You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

En Iniya Pynthamizhe - 34

Quote

34

மகள் மருகமன் மீதான கோபம் மதுசூதனன் மனதை விட்டு அகன்றிருந்த போதும் சகுந்தலாவின் மனதிலிருந்த கோபம் இம்மியளவு கூட குறையவில்லை.

அதற்கு முக்கிய காரணம் அரசன் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற போதும் வேளாண்மைதான் படிப்பேன் என்று பிடிவாதமாக நின்று தான் நினைத்ததைச் சாதித்துக் கொண்டான்.

இது ஒரு காரணமென்றால் மற்றொருபுறம் செல்விக்கு பார்த்த வரன்கள் ஒன்று கூட அமையவில்லை. மாப்பிளை வீட்டார்கள் வருவதும் போவதும் அவர்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் வந்த வரன்கள் யாவும் தட்டி போவதும் சமீப நாட்களாகவே அவர்கள் வீட்டில் வழமையாகிப் போனது.

அதுவுமில்லாமல் பரிமளம் வேறு சகுந்தலாவிடம் தமிழின் காதல் விஷயம்தான் செல்வியின் வரன்கள் அனைத்தும் தட்டிப் போக காரணம் என்று வத்தி வைத்திருந்தார்.

நேற்றைய தினம் வந்த மாப்பிளை வீட்டாரும் கூட காரணம் ஏதும் சொல்லாமல் தட்டிக் கழித்துவிட்டுச் சென்றதில் அவருக்கு தமிழ் மீதான கோபம் மேலும் அதிகரித்திருந்தது.

அன்றைய அவரின் மனநிலை புரியாமல் எப்போதும் போல் செல்வி வேலைகளை முடித்து வீட்டிற்குத் திரும்பியதும், “அக்கா வூட்டுக்குப் போயிட்டு வரேனுங்க ம்மா” என்று புறப்பட,

“போடி போ… அவளை மாதிரி நீயும் எங்க மானத்தை வாங்கிட்டு ஒரேடியா போயிடு” என்று சீற்றமாகக் கத்தத் தொடங்கினார்.

“அக்கா வூட்டுக்குப் போயிட்டு வரேன்னுதானுங்களே ம்மா சொன்னேன்… அதுக்கு எதுக்கு இப்படியெல்லாம் பேசுறீங்க?”

“ஒரு வருசமா மாப்பிளை பார்க்குறோம் ஒரே ஒரு வரனாச்சும் கூடி வருதா?” என்று சகுந்தலா புலம்பத் தொடங்க,

“நான் அக்கா வூட்டுக்குப் போறேன் சொன்னதுக்கும்… அதுக்கும் என்னங்க ம்மா சம்பந்தம்?” செல்வி புரியாமல் வினவ,

“அவளாலதான் உனக்கு வந்த வரனெல்லாம் தட்டிப் போகுது” என்றார்.

“என்னம்மா பேசுறீங்க?

“அந்த சந்திரன் பயலை காதலிக்கிறேன்னு… ஊருக்குள்ள நம்ம குடும்ப மானத்தையே அவ வாங்குனதாலதானே டி எல்லாம்” அவர் கடுப்பாகச் சொல்லிவிட்டு,

“நான் எவளோ நம்புனடி அவளை” என்று சொல்லி அவர் ஆற்றாமையோடும் வேதனையோடும் கண்ணீர் வடிக்கத் தொடங்கினார்.

“அக்காவுக்கு நீங்கதான் கண்ணாலம் பண்ணி வைச்சீங்க… திரும்ப எதுக்கு பழசெல்லாம் பேசுறீங்க”

“ஆமா நாங்கதான் பண்ணி வைச்சோம்… வேற வழி… ஊரே காரி துப்புன புறவு எங்களால என்னடி செய்ய முடியும்” என்றவர் சொன்ன மறுகணம் செல்வி ஆவேசமாகப் பொங்கிவிட்டாள்.

“அக்காவை அப்படி எல்லாம் சொல்லாதீங்க ம்மா… என்னைக்குமே உங்க நம்பிக்கையை அக்கா ஓடைச்சதே இல்லிங்க… படிக்கிறது வேலைக்குப் போறதை தவிர அக்கா வேற எதை பத்தியும் பேசுனதும் இல்லைங்க… அன்னைக்கு சந்திரா மாமாவை அப்பாவும் சங்கரன் மாமாவும் அடிச்ச போது அவங்கள காப்பாத்ததான் அக்கா அப்படி ஒரு பொய்யைச் சொன்னா… மத்தபடி அக்கா சந்திரா மாமாவை கண்ணாலத்துக்கு முன்னாடி காதலிச்சது எல்லாம் இல்ல.

அரசன் அன்னைக்கு கருப்பன் கோவில நடந்ததா உங்ககிட்ட சொன்னானே… அதுதானுங்கம்மா உண்மை… அன்னைக்கு நானும் அக்கா கூடத்தானுங்க இருந்தேன்” என்று செல்வி உணர்ச்சி வசத்தால் அனைத்து உண்மைகளையும் உளறிக் கொட்டியிருந்தாள்.

“அவனைக் காப்பாத்த உங்க அக்காவுக்கு வேற வழியே தெரியலயாக்கும்… இப்படி ஒரு கேவலமான பொய்யைச் சொல்லோணோமா?” என்றவர் சீற்றமாக வினவ செல்வியால் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

“சரி அது போகட்டும்… அவன் அம்புட்டு தூரம் கேவலமா நடந்திட்டு இருக்கான்… அவனை எதுக்குடி அவ காப்பாத்தோணுமாம்

பைத்தியக்காரி… இப்போ அவ வாழ்க்கையே நாசமா போச்சே… அவளே இல்ல நாசப்படுத்துக்கிட்டா?” என்று சகுந்தலா பொரும,

செல்விக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அக்காவுக்காகப் பரிந்து பேசுவதாக நினைத்து சந்திராவைத் தேவையில்லாமல் அம்மாவின் பார்வையில் தரம் இறக்கிக் காட்டிவிட்டோமோ என்ற தவிப்பில் அவள் எதுவும் பேசாமல் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள்.

