You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Iru Thruvangal - Episode 7

Quote

7

தோழமை

விந்தியாவை நோக்கி சிவா நடந்து வந்தான். அவன் பார்வை அவள் மீதே பதிந்திருந்தது.

“எப்ப வந்த விந்தியா?” என்று ரொம்பவும் இயல்பாகக் கேட்டான் சிவா.

அவன் திடீரென்று அவள் முன்னாடி வந்து நின்றதினால் கொஞ்சம் திகைப்போடு நின்றிருவந்தவள், சில நொடிகள் கழித்து அவன் கேள்வியைப் புரிந்தவளாய்,

“வியாழக்கிழமை” என்றாள்.

“மூன்று வருடத்தில ஒருமுறை கூட வந்து போக நேரமில்லையா உனக்கு?” என்று சிவா கொஞ்சம் கோபம் கலந்த குரலோடு கேட்டான்.

“வந்து வந்து போகிற செலவை யார் சமாளிக்கிறது?” என்று விந்தியா அவள் நிலைமையைச் சொன்னாள்.

“அப்போ உறவுகளைவிட செலவு பத்திதான் கவலை?” என்று சிவா அவளைக் குத்திக்காட்ட, அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் விந்தியா ஏளனமாய் ஒரு பார்வை பார்த்தாள்.

‘என் கஷ்டம் உனக்கு எப்படி புரியும்?’ என்று அவள் மனதில் நினைக்க அதை உணரந்தவனாக அவனும் புன்னகை புரிந்தான்.

புறப்படுவதாக விந்தியா அவசரப்பட, சிவா அவளைக் கட்டாயபடுத்தி உள்ளே அழைத்துக்கொண்டு வந்தான். சிந்து ஓடி வந்து அப்பாவின் கால்களைக் கட்டிக்கொண்டாள். சிந்துவை தூக்கி கொண்டு ஆசையாய்க் கொஞ்சினான். பிறகு விந்தியாவை நோக்கி,

“விந்து நம்ம இரண்டு பேரும் இன்னைக்கு ஒன்றாகச் சாப்பிடறோம்... ஓகே வா?” என்றான் ஆர்வமாக.

“கிளம்பணும் சிவா” என்று தயங்கினாள்.

“கொன்னுடுவேன்” என்று மிரட்டிவிட்டு உடை மாற்ற அறைக்குள் செல்ல வனிதாவும் பின்னோடு சென்றாள்.

அவன் கழட்டிய தொப்பியை வாங்க முற்பட்டாள். அந்த தொப்பியை மேஜை மீது வைத்து விட்டு வனிதாவின் கையினைப் பிடித்து வெளியே இழுத்து வந்தான்.

“உனக்கும் எனக்கும் என்னடி சம்பந்தம்? உன் இஷ்டத்துக்குப் போற… உன் இஷ்டத்துக்கு வர்ற. என்னைப் பாத்தா எப்படித் தெரியுது உனக்கு?” இப்படி அவன் போட்ட சத்தத்ததில் எல்லோருமே மிரண்டு போயினர்.

தனசேகரனிடம் சிந்துவை தந்து சிவா வெளியே கூட்டிப் போகச் சொன்னான். வனிதா கதறி அழத் தொடங்கினாள்.

“நடிக்காதடி... என் கோபம்தான் அதிகமாகுது”

“தப்புதான் மாமா... ஏதோ புத்தியில்லாம...”

“அதான் உனக்கு இல்லையே... கோபப்பட்டு அம்மா வீட்டுக்கு போயிட்ட. சரி... இரண்டு நாள்... இலைன்னை ஒரு வாரம்... ஓரேடியா என்னைப் பத்தி கவலையில்லாம குழந்தையோட போய் அங்க ஒரு மாசம் தங்கிட்ட”

அவனின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் வனிதா விசும்பினாள்.

விந்தியா கணவன் மனைவி சண்டை என்று நாகரிகத்தோடு பேசாமல் அமைதியாக நின்றாள்.

“நீ பேசாம உங்க அம்மா வீட்டில நிரந்தரமா இருந்திடு” என்றான்.

