ற பெயரில் அரைகுறை ஆடையில் சுற்றிக் கொண்டிருந்தனர். 

இவற்றையெல்லாம் பார்க்கக் கூட விருப்பமில்லாமல், அவள் காரினுள் தலைசாய்த்து அமர்ந்து கொண்டு பாட்டுக்களை கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு, மதியம் மாலை இரவு என நேரம் கடந்து சென்று இருள் சூழ ஆரம்பிக்க உள்ளூர அச்சம் தொற்றிக் கொண்டது.

பதட்டமாகி பேசியில் நேரத்தைப் பார்த்தவள்,

'இன்னும் இன்னா பன்றான்... தங்கசிங்க வேற வூட்டுல தனியா இருக்கும்' என்று படபடத்துக் கொண்டிருந்தாள்.

பொறுமையிழந்தவள் காரிலிருந்து இறங்கி, 'இந்த ஆளு இன்னா இப்படி பண்றான்... இப்போதைக்கு வருவானா மாட்டானா?!' என்று புலம்பிக் கொண்டே நடக்க,

அந்த ரிஸார்ட் முழுவதும் இரவு வண்ண விளக்குகளின் அலங்காரங்களால்  ஜகஜோதியாய் மின்னி கொண்டிருந்தது.

ஆண்கள் பெண்கள் பாகுபாடின்றி எல்லோரும் குடியும் கும்மாளமுமாய் இருந்தனர்.  அங்கே சாரதி இருக்கிறானா என்று தேடலாய் பார்த்துக் கொண்டே நடந்தவள் அப்போது எதிரே வருபவனை பார்க்காமல் மோதிக் கொண்டு நிற்க,

"எங்கே பார்த்துட்டு வர, ஃபோன் பண்ணா எடுக்க மாட்டியா?!" என்று சாரதியின் குரல் காதில் விழ நிமிர்ந்து பார்த்தாள். அவன்தான் அவளை மோதியவன்.

அவள் அதிர்ச்சியாய் பேசியை தன் பேன்ட் பாக்கெட்டில் துழாவியவள், "ஸாரி சார்... ஃபோன் கார்ல உட்டுட்டு வன்டேன் போல" என்க,

"உன்கிட்ட... ஏற்கனவே சொல்லி இருக்கேன் இல்ல" என்று கோபமாய் முறைத்தவன்,

"சரி இனிமே இப்படி பண்ணாதே" என்று அவனே உடனடியாய் சமாதான நிலைக்கு வந்தான். அவன் எப்போது புறப்படலாம் என்று சொல்லப் போகிறான் என்ற வீரா தவிப்போடு நிற்க, அவனோ அவள் அவஸ்த்தை புரியாமல் காசை எடுத்து நீட்ட, அவள் குழம்பினாள்.

அதோடு அவன் வாங்கி வர சொன்னதைக்  கேட்டு அவளுக்குத் தலை சுழன்றது. அவனையும் அந்த பணத்தையும் அதிர்ச்சியாய் அவள் பார்க்க,

"சீக்கிரம் போய் வாங்கிட்டு வா" என்றான்.

"இன்னா சார் வாங்கின்னு வரணும்" என்றவள் புரிந்தும் புரியாமலும் மீண்டும் வினவ, "சொன்னது காதுல ஏறலயா?!" எரிச்சலடைந்தவன்,

"காண்டம் வாங்கிட்டு வான்னு சொன்னேன்... காட் இட்" என்றான்.

விக்கித்துப் போனவள், 'நானா?'  என்று மனதிற்குள் கேட்டு கொண்டபடி சிலையாய் சமைந்து நிற்க, "ஏன் இப்படி திருதிருன்னு முழிச்சிட்டிருக்க... போ" என்றவன் முறைத்துக் கொண்டே சொல்ல,

அவளுக்கு அப்போதுதான் அழுத்தமாய் உறைத்தது. தான் இப்போது ஆண் வேடத்தில் இருக்கிறோம் என்று!

இதுதான் அவளுக்கு வந்திருக்கும் முதல் கட்ட சோதனை. இதற்கே இப்படியென்றால் இன்னும் படிப்படியாய் அவள் சந்திக்க நிறைய காத்துக் கொண்டு இருந்ததே!

வீரா மனமுடைந்த நிலையில் கடலை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவள் முகமெல்லாம் சிவந்திருக்க, மனமோ ஆற்றாமையால் தவித்துக் கொண்டிருந்தது.

