You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Aval Draupathi Alla - 15

Quote

15

முகமூடி

'போச்சு! நான் செத்தேன்' என்றபடி வீரா தலையிலடித்துக் கொள்ளும் போதுதான் உணர்ந்தாள். அவள் கரத்திலேயே அவள் மீசை ஒட்டிக் கொண்டிருந்ததை!

விழித்தவுடன் முகத்தைத் துடைக்கும் போதே இந்த தவறு நிகழ்ந்திருக்கும் என்பதை துரிதமாய் கணித்தவள்,

உடனடியாய் தன் மீசையை சரியான இடத்தில் ஓட்ட வைத்தும் கொண்டாள்.

"என்ன நின்னுட்டிருக்க? ஃப்ரஷ்ஷாயிட்டு வா... டைமாச்சு, கிளம்பணும்" என்றவன் அதிகாரமாய் சொல்ல,

அப்போது படக் படக்கென பரபரப்பாய் துடித்துக் கொண்டிருந்த இதயத்தை, "ஆல் இஸ் வெல்... ஆல் இஸ் வெல்" என்று சொல்லித் தேற்றியபடியே அவன் புறம் தன் பார்வையை திருப்பினாள்.

மீண்டும் அவள் இதயம் சராமாரியாய் எம்பிக் குதிக்க ஆரம்பித்தது.

அவனை அப்படி இடையில் ஒற்றைத் துண்டோடு பார்த்த பின்! கட்டுக்கோப்பாய் செதுக்கி வைத்தது போன்ற தேகம். அதுவும் மேற்சட்டையில்லாமல் அவன் தோற்றத்தின் கம்பீரம் இன்னும்  பன்மடங்கு பெருகியிருக்க, வீராவின் பெண்மைக்கு வந்த சோதனை அது!

என்னதான் அவன் குணமும் செய்கைகளும் அவள் விரும்பத்தகாத நிலையில் இருந்தாலும், அவனின் ஆண்மையின் வசீகரத்தை அவளால் மறுக்கவோ நிராகரிக்கவோ முடியவில்லை. சற்றே நிலைதடுமாறித்தான் போனாள். தன்னையும் அறியாமல் அவள் பார்வை அவனிடம் லயிக்க,

அவளின் பார்வையின் அர்த்தத்தை அவனால் யூகிக்க முடியவில்லையே!

"எதுக்கு இப்ப பிடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரி நிக்கிற... போ... போய் ஃப்ரெஷாயிட்டு வா... டைமாச்சு" என்றவன் அவளை முறைத்தபடி அழுத்தமாய் உரைக்கவும் அவள் ஒருவாறு சுதாரித்துக் கொண்டு,

"ஹ்ம்ம்... சரி சார்" என்று தலையை அசைத்துவிட்டு துரிதமாய் குளியலறைக்குள் புகுந்தாள். அங்கே இருந்த கண்ணாடியில் தெரிந்த அவளின் பிம்பத்தையேப் பார்த்து,

அவளுக்கு சரமாரியாய் கோபம் எழுந்தது.

'உனக்கு தேவை டி...  இன்னமும் தேவை... இதுக்கு மேலயும் தேவை... செய்றதெல்லாம் செஞ்சிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி முழிக்கிறியா? நல்லா முழி... ஒரு நாள் அந்த சாரதிகிட்ட நீ சிக்கதான் போற... அவன் உன்னை வைச்சு செய்யதான் போறான்... பார்த்துட்டே இரு'

தன் மனசாட்சி இவ்விதம் மிரட்டியதாக அவளுக்கு அவளே கற்பனை செய்து கொண்டிருக்க, அவள் தன் கர்வத்தையும் திமிரையும் எந்நிலையிலும் விட்டுக் கொடுப்பதாக இல்லை.

'இந்த வீராவாவது மாட்டுறதாவது... அந்த கடவுளே வந்தாலும் மாட்ட மாட்டேன்' என்று தனக்குத்தானே தைரியம் உரைத்துக் கொண்டிருக்க, "வீரா சீக்கிரம்" என்று வெளியே இருந்து சாரதியின் குரல் கேட்டது.

"தோ வர்றேன் சார்" என்றவள் உரைத்த அதே நேரம்,

'கொஞ்ச நேரம் கூட நம்மள நிம்மதியாவே இருக்க விடவே மாட்டானே' என்று அலுத்துக் கொண்டவள் தன் காலைக் கடனெல்லாம் முடித்துவிட்டு அவனுடன் புறப்படத் தயாரானாள்.

