You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Iru Thruvangal - Episode 16

Quote

16

கனவல்லவே!

எழுத்து சுதந்திரம்தான் நம் தேசத்தின் சுதந்திரத்திற்கு அஸ்திவாரம் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனிதசக்தியை திரட்டி நம் நாட்டில் நடைபெறுகின்ற அநியாயங்களுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை நடத்தி மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால் இன்று நம்மைச் சுற்றியுள்ள பத்திரிக்கை எல்லாம் அக்கிரமங்களைத் தூண்டிவிடுவதும், கலவரங்களை ஏற்படுத்தவும், மொத்தத்தில் தவறுகளின் துணைவனாய் அமைந்திருக்கும் நிலையில் ‘ட்ரூத்’ என்ற இந்தியாவின் பெரும் மாநகரங்களில் வெளியாகும் ஆங்கில நாளிதழ் உண்மையைக் கொணர்வதையே தங்கள் பத்திரிக்கையின் கொள்கையாகக் கொண்டுள்ளது.

அந்த பத்திரிக்கையில் வெளியான ‘28 வயது பெண்ணின் சாதனைகள்’ என்று இறந்த போன கேத்ரீனைப் பற்றிய ஆர்டிக்கல் இந்தியாவைத் திரும்பி பார்க்க வைத்தது.

கேத்ரீனை பார்க்க இந்தியப் பெண்களின் சாயலிலில்லாத போதும் அவள் பிறந்து வளர்ந்த தாய் நாடு இந்தியா. அவளுடைய தந்தை தமிழ் நாட்டில் சிறிய கிராமத்தில் பிறந்த மகேந்திரன்.

அவருக்குள் இருந்த சாதிக்கும் எண்ணமும், அயராத உழைப்புமே அவரை இளமையிலேயே பெரிய வளர்ச்சியை அடைய வைத்தது. மகேந்திரன் தன்னுடைய பெயரை அமரேஷ் என்று மாற்றிக் கொண்டுவிட்டார்.

ஒரு வருடத்திற்கே பல கோடி ரூபாய்க்கு லாபம் ஈட்டும் கோவாவில் அமைந்துள்ள அமரேஷ் லிக்கர் பேஃக்டரியின் வளர்ச்சி அபரிமிதமானது. உலகளவில் அவருடைய நிறுவனம் வளர்ந்து நிற்பதற்குக் காரணம் அமரேஷ் மட்டுமல்ல. அவருடைய மனைவி சோஃபியாவும்தான்.

 ஃபிரான்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து விட்டு தன் காதல் கணவனுக்காக கோவாவிலேயே தங்கி விட்டாள். அதுமட்டுமின்றி அவள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள குடும்பச் சொத்தை கணவனின் வளர்ச்சிக்காகத் தாரை வார்த்தவள். அவர்களின் காதலின் சின்னமாகப் பிறந்தவள்தான் ‘வேலட்டினா கேத்தரீன்’.

சோஃபியா மருத்துவம் மட்டும் பார்ப்பதில்லை. சில மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியும் செய்து கொண்டிருந்தாள். அதன் விளைவாக ஏற்பட்ட விபத்தில் சோஃபியாவின் இரு கண்களும் பாதிக்கப்பட்டன.

 கணக்கு வழக்கில்லாத பணம் கூட அவளைக் குணப்படுத்த இயலவில்லை. சில நாட்கள் அந்த மனத்துயரில் இருந்த சோஃபியா, கேத்ரீனின் பன்னிரண்டாவது வயதில் இறந்தும் போனாள்.

தாயை இழந்து விட்ட கேத்ரீன், அப்பொழுதிலிருந்து தனிமையைப் பழகி இருந்தாள். ஐ. ஐ. எம் பெங்களூரில் எம். பி. ஏ முடித்த கேத்ரீன் தன் தந்தையோடு சேர்ந்து நிறுவனத்தின் முக்கியப் பொறுப்புகளைப் பார்த்து கொண்டாள்.

துரதிஷ்டவசமாக அமரேஷும் இறந்து விட அந்த நிறுவனத்தின் பங்குகள் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. ‘கேத்ரீனால் தனியாக நிர்வாகம் செய்ய முடியுமா?’ என அவள் வீழ்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த எல்லோருமே அதிர்ச்சி அடையும் விதமாய் அவள் தன்னுடைய திறமையால் அந்த நிறுவனத்தைப் பன்மடங்கு லாபம் பெருகச் செய்தாள்.

இது கேத்ரீனை பற்றி எல்லோருக்கும் தெரிந்த ஒரு முகம். ஆனால் ‘ட்ரூத் ' இதழ் வெளிச்சம் போட்டுக் காட்டியது அவளுடைய இன்னொரு முகம்.

