You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

En Iniya Pynthamizhe - Final Episode

Quote

35

தமிழும் சந்திரனும் இயற்கை வேளாண்மைக்கு மாறி சரியாக ஆறு வருடங்கள் கடந்துவிட்டன. தமிழ்மதிக்கு இளையவன் தமிழ்மாறன் பிறந்து ஒரு வயது முடிந்திருந்தது.

தற்போது அவர்கள் இருவரும் வயற்காட்டில் விவசாயிகளுக்கான தகுதிகளோடு சேறும் சகதியுமாகச் சுற்றிக் கொண்டிருக்க,

சேற்றை வாரி பூசிக் கொண்டு ஓடிய மகளின் பின்னோடு, “மதிக்குட்டி நில்லுங்க” என்று சந்திரன் ஓடிக் கொண்டிருந்தான்.

“அடியே குட்டி வாலு… எங்க ஓடுற?” என்று அக்கா மகளைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்ட அரசன், “மாமா இங்கன பாருங்க” என்று சொல்லி பசுமை விகடன் இதழை நீட்ட,

“வந்துடுச்சா மச்சான்” என்று அதனை தம் கரங்களில் அவன் ஆவலாக வாங்கிக் கொண்டான்.

“ஆமா மாமா… சூப்பர் படிச்சிட்டேன்… அக்காகிட்ட கொடுங்க” என்றதும் சந்திரன் ஒரே ஓட்டமாக ஓடி தன் மனைவியிடம் வந்து நின்றான்

“கொஞ்சமாச்சும் அடங்குறியா?” என்று மகனைக் கண்டித்து கைகளில் அவன் குழைத்து வைத்திருந்த சேற்றை அவள் அலம்பிவிட்டுக் கொண்டிருக்க,

“தமிழு… இங்கன பாரு” என்று அந்த இதழை அவன் மூச்சிரைக்க அவள் முகத்திற்கு நேராகக் காட்டினான்.

“வந்துடுச்சா சந்திரா” என்று அவள் அதனை வாங்க போக,

“மாமான்னு… கூப்பிட்டா தருவேன்” என்றவன் அவளிடம் கண்ணடிக்க, அவனை ஏறஇறங்க ஒரு பார்வை பார்த்தவள்,

“அதெல்லாம் சொல்ல முடியாது… நீ கேட்டவுடனே அப்படி கூப்படவும் வராது… ஒழுங்கா புக்கை கொடு” என்று கேட்டாள்.

அவன் முறைத்து கொண்டு நிற்கவும், “சரி கொடுக்காதே… போ… நானே போய் வாங்கிப் படிச்சுக்கிறேன்” என்றவள் வீம்பாகச் சொல்லிவிட்டு நடக்கவும்,

“அதானே… நான் கேட்டு ஏதாச்சும் நீ செஞ்சுட்டாலும்” என்றவன் கடுப்படித்து, “இந்தா புடி” என்று அதனை அவளிடம் வேண்டா வெறுப்பாகக் கொடுத்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு நடக்க,

“என்ன அப்படியே போறவன்… புள்ளைய தூக்கிட்டுப் போ” என்று சொல்லி மகனைக் கையில் கொடுத்துவிட்டு மரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டு அந்த மாத இதழைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினாள்.

‘ஒரு அழகான காதல் ஜோடியின் அட்டகாசமான இயற்கை விவசாயம்’ என்ற தலைப்பில் பிரசுரமாகியிருந்தது அவர்களைப் பற்றிய அந்தக் கட்டுரை!

*

அவர்கள் இருவரின் அயராத உழைப்பும் புதுப்பது முயற்சிகளும் அவர்களின் நிலத்தை வளமாக மட்டுமில்லை. அவர்களின் மனங்களை உடலை என்று அவர்களின் சூழலையும் அழகாகவும் வளமாகவும் மாற்றியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

சாமிக்கண்ணுவின் நிலமும் அவர்கள் கைக்கு வந்த பின்பு அவற்றையும் சேர்த்து இயற்கை வளமிக்க நிலமாக மாற்றும் பணியில் தீவிரமாக முயன்று அதில் வெற்றியும் கண்டனர்.

மேலும் அவர்கள் நிலத்தைக் கச்சிதமாகப் பிரித்து பலவிதமான பயிர்களையும் பயிரிட்டனர்.