அதுமட்டுமல்லாது தான் உண்மையை சொன்ன விஷயம் மட்டும் அக்காவுக்கு தெரிந்தால் தன் கெதி அதோ கெதிதான் என்றவள் பயந்து கொண்டிருந்த சமயத்தில், மனைவி மகளை நிந்தித்து கொண்டிருப்பதைக் கேட்டபடி மதுசூதனன் உள்ளே நுழைந்தார்.

அந்த நொடியே சகுந்தலா அமைதியாகிட, “செல்வி குடிக்க கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா ம்மா” என்று கேட்டபடி முகத்தைத் துடைத்துக் கொண்டு அமர்ந்தார்.

“டீ போட்டு எடுத்துட்டு வரட்டுங்களா மாமா” என்று கேட்ட மனைவியை முறைத்தவர்,

“இதை பாரு சக்கு… இனிமே தமிழோட வாழ்க்கை வீணா போச்சு நாசமா போச்சுன்னு சொல்ற வேலை வைச்சுக்கிட்ட… நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று கண்டிக்க சகுந்தலா அதிர்ந்தார்.

அதேநேரம் கணவனிடம் தன் ஆதங்கத்தைக் கொட்ட எண்ணி, “இல்லைங்க மாமா… அந்த சந்திரன்” என்று பேச முற்படுவதற்குள் செல்வி தண்ணீர் கொண்டு வர அதனை வாங்கி பருகியவர் மகள் அங்கிருந்து அகலும் வரை அமைதியாக இருந்துவிட்டு மனைவியிடம் பொறுமையாக எடுத்துரைத்தார்.

“பழைய விஷயத்தை எல்லாம் விடு சக்கு… தமிழு நல்லா இருக்கா… இன்னும் கேட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கா… மாப்பிளை அவளை அம்புட்டு நல்லா பார்த்துக்கிறாரு… நம்மல விடவும் நல்லா பார்த்துகிறாருன்னா பாரேன்” என்று கடைசி வாக்கியத்திற்கு அழுத்தம் கொடுத்தவர்,

“நமக்கு வேண்டியது அவ நல்லா இருக்கோணோம்… அம்புட்டுதானே… இந்தக் கோபம், வெறுப்பெல்லாம் எதுக்கு… இனிமே கோபத்துல கூட தமிழை அப்படி சொல்லாதே சக்கு… பெத்தவ நீ கோபத்துல சொல்ற வார்த்தை கூட பளிச்சு போடும்” என்றார்.

சகுந்தலா வாயடைத்து நின்றுவிட்டார். கணவன் அப்படி சொன்ன பிறகு மகளைக் கோபமாகத் திட்டுவதையும் நிறுத்திவிட்டார். இன்னும் சொல்ல போனால் அவள் பேச்சையே எடுப்பதில்லை.

ஆனால் சூழ்நிலைகள் இப்படியே சுமுகமாக இருந்துவிடவில்லை. அடுத்து வந்த நாட்களில் அவர்கள் கிராமத்தை ஒட்டிப் பாய்ந்து கொண்டிருந்த கால்வாயில் தண்ணீர் சாயமாகப் பாய்ந்து கொண்டிருந்தன. அந்தத் தண்ணீரைக் குடித்த கால்நடைகள் உயிரிழக்கத் தொடங்கியதில் கிராமவாசிகள் அதிர்ந்தனர்.

அனைவரும் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மறியல் செய்தனர். ஆனால் அவர்கள் முயற்சிகள் எதுவுமே பலனளிக்கவில்லை.

அதிகபட்சம் டிவிகளிலும் பத்திரிக்கைகளிலும் செய்தி வந்தது. அவ்வளவுதான்.

மாசுக்கட்டுபாட்டு வாரியங்கள் தொடங்கி அனைத்து அரசு துறைகளிலும் இந்தச் செய்தி செவிடன் காதில் ஊதிய சங்குதான்!

பணத்திற்காக நம் நாட்டின் வளத்தையும் நிலத்தையும் நாசம் செய்யும் இத்தகைய நிறுவனங்களுக்குத் துணை போகும் அரிசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் எல்லோரும் ஒரு நாள் இதே சாயம் பூசிய விஷத்தைதான் உணவாக உட்கொள்ள நேரிடும் என்பதை அறிவார்களா? குறைந்த பட்சம் யோசிக்கவாவது செய்வார்களா என்பதும் தெரியவில்லை.

இப்படியே போனால் இனி வரும் காலங்களில் அங்கே விவசாயமே சாத்தியம் இல்லாமல் போகலாம். ஒரு நிலைக்கு மேல் போராட முடியாமல் அந்தக் கிராமத்து விவசாயிகள் தங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

அப்போது தமிழும் சந்திரனும் காமராஜின் யோசனைப்படி அந்தச் சாயப்பட்டறை தொழிற்சாலையின் அராஜகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதற்கு காமராஜ் அவர்களுக்கு உதவியாக இருந்தான்.

இதனால் பெரிதும் கோபமடைந்த அந்த நிறுவனத்தின் முதலாளி மறைமுகமாக அவர்களுக்குப் பலவிதமான நெருக்கடிகளை தரத் தொடங்கியிருந்தான்.

அவர்கள் நிலத்திற்கான் தண்ணீர் வரத்தை நிறுத்தினான். அருகிலிருந்த சாமிக்கண்ணு நிலத்திற்கும் அவர்கள் நிலத்திற்கும் ஒரே பொது கிணறுதான்.

சந்திரனின் கொள்ளு தாத்தா காலத்தில் இரு தரப்பினரும் பொதுவான அந்தக் கிணற்றில் பயிர் சாகுபடி செய்து கொள்ளலாம் என்று உடன்படிக்கை செய்திருந்தனர்.