அவளின் கண்ணீர் அதன் கரையை உடைக்க முயல, அவளோ அதனை வெளியே வரவிடாமல் வெகுநேரம் போராடிக் கொண்டிருந்தாள்.

எந்த பெண்ணுக்கும் வரக் கூடாத சோதனைதான்! ஆனால் வேறுவழி!

அவன் கேட்டதை  மறுக்கும் நிலையில் அவள் இல்லை! ரொம்பவும் சங்கடத்தோடே அவன் கேட்டதை அவள் வாங்கியும் தந்துவிட்டாள்.

அதே நேரம் அவன் அறையில் அவனுடன் நெருக்கமாய் பேசிக் கொண்டிருந்த பெண்ணைப் பார்க்கப் பார்க்க இன்னதென்று சொல்ல முடியாத ஓர் கோபம்! ஒரு வித அருவருப்பான உணர்வு!

ஆணினங்களே இப்படிதானா என்ற ஒர் வெறுப்பான மனநிலை! அதுவும் சாரதியை அப்படிப் பார்க்க கொஞ்சம் வலிக்கவே செய்தது.

அவனின் அதிகாரத்தன்மையில் அவளுக்குக் கோபம் இருந்தாலும், அவன் மீது அவளுக்குத் தனி மரியாதையும் ஈர்ப்பும் இருந்ததும் உண்மை!

ஆனால் அவையெல்லாம் ஒரே நொடியில் சுக்குநூறாய் உடைந்து போனதே!. அதனைத் தாங்க முடியாத வலியோடும் வேதனையோடும் அமர்ந்திருந்தாள் அவள்! அதே நேரம் அவன் இப்போதைக்குப் புறப்படும் நிலையில் இல்லை என்பதும் அவளுக்குப் புரிய,

வீரா தன் வீட்டின் அருகிலிருந்த கடையில் உள்ள தொலைப்பேசிக்கு அழைத்து நதியாவிடம் பேசினாள்.

"நான் வர நேரமாகும் நதி... நீங்க இரண்டு பேரும் சாப்பிட்டுட்டு... கதவை நல்லா பூட்டிக்கின்னு படுத்துக்கோங்க... நான் குரல் கொடுக்காம யார் கதவை தட்டினாலும் திறக்காதீங்க" என்றவள் உரைக்க,

"இன்னா க்கா இப்படி சொல்ற... தனியா நாங்க இரண்டு பேரும் எப்படி க்கா?" நதியா அச்ச உணர்வோடு கேட்டாள்.

"புரியுது நதி... ஆனா என் வேலை அப்படி... அந்த சாரதி" என்று ஆரம்பித்தவள் மேலே எதுவும் சொல்ல முடியாமல்,

"சரி... அதை விடு... நீங்க இரண்டும் சாப்பிட்டு படுங்க... எனக்கெல்லாம் எதுவும் எடுத்து வைக்காதீங்க" என்றாள்.

அருகிலிருந்த அமலா ஆர்வமாய், "அக்கா எப்போ வருமா?" என்று வினவ நதியாவிற்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. 

வீரா மேலும், "நீயும் தங்கச்சியும் ரொம்ப நேரம் கடையாண்ட நிற்க வேண்டாம்... மணியாயிடுச்சு இல்ல... சாப்பிட்டுப் போய் படுங்க" என்று சொல்ல, "சரி க்கா" என்று நதியா சிரத்தையின்றி பதிலுரைத்தாள்.

வீரா பேசியை வைக்காமல் பதட்டத்தோடு,

"ஏ நதி! நான் வேணா ஒண்ணு பண்ணவா... கமலா அக்காகிட்ட சொல்லி இரண்டு பேருக்கும் துணையா" என்று கேட்கும் போது,

"அய்யோ யக்கா...வேற வினையே வேணாம்... அது பேசியே கொன்றும்" என்றாள் நதியா.

"சரி... அப்படின்னா கதவை நல்லா பூட்டிக்கின்னு படுத்துக்கோங்க... நான் சீக்கிரம் வந்துர்றேன்" என்று வீரா பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

அன்று இரவு அவளால் வர முடியாது என்று சொன்னால் தங்கைகள் பயந்துவிடக் கூடும் என்ற எண்ணித்திலேயே சமாளிக்கும் விதமாய் அவ்விதம் உரைத்தாள். எனினும் தனியே இருக்கும் தங்கைகளை எண்ணி அவள் மனம் அவதியுற்றுக் கொண்டிருந்தது.

