You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

En Iniya Pynthamizhe - 26

Quote

26

தமிழ் ஒரளவு உடல் தேறியிருக்க, மருத்துவமனையிலிருந்து மகளைப் பிடிவாதமாக தங்கள் வீட்டிற்குதான் அழைத்து செல்வேன் என்று சகுந்தலா சொல்லிவிட்டார். ஆனால் அவளுக்கு அதில் உடன்பாடில்லை.

அவள் மனம் கேளாமல் அவனைத் தனியாகத் தோட்டத்திற்கு அழைத்து சென்று, “என் கூட இங்கனயே நீயும் தங்கலாம் இல்ல” என்று கேட்க,

“என்னடி விளையாடுறியா? எம்புட்டு வேலை கிடக்கு தெரியுமா? முக்கியமா நம்ம நிலத்தைச் சீர் படுத்தோணோம்… நீ ஹாஸ்பிட்டல இருந்ததால எல்லா வேலையும் அப்படி அப்படியே வுட்டு போட்டு அங்கனயே உன் கூட இருந்துட்டேன்” என்றான்.

“ஏன்? இங்கன எங்க அம்மா வூட்டுல இருந்தே நீ ஒன்ற வேலையெல்லாம் செஞ்சுக்கலாம்தானே”

“புரிஞ்சிக்கோ தமிழு… நான் இங்கன தங்கல” என்று அவன் அவளிடம் கெஞ்சலாகச் சொல்ல,

அவன் மறுப்பதற்கு தன் வீட்டார் அவனிடம் நடந்து கொள்ளும் விதம்தான் காரணம் என்று அவளுக்குப் புரியாமல் இல்லை. தன் தந்தை உட்பட எல்லோருமே அவனை ஏளனமாகதான் பார்க்கிறார்கள். இப்போது கூட அவளைத் தவிர்த்து வேறு யாரும் ஒரு வார்த்தைக்கு கூட அவனை தங்க சொல்லவில்லையே.

அவளுக்கே அதற்கு பின் கட்டாயப்படுத்த மனம் வரவில்லை.

“சரி” என்று இறங்கிய குரலில் அவன் சொன்னதை ஏற்றவள், “ஆனா மறக்காம தினைக்கும் என்னை வந்து பார்த்துட்டு போ சந்திரா” என்றாள்.

“அதெப்படிறி வராம இருப்பேன்… கண்டிப்பா வருவேன்” என்றவன் அவள் கரத்தைப் பற்றிக் கொண்டு, “சரி… நான் புறப்படட்டுமா?” என்று கேட்க, “ம்ம்ம்” என்று சம்மதமாக தலையசைத்தவள் பின் ஏதோ நினைவு வந்தவளாக,

“சந்திரா…. என்னோட பேக்கும் செல்ஃபோனும் வேணும்… ஆஃபீசுக்கு இன்னிக்கு நான் பேசியே ஆகோணோம்… ஏதாச்சும் மெயில் வந்திருந்தா பார்த்து ரிப்ளை பண்ணணோம்” என்றாள்.

“சரி நான் எடுத்துட்டு வந்து தரேன்” என்றவனிடம்,

“இல்ல இல்ல நீ வர வேண்டாம்… நான் அரசனை உன் கூட அனுப்புறேன்… நீ அவன்கிட்ட கொடுத்து அனுப்பி வுடு” என்றாள்.

“அப்படியே ஒன்ற தம்பி என் கூட வந்திருவானாக்கும்… அதுவும் அவன் இப்ப கூட என்னை ஒரு வில்லனைப் பார்க்குற மாதிரி பார்க்குறான்”

“எம்.சி.ஆருன்னு பேரை வைச்சிக்கிட்டு நீ பார்த்த நம்பியார் வேலை மறந்து போச்சா… அதான் உன்னை அவன் அப்படி பார்க்குறான்” என்று அவள் கேலியாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “என்னங்க க்கா? கூப்பிட்டீங்களா?” என்று அரசன் வந்து நின்றான்.

சந்திரன் சொன்னது போல ஓரப்பார்வையால் அவனை முறைக்கவும் செய்ய.

“பார்த்தியாடி… எப்படி முறைக்குறான்னு” என்று சந்திரன் தன் மனைவியிடம் ரகசியமாகக் கண்ணசைவால் காட்ட, அவள் தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு தம்பியிடம்,

“மாமா கூட வூட்டுக்குப் போய் என்னோட பேகையும் செல்ஃபோனையும் எடுத்துட்டு வந்துடு அரசா” என்றாள்.

“எந்த மாமா? யாரு மாமா?” என்றவன் கேட்ட தொனியில் அவனை அவள் படுஉக்கிரமாக முறைத்து, “என்னடா சொன்ன?” என்று மிரட்டலாய் பார்க்கவும், அவன் மௌனமாகத் தலை குனிந்து கொண்டான்.