இதனால் வரையிலும் அந்த உடன்படிக்கையில் எந்தப் பிரச்சனையுமில்லை. ஆனால் முந்தைய மாதம் சாமிக்கண்ணு உடல் நலக்குறைவால் இறந்து விட்ட நிலையில் அவர்கள் குடும்பத்தில் அவருக்கு பிறகு விவசாயம் செய்ய ஒருவருமில்லை.

சொத்துபிரிவினையில் சாமிக்கண்ணுவின் மூத்தமகன் ரங்கசாமி கைக்குதான் அந்த விவசாய நிலம் வந்தது. அவன் மதுபிரியர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் அந்த நிலத்தை விற்று காசாக மாற்றுவதில்தான் படுதீவிரமாக இருந்தான்.

அந்த நிலத்தை தாங்களே வாங்கிவிட்டால் நன்றாக இருக்கும் என்று சந்திரனின் மனதினோரத்தில் ஆசை இருந்த போதும் அவர்களின் பொருளாதார நிலை அதற்கு சாதகமாக இல்லை.

அந்த நிலத்தை வாங்க வருபவர்கள் அனைவருக்கும் அந்தப் பொது கிணறு நெருடலாக தோன்றியதில் வாங்க மறுத்துவிட்டனர். இதனால் ஏற்கனவே சாமிக்கண்ணுவின் மகன் சந்திராவிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான்.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அவனின் அட்டூழியம் அதிகமானது. அதற்கு முக்கிய காரணம் அந்த நிறுவனத்தின் முதலாளி. அவனுக்கு பணம் கொடுத்து நன்றாக ஏற்றிவிட்டிருந்தார்.

அந்தக் கிணற்றிலிருந்து அவர்கள் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சவிடாமல் ரங்கசாமி சந்திரனிடம் பிரச்சனை செய்து கொண்டிருந்தான்.

அவர்களின் கடின உழைப்பிற்கு தற்போதுதான் நல்ல பலன் கிடைக்கவிருந்தது. இப்போது இந்தப் பிரச்சனை தமிழுக்கும் சந்திரனுக்கும் பெரிய தலைவலியாக வந்து சேர்ந்தது.

அதுவும் காலையிலிருந்து சாமிக்கண்ணுவின் மகன் ரங்கசாமி அவர்கள் நிலத்தில் வந்து நின்று கொண்டு,

“இந்தக் கிணத்துல உனக்கு எந்த உரிமையும் இல்ல… நீ உண்மையிலேயே அந்தக் கிழவிக்கு பேரனா? நீயா அந்தக் கிழவிக்குக் கொள்ளி வைச்ச” என்று குடித்துவிட்டு வாயிற்கு வந்தபடியெல்லாம் உளறிக் கொண்டிருந்தான்.

அவனுக்கு ஆதரவாகப் பேச நான்கு மதுபிரியிர்களை வேறு அழைத்து வந்திருந்தான்.

ஏற்கனவே இரண்டு நாளாக மனஉளைச்சலில் இருந்த சந்திரனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் ஏறிக் கொண்டிருந்தது. பேச்சு வார்த்தைக் கை கலப்பில் முடிந்துவிடுமோ என்ற பயத்தில்,

“சந்திரா வேணாம் வா… நாளைக்கு தலைவர் வந்திருவாரு… நம்ம அவர் கிட்ட பேசிக்கலாம்” என்றபடி அவன் கரத்தைப் பிடித்து தள்ளி இழுத்து வந்தவள்,

“இவங்க பேச்சே சரியில்ல… வேணும்டே உன்னைய தூண்டிவிடுற மாதிரி பேசுறாங்க… இவங்க பின்னாடி வேற யாரோ இருப்பாங்களோ தோனுது” என்றாள்.

‘அப்படி இருக்குமோ?’ என்பது போல அவன் யோசித்திருக்க,

ரங்கசாமி அப்போது விடாமல், “யாரைக் கூட்டிட்டு வந்தாலும் தண்ணி வுட முடியாதுடி… பெரிய இவ மாதிரி பேச வந்துட்டா” என்று அவன் தமிழிடம் அவமரியாதையாகப் பேசவும்.

“யாரை வாடி போடிங்குற உன்னைக் கொன்னு புதைச்சிடுவேன்” என்று சந்திரன் பொங்கி எழ, “வேண்டாம் சந்திரா” என்று தமிழ் அவன் கரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் சந்திரன் அமைதியடையவில்லை.

“நீ என்னடா தண்ணி எடுக்க கூடாதுன்னு சொல்றது… நான் எடுப்பேன்… எங்க தாத்தன் காலத்துல இருந்து இந்தக் கிணத்துல இருந்து தண்ணி எடுத்து வந்து விவசாயம் பண்ணிட்டு இருக்கோம்… அது நம்ம இரண்டு நிலத்துக்கும் பொது கிணறு” என்றான் திட்டவட்டமாக!

“யார் சொத்தை யாரு உரிமை கொண்டாடருது… பொது கிணறாம்ல? பொது கிணறு… ஏன் டா ஒன்ற பெஞ்சாதியைப் பொதுவா வைச்சுக்கலாம்னு சொன்னா ஒத்துக்குவியாடா” என்று அவன் சொன்ன மறுகணம்,

“டே பொறுக்கி நாயே உன்னை கொல்லாம விட மாட்டேன் டா” என்று ஒரே எட்டில் சந்திரன் அவனை உதைத்து தள்ளிவிட்டு அருகிலிருந்த பாறங்கல்லைத் தூக்கிக் கொண்டான்.

தமிழோ முகம் சிவக்க உதடுகள் துடிக்க நின்றிருந்தவள் கணவனின் செயலைப் பார்த்து அதிர்ந்து, “டேய் என்னடா பண்ற?” என்று அவன் கையிலிருந்த கல்லைத் தள்ளிவிட்டு அவனைப் பிடித்து இழுத்த போதும் அவன் அடங்கவில்லை. அமைதியாவதாகவும் இல்லை.