நாட்கள் பரபரவென ஓடின. ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் வீரா தன் முதல் மாத சம்பளத்தை வாங்கியிருந்தாள். அதனை தன் அம்மாவின் போட்டோவின் முன்னிலையில் வைத்தவளின் முகமெல்லாம் சிவந்து விழிகள் கலங்கிட, அவளின் வலி நிறைந்த உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

"அக்கா" என்று நதி அவள் தோள்களைத் தொட வீரா தன் விழி நீரை துடைத்துக் கொண்டாள். 

"யக்கா... நீ பெரிய ஆளு... எப்படியோ அந்த சர்வாதிகாரியை இத்தனை நாளா டபாய்ச்சிட்ட" என்று அமலா உரைக்க, நதியா இதைக் கேட்டு சத்தமாய் சிரித்துவிட்டாள்.

வீரா கலவரத்தோடு, "நீ வேற அம்மு... அவன் எமகாதகன்... எப்போ என்னை கண்டுக்குவானோன்னு எனக்கே திக்கு திக்குன்னு இருக்கு" என்று அச்சப்பட,

"பேசாம நீ வேலையை உட்ரேன் க்கா... இந்த சம்பளத்தை வைச்சு... நாம எப்படியாச்சும் ஒரு இரண்டு மாசத்தை ஓட்டிரலாம்... அதுக்குள்ள நீ வேற வேலை தேடிக்கலாம் இல்ல" என்று நதியா பொறுமையோடு எடுத்துரைக்க, வீரா மௌனமாய் கேட்டுக் கொண்டிருந்தாள்.

நதியா மேலும், "அடுத்த மாசம் எனக்கு எக்சாம்ஸ் முடிஞ்சிருச்சுன்னா... நானும் வேலைக்குப் போறேன் க்கா...  நீ மட்டும் தனியா ஏன் க்கா கஷ்டபட்டுக்குன்னு" என்றவள் சொல்ல, வீராவின் புருவங்கள் நெறிந்தன.

"ஓ!! வேலைக்கு போகப் போறியா... அது சரி... அதுக்கு இன்னாத்துக்கு எக்சாம்லாம் முடிச்சிக்கின்னு... பேசாம நாளைக்கே போயேன்" என்றவள் தீவிரமான முகபாவனையோடு தன் தங்கையை பார்த்து உரைத்தாள்.

"அக்கா" என்று நதியா குழப்பமாய்  அவளைப் பார்க்க, வீராவின் பார்வையில் கனலேறியிருந்தது.

"செவுல்லயே உட்டேனா பாரு... வேலைக்குப் போறாளாமே" என்று வீரா முறைப்பாய் பார்க்க,

"நான்தான் அப்பவே சொன்னேன் இல்ல... அக்கா கோபப்படும்னு" என்று அமலா சொல்லவும், "நீ வாயை மூடுறி" என்று தங்கையை அடக்கினாள் நதியா.

"நீ முதல்ல வாயை மூடுறி" என்றபடி வீரா நதியாவை உஷ்ணமாய் பார்த்தாள்.

"இல்ல க்கா நீ கஷ்டப்படறதைப் பார்க்கும் போது" என்று நதியா சொல்லும் போதே, வீராவின் கோபப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவள் பேசமுடியாமல் திக்கி நின்றாள்.

"நான் கஷ்டப்படுறேன்னு உன்கிட்ட சொன்னேனாடி?" என்று வீரா அழுத்தமாய் கேட்க,

"இல்ல க்கா நீ டெய்லிக்கும் சீக்கிரம் போய் லேட் லேட்டா வர்றியா... சில நேரத்தில வீட்டுக்கு கூட உன்னால வர முடியல"

"இதெல்லாம் ஒரு விஷயமா?"

"அதுமட்டுமா... அந்த சாரதி வேற உன்னைப் போட்டு டார்ச்சர் பண்றான் இல்ல" நதியா அவளைக் கூர்ந்த பார்வையோடு கேட்க,

"எந்த வேலைக்குப் போனாலும் இந்த மாதிரி டார்ச்சருங்க இருக்கத்தான்டி செய்யும்... அதுக்கெல்லாம் பயந்தா ஆவுமா?" சலிப்போடு பதிலுரைத்தாள் வீரா.

