You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

Iru Thruvangal - Episode 22

22

கருணை பிறந்தது

கேத்ரீனின் லாக்கரின் ரகசிய எண் பற்றிப் பலரிடம் விசாரித்தும் பயன் அளிக்கவில்லை. கேத்ரீனின் உறவினர்கள் மும்பையில் உள்ள அவளின் நெருங்கிய தோழி மகிளாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறினர். அதன் காரணமாகச் சிவாவும், வேணுவும் மும்பையில் உள்ள மகிளாவை தொடர்பு கொண்டனர்.

அவளே தனிப்பட்ட முறையில் சில தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறாள். அதன் சார்பாக உதவி பெற டெல்லி வரை சென்றிருப்பதாகத் தெரியவந்தது. கேத்ரீனின் நட்பு வட்டாரம் ரொம்பவும் குறுகலானது. அப்படிப்பட்ட சிலரை கண்டுபிடிக்க அவளுடன் கல்லூரியில் படித்தவர்களின் பட்டியலை பெறுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டனர். இந்தக் கேஸ் அவர்களை மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே கொண்டு சேர்த்தது.

விந்தியா உடல் சோர்வினாலும், காலில் ஏற்பட்ட காயத்தினாலும் விடிந்து வெகு நேரம் கழித்தே விழித்துக் கொண்டாள். இரவு நடந்தவை எல்லாம் கனவு போல தோன்றியது. நடந்தவற்றை நினைவுப்படுத்திக் கொண்டபடி மெல்ல எழுந்து கொண்டாள்.

அவள் காலில் ஏற்பட்டிருந்த வலி கிட்டத்தட்ட மாயமாய் மறைந்து போயிருந்தது. அவள் படிக்கட்டில் இறங்க போனதும் சண்முகம் பதறிக் கொண்டு ஓடி வந்து அவளை ஓய்வு எடுக்கச் சொன்னான்.

சந்திரகாந்தும் அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என கண்டிப்பாய் சொல்லிவிட்டு கிளம்பியதாகவும், ஆதித்தியாவும் வார்த்தை மாறாமல் அதையே சொல்லிவிட்டு புறப்பட்டாதாகவும் சண்முகம் உரைத்தார்.

விந்தியா தனியே அறையில் தவிர்க்க முடியாத சிந்தனைகளோடு அமர்ந்திருக்கக் கதவை தட்டிக் கொண்டு சுபா உள்ளே வந்தாள். விந்தியாவிற்கு உதவியாக இருக்கும்படி சந்திரகாந்த் தெரிவித்ததாகச் சொன்னாள்.

 சுபா வந்தது விந்தியாவிற்கும் நல்ல துணையாய் அமைந்தது. அவர்கள் இருவரும் ஏதெதோ பேசிக் கொண்டிருக்க விந்தியா ஆதித்தியாவை பற்றி அவள் மனதில் எழுந்த சந்தேகத்தைக் கேட்டாள்.

“ஏன் சுபா... மாமாவுக்கும் ஆதிக்கும் அப்படி என்னதான் பிரச்சனை?” என்று விந்தியா தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டாள்.

“அண்ணன் இப்படி எல்லாம் நடந்துக்க அங்கிளும் ஒரு காரணம்“ என்றாள் சுபா.

“என்ன சொல்ற சுபா?”

“அண்ணனுக்கு ஐந்து வயசு இருக்கும் போதே அம்மாவை பறிகொடுத்துட்டாரு. அப்போதிலிருந்தே அங்கிளுக்கு எல்லாவற்றிலும் இருந்த பிடிப்பும் விட்டுபோச்சு... அண்ணன் உட்பட.

அம்மாவை இழந்து அப்பாவோட கவனிப்பும் இல்லாம வளர்ந்துட்டாரு. அண்ணன் இப்படி பொறுப்பில்லாதவராய் அவரே தன்னை மாத்திகிட்டாருனு சொன்னா நம்புவீங்களா? அங்கிள் பேரன்ட்ஸ் மீட்டிங்னு கூப்பிட்டா கூட போகமாட்டாரு.

ஆனா அண்ணன் ஏதோ தப்பு செஞ்சிட்டாருனு சொன்னதும் அங்கிள் பதறிட்டு போய் நின்னாராம்... தான் தப்பு செய்தா மட்டும்தான் தன்னோட அப்பாவோட கவனம் நம்மீது இருக்கும்னு அண்ணன் இஷ்டத்துக்கு வேண்டுமென்றே தப்பு செய்வாராம்.

