You don't have javascript enabled
Monisha NovelsRomance

En iniya pynthamizhe- 9

9

ஊரின் எல்லையிலிருந்த கருப்பன் கோவிலை கடந்துதான் விவசாய நிலங்களும் தோப்புகளும் அமைந்திருந்தன. பசுமையான அந்த வயல்வெளிகளுக்கு இடையில்தான் சந்திரனின் வீடு இருந்தது.

எல்லோருடைய வீடும் ஊருக்குள் இருந்த போதும் அவன் மட்டும் தனியாக தன் அம்மத்தாவின் நிலத்திலேயே சிறியதாக ஒரு வீட்டை அமைத்து தங்கி கொண்டான்.

முந்தைய வருடம் வரை சிறிய ஒலை கொட்டாவை போலதான் அவன் வீடு இருந்தது. நான்கு மாதம் முன்பு பெரு மழை பெய்ததால் தண்ணீர் புகுந்து வீடு முழுவதுமாக நாசமாகிவிட்ட நிலையில் தற்சமயம்தான் மேற்கூரை அமைத்தது கல் வீடாக கட்டியிருந்தான்.

அவன் மட்டுமே வசிக்கும் காரணத்தால் ஒரே ஒரு அறையும் பின்புறம் அவனுடைய செல்ல காளையனுக்கு ஒரு சிறு கொட்டகையும் அமைத்திருந்தான். வெளியே கைசாளையில் சமைக்க சில சட்டி பானைகளும் ஒரு விறகடுப்பும் அவன் தேவைகளை தீர்த்து வைக்க போதுமானதாக இருந்தது.

வீட்டின் முன்பாகவே பம்ப் செட்டும், தண்ணீர் தேங்கிய நிலங்களும், சுற்றிலும் பசுமையான புல்வெளிகளும், முன்புறம் உயரமாக வளர்த்திருக்கும் வேப்ப மரமும் அதில் வட்டமிடும் பறவை கூடுகளும்  என இயற்கையின் எழில் கொஞ்சும் சௌந்தரியம்தான் அவனின் வாழ்விடம்!

தன் அம்மத்தா இல்லாத ஒரு குறையை தவிர அவனுக்கு வேறெந்த குறையும் அங்கு இல்லை.

அங்கே அவன் மட்டும் தனியாக இருந்த போதும் அவனை தனிமை ஒரு நாளும் பீடித்து கொண்டதில்லை. அவன் வளர்த்து வரும் கோழிகளும் அதன் குஞ்சுகளும் கயோ முயோ என சத்தமிட்டு கொண்டு அவனை சுற்றி வந்து கொண்டிருக்கும். போதாக் குறைக்கு காளையன் எப்போதும் தானிருக்கிறேன் என்று நினைவுப்படுத்தி அவனுக்கு குரல் கொடுத்து கொண்டே இருப்பேன்.

அதற்கும் மேலாக வயலில் உழைப்பதும் ஊருக்குள் யாருக்கு என்ன வேலை என்றாலும் அவன் முதல் ஆளாக ஓடிச் சென்று செய்து கொடுப்பதும் என அந்த ஓட்டத்தில் அவனை தனிமை பெரிதாக பாதிப்பதில்லை.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக அவன் வீட்டில் எப்போதும் சிலுசிலுவென குளிர்ந்த காற்று நிறைத்திருப்பதில் திண்ணையில் படுத்து கண்ணயர்ந்தால் சுவர்க்கமாக அவனை உறக்கம் வந்து தழுவி கொள்ளும்.

எப்போதெல்லாம் உடல் களைத்துவிடுகிறதோ அப்போதெல்லாம் நிம்மதியாக படுத்து ஒரு தூக்கத்தை போட்டுவிடுவான்.  

உச்சி வானை சூரியன் தொடும் சமயத்தில் கூட காற்றின் குளுமை குறையாது. ஆனால் அன்று மதியம் ஏனோ அவனுக்கு உஷ்ணமாக தகித்து கொண்டிருந்தது. மனமும் உடலும் ரொம்பவும் சோர்ந்து போனது போன்ற உணர்வு!

திண்ணையில் படுத்து உறங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்து பார்த்துவிட்டு பின் வீட்டிற்குள் எழுந்து வந்து அமர்ந்து கொண்டான்.  

அவன் மனம் ஏன் அப்படி தவிக்கிறது என்று அவனுக்கு தெரியாமல் இல்லை. பரிமளம் சித்தி தமிழின் திருமணத்தை பற்றி பேசியதிலிருந்து அவன் உள்ளத்தில் உண்டான தவிப்பு அது!

