You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Aval Draupathi Alla - 41

Quote

41

விபத்து

சீற்றத்தோடு வீட்டிற்குள் நுழைந்த அரவிந்த் செக்யூரிட்டியில் ஆரம்பித்து தன் அக்கா அம்மா என எல்லோரிடமும் 'சாரதியை எப்படி உள்ளே அனுமதித்தீர்கள்' என்று கேட்டு  ருத்ரதாண்டவமே ஆடினான்.

இறுதியாய் அரவிந்தின் கோபம் தன் மாமா சரத்தின் மீது திரும்ப, அவனோ அப்போது அந்த இடத்தில் இல்லை. சரத்தை தேடிக் கொண்டு அவன் அறைக்கு சென்றான் அரவிந்த்.

அவனோ ஒய்யாரமாய் அங்கே நடந்த எதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல் செஸ் விளையாடிக் கொண்டிருந்தான். 

அதுவும் இரண்டு பக்கமும் அவனே காய் நகர்த்த, அரவிந்த் கதவை அரைந்து சாற்றி அவன் கவனத்தைத் திருப்ப முயன்றான். ஆனால் சரத் அசறவேயில்லை.

"இப்ப எதுக்கு இவ்வளவு டென்ஷன்?" என்று கூலாக தன் பக்க மந்திரியை அவன் நகர்த்தி வைக்க,

"என்ன மாமா நீங்க? அந்த புறம்போக்கு நம்ம வீட்டுகுள்ளேயே வந்திருக்கான்.... அவனை அடிச்சு விரட்டாம... நீங்க என்னடான்னா?" என்று அரவிந்த் எரிமலையாய் பொங்கினான். 

"அரவிந்த் ரிலாக்ஸ் " 

"ரிலாக்ஸா?!... போங்க மாமா....  அவனைப் பார்த்தாலே எனக்கு பத்திக்கிட்டு வருது" 

"ஆனா எனக்கு அவனைப் பார்த்தா... பிரமிப்பா இருக்கு அரவிந்த்" என்று சொல்லி சரத் வியப்பாய் தன் விழிகளை விரிக்க,

"என்ன?" என்று அதிர்ந்து கேட்டான் அரவிந்த்!

"பின்ன... பொண்டாட்டி பேச்சைக் கேட்டு இவ்வளவு தூரம் ஒருத்தன் இறங்கி வந்து மன்னிப்பு கேட்க வந்திருக்கான்... அதுவும்... இப்ப்ப்ப்படிப்பட்ட ஒருத்தன்" என்று சரத் பிரமித்து சொல்ல,

"உளறாதீங்க மாமா... அவ பேச்சைக் கேட்டு இவன் மன்னிப்பு கேட்க வந்தானாக்கும்" என்று அரவிந்த் எள்ளிநகைத்தான். 

"கண்டிப்பா அப்படிதான் இருக்கும்...  இரண்டு நாள் முன்னாடி நீதானே சொன்ன... வீராவைப் பார்த்து நடந்த விஷயத்தையெல்லாம் சொன்னேன்னு" என்றதும் அரவிந்த் அந்த சந்திப்பை பின்னோக்கி சிந்தித்து, "ஆமா" என்க, "அதோட எஃப்க்ட்தான் இது" என்றான் சரத்!

அரவிந்த் நம்பமுடியாமல் சரத்தைப் பார்த்து ஏதோ சொல்ல எத்தனிக்க அதற்குள் சரத், "நோ டௌட்... சாரதி வீரா சொன்னதுக்காகதான் வந்திருக்கான்" என்று தீர்மானமாய் உரைக்க, அரவிந்தால் இன்னமும் நம்ப முடியவில்லை. அவன் யோசனையோடு நின்றிருக்க, 

"ரொம்ப யோசிக்காதே... வா... செஸ் விளையாடுவோம்" என்று அழைத்தான் சரத்.

"அடபோங்க மாமா.... நானே கடுப்புல இருக்கேன்" 

"அப்போ உனக்கு சாரதியை தோற்கடிச்சு... வீராவை அசிங்கப்படுத்த வேணாமா?!" 

"பண்ணனும்தான்... ஆனா எப்படி?" அடங்கா வெறியோடு பல்லை கடித்துக் கொண்டு அரவிந்த் கேட்க,

"இப்படிதான்" என்று சரத் செஸ் போர்டைக் காண்பிக்க...