 கடைசியில் அதுவே அவரோட குணம்னு எல்லோருமே நம்பிட்டாங்க... அங்கிள் தன் தப்பை உணரும் போது அண்ணன் அவரை விட்டு ரொம்ப விலகி போயிருந்தார்” என்று சுபா ஆதியின் வரலாற்றையே சொல்லி முடித்தாள்.

“எனக்கு ஒரு விஷயம் புரியல... அன்னைக்கும் சரி... இன்னைக்குப் பேசும் போதும் சரி... நீ ஆதித்தியாவை விட்டுக் கொடுக்காம பேசுற... அப்பாவே புரிஞ்சுக்க முடியாத ஒருவரை உன்னால எப்படி இந்தளவுக்குப் புரிஞ்சுக்க முடியுது”

“என் வாழ்கையில் நடந்த ஒரு விஷயம்... இதுவரைக்கும் என் கணவரிடமும் என் அப்பா, அம்மாவிடம் கூடச் சொன்னதில்லை... முதல் முறையாய் உங்கக்கிட்ட சொல்லணும்னு தோணுது” என்றாள்.

சுபா இத்தனை பீடிகை போடுமளவிற்கு அப்படி என்ன சொல்லப் போகிறாள் என்று உற்று கவனித்துக் கொண்டிருந்தாள்.

“நானும் அண்ணனை... அங்கிளும் அப்பாவும் சொல்வது போலதான் நம்பிட்டிருந்தேன். நான் காலேஜில் ஒரு பையனை சின்ஸியரா லவ் பண்ணினேன்.

அவன் கூட நான் இருப்பதைப் பாத்துட்டு அண்ணன் என்னைப் பலமுறை அவன் தப்பானவன்னு புரிய வைக்க முயற்சி செய்தாரு... ஆனா நான் அதைக் காதிலேயே வாங்கல... வயசுக் கோளாறு...

 என் நேரம் நல்லாருந்துச்சு... நானே அவனைப் பத்தி புரிஞ்சு விலகி போன போது அவன் என்னைத் துரத்தி துரத்தி டார்ச்சர் செய்தான்.

 கடைசியில் அண்ணன்தான் எனக்கு உதவினாரு... இத பத்தி அம்மா அப்பாகிட்ட மூச்சு விடக்கூடாதுனு சொல்லிட்டாரு... அதனால்தான் யாருக்குமே இந்த விஷயம் இப்ப வரைக்கும் நான் சொன்னதில்லை” என்றாள் சுபா.

ஆதித்தியாவை பற்றி கேட்கக்கேட்க அவனின் மீதான வெறுப்பு மறைந்து போனது. அவன் மீது காதல் பிறந்ததோ தெரியாது... ஆனால் விந்தியாவிற்கு அவன் மீது கருணை உருவானது.

நாளடைவில் விந்தியா ஆதியிடம் பழகும் விதம் வேறுவிதமாய் மாறியிருந்தது. விந்தியா வெறுப்பைக் காட்டும் போதே அவளிடம் நாடிய அவன் மனம், இப்பொழுது அவளைத் தன் வசப்படுத்திக் கொள்ளத் தவித்தது. இருந்தும் அவளை நெருங்க அவனுக்குக் கொஞ்சம் தயக்கமும் இருந்தது.

அவள் மனதை முழுதாய் தெரிந்து கொள்ள அவனுடைய நெருங்கிய தோழி லீனாவின் பர்த்டே பார்ட்டிக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தான்.

 அங்கே அவன் பெண்களிடம் பழகும் விதம், அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தினால் அது விந்தியாவிற்குத் தன் மீது ஈர்ப்பு இருப்பதைப் புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும் என்று ஆதித்தியா ஒரு கணக்கு போட்டான்.

அதற்காக விந்தியாவையும் பிரயத்தனப்பட்டுச் சம்மதிக்க வைத்து அழைத்துச் சென்றான். அவள் ஒரு வெள்ளை நிற டாப்ஸும் ஜீன்ஸும் அணிந்து கொண்டு தோள் மீது சரிந்த முடியை விலக்கி விட்டபடி காரில் ஏறினாள்.

“என்ன ஆதி... எப்பவும் நீங்கதான் டிரைவ் பண்ணுவீங்க... எதுக்கு டீரைவர்?” என்றாள்.

“பார்ட்டிக்கு போறோம்... கொஞ்சமா டிரிங்க்ஸ் சாப்பிட்டால்?” என்று அவன் சொன்னவுடன் விந்தியா அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாக, “என்ன... டிரிங்ஸ் பண்ணக் கூடாதா?” என்றான்.