“ஒழுங்கா அவர் கூட போய் வாங்கிட்டு வா”

“நான்… அந்த ஆள் கூட” என்று சொல்ல வந்தவன் சட்டென்று அவள் பார்வையைக் கவனித்துவிட்டு, “அவங்க கூட போக மாட்டேன்… நீங்க வேற யாரையாச்சும் போக சொல்லுங்க” என்று மறுக்க,

“சரி டா தம்பி… நீ எங்கயும் போக வேண்டாம்… நான் அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்… வா சந்திரா நாம நம்ம வூட்டுக்குப் போகலாம்” என்று அவள் சந்திரனிடம் சொல்லிச் செல்ல பார்க்கவும் அரசன் முகம் சுருங்கிப் போனது.

“இல்லங்க க்கா நீங்க போக வேண்டாமுங்க…. நான் போய் வாங்கிட்டு வரேன்” என்றவன் சம்மதிக்க, தமிழ் சந்திரனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“ஒழுங்கா போயிட்டு வரோணும்… அவங்க கிட்ட சண்டை கிண்ட போட கூடாது… முக்கியமா மரியாதை இல்லாம பேசக் கூடாது” என்று அரசனை தனியாக அழைத்து கண்டிப்போடு சொல்லி அனுப்பினாள்.

அவள் சொன்ன ஒரே காரணத்திற்காக அரசனும் சந்திரனும் மௌனத்தைச் சுமந்து நடக்க. அப்போது வழியிலிருந்த கல்லில் கால் இடித்து அரசன் தடுமாற சந்திரன் அவன் கையைப் பிடித்து விழாமல் தடுத்து, “தரையைப் பார்த்து நடவே” என்றான்.

“அதெல்லாம் நாங்க பார்த்துதான் நடக்குறோம்… என்ற கையை வுடுங்க… நான் ஒன்னும் விழல” என்றவன் கடுப்படித்து அவன் கையை உதறிவிட்டான்.

“விழாமதான்னே பிடிச்சேன்… அதுக்கு ஏன்டா இப்படி மொவரையைக் காட்டுற?”

“நான் பாட்டுக்கு அமைதியா வரேன்… என்னை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க?” என்றவன் சொல்லிக் கொண்டே முன்னே நடக்க,

“அப்படி என்னடா பண்ணிட்டேன் உன்னைய நான்?” என்றவன் கேட்டபடி பின்னே நடந்துவந்தான்.

“உங்களுக்குத் தெரியாதா?” என்றவன் பேசிக் கொண்டே கருப்பன் கோவில் வாசலில் வந்து நின்று சந்திரனை முறைத்துப் பார்த்து,

“இங்கனதானே எங்க அக்கா கிட்ட நீங்க அம்புட்டு மோசமா நடந்துக்கிட்டீங்க” என்று கேட்டான்.

“அதெல்லாம் பழைய கதை டா… இப்ப ஒன்ற அக்கா என் பெஞ்சாதி”

“இருகட்டுமே… அதுக்காக நீங்க அன்னைக்கு செஞ்சது நியாயமாகிடுமா?”

“நியாயம் இல்லதான்… அன்னைக்கு நான் உங்க அக்காவுக்கு செஞ்சது பெரிய அநியாயம்… அதுக்காக நான் ஏற்கனவே உங்க அக்கா கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன்… தெரியுமா? வேணும்னா இப்ப உன்கிட்டயும் கேட்கிறேன்… என்னை மன்னிச்சு போடு… அந்த விசயத்தை மறந்து போடு டா” என்று சந்திரன் அவன் கரத்தைப் பற்றி மன்னிப்பு கோரினான்.

அரசன் அதிர்ச்சியும் வியப்பும் கலந்த பார்வை பார்த்தான். அவனுக்கு அந்த நொடி மனமிறங்கிய போதும் மன்னிக்கும் எண்ணமெல்லாம் வரவில்லை. அதன் பிறகு அவன் சந்திரனிடம் வம்பு வளர்க்காமல் மெளனமாக அவனுடன் வீடு வரைக்கு சென்றான் தமிழின் பேகையும் கைப்பேசியையும் வாங்கி வந்துவிட்டான்.

இரண்டு நாட்கள் கடந்திருந்த நிலையில் சந்திரன் மறவாமல் தன் மனைவியை பார்த்து பேசிவிட்டுச் சென்றான். சகுந்தலா மருமகனை நல்லபடியாக வரவேற்று உபசரிப்பது போல மேலோட்டமாக தென்பட்ட போதும் அவன் அங்கே வந்து போவதில் ஒருவித விருப்பமின்மை இருந்தது போலவே தமிழுக்குத் தோன்றியது.

இதனால் அவள், “என்னை நாளைக்கே நம்ம வூட்டுக்கு அழைச்சிட்டுப் போயிடு சந்திரா… இன்னும் ரெண்டு நாளில ஜாயின் பண்ணனும்னு சொல்லிட்டாங்க” என்றாள்.

“இம்புட்டு சீக்கிரம் போகோணுமா?” என்ற சந்திரன் கேள்வியில், “புரிஞ்சிக்கோ சந்திரா… நான் போகணும்… இல்லாட்டி நிறைய பிரச்சனை வரும்” என்றாள். அதன் பிறகு அது பற்றி அவன் அவளிடம் எதுவும் வாக்குவாதம் மேற்கொள்ளவில்லை. அவள் இஷ்டம் என்று அமைதியாக விட்டுவிட்டான்.