“அவ எவனையோ கண்ணாலம் பண்ணிக்கிட்டு போனா எனக்கென்ன வந்துச்சு…. போய் தொலையட்டும்” என்றவன் வாய்தான் புலம்பி தீர்த்ததே ஒழிய, மனது அவளை எண்ணி தவிப்பிலாழ்ந்தது.

அவளை நேருக்கு நேராக பார்த்த போது கண்கள் கோபத்தை காட்டினாலும் முதிர்ந்து வளர்ந்திருந்த அவளின் பெண்மையில் அவன்  மனம் அலைபாய்ந்தது அவன் மட்டுமே அறிந்த உண்மையல்லவா?

ஊருக்குள் எத்தனையோ பருவ பெண்களின் அழகை பார்த்து ரசிக்கறான். ஆனால் இவளை பார்க்கும் போது மட்டும் இனம் புரியாத ஏதோ ஒரு நெருக்கம் அவனுக்குள் ஊற்றெடுக்க செய்வதன் காரணம்தான் அவனுக்கு புரியவில்லை.

இருப்பினும் அவள் மீது அவன் வளர்த்து வைத்திருக்கும் வெறுப்பு என்ற பிம்பத்தில் அந்த உணர்வுகளை இந்த சில வருடங்களாக ஆழமாக புதைத்துவிட்டிருந்தான். ஆனால் இன்று ஏனோ அப்படி முடியவில்லை.

யாரோ முகம் தெரியாத ஒருவனுக்கு அவள் சொந்தமாக போகிறாள். அவள் விரும்பியது போல நன்கு படித்த ஒழுக்கமான மாப்பிளை அமைய போகிறான். இந்த எண்ணமெல்லாம் உள்ளுர அவனை ஏதோ செய்தது.

உனக்கு அந்த தகுதியில்லை என்று அவள் சொல்லாமல் சொல்வது போல!

‘’எனக்கு எதுக்கு டென்சனாவுது… அவ எப்படியோ போறா… எனக்குதான் அவளை பிடிக்காது இல்ல… நான்தான் அவளை மறந்துட்டேனே… என் மனசுல இருந்து அவளை தூக்கி தூர போட்டேனே!’ என்று அவனாக ஏதேதோ சமாதானம் சொல்லி கொள்ள பார்க்கிறான். ஆனால் அவன் மனதின் வேட்கை அடங்கவில்லை.

அவளை மறந்துவிட முடியுமென்று தோன்றவில்லை. எப்படி மறக்க முடியும்? தினம் தினம் கண்ணாடி பார்க்கும் போதும் குளிக்கும் போதும் அவள் நெஞ்சில் ஒட்டி கொண்டிருக்கும் அவள் பெயர் அவளின் நினைவுகளை தூண்டிவிடுகிறது.

வெறுப்பாகவோ விருப்பமாகவோ? அவன் அவளைதான் இந்த மூன்று வருடமாக நினைத்து கொண்டிருந்தான். சட்டென்று அவளையும் அவள் நினைப்பையும் தூக்கி போட்டுவிட முடியுமா?

எதிரே மாட்டியிருந்த தன் அம்மத்தாவின் போட்டோவை பார்த்த நொடி, “அப்படி பார்க்காதே அம்மத்தா? சத்தியமா நான் ஒன்னும் அந்த திமிரு பிடிச்சவளுக்காக  ஏங்கல… அவன் உன்னைய என்ன வார்த்தை சொல்லி போட்ட… என்னால அதெல்லாம் மறக்க முடியுமா என்ன?” என்று அவன் ஜம்பமாக பேசிய போதும் அவன் உள்ளத்தவிப்பை அவனால் மறுக்கவும் முடியவில்லை.

“முடியல அம்மத்தா… என்னவோ ஒரு மாதிரி உள்ளர பண்ணுது” என்று சொன்ன போது அவன் கண்களின் நீர் தளும்ப,

“அண்ணே!” என்று அவன் வீட்டு வாசலில் கேட்ட அழைப்பில் சுதாரித்து கொண்டு தன் கண்ணீரை உடனடியாக துடைத்து கொண்டான்.