அரவிந்த் கடுப்போடு அதனை உற்று பார்த்துவிட்டு சரத்தைப் பார்த்து, "செஸ்ல வர்ற ராஜா இல்ல சாரதி... நம்ம ஒரடி எடுத்து வைச்சா அவன் பத்தடி நமக்கெதிரா எடுத்து வைப்பான்" என்க,

"அவனை எந்த பக்கமும் அடி எடுத்து வைக்க விடாம லாக் பண்ணனும் அரவிந்த்" என்று சொன்ன சரத்,

"யானை அவனோட பண பலம்... மந்திரி அவனோட புத்தி... குதிரை அவனோட அடியாளுங்க... இது எதோட உதவியும் இல்லாம அவனை லாக் பண்ணி சுத்தி செக் வைக்கணும்" என்று காய்களை நகர்த்தி கருப்பு ராஜாவை சுற்றி செக் வைத்த அரவிந்த், "இந்த பொஸிஷன்ல ராஜாவோட எந்த பவரும் வேலை செய்ய முடியாது" என்று சொல்லி வஞ்சமாய் புன்னகைத்தான். 

"சரி... இதுல ராணியோட ரோல் என்ன மாமா?"

"அதுதான் மேஜர் ரோல்... அவனோட மொத்த இமோஷன்ஸோட ஒன் அன்ட் ஓன்லி கன்ட்ரோல்... அவளை மட்டும் தூக்கிட்டா" என்று சரத் கருப்பு ராணியை கையிலெடுத்தான். 

அரவிந்த் எகத்தாளமாய் சிரித்து, "கேம்லயே அது கஷ்டம்... நிஜத்துல... ரொம்ப கஷ்டம்... அதுவும் வீரா... லேசுபட்டவ இல்ல" என்றான்.

"அதைத்தான் நான்  பார்த்தேனே... எதிரி கூடாரத்துல அசால்ட்டா நுழைஞ்சு... எல்லோரையும் சாச்சுட்டா" என்றவன், 

அரவிந்தை நிமிர்ந்து பார்த்து, "எப்பேர்ப்பட்ட புத்திசாலி தைரியசாலியா இருந்தாலும் அவளுக்கும் ஏதாவது ஒரு பலவீனம் இருக்கும்... அதைப் பிடிப்போம்...ரிஸ்க் எடுக்காம எதுவும் நடக்காது" என்று அழுத்தமாக உரைத்தான்.

"அது கரெக்ட்தான்... நீங்க சாரதியை லாக் பண்ற ப்ளானை மட்டும் யோசிங்க... நான் வீராவை தூக்கறதுக்கான ப்ளானை யோசிக்கிறேன்...இந்த தடவை மைன்யூட்டா கூட அவனுக்கு தப்பிக்க வழி இருக்கக் கூடாது" என்று அரவிந்த் சொல்ல,

"ப்ளானெல்லாம் பக்கா ரெடி" என்றான் சரத்.

"நிஜமாவா" அரவிந்த் முகம் பிரகாசிக்க, சரத் அவன் தந்திரமாய் தீட்டிய திட்டத்தை சொல்லி முடித்து, "இந்த மேட்டரை லீக்காகாம செஞ்சு முடிக்கணும்... அதுதான் சவாலே!" என்றான்.

"கண்டிப்பா மாமா" என்று இம்முறை தீர்க்கமாய் தலையசைத்தான் அரவிந்த்! அவனுக்கு நிச்சயம் இந்தத் திட்டம் வேலை செய்யும் என்ற நம்பிக்கை தோன்றியது. 

நாட்கள் தேய்ந்து வாரமானது... 

சாரங்கபாணி உடல் நிலை சரியாகி வீட்டிற்குத் திரும்ப, சாரதியின் சம்மதத்தோடு அவர்களையும் தங்களோடே தங்க வைத்துக் கொண்டாள் வீரா!

வீராவின் அன்பிலும் கவனிப்பிலும் தெய்வானையும் சாரங்கபாணியும் நெகிழ்ந்தனர். அந்த அன்பின் வெளிப்பாடாக அவர்களும் வீராவையும் அவள் தங்கைகளையும் தங்கள் மகள்களாகவே பாவித்தனர். இதனால் சாரதிக்கு ஆச்சர்யத்தோடு  மனநிறைவும் ஏற்பட்டது.