அன்று அவள் பேசிவிட்டு அனுப்பி வைத்த பிறகு தோட்டத்தின் வழியே பின்புறம் அவன் நடந்து செல்லவும் செல்வி, “மாமா” என்று அழைத்து அவனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். அந்தக் காட்சியைப் பார்த்து துணுக்குற்ற அரசனுக்கு அரசல் புரசலாக அவர்கள் இருவரின் உரையாடலும் கேட்க நேர்ந்ததில் சந்தேகம் முளைக்க வேகமாக உள்ளே சென்று தமிழை அழைத்து வந்தான்.

“எங்கடா கூப்புடுற?”

“வாங்க க்கா சொல்றேன்” என்றபடி அவன் தோட்டத்திற்கு அழைத்து வந்த இடத்தில் செல்வி மட்டும்தான் நின்றிருந்தாள். சந்திரன் அதற்குள் அங்கிருந்து சென்றிருந்தான்.

“செல்வி க்கா ஏதோ ஒரு விசயத்தை மறைக்குறாங்க… அது என்னன்னு கேளுங்க க்கா?” என்று போட்டுக் கொடுக்க, தமிழுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“என்னடி விசயம்? என்ன மறைக்குற? அரசன் என்ன சொல்றான்?” என்று கேட்க, செல்வியின் முகத்தில் பயம் அப்பட்டமாக வெளிப்பட்டது. அவள் தம்பியைப் பதிலுக்கு முறைக்க,

“நான் கேட்டேனுங்க க்கா… அவங்களும் அக்காவும் பேசிட்டு இருந்ததை” என்றான் அரசன்.

“யார் கூட பேசிட்டு இருந்தா? என்ன பேசிட்டு இருந்தா?” என்று தமிழ் புரியாமல் விழிக்க,

“அதானுங்க க்கா அவங்க... உங்க வூட்டுக்காரர்” என்ற தயங்கியபடி சொன்ன அரசனைச் சீற்றமாகப் பார்த்த தமிழ்,

“அது என்னடா… என்ற வூட்டுகாரரு… மாமான்னு கூப்பிடணும்னு எம்புட்டு தடவை சொல்றது உனக்கு” என்றாள்.

“அது என்னவோ எனக்கு அப்படி கூப்பிட வரலைங்க க்கா… நீங்க அதை வுடுங்க… முதல நீங்க இந்த விசயம் என்னன்னு செல்வி அக்கா கிட்ட கேளுங்க” என்று அரசன் அந்த விஷயத்தைப் பிடித்துத் தொங்க,

“நான் மாமா கூட சும்மாதானுங்க க்கா பேசிட்டு இருந்தேன்… இவன்தான் தேவையில்லாம அதை பெருசாகுறானுங்க” என்றாள் செல்வி.

“அதானே… அவன் சந்திரன் கிட்டதானே பேசிட்டு இருந்தா… அதுல என்னடா உனக்கு தப்பா தெரியுது” என்று தமிழ் தம்பியை முறைக்க,

“பேசறது தப்பு இல்லதான்… ஆனா அந்த விசயத்தை மட்டும் யார்கிட்டயும் சொல்லிடாதீங்கன்னு அவங்க கிட்ட செல்வி அக்கா அழுத்திச் சொன்னாங்க… அது என்ன விஷயம்னு கேளுங்க” என்றான்.

“மவனே நீ என்ற கிட்ட அடி வாங்கியே சாவ போற” என்று தம்பியை மிரட்டிய செல்வி தன் தமக்கையின் புறம் திரும்பி,

“அவன் ஏதோ ஒளறானுங்க க்கா… அதெல்லாம் நீங்க காதுல போட்டுக்காதீங்க… வாங்க நம்ம உள்ளற போலாம்” என்று செல்வி சொல்லிவிட்டு அவசரமாக அங்கிருந்த செல்ல பார்க்க, அவளிடம் தெரிந்த படபடப்பு தமிழைத் துணுக்குற செய்தது.

“செல்வி நில்லு” என்று நிறுத்தி, “என்ன விசயம்னு ஒழுங்கா இப்போ என்கிட்ட நீ சொல்லோணோம்” என்றாள் அதிகாரமாக!

“என்ன விசயம்? அப்படி எதுவும் இல்லைங்கலே” என்று செல்வி சமாளித்த விதத்திலேயே அவள் எதையோ மறைக்கிறாள் என்பது தெளிவாகத் தெரிய, “இப்போ நீ சொல்றியா? இல்ல நான் சந்திராவுக்கு ஃபோன் பண்ணட்டுமா?” என்றாள்.

செல்வி மௌனமாக கையைப் பிசைந்து கொண்டு நின்றாள்.

“நம்ம அக்கா கிட்ட சொல்ல முடியாதளவுக்கு அப்படியென்னங்க ரகசியம் அது?” என்ற அரசன் கேட்க,

“அதானே… அப்படி என்னடி என்கிட்ட சொல்ல முடியாத விசயம் அது” என்று தமிழும் தங்கையிடம் கேட்டாள்.

