You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

En Iniya Pynthamizhe - 30

Quote

30

காமராஜ் வீட்டிற்குச் சென்று திரும்பியதும் தமிழ் சாவகாசமாக இரவு உணவெல்லாம் முடித்து படுக்கை விரிப்பில் மல்லாந்து கொண்டு தன் செல்பேசிக்குள் மூழ்கிவிட்டாள்.

அவளிடம் தன் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியைக் கேட்டுவிட எண்ணிய சந்திரன், “என்ன பண்ணிட்டு இருக்க தமிழு?” என்று மெதுவாகப் பேச்சை ஆரம்பிக்க,

“சார் கிட்ட சாட் பண்ணிட்டு இருக்கேன்… இன்னைக்கு அவர் சொன்ன விசயத்தைப் பத்தியெல்லாம் டௌட் கேட்டுட்டு இருக்கேன்” என்றவள் பார்வையை தன் பேசியில் பதித்துக் கொண்டே பதிலுரைத்தாள்.

அவளின் பதில் அவனுக்கு எரிச்சலை மூட்டிய போதும் அதனைக் காட்டிக் கொள்ளாமல், “இந்த நேரத்துல ஏன்? காலையில பேசறது” என்றவன் சொன்னதைக் கேட்டு அவனை நிமிர்ந்து பார்த்து புருவத்தை ஏற்றி,

“ஏன்? இந்த நேரத்துல பேசுனா என்ன?” என்று அவள் பதில் கேள்வி கேட்க,

“அது இல்ல… எதுக்கு தூங்குற நேரத்துல அவங்களைக் கேள்விக் கேட்டு தொந்தரவு பண்ணிக்கிட்டு? காலையில பேசிக்கலாம்னுட்டு சொன்னேன்” என்றவன் சாமர்த்தியமாக சமாளிப்பது அவளுக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.

“எனக்கும் சார் கிட்ட கேட்க நிறைய விசயம் இருக்கு… அதனால நான் செத்த நேரம் பேசிட்டுதான் ஒறங்கப் போறேன்… சாரும் இம்புட்டு சீக்கிரத்துல ஒறங்க மாட்டாங்க” என்றவள்,

“ஏன் உனக்கு இதுல ஏதாச்சும் பிரச்சனையா?” என்று வினவினாள்.

“சைச்சே! அப்படியெல்லாம் இல்லை” என்று அவன் சமாளித்து மழுப்பியதெல்லாம் அவன் முகம் அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்திருந்தது.

வாசலை நோக்கி அவன் நடக்கவும், “என்ன சந்திரா? தலகாணியும் போர்வையும் எடுத்துக்காம போற” என்றுமில்லாத திருநாளாக அவனுக்கு அவற்றையெல்லாம் அக்கறையாக எடுத்துக் கொடுத்தாள்.

அவன் முகம் இறுக அவள் மேலும், “போகும் போது கதவைச் சாத்திட்டுப் போ சந்திரா” என்று சொல்லிவிட்டு மீண்டும் தன் பேசியைக் கையிலெடுத்துக் கொண்டு படுக்கையில் சரிந்தாள்.

அவனுக்கு உள்ளூர திகுதிகுவென எரிந்தது.

வெகுநேரமாக அசையாமல் அவன் அங்கேயே நிற்பதைப் பார்த்து, “என்ன இங்கனயே நிற்குற… போய் படுத்துக்கல” என்றவள் கேட்ட நொடி, அவன் வேகமாகச் சென்று உள்பக்கமாகக் கதவைத் தாளிட்டுவிட்டு வந்து அவள் அருகில் தன் தலையணையைப் போட்டுப் படுத்துக் கொண்டு,

“நான் இங்கனதான் படுத்துக்கப் போறேன்” என்றதும்,

அவள் இதழ்கள் அழகாக விரிந்ததை அவன் கவனிக்காமல் அவன் முதுகைக் காட்டித் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

சில நிமிட மௌனத்திற்குப் பின், “தமிழு தூங்கிட்டியா?” என்று கேட்க,

“இல்ல” என்றவள் சொல்லவும் அவளிடம் பேச எண்ணி அவன் திரும்ப, அவளோ இன்னும் செல்பேசியும் கையுமாக அமர்ந்திருந்தாள்.