எப்படி அவர்கள் இருவரும் தனியே இருப்பார்கள் என்ற கவலையோடு ரிஸார்ட்டின் பின்புறம் நடந்தவள் அவளே அறியாமல் கடலை நோக்கி வந்திருக்க, சோர்வோடும் தவிப்போடும் அப்படியே மணல் மீது அமர்ந்து கொண்டாள்.

அந்த ஆர்பரிக்கும் கடலைப் போலவே அவள் மனமும் அந்த நொடி நிம்மதியில்லாமல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அவள் தன் பார்வையைக் கடலலைகள் மீது மட்டுமே பதித்திருக்க, நேரம் சென்றதையே அவள் உணர்ந்திருக்கவில்லை.

இரவு நடுநிசியை எட்டிக் கொண்டிருக்க தனிமையோடும் சோர்வோடு அவள் தன் தலையை கால்கள் மீது சாய்த்தபடி அமர்ந்திருந்தாள்.

"ஏ வீரா... இங்கதான் இருக்கியா?!" என்று சாரதி தோரணையாய் வந்து நின்றவன் சிகரெட்டைப் புகைத்தபடி அவள் அருகில் வந்து அமர்ந்தான். அவனைப் பார்த்ததுமே படக்கென எழுந்து அவள் ஒதுங்கி நிற்க,

"நோ பாஃர்மாலிட்டீஸ்னு சொல்லி இருக்கேன் இல்ல... உட்காரு" என்றான் தீவிரமாய் சிகரெட்டின் புகையை உள்ளிழுத்தபடி!

அவளுக்கு அவனைப் பார்க்க பார்க்க எரிச்சலும் கோபமும் மூள, "இல்ல சார்... நான் கார் கிட்ட போறேன்" என்று நழுவிக் கொள்ள பார்க்க,

"கமான் சிட் மேன்... எனக்கும் யாராச்சும் கம்பெனிக்கு இருந்தா நல்லா இருக்கும்" என்றான். அவன் இப்படி சொன்னதும் அவள் முகம் சிவப்பேற,

'உனக்கு இன்னாத்துக்குடா நான் கம்பெனி கொடுக்கணும்' என்று விரல்களை மடக்கி குத்துவது போல் பின்னோடு நின்று அவள் பாவனை செய்ய,

அவனோ அவள் புறம் திரும்பவும் அவள் பவ்வியமாய் மாறி, "இல்ல சார்" என்று தயங்கினாள்.

"உட்காருன்னு சொன்னேன்" என்று அவன் கட்டளையாய் அழுத்திச் சொல்ல, 'சே' என்று உதட்டிற்குள்ளேயே முனகியபடி கடுப்பாய் அமர்ந்து கொண்டாள்.

அவன் போதையில் இருப்பதும் அதோடு புகைக்கும் சிகரெட் நெடியும் அவன் மீது அவளுக்கு உச்சகட்ட வெறுப்பை உண்டாக்கியிருக்க, அவன் அருகாமையில் அமர்ந்திருப்பதே அவளுக்கு அருவருப்பாய் இருந்தது. எங்கேயோ பார்த்துக் கொண்டு அவள் முகம் சுளித்துக் கொள்ள,

அப்போது சாரதி அவள் புறம் திரும்பி, "ஆமா நீ சாப்பிட்டியா?!" என்று கேள்வி எழுப்பினான்.

அவள் தயக்கத்தோடு அவன் முகம் பார்த்து மௌனமாய் இருக்க,

அவன் மீண்டும், "சாப்பிட்டியா சாப்பிடலயா?!" என்று அழுத்தமாய் கேட்டான்.

"சாப்பிட்டேன் சார்" என்று வேகமாய் அவள் தலையசைக்க,

"நீ பொய் சொல்ற... உன் முகத்தைப் பார்த்தா அப்படி தெரியலயே"

"இல்ல சார்... சாப்பிட்டேன்"

"நோ... நீ ஏதோ அப்செட்டா இருக்க போல... வாட்ஸ் ராங்" அவன் சிகரெட்டின் புகையை ஊதியபடி அவள் புறம் திரும்பி வினவ,

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார்" என்றாள்.

"இருக்கு" என்றவன் கடலை வெறித்தாலும் அவள் மனதை சரியாய் கண்டறிந்து கொண்டான்.