எழுந்து வெளியே வந்தவன், “வாடா கண்ணா… உள்ளர வா” என்று அழைக்க,

“இல்லிங்க ண்ணா! மது சித்தா உங்களை கையோடு அழைச்சு போட்டு வர சொன்னவுங்க”

“எதுக்காம்?” என்றவன் விளங்காமல் கேட்க,

“அவங்க வீட்டுல விசேஷமா? பின்னாடி தோட்டத்தில மரமெல்லாம் கண்ட மேனிக்கு வளர்ந்து கிடக்கான்… அதான் மரத்தை எல்லாம் கழிச்சு போட்டு கொஞ்சம் இடத்தை காலி பண்ணனுமா… அதான்”?” என்றவன் சொல்ல, அவனுக்கு எரியும் நெருப்பில் எண்ணையை வார்த்தது போலிருந்தது.

“அதெல்லாம் என்னால வர முடியாது… நீ வேற யாரையாச்சும் கூட்டிகிட்டு போ” என்று மறுத்துவிட்டான்.

“என்னங்க ண்ணே! எங்கன என்ன வேலைன்னாலும் என்னைய கூப்பிடுன்னு நீங்கதானே ண்ணே சொல்லுவீங்க… அதுவுமில்லாம மது சித்தா நீங்க வந்தாதான் சரியா செய்வீங்கன்னு சொன்னவுங்க வேற” என்றவன் எடுத்துரைக்க,

“ஆமா சொன்னேன்… ஆனா இப்போ வர முடியாது… கிளம்பு” என்று அவன் கடுகடுக்க எதிரே நின்றவன் முகம் சிறுத்து போனது.

“சரிங்க ண்ணே… நான் சித்தாகிட்ட சொல்லிடுறேன்” என்றவன் திரும்பி செல்ல, அப்போது அவன் உள்ளம் குறுகுறுத்தது.

 ‘நான் ஏன் அந்த திமிரு பிடிச்சவளுக்காக எனக்கு வர வருமானத்தை வுடோனோம்… அவ எவனையோ கட்டிக்கிட்டு எக்கேடு கெட்டோ போகட்டும்’ என்று தனக்கு தானே சொல்லி தெளிவுபெற்றவன்,

“கண்ணா… இரு நான் வரேன்” என்று அவனை மீண்டும் அழைத்து வருவதாக சொல்லி வீட்டை பூட்டிவிட்டு கிளம்பினான்.

மதுசூதனனை சந்தித்தவன் வீட்டின் புறவாசலில் சூழ்ந்திருந்த மரங்களை பார்க்க, “மாடி வீடா கட்டியிருந்தலாவது மேலே உட்கார வைக்கலாம்… வூட்டுக்குள்ளார எல்லோரையும் உட்கார வைச்சு சாப்பாடு போட முடியாதுல… அதான் இந்த மரத்தையெல்லாம் வெட்டி போட்டா கொஞ்சம் இடம் ஆண்டு வருமாக்கும்” என்றவர் சொன்னதை கேட்டு அவற்றை பார்வையிட்டவன்,

“ரொம்ப வருசத்து மரமாட்டும் இருக்குங்களே? வெட்ட வேணாமுங்க… பேசாம கழிச்சு வேணா போடலாம்ங்க ஐயா” என்றான்.

“விருந்தாளிங்க ரொம்ப பேர் வந்தா சிரமாமகிடுமேன்னு பார்க்கேன்”

“அதெல்லாம் ஆகாதுங்க… இதோ இம்புட்டு இடம் இருக்கு இல்ல… கூடவே அந்த மரத்தில முன்ன நீட்டிட்டு கிடக்க கிளையெல்லாம் வெட்டி போட்டா பந்தலை அதுலயே கட்டிடலாம்லாங்க” என்றவன் சொல்ல அவர் ஏற்கவில்லை.

“இல்ல சந்திரா! அது சரியா வராது… வெட்டி போடு”

“வெட்ட ரொம்ப நேரமாகுதுங்க… ஆனா இந்த மரம் இங்கன வளர எம்புட்டு வருசம் ஆயிருக்கும்ங்க… வெட்டி போட்டா அப்புறம் இப்படி ஒரு மரம் வளர திரும்பவும் எம்புட்டு வருஷம் ஆகுமோ?” என்றவன் குரலை தாழ்த்தி, “செத்த யோசிச்சு பண்ணலாம்ங்க ஐயா!” என்றவன் சொன்னதை கேட்டு மதுசூதனன் வியக்கலானார். இந்த வயதில் இப்படியெல்லாம் கூட யோசிப்பார்களா?!