“சொல்ல கூடாது அப்படின்னு இல்லைங்க க்கா… சொல்ல முடியல… எனக்கு அசிங்கமா இருக்குங்க” என்று சொன்ன செல்வி சட்டென்று முகத்தை மூடி அழத் தொடங்க, “என்னடி பிரச்சனை?” என்று கேட்ட போதும் அவள் தொடர்ந்து அழுதபடியே இருந்தாள்.

தமிழ் அவளை சமாதானப்படுத்தியபடி தோட்டத்தில் அமைந்திருந்த திண்டில் அவளை அமர வைத்து அருகில் இவளும் அமர்ந்து கொண்டாள்.

செல்வி தன் அழுகையிலிருந்து மீளவே சில நிமிடங்கள் பிடித்தன. பின் அவள் மெதுவாக நடந்தவற்றை சொல்ல தொடங்கினாள்.

“ஞாபகம் இருக்குங்களா… நான் இன்டர் காலேஜ் கல்சுரல்ஸ்ல ப்ரைஸ் வாங்கினேனே உங்க கிட்ட கூட காட்டினேனே”

“ம்ம்ம் ஆமா”

“அப்பத்துல இருந்துதான் இந்தப் பிரச்சனையே ஆரம்பிச்சது”

“என்னடி பிரச்சனை?”

“அது…” என்று வெகுநேரம் தயங்கிவிட்டு, “நான் கலந்துகிட்ட அந்த காலேஜ்ல படிக்குற பையன் ஒருத்தன் என் டேன்ஸ் ரொம்ப நல்லா இருக்குன்னு என்கிட்ட வந்து பாராட்டிப் பேசுனான்… நான் சாதரணமா பேசிட்டு வந்துட்டேன்…

புறவு இரண்டு மூணு இடத்துல எதச்சையா நாங்க பார்த்து பேசிக்கிட்டோம்… ஃப்ரெண்ட்லியா பழக ஆரம்பிச்சோம்… நான் ஃப்ரெண்டாதான் பழகினேன்… அவன் பேசனது பழகனது எதுவும் எனக்கு தப்பாவும் தெரியல…

புறவு ஒருமுறை காலேஜ் க்ரூப் ஈவென்ட் க்காக சேர்ந்து சில வேலைங்க பண்ண ரெண்டு பேரும் ஃபோன்…. நம்பர் ஷேர் பண்ணிக்கிட்டோம்…

முதல ஈவென்ட் பத்திதான் பேசிணோம்… அப்புறம் பொதுவான விஷயங்களா சேட் பண்ண ஆரம்பிச்சு பர்சனலா பேசிக்கிட்டோம்… அப்ப திடீர்னு ஒரு நாள் சேட்டிங்கல ஐ லவ் யூன்னு மெசேஜ் பண்ணிப் போட்டான்… எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல” என்றவள் சொல்லி முடிக்கும் போது,

“அவன் கூட பர்சனல் சேட்டிங் பண்ணும் போதே அவன் மனசுல என்ன இருக்குன்னு உனக்கு தெரியாதாக்கும்?” என்று தமிழ் கேட்டு ஆழமாக ஒரு பார்வை பார்க்க,

“கொஞ்சம் புரிஞ்சுதுதான்… தப்புன்னு மூளைக்குத் தோணுச்சு… அவாய்ட் பண்ணிடணும்னு நினைப்பேன்… ரிப்ளை பண்ண கூடாதுன்னு கூட நினைப்பேன்… ஆனா என்னால முடியலங்க க்கா” என்றாள்.

“அப்போ அவன் ஐ லவ் யூ ன்னு சொன்னதும் சரின்னு சொல்லி போட்ட?” என்று தமிழ் வினவ,

“இல்லைங்க க்கா… எங்க வூட்டுல என்னைக் கொன்னே போட்டுடுவாங்கன்னு சொல்லி அப்பவே அவன் நம்பரை டெலிட் பண்ணிட்டு… ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வைச்சுட்டேன்

அதுக்கப்புறம் நான் அவனைப் பார்த்தா கூட கண்டுக்காம போயிட்டேன்… அவனும் என்கிட்ட பேசல… ஆனா திடீர்னு போன மாசம் திரும்பியும் எங்க காலேஜ் பஸ் ஸ்டேன்ட் வாசலில என்கிட்ட வந்து பேசுனானுங்க க்கா

உன்கிட்ட பேசாம உன்னை பார்க்காம இருக்க முடியலன்னு சொல்லி ரொம்ப ஃபீல் பண்ணானுங்க க்கா… அவனைப் பார்க்கிற வரைக்கும் நான் ஸ்ட்ராங்காதானுங்க க்கா இருந்தேன்… ஆனா அவன் வந்த பேசுன புறவு எனக்கு ஒரு மாதிரி அல்லாட்டமா ஆகிடுச்சு… நல்ல வேளை… பஸ் வந்துருச்சா… நான் ஓடி வந்துட்டேன்…