தனிமையில் இருந்தவனுக்கு இந்த உறவின் சங்கமம் இன்பத்தில் திளைக்கச் செய்ய, இதற்கெல்லாம் முழுமுதற் காரணமான வீரா அவன் மனதில் ஆகாயம் போல எங்கும் நீக்கமற நிறைந்தாள்.  

வாரங்கள் மாதமாக...  இன்னும் ஒரு வாரத்தில் வீரா சாரதியின் திருமண வரவேற்பு...  அதற்கான ஏற்பாடுகளில் அவன் படுமும்முரமாய் இருந்தான். அவன் கவனம் முழுக்க அதில்தான் நிரம்பியிருந்தது. 

காலை வீரமாக்காளி கோவிலில் முறைப்படி அவர்களின் திருமணம் என்றும்.... அன்று மாலையே பெரிய நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு  என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

 அதுவும் வீராவின் விருப்பத்திற்காகவே சாரதி  கோவிலில் திருமண ஏற்பாடுகள் செய்தான். வீராவிற்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் கோவிலில் நடைப்பெறும் திருமணத்திற்கு அழைப்பதென்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் சாரதியின் வியாபார நண்பர்களை அழைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது.

இருவேறு ஸ்டேட்டஸ் நிலையில் உள்ளவர்களை ஓரிடத்தில் சங்கமிக்க வைப்பது தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால் இத்தகைய திட்டமிடல்!

அதற்கேற்றாற் போல சாரதி இரண்டு வெவ்வேறான திருமண அழைப்பிதழ்களை அச்சிட்டிருந்தான்.

சாரதி தன் வியாபார நண்பர்கள் எல்லோரையும் அழைத்துவிட்ட நிலையில் வீரா தன்வழி சொந்தங்கள், நண்பர்கள் அனைவரையும் அழைக்க அவனும் உடன் வரவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள். 

வேறுவழியின்றி சாரதியும் அவள் உடன் வந்தாலும் அவன் நினைப்பெல்லாம் வேலையில்தான். அவன் சலிப்போடு,

"கண்டிப்பா நான் வந்தே ஆகணுமா" என்று கேட்க,

"வண்டியை ஒரமா நிறுத்து" என்று அவள் சொல்லவும், "மாட்டேன்பா... ஒருதடவை வாங்குனதே போதும்" என்று பயம் கொள்வது போல் பாவனை செய்தான் சாரதி.

ஆனால் வீரா அடங்கா கோபத்தோடு, "சும்மா அப்படியே பயப்படுற மாதிரி சீனை ஓட்டாதே... நீ வண்டியை நிறுத்து... நான் வூட்டுக்கு போறேன்... நீ ஆபிஸுக்கு போ... போய் அந்த கணேஷையே கட்டிக்கின்னு அழுவு" என்றவள் சொல்ல,

"சும்மா நீ ஏன் அவனையே வம்புக்கு இழுக்குற?!" என்று சாரதி கேட்க அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"பின்ன... நேரங்காலமில்லாம ஃபோன் போட்டா... கடுப்பாவல" என்றவள் சொல்ல, "அதானடி அவன் வேலை" என்று சாதாரணமாகச் சொன்னான் சாரதி. 

இவ்விதம் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் செல்பேசி அலற வீராவின் முகம் மேலும் கடுகடுத்தது. 

சாரதி அவள் முறைப்பையும் மீறி பேசியை எடுத்துப் பார்த்து, "கணேஷ்தான்" என்று அசடு வழிய  அவள் மறுகணமே  பேசியை அவனிடமிருந்து பறித்துக் கொண்டுவிட்டாள்.

"வீரா" என்று சாரதி அதிர்ந்து குரலெழுப்ப,

"ஷ்ஷ்ஷ்" என்று அவனை அடக்கிவிட்டு, அவளே பேசினாள். அதுவும் அவன் குரலில்!

"சொல்லு கணேஷ்" 

  அவனுக்கோ தூக்கிவாரிப் போட்டது... வேகமாய் சென்ற கார் சட்டென ஸ்பீட் பிரேக்கில் ஏறி இறங்கியது போல ஒரு நொடி ஜெர்க்கானது அவனுக்கு. எதிர்புறத்தில் கணேஷ் என்ன சொன்னானோ?! 