"அதில்ல க்கா" என்று நதியா ஏதோ பேச ஆரம்பிக்க,

"லூசு மாதிரி இப்படி பேசுறதை நிறுத்துறியா?!" வீரா நதியாவைக் கோபமாய் கத்திவிட்டாள். அப்போது அமலா மெலிதான குரலில்,

"நதி க்கா ஏன் இப்படி சொல்லுதுன்னு எனக்குத் தெரியும்" என்றதும்,

"இன்னா மேட்டரு?" அமலாவைக் குழப்பமாய் பார்த்து வீரா வினவினாள். "நீ கொஞ்சம் கம்முனு கிறியா" என்று நதியா அமலாவை மிரட்ட,

வீரா நதியாவிடம் கோபமாய் திரும்பி, "நீ கொஞ்சம் சும்மா கிட... அம்மு பேசட்டும்" என்றாள்.

"அது வந்துக்கா" என்று இழுத்தபடி அம்மு நதியாவைப் பார்க்க,

"பட்டுன்னு சொல்லு... இன்னாத்துக்கு இப்ப இழுத்துன்னுகிற"

"அந்த சவுண்டு சரோஜா இல்ல"

"ஆமா! என்ன.. அது ஏதனாச்சும் உங்க இரண்டு பேர்கிட்ட வம்பு பண்ணுச்சா" வீரா கோபம் பொங்க கேட்க,

"இல்ல க்கா... உன்னைதான்" என்று தயக்கத்தோடு நிறுத்தினாள் அமலா.

"என்னைதான்... மேலே சொல்லு" வீரா கூர்மையான பார்வையோடு கேட்க, "தப்பு தப்பா பேசுது" என்றாள்.

"தப்பு தப்பான்னா" என்று வீரா அவளைக் குழப்பமாய் பார்க்க, நதியாவும் அமலாவும் மௌனமாய் மேலே எதுவும் பேச முடியாமல் தலைகவிழ்ந்து நின்றனர்.

வீரா சலிப்பாய் பார்த்து, "ஹ்ம்ம்... புரியுது... நான் தப்பா போறேன்... தெ*** தொழில் பண்றேன்னு சொல்லிருப்பா" என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "அக்கா" என்று இரு தங்கைகளும் அதிர்ந்தனர்.

அவர்கள் இருவரும் தாங்க முடியாமல், "ரொம்ப கஷ்டமா இருந்துச்சு க்கா... வாய்க்கு வந்ததெல்லாம் பேசுறாங்க" என்றபடி தன் தமக்கையை அணைத்துக் கொண்டு கண்ணீர் பெருக்கினர்.

நதியா மேலும் அழுது கொண்டே, "நீ அன்னைக்கு நைட்டு வரலல... நீ எங்க போன... இன்னா வேலை செய்றன்னு குடைஞ்சி எடுத்துடுச்சு... அதோட விடல... வீட்டுல குடித்தனம் இருக்கிறவங்க கிட்டயெல்லாம் தப்பு தப்பா சொல்லி வைச்சிருச்சு... அவங்கெல்லாம் எங்ககிட்ட வந்து இன்னா ஏதுன்னு விசாரிக்கிறாங்க" என்றவள் விவரிக்க,

"இதெல்லாம் ஒரு மேட்டர்னு நீங்க இரண்டு பேரும் ஃபீல் பண்றீங்களாக்கும்.. அழறதை நிறுத்தங்கடி" என்றபடி தங்கைகளைத் தள்ளி நிறுத்தி வீரா அவர்களை முறைத்துக் கொண்டே பேசினாள்.

"எவளோ ஏதோ சொல்லின்னு போறா... அதையெல்லாம் போய் பெருசா எடுத்துக்குன்னு... போங்கடி அழு மூஞ்சிங்களா... இன்னைக்கு முதல் மாசம் சம்பளம் வாங்கின்னு நான் எவ்வளவு ஆசையா வந்தன்னு தெரியுமா?!" என்று வீரா வருத்தத்தோடு சொல்ல, இருவரும் புரியாமல் விழித்தனர்.

வீரா மேலும், "நம்ம எல்லாரும் சினிமாக்கு போயிட்டு வெளியே சாப்பிட்டு வரலாம்னு நினைச்சேன்... நீங்க என்னடான்னா எவளோ எதையோ சொன்னான்னு... மூஞ்சை தூக்கி வைச்சின்னுகிறீங்க... கண்டதுங்க கண்டபடி பேசினிருக்கும்... அதையெல்லாம் காதுல வாங்கிக்கின்னு" என்று அவள் சொல்ல அந்த சகோதரிகளின் முகமும் பிரகாசமானது.

"நிஜமாவா க்கா... நம்ம சினிமாவுக்குப் போறோமா?!" என்று ஆவல்த தும்ப அமலா கேட்கவும்,

"வந்தா போலாம்... ஆனா நதிக்கு வர மூடு இல்ல போலயே" என்று வீரா சொல்ல, "நான் எப்போ க்கா அப்படி சொன்னேன்" என்று நதியா சிலிர்த்துக் கொண்டாள்.