மாமாவும் அதே பஸ்ல இருந்தாரு… நான் அந்தப் பையன் கூட நின்னு பேசிட்டு இருந்ததையும் பதட்டமா பஸ்ல ஏறனதையும் பார்த்துட்டு ஊர்ல வந்து இறங்கனதும் என்கிட்ட வந்து ஏதாச்சும் பிரச்சனையா? ஏன் ஒரு மாதிரி பதட்டமா இருக்க… பஸ் ஸ்டேன்ட்ல நின்னுட்டு இருந்த பையன் யாரு… உன்னை லவ் பண்றேன்னு சொல்லி ஏதாச்சும் மிரட்டிறானான்னு… இப்படி நிறைய கேட்டாரு

அப்ப ஒரு மாதிரி டென்ஷனா இருந்தேன்னா… அதான் அவரைப் புடிச்சு நல்லா திட்டிப் போட்டேன்” என்று தயக்கமாகச் சொல்லி தன் அக்காவின் முகத்தைப் பார்த்தாள்.

“என்னடி திட்டின?” அவள் முகம் தீவிரமாக மாறவும் செல்வி எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி,

“அது மாமாகிட்ட… உங்களை மாதிரி அவன் ஒன்னும் கேவலமா எல்லாம் நடந்துக்கல… நீங்க எங்க அக்காவுக்கு செஞ்சதை வுட அவன் ஒன்னும் தப்பா எதுவும் செய்யல…

நீங்க காதலிக்கிறேன்னு சொல்லி எங்க அக்கா பேரைக் கெடுத்தது இல்லாம எங்க அக்காவை கண்ணாலம் பண்ணி அவங்க வாழ்க்கையைக் கெடுத்துப் போட்டீங்க… நீங்கெல்லாம் பேச வந்துட்டீங்காளாக்கும் … உங்களுக்கு எல்லாம் அந்தத் தகுதியே இல்லன்னு சொல்லி போட்டேடேனுங்க க்கா” என்று நிறுத்தியவள்,

“ஆனா நான் மாமாவை அப்படி பேசனது எம்புட்டு பெரிய தப்புன்னு இப்ப உணரேனுங்க” என்று சொல்லி அவள் தமக்கையின் கையைப் பற்றி, “சாரிங்க க்கா” என்றாள்.

அந்த கணமே தமிழ் தங்கையின் கரத்தை உதறிக் கொண்டு எழுந்து நின்றுவிட்டாள்.

இதே வார்த்தைகளைக் கொண்டுதானே தானும் அவனைத் தாக்கினோம். எந்தளவுக்கு அந்த வார்த்தைகள் அவனை அவமானப்படுத்திக் காயப்படுத்தியிருக்கும் என்பதை யோசிக்கும் போதே கூரிய வாளால் நெஞ்சை அறுப்பது போல தாங்க முடியாத வலி ஏற்பட்டது.

துக்கம் தொண்டை அடைக்க முட்டிக் கொண்டு வந்த அழுகையைப் பெரும்பாடுப்பட்டு தன் தங்கை தம்பி முன்பு காட்டிவிடாமல் கட்டுபடுத்திக் கொண்டாள்.

“அக்கா என்னை மன்னிச்சிடுங்க” என்று செல்வி தமக்கையின் தோளைப் பிடிக்க,

“அதை வுடு… மேல என்ன நடந்ததுன்னு சொல்லு” என்று தமிழ் ஒருவாறு தன்னை சமன்படுத்திக் கொண்டு தங்கையின் புறம் திரும்ப அவள் மீண்டும் நடந்தவற்றைச் சொல்ல தொடங்கினாள்.

“நான மாமா கிட்ட கோபமா பேசனாலும் அவரு எனக்கு என்ன வந்ததுன்னு அந்த விசயத்தை அப்படியே வுடலைங்க… அவனை பத்தி அக்கு வேறு ஆணி வேறா அவன் பின்னாடியே ஒரு வாரமா அலைஞ்சு திரிஞ்சு விசாரிச்சு இருக்காரு…

அவனுக்கு அப்பப்பா ஃப்ரெண்ட்ஸ் கூட குடிக்கிற பழக்கம் இருக்குன்னு தெரிஞ்சுது… குடிச்சுப் போட்டு ஒருமுறை அவன் என்னைப் பத்தி பேசி இருக்கான்… காம்படீஷன்ல என் டேன்சை பார்த்துட்டு அவன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட என்னை மடக்கி காட்டுறேன்னு பெட்டு கட்டியிருக்கானா க்கா…

இதெல்லாம் நான் சொன்னா கூட நம்ப மாட்டேன்னு… மாமா அவன் பேசனதை ரெகார்ட் பண்ணி எடுத்துட்டு வந்தாரு… அவன் எண்ணம் புரியாம நானும் அவன் கிட்ட ஈஈஈன்னு இளிச்சு பழகியிருக்கேன்… எனக்கே என்னை பத்தி நினைச்சா அசிங்கமா கேவலமா இருக்கு” என்றவள் அழுது கொண்டே தொடர்ந்தாள்.