“இன்னுமா புள்ள இதை கையில வைச்சுட்டு கிடக்க” என்று சொல்லி அதனை அவள் கையிலிருந்து பிடுங்கி ஓரமாக வைத்துவிட்டான்.

“என்னடா பிரச்சனை உனக்கு?” என்று கேட்டு அவனை ஆழமாகப் பார்த்தாள்.

“எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை… தூங்கு காலையில் பேசிக்கலாம்” என்று சொன்னவன் சில நொடிகள் புரண்டு புரண்டு படுத்துவிட்டு பின் என்ன நினைத்தானோ?

“நான் வெளியவே படுத்துக்கிறேன்” என்று எழுந்து கொள்ளவும் அவள் அவன் கரங்களைப் பற்றித் தடுத்தாள்.

“உன் மனசுல எதையோ போட்டு ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்க சந்திரா… அதனாலதான் என்னைய நெருங்கவும் முடியாம விலகவும் முடியாம நீ இப்படி அவஸ்த்தைப்பட்டுட்டு இருக்க… எதுவா இருந்தாலும் என்கிட்ட மனசை விட்டு பேசு” என்றவள் கேட்கவும் அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

அவன் மௌனத்தைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டு, “சரி போ… போய் வெளியே படுத்துக்கோ” என்று சொல்லிவிட்டு அவன் கரத்தை அவள் விட்டுவிட அவள் முகத்தில் படிந்திருந்த வேதனை அவனை என்னவோ செய்தது.

அதற்கு பிறகு அவளருகில் அமர்ந்து மெதுவாக தன் இறுக்கத்தைத் தளர்த்திப் பேசத் தொடங்கினான்.

“நீ சொல்றது உண்மைதான் தமிழு… என்னால முடியல… ரொம்ப அவஸ்த்தையா இருக்கு…

உங்க ஐயன் தினம் தினம் என்னை பார்க்கும் போதெல்லாம் என் பொண்ணோட வாழ்க்கையை அழிச்சிட்டியேடா பாவின்னு என்ற சட்டையைப் பிடிச்சு கேட்கல… அம்புட்டுதான்… மத்தபடி அவங்க என்னை பார்க்குற பார்வையே என்னைய கொல்லாம கொல்லுது.

என்ற சுயநலத்துக்காக உன்னைய கண்ணாலம் பண்ணி ஒன்ற வாழ்க்கையை அழிச்சிட்டேனோன்னு எனக்கே குற்றவுணர்வா இருக்கு” என்றான்.

“நீ என்னவோ என்னைய கடத்திக் கூட்டிட்டு வந்து கண்ணாலம் பண்ண மாதிரி பேசிட்டு இருக்க… அவங்கதானே உன்னைய எனக்கு கட்டி வைச்சாங்க”

“நான் ஒன்ற பேரைப் பச்சக்குத்திக்காம இருந்திருந்தா அவங்களுக்கு உன்னைய என்னை கட்டி வைச்சிருக்க வேண்டிய காட்டாயம் இருந்திருக்காது… ஒன்ற படிப்பு வேலையெல்லாம் வுட்டுபோட்டு நீ இங்கன என் கூட சேத்துல நின்னு கஷ்டப்பட வேண்டி வந்திருக்காது… எல்லாம் என்னாலதான்… என்னாலதான்” என்றவன் வேதனை தாளாமல் கத்த,

“கிறுக்குப் பிடிச்சிருக்காடா உனக்கு” என்றவள் பதிலுக்குக் கத்தி அவனை அடக்கிவிட்டு,

“முதல ஒரு விசயத்தை நீ புரிஞ்சிக்கோ… என்ற பேரை நீ பச்சக்குத்திகிட்டதாலயும் ஊரே உன்னையும் என்னையும் சேர்த்து வைச்சு பேசி என்ற பேரு கெட்டு போனதுனாலதான் உன்னைய நான் கண்ணாலம் கட்டிக்கிட்டேன்னு நினைச்சிட்டு இருக்கியாக்கும்.

