You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's AOA - Final

Quote

22

இயற்கைக்கு அழிவேயில்லை.

இயற்கையை நேசிப்பவனுக்கும் அழிவே கிடையாது.

பிரபஞ்சன் விழித்ததை ஹரி ஓர் அதிசிய நிகழ்வு போல்தான் பார்த்திருந்தார்.

அந்த நடுநிசியிலும் லோகநாதன் குடும்பத்தினர், சேது, அந்த ஊர் மீனவர்கள் என்று பிரபாவைப் பார்க்க ஒரு கூட்டமே திரண்டுவிட்டது.

அவர்கள் எல்லோருடைய அக்கறையும் அவனை நெகிழ்த்தியது. இருப்பினும் அவர்கள் யாரிடமும் சுவாரசியமாக பேசும் மனநிலையில் அவன் இல்லை.

 ஆனால் அவர்களுக்குப் பேசவும் சொல்லவும் நிறைய இருந்தது. அவற்றையெல்லாம் பேசிப் பேசி ஓய்ந்த பின்னே அவர்கள் அங்கிருந்து செல்ல, ஹரி கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டு,

“ரொம்ப லேட்டாயிடுச்சு… விட்டா இன்னும் கொஞ்சம் நேரத்தில விடிஞ்சிரும்… வந்து கொஞ்ச நேரம் படுத்து தூங்கு” என்றார்.

“நீங்க போய் தூங்குங்க… எனக்கு தூக்கம் வரல” என்றவன் சோஃபாவில் அமர்ந்துக் கொண்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஷெர்லி வந்தா நானே உன்னை” என்றவர் சொல்ல வந்த வாக்கியத்தை முடிக்க கூட இல்லை.

“அதான் எனக்கு தூக்கம் வரலன்னு சொல்றேன் இல்ல… நீங்க போய் படுங்க” என்றவன் அழுத்தி கூறவும், “ஹ்ம்ம் ஹ்ம்ம் புரியுது” என்று அவனைப் பார்த்து நக்கலாக சிரித்துவிட்டுப் படியேறியவர் மீண்டும் திரும்பி வந்து,“டே! எனக்கு ஒரு டவுட்” என்றார்.

 “இந்நேரத்தில உங்களுக்கு என்ன டவுட்” என்று அவரைக் கடுப்பாக பார்க்க, “இல்லடா பிரபா… உன்னையும் ஷெர்லியும் எப்படியாச்சும் கோர்த்து விடணும்னு நான் நினைச்சேன்தான்… ஆனா இப்ப எனக்கு என்ன தோணுதுன்னா… இது என் எண்ணத்துக்கு அப்பாற்பட்டு ஏதோ ஒரு தொடர்பு உங்க இரண்டு பேருக்குள்ள இருக்கோன்னு” என்றார்.

அவரை அர்த்த பார்வைப் பார்த்தவன் மெலிதாக புன்னகைத்து, “இந்த உலகத்துல நடக்கிற எல்லா விஷயத்துக்கும் எல்லா உயிரினங்களுக்கும் ஒன்றோடு ஒன்னு தொடர்பு இருக்கு… அது எப்படி என்னங்கிற கேள்விக்கெல்லாம் நம்ம பதில் தேட ஆரம்பிச்சோம்னா அது முடியவே முடியாது… அதனால ரொம்ப யோசிக்காம நீங்க போய் படுத்து தூங்குங்க” என்றான்.

“உன்கிட்ட நான் சந்தேகம் கேட்டதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்… கொஞ்ச நஞ்சம் புரியிற விஷயத்தையும் கூட புரியாம பண்ணிடுவ” என்று புலம்பிக் கொண்டே அவர் அறைக்குச் சென்றுவிட, பிரபா மனம் முழுக்க ஷெர்லியைப் பற்றிய சிந்தனைதான்.

கைகளில் அவள் டாலரை எடுத்து வைத்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். முதல் முறை அந்த டாலரைப் பார்க்கும் போதே அவனுக்கு வித்தியாசமாக தோன்றிற்று.