"அப்போ போய் கிளம்புங்க... நேரமாவுது" என்று வீரா சொன்னதுதான் தாமதம். நதியாவும் அமலாவும் புறப்படுவதற்கு ஆயுத்தமாக ஆரம்பித்தனர்.

வீரா தன் அம்மா போட்டோவின் முன்னிலையில் இருந்த சம்பள பணத்தை எடுத்துக் கொண்டவள்,

'ஏன் ம்மா எங்களை வுட்டு போனே... நீ இருந்த வரைக்கும் யாரையும் எங்களை ஒரு வார்த்தை கூட சொல்ல உட்டதில்ல... ஆனா இன்னைக்கு'

வேதனை தொண்டையை அடைக்க தன்னை மீறிக் கொண்டு வந்த கண்ணீரை பிரயத்தனப்பட்டு விழுங்கிக் கொண்டிருந்தாள்.

உண்மையிலேயே வீராவிற்கு தங்கைகளை வெளியே அழைத்துச் செல்லும் திட்டமும் எண்ணமும் முன்னமே இருக்கவில்லை. ஆனால் அவர்களின் கவலையை அறிந்த பின் அவர்களைத் தேற்றுவதற்காக அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. 

மற்றபடி வீராவும் அவர்கள் சொன்ன விஷயத்தைக் கேட்டு வெகுவாய் காயப்பட்டுதான் போனாள். ஏழ்மையும் அதனால் ஏற்படும் துயரங்களும் அவளுக்குப் புதிதல்ல. ஆனால் இதைப் போன்ற அவசொற்கள் அவளுக்கு ரொம்பவும் புதிதாயிற்றே!

சுலபமாய் தன் தங்கைகளை சமாளித்துவிட்டாள் எனினும் அதனை தாங்குவதற்கான மனோதிடமும் கடந்து வருவதற்கான முதிர்ச்சியும் அவளுக்கே இல்லை. ஆனால் அவள் தன் காயப்பட்ட உணர்வுகளை மறைத்து கொள்ளுமளவுக்கு நடிப்பில் கைதேர்ந்தவள் அல்லவா!

முகமூடி போட்டுக் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் உணர்வுகளை சுற்றத்தாரிடம் மறைத்து ஓர் ஜடமாய் வாழ பழகிக் கொண்டிருந்தாள். அவள் கண்ணீர், கோபங்கள், ஆசைகள், வலிகள்யாவும் அவள் அணிந்திருந்த முகமூடியின் பின்னே மறைந்து கிடந்ததை யார் அறியக் கூடும்.

*******

சாரதியின் அலுவலகம்!

ரொம்பவும் மும்முரமாய் சாரதி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அப்போது அவனை சைமன் பேசியில் அழைத்தாள்.

"சொல்லு சைமன்" என்று சாரதி லேப்டாப்பை பார்த்தபடியே வினவ,

"சார் ஒரு முக்கியமான விஷயம்" என்றான்.

"என்ன?"

"அந்த காசிமேடு சங்கர் உங்களைப் பார்த்து பேச ஒத்துக்கிட்டான்" என்றதும் சாரதி ஆர்வம் பொங்க,

"குட்... அவனை நம்ம அட்ரஸ் கொடுத்து உடனே வர சொல்லு" என்றான்.

"இல்ல சார்... அது வந்து" கைமன் தயங்க,

"என்ன மேட்டர் ?  சொல்லு" என்றான் சாரதி!

"அது... சார்" இடைவெளிவிட்டு மௌனமாக,

"சைமன்" என்று சாரதி மீண்டும் அழைத்தான்.

"சார்... நீங்க அவன் இடத்துக்குதான் வந்து பார்க்கணும்னு சொல்றான்... அதுவும் தனியா" சைமன் தயக்கமாய் சொல்லி முடிக்க, சாரதி பதிலின்றி மௌனமானான்.

"சார்" என்று சைமன் அழைக்கவும் சாரதி தன் சிந்தனையிலிருந்து மீண்டு, "ஹ்ம்ம்" என்றான்.

"உங்களை நேர்ல பார்த்தாதான் எல்லா மேட்டரையும் சொல்லுவேன்னு சொல்லிட்டான்.... எதுக்கும் நீங்க கொஞ்சம் யோசிச்சு" என்று சைமன் அச்சத்தோடு நிறுத்த,

"அதெல்லாம் தேவையில்லை... எப்போ மீட் பண்ணனும்... அதை மட்டும் சொல்லு" என்றான் சாரதி தீர்க்கமாக!

