You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Iru Thruvangal - Episode 3

Quote

3

பழைய நினைவு

விந்தியா.

பயணக் களைப்பில் அவள் விழிகள் கருமை அடர்ந்திருக்க, கூந்தல் கலைந்தபடி, நிறம் மங்கியபடி இருந்த போதும் அவள் பார்க்க அழகாகவே இருந்தாள். பார்ப்பவர்கள் தலைதூக்கி பார்க்கும் அளவுக்கு உயரமாய் வளர்ந்திருந்தாள். அதுவே அவளைக் கம்பீரமாய் காண்பித்தது.

டாக்ஸி வீட்டு வாசலில் நின்றது. உடனே அவளுடைய தம்பி வருண் வெளியே வந்து பெட்டிகளை எடுத்துச் சென்றான்.

மூன்று வருடங்களில் தம்பிக்கு மீசை வளர்ந்து கம்பீரமாய் மாறிவிட்டானே!

“நான் தான் ஏர்போர்ட் வரேன்னு சொன்னன்ல! பிடிவாதமா வேண்டாம்னு சொல்லிட்ட. பாரு, இப்போ எவ்வளவு லேட்டாயிடுச்சு” என்று வருண் கேட்க...

“ஆமாம்… நீ வந்தா மட்டும்... லேட்டான ஃபிளைட்டை டைமுக்குக் கொண்டுவந்து இறக்கிடுவானா என்ன? போடா பெரிய மனுஷா!” என்று விந்தியா தம்பியிடம் அன்பு கலந்த அதிகாரத்தோடு உரைத்தாள்.

இப்படிச் சொல்லி விட்டு விந்தியா உள்ளே நுழைய, அவளின் தாய் மாதவி அவளைக் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்.

“சாரிம்மா... ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேனோ?” என்று விந்தியா பரிவோடு கேட்க,

“மூன்று வருடத்தையே கடந்து விட்டேன். இந்த இரண்டு மூன்று மணி நேரத்தில் என்னவாகிடப் போகிறது?” என்று சொல்லி மாதவி தன் மனதிலுள்ள துயரை வெளிப்படுத்தினாள்.

“அக்கா...” என்று வனிதா அவள் தோள்களைப் பற்றிக் கொண்டாள்.

“என் ஒல்லிக்குச்சி தங்கச்சி வனிதாவா இது?”என்று தங்கையின் தோற்றத்தை கண்டு ஆச்சரியமுற்றாள்.

“பாரும்மா… அக்கா என்னைக் கேலி செய்றா”

“இப்ப நம்பிட்டேன்… நீ அதே வனிதாவேதான். கல்யாணமாகி ஒரு குழந்தையும் இருக்கு... இன்னுமும் நீ மாறவேயில்லை... அம்மாக்கிட்ட கம்பிளைன்ட் பண்ணிட்டிருக்க…”

“போங்கக்கா...” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் வனிதா.

“என் செல்ல தங்கச்சி ... இப்பதான் நீ ரொம்ப அழகா இருக்கே...” என்று சொல்லி விந்தியா அவள் கன்னத்தைத் தடவி முத்தமிட்டாள்.

“சரி எங்கடி உன் வாலு பொண்ணு சிந்து?”

“தூங்கிட்டிருக்கா...”

“சரி வனிதா... வீட்டில் அத்தை மாமா சௌக்கியமா?” என்று விந்தியா ஆவலாய் விசாரிக்க, வனிதாவின் முகம் வாட்டமுற்றது. அவள் பதில் சொல்வதற்கு முன் மாதவி விந்தியாவை அறைக்குச் சென்று படுத்துறங்கச் சொல்லி பணித்தாள்.

அவள் அறைக்குள் ஏற்கனவே பெட்டிகள் ஓரமாய் வைக்கப்பட்டிருந்தன.

அம்மாவுக்காக சொந்தவீடு கட்டும் கனவு கடைசியில் மெய்யானது. இருந்தும் அந்த வீட்டின் கிரஹப்பிரவேசத்தில் கூட பங்கு கொள்ள முடியாத துர்பாக்கியவதி நான் என்று யோசித்தபடி அந்த அறையின் சுவற்றைத் தடவியபடி வேதனையுற்றாள்.

அவளுடைய படுக்கையில் சாய்ந்தவுடன் உறக்கத்தைத் தாண்டி பழைய நினைவுகளே அவளைச் சுற்றி வந்தன. கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் தந்தையின் மரணம். கனவுகளைத் தொலைத்துவிட்டு கடமைகளைத் தூக்கி சுமந்தாள். பள்ளிப் படிப்பை முடிக்காத தங்கை, தம்பிக்காக பணத்தின் பின்னே ஓடினாள்.

தங்கையின் திருமணம், தம்பியின் பொறியியல் கனவு, சொந்த வீடு என முடிந்தவரை கடமைகளை நிறைவேற்றிய பின்னும், ‘இனி என்ன?’ என்ற கேள்வி அவளை உறங்கவிடாமல் செய்தது. மனம் விழித்துக் கொண்டிருக்க அவளின் உடல் மட்டும் ஓய்வெடுத்தது.

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content