மோனிஷா நாவல்கள்
IrumunaiKathi - Episode 22
Quote from monisha on December 1, 2023, 1:41 PM22
நடராஜர் சிலை
சிம்மா படுக்கையில் களைப்பாய் விழுந்தான். முகமெல்லாம் இருளடர்ந்து ஒருவித சோர்வு நிலைப் படர்ந்திருக்க, அவன் நுழையும் போதே அவன் முகம் வாட்டமாய் இருப்பதை குறித்துக் கொண்டாள் ஜெஸிக்கா!
அவன் அறை வாசலின் கதவைத் தட்டி அவள் உள்ளே வர அனுமதிக் கேட்கவும் அவன் எழுந்தமர்ந்து கொண்டு, “வா ஜெஸ்சி” என்றான் தீனமான குரலில்.
சாப்பாடுத் தட்டுடன் நுழைந்தவள், “சாப்பிடுங்க சிம்மா!” என்று பரிவோடு உரைக்க மறுக்காமல் அந்த உணவுத் தட்டை வாங்கிக் கொண்டவன், “தேங்க்ஸ் ஜெஸ்சி” என்றான்.
அவனுக்குமே உண்மையில் அதிகப் பசிதான். ஆனால் மூளை வேறொரு சிந்தனையில் ஆழ்ந்ததில் வயிறின் தேவை இரண்டாம்பட்சமாய் போனது.
தட்டில் இருந்த ப்ரெட் ஆம்லேட்டை உண்டபடி, “நந்து இன்னும் வரலையா?” என்று வினவ, “ஹி ஸ்ட்ரக் இன் ட்ராஃபிக்… வர லேட்டாகும்” என்றாள்.
“ஓ!” என்றவன், “மறந்துட்டேன்... நீ சாப்பிட்டியா ஜெஸ்சி?” என்று தன் உணவை உண்டு கொண்டே கேட்கவும், “யா... ஓவர்” என்று அவள் தலையசைத்தாள். அவன் அவளிடம் இயல்பாகத்தான் பேசினான் எனினும் அவன் முகத்தில் எப்போதும் இருக்கும் தெளிவு இல்லை. அதனை உணர்ந்தவள் அக்கறையோடு உடம்புக்கு ஒன்றும் இல்லையே என்று அவன் நெற்றியைத் தொட்டுப் பார்க்க, “ஐம் ஆல்ரைட் ஜெஸ்சி” என்றான்.
“நோ யு ஆர் நாட்” என்றவள் அவன் முகத்தில் இருந்த குழப்பத்தைச் சுட்டிக்காட்டியபடிக் கேட்க, “இல்ல... ஜெஸி... லாங் ஜர்னில போயிட்டு வந்த டயர்ட்” என்றான்.
ஆனால் அவன் மனதில் வேறெதோ சிந்தனை ஓடுகிறது என்பதை ஒரு தோழியாய் அவள் யூகித்தாலும் அது பற்றி அவனிடம் தேவையில்லாதக் கேள்விகளை எழுப்பி அவனை மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாக்க விரும்பாமல் மௌனமானாள்.
அதன் பின் சிம்மாவும் தன் இரவு உணவை முடித்து தட்டை எடுத்துக் கொண்டு எழுந்து கொள்ள, “கிவ் இட் டு மீ” என்று அதனைக் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டு, “எதையும் யோசிக்காம நல்லா ரெஸ்ட் எடு... ஹெல்த் இஸ் மோர் இம்பார்டன்ட் தென் எனிதிங்” என்று ஒரு தோழியாய் அவன் தேவையை உணர்ந்து ஒரு தாய்க்கு நிகராய் கவனித்துக் கொண்டதுமில்லாமல் அக்கறையாய் அவனின் உடல் நலத்திற்காக அறிவுரை கூறிவிட்டு வெளியேறியவளைப் பார்த்து அவன் மனம் நிறைந்தது.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பூங்குன்றனார் வார்த்தைகள்தான் அவன் நினைவுக்கு வந்தன. வேற்று நாடு, மொழி, இனம் என்று எத்தனை வித்தயாசங்கள் இருந்தாலும் அன்பு என்பது மாற்றமில்லாதது என்பதற்கு சரியான உதாரணம் ஜெஸ்சிதான்.