தமிழ் அவள் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து,

“சை… இப்படியெல்லாம் கூடவா இருப்பானுங்க” என்று அருவருப்பாக முகத்தைச் சுளிக்க,

“அதுமட்டும் இல்லைங்க க்கா அவன் என்னோட ஃபோட்டோவெல்லாம் ஃபோன்ல வைச்சு இருந்தானாம்… நான் அவன் கூட சேட் பண்ணது எல்லாமே அவன் ஃபோன்ல இருந்திருக்கு வேற…

இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு மாமா சமயம் பார்த்து அவன் தனியா ஒரு முறை பாருக்கு வந்த போது அவனுக்கு கம்பெனி குடுக்கிற மாதிரி அவனை நிறைய குடிக்க வைச்சு… அவன் செல்ஃபோனை எடுத்துட்டு அவனையும் தனியா செம காட்டு காட்டிட்டுதான் வந்திருக்காரு… ஆனா எனக்காகதான் அவனை அடிச்சேன்குற மாதிரி காட்டிக்கல… இல்லாட்டி போன அவன் எனக்கிட்ட தனியா வந்து பெருசா பிரச்சனை பண்ணா

இதுல கொடுமை என்னன்னா அன்னைக்குதான் யாரோ மாமாவோட நிலத்துல இருந்த பயிரை எல்லாம் நாசம் பண்ணிட்டாங்க… அம்புட்டு நஷ்டம்…எல்லாமே என்னாலதான்” என்று செல்வி தலையிடித்துக் கொண்டு அழ இதனை கேட்ட தமிழ் மனம் நொந்து போனாள். அவனைப் புரிந்து கொள்ளாமல் இந்த விஷயத்துக்காக தான் என்ன மாதிரியான வார்த்தைகளை எல்லாம் சொல்லி அவனை சாடிவிட்டோம் என்று அவள் உள்ளம் வெதும்பியது.

சில நிமிடங்கள் கழித்து செல்வி அழுது கொண்டிருப்பதை உணர்ந்து அவளைத் தேற்றியவள், “விடு செல்வி… பயிறு நாசமா போனா போயிட்டு போகுது… அதை விட முக்கியம் உன் வாழ்க்கைதான்” என்றாள்.

“உண்மைதானுங்க க்கா…. மாமா இல்லன்னு நான் அந்த புறம்போக்கை போய்” என்றவள் மீண்டும் அழத் தொடங்க,

“வுடுங்குறேன் இல்ல… நீ என்ன வேணும்ட்டேவா செஞ்ச… உன் வயசும் சூழ்நிலை உன்னை அப்படி பண்ண வைச்சுடுச்சு… ஆனா நீ கொஞ்சம் சுதாரிப்பா இருந்திருக்கலாம்” என்றவள் மேலும்,

“பார்க்க டிப் டாப்பா இருக்குறவனுவங்க எல்லாம் நல்லவங்க இல்ல.. அதுவும் இந்தக் காலத்துல யாருக்குள்ள என்ன மாதிரியான வக்கிரமும் வன்மமும் ஒளிஞ்சிருக்கும்னு நம்மளால யோசிக்க கூட முடியாது…

அதான் எங்க சார் எப்பவும் சொல்வாரு… வெளித்தோற்றத்தைப் பார்த்து யாரையும் எடை போட கூடாதுன்னு” என்றாள்.

“கரெக்ட்தானுங்க க்கா”

“அது சரி… அவன் திரும்பியும் உன்கிட்ட எந்தப் பிரச்சனையும் பண்ணலயே?” என்று தமிழ் வினவ,

“மாமா என்கிட்ட இன்னைக்கு அதான் கேட்டாரு… அவன் உன்கிட்ட திரும்பியும் பேச வந்தான்னானு… இல்லன்னு சொன்னேன்… அப்படி அவன் பேச வந்தாலும் எதுவும் கேட்டுக்காம அவன்கிட்ட முடியாதுன்னு மட்டும் சொல்லி ஒதுங்கிடுன்னு… அப்படியும் அவன் கேட்காம உன்னைத் தொல்லை பண்ணான்னா கொஞ்சம் கூட யோசிக்காம வூட்டுல ஒன்ற அப்பா கிட்ட சொல்லிடுன்னு சொன்னாரு” என்றாள்.

“ஆனா எனக்குதான் பயமா இருக்கு… மாமா அவன் ஃபோன் எல்லாம் எடுத்து ஒடைச்சு போட்டிருந்தா கூட அவன்கிட்ட நான் பேசனது பழகுனது எல்லாம் அவன் பேக் அப் எடுத்து வைச்சு இருந்தா… அதை காட்டி மிரட்டினா… ஏற்கனவே வூட்டுல இந்த மாதிரி ஒரு பிரச்சனை நடந்திருக்கு… அதனால அவரசம் அவரசமா எனக்கும் கண்ணாலம் பண்ண முடிவெடுத்துட்டா”

“என்கிட்ட முன்னாடியே இந்த விசயத்தை சொல்லி இருந்தேன்னா… இம்புட்டு தூரம் போகவே நான் வுட்டுருக்க மாட்டேன்” என்று தமிழ் அழுத்தமாகக் கூற,

“நான் சொல்லி இருக்கோணோம்… ஆனா அப்ப ஏனோ எனக்கு புத்தி கேட்டு போயிருந்துது… இப்படியெல்லாம் பண்ணித் தொலைச்சிட்டேன்” என்றாள்.