இவள் உடனே,  "எந்த வேலையா இருந்தாலும் நாளைக்கு போஸ்ட்போன் பண்ணிடு... அன்ட் ஃபோன் பண்ணி சும்மா சும்மா டிஸ்டர்ப் பண்ணிட்டிருக்காதே... நான் கொஞ்சம் பெர்ஸ்னல் வேலையா வெளியே போயிட்டிருக்கேன்" என்று டக்கென்று உரையை முடித்து அவள் அழைப்பைப் பட்டென துண்டித்தாள். 

அச்சு பிசகாமல் அவன் குரலில் அதுவும் அவன் பேசும் விதத்திலேயே அவள் பேசியதில் அதிர்ச்சி கலந்த வியப்போடு பார்த்தவன்,

"ஏ... கேடி... இது முதல் தடவையா இல்ல...  முன்ன பின்ன எப்பயாச்சும் இப்படி பேசியிருக்கியா?" என்றவன் கேட்க அவள் முகத்தில் ஓர் குறும்புப் புன்னகை!

"சரியான ப்ராஃடு" என்று அவன்  சொல்லி அவள் தலையில் அடிக்க,

"ஃப்ராடா... அதுவும் உன்னை விடவா?!" என்று கேலியாய் சொல்ல அவன் சினத்தோடு,

"இதெல்லாம் நல்லா பேசுற... இதுவே காலேஜ் போய் படின்னு சொன்னா அதுக்கு மட்டும் வாயே வராது மேடமுக்கு" என்றவன் சொல்ல அவள் அலுத்துக் கொண்டு,

"வராததை வா வான்னா எப்படிய்யா வரும்" என்றவள் படபடவென பொரிய,

"வராது... வரவே வராது... அதுவும் உனக்கு சத்தியமா வராது" என்று சாரதி தீவிரமாகச் சொல்ல, வீராவின் முகம் சுருங்கிப் போனது.

"ஷப்பா... இரண்டு மாசமே என்னால உன்னை வைச்சுக்கிட்டு முடியல... எப்படிதான் உங்க அம்மா இத்தனை வருஷம் உன்னை சமாளிச்சாங்களோ?!" என்று அவன் கேலியாகத்தான் சொன்னான். ஆனால் அந்த வார்த்தைகள் அவளை ஆழமாய் காயப்படுத்தும் என்றவன் எதிர்பார்க்கவில்லை. 

"அம்மா" என்றவள் குரல் தழுதழுக்க, அந்த சமயம் கார் அவர்கள் தங்கியிருந்த குடித்தன வாசலின் முன் வந்து நிறுத்தப்பட்டிருந்தது. அவள் வேதனை நிரம்பிய முகத்தைப் பார்த்தவன் குற்றவுணர்வோடு,

"சாரிடி... ஏதோ பேச்சு வாக்குல" என்றவன் சொல்ல அவளோ அவன் சொன்னதைக் காதில் வாங்காமல் காரை விட்டு வெளியே வந்து அந்த சாலையை வெறுமையாய் பார்த்துக் கொண்டு நின்றாள்.

 "வீரா" என்று சாரதி மிருதுவாய் அவள் தோள்மீது கரம் பதித்தான்.

"இங்கேதான்...  எங்கம்மா... அவங்க உடம்பு...  ரத்தமும் சதையுமா உயிரில்லாம கிடந்துச்சு" என்றவள்  அந்த சாலையை கை காண்பித்து வேதனையோடும் வலியோடும் உரைக்க,

சாரதி அவளைத் தோளோடு அணைத்துப் பிடித்து தேற்றியபடி,

"வா... உள்ளே போலாம்" என்றான்.

அந்த சமயம் அந்த தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அவளை அடையாளம் கண்டுகொண்டனர். அவர்கள் ஓடிவந்து, "வீரா க்கா" என்று பாசமாய் அவளை சூழ்ந்து கொள்ள, அவர்களைப் பார்த்த நொடி அவள் மனநிலை முற்றிலும் மாறியது.

அவர்களுடன் சிரித்துப் பேசி மகிழ்ந்தவள் அவர்களுக்காக வாங்கிவந்த இனிப்புகளை வழங்க, எல்லோரும் குதூகலமாய் ஆரவாரித்தனர். பிறகு அங்கு வசிக்கும் எல்லோருக்கும் அழைப்பிதழ்களை வழங்க அதைப் பார்த்து சிலர் சந்தோஷம் கொள்ள, சிலர் அவள் காதுபடவே அவளைத் தவறாகவும் குத்தலாகவும் பேசினர்.