ஊர் மக்கள் எல்லோருமே இயற்கை வழியில் செய்யும் அவர்களின் விவசாய முறையையும் அதேநேரம் அவர்கள் விளைவித்த பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடமே கொண்டு போய் சேர்க்கும் யுக்திகளையும் கண்டு வியக்கலாயினர்.

இந்த வியாபார யுக்திகளில் தமிழின் அறிவாற்றல் மிக முக்கிய பங்காற்றியது. கோயமுத்தூரில் விவசாய உற்பத்திப் பொருட்களை மதிப்பு கூட்டுப் பொருட்களாக மாற்றும் பயிற்சி வகுப்புகளில் பயின்று நிறைய புதுப்புது வழிமுறைகளை அவள் கற்றுத் தேறினாள்.

அதேநேரம் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த முகநூல் இன்ஸ்டா போன்ற இணையத்தளங்களில் ‘இயற்கையே போற்றி!’ என்ற பெயரில் நண்பர்கள் பலரையும் தொடர்பு கொண்டு இயற்கைப் பொருட்களின் நன்மைகளை எடுத்துரைத்தாள்.

முகநூல் வழியாக அவளின் நண்பர்கள் சிலரும் அவர்கள் விளைவித்த பொருட்களை வாங்க முன்வந்தனர்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல புற்களையும் கூட பாக்கெட் செய்து விற்கும் அவள் திறமையைக் கண்டு வியக்காத்தவர்களே கிடையாது.

மேய்ச்சல் நிலத்தில் கால்நடைகள் பொதுவாக உட்கொள்ளும் புல்களில் எலுமிச்சை புல்/தேசிப்புல்லும்(lemon grass) ஒரு வகை!

மருத்துவ ஆராய்ச்சியில் எலுமிச்சைப்புல் மனழுத்தம் மற்றும் தூக்கமின்மையையும் குறைக்கவல்லது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த எலுமிச்சை புல்லின் மருத்துவ குணம் அறிந்த பலரும் இந்த ரக புற்களைப் பறித்து தேநீராக தயாரித்து குடிப்பதில் ஆர்வம் காட்டினர்.

இத்தகைய புற்களுக்குப் பெரிதாக கவனிப்பும் இடமும் கூட தேவையில்லை. வரப்போரத்தில் சாதாரணமாக வளரும் இவ்வகை புற்களைக் கத்தரித்து விற்பனை செய்து அதிலும் ஒரு கணிசமான தொகையை வருமானமாக ஈட்டும் அவளின் புத்திகூர்மை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தற்சமயம் இயற்கை விவசாயத்தின் அடுத்த படிநிலையாக தேனீக்கள் வளர்க்கும் முறையைக் கற்றறிந்து அதனையும் தன் நிலத்தில் செயல்படுத்தினாள்.

விதை போடுவது தண்ணீர் பாய்ச்சுவது. உரம் போடுவது மட்டுமே அல்ல விவசாயம்.

பயிரிடப்படும் பயிர்களில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்களை நம்பித்தான் இருக்கின்றன. தேனீக்கள் மூலம் அயல் மகரந்த சேர்க்கை நடந்தால்தான் மகசூல் கிடைக்கும் என்பதை அறிந்து தமிழ் தங்கள் நிலத்தில் தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்டினாள்.

ஆரம்பத்தில் இரண்டு ஏக்கருக்கு ஒரு தேனீ பெட்டிகள் வீதம் ஐந்து பெட்டிகளோடு தேனீ வளர்ப்பினைத் தொடங்கிய சந்திரனும் தமிழும் தற்போது ஏக்கருக்கு ஐந்து பெட்டிகள் வீதம் தன் தந்தை நிலத்தையும் சேர்த்து ஐம்பது பெட்டிகள் வைத்திருந்தனர்.

ஒரு பெட்டியிலிருந்து மாதந்தோறும் சராசரியாக இரண்டரை கிலோ தேன் கிடைக்கும். ஐம்பது பெட்டிகளுக்கு சராசரியாக நூறு கிலோ. ஆரம்ப கட்டங்களில் தேனீ பெட்டிகள் வாங்கிய செலவு அதன் பராமரிப்புகள் போக, தேன் உற்பத்தியும் அவர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டி தந்தது.

அவர்களைத் தேடி வந்து வாடிக்கையாளர்கள் சுத்தமான தேனைப் பாட்டிலில் வாங்கிச் சென்றனர்.