“சரி போகட்டும் விடு… முடிஞ்சு போனதைப் பத்தி பேச வேண்டாம்… இனிமே இந்த விசயத்தை மண்டையில போட்டு ஒலப்பிக்கிட்டு இல்லாம ஒழுங்கா படிக்குற வழியை பாரு… எல்லாம் நான் பார்த்துக்கிறேன்…”

செல்வி கொஞ்சம் நிம்மதியாக முகத்தைத் துடைத்துக் கொண்ட அதேநேரம் உறைந்த நிலையில் அங்கே நின்றிருந்த தம்பியைப் பார்த்தவளுக்குப் பக்கென்று இருந்தது.

“டே அரசா… உன்னைக் கெஞ்சிக் கேட்டுகிறேன்… அக்கா விஷயத்தைப் போட்டு கொடுத்த மாதிரி இந்த விசயத்தைச் சொல்லி போடாதே டா… தெரிஞ்சோ தெரியாமலோ நீ செஞ்சது அக்காவுக்கு நல்லதா முடிஞ்சு போச்சு… என் விசயம் அப்படி இல்லடா” என்றவள் கெஞ்ச,

“ஒரு தடவை செஞ்ச முட்டாள்தனத்தை இன்னொரு தடவையும் செய்ய மாட்டேனுங்க க்கா” என்றவன் தமக்கையின் கரத்தை ஆதரவாகப் பற்றி, “இனிமே எம்புட்டு நேரமானாலும் சரி… நாம இரண்டு பெரும் ஒரே பஸ்ல போவோம்… எவன் வாரான்னு நான் பார்க்கிறேன்” என்றான் சீற்றமாக!

தமிழ் தம்பியைப் பெருமிதமாகப் பார்த்து, “தம்பி உடையான் படைக்கும் அஞ்சான்னு சும்மாவா சொல்லி இருக்காங்க… தம்பி டா” என்றபடி அவனைத் தோளோடு அணைத்துக் கொள்ள, செல்வியும் அவர்கள் அணைப்பில் இணைந்து கொண்டாள்.

“எனக்கு இனிமே எந்த பயமும் இல்ல” என்றாள். அத்தனை நேரம் பூதாகரமாக தெரிந்த அந்தப் பிரச்சனை ஒன்றுமே இல்லாமல் போனது அவளுக்கு.

“சரி சரி… ரொம்ப நேரம் இங்கன நின்னு பேசிட்டு இருந்துட்டோம்… வாங்க… அம்மா தேடுவாங்க” என்று சொல்லி தமிழ் முன்னே செல்ல மற்ற இருவரும் அவள் பின்னே வந்தனர்.

அப்போது வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியிருந்த மதுசூதனன் ஏதோ கோபமாக மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“இயற்கை விவசாயம் பண்றேன் அது இதுன்னு கிறுக்குத்தனமா சொல்லிட்டு இருக்கான் சக்கு” என்று அவர் சொல்லும் போதே தமிழ் உள்ளே நுழைந்துவிட, சீறிக் கொண்டிருந்த அவரின் குரலும் பார்வையும் சட்டென்று இறங்கியது.

சகுந்தலா முகம் கறுத்து போக நிற்க, தமிழ் அவர்கள் முன்னே வந்து, “யாரை பத்தி பேசிட்டு இருக்கீங்க ஐயா” என்றாள்.

அப்போது சகுந்தலா கணவனிடம் தலையசைத்து எதுவும் சொல்ல வேண்டாம் என்று ஜாடைக் காட்டிவிட, “நம்ம கந்தசாமி பையன் சேகரைப் பத்திதான்” என்று சமாளித்தார்.

“அப்படியா?” என்றவளுக்கு அவர்களின் பார்வையிலேயே விஷயம் தெளிவாகப் புரிய,

“ஆமா ஏதோ இயற்கை விவசாயம்ன்னு பேசிட்டு இருந்தீங்க” என்றவள் கேட்கவும்,

“கிறுக்கு பையன்… இயற்கை விவசாயம் பண்ண போறானாம்” என்று மதுசூதனன் சொல்லி கடுப்பானார்.

“ஏன்? இயற்கை விவசாயம் பண்றதுல அப்படியென்ன தப்பு இருக்கு” என்றாள் அவள்.

“உனக்கு அதை பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாது… நீ உள்ளுர போ” என்று சகுந்தலா மகளிடம் சொல்ல,

“எனக்கும் தெரியுமுங்க ம்மா… நீங்க செத்த நேரம் முன்னாடி என்ற வூட்டுக்காரரைப் பத்திதான் பேசிட்டு இருந்தீங்கன்னு கூட தெரியும்” என்றாள்.