அவள் சில நொடிகள் தயங்கிவிட்டு, "தங்கச்சிங்க வீட்டில தனியா இருப்பாங்க... அதான்!" கவலை தோய்ந்த முகத்தோடு பதிலுரைத்தாள்.

இதனைக் கேட்ட நொடி எகத்தாளமாய்  பார்த்தவன்,

"அவ்வ்வ்ளோ அக்கறை இருக்கவன்... ஏன் வேலைக்கெல்லாம் வந்துக்கிட்டு... பேசாம தங்கச்சிங்களுக்கு பாடிகாடா வீட்டுலயே இருக்க வேண்டியதுதானே" சிரித்துக் கொண்டே சொல்ல, அவளுக்கு கோபம் கனலாய் ஏறியது.

"என் கஷ்டமெல்லாம் உங்களுக்கு சொன்னாலும் புரியாது சார்"

என்ன பேசுகிறோம் என்ற யோசனையில்லாமல்! முகத்திலறைந்தது போல் பதிலுரைத்துவிட்டாள். சில விநாடிகளில் தன் தவற்றை உணர்ந்தவள், 'ஸ்ஸ்ஸ்' என்றபடி அவள் உதட்டைக் கடித்து கொள்ள,

சாரதியோ அவள் சொன்னதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதே நேரம் எந்தவித எதிர்மறையான முகபாவனையும் காட்டவில்லை.

"யூ ஆர் ரைட்... எனக்குப் புரியாது... எனக்குப் புரியவும் தேவையில்ல" என்றவன் இறுக்கமாய் பதிலளிக்க,

"சாரி சார்... ஏதோ அவசரத்துல அப்படி சொல்லிட்டேன்" என்று வீரா தயக்கத்தோடு உரைக்கவும்

சாரதி அவள் புறம் நிதானித்துத் திரும்பி, "தட்ஸ் ஓகே... லீவ் இட்" என்றான்.

முனுக்கென்று எல்லாவற்றிற்கும் கோபப்படுபவனும் அதிகாரம் செலுத்துபவனுமான அவனா இவன் என்று வீரா மனதில் எண்ணியபடி அவனை வியப்பாய்  பார்க்க, அவனோ அழுத்தமான மௌனத்தோடு கடலையே பார்த்துக் கொண்டிருந்தான்.

எந்தவித உணர்வுகளும் இல்லாமல் அவன் முகம் அத்தனை வெறுமையாய் காட்சியளிக்க, அவன் மனதில் ஏதோ சொல்ல முடியாத ஆழ்ந்த சோகமிருக்கிறதோ என்று மனதில் எண்ணிக் கொண்டவள்,

அவனிடமே அதை பற்றி கேட்டுவிடவும் துணிந்தாள்.

"நான் ஒரு விஷயம் கேட்டுக்கின்னா நீங்க தப்பா எடுத்துக்க கூடாது சார்" என்றவள் சொல்ல,

"என்ன மேட்டர்?" என்றவன் குழப்பமாய் அவளை நோக்கி புருவத்தை உயர்த்தினான்.

"இல்ல சார்... உங்களுக்கு சொந்த பந்தமெல்லாம் யாரும்" என்று அவள் கேட்க ஆரம்பிக்கும் போதே, அவன் பார்வை அவளைக் கூர்மையாய் அளவெடுத்தது.

"சாரி சார்.. சும்மா தெரிஞ்சுக்கலாம்னுதான் கேட்டேன்... நீங்க சொல்லலன்னா பரவாயில்ல" என்றவள் அமைதியாகிட

சாரதி மௌனமாகவே அமர்ந்திருந்தான். அவனிடமிருந்து எதையும் வாங்க முடியாது என்றவள் அவநம்பிக்கை கொண்டு சலிப்பாய் உதட்டைச் சுழிக்க,

அந்த சமயம் சாரதியே தன் மௌனத்தைக் கலைத்து அவளிடம்,

"எனக்கு ரிலேஷன்ஸ் இருக்காங்களான்னு  உனக்கு தெரிஞ்சுக்கணும்... ரைட்" என்று கேட்டான்.

வீரா அவனை ஆச்சர்யமாய் பார்த்து தயக்கமாய் தலையசைத்தாள்.