‘அமரேஷ் லிக்கர் பாஃக்டரி’யின் லாபத்தில் பல பங்குகளைச் சர்ச் பாஃதர் அந்தோனியின் மூலமாக பல்லாயிரம் ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கைக்காக அற்பணித்து இருக்கிறாள். கண்களை இழந்த பல நூறு குழந்தைகளுக்கு பார்வை திரும்பக் கிடைக்கப் பெற செய்திருக்கிறாள்.

இப்படி கணக்கிலடங்கா உதவிகளைக் கண்களுக்குத் தெரியாமல் செய்திருக்கிறாள். அவள் இறந்த பின்பும் கூட அந்த நிறுவனத்தின் ஒரு பங்கு லாபத்தை ஆசிரமத்திலுள்ள குழந்தைகளுக்கென அற்பணித்திருக்கிறாள். இந்த அறியாத உண்மை உலகையே மெய் சிலிர்க்க வைத்தது.

 அவளுடைய மரணத்திற்குப் பிறகு ஃபிரான்ஸிலிருந்து வந்த தாய் வழி உறவினர்கள் அடக்கம் செய்தனர். அந்த இடத்தில் புல்லே முளைத்துவிட்ட நிலையில் தமிழ்நாடு போலீஸ் அவளுக்கான நீதியை வழங்கவில்லை. அவளுக்காகக் கேள்வி கேட்போர் இல்லாததினால் அவளின் மரணம் மர்மமாய் போனது.

அந்தக் கடைசி வரி கேத்ரீனின் இறப்பிற்கான நீதியை வழங்க பல லட்சோபலட்ச மக்கள், தொண்டு நிறுவனங்களைக் குரல் கொடுக்கச் செய்தது. அந்தக் குரல் சென்னை மாநகரித்திலும் ஒலித்தது.

அவளின் இறப்பில் ஒளிந்துள்ள உண்மையைக் கண்டுபிடிக்க மறு விசாரணைக்குத் தமிழ்நாடு போலீஸ் ஏற்பாடு செய்தது. அதனால் திருச்சியிலிருந்து இன்வஸ்டிகேஷனில் திறமை மிகுந்த ஆபிஸர் வேணு மகாதேவனை இந்தக் கேஸில் இறக்கியது. கூடவே இன்ஸ்பெக்டர் சிவாவும் விசராணையின் உதவிக்காகப் போடப்பட்டுள்ளது நாம் அறிந்த விஷயமே.

ஹோட்டல் ஆதித்தியா!

மீண்டும் அறை எண். 603ல் அந்த ட்ரூத் நாளிதழை கையில் சுருட்டி வைத்துக் கொண்டு வேணுவும், அவரோடு சிவாவும் கேத்தரீன் இறப்பு கொலைக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர்

“பத்து மாசத்திற்குப் பிறகும் இந்த அறையை ஹோட்டல் நிறுவனம் ஏன் பூட்டியே வைச்சிருக்கனும்?” என்றார் வேணு.

“மீடியாக்கள்தான்... ரூம் நம்பர். 603 டெத் என ஒயாம புலம்பி அதை மக்கள் மனசில பதிய வைச்சிட்டாங்க” என்றான் சிவா.

“பாயின்ட் சிவா... மீடியாக்களுக்குத் தேவை வெறும் பரபரப்புதான்”

சிவா அவள் விழுந்த பால்கனியின் வழியே எட்டிப் பார்த்தான்.

“வெறும் ஐந்தரை அடி இருக்கும் பெண் குடிபோதையால் தவறி விழுந்திருக்க வாய்ப்பே இல்லை சார். இட்ஸ் அ மர்டர். யாராவது பின்னாடி இருந்து தள்ளி விட்டிருக்கணும்… இல்லைனா... கால வாரி விட்டிருக்கலாம்?”

“அப்போ உள்ளே ஆள் இருந்திருக்கணும் ... இல்லை அவளோடு பின்னாடியே நுழைந்திருக்கலாம்... என்ன சிவா?”

“உள்ளே ஆள் இருக்க அவன் இந்தக் கதவை சாவி இல்லாம திறந்திருக்கணும்... பட் ஹோட்டல் நிறுவனம் அதுக்கு வாய்ப்பில்லைனு சொல்றாங்களே. செகண்ட் திங் பின்னாடியிருந்து வந்திருந்தா சீசிடிவியில் அவன்/அவள் பின்னோடு வருவது பதிவாயிருக்கணும். “

இருவருமே ஒரு புள்ளியில் வந்து மீண்டும் குழப்பத்தில் நின்றனர்.