ஆனால் அது பற்றி கிறிஸ்டோபர் கடிதத்தில் படிக்கும் போதுதான் இன்னும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு டாலருக்கு அப்படியொரு சக்தியா? என்று யோசித்த அதே நேரம் அவன் படித்த வேறொரு பக்கம் அவனை வியப்பின் உச்சத்திற்குக் கொண்டுச் சென்றது.

‘ஜீவசமாதி என்றால் என்ன என்று நான் வினவ, அவள் எனக்கு விளக்கமளித்தாள்.

அது உடல் சம்பந்தப்பட்டது அல்ல. ஆன்மா  சம்பந்தப்பட்டது. உடல் அழியும். ஆனால் ஆன்மா அழியாது. தங்களின் முன்னோர்கள் யாரும் இன்றுவரை இறக்கவில்லை. அழியவில்லை.

ஆன்ம சக்தியாக மாறி இந்தப் பூமியைப் பேரழிவிலிருந்து காத்து கொண்டிருக்கின்றனர் என்றாள். இதுவரை அவள் சொன்ன எல்லாவற்றையும் நம்பிய நான் இதை நம்ப தயாராக இல்லை.’

அந்த வரியிலிருந்து அவனுக்குள் தொடங்கிய கேள்விகள் ஷெர்லியின் ‘யுனிவெர்ஸல் பவர்’ என்ற வார்த்தையில் தெளிவடைந்தது. தான் கண்ட கனவை மீண்டும் நினைவுப்படுத்திப் பார்த்தான்.

நடக்கும் நிகழ்வை அப்படியே கண் முன்னே கொண்டு வரும் கனவுகள் பெரும்பாலும் தத்ரூபமாக இருக்கும். ஆனால் இந்தக் கனவு சற்றே விசித்திரமாகத் தோன்றியது.

அந்தக் கனவில் அவன் தன்னையே பார்த்தான். எல்லோரையும் கதிர் வீச்சுத் தாக்கிக் கொடூரமாக இறக்க அந்த இடத்திலிருந்த தன் தேகத்திற்கு மட்டும் எதுவும் ஆகவில்லை. இதில் ஏதோ சூட்சமம் இருக்கிறது. நடக்க போகும் விபரீதத்தை அவனுக்கு ஏதோ ஒரு சக்தி அந்த மாயைக் காட்சி மூலம் அவனுக்கு உணர்த்தி இருக்கிறது.

நிச்சயமாக இந்த விபத்தை தன்னால் தடுக்க முடியும். தன்னால் மட்டுமே தடுக்க முடியும்.

கடைசியாக கடலலைகள் முன்னே இந்தப் பேரிடரைத் தடுத்து விடவேண்டுமென்ற பிடிவாதத்தோடு அமரும்போது ஹரியின் நினைவு வந்த அதே சமயம் ஷெர்லியின் நினைவும் வந்தது அவனுக்கு வியப்பை அளித்தது.

ஆனால் விழிகளை மூடி எல்லாம் மறந்து தானே பிரம்மமாக மாறிய போது உண்டான அனுபவம் அவன் உடலில் இப்போதும் சிலிர்ப்பை உண்டாக்கியது. சூனியத்தை நோக்கி பிரபஞ்ச வீதிகளுக்குள் நுழைந்தது போன்ற உணர்வு!

அவனை அந்தச் சூனிய பாதை ஆழமாக உள்ளிழுத்துக் கொண்டு செல்ல, அப்போது அவன் எண்ணங்களில் தன் முன்னோர்களின் வாழ்க்கை கண் முன்னே காட்சிகளாக அரங்கேறின. ஷெர்லியும் அதில் அடக்கம். செல்லாவின் முகத்தில் அவன் ஷெர்லியைதான் பார்த்தான்.