"எல்லாரும் இருக்காங்க... ஆனா எனக்குன்னு யாரும் இல்ல" என்றவன் சுருக்கமாய் பதிலளித்துவிட்டு எழுந்து நின்றவன்,

"சரி ரொம்ப டைமாச்சு... சாப்பிடலாம் வா" என்று அழைத்துவிட்டு ரிஸார்ட் நோக்கி அவன் முன்னேறி நடந்தான்.

'இப்ப இவன் இன்னா சொன்னான்.... இருக்காங்க கிறானா... இல்லங்கிறானா' என்று யோசனைகுறியோடு வீராவும் எழுந்து அவனைப் பின்தொடர, அப்போது இருவரும் ரிஸார்ட்டிற்குள் நுழைந்த மறுகணமே ஒரு பெண்,

"ஹாய் சாரதி" என்றபடி சாரதியிடம் கையசைத்தாள். சாரதி குழப்பமாய் அவளை ஏற இறங்கப் பார்த்து, "நந்து...ரைட்?" என்று சந்தேகமாய் கேட்க,

"மறந்துட்டியா... லாஸ்ட் மந்த்தானே பார்த்தோம்" என்றுரைத்தவள் அவனை நெருங்கி தோள் மீது தன் கரத்தை வளைத்துக் கொண்டுவிட, அவன் முகம் மலர்ந்தது.

"யா டார்லிங்... இந்த ஆங்கிள்ல பார்த்தா நல்லா ஞாபகம் இருக்கு" என்றான்.

"யூ" என்று தன் ஹேன்ட் பேகை அவன்  மீது அவள் வீச,

"ஓகே ஓகே இங்க எங்க" என்று கேட்டபடி  சாரதியின் கரம் அவள் இடையை வளைத்துக் கொண்டது.

"ஃப்ரெண்ட் பர்த்டே பார்ட்டி" என்றவள் சொல்ல,

"யாருக்கு?" என்று வினவினான்.

"ப்ச்... அதை விடு...  நாளைக்கு நீ ஃப்ரீன்னா... லெட்ஸ் ஹவ் அ டேட்" என்றவள் கிசுகிசுப்பாய் கேட்டு நெருக்கமாய் அவனை சீண்டிக் கொண்டிருந்தாள்.

வீரா இவற்றையெல்லாம் பார்க்க சகியாமல் வேறுபுறம் திரும்பிக் கொண்டிருக்க, கடைசியாய் அந்த பெண் கேட்ட கேள்வி அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.

'அய்யய்யோ! நாளைக்கும் நம்ம வீட்டுக்குப் போக முடியாதா... டே முடியாதுன்னு சொல்றா?' என்றவள் மனதிற்குள் பொறுமிக் கொண்டிருக்கும் போதே,

"சாரி நந்து... நாளைக்கு வொர்க் இருக்கு... வேணா இன்னைக்கு நைட்" என்றவனின் கரம் அவளை இன்னும் இறுக்கமாய் தழுவிக்  கொள்ள, வீராவிற்கு எரிச்சலானது.

'அடப்பாவி டேய்! இப்பதானா ஒரு டிக்கெட்டை பேக் பண்ணி அனுப்பினான்... அதுக்குள்ள இன்னொன்னுக்கு ரூட் போடுறான்'

அதே நேரம் சாரதியின் அணைப்பில் இருந்த அந்த பெண் கோபமாய் அவனை விட்டு பின்வாங்கியபடி,

"நான் உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் நினைக்கிறேன் சாரதி... பட் நீ என் கூட பெட் மட்டும் ஷேர் பண்ணனும்னு நினைக்கிற" என்றாள் கோபமாக!

"ஃபைனலி அதானே டார்லிங் நடக்கப் போகுது" சொல்லிவிட்டு அவன் கல்மிஷமாய் சிரிக்க,

"அன்னைக்கு நடந்த டீலிங் வேற சாரதி... பட் இப்போ நான் ஒரு ப்ரொப்போஸலா கேட்கிறேன்... நமக்குள் ஒரு லாங் டைம் ரிலேஷன்ஷிப் பத்தி யோசிக்கக் கூடாதா?!"

"ஷார்ட் டைம்தான் பெஸ்ட் அன்ட் ஈஸி நந்து" என்றவன் விலகி இருந்தவளை  மீண்டும் இழுத்து அணைத்துக் கொள்ள, "விடு சாரதி" என்று சொல்லி தள்ளி நின்றவள்,

"நீ மாறவே மாட்ட" என்று சலிப்போடு சொல்லிவிட்டு விரைவாய் அங்கிருந்து சென்றுவிட அவன் முகம் கோபமாய் மாறியது.