அதுவும் இந்தளவு முதிர்ச்சி அவனுக்கு எப்படி வந்திருக்கும் என்று அவன் பேச்சு அவரை அதிசயிக்கவும் வைத்தது.  

அதுவும் சந்திரன் தன் நிலத்திலும் பயிரிட்டு கொண்டு கிடைக்கும் ஓய்வு நேரத்திலும் ஊருக்குள் யாருக்கு எந்த வேலையானாலும் செய்து கொடுத்து அதற்கும் கூலி வாங்கி கொள்கிறான். இந்த காலத்தில் இப்படி கடினமாக உழைப்பவனை பார்ப்பது கடினம்.

அதற்கும் மேலாக அவன் அந்த மரத்தை வெட்ட வேண்டாமென்று சொன்ன காரணத்தில் அவருக்கு  முன்பை விடவும் அவன் மீதான மதிப்பு அதிகரிக்கலானது.

அந்த நொடி அவர் அந்த மரத்தை பார்த்தார். அவன் தாத்தா காலத்து மரம் அது. அதன் பரந்த பிரமாண்டமான அடிதண்டுகளை பார்த்த பிறகு அவருக்கே என்னவோ அவன் சொன்னது சரியென்று தோன்றியது. வெட்டி விட்டால் திரும்ப வருமா?

சில நொடிகள் யோசித்த பின், “சரி சந்திரா… நீ சொன்னது போலவே கழிச்சு போடு” என்றவர்,

“இரு சந்திரா… நான் அருவா கொடுத்தனுப்புறேன்” என்று அவர் உள்ளே செல்ல அவன் அந்த மரத்தை தொட்டு பார்த்தபடி  நின்றிருந்தான். அப்போது அவனுக்கு தன் அம்மத்தாவின் நினைவுதான் வந்தது.

வீட்டிலிருக்கும் மரத்தை வெட்டுவது என்ற பேச்சை எடுத்தாலே அவருக்கு அந்தளவு கோபம் வரும்.

“மரமெல்லாம் சாமி மாதிரி கண்ணு… அதெல்லாம் வெட்ட பிடாது” என்றவர் சொல்ல,

“ஒரு மரத்துக்கு போய் இம்புட்டு அளப்பறையா?” என்று அவன் தன் அம்மத்தாவை கேலி செய்வான். ஆனால் எப்போது அவன் விவசாயத்தில் முழு மூச்சாக இறங்கினானோ அன்றிலிருந்து அவனுக்கு தன் அம்மத்தாவின் வாரத்தைகள் ஒவ்வொன்றும் தெய்வ வாக்காகவே தெரிந்தது.

இவ்வாறாக அவன் யோசித்தபடி நின்றிருக்கும் போது  தோட்டத்திலிருந்து ஒரு பெண்ணின் விசும்பல் சத்தம் அவன் கவனத்தை ஈர்த்தது. அவன் மெல்ல உள்ளே சென்று பார்க்க அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்தபடி தமிழ் முகத்தை மூடி அழுது கொண்டிருந்தாள்.

‘எதுக்கு இவ இப்படி அழுதுட்டு கிடக்குறா?’ என்றவன் புரியாமல் யோசிக்க, அவளோ அவன் வந்து நின்றதை கூட கவனிக்காமல் அழதபடியே இருந்தாள்.

“ஏன் அழுவுறான்னு கேட்போமா?” என்று அவன் உள்மனம் சொன்னாலும்,

“நல்லா அழவுட்டுமே… இவளாலதானே நம்ம அம்மத்தா நம்மல வுட்டுட்டு போச்சு” என்று இன்னொரு மனம் அவள் மீதான வஞ்சத்தை நினைவுப்படுத்தி கொண்டது.

அவள் என்ன செய்தால் நமக்கென்ன என்று அவன் திரும்பி நடக்கும் போது அரசன் அரிவாளோடு அங்கே வந்து நிற்க, அந்த சத்தத்தில் துணுக்குற்று தமிழ் தலையை நிமிர்த்தி பார்த்தாள்.

அங்கே சந்திரனை பார்த்து அவள் அதிர்ச்சியான அதேநேரம் அரசன் தன் தமக்கை அழுது கொண்டிருப்பதை பார்த்து பதட்டமாகி, “அக்கா என்னங்க க்கா? இந்த ஆளு எதாச்சும் பண்ணானா?” என்று அரசன் சீற்றமாகி சந்திரன் மீது தன் கோப பார்வையை வீசினான்.