“வேண்டாம் சிவா... கொஞ்சம் பொறுமையா பேசு” என்றாள் சரோஜா.

“அம்மா... நீங்க சும்மா இருங்க” என்று சரோஜாவையும் அடக்கினான்.

வனிதா ‘அவன் மன்னிப்பானா’ என்பது போல் பரிதாபமாகப் பார்த்தாள். சிவாவின் கோபம் குறையாமல் அது மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போக விந்தியாவின் பொறுமை உடைந்தது.

“சிவா... இதான் உனக்கு லிமிட். அவதான் தப்ப உணர்ந்திட்டா இல்ல... அவள போட்டு டார்ச்சர் பண்ற?”

“நான் டார்ச்சர் பண்றேனா?”

“ஆமாம் நீதான்... என்னதான் இருந்தாலும் இவ்வளவு கோபம் ஆகாது சிவா உனக்கு”

“உங்க தங்கச்சி செய்த காரியத்துக்குக் கொஞ்சுவாங்களாக்கும்…” என்றான் சிவா முறைப்போடு.

இருவரும் நேருக்கு நேராய் நின்று பேசிக் கொண்ட விதமே வனிதாவிற்குப் பயத்தை ஏற்படுத்தியது.

“கொஞ்சங்கூட நாகரீகமே இல்லாம எல்லார் முன்னாடியும் பொண்டாட்டிய திட்டற...”

“முதல்ல நீ உன் தங்கச்சிக்கு நாகரிகத்தைக் கத்துக்கொடு. சின்னச்சின்னப் பிரச்சனைக்கெல்லாம் அம்மா வீட்டுக்குப் போறதுதான் நாகரிகமா?”

“அவ சின்னப் பொண்ணு... புரியாம செஞ்சிட்டா”

“கல்யாணமாகி மூணு வருஷம் முடிஞ்சி போச்சு. அவளுக்கே ஒரு பொண்ணு இருக்கு... மறந்திட்டியா?”

“மறக்கல... ஆனா அவ எனக்கு சின்னப்பொண்ணுதான்...”

“அப்போ சரி... உன் செல்ல தங்கச்சியை நீயே அழைச்சிட்டுப் போய்ச் சீராட்டு” என்று கையெடுத்துக் கும்பிட்டான்.

சரோஜாவுக்கு விந்தியா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் எனக் குழப்பமாய் இருந்தது. அவர்கள் பேச்சு தடுத்து நிறுத்தும் நிலையில் இல்லை.

விந்தியா சிவாவை கோபமாய்ப் பார்த்துக் கொண்டே,

“அவ்வளவுதானே... வா வனிதா” என்றாள்.

இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்தவள் கண்ணீர் உறைந்து போக நின்றாள். வனிதாவின் கைகளைப் பிடித்து விந்தியா இழுத்துச் செல்ல,

“கைய விடுக்கா... நான் தப்புச் செய்தேன்... அவரு என் மேல கோபப்பட்டார்... அதுக்குப் போய் நீ இப்படி நடந்துக்கிறது ஒன்னும் சரியில்ல” என்று கைகளை உதறினாள்.

வனிதாவின் செயல் ஒரு வித நிசப்தத்தை ஏற்படுத்தியது. உடனே விந்தியா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிடவும், சிவாவும் அதே சமயத்தில் சிரித்தான். சரோஜாவுக்கும் வனிதாவுக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர்கள் குழம்ப இவர்கள் விடாமல் சிரித்துக் கொண்டனர். சிவாவின் கண்களில் நீர் துளிர்த்தது.

“அவ வந்திருந்தா கூட்டிட்டே போயிருப்ப… இல்ல?” என்றான் சிவா.

“பின்ன... ஆனா வரமாட்டேன்னு சொல்லிட்டாளே. போயும் போயும் உனக்காக சப்போர்ட் பண்ணி என் கைய உதறிட்டா பாரு... எல்லாம் விதி!” என்றாள் கொஞ்சம் வருத்தமான பாவனையில்.