வாழ்க்கை என்பது ஒரு வட்டம். எல்லோருமே அந்த வட்டத்திற்குள் விடாமல் சுழன்றுக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தை தாத்தாவை போல் இருப்பதும் பின் அதே குழந்தை தாத்தாவான பின், இரண்டு மூன்று சந்ததிகள் கழித்து பிறக்கும் பேரன் அவன் முகத்தைக் கொண்டிருப்பதும் என்று எல்லாமே ஒரு சுழற்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. முடிவும் தொடக்கமும் மீண்டும் ஒரே புள்ளியில் சந்தித்து கொள்ளும் சுழல்தான் மனித வாழ்க்கை.

அந்தச் சுழலிலிருந்து அத்தனை சீக்கிரத்தில் யாரும் மீண்டு வரமுடியாது. தங்கள் ஆன்ம சக்தியை உணர்ந்த சிலர் மட்டுமே அந்த வட்டத்திலிருந்து தங்களை விடுவித்து கொள்வர் .

பிரபாவும் அதேபோல் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி அந்தச் சுழற்சியிலிருந்து வெளியேறி  சூனியத்திற்குள் நுழைய காத்திருந்த போது மீண்டும், ஏதோ ஒரு சக்தி அவனை அதே வட்டத்திற்குள் இழுத்து வந்துவிட்டது. அந்தச் சக்தி ஷெர்லிதான் என்பதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை.

ஷெர்லியிடம் இருக்கும் காந்த சக்தியை அவன் முன்னமே உணர பெற்றான். ஆனால் இப்போது அவளின் அந்தக் காந்த சக்தி அவனை மரணத்தின் பிடியிலிருந்து இழுத்து வந்து மீண்டும் லௌகீக வாழ்க்கைகுள் தள்ளிய சூட்சமத்தை அவனாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை.

சரியாக நான்கு மணி நேரங்களுக்கு முன்பாக…

ஷெர்லி அவன் வீட்டிலிருந்து விமான நிலையம் புறப்படுவதற்கு முன்பாக… பிரபாவின் அறையில்

சில்லிட்டிருந்த அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.

“ஹென்சம் ப்ளீஸ்… எனக்காக… எழுந்துறீங்க… ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள். அவன் உடலில் எந்த அசைவுமில்லை. அவன் உயிரோடு இருக்கிறான் என்பதே பல நேரங்களில் சந்தேகமாக இருந்தது.

அவ்வப்போது அவன் மார்பில் சாய்ந்து அவன் இதய துடிப்பைச் சோதிப்பாள். இப்போதும் அதையேதான் செய்தாள். அவன் இதயம் துடித்துக் கொண்டுதானிருந்தது.

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். இந்த இருபது நாளில் அவன் முகத்திலிருந்த தேஜஸ் துளிக் கூடக் குன்றவில்லை.

கண்ணீரோடு அவன் முகம் பார்த்தாள். ஏக்கம்… காதல்… தவிப்பு என்று பல்வேறு உணர்வுகளின் குவியல்களாக அவள் முகம் காட்சியளித்தது. ஆனால் அவன் முகம் உணர்வற்று கிடந்தது.

 ஏமாற்றம் கலந்த பார்வையோடு அவனையே அவள் பார்த்திருந்த சமயம் ஹரி கீழே நின்று கொண்டு, “ஷெர்லி… சத்யா வந்துட்டான்… டைமாச்சு” என்று குரல் கொடுக்க, அவள் வேதனையும் தவிப்பும் அதிகமானது.

“டோன்ட் கோன்னு சொல்லுங்க பிரபா… ப்ளீஸ்” என்று அவன் காதோரம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

அவனை அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

“டோன்ட் கோன்னு மட்டும் சொல்லுங்க… நான் போக மாட்டேன்” எத்தனை எத்தனை முறை அவனிடம் இப்படி அழுது கெஞ்சினாளோ! ஆனால் அவளின் கெஞ்சல்கள் எதற்குமே அவனிடம் பதிலில்லை. ஏன்? ஒரு சிறியளவிலான அசைவு கூட இல்லை.