அப்படி பார்த்தா நான் முதல்ல காமராஜ் சாரைதான் கட்டிக்கிட்டு இருக்கணும்” என்றாள்.

“எது?” என்று கேட்டவனின் முகத்தில் பரவிய அதிர்ச்சி ரேகைகளைப் பார்த்து மெல்லிய புன்னகை தவழ்ந்தது அவள் உதடுகளில்!

“புறவு என்ன? காலேஜ்ல என்னையும் சாரையும் சேர்த்து வைச்சு எப்படி எல்லாம் பேசனாங்க தெரியுமா? அதனாலதான் அவங்களுக்கு வேலையே கூட போச்சு?” என்றவள் சொன்னதைக் கேட்டு அவன் முகம் கறுத்து போனது. அவள் மேலும் தன் கல்லூரியில் நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொல்லி முடித்து,

“சார் மேல அங்க நிறைய பேருக்குப் பொறாமை… இந்தச் சந்தர்ப்பத்தை நல்லா யூஸ் பண்ணிக்கிட்டாங்க… காலேஜ்ல நாங்க சொல்றதை யாருமே நம்பவே இல்ல…

அந்த சமயத்துல சார்தான் காலேஜ் அட்மின்ல ரிக்வஸ்ட் பண்ணிக் கேட்டுகிட்டாரு… என்ற மேல எந்த ஆக்ஷனும் எடுக்க கூடாதுன்னு… அதோடு அவரே தான் வேலையை விடுறதா எழுதிக் கொடுத்திட்டாரு… சார் மாதிரி ஒருத்தரை எல்லாம் பார்க்கவே முடியாது சந்திரா… நான் அவரை என் குருவா மட்டும் இல்ல… கடவுளுக்கு நிகரா வைச்சு பார்க்கிறேன்… எவனோ எதுவோ பேசிட்டான்னுங்குறதுக்காக நான் அவங்கள கட்டிகிட முடியுமா? முட்டாள்தனமா இல்லை” என்றவள் கேட்ட விதத்தில் அவன் தலை தாழ்ந்தது.

அவன் தலையை நிமிர்த்திப் பிடித்தவள், “ஆனா அதே மாதிரி சந்தரப்பதுல உன்னைய நான் கட்டிகிட்டேன்… ஏன் தெரியுமா?” என்று கேள்வியோடு அவனைப் பார்த்து.

“நிச்சயமா என்ற பேரை நீ உன் நெஞ்சுல பச்ச்குத்திகிட்டதாலையோ… இல்ல ஊருக்குள் எல்லோரும் உன்னையும் என்னையும் சேர்த்து வைச்சு பேசனதாலையோ இல்ல” என்றவள் மேலே என்ன சொல்லப் போகிறாள் என்று அவன் ஆர்வமாகக் கேட்டிருந்தான்.

“அதுக்கு ஒரே காரணம்தான்… எனக்கு உன்னைய பிடிச்சிருந்துது சந்திரா… ஒரு வேளை உன்னைய எனக்கு பிடிக்காம இருந்திருந்தா என்ற ஐயனும் அம்மாவும் உனக்கும் எனக்கும் கண்ணாலம் பண்ணி வைக்க முடிவெடுத்திருந்தாங்கன்னு வைய்யு… அதை நான் எப்பாடு பட்டாவது தடுத்து நிறுத்தி இருப்பேன்” என்ற நொடி அவன் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

“அதேபோல என்ற வேலை படிப்பு எல்லாத்தையும் வுட்டு போட்டு இங்கன ஒன்ற கூட நான் விவசாயம் பண்ணனும்னு முடிவு பண்ணி பிடிவாதமா செஞ்சிட்டு இருக்கேனா அது உன்னைய கட்டிகிட்டாதால இல்ல… உன்னைய ரொம்ப பிடிச்சதால.