'புல்ஷிட்!! நான் ஏன் மாறணும்... அன்ட் யாருக்காக மாறணும்'  தனக்குத்தானே கேட்டுக் கொண்டபடி முன்னேறி நடந்தவன் விறுவிறுவென தன் அறைகதவை திறந்து உள்ளே நுழையப் பார்த்து,

சட்டென்று வீராவின் நினைவுவந்து  திரும்பினான். வீரா யோசனையோடு மெதுவாய் நடந்தவள் அவன் அறைக்குள் நுழைவதைப் பார்த்து தயங்கி நிற்க,

"ஏ வீரா... ஏன் அங்கயே நிற்கிற... வா" என்றழைத்தான் அவன்.

இதுவரையில் இல்லாமல் இப்போது வீராவிற்கு ரொம்பவே அச்சம் தொற்றிக் கொண்டது. அவளுக்கு வியர்த்துவடிய,

'கடவுளே! இவனுக்கு நம்ம பொண்ணுன்னு எந்த ஜென்மத்துலயும் தெரியவே கூடாது' என்று மானசீகமாய் வேண்டிக் கொண்டபடி உள்ளே சென்றாள். அவளுக்கும் சேர்த்து தன் அறைக்கே அவன் உணவு வரவழைக்க,

வீரா தயக்கத்தோடு மறுதலித்தாள். எப்படியாவது தப்பிக் கொண்டால் போதுமென்ற மனநிலையில் அவள் இருக்க, அவன் பிடிவாதமாய் அவளையும் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினான்.

அவளும் வேறுவழியின்றி அவனுடன் இணைந்து உணவருந்த,

அவனோ உணவோடு சேர்த்து போதையும் ஏற்றிக் கொண்டிருந்தான். அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை, அவளின் உள்ளமெல்லாம் எரிமலையாய் குமறிக் கொண்டிருக்க,

அவனோ அவள் நிலைமை புரியாமல், "உனக்கும் ஒரு லார்ஜ் சொல்லவா?!" என்று கேட்டு வைக்க, அவள் முகம் வெளுத்துப் போனது.

"இல்ல சார்... எனக்கு பழக்கமில்ல...  அந்த வாசனையே எனக்கு குமட்டின்னு வருது" என்றவள் அவசரமாய் உண்டுவிட்டு எழுந்து கை அலம்பிக் கொண்டு வர,

"நீ ரொம்ப வித்தியாசமா இருக்க வீரா... எனக்கு தெரிஞ்சு உங்க மாதிரி லோக்கல் ஏரியால இதெல்லாம் சகஜம்தானே"

"அப்படி அல்லாம் இல்ல சார்... லோக்கல்னா... ஒழுக்கமா இருக்க மாட்டாங்களா என்ன?" சற்று கோபமாகவே அவள் கேட்க,

"ஒழுக்கமா இருந்து அப்படியென்ன கிழிக்கப் போற" என்றான் சாரதி அலட்சியப்  புன்னகையோடு!

"இந்த கன்றாவியெல்லாம் குடிச்சா மட்டும்... அப்படி இன்னா சார் கிழிக்க முடியும்" என்றவள் அனல் தெறிக்க பதில் சொல்லவும் சாரதியின் விழிகள் அழுத்தமாய் அவளைத் தாக்கி நின்றது.

'ஏ வீரா...  நீ உன் வாயை வைச்சுக்கன்னு சும்மாவே இருக்க மாட்டியா?' என்று வீரா தன்னையே கடிந்து கொண்டவள்,

"சாரி சார்... எனக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி... இப்படிதான் ஏதாச்சும் மனசுல பட்டதை படக்குன்னு பேசிடுவேன்... தப்பா எடுத்துக்காதீங்க...  நான் பேசாம காராண்ட போறேன்... நீங்க படுத்துக்கோங்க" என்று சொல்லிவிட்டு  தப்பித்தோம் பிழைத்தோம் என அவள் அங்கிருந்து செல்லப் பார்த்தாள்.

"ப்ச்... அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... நீ ரூம்லயே படுத்துக்கோ... ஐ டோன்ட் மைன்ட்" என்றவன் படுக்கையில் இருந்த ஓர் தலையணையையும் போர்வையும் தூக்கிப் போட, அவள் கலவரமானாள்.