மேலும் சந்திரன் தங்கள் நிலத்தில் விளையும் காய்கறிகள் பழங்களை தானே எடுத்து சென்று விற்றுவந்தான். தோட்டத்தில் விளைந்த மஞ்சளைத் தூளாக மாற்றி பாக்கெட் செய்வதோடு சேர்த்து கற்றாழை ஷாம்பூ, சோப்பு போன்றவையும் இயற்கை முறையில் தயாரித்ததை பலரும் அவளிடம் ஆர்வமாகக் கேட்டு வாங்கிச் சென்றனர்.

தமிழ் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்பதில் ஊரிலுள்ள சில மகளிர் குழுவுடன் இணைந்து கொண்டு பெண்கள் சிலருக்கு ஒரு சிறியளவிலான வருமானத்தை ஈட்டவும் வழி வகை செய்து தந்தாள்.

ஆக்கபூர்வமான அவளின் யோசனைகளால் இயற்கை விவசாயத்தில் அவர்கள் நல்ல லாபத்தை ஈட்டினர்.

அந்த வருடம் பெய்த தொடர் மழையால் விவசாயிகள் பலரும் நட்டத்தைக் கண்ட போதும் சந்திரன் தன் நிலத்தில் பாரம்பரிய ரகமான நெய் கிச்சடியை நட்டிருந்த காரணத்தால் முப்பது மூட்டைக்கும் குறையாமல் அறுவடை செய்ய முடிந்தது.

இயற்கையின் மீதான நம்பிக்கை எந்நாளும் பொய்த்து போகாது என்பதற்கான மிக சிறந்த உதாரணம்தான் அந்த சம்பவம்.

இயற்கை வேளாண்மையின் சிறப்புகள் பற்றிய பிரச்சாரங்கள் மற்றும் கட்டுரைகள் நிச்சயம் விவசாயிகளிடம் எந்த மாற்றத்தையும் உண்டாக்காது. அனுபவப்பூர்வமாக அதனை உணர்ந்து கொண்டால் மட்டுமே புரியும்.

சந்திரனும் தமிழும் இயற்கை விவசாயத்தின் அருமை பெருமைகளை நன்கு புரிந்து செயல்ப்படுத்தி வெற்றியும் கண்டனர். வெற்றி என்பது இங்கே பணமும் சொத்தும் அல்ல. ஆரோக்கியமான வளமான வாழ்க்கை. தற்சமயம் பலருக்கும் கிட்டாத அரிதிலும் அரிதான ஒன்று அதுதான். அது அவர்களுக்கு நிரம்பவே கிட்டியிருந்தது.

ஆனால் தற்போதும் அவர்கள் கிராமத்தில் பலரும் இயற்கை விவசாயத்திற்கு மாற தயாராக இல்லை.

மாற்றங்கள் என்பது அத்தனை சீக்கிரத்தில் நடந்துவிடுவதில்லையே. ஆனால் அடி மேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும் என்பது போல உரம் பூச்சிக்கொல்லிகளால் எதிர்கொள்ளும் பாதிப்புகள் அவர்கள் மனதிலும் மாற்றத்தை உருவாக்கும். ஒரு நாள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தை அவர்களுக்கும் உணர்த்தும்.

*

அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வரியிலும் இயற்கையோடு இயைந்த அவர்கள் இருவரின் காதலையும் மிக அழகான வார்த்தைகளாகக் கோர்க்கப்பட்டிருந்தது.

மேலும் அதிலிருந்த அவர்கள் இருவரும் இணைந்திருந்த படங்களை அவள் பார்வையின் மூலமாக தன் மனதில் நிரப்பி மெய்மறந்து பார்த்தபடி அமர்ந்திருக்க, அந்தச் சமயம் வீசிய குளிர்ந்த காற்றும் மெல்லிய சாரலும் அவள் தேகத்திற்குக் கொஞ்சமும் உரைக்கவில்லை.

ஆனால் அந்தச் சாரல் மழையாக உருவெடுக்கவும்தான் அவள் அதனை உணர்ந்து உடனடியாக அந்தப் புத்தகம் நனையாமல் தன் முந்தானையில் மறைத்து கொண்டு மழைக்காக ஒதுங்க இடம் தேடி கருப்பன் கோவிலில் வந்து நின்றாள்.

அங்கே வந்து நின்ற போது அவள் மனம் எங்கெங்கோ பழைய நினைவுக்களுக்குள் ஓடியது. அதே இடத்தில் நின்று கொண்டு சந்திரன் அவளிடம் கல்யாணம் செய்து கொள்ள சொல்லி சத்தியம் கேட்டது. ஆனால் அந்த நொடியில் அவனுடன் இப்படி அள்ள அள்ள குறையாத காதலோடு வாழப் போகிறோம் என்று அவள் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.