அவளைப் எண்ணிப் பெருமிதம் கொண்டவன் மீண்டும் தன்னுடைய முந்தைய சிந்தனைக்குத் தாவினான். வெகுதூரம் பயணித்து சென்ற களைப்பை விட அவன் மனதை அலைக்கழிப்பில் ஆழ்த்தியது வேறொரு சம்பவம். கண்ணெதிரே நடக்கும் குற்றத்தையும் குற்றவாளியையும் பார்த்தும் எதுவும் செய்ய முடியாத இயலாமையோடு திரும்பியதுதான் அவன் மனதை வருத்தியது.
அன்று விடிந்ததுமே இராமநாதன் அவர்களோடு சேர்ந்து நியூயார்க்கில் நடந்த கலைப் பொருள் விற்பனையகத்திற்கு சென்றிருந்தான். மேல்மட்ட நாகரிக தோரணையில் அங்கிருந்த ஆட்களின் நடமாட்டம். எல்லோருமே கலைப் பொருள் சேகரிப்பு ஆர்வலர்கள் அருங்காட்சிய உரிமையாளர்கள்.
அதுவும் பல நூற்றாண்டுகள் பழமையான பொக்கிஷங்களை வாங்குவதன் மூலம் தங்கள் அந்தஸ்தை உயர்த்திக் காட்டிக் கொள்ளும் பெருமிதம். சரியாய் சொன்னால் கர்வம். அதேதான் அருங்காட்சியக உரிமையாளர்களுக்கும். அதற்காகவே பழங்காலப் பொக்கிஷங்களை விற்கும் விற்பனை சந்தைகளுக்கு மதிப்பு கூடிக் கொண்டே போனது.
அந்த ஏலத்தில் கலந்து கொள்ள நிறைய கெடுபிடிகளைத் தாண்டியே இராமநாதனும் சிம்மாவும் உள்ளே வந்தனர். அவன் குழுவில் இருந்து ஒருவரின் உதவியோடு! அங்கே இருந்த யாருக்கும் ஃபோட்டோ வீடியோ எடுக்க அனுமதியில்லை. உலகளவில் தன் க்ரைம் நெட்வொர்க்கை வைத்திருப்பவன் அத்தனை சாதாரணமாய் சிக்கிவிடுவானா என்ன?
இன்று தான் நினைத்த காரியம் நடவாது போல என்று சிம்மா ஏமாற்றம் கொண்டிருக்கும் போது சைதன்யா பட்டேல் அந்தப் பெரிய ஹாலிற்குள் நுழைந்தான். ஆடம்பரத்தை எடுத்துரைக்கும் அவர் உடையும் அவர் செழிப்பைச் சொல்லாமல் சொல்லிய தொந்தியும் புத்தியை அதிகம் உபயோகிப்பதால் வந்த வழுக்கையும் ஐம்பதைத் தொட்டவர் என்பது அவர் தோற்றத்தில் நன்கு தெரிந்தது. செவேலென்ற நிறமும் முகஅமைப்பும் அவர் ஒரு வடஇந்தியர் என்பதைத் தெள்ளதெளிவாக எடுத்துரைத்தது.
சில பல ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ஒரு சாதாரண கலைப்பொருள் வியாபாரி இன்று தொட்டிருக்கும் உயரம் வியப்பின் உச்சம். ஆனால் அந்த வளர்ச்சியில் துளி கூட நேர்மை இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததா என்பது கேள்விக்குறிதான். அவரை உலகமே தூக்கிவைத்துக் கொண்டாடும் அளவுக்குக் கலைப்பொருள் விற்பனைகளில் தன் வல்லமையை நிரூபித்திருந்தார்.
உலகம் முழுக்க உள்ள பல ஆர்ட் கேலரிகளில் அவன் தானமாய் கொடுத்த பழங்காலப் பொக்கிஷங்கள் அவர் பெயரோடு இடம்பெற்றிருந்தது. இந்தக் கொடுமையை எண்ணும் போதுதான் சிம்மாவிற்கு மனம் தாங்கவில்லை. யாரின் சொத்தை யார் தானம் கொடுப்பது?