“என்னடா நடக்குது இங்க?” என்று புரியாமல் கேட்டாள் சரோஜா.

“நான் சொல்றேன் அத்தை... உங்க பிள்ளை என்னைக் கோபப்படுத்திப் பார்க்க வனிதாவை திட்டி இவ்வளவு பெரிய டிராமா பண்ணிருக்கான்…ராஸ்கல்”

“நான் நடிக்கிறேன்னு எப்படிக் கண்டுபிடிச்ச”

“நீ வனிதாவை திட்டுக்கிட்டே என் முகத்தைப் பார்த்தியே... அப்பவே கண்டுபிடிச்சிட்டேன்... உன்னை எனக்குத் தெரியாதாடா?”

“நீ உன் தங்கச்சி கை பிடிச்சு இழுத்துட்டு போகும்போதே நினைச்சேன்டி... நீ என்னைக் கண்டுபிடிச்சிட்டன்னு”

“ரொம்ப நாளைக்குப் பிறகு சண்டை போட்டுக்கிட்டோம்... இல்ல?” என்று இருவரும் சிரித்தபடி பழைய நட்புகாலத்தை நினைவுப்படுத்திக் கொண்டனர்.

இவர்கள் ஒருவரை ஒருவர் கண்டுபிடித்துக் கொண்டதை வேறு யாரும் யூகிக்கக் கூட முடியவில்லை. இந்தக் கலாட்டாவுக்குப் பின் இருவரும் வெகு நேரம் பழைய இனிமையான நாட்களை நினைவுப்படுத்தியபடி சாப்பிட்டனர்.

இருபது வருட நட்பின் புரிதல் அத்தனை சாதரணமானதாக இல்லை. அந்த ஆழமான நட்பு வனிதாவிற்குப் பொறாமையை ஏற்படுத்தியது. சிவா விந்தியாவிடம் உரிமையோடு பேசிக் கொண்டிருந்த விதம் வனிதாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

விந்தியா வாசலை தாண்டிய பிறகுதான் வனிதா பெருமூச்சுவிட்டாள்.

சிவா விந்தியாவைப் பைக்கில் அழைத்துச் செல்வதாகச் சொல்ல விந்தியா பிடிவாதமாய் மறுத்துவிட்டாள். இருந்தும் விடாமல் கூடவே சென்று விந்தியாவை ஆட்டோவில் ஏற்றினான்.

ஆட்டோ கிளம்பும் சமயத்தில் விந்தியா கடைசியாக அவனை நோக்கி ஒரு கேள்வி கேட்டாள்.

“உனக்கு என் மேல் கோபம் இல்லையே?”

“ஏன் இல்லை... நிறைய இருக்கு... ஆனால் அந்தக் கோபத்தைக் காண்பிக்க இப்போ உன் முன்னாடி நிக்கிறது உன்னை லவ் பண்ண சிவா இல்ல... உன்னோட நண்பன் சிவா” என்றான் அழுத்தமாக.

விந்தியா கண்களில் வழிந்த நீரை துடைத்தபடி அவனின் வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ந்து போனாள். அவளுக்குள் இருந்த குற்றவுணர்வும் தயக்கமும் அவன் பேசியதை கேட்டு முழுமையாய் மறைந்து போனது.

இவர்கள் பேசிக் கொள்வதை வீட்டின் வாசலில் நின்று வனிதா பார்த்து கொண்டிருந்தாள். அவர்களின் நட்பு வானமும் பூமியும் போல என்றுமே ஒன்றுக்கொன்று பிரியாமல் கூடவே துணை வரும். ஆனால் அவரவர்களுக்கான எல்லைகளில் நின்றபடி.

வெகு தூரத்தில் வானமும் பூமியும் சேர்ந்திருப்பது போல் தோன்றுவது வெறும் பிம்பம். வனிதா அந்தப் பிம்பத்தை உண்மையென்று நினைத்து கொண்டாள்.

அவர்கள் வாழ்வில் கிடைத்த உண்மையான தோழமை பலருக்கு கிடைப்பபதற்கு அரிது.

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content