எதிர்பார்ப்புகள் வடிந்து ஏமாற்றம் மட்டுமே மிச்சமானது. அவனை விட்டு செல்ல வேண்டுமே என்ற தவிப்பும் வேறு சேர்ந்து கொள்ள, அந்த நொடி அவளுக்கு அபிரிமிதாமான கோபம் உண்டானது.

தன் கண்ணீரை வேகமாகத் துடைத்துக் கொண்டவள், “ஐம் லீவிங்… இனிமே திரும்பியே வர மாட்டேன்… எப்பவும் வர மாட்டேன்… என் உயிரைக் காப்பாத்த நீங்க கொடுத்த கிஸ்சை உங்களுக்கே திருப்பிக் கொடுக்கிறேன்… பட் திஸ் இஸ் நாட் லைஃப் ஆஃப் கிஸ்… அ கிஸ் ஆஃப் டெத்… நீங்க அன்னைக்கு என் உயிரைக் காப்பாத்திறன்னு சொல்லி என்னைக் கொன்னுட்டீங்க… எனக்கு அது வேண்டாம்” என்று அழுது கொண்டே அவனை அணைத்து இதழ்களில் முத்தம் பதித்தாள். அவள் விழிகளில் வழிந்த கண்ணீர் அவன் இமைகளை நனைத்து சென்றது. அவள் உதடுகளின் ஈரம் அவன் இதழ்களில் செறிந்தது.

அதன் பின் தன் பைகளை எடுத்து வைத்தவள் அவன் மேஜை மீதிருந்த டிசேஸ்டர் ஃபைலையும் எடுத்து உள்ளே நுழைத்து கொண்டாள். அவனைத் திரும்பிக் கூட பார்க்காமல் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

ஆனால் அவள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கவில்லை. அவனுக்கு முத்தம் தந்த போது அவள் கழுத்திலிருந்து டாலர் அவன் கழுத்திற்கு நழவி இடமாறியதை!

கண்ணீர் கசிந்த தம் விழிகளைத் திறந்தான். அவன் கரத்திலிருந்த அவள் டாலர் மினுமினுத்த அதேசமயம், “பி…ரபா” என்று ஷெர்லி அவனை ஓடி வந்து அணைத்து கொண்டாள்.

அவனின்றி ஓரணுவும் அசையாது!

********************************நிறைவு********************************

சில முக்கிய குறிப்புகள்:

*பாஸில்ஸ்(fossils)- படிமங்கள். சில உயிரினங்கள் பூமியில் வாழ்ந்திற்கான ஆதரங்களே தொல்லுயிர் படிமங்கள்தான்.

*நேச்சுரலிஸ்ட்(naturalist)- இயற்கைவியலாளர் (செடிக் கொடிகளையும் விலங்குகளையும் ஆய்பவர்)

*ஜியாலஜிஸ்ட்(geologist) – புவியியல் வல்லுநர்

*ஊர்ந்து செல்லும் பிராணி ஒன்று சதுப்புநிலத்தில் சிக்கி மடிகிறது. அதன் உடம்பு அழுகுகிறது. எலும்புகள் மட்டும் மண்ணில் படிகின்றன. இறந்த தாவரங்கள் மண்ணுக்குள் கீழே படிந்து அவற்றை மூடுகின்றன. பல நூற்றாண்டுகள் கழித்து மேலும் மேலும் தாவரப்பகுதிகள் குவிந்து படிந்து ‘பீட்’ ஆக மாறுகிறது. கடல் மட்டத்தின் மாற்றங்களால் சதுப்பு நிலப்பகுதியில் வெள்ளம் புரண்டு மணல் அடுக்குகள் ‘பீட்’ டின் மேல் படிகின்றன. காலப்போக்கில் பீட் பகுதி அழிந்து நிலக்கரியாக மாறுகிறது. அங்கு புதைந்து போன பிராணியின் எலும்புகள் இன்னமும் அவ்விடத்திற்குள்ளேயே இருக்கின்றன. அடுத்தடுத்து படியும் அபரிமிதமான அழுத்தத்தாலும் தாதுப் பொருட்கள் நிறைந்த திரவியங்கள்அவற்றிற்கிடையே விரவியிருப்பதாலும் அந்த எலும்புகளிலுள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட்டில் ரசாயான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக அவைக் கல்லாக மாறினாலும் அவை உயருடனிருந்த போது புறவடிவமைப்புகள் நிலைதிருக்கின்றன.  