'இவன் கூட போய் ஒரே ரூம்லயா... சிக்கினா காலி பண்ணிடுவானே' என்று எண்ணும் போதே அவள் உடலெல்லாம் நடுக்கமுற, "இல்ல சார்...  நான் கார்லயே" என்றதும் அவன் கோபமாய் முறைத்தான்.

"எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து பேசாதே வீரா... படுன்னா படு" என்றவன் சீற்றமாய் சொல்லிவிட்டு விளக்கை எட்டி அணைக்க,

'அய்யோ! கடுப்பேத்துறானே... இவனை' என்றவள் உள்ளூர பொறுமிக் கொண்டிருந்தாள். ஆனால் அவனோ படுக்கையில் சாய்ந்து தன் கரத்தால் முகத்தை மூடிக் கொண்டவன் போதை மயக்கத்தில் சீக்கிரமாகவே உறக்கத்தில் ஆழ்ந்தான்.

அவள் அதுதான் சமயம் என கதவைத் திறந்து வெளியேறிவிட முயற்சிக்க, அந்த கதவோ ஆட்டோமெட்டிக் லாக்! அதனை எப்படி திறப்பது என்று புரியாமல் வெகுநேரம் போராடியவள் ஒரு நிலைக்கு மேல் களைப்புற்று தரையில் அமர்ந்து கொண்டு அங்கிருந்த டீபாயில் அப்படியே தலையை சாய்த்துக் கொண்டாள்.

அவள் பார்வை சாரதியையே குறி வைத்துத் தாக்க,

'நீ என்ன மாதிரியான ஆளுடா... பார்க்கதான் ஹீரோ மாதிரி இருக்க... செய்றதெல்லாம் வில்லன் வேலை... உன்னான்ட போய் நான் வேலைக்கு சேர்ந்தேன் பாரு... என்னை செருப்பாலயே அடிச்சுக்கணும்' என்று அவஸ்த்தையாய் புலம்பிக் கொண்டிருந்தவளுக்கு,

அந்த புது இடம்... ஏசி காற்று இவற்றையெல்லாம் தாண்டி அவனிடம் சிக்கிவிடக் கூடாதே என்ற எச்சிரிக்கை உணர்வால் அவள் வெகுநேரம் உறங்க மனமில்லாமல் அச்சத்தோடு விழித்திருந்தாள். ஆனால் ஒரு நிலைக்கு மேல் மெல்ல மெல்ல தன்னையும் மீறி அவளுக்கு விழிகள் சுழற்றிக் கொண்டு வந்தது. எப்போது உறங்கினோம் என்று தெரியாமலே உட்கார்ந்த மேனிக்கே அவள் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டிருந்தாள்.

விடிந்து அந்த அறையில் வெளிச்சம் பரவத் தொடங்க, அவளின் உறக்கம் களைந்தது.

முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவள் அரைகுறை தூக்கத்தோடு அந்த அறையை சுற்றும் முற்றும் பார்வையிட்டு முதலில் குழம்பினாள்.

பின்னர் இரவு நடந்தவை எல்லாம் அவள் நினைவுக்கு வர, அந்த நொடியே அவளுக்கு உள்ளம் படபடத்தது. அவள் பார்வை படுக்கையின் மீது அனிச்சையாய் திரும்ப, சாரதி அப்போது படுக்கையில் இல்லை.

அவன் எங்கே என்ற யோசனையோடு அவசரமாய் எழுந்து நின்றவள் தன் பார்வையைத் தேடலாய் அலைபாயவிட,

அப்போது அங்கிருந்த ஆளுயர கண்ணாடியில் தன் முகத்தை எதேச்சையாய் பார்த்து அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள்.

'அய்யோ மீசை எங்கே போச்சு?' என்றவள் அவசரமாய் தான் படுத்திருந்த இடத்தை சுற்றிப் பார்க்க, அது அவள் கண்களுக்குப் புலப்படவேயில்லை. அந்த சமயம் பார்த்து சாரதி குளியலறைக் கதவை திறந்து வெளியே வர அவனை பார்க்காதது போல் எதிர்புறம் திரும்பி நின்று கொண்டு பதறியவள், 'போச்சு! நான் செத்தேன்' என்று உரைத்தபடி  தலையிலடித்துக் கொண்டாள். 

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content