சாரதிக்கு கோபமேற வீரா அவனைக் கட்டுப்படுத்தி அவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாமென்று கூற, அவனும் அவளுக்காக அமைதியானான். அதன் பின் சுகுமார் வீட்டிற்கு அவர்கள் செல்ல, சாரதியை அவன் ரொம்பவும் மரியாதையாய் வரவேற்று அமர வைத்தான். 

அதோடு சுகுமார் வீராவைப் பற்றி சாரதியிடம் கதை கதையாய் சொல்ல அவன் சிரித்து சிரித்து, "என்னால சத்தியமா முடியல" என்று ஓய்ந்து போனான்.

 வீரா கடுப்போடு, "டே... சுகுமார்ர்ர்ர்ரு" என்று இழுக்க,

"நீ சொல்லு சுகுமாரு... அப்புறம் என்ன நடந்துச்சு?" என்று சிரிப்பை நிறுத்திவிட்டு கேட்க,

"அய்யோ அப்புறம்தான் சீனே... இவ அடிச்ச விசிலைப் பார்த்த தலைவரே டென்ஷனாகி...  இவளை கூப்பிட்டுவிட்டாரு... எனக்கா அல்லுவுட்டிருச்சு" என்று சுகுமார் அன்று நடந்தவற்றை ஆக்ஷனோடு தெரிவித்தான். 

"சிக்கியிருக்க மாட்டாளே! எமகாதகி" இதைச் சொன்னது சாக்ஷாத் சாரதிதான். அதுவும் கேலியாய் அவளை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே!

 "போதும் இதோட நிறுத்துறியா?" என்று சுகுமாரை மீண்டும் முறைத்தாள் வீரா. ஆனால் சுகுமார் விடாமல் நடந்த முழு கதையும் சொல்லி முடிக்க, சாரதியின் சிரிப்பு சத்தத்தில் அந்த இடமே அதிர்ந்தது.

வீரா உடனே சுகுமாரைப் பார்த்து, "இருடி...நான் உன்னை பத்தி சொல்றேன்" என்றவள் மிரட்டல் விடுக்க,

"இன்னா சொல்லப் போற?" என்று கேட்டு எகத்தாளமாய் சிரித்தான்.

"ஒருதடவை.... நான் ஸ்கூல் படிக்கும் போது நீ எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தர்றேன்ன்ன்ன்ன்னு..." என்றவள் இழுவையாய் இழுக்க,

 "அய்யோ! தெய்வமே" என்று  அலறிவிட்டான் சுகுமார்.

"என்ன மேட்டர்?" என்று சாரதி விசாரிக்க, "எந்த மேட்டரும் இல்ல சார்... அவ ஏதோ உளர்றா" என்ற போதே சுகுமாரின் குரல் நடுங்கியது.

"யாரு...? நான் உளர்றேனா?" என்று சுகுமாரை  முறைத்தவள், "நான்  சொல்லுவேன்" என்று சாரதியின் புறம் திரும்பினாள். 

சுகுமார் அவளிடம் கெஞ்சலாய் வேண்டாமென்று தலையசைக்க,

 "அந்த பயம்" என்று வீரா அவனிடம் சொல்ல,

"எதை...  இரண்டு பேரும் என்கிட்ட இருந்த மறைக்கிறீங்க" என்று இடையிட்டுக் கேட்டான் சாரதி. 

வீரா உடனே, "அதெல்லாம் ஒண்ணுமே இல்ல... சல்பி மேட்டர்" என்று அவள் சமாளிக்க அப்போதுதான் சுகுமாருக்கு மூச்சே வந்தது. புறப்படும் முன்னர் அவர்கள் சுகுமாரை திருமணத்திற்கு அழைத்துவிட்டு கிளம்ப, சுகுமார் வீராவின் பின்னோடு வந்து எதோ சைகை செய்ய அவள் தாமதித்து நின்றாள்.

"அந்த மேட்டரை மட்டும் சாரதி சார்கிட்ட சொல்லி... என் பொழப்புல மண்ணள்ளி போட்டுறாத தெய்வமே" என்றான் அவன்!

"அய்யே! இதெல்லாம் போய் சொல்லின்னு இருப்பாங்களா... நான் சும்மா உன்னை கலாஞ்சேன்" 

"எனக்கு படபடன்னு வந்துருச்சு தெரியுமா?!" என்றவன் பரிதாபமாய் சொல்ல, 

"சரி அதை வுடு... நீ மறக்காம கல்யாணத்துக்கு வந்துரணும்... சரியா" என்று சொல்லிக் கொண்டே அவள் முன்னேறி செல்ல,

"வராம எப்படி... முதல் ஆளா வந்துருவேன்" என்றான் மகிழ்ச்சியோடு!