*சார்லஸ் ராபர்ட் டார்வின் ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன் வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற்கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல்.

*M130gene – உலகின் தொல்குடி என்பதற்கான ஆதாரம்

நேஷ்னல் ஜியோகிரஃபிக் மற்றும் மரபணு ஆரய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஸ்பென்சர்வெல்ஸ் மற்றும் திரு.பிச்சப்பன் என்பவரும்  இணைந்து உலகளவில் நடத்திய ஆரய்ச்சியில் மனிதனின் இடப்பெயர்ச்சியினை மரபணுக்கள் மூலம் கண்டறிந்துள்ளனர். அதில் நம் மதுரை அருகிலுள்ள ஜோதிமாணிக்கம் என்னும் கிராமத்தை சேர்ந்த தமிழர் ஒருவரின் குடும்பத்தில் 13 நபர்களுக்கு ஒரே வகையான 130 என்னும் மரபணுவை கண்டறிந்துள்ளனர்.

இம்மரபணு 70,000 ஆண்டுகள் பழமையானது. இதன் தொடர்ச்சிகள் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினரிடம் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் மனித சமூகத்தின் இடப்பெயர்ச்சி ஆப்ரிக்காவிலிருந்து தென்னிந்தியா வழியாக ஆஸ்திரேலிய சென்றடைந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழன்தான் இந்தியாவின் தொல்குடி என்பது இதன் மூலம் ஆதாரத்துடன் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கதையில் உங்களால் கேட்கப்பட்ட, கேட்கப்படாத கேள்விகளுக்கான பதில்கள்.

  • நீலா என்ற பாத்திரத்தைப் பற்றிச் சொல்லவில்லை? அது அவசியமில்லை. பிரபா செல்லாவின் சந்ததி என்பதற்கு அவன் ஆன்மீக சக்தியே ஆதாரம். இதற்கு அறிவியல் ஆதாரங்கள் தேவையில்லை.
  • பிரபா போல ஷெர்லிக்கு ஏன் சக்தியில்லை? இந்தக் கேள்விக்கு பதில் நீங்கள் யோசித்தாலும் தெரியும். அதாவது ஷெர்லியிடம் இருந்த கெட்ட பழக்கங்கள் அவள் ஆற்றலை மறக்கடித்துவிட்டது. மனித இனம் தன்னுடைய கணிக்கும் திறனை இழந்ததற்குக் காரணம் இதுதான். பிரபாவின் வாழ்க்கை முறையே நம்முடைய ஆற்றலுக்குச் சிறந்த சான்று.
  • யோகா சம்பந்தப்பட்ட திருமூலர் சித்தர் மற்றும் கொங்கணர் சித்தர் பாடல் விளக்கங்கள் கொண்டு எழுதினேன். உங்களுக்கு இதில் ஆர்வம் அதிகம் இருந்தால் புத்தகத்தை நாடுவதை விட நல்ல குருவை நாடுவது உசிதம். புத்தங்கங்கள் பெரும்பாலும் ஹாசன முறைப் பற்றியும் முத்திரைகள் பற்றியுமே சொல்வனவாக இருக்கிறது.
  • இயற்கை பரிணாமம் பற்றி நான் எழுதிய அனைத்து தகவல்களும் ‘பரிணாமத்தின் பாதை’ என்ற டேவிட்அட்டன் பரோவின் தமிழாக்க நூல்.
  • மற்றும் இவையல்லாத பல தகவல்கள் நிறைய இணைத்தள தகவல்கள் மூலமாக ஆராய்ந்து எடுக்கப்பட்டது.

*********சுபம்*********

 

 

 

Quote

Nice 👍, interesting and informative story 

You cannot copy content