மதுசூதனன் தொண்டையைச் செருமி கொண்டு, “அது வந்து” என்று தயங்கி, “சந்திரா கிட்ட இந்த இயற்கை விவசாயம் எல்லாம் நமக்கு சரிபட்டு வராதுன்னு சொல்லணும்னு” என்று மகளிடம் சொல்ல,

“இல்ல ப்பா… நாங்க இயற்கை விவசாயம்தான் பண்ண போறோம்… சந்திராகிட்ட அப்படி செய்ய சொன்னதே நான்தான்… அதனால என்ன நஷ்டம் வந்தாலும் நான் சம்பாதிக்கிறேன் இல்ல நான் பார்த்துப்பேன்” என்றவள் சொல்ல சகுந்தலாவும் மதுசூதனனும் பார்வையால் தங்கள் அதிர்ச்சியைப் பரிமாறினர்.

பின்னர் சகுந்தலா மகளைப் பார்த்து, “நீ சொன்னதையேதான் ஊருக்குள்ளயும் சொல்றாங்க… சந்திரனுக்கு எம்புட்டு நஷ்டம் வந்தாலும் அவன் பொண்டாட்டி பார்த்துப்பானு… இதுக்காக அவன் உன்னை ஏமாத்திக் கட்டிகிட்டான்னு” என்று அவர் சொல்லி முடிப்பதற்கு முன்னதாக,

“ம்மா போதும்… இதுக்கு மேல ஒரு வார்த்தை சந்திராவைப் பத்தி பேசுனீங்க நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” என்று கத்திவிட்டாள்.

“இப்ப எதுக்குடி கத்துற… இல்லாத பொல்லாதது ஏதோ சொல்லிட்ட மாதிரி? ஆமா நான் தெரியாமதான் கேட்குறேன்.. மாமனார் கொடுத்த காசு வாங்க அப்படி ரோஷம் பார்க்குற ஒன்ற வூட்டுகாரருக்கு மாமனார் கொடுத்த படிப்புல வர பெஞ்சாதியோட சம்பாத்தியம் மட்டும் வேணும்… அப்படிதானே?” என்று எக்காளமாகக் கேட்க,

“என்ன பேசற புள்ள நீ” என்று மதுசூதனன் மனைவியை முறைத்தார்.

“நியாயத்தைதானுங்களே கேட்டேன்… என்னவோ புருஷன் புருஷன் ஓவரா பொங்குறா… அவனுக்குப் படிப்புதான் இல்ல… கொஞ்சமாச்சும் அறிவும் திறமையும் வேண்டாமா? இதுல அந்தப் பையன் திரும்பவும் குடிக்க வேற ஆரம்பிச்சிட்டானாம்” என்று சகுந்தலா சொல்ல, மருமகன் என்ற மரியாதை எல்லாம் அப்போது காற்றோடு போனது.

“என்ன சக்கு சொல்ற?” என்று மதுசூதனன் அதிர்ச்சியாக, அதற்குள் தமிழ் இடைபுகுந்து,

“ஐயோ! அப்படி எல்லாம் இல்ல இல்ல இல்ல” என்று கத்தியபடி,

“அவன் குடிக்கல… குடிக்கவும் மாட்டான்” என்றவள் மேலும் ஆக்ரோஷமாக,

“என் சாம்பாத்யத்துக்காக அவன் என்னை ஏமாத்திக் கட்டிகிட்டான்னு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம பேசக் கூடாது…

என்னை அவன் உசுருக்கு உசுரா நேசிக்கிறான்… இன்னும் கேட்டா அவன் உசுருக்கும் மேலா என்னை நேசிக்கிறான்” என்று மனம் வெதும்பிப் பேசியவள்,

“அவனோட அந்த உண்மையான நேசத்தை தப்பா பேசற உங்களுக்கும் ஊருக்கும்… நீங்க கொடுத்தப் படிப்புக்காகவும் என்னோட சாம்பத்யதியத்துக்காகவும் அவன் என்னை காதலிக்கலன்னு… நான் நிருபிச்சு காட்டுறேன்” என்று அவள் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது.

“நான் கிளம்புறேனுங்க… என்ற புருஷனை மதிக்காத இடத்தில நானும் இருக்க மாட்டேனுங்க… எப்போ நீங்க சந்திராவைப் புரிஞ்சுக்கிறீங்களோ அன்னைக்குதான் திரும்பியும் இந்த வூட்டு வாசப்பபடியே மிதிப்பேன்… அதுவரைக்கும் நான் இங்கன எந்தவொரு சூழ்நிலையிலும் வரமாட்டேனுங்க” என்று சொல்லிவிட்டு தன் பேகை எடுத்துக்கொண்டு அவள் வெளியேற மதுசூதனன் மகளைத் தடுக்க முற்பட்டார். ஆனால் சகுந்தலா கணவரைத் தடுத்து,

“அவளுக்கே அம்புட்டு ரோஷம் இருக்கும் போது அவளைப் பெத்த நமக்கு எம்புட்டு இருக்கும்? போகட்டும் வுடுங்க… ஏதோ நிருபிக்குறேன்னு சொல்றா இல்ல… அதை எப்படி என்னத்த செஞ்சு நிருப்பிக்குறான்னு நாமளும் பார்ப்போங்க” என்றார்.

நடந்தவற்றை எல்லாம் பார்த்த அரசனும் செல்வியும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து நின்றுவிட்டனர்.

Quote

Super ma 

You cannot copy content