ஹாஸ்பிட்டல என்ற கையைப் பிடிச்சு நீதான் எனக்கு எல்லாமும்னு சொன்னியே அந்த ஒத்த வார்த்தைக்காக… எம்புட்டு நட்டம் வந்தாலும் பரவாயில்ல… பூச்சி மருந்தை இனி கையால தொட மாட்டேன்… இயற்கை விவசாயம்தான் பண்ணுவேன்னு சொன்ன உன் நேர்மையான காதலுக்காக.

அந்தக் காதலுக்காக எதை வேணாலும் வுட்டுக் கொடுக்கலாம்னு தோனுச்சு… அது எல்லாத்துக்கும் மேல இந்த ஊருக்காரவுங்க என்ற ஐயன் அம்மா எல்லோரும் நீ என்ற படிப்புக்காகவும் வேலைக்காகவும்தான் என்னைய காதலிச்சன்னு சொல்றதை என்னால தாங்க முடியல.

அதை பொய்யாக்கனும்… அதோட விவசாயம் செஞ்சா எதிர்காலமே இல்லங்குற எண்ணத்தைப் பொய்யாக்கோணும்… அதுக்காகதான்” என்றவள் மேலும் அவன் கரத்தைப் பற்றிக் கொண்டு,

“உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்… முதல உன் மனசுல இருக்க இந்தத் தாழ்வுமனப்பான்மை எல்லாம் தூக்கிப் போடு” என்று சொல்லிய தன் மனைவியை இமைக்காமல் அவன் பார்த்திருந்தான்.

“நான் சொன்னது உனக்கு விளங்குச்சா?” என்று அவள் கேட்கவும் அவன் மௌனமாகத் தலையசைத்தான்.

அவள் தன் வாழ்வில் கிடைத்தற்கரிய விலைமதிப்பில்லா பொக்கிஷம் என்று எண்ணியவனின் மனம் அவளின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் நெகிழ்ந்து போனது. அவனுக்கு அந்த நொடி பேச்சே வரவில்லை.

மௌனமாக அவளையே பார்த்திருந்த அவன் விழிகளிடம்,

“இப்பவும் நீ போய் வெளியேதான் படுத்துக்கிடனுமா?” என்றவள் ஏக்கமாக கேட்ட நொடி அவளைப் பார்த்து கொண்டே மௌனமாகத் தலையணையில் சாய்ந்து கொண்டவன் அவளை இழுத்து தன் மார்பில் கிடத்தி, அவள் இதழ்களில் அவர்கள் வாழ்வின் புது அத்தியாயத்தை தன் இதழ்களால் எழுதத் தொடங்கினான்.

மூச்சு முட்ட வைத்த அவனின் அணைப்பும் முத்தமும் அவர்கள் உறவைப் புரிதலோடு அழகாகப் புதுப்பித்துக் கொண்டது.

அன்று நிகழ்ந்த அவர்களின் தாம்பத்தியம் புதுவிதமான உணர்வைத் தோற்றுவித்தது.

உடல்களின் பரிமாற்றமாக அல்லாது உணர்வுகளில் பரிமாற்றமாகவும் அன்பின் பரிமாற்றமாகவும் நிகழ்ந்த அவர்களின் தாம்பத்தியம் அவர்கள் வாழ்வில் ஆழமான நம்பிக்கையையும் அன்பையும் விதைத்தது.

அந்த விதை அவர்கள் உறவை மட்டுமல்ல. அவர்கள் நிலத்தையும் சேர்த்தே பசுமையாக மாற்றத் தொடங்கியது.

இயற்கையின் பிரமாண்டமான சக்தியும் கூட சிறிய சிறிய விதைகளுக்குள்தான் அடங்கியிருக்கின்றன.