அவனை ஒன்றும் செய்ய முடியாத இயலாமையோடு அமர்ந்திருப்பது சிம்மாவை பெரிதும் கோபத்திற்குள்ளாக்க, இராமநாதன் அவனிடம் பொறுமையைக் கடைப்பிடிப்பதே இப்போதைக்கு நமக்கு ஒரேவழி என்று அறிவுறுத்தினார்.
அப்போது சைத்தன்யா பட்டேல் அங்கிருந்தவர்கள் மீது பணக்காரத்தனமான பார்வையை வீசிவிட்டு அன்றைய ஏலப் பொருளைப் பற்றி விளக்கமளித்தார்.
அவர் பாராட்டி புகழ்ந்து தள்ளியது பன்னிரெண்டாம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால நடராஜர் சிலை. பல்லவன் கற்சிலைகள் வடிப்பதில் பெயர் போனவன் எனில் சோழன் காலத்தின் சிறப்பு செப்புச் சிலைகள். அதிலும் நடராஜர் சிலைகளுக்கு எப்போதும் ஒரு தனி மதிப்புதான்.
கற்சிலைகளில் கார்பன் மூலமாக அதன் பழமையைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் செப்புச் சிலைகளில் அது முடியாது. அப்படி இருந்தும் அந்தச் சிலைகளைத் தம் பழமையிலும் நுட்பத்திலும் சோழனின் வல்லமையைப் பறைசாற்றியது அதன் பெரும் சிறப்பமசம்.
சைத்தன்யாவும் இன்று அத்தகைய சிறப்பம்சம் பொருந்திய சிலைக்குதான் விலைபேசிக் கொண்டிருந்தார். அதன் தொடக்க விலையாக அவர் அறிவித்ததே எல்லோரையும் அதிர்ச்சியில் நிறுத்தியது. அதாவது ஐந்து மில்லியன் டாலர்.
அந்த நொடி சிம்மாவும் அதிர்ச்சியில்தான் இருந்தான். சைத்தன்யா நிர்ணயித்த விலை அவனை அதிர்ச்சிப்படுத்தவில்லை. அதிஅற்புதமான வேலைப்பாடுடைய அந்தச் சிலைக்கு அதெல்லாம் ஒரு விலையே இல்லை. மாறாய் அவனை அதிர்ச்சியடைய செய்தது சைத்தன்யாவின் திறமை!
அந்தச் சிலையைக் கொண்டு வராமல் அதனை டிஜிட்டலாய் பெரிய ஸ்க்ரீனில் புகைப்படமாய் காண்பித்தே அந்தச் சிலையை ஏலம் விட்டுக் கொண்டிருந்தார். கலைப்பொருள் விற்பனை சந்தையில் அவர் உருவாக்கிய ஆழமான நம்பகத்தன்மைதான் சிம்மாவை வியப்பில ஆழ்த்தியது.
மற்றொரு புறம் வெறும் படமாகவே அந்தச் சிலை பார்ப்பவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது எனில் அதன் உண்மை எப்படியிருக்கும்? சோழச் சிற்பிகளுக்கே உண்டான சிறப்பு அவர்கள் வடிக்கும் சிலைகளின் முகமைப்பு. அத்தனைத் தெளிவும் நேர்த்தியும் கொண்டவை.
சைதன்யா அறிவித்த ஆரம்பகட்ட விலை அங்கு வந்திருந்த பலரை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கினாலும் பல பணமுதலைகள் அந்தச் சிலையை ஏலம் எடுப்பதில் ரொம்பவும் முனைப்பாய் இருந்தனர்.
இன்னொரு பக்கம் ஏலம் சுறுசுறுப்பாய் நடந்து கொண்டிருக்க, சிம்மாவும் இராமநாதனும் தங்களுக்குள்ளாக சில பல அதிர்ச்சிப் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டனர். ஆனால் அங்கே அவர்கள் அது குறித்து எந்த விவாதமும் மேற்கொள்ளவில்லை.
அங்கிருந்து புறப்பட்ட பின்னே அவர்கள் இருவரும் அது குறித்த சம்பாஷணையை மேற்கொண்டனர். அந்தச் சிலை நிச்சயமாக கடத்தப்பட்டதுதான் என்று இராமநாதன் தீர்மானமாய் சொல்ல, அங்கு குழுமியிருந்த பெரிய பெரிய ஜாம்பவான்களுக்கும் கூட அது தெரிந்திருக்க வாயப்பில்லைதான்.