வீரா வாசலுக்கு வரவும் சாரதி கார்  அருகில் நின்று கொண்டு, "பேசியாச்சா போலாமா?!" என்று கேட்க பின்னோடு இருந்து, 

"வீரா" என்ற ஓர் அழைப்பு!

அந்தக் குரல் அவளை அப்படியே ஸ்தம்பிக்க செய்துவிட்டது. அதே நேரம் இதயத் துடிப்பு அபரிதமான வேகத்தில் பெருக அவள் பதட்டத்தோடு,

"காரை...எடுய்யா போலாம்" என்றாள்.  

"பின்னாடி யாரோ உன்னை கூப்பிடுறாங்கடி... உனக்கு தெரிஞ்சவங்க போல" என்று சாரதி சொல்ல அவளுக்கு உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. 

"அய்யோ... எனக்கு எவனையும் தெரியாது... நீ முதல்ல வண்டியை எடு" என்றவள் படபடக்க முகமெல்லாம் வியர்த்து வடிய ஆரம்பித்தது. 

 சாரதி பின்னோடு வந்தவரையும் அவளையும் புரியாமல் குழப்பமாய் பார்க்க, "வீரா" என்று மீண்டும் அந்தக் குரலின் அழைப்பு... அதுவும் இன்னும் நெருக்கமாய் கேட்க 

 எதோ அசிங்கத்தை மிதித்தவள் போல அவள் முகம் அசூகையாய் மாறியது.  வீராவிற்கு அதற்கு மேல் பொறுமையில்லை. அவளால் அங்கே நிற்க முடியவில்லை. நிற்கவும் முடியாது. 

அந்த நொடியே சாரதி கையிலிருந்து கார் சாவியை பறித்துக் கொண்டு துரிதமாய் காரில் அமர, "வீரா" என்று சாரதி அதிர்ச்சியான அதே நேரம் அவள் எண்ணம் அறிந்து அவனும் ஏறிக் கதவை மூடும் போதே அந்த கார் விர்ரென பறந்து அந்த இடத்தை விட்டு அகன்றது. 

 நிதானமற்ற நிலையில் அவள் காரை இயக்கிய காரணத்தால் அது தாறுமாறாய் சாலைகளில் ஓட, "வீரா... ஸ்லோ டவுன்?" என்று அவன் அறிவுறுத்திக் கொண்டிருக்கும் போதே  அவள் சாலை ஓரமாய் இருந்த  போஸ்ட்கம்பத்தில் காரை மோதினாள். கார் போஸ்ட்கம்பத்தில் இடித்துப் பெரும் சத்தம் எழ, சாரதியுமே இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் ஒருவாறு சுதாரித்துக் கொண்டுவிட,

அவன் பார்வை அந்த நொடி வீராவின் நலனைப் பற்றி எண்ணி பதட்டத்தோடு அவள் புறம் திரும்பியது.  அவளோ இடித்த வேகத்தில் ஸ்டியரிங்கில் தலை முட்டி சாய்ந்துக் கிடந்தாள். அவன் பதட்டத்தோடு அவள் தலையை நிமிர்த்த... நெற்றியில் குருதி வடிந்து அவள் மயக்க நிலைக்கு சென்றிருந்தாள் . 

அவன் துரிதமாய் செயல்பட்டு அவளைப்  பின் இருக்கையில் கிடத்திவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். 

சில நிமிடங்களில் அவள் மயக்கம் தெளிந்தது. இருப்பினும் அவள் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ஏதோ சொல்லவொண்ணா தவிப்பும் வேதனையும் அவள் முகத்தில் குடியிருக்க, அதனை அவன் விழிகளும் கவனிக்கலாயின. 

இருவரும் சிகிச்சைக்குப் பின் வீட்டிற்கு திரும்ப.... அவளோ கனத்த மௌனத்தை சுமந்துக் கொண்டே அவனுடன் வந்தாள். அவனும் அவள் மௌனத்தைக் கலைக்க முற்படவில்லை.

வீட்டை அடைந்ததும் அவள் காயத்தைப் பார்த்து அவள் தங்கைகளும் தெய்வானையும் பதற, அவர்களை ஓரிரு வார்த்தைகள் சொல்லித் தேற்றியவள்... பின் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள். 