“என்ன வார்த்தை சொல்லி போட்டான்… அவனை அவனை…” அங்கே ஒரமாக போட்டு வைக்கப்பட்டிருந்த கடப்பாறை கண்ணில் படவும் அதனை ஆக்ரோஷ்மாக கையில் எடுக்க போனவனின் கையை அந்த நொடியே உதறி தள்ளியவள்,

“என்னடா குத்த போறியா? போய் குத்து… நல்லா குத்து… குத்தி அவன் குடலை கிழிச்சிடு… கிழிச்சிட்டு நிம்மதியா ஜெயிலுக்குப் போயிடு… ஆனா ஒன்னு” என்றவள் நிறுத்தி நிதானமாக அவனை ஏறிட்டுப் பார்த்து,

“என்ற வயித்துல வளர ஒன்ற புள்ளைய என்ன செய்றதுன்னு சொல்லிட்டு எவனாயாச்சும் வெட்டு குத்து… எங்காச்சும் போ” என்றவள் சொல்லிவிட்டு விரைவாக வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

அவள் சொன்ன வார்த்தையில் ஒரு நொடி சிலையாக நின்றவன் மறுகணமே, “தமிழு” என்று சந்தோஷ பூரிப்புடன் வீட்டிற்குள் நுழைய,

அவள் முகத்தை மூடி அழுது கொண்டிருந்தாள்.

இயற்கை விவசாயம் செய்வதென்று முடிவெடுத்த பின் பொருளாதார நிலையினாலும், மேலும் மொத்த கவனத்தையும் விவசாயத்தில் செலுத்த வேண்டியிருந்த காரணத்தாலும் இப்போதைக்கு குழந்தை வேண்டாமென்று இருவரும் சேர்ந்து முடிவெடுத்திருந்தனர், ஆனால் ஒரு நிலைக்கு மேல் குழந்தை வேண்டுமென்று ஆசை அவர்கள் உள்ளத்தில் ஊற்றாகப் பெருக, இருவருமே தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டனர்.

அவர்கள் எண்ணப்படியெல்லாம் நிகழ்ந்தால் அது விதி இல்லையே. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக அவர்களின் குழந்தை வேண்டுமென்ற ஆசையும் எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தில் முடிந்திருந்தது.

ஆனால் இந்தச் சூழலில் சந்திரன் இப்படியொரு சந்தோஷமான செய்தியை எதிர்பார்க்கவே வில்லை. தன் மனைவியை நெருங்கி, “வெளிய சொன்னதெல்லாம் நிசமா? நீ மாசமா இருக்கியா?” என்று கேட்கவும் முகத்தைத் திறக்காமல் தலையை மட்டும் அசைத்து வைத்தாள்.

அவள் முகத்தை மறைத்திருந்த கைகளை விலக்கி அவள் கண்ணீர் வழிந்திருந்த கன்னங்களைத் துடைத்துவிட்டவன், “எப்போதுல இருந்து… எத்தனை நாளாச்சு?” என்று கேட்க, அவள் தம் கை விரல்களைப் பிரித்து காண்பித்தாள்.

அவள் முகம் செங்கொழுந்தாக சிவந்திருக்க அவள் முகத்தைக் கரத்தில் ஏந்தியவனின் விழிகளும் கலங்கின.

“பத்து நாளாகிடுச்சா? ஏன் டி என்கிட்ட முன்னாடியே சொல்லல”

“எங்க சொல்றது? இரண்டு நாளா இந்த விசயத்தைச் சொல்லோனோம்னு தவிச்சுக்கிட்டு இருந்தேன்… ஆனா நீதான் கிணத்து பிரச்சனையில அந்த உருபுடாதவனுங்க கூட மல்லுக்கட்டிகிட்டு இருந்தியே… அந்த டென்ஷன்ல எப்படி சொல்றதுன்னு அமைதியா இருந்து போட்டேன்” என்ற போது அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் ஊற்றெடுக்க,

“அந்தப் பைத்தியாக்காரன் குடிச்சிட்டு ஏதோ ஒளறுனானுட்டு கோபத்துல நீ பாட்டுக்கு அவனைக் குத்தி போடுவேன்னு போறியே… குத்திப் போட்டு நீ ஜெயிலுக்குப் போயிட்டா நான் என்ன ஆவேன்னு யோசிச்சு பார்த்தியா டா நீ?” என்றவள் தன் வேதனையைக் கொட்டினாள்.

“புத்திக் கெட்டு போய் செஞ்சுட்டேன்… தப்பு… தப்பு இனிமே ஒரு நாளும் அப்படி செய்ய மாட்டேன்டி” என்றவன் அவள் நெற்றியில் அழுத்தமாக தம் இதழ்களைப் பதித்துவிட்டு அவளை தன் மார்போடு அணைத்து கொண்டான்.

அந்த நொடி தன் கோபம் வேதனையெல்லாம் துறந்து அவனது கையணைப்பில் அடங்கினாள். அவன் தேகத்திற்குள் அவளைப் புதைத்து கொண்டாள். அந்த அணைப்பிற்காக இரண்டு நாளாக அவள் எந்தளவு ஏங்கித் தவித்தாள் என்பது அவளுக்கு மட்டும்தான் தெரியும்.

அவர்களின் காதலுக்கு கிடைத்த வெற்றியின் தொடக்கவுரையாக அந்த சந்தோஷம் அமைந்தது.

இருவரும் அதன் பிறகு மருத்துவமனைக்குச் சென்று அந்த நற்செய்தியை உறுதிப்படுத்திவிட்டுத் திரும்புகையில் அவர்களுக்கு வேறொரு ஆச்சரியம் காத்திருந்தது.

அவர்கள் நிலத்தில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது.

சந்திரனும் தமிழும் வியப்பாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவும், “என்ன மாமா? எங்கப் போயிருந்தீங்க?” என்று கேட்டபடி அரசன் அவர்கள் முன்னே வந்து நின்றான்.

“பயிருக்கெல்லாம் தண்ணிப் பாய்ச்சி இருக்கு… எல்லாம் ஒன்ற வேலையா மச்சான்?” என்று சந்திரன் அவனைக் கேட்க,

“நான் இல்லங்க மாமா… ஐயா” என்றதும் இருவருக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை.