அந்தச் சிலை குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் இருந்து வந்தது போல அவன் போலி உரிமையாளர்களின் மூலம் பத்திரங்கள் உருவாக்கி வைத்திருந்தான். அப்படிப் போலி சான்றிதழ்கள் உருவாக்குவதில் சைத்தன்யா கைதேர்ந்தவராயிற்றே!
ஆனால் சிம்மாவின் சந்தேகமே வேறு. “அந்தச் சிலை இன்னும் இந்தியாவில்தான் இருக்குன்னு தோனுது” என்று கூற இராமநாதன் பார்வை அதிர்ச்சியில் நின்றது.
“அப்படிக் கூட இருக்கலாம் சிம்மா!” என்று இராமநாதன் சொல்ல, “அப்படிதான் இருக்கும்... இங்கே சிலையை எடுத்துட்டு வர்றதுல அவனுக்கு நிறைய கெடுபிடி இருக்கு... இவானோட குழு கண்கொத்தி பாம்பா அவனை வாட்ச் பண்ணிட்டிருக்காங்க” என்றான்.
“ஆனா இது வெறும் யூகம்தான்... அதேநேரம் இந்தச் சிலை நம் நாட்டுல இருந்தா இதைவிட நமக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைக்காது... அவனைக் கையும் களவுமாய் பிடிக்க” என்று சிம்மா திட்டம் வகுத்துக் கொண்டு வர இராமநாதன் மௌனமாய் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு வந்தார்.
இப்போது சிம்மாவின் யோசனையெல்லாம் அந்தச் சிலை இருக்கும் இடத்தை எப்படி அறிவது என்பதுதான். அதுவும் அந்த நடராஜர் சிலையின் கம்பீரமான உருவமைப்பு அவனைத் தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தது. அது எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றானுக்கு உரிமையாக்கிவிட கூடாது.
சிம்மா மனக்கண் முன் அந்தச் சிலையைக் கொண்டு வந்து நிறுத்தினான்.
ஜடைமுடிகள் காற்றில் பின்பக்கம் அலைபாய, மேல் கரங்கள் பக்கவாட்டில் நீண்டிருக்க, ஒரு கரத்தில் உடுக்கையும் மறுகரத்தில் அக்னிக்கலசமும் ஏந்தி நின்று ஆக்ரோஷமாய் நடனம் புரிந்து கொண்டிருந்தான் அந்த அம்பலத்தரசன்.
முக்கண் முதலவன் தன் இடது காலை தூக்கி நின்று ஆட கீழ் கரங்கள் அவற்றுக்கான முத்திரைகளை நளினமாய் காட்டின.
அதிலும் வலது திருக்கரம் மேல்நோக்கி விரிந்து, ‘யாமிருக்க பயமேன்’ என்று கருணையின் ரூபமாய் அபயமுத்திரையைக் காட்டியது. அக்னி ஜுவாலைகள் வட்டமாய் சூழ எம்பெருமான் காளி நடனம் புரியும் அந்தக் காட்சியைப் பார்க்க கண்கள் கோடி இருந்தாலும் போதாது.
சிம்மனின் சிந்தனை அதோடு நிற்கவில்லை. பல நூற்றாண்டுகள் முன் வாழ்ந்த அந்தச் சிலையை வடிவமைத்த சிற்பியை மனதளவில் எண்ணிப் பாராட்டியது.
குளிரூட்டப்பட்ட மெழுகு அதன் இளகிய பதத்தைத் தொட்ட சமயத்தில் சிற்பியானவர் தன் நினைவில் வடித்து வைத்திருந்த அண்டசராசரத்தின் அதிரூபமாய் ஆளுமையோடு திகழும் நடராஜரின் உருவச்சிலையைக் கலைநுணுக்கங்களோடு அதிதுல்லியமாகச் செதுக்கினார்.
பின் செதுக்கிய அந்த வடிவத்தின் மீது களிமண் பூசி, அந்த களிமண் காய்ந்த பின் அதைச் சுட, அப்போது அதிலிருந்த மெழுகு உருகி ஊற்றிவிடும். இந்த உள்ளீடற்ற வார்ப்பில் சரியான விகிதத்தில் கலவையாக உருவாக்கப்பட்ட ஐம்பொன்களான செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயத்தை வார்ப்பின் துளைவழியாக ஊற்றி விடுவார் அந்தச் சிற்பி.