“ஒய் நாட்? அவன் இந்தப் பால்கனி வழியா வந்து கதவுக்குப் பின்னாடி நின்னுட்டிருந்தா?”

“நாட் பாஸிபில் சிவா. அதுவும் ரொம்ப ரிஸ்கி. நாம இந்த கேஸை வேற இடத்திலருந்து ஸ்டார்ட் பண்ணனும்” என்றார் வேணு.

“எங்கிருந்து?”

“கோவா... வேலட்டீனா கேத்ரீனின் சொந்த ஊர்” என்று வேணு முடிவெடுக்க அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய இருவரும் புறப்பட்டனர்.

இருளில் ஒளிர்ந்திருந்த மின்விளக்குள்... திடீரென ஆறாவது மாடியிலிருந்து ஒரு பெண் தவறி விழுகிறாள். அவள் முகமெல்லாம் இரத்தம் தோய்ந்திருக்க,

“கேத்ரீன்...” என அலறியபடி எழுந்து கொண்டான் ஆதித்தியா.

அவனின் அலறல் சத்தம் விந்தியாவிற்கும் கேட்க அவள் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டாள். ஆதித்தியா எதையோ கண்டு மிரட்சியாக நெற்றியில் வியர்வை துளிகள் படிந்தபடி அமர்ந்திருந்தான்.

“ஆதித்தியா... ஆதித்தியா...” என்று விந்தியா தொடர்ச்சியாக அழைத்தும் அவன் பதிலின்றி அமர்ந்திருந்தான்.

விந்தியா போர்வையை விலக்கி கொண்டு அவன் அருகில் வந்து ‘ஆதித்தியா’ என்று அழைத்தாள். அப்பொழுதும் பதில் இல்லை. பக்கத்திலிருந்த தண்ணீர் ஜக்கிலிருந்த தண்ணீரை சுரீலென அவன் முகத்தில் தெளித்தாள்.

முகத்தை அசைத்தபடி நினைவுக்கு வந்தவனாய் அவன் அருகில் தண்ணீர் ஜக்கோடு நின்றிருந்தவளை நிமிர்ந்து பார்த்தான்.

“பைத்தியமாடி நீ?” என்று முகத்தைத் துடைத்தபடி கேட்டான்.

“அத நான் கேட்கணும்...” என்று சொல்லிவிட்டு தண்ணீரை அவன் கைகளில் கொடுத்தாள்.

“முதல்ல தண்ணி குடிங்க மிஸ்டர்... நிம்மதியா தூங்கிட்டிருந்தேன்... ஏதோ கெட்ட கனவு கண்டு அலறிட்டு... இப்போ என்னைப் பாத்து பைத்தியம்னு சொல்றீங்க” என்றாள் விந்தியா கோபமாக!

“கனவா?”

“அதுவே தெரியலயா? நான் தூங்கப் போறேன். திரும்பியும் அலறினீங்க தண்ணிய தெளிக்க மாட்டேன்... மொத்தமா ஜக்கோட ஊத்திடுவேன்” என்று சொல்லிவிட்டு போர்வையை முகத்தில் போட்டுக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

ஆதித்தியாவால் அதை கனவு என்று நம்பமுடியவில்லை. உறக்கமின்றி எழுந்து நடந்தவனின் கால்களில் ஏதோ தட்டுப்பட அவன் அதைக் கைகளில் எடுத்துப் பார்த்தான். அது வேறொன்றுமில்லை. ‘ட்ரூத்’ மேகஸின்.

விந்தியா அவன் அறையில் அதைப் படிக்க வைத்திருந்தாள். காலையில் அதை அவன்தான் பார்த்துவிட்டு தூக்கி விசிறி அடித்தான். அந்த ஞாபகம்தான் கனவாக மாறியிருப்பதை உணர்ந்தான்.

அந்த இதழின் அட்டை படத்தில் அவார்ட்டுடன் கேத்ரீன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த ஆதி கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டவனாய்,

“ஐம் சோ சாரி கேத்ரீன்” என்றான்.

அவன் மூளைச் சூடேற அவனுடைய சிகரெட் பாக்கெட்டை இருளில் தேடினான். அந்த சோபாவின் அருகிலிருந்த மேஜையில் கைகளை வைத்துத் தடவினான்.

அது கிடைக்காமல் போகவே நிமிர்ந்தவன் சோபாவில் படுத்திருத்த விந்தியாவின் மீது தவறி விழுந்து விட விந்தியா “அம்மா” என்று அலறினாள்.

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content