“அந்தக் களவாணி பையன் உங்க நிலத்துல தண்ணி பாய்ச்ச விடாம பிரச்சனை பண்றதைப் பார்த்துட்டு ஐயாதான் நம்ம மோட்டர்ல இருந்து தண்ணிப் பாய்ச்ச சொன்னாவுங்க” என்றான்.

“ஐயா… எங்க அரசா?” என்று தமிழ் நெகிழ்வோடு கேட்க,

“இங்கனதான் இருக்காங்க” என்று சொல்லி அவரைக் கையோடு அழைத்து வந்திருந்தான்.

“ரொம்ப நன்றிங்க மாமா” என்று சந்திரன் கைக் கூப்பி நன்றி சொல்லவும்.

“என்ன மாப்பிளை? வேத்தாளுக்கிட்ட சொல்ற மாதிரி… பொண்ணுக்கும் உங்களுக்கும் ஒரு பிரச்சனைன்னா நான் பார்த்துகிட்டு சும்மா இருப்பேனாக்கும்” என்றார்.

தமிழின் விழிகளில் கண்ணீர் பெருகியது. அவளுக்கு சந்தோஷத்தில் வார்த்தைகளே வரவில்லை. தட்டுத்தடுமாறி அழுது கொண்டே பேசினாள்.

“என்ற மேல இருக்க கோபமெல்லாம் போயிடுச்சுங்களா ஐயா?” என்று கேட்கவும்,

“கோபமெல்லாம் எதுவும் இல்ல புள்ள… கொஞ்சம் வருத்தம்தான்… அதுவும் இப்ப இல்ல” மகளின் தலையைப் பாசமாக வருடிக் கொடுக்க,

“எங்க வூட்டுக்கு வரீங்களா ஐயா?” என்றவள் ஏக்கப்பார்வையோடுக் கேட்கவும்,

“அதுக்கு என்ன? வரேன்டா கண்ணு” என்று சொல்லி அவர் மகளோடு முன்னே சென்றார்.

“என்ன மச்சான்? எப்படி இந்த அதிசயம் எல்லா நடந்துடுச்சு” என்று சந்திரன் தன் மச்சான் தோளில் கையைப் போட்டுக் கொண்டு அவனையும் உள்ளே அழைத்து சென்றான்.

தமிழ் சந்தோஷத்தில் தம்பிக்கும் தந்தைக்கும் தடபுடலாக விருந்து சமைத்து போட்டாள்.

“அக்கா இன்னைக்கு உண்மையிலேயே சாப்பாடு செம சூப்பருங்க க்கா” என்று அரசன் பாராட்டித் தள்ள.

மதுசூதனனும் மனமகிழ்வோடு மகள் கரத்தால் வெகுநாட்கள் கழித்து உண்டார். அவர் புறப்படும் தருவாயில் சந்திரன் தமிழ் கரு தரித்திருந்த விஷயத்தைச் சொன்னான்.

அவருக்கு சந்தோஷத்தில் வார்த்தைகளே வரவில்லை. மகளை அணைத்து கண்ணீரோடு உச்சிமுகர்ந்தார்.

அரசனோ, “நான் மாமா ஆகப் போறேன்… நான் மாமா ஆகப் போறேன்” என்று ஆனந்தமாகத் துள்ளிக் குதித்தான்.

ஆனால் இவர்கள் வீட்டுக்குத் திரும்பியதும், “பொண்ணு வூட்டுல உட்கார்ந்து நல்லா விருந்து சாப்பாடு சாப்பிட்டு வந்தீங்களோ?” என்று கோபமாகப் பொங்க, “இல்ல சக்கு” என்று மதுசூதனன் மனைவியை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் தடுமாறினார்.

அரசன் முந்திக் கொண்டு தமிழ் கர்ப்பமாக இருக்கும் தகவலை சொன்ன நொடி சகுந்தலாவின் மொத்த கோபமும் தோற்று அவளின் தாயுள்ளம் வென்றது.

“நிசமாவா மாமா? தமிழ் கர்ப்பமா இருக்காளா?” என்றவர் அந்த நொடியே தன் கோபம் பிடிவாதம் அனைத்தையும் விடுத்து மகளைப் பார்க்க புறப்பட்டுவிட்டார்.

தன் தாயைக் கண்ட நொடி தமிழும் அவளின் வீம்பு வருத்தங்கள் யாவும் மறந்து ஆரத்தழுவிக் கொண்டாள். தாய்மை நிலையை அடைந்த பெண்ணவளின் முதல் தேடல் தாயின் அரவணைப்புதான். தனக்குள் ஓர் உயிர் துளிர்த்திருக்கும் போதுதான் தன்னை உயிர் துளிகளாக சுமந்து உருவம் கொடுத்த தாயின் உணர்வுகளும் வலிகளும் வேதனைகளும் அவஸ்த்தைகளும் மகளுக்குப் புரிய ஆரம்பிக்கும்.

கண்ணும் கருத்துமாக கணவன் பார்த்து கொண்டாலும் தனக்கு உண்டாகும் தாய்மையின் அவஸ்த்தைகளை அந்தப் பெண்ணவள் தன் தாயிடமே சொல்ல விழைவாள்.

அவளது தேவைகளைப் புரிந்து கொண்டவனாக, “இந்த மாதிரி சமயத்துல நீ உங்க அம்மா வூட்டுல அவங்க கூட இருக்கோணோம்னு உனக்கு ஆசையா இருக்கும் இல்ல… அதுவும் அவங்களே சமாதானமாகி வூட்டுக்கு வந்து பார்த்துட்டு போயிட்டாங்க இல்ல” என்று சொல்ல,

“எனக்கும் அம்மா கூட இருக்கோணோம் போலதான் இருக்கு… ஆனாலும் உன்னைய வுட்டுப் போட்டு இருக்கவும் என்னால முடியாது… நீயும் அங்கன வந்து தங்கமாட்ட… புறவு திரும்பவும் நமக்கும் அவங்களுக்கும் இடையில ஏதாச்சும் மனவருத்தம் வந்துடுச்சுன்னா… வேணும்னா நான் போய் அம்மாவைப் பார்த்துட்டு வந்துடுறேன்” என்று கூறினாலும் தன் மனையாளின் ஏக்கமும் தவிப்பையும் அவனால் உணர முடியதா?