பின் ஒருநாள் கழித்து அதன் மேலிருந்த களிமண் பூச்சு உடைக்கப்பட ஆடலரசன் உருவம் கொண்டான் என்று சொல்லவதைக் காட்டிலும் உயிர்பெற்றான் என்று சொல்லலாம்.
இவற்றையெல்லாம் எண்ணியவன் பின் எப்படியாவது அந்தச் சிலையின் உண்மையான புகைப்படத்தைப் பார்க்க வேண்டுமே என்று சிந்தித்துக் கொண்டிருக்க, அப்போது அவன் கைப்பேசி ஒலித்தது.
யோசனையோடு அதனை அவன் எடுத்துப் பார்க்க அதில் ஒளிர்ந்த எண் தன் அப்பாவினுடையது என்பதைக் கண்டுகொண்டான். அதிர்ச்சியைத் தாண்டி எடுக்கலாமா வேண்டாமா என்று அவனுக்குக் குழப்பமே உண்டானது.
அவர் எது சொன்னாலும் தன்னால் நிச்சயம் மறுத்துப் பேச முடியாது என்ற போது அவர் அழைப்பை எப்படி எதிர்கொள்வது என்ற பலத்த யோசனை.
ஆனால் அடித்துக் கொண்டிருந்த அந்தப் பேசி அவனை ஏற்கவே தூண்டியது. சரி சமாளிப்போம் என்ற எண்ணத்தோடு அந்த அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான்.
தன் தந்தையின் அதிகாரக் குரலை அவன் எதிர்பார்க்க அதற்கு மாறாய், “சிம்மா” என்று பரிவாய் அதேநேரம் தேய்ந்த குரலில் இறக்கமாய் கேட்டது அவன் தாயின் அழைப்பு.
ஒரு நொடி சுழலும் உலகம் நின்றுவிட்ட நிலையில் ஸ்தம்பித்தவன் பின் மீண்டு இன்பத்தில் திக்குமுக்காடிப் போனான். அவன் கால்கள் தரையில் நிற்கவில்லை. பூமியின் புவியீர்ப்பு சக்தியை அவன் உணரவில்லை. ஏதோ மிதக்கும் உணர்வு!
‘ம்மா... உங்களுக்கு நல்லாயிடுச்சா?... நீங்க நல்லாயிட்டீங்களா? கடவுளே!’ என்று அவன் மனக்குரல் பேச உணர்ச்சிப் பெருக்கில் உதட்டின் வழியே அந்த வார்த்தைகள் வெளிவராமல் அவனைத் தவிக்கவிட்டன.
இப்படியும் அப்படியுமாய் சந்தோஷத்தில் நிலைகொள்ளாமல் நடந்து கொண்டிருந்தன அவன் பாதங்கள். இரத்த நாளங்களில் புது இரத்தம் பாய்ந்தது போல புளங்காகிதம் அடைந்தன அவன் உணர்வுகள். புன்னகை இதழ்களில் பொங்க திண்ணமாய் அவன் கம்பீரக் குரல் மென்மைத்தன்மையோடு எதிரொலித்தது.
“ம்மா... உண்மையிலேயே நீங்கதான் பேசுனதா... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... வார்த்தையே வரல... அவ்வளவு சந்தோஷமா இருக்கு? இந்த நிமிஷம்... இந்த நொடி... கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்?” என்று விழிகளின் ஓரம் நீர் கசிந்தோட உணர்வுப்பூர்வமாய் பேசினான். களிப்பில் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மூச்சு வாங்க வெளிவந்தது அவனுக்கு.
ஆனால் இத்தனை சந்தோஷமாய் தன் அம்மவுடன் உரையாடலைத் தொடங்கியவன் அதன் பின் அவன் அம்மா சொன்ன தகவல்களைக் கேட்ட பின் மொத்தமாய் தன் சந்தோஷத்தைத் தொலைத்து அதிர்ச்சியில் உறைந்தான். விதி மீண்டும் அவனைத் தன் தாய் நாட்டை நோக்கியே இழுத்து வர வைக்கப் போகிறது.
22