அயிரை மீனின் சினை முட்டையை விட ஆலமரத்தின் விதை உருவத்தில் மிகச் சிறியது. ஆனால் அது மண்ணிற்குள் புதைந்து வேர் விட்டு முளைத்து வானத்தில் கிளைப் பரப்பி, விழுதுகளைக் கீழ் இறக்கி, விஸ்வரூபமாக உயர்ந்து நிற்கும் அதிசயம்தான் இயற்கையின் பிரமாண்டமான சக்தி!

அந்தப் பிரமாண்டமான சக்தி மனிதனின் அறிவுக்கெல்லாம் அப்பாற்பட்டவை.

1986ல் செர்னோபிலில் நடந்தேறிய கொடூரமான அணுஉலை வெடிப்பிற்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு… மனிதர்கள் இல்லாத சூழ்நிலையில், அந்தப் பேரழிவின் பின்விளைவாக இயற்கையான வனவிலங்குகள் வாழும் காடாக செர்னோபில் மாறியுள்ளது என்பது பலரும் அறிந்திராத உண்மை!

அத்தனை கொடூரமான விபத்திற்குப் பிறகு மனிதனின் தலையீடே இல்லாமல் இயற்கை மீண்டும் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டுவிட்டது.

இயற்கை தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும் பேராற்றலை தன்னகத்தே கொண்டுள்ள போது ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லிகளும் வேளாண்மையைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதாக நம்புவதும் நம்ப வைக்கப்பட்டிருப்பதும்தான் ஆகப் பெரிய முட்டாள்தனங்கள்!

உடல் தேவைக்காக மட்டுமே மனைவிகளை அணுகும் கணவன்மார்களும்… வியாபார நோக்கத்தோடு தன் தேவையைத் தீர்த்துக் கொள்ள ரசாயன உரத்தைக் கொட்டி மண்ணின் உயிரைப் பிடுங்கும் உழவர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

இங்கே இயற்கை வேளாண்மை என்பது ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் தவிர்ப்பது மட்டும் அல்ல. இறைவனை முழுவதுமாக நம்பி அவனிடம் சரணடையும் பக்தனைப் போல உழவனும் இயற்கையை முழுவதுமாக நம்பி அதனிடம் சரணடைவதாகும்.

வியாபார நோக்கோடு உழவு செய்யும் உழவர்களின் மனநிலைக்கு இது பொருந்தாது. இயற்கையின் மீது காதல் கொள்பவனால் மட்டுமே அது சாத்தியப்படும்.

தன் உணர்வுகளை மதிக்கும் கணவனுக்கு மனைவி அள்ள அள்ளக் குறையாத காதலைத் தருவது போலத் தன்னை நேசித்து முழுமையாக நம்பும் உழவனின் உழைப்பிற்கு இயற்கையானது நிச்சயம் அதற்கான பிரதிபலனைத் தராமல் இருக்காது.

இது மனிதனின் அற்பமான உடற்தேவைகள் போல ஒரு சில நிமிடங்களில் தீர்ந்துவிடுவதல்ல. நம்பகத்தன்மை மற்றும் உண்மையான நேசத்தைப் புரிய வைக்கவும் புரிந்து கொள்ளவும் காத்திருப்பும் பொறுமையும் மிக அவசியம்.

உழவன் மண்ணின் வளத்தை மீட்டெடுப்பதும் அப்படிதான்.

அவ்வாறு மீட்டெடுத்த பின் அது காலங்கள் தாண்டி நீடித்து நிலைத்து நிற்கும்.

இந்தத் தாரக மந்திரம் மண்ணின் வளத்திற்கும் மட்டுமல்ல. மனித மனத்திற்கும் பொருந்தும்.

அந்தத் தாரக மந்திரம்தான் சந்திரனுக்கும் தமிழுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்திய அதேநேரம் பொருளாதார ரீதியாக அவர்களைப் பலவீனப்படுத்திக் கொண்டிருந்தது.

indra.karthikeyan and shiyamala.sothy have reacted to this post.
indra.karthikeyanshiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content