இரவு உணவைக் கூட தெய்வானை கட்டாயப்படுத்திய ஓரே காரணத்தால் விருப்பமே இல்லாமல் கொஞ்சமாய் உண்டாள். சாரதி தள்ளி நின்று அவள் மனநிலையை ஆராய்ந்தானே ஒழிய... நடந்தேறிய விஷயம் குறித்து எந்தவித விளக்கமும் அவளிடம் கேட்கவில்லை.

ஆனால் அவளிடம் அது பற்றிப் பேச எண்ணியவன் தன் அறைக்குள் நுழைய... அவளோ படுக்கையில் விழிமூடி படுத்திருந்தாள். அவள் உறங்கிவிட்டாளா என்று எண்ணும் பொழுதே அவள் விழிகள் மூடியவாறே கண்ணீரை சுரந்து கொண்டிருந்தன. 

"வீரா" என்றவன் அழைக்கவும் அவள் வேகமாய் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டுவிட,

"என்னாச்சு டி?" என்றவன் அவள் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு கேட்க, "ஒண்ணும் இல்லையே" என்று அவள் பதிலளித்துவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள்.  அவள் எதையோ மறைக்க முற்படுகிறாள் என்பது அவனுக்கு அப்பட்டமாய் தெரிந்தது.

அவன் அவசரமாய் அவளைத் தன் புறம் திருப்பி, "என்னடி பிரச்சனை?! சொல்லுடி" என்று அவன் படபடப்போடு கேட்க, அவள் உள்ளம் என்னமோ அவனிடம் சொல்லிவிடத்தான் தவித்தது. ஆனால் என்ன செய்ய? அவளுக்கு அந்த விஷயத்தை அவனிடம் சொல்லதான் துணிவு வரவில்லை. 

அவள் எதையோ சொல்ல முடியாமல் தவிக்கிறாள் என்பதை அவள் முகபாவனைகள் கொண்டே கணித்தவன்,

"உன் கஷ்டத்தை என்கிட்ட சொல்லக் கூடாதா?" என்று அவள் தாடையை நிமிர்த்தி அவள் முகத்தை ஆழமாய் ஊடுருவிப் பார்க்க, அவள் மனம் கலவரப்பட்டது. 

அவன் பார்வையில் சிக்குண்டவள் தன்னை அறியாமல் சொல்லி விட வாய்திறந்து பின் அது ஏனோ முடியாமல் அவன் அணைப்பிலிருந்து விலகி வந்தாள்.

"வீரா... ப்ளீஸ் சொல்லு" என்று அவன் அவள் தோள் மீது கரம் பதிக்க, அவள் இப்போது கோபமாகி, "என்ன சொல்லணும்... சொல்றதுக்கெல்லாம் எதுவுமில்லை" என்று கடினமான குரலோடு உரைத்தாள். 

"சரி... சொல்ல வேண்டாம்... ஆனா அங்க உன் பேரைக் கூப்பிட்டவர் யாருன்னு சொல்லு... நான் தெரிஞ்சுக்கணும்" என்றவன் அழுத்தமாய்க் கேட்க, அவள் அதிர்ந்து மௌனமானாள். அவன் மீண்டும், 

"யாரு அது வீரா?" என்று கேட்டு அவளை ஆழ்ந்து பார்க்க,

"எனக்குத் தெரியாது" என்று சொல்லி விருட்டென அந்த அறையை விட்டு வெளியேறிவிட அவள் எத்தனிக்க... அவன் பாய்ந்து வந்து அவள் கரத்தை பிடித்துத் தடுத்துவிட்டான்.

இயலாமையோடு, "விடுய்யா கையை" என்றவள் தவிப்புற, "முடியாது... சொல்லிட்டுப் போ" என்றான். 

"என்னைப் போட்டு படுத்தாதய்யா... எனக்கு அந்த ஆளப் பத்தி பேச இல்ல... நினைக்க கூட வேணாம்" என்றவள் விழிகள் கனலை கக்கிய அதே நேரம் நீரை ஊற்றாகப் பெருக்கியது. 