ஆனால் விந்தியா எந்தப் பதிலும் சொல்லாமல் மெளனமாக இருந்தாள். அவள் ஏதாவது சொல்லுவாளா என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சமாயிருந்தது. அவள் அவனின் புரிதலுக்கு அப்பாற்பட்டவளாய் இருந்தாள்.

பார்ட்டி ஹாலே இருள் சூழ்ந்தபடி இருக்க வெளிச்சம் மட்டும் வண்ணமயமாய் மின்னிக் கொண்டிருந்தது. லீனா நடுமட்டத்தில் நின்று கொண்டிருக்க எல்லோரும் அவளைத் தேடி வந்து வாழ்த்தினர்.

 சமுத்திரனும் அங்கே வந்திருந்தான். ஆனால் இம்முறை வேறொரு நண்பனோடு வந்திருந்தான். அந்த நண்பன் நேரடியாக வந்து லீனாவை கட்டியணைத்து வாழ்த்திவிட்டு, “கம்மான்... எல்லோருமே வந்தாச்சு... லெட்ஸ் என்ஜாய் தி பார்ட்டி“ என்றான்.

“வெயிட் மனோஜ்... ஆதி இஸ் ஆன் தி வே... லெட் ஹிம் கம்” என்றாள்.

அவனின் முகம் கடுகடுவென மாறியது. அங்கிருந்து நகர்ந்து கையில் ஒரு கிளாஸை எடுத்து அதிலிருந்த டிரிங்க்ஸை மடமடவென குடித்தபடி அமர்ந்து கொண்டான். அவனின் மனநிலையைப் புரிந்த சமுத்திரன் அவன் தோள்களில் தட்டினான்.

“அப்படியே எரிச்சலாய் இருக்கு... வந்து காத்திட்டிருக்கவன் எல்லாம் மனுஷனா தெரியலையா அவளுக்கு”

“விடு மனோஜ்!”

“நான் எதுக்கு விடணும்... அவன் என் வழியிலேயே குறுக்கிடுறான்... அவன் எல்லாம் எனக்கு ஒரு போட்டியா? என்னோட ஸ்டேட்டஸுக்கும் எங்க அப்பாவோடு பதவிக்கும் அவன் பக்கத்துல நிக்க முடியுமா?” என்று மனோஜ் ஆதியின் மீதான கோபத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தினான்.

“கம்மான் மனோஜ்... ஆதி எப்பவுமே உன்கிட்ட போட்டி போட நினைச்சதில்லை” என்றான் சமுத்திரன்.

“ஆனா பாக்கிற பொண்ணுங்கல்லாம் அவன் பின்னாடியே போகுதே”

“அதுக்கு அவன் காரணமில்லை” என்றான் சமுத்திரன்.

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஆதித்தியா விந்தியாவுடன் பார்ட்டி ஹாலில் நுழைந்ததை மனோஜும், சமுத்திரனும் கவனித்தனர். விந்தியாவின் மீது மனோஜின் பார்வை பதிந்தது.

“யார் அந்த அரேபிய குதிரை?” என்று மனோஜ் முதல் பார்வையிலேயே விந்தியாவின் கம்பீரமான அழகால் கவரப்பட்டவனாய் சமுத்திரனிடம் கேட்டான்.

“வார்த்தைய அளந்து பேசு... அவ ஆதியோட வைஃப்” என்றான் சமுத்திரன்

“கிரேட்... இத்தனை நாளா ஆதியால் எனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு நல்ல பதலடி கொடுக்க இன்னைக்குத்தான் நல்ல சேன்ஸ் கிடைச்சிருக்கு... நான் அந்த வாய்ப்பை மிஸ் பண்ணமாட்டேன்” என்றான் மனோஜ் கண்களில் வெறியோடு

“வேண்டாம் மனோஜ்... நீ ஏதோ தப்பா யோசிக்கிற”

“கரெக்ட்... தப்பாதான் யோசிக்கிறேன். ஆதிக்கு என்னோட வலியை புரிய வைக்கப் போறேன்” என்றான் விந்தியாவைப் பார்த்தபடி.

“மனோஜ்... நீ நினைக்கிற மாதிரியான பொண்ணு அவ இல்லை... ரொம்பவும் திமிரு பிடிச்சவ... பார்க்கிற பார்வையிலேயே எரிச்சிடுவா” என்றான் சமுத்திரன்.

“பெரிய கண்ணகியா... அதையும்தான் நான் பார்க்கிறேனே” என்றான் மனோஜ்.

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content