சிறு வயதில் நடந்த அந்த சம்பவத்தின் தாக்கம் அவன் மனதில் ஆழமாக பதிவாகியிருந்தது. அதோடு சந்திரனை எங்கே கண்டாலும் அவனுக்கு கோபம் பொங்கி கொண்டு வந்தது.

ஆனால் சூழ்நிலை காரணமாக தன் வெறுப்பையும் கோபத்தையும் அவன் கட்டுபடுத்தி கொண்டிருந்தான். இந்த நிலையில் இப்படியொரு காட்சியை பார்த்தவனுக்கு ஏற்கனவே நடந்த அந்த மோசமான சம்பவத்தின் நினைவு வர, மீண்டும் அவன் தமக்கையை ஏதோ செய்துவிட்டான் என்ற சீற்றத்தில் முன்பிருந்த மொத்த வெறுப்பையும் சேர்த்து கொண்டு, “இவனை வெட்டி போடணும் க்கா?” என்று அரிவாளை அவன் ஓங்க போக, தமிழ் அரண்டு போனாள்.

“அரசா!” என்று தமிழ் அவன் கையிலிருந்து அரிவாளை பறித்து கொண்டு, “கிறுக்கு பிடிச்சு போச்சா டா உனக்கு” என்று அவனை கடிந்து கொண்டவள்,

“அவன் எதுவும் பண்ணல? நானாதான் அழுதிட்டு இருந்தேன்” என்றாள்.

“நீங்க பொய் சொல்றீங்க… இவன்தான் ஏதோ செஞ்சிருக்கான்” என்றவன் கோபம் அடங்குவதாக இல்லை.

அவன் அந்த நொடி சந்திரனின் சட்டையை கொத்தாக பிடித்து கொள்ள, “டே விடுடா” என்று தமிழ் தம்பியை விலக்கிவிட்டு

சந்திரனிடம் திரும்ப அவனோ எதற்கும் அசைந்து கொடுக்காமல் தனக்கும் நடக்கும் எந்த சம்பவத்திற்கும் சம்பந்தமில்லை என்பது போல அசட்டையாக நின்றிருந்தான்.

அவனை குழப்பமாக ஏறிட்டு பார்த்து. “ஆமா நீ எங்க இங்க?” என்று வினவ,

“உன்ற அப்பாருதான் மரத்தை வெட்ட கூப்பிட்டு வுட்டாரு” என்க, அரசன் கோபமோ தணியவே இல்லை.

“ஒ!” என்றவள் அரசன் புறம் திரும்பி, “அவன் மரத்தை வெட்ட வந்திருக்கானாம்… நீ வாடா போலாம்” என்று தம்பியை அழைத்துவிட்டு செல்ல எத்தனிக்க, “அருவாவை கொடுத்துட்டு போறது” என்று அவளிடமிருந்த அரிவாளை அவன் தன் கையை நீட்டி கேட்க,

மறந்துவிட்டவளாக உதட்டை கடித்து கொண்டு அதனை அவனிடம் கொடுக்கும் போது அவன் மெல்லிய முனகலோடு, ‘கருவாச்சி’ என்று சொன்னதை கேட்டு அவள் விழிகளை விரித்து, “இப்ப என்ன சொன்ன?” என்று கேட்க,

“உஹும்” என்பது போல் அவன் அலட்சியமாக தோள்களை குலுக்கவும் அவனை முறைத்துவிட்டு அவள் முன்னே சென்றுவிட்டாள்.

பின்னே சென்ற அரசன், “மவனே! இன்னைக்கு இல்லாட்டியும் என்னைக்காச்சும் ஒரு நாள் ஒன்ற கழுத்தை நான் சீவத்தேன் போறேன்” என்று கோபமாக சொல்ல,

அவன் சத்தமாக சிரித்துவிட்டு, “ஏன் இப்பவே சீவேன்?” என்றவன் தன் கையிலிருந்து அரிவாளை அவனிடம் அலட்சியமாக நீட்ட தமிழ் இவர்கள் சம்பாஷனையை கேட்டுவிட்டு பதறி கொண்டு திரும்பி வந்து,

“ஏ அரசா! என்னடா பேச்சு இது? வாயை உடைச்சு போடுவேன்… உள்ளுர போடா” என்று அவனை மிரட்டவும் அவன் சந்திரனை முறைத்து கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவள் அதன் பின் சந்திரனிடம் திரும்பி, “உனக்கு அறிவே இல்லையா? அவன்தான் வெட்டுவேன்னு சொல்றான்னா சின்ன பையன்கிட்ட போய் அரிவாளை நீட்டுற” என்றவள் கடுப்பாக,

“என்னைய வெட்டிடுவானாக்கும்” என்று அவன் பதிலுக்கு அவளிடம் எகத்தாளமாக கேட்டான்.