அந்தச் சமயத்தில் சந்திரன் அவளைத் தேடிக் கொண்டு வந்து, “இங்கனதான் இருக்கியா? சீக்கிரம் வா” என்று அவள் கரம் பிடித்துக் குடைக்குள் அழைக்க,

“இதென்னது இது… எனக்கு இதெல்லாம் வேண்டாம்” என்று அவள் வேகமாக அவன் கரத்திலிருந்த குடையைத் தட்டிவிட அது காற்றோடு பறந்து போனது.

“அடியேய்… அறிவு இருக்கா… குடையைத் தூக்கிப் போட்டுட்டியா?” என்றவன் முறைக்க,

“அறிவோடு நான் யோசிச்சிருந்தா உன்னைய நான் கட்டிகிட்ட இரண்டு புள்ளைய பெத்திருப்பேனா” என்றதும் அவன் சீற்றமாக, “என்னடி சொன்ன… திரும்ப சொல்லு” என்றவன் அவள் முகவாயைப் பிடித்து அழுத்தினான்.

“உண்மைத்தானே சொன்னேன்… என்ற அறிவும் மனசு எல்லாத்தையும் ஒன்ற கிட்ட தொலைச்சுப் போட்டேனல்ல… புறவு அறிவு இருக்கான்னு கேட்டா” என்றவள் பார்வையில் பொதிந்த சூசகமான அர்த்தத்தைப் புரிந்து கொண்டு ஓரப்பார்வை பார்த்தவன்,

“அதானே… உனக்கு பேச சொல்லி தரணுமா என்ன? அது சரி… இப்ப எப்படி போறது?” என்றான்.

“இப்படிதான்” என்றவன் கைகயணைப்பிற்குள் சரண் புகுந்து கொண்டு தன் முந்தானையை அவனுக்குக் குடையாக விரித்துப் பிடித்துக் கொண்டாள்.

“நனைஞ்சுடுவோம்டி” என்றவன் பார்வையில், “அப்போ வேண்டாமா மாமா?” என்றவள் கேட்ட தொனியில் அவன் இதழ்கள் விரிந்தன.

“சரி போவோம்டி என் கருவாச்சி” என்றவன் இன்னும் இறுக்கமாக அவளை அணைத்துப் பிடித்துக் கொண்டு நடந்தான்.

மழையென்ற கரம் கொண்டு வானவன் பூமியை காதலோடு ஆரத்தழுவி ஆசைதீர அணைத்து கொள்வது போல… அவர்களும் ஒருவரோடு ஒருவர் இணைந்து நனைந்து இயற்கையிடம் சரண் புகுந்தனர்.

அவர்கள் பாதம் பதித்த ஒவ்வொரு அடியிலும் பசுமையும் செழுமையும் அவர்கள் காதலுக்கு பச்சை கம்பளம் விரித்து வரவேற்றது.

ஆங்காங்கே மழையில் நனைந்த மலர்கள் அணிவகுத்து புன்னகையாக இதழ்கள் விரித்து அவர்களைப் பார்த்து சிரித்தன.

இயற்கையை நாம் காதலிக்கத் தொடங்கினால் இயற்கையும் நம்மை காதலிக்க தொடங்கிவிடும் என்பது போல இயற்கை அந்த இளம் தம்பதிகளின் காதலைக் காதலிக்கத் தொடங்கியது. இன்னும் கேட்டால் போற்றத் தொடங்கியது. அவர்களுக்காகவே பூத்து காய்த்து செழித்து மழையாகப் பொழிந்து… அவர்கள் வாழ்க்கையோடு இணைந்து வாழத் தொடங்கியது.

இயற்கையும் காதலும் நாணயங்களின் இரு பக்கங்கள் போல. இவை இரண்டும் இல்லாவிடில் பூமியில் உயிரினங்களும் கிடையாது. வாழ்க்கையும் கிடையாது.

காதலைப் போற்றுவோம்… இயற்கையைக் காப்பாற்றுவோம்…

 

Quote

அருமையான கதை

Quote

Nice story 👍

Quote

Introduced live fencing, jeevamirtham and Amrita karaisal to my daughter! Thanks to you Monisha!! 🙂

Uploaded files:
  • IMG_20240405_104515.jpg

You cannot copy content