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது… எனக்காக நீ எம்புட்டு விசயம் வுட்டு கொடுத்திருப்ப… உனக்காக நான் அங்கன வந்து இருக்க மாட்டேனா?” என்றான்.

சந்திரனும் தமிழும் ஒருவருக்காக ஒருவர் தங்களின் தேவைகளை ஆசைகளைக் கொள்கைகளை கூட விட்டுக் கொடுத்து அவர்களின் உறவை மேலும் மேலும் பலப்படுத்தினர்.

சகுந்தலா மகளும் மருமகனும் தங்கள் வீட்டில் தங்கியிருந்த போது அவர்களின் உறவின் ஆழத்தைப் புரிந்து கொண்டார். சந்திரன் தன் மகளைப் பார்த்து கொள்ளும் விதத்தில் அவர் கோபம் முற்றிலும் அர்த்தமற்றது என்று புரிந்தது.

குடும்ப சூழலில் வளராமல் தன் அம்மத்தாவுடன் தனியே வளர்ந்த சந்திரனுக்கு அங்கே ஒரு அழகான குடும்ப சூழலோடு வாழும் அனுபவம் அமைந்தது.

காதல் உறவுகளைப் பெற்று தரும். ஆனால் பரஸ்பரம் விட்டுகொடுத்தல் மட்டுமே அந்த உறவுகள் யாவையும் நிலையாகப் பிணைத்து வைத்திருக்க உதவும்!

விருட்சத்தைத் தாங்கி நிற்கும் மண்ணுக்கும் வேருக்குமான பிணைப்பு போல… குடும்பம் எனும் விருட்சத்தைத் தாங்கி நிற்பது உறவுகளின் பாச பிணைப்புதான்.

இங்கே கோபம், மனவருத்தமெல்லாம் அவ்வப்போது அவ்விருட்சத்தில் தங்கி செல்லும் பறவைகள் போலதான். அது என்றுமே அவ்விருட்சத்தைத் தகர்த்துவிடாது

இவர்கள் உறவுகளின் இணக்கம் அவர்கள் குடும்பத்தின் சந்தோஷத்தில் மட்டும் பிரதிபலிக்கவில்லை. அவர்கள் விவசாய பணியிலும் பிரதிபலித்தது. அத்தனை நாட்களாக இயற்கை விவசாயம் செய்வதில் துளி கூட நம்பிக்கையும் விருப்பமும் இல்லாத மதுசூதனன் மருமகன் வழியில் தானும் இயற்கை விவசாயத்தில் இணைந்த ஆச்சரியமும் நடந்தது

மேலும் சந்திரன் ஆரம்பித்திருந்த பொதுநல வழக்கில் தொடர்ந்து அவர்கள் சந்தித்த நிறைய பிரச்சனைகளில் மதுசூதனனும் உடன் நின்றார் என்றால் காமராஜ் பின்னிருந்து பல உதவிகளைச் செய்தான்.

ரங்கசாமியின் பிரச்சனையில் சட்டத்தின் துணையை நாடுவதில் எந்தவித உபயோகமும் இல்லை. வரப்பு வாய்க்கால் பிரச்சனைகள் பலவும் வாதி பிரதிவாதிகள் இறந்த பிறகும் நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் இருக்கின்றன

ஆதலால் காமராஜ் இந்தப் பிரச்சனையில் சுமுகமாக அதேநேரம் சுலபமான தீர்வைக் காண அந்த நிலத்தைத் தானே வாங்கி பதிவு செய்தான்.

காமராஜ் சந்திரனுக்குத் துணையாக நிற்பது ரங்கசாமிக்குத் தெரிந்திராத காரணத்தால் அந்த நிலத்தை அவனுக்கு விற்பதில் எந்தப் பிரச்சனையும் உண்டாகவில்லை. ஆனால் நிலத்தைப் பத்திரம் செய்த பிறகுதான் இந்த உண்மை ரங்கசாமிக்கு தெரிய வர அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே!

இந்த சந்தோஷத்தோடு காமராஜை வீட்டிற்கு அழைத்து தடபுடலாக விருந்து உபச்சாரம் செய்தாள். தமிழுக்குத் துணையாக செல்வியும் அன்று அவளுக்கு சமையலுக்கு உதவி புரிந்தாள்.

“இனிமே உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல சந்திரன்… இந்த நிலத்தையும் சேர்த்து நீங்களே பார்த்துக்கோங்க… என்னைக்கு இந்த நிலத்தை உங்களால வாங்க முடியுதோ அப்போ நான் உங்க பேருக்கே ரெஜிஸ்டர் பண்ணி தந்துடுறேன்” என்று காமராஜ் சொன்ன போது சந்திரனுக்குப் பேச்சே வரவில்லை.

“இதெல்லாம் ரொம்ப பெரிய உதவிங்க சார்” என்றவள் நெகிழ்ச்சியோடு நன்றி உரைக்க,

“இங்க நம்ம இரண்டு பேரோட கொள்கையும் ஆரோக்கியமான சமுதாயம்… அது நிச்சயம் இயற்கை விவசாயத்தில மட்டும்தான் நடக்கும்… இதுல உதவின்னு எதுவும் இல்ல… எல்லாமே நம்ம கொள்கைக்காக செய்றதுதான்” என்ற காமராஜின் வார்த்தைகளில் சந்திரனும் தமிழும் மட்டும் வியக்கவில்லை. செல்வியும் சேர்த்தே வியந்து நின்றாள்.

காமராஜ் சென்ற பிறகு தன் தமக்கையிடம் வந்த செல்வி, “ஏனுங்க க்கா… உங்க சாருக்கு கண்ணாலம் ஆகிடுச்சா?” என்று கேட்டு வைக்க, “உஹும் இல்ல… அவருக்கு கண்ணாலம் பண்ணிகிறதுல எல்லாம் விருப்பம் இல்லையாம்” என்றாள்.