அவள் ஏதோ ஆழமாய் காயப்பட்டு இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் அதன் பின் இன்னும் தீர்க்கமாய் அந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற முடிவோடு, "அப்படி என்னடி பிரச்சனை அவருக்கும் உனக்கும்... இப்ப நான் தெரிஞ்சுகிட்டே ஆகணும்... நீயா சொல்றியா இல்ல நானே விசாரிச்சுக்கவா?" என்றவன் அழுத்தமாய் வினவ,

அவளோ கண்ணீர் உறைந்த நிலையில் அவன் வார்த்தைகளைக் கேட்டு ஸ்தம்பித்தாள்.

"நீ எதையோ நினைச்சு இந்தளவுக்கு வேதனை படுறன்னா... ஸாரி வீரா.. அதை என்னால அப்படியே விட முடியாது... இன்னைக்கு நான் உனக்கிட்ட பார்த்த பதட்டத்தையும் பயத்தையும் வேற என்னைக்கும் பார்த்ததே இல்ல... உனக்கு மட்டும் எதாவது ஆயிருந்தா... சத்தியமா நான் என்ன ஆயிருப்பேன்னு... எனக்கே தெரியல" என்று அழுத்தமாய் கண்ணீர் நிரம்பிய விழிகளோடு அவன் சொல்லி முடிக்கும் போதே அவள் தேகம் சிலிர்த்தது. 

அவனை இமைக்காமல் சில நொடிகள் பார்த்துக் கொண்டு நின்றவள், "உனக்கு அந்த ஆள் யாருன்னு தெரியணும்... அவ்வளவுதானே?!" என்று விரக்தியான பார்வையோடு கேட்க அவனோ பதில் பேசாமல் தீர்க்கமான பார்வையோடு தலையை மட்டும் அசைத்து வைத்தான்.

அவள் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு, "என்னை எங்க அம்மா... அந்த... ப்ப்ப்பன்னாடைக்குத் தான் பெத்துப் போட்டா" என்றவள் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப,

அவன் அதிர்வோடு, "அப்போ... அவர் உங்க அப்பாவா?!" என்றான். 

அவள் தன் செவிகளை இறுக மூடிக் கொண்டு, "அந்த பரதேசிய போய் எனக்கு அப்பன்னு சொல்லாத... செத்துரலாம் போல இருக்கு" என்றவள் சத்தமிட்டுக் கத்திவிட, அவனுக்கு சில நொடிகள் பேசுவதற்கு வார்த்தை வரவில்லை. 

அவன் மெலிதாக, "அவர் குடிப்பாரு... அதனால உனக்கு அவரைப் பிடிக்காதுன்னு தங்கச்சிங்க ஒருதடவை சொன்னாங்க... ஆனா நீ டென்ஷனாகுறத பார்த்தா" என்றவன் நிறுத்திவிட்டு அவளைக் கூர்ந்து பார்த்தான். 

"ஆமா குடிகாரன்தான்... குடிச்சு குடிச்சு எங்க அம்மா வாழ்க்கையை நாசம் பண்ணதோட இல்லாம.... அந்த ஆளு சே! சொல்லவே அசிங்கமா இருக்கு..." என்று ஆக்ரோஷமாய் உரைத்தவள் பட்டென நிறுத்தி அவனைப் பார்த்து,

"அந்த பொறுக்கி குடிபோதைல ஒருநாள் தூங்கிட்டிருந்த என்கிட்ட த...ப்.. பா... தப்பா நடந்துக்க பார்த்தான்" என்றவள் சொல்லி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

அவள் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்டவன் அவள் அழுகையைப் பார்த்து பொறுக்க முடியமால் அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டான். 

வார்த்தைகளால் அவளுக்கு தேறுதல் சொல்ல முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. அப்படி சொல்லவும் முடியாது. அவள் வேதனையை வாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும் அதனை தாங்கிக் கொள்ளவாவது முடியுமா என்ற தவிப்பு அவனுக்கு!

மௌனமாய் அவளை அணைத்துக் கொண்டிருந்தான். மென்மையாய் அதே நேரத்தில் அழுத்தமாய் இருந்த அவன் அணைப்பில் மெழுகு போல் இறுகியிருந்த அவள் உணர்வுகள் நெருப்பிலிட்டது போல் உருகிக் கண்ணீராய் கரைந்தோடிக் கொண்டிருந்தன என்று சொன்னால் மிகையாகாது. அழுது அழுது ஓய்ந்தவள் சில மணித்துளிகளில் மனபாரம் லேசாக அவன் தோளிலேயே உறங்கியும் போனாள்.

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content