“சத்தியமா வெட்டி புடுவான்… நீ அன்னைக்கு செஞ்சதுக்கு இன்னமும் உன் மேல அம்புட்டு கோபத்துல இருக்கான்” என்றவள் சொன்னதில்,

“ஒருத்தனை வெட்டி கொல்ல அருவாத்தான் வேணுமா என்ன? ஒத்த சொல்லு போதாதா?” என்றவன் சொல்லி அவளை பார்த்த பார்வையில் அவள் உள்ளம் நடுங்கியது.

அவன் அதோடு நிறுத்தாமல், “நான் உனக்கு செஞ்சதுக்கு… பத்து மடங்கா நீ எனக்கு திருப்பி செஞ்சு போட்டியே… புறவு என்ன?” என்று அவன் சாதாரணமாக கேட்டுவிட்டு தன் வேலையை பார்க்க சென்றுவிட்டான்.

ஆனால் அந்த வார்த்தை அவளை அழுத்தமாக காயப்படுத்தியது.

to comment, please click here

************

குறிப்பு – 8

செடி வளர்க்கும் காலமுறை

n

செடியின் தன்மை காலத்திற்கு ஏற்ப வளரும் காலமும் மாறுபடும். கீரை 20 முதல் 25 நாட்களில் நன்றாக வளர்ந்துவிடும். அதை பயிர் செய்து, அடுத்த விளைச்சல் போடலாம். தக்காளி, கத்தரிக்காய் ஆகியவை வளரவே மூன்று மாதங்களாகும். அதன் பிறகு மூன்று மாத காலம் விளைச்சல் இருக்கும். வெண்டைக்காய், பாகற்காய், முள்ளங்கி, கேரட், பீட்ரூட் எல்லாம் 45 நாட்களில் விளைச்சல் தரும். தக்காளி, கேரட், முள்ளங்கி, பீட்ரூட் போன்றவற்றை தட்பவெட்ப காலத்திற்கு ஏற்ப விளைவிக்கலாம்.

கீரை, வெண்டைக்காய், அவரைக்காய், பாகற்காய் போன்ற காய்களே உகந்தது. வருடம் முழுதும் விளையும் காய் வெண்டைக்காய். தக்காளி, கத்தரிக்காய் போன்றவற்றை மே மாதம் பயிர் செய்தால் ஜூலையில் விளைச்சலைக் காணலாம்.

செடிகளை மொட்டை மாடியில் பயிர் செய்யும்போது நெட் கூரை அமைப்பது நல்லது.  அமைக்காவிட்டாலும் பந்தல் போட்டு கொடிகளை படரவிடலாம்.

 அதிக வெயில் காரணமாக செடிகள் வாடிப் போகும் வாய்ப்புண்டு.  அக்காலங்களில் விதைக. விதைப்பதை தவிர்க்கலாம்.

பாகற்காய், அவரைக்காய் போன்றவற்றுக்கு பந்தல் அமைக்கலாம். எல்லாவற்றையும் விட அந்தந்த ஊரின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப காய்கறிகளை வளர்ப்பதே நல்லது.

மழைக்காலம் வருவதற்கு ஒரு மாதம் முன்பே செடி வளர்ந்துவிட்டால், மழையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இன்னொரு விஷயம். மாடியில் அல்லது பால்கனியில் தோட்டம் அமைக்க நினைத்தால், எல்லா காய்களையும் ஒரேடியாக போட்டு பயிர் செய்ய வேண்டாம். முதலில் கீரை, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சின்ன தொட்டியில் வைத்து பயிர் செய்யலாம். இவை எல்லா காலத்திலும் விளையும். அடுத்து வெண்டைக்காய். பிறகு தக்காளி, கத்தரிக்காய் என ஒன்வொன்றாக பயிர் செய்வதே நல்லது. அடுக்குமாடியில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டு பால்கனியிலேயே தக்காளி, பச்சை மிளகாய், கீரை வகைகளை பயிர் செய்யலாம். அல்லது குடியிருப்பில் உள்ளவர்கள் ஒன்றாக இணைந்து பெரிய அளவில் பயிர் செய்யலாம்…

to comment, please click here

One thought on “En iniya pynthamizhe- 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content