“ஏனாம்??” என்று செல்வி ஆவலாகக் கேட்க,

“எனக்கு என்னடி தெரியும்?” என்றவள் தங்கையை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தவள், “ஆமா நீ எதுக்கு இதெல்லாம் கேட்குற” என்றாள்.

“சும்மாதான்” என்றவள் இழுத்த போதும் அவள் பார்வை காட்டிய பொருள் தமிழுக்கு ஒன்றும் சரியாக படவில்லை.

“என்னடி? என்ன உன் பிரச்சனை?”

“ஒன்னும் இல்லீங்களே… சும்மா ஒரு நாலு கேள்வி கேட்டதுக்கு போய் இப்படி குறுகுறுன்னு பார்க்குறீங்களே… போங்க நான் வூட்டுக்குப் போறேன்”

“போ போ… ஆனா சாருக்கு உனக்கும் எட்டு ஒன்பதும் வயசு வித்தியாசம் இருக்குமடி” என்றவள் சொன்ன நொடி வெளியே செல்ல இருந்தவள் திரும்பி,

“அதெல்லாம் ஒரு விசயமுங்களா க்கா… நம்ம கிராமத்துல சகஜமா அம்புட்டு வயசு வித்தியாசம்ல எல்லாம் பண்ணிக்கலாயா என்ன? ஐயா எனக்கு பார்த்த மாப்பிளைங்கலேயே பல பேருக்கு பத்து ஒன்பது வயசு வித்தியாசம் இருக்கும்” என்று விளக்கமாகச் சொன்ன தங்கையை விழிகள் இடுங்க பார்த்தாள் தமிழ்!

செல்வி நாக்கைக் கடித்துக் கொண்டு அசட்டுத்தனமாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, “அம்மா தேடுவாங்க… நான் வரேன்” என்று ஓடிவிட்டாள்.

செல்வி சொன்னதைக் கேட்டு தீவிரமாக சிந்தித்தவள் காமராஜிடம் இது பற்றி பேசிவிட எண்ணி சந்திரனுடன் அவன் வீட்டிற்குச் சென்றிருந்தாள்.

“தமிழு… சந்திரா வாங்க வாங்க” என்றவன் மகிழ்வோடு அவர்களை வரவேற்று உபசரிதத்தான். ஆனால் சந்திரன் சில நிமிடங்கள் கூட இல்லாமல், “பக்கத்துல ஒரு சின்ன வேலை… முடிச்சிட்டு வந்து தமிழை வந்து அழைச்சிட்டுப் போறேன்” என்று சொல்லி சென்றுவிட்டான்.

“என்ன சந்திரா… அவசரமா கிளம்பிட்டாங்க?” என்று காமராஜ் கேட்கவும்,

“அவங்களுக்குக் கொஞ்சம் வேலை இருக்கு… முடிச்சிட்டு வருவாங்க… அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயமா பேசோணோம்” என்றாள்.

“என்ன ஏதாச்சும் பிரச்சனையா? திரும்பியும் அந்த கம்பெனி முதலாளி உங்ககிட்ட ஏதாவது வம்ப பண்றானா?” என்று அவன் பதட்டத்தோடுக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவன் அண்ணி அவளை நலம் விசாரித்த கையோடு,

“மாசமா இருக்கியாம்மா… எத்தனை மாசம்?” என்று விசாரிக்கவும், “மூணு மாசம்” என்றதும் அவர் இதழ்கள் விரிந்தன.

“உடம்பைப் பார்த்துக்கோம்மா” என்று அவர் அக்கறையாகச் சொல்லி அகன்றுவிடவும்,

“ஏதேனும் முக்கியமான விசயமா பேசோணுமா?” என்று கேட்கவும், “ஆமாங்க சார்… தனியா பேசலாம்ங்களா?” என்றவள் தயக்கத்தோடுக் கேட்கவும் இருவரும் தோட்டத்திற்குள் நடந்தனர்.

தமிழ் அப்போது தன் தங்கையைப் பற்றி விவரமாக சொல்லி முடிக்கவும், “என்ன தமிழு… சின்ன புள்ளைய போய்… இதெல்லாம் சரி வராது” என்றவன் மறுத்துவிட,

“பார்க்கத்தான் சின்ன புள்ள மாதிரி இருப்பா… ஆனா பயங்கர மெச்சூரிட்டி… பல நேரங்களில் நான் அக்காவா அவ அக்காவான்னு எனக்கே டவுட் வரும்னா பார்த்துக்கோங்க” என்றாள்.

“இல்ல தமிழு வேண்டாம் சரியா வராது” என்றவன் மறுப்பதிலேயே முனைப்பாக இருக்க,

“என் தங்கச்சிய வேண்டாம்னு சொல்றீங்களா இல்ல கண்ணாலமே வேண்டாம்னு சொல்றீங்களா?” என்று தமிழ் கேட்ட போது அங்கே வந்து நின்ற காமராஜின் சின்ன அண்ணி லதா,

“அப்படி கேளுமா? நாங்களும் இதைதான் கேட்குறோம்… கண்ணாலத்தைப் பத்தி பேசுனா மட்டும் தம்பி பிடிக் கொடுத்தே பேச மாட்டுறாங்க” என்றாள்.