"சார்" என்று சைமன் அதிர்ச்சியாக,

"இப்பவே ஃபோன் பண்ணி மீட் முடியுமான்னு கேளு?" என்று சைமனுக்கு அடுத்த அதிர்ச்சி தந்தான் சாரதி!

சைமனுக்கு வார்த்தையே வரவில்லை. அவன் ரொம்பவும் பயங்கரமான ரவுடியாயிற்றே! அவனை நேரில் சந்திப்பதில் சாரதிக்கு எத்தகைய ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று யோசனையில் அவன் அமிழ்ந்துவிட, "சைமன்" என்ற சாரதி அழைக்க யோசனைகுறியோடு, "சார்" என்றான்.

"நான் இப்பவே வர ரெடின்னனு அவனுக்கு இன்பாஃர்ம் பண்ணிட்டு.. எனக்கு போக வேண்டிய இடத்தை மெஸேஜ் பண்ணு" என்றதும் சைமன் டென்ஷனாகி, "சார் கொஞ்சம் யோசிச்சு" என்று இழுத்தான்.

"சொன்னதை செய் சைமன்" என்று சொல்லி பேசியின் இணைப்பைத் துண்டித்தான் சாரதி!

அதே நேரம் சைமனிடம் இருந்து சில நொடிகளில் தகவல் வர சாரதி வீராவுக்கு அழைத்து, "காரை ரெடி பண்ணு... கொஞ்சம் வெளியே போகணும்" என்றான்.

"ஒகே சார்" என்றவள் அவன் வேகத்திற்கு ஏற்றாற் போல காரைத் தயார் நிலையில் வைத்திருந்தாள்.

சாரதி காரில் ஏறியதும் அவன் செல்ல வேண்டிய இடத்தைக் குறித்த விவரத்தைத் தெரிவிக்க அவனை ஆச்சர்யமாய் ஏறிட்டவள்,

"அதல்லாம் லோக்கல் ஏறியாவாச்சே... அங்கே இன்னாத்துக்கு சார்" என்றாள் காரை இயக்கியபடி!

"அந்த ஏரியாவைப் பத்தி நான் உன்கிட்ட விளக்கம் கேட்டனா?.... போன்னா போயேன்" என்றவன் சுருக்கென்று பதிலுரைக்க, "ம்க்கும்" என்று உதட்டிற்குள்ளேயே சுளித்துக் கொண்டாள்.

அதோடு அல்லாது அவன் சொன்ன  இடத்தின் வழி தெரியாமல், இவளும் குழம்பி அவனையும் முடிந்தளவு டென்ஷப்படுத்தி வழி கேட்டு கேட்டு எப்படியோ தட்டுதடுமாறி அவனை அழைத்து வந்து சேர்பித்துவிட்டாள்.

சாரதி இறங்குவதற்கு முன்னதாக வீராவைக் கடுப்பாய் பார்த்தவன்,

"எந்த ரூட்டுமே தெரியாத உன்னை டிரைவரா வைச்சிருக்கேன் இல்ல... என்னை" என்றவன் சொல்லவும் வீராவிற்கு சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது.

அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டவள், "கவலைபடாதீங்க சார்... கூடிய சீக்கிரம் எல்லா ரூட்டையும் தெரிஞ்சுக்கிறேன்" என்றாள்.

"அதுக்குள்ள எனக்குப் பைத்தியம் பிடிச்சிரும்" என்று சொல்லிக் கதவை படாரென மூடிவிட்டு சென்றான்.

வீரா காரை ஓரமாய் நிறுத்தவிட்டு அந்த இடத்தை சுற்றும் முற்றும் பார்வையிட்டாள். அவளுக்கு அந்த இடம் ஒன்றும் சரியாகப் படவில்லை. அங்கு தென்பட்ட முகங்கள் யாவும் கர்ணகொடூரமாகத்தான் அவளுக்கு காட்சி தந்தன.

'எந்த மூஞ்சியும் சரியே இல்லையே... எல்லாம் திருட்டு கொட்டுங்களா இருக்கு... இங்க இன்னாத்துக்கு வந்துக்கிறான்... அப்படி இன்னா வேலை இங்க இவனுக்கு... இங்க நம்மள வேற கூட்டியாந்து உட்டு போறான்... இவன் கூட ஒரே ரப்ச்சரா போச்சுயா'  வாய்க்குள்ளேயே முனகிக் கொண்டு வீரா காரருகில் நிற்க, அப்போது இரும்பினையொத்த ஒரு கரம் அவள் தோள் மீது அழுத்தியது. அரண்டு போய் திரும்பினாள் அவள்!

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content