“ஏன் சார்? யாரையாச்சும் காதலிச்சிங்ளோ?” என்றவள் கேள்வியில் அவன் முகம் இருளடர்ந்து போக,

“அது வந்து ஒரு புள்ளைய… கண்ணாலம் பண்ணிக்கலாமானு ஆசை பட்டாங்களாம்?” என்று அவன் சின்ன அண்ணி ஏதோ சொல்ல ஆரம்பிக்கவும்,

“என்ன மதனி நீங்க? அதெல்லாம் பழைய கதை” என்றவன் கண்டிப்பான குரலில் தன் அண்ணியின் பேச்சை நிறுத்தி,

“இப்படியே எம்புட்டு நாளைக்கு தனியா இருக்க போறீங்க… தங்கச்சி விருப்ப படுறான்றனால மட்டும் நான் இப்படி சொல்லல… நம்மல நேசிக்குற ஒருத்தங்க நமக்கு துணையா இருக்கிறதுல இருக்க சந்தோசம் இருக்கு இல்ல… அதெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது.. அனுபவப்பூர்வமா உணரனும்… பேசாம நீங்க தங்கை கிட்ட ஒரு தடவை பேசிப் பாருங்க” என்று தமிழ் சொல்ல காமராஜ் அப்போதும் அவளுக்குப் பிடிக் கொடுத்து பேசாமல் சென்றுவிட்டான்.

தமிழ் முகம் சுருங்கிப் போக, “நீங்க விவரத்தைக் கொடுத்துட்டுப் போங்க… நாங்க அவங்க அண்ணன் கிட்ட பேசி எப்படியாவது அழைச்சுட்டு வரேன்” என்று லதா உறுதியளித்தார்.

அதேபோல இரண்டு வாரத்தில் காமராஜிடம் எப்படியோ பேசி சமாளித்து அவர்கள் வீட்டுக்குப் பெண் பார்க்கும் சடங்கு போல காமராஜைக் காட்டாயப்படுத்தி அழைத்து வந்து செல்வியுடன் பேசவும் வைத்துவிட்டனர்.

ஆனால் தனக்கு கொஞ்சமும் இதில் உடன்பாடில்லை. செல்வியிடமே நேரடியாக பேசி இந்த ஏற்பாட்டைத் தடுத்தி நிறுத்திவிடலாம் என்று நினைத்துதான் வந்தான்.

ஆனால் செல்வி பேசிய விஷயம் காமராஜை யோசிக்க வைத்தது.

“எங்க அண்ணணும் அண்ணியும் கட்டாயப்படுத்தினதால்தான் நான் இங்க வந்ததேன்” என்றவன் ஆரம்பிக்க,

“நீங்க வந்தேதே போதுமுங்க… சம்மதம் சொல்லோணோம்னு எல்லாம் இல்லீங்க… நீங்க என்னைக் கட்டிகிட்டீங்கன்னா நானும் உங்க கொள்கைல இணைஞ்சுக்கலாம்னு ஒரு நப்பாசைதானுங்க அக்காகிட்ட கேட்டேன்… அப்போ கூட இந்தளவுல அக்கா கொண்டு வந்து நிறுத்துவான்னு எல்லாம் நானே யோசிக்கலைங்க” என்றவள் சொல்ல,

“கொள்கையா?” என்றவன் அவளைப் புரியாமல் பார்க்கவும்,

“இயற்கை விவசாயம் செய்றதும் ஆரோக்கியமான சமுதாயமும்தான் உங்க கொள்கைன்னு அன்னைக்கு அக்கா கிட்ட சொன்னீங்க இல்ல… அதுதானுங்க எனக்கு பிடிச்சிருந்தது.

அக்கா விவசாயத்துல இறங்குற வரைக்கு எனக்கே பெருசா இதுல எல்லாம் மதிப்பெல்லாம் இல்லிங்க… ஆனா இப்போ எனக்கு அக்கா போல இருக்கோணும்னு தோணுதுங்க.

ஆனா பாருங்க… எனக்கு பார்க்குற மாப்பிளை யாருக்கும் உங்கள மாதிரி கொள்கையும் இல்லீங்க… விவசாயமும் தெரியலைங்க… கட்டிக்கிட்ட புறவு நமக்கு என்ன கொள்கை இருந்தாலும் நம்ம விதியேன்னு அவங்க யோசிக்கிற வழியிலதானுங்களே போயாகணும்… அதுக்கு பதிலா நமக்கு பிடிச்ச மாதிரி யோசிக்குறவங்க கூட இணைஞ்சிட்டா வாழ்க்கை நல்லா இருக்கும்ங்களே?” என்றாள்.

“எது… கொள்கையிலையாங்க?” என்றவன் அவளை சுவாரசிய பார்வையோடு கேட்கவும்,

“வாழ்க்கையிலயும் தானுங்க” என்று செல்வி சொன்ன மறுகணம் அவன் முகத்தில் புன்னகை விரிந்தது.

“சரிதானுங்க… இணைஞ்சிரலாம்ங்க” என்று ஒரே வார்த்தையில் அவளுக்கு சம்மதம் கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.

சாதாரணமாகப் பிடித்திருக்கிறது என்று அவள் சொல்லியிருந்தால் சம்மதித்திருப்பானோ என்னவோ? அவள் அவன் கொள்கையைப் பிடித்திருக்கிறது என்று சொன்னதுதான் அவன் மனதைக் கவர்ந்தது.

ஒரு மாதத்தில் நிச்சயம் மற்றும் மூன்று மாதத்தில் திருமணம் என்று நான்கு மாதம் பரபரவென திருமண ஏற்பாடுகளில் பறந்தோடின. விமர்சையாக செல்வி காமராஜின் திருமணம் முடிந்த கையோடு அவர்கள் தொடுத்திருந்த பொதுநல வழக்கிலும் தீர்ப்பு வந்து இரட்டிப்பு சந்தோஷம் தந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

விதிமீறல்கள் மற்றும் நீர்நிலைகளை மாசுப்படுத்திய காரணத்தாலும் அந்த சாய்ப்பட்டறை தொழிற்சாலை சீல் வைக்கப்பபட்டு அதன் உரிமையாளருக்கு ஒரு மிகப் பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டது.

அவர்கள் கிராமமே சந்திரனையும் தமிழையும் கொண்டாடித் தீர்த்தது. அந்த சந்தோஷத்தோடு இணைந்தார் போல தமிழ் அழகாய் ஒரு பெண் குழந்தையும் ஈன்றெடுக்க, தங்களின் காதலின் சின்னமான அக்குழந்தைக்கு தமிழ்மதி என்று பெயர் சூட்டினர்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content