You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Forum breadcrumbs - You are here:ForumBhagya Novels: Kadhal Siraikadhal sirai -9

kadhal sirai -9

Quote

படப்பிடிப்பு சென்னையில் உள்ள மகாபல்லிபுரம் சாலையில் நடந்துக்கொண்டிருந்தது. கதை மிகவும் எளிமையான கதை தான். காதலனைத்தேடி அலையும் காதலி அதற்கு உதவி புரியும் ஒரு திருநங்கை.

ஹீரோயின் மெல்ல கலங்கியபடி நடந்து வரும்போது ஒரு திருநங்கையை சந்திக்கிறாள். இப்படி கதை நகர்ந்துகொண்டே போனது. அந்த படத்தில் வரும் கதாநாயகன் நடிப்பு நேரம் போக மீதி நேரம் ஷில்பாவிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

இருவரும் ஒரு நல்ல நட்பாக இருந்து வந்தனர். என்னவோ தெரியவில்லை சமிபமாக இருவரும் காதலர்கள் போல் வலம் வந்தனர்.
"ஷில்பா உங்கள் கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான் அந்த கதாநாயகன் கிருஷ்ணன்.

"கிருஷ்ணன், ஷாட் ரெடியாகிடுச்சு கூப்பிடுறாங்க அப்றம் பேசலாமே" என்றாள் ஷில்பா. ஆனால் கிருஷ்ணனின் முகம் ஏக்கத்தில் வாட்டத்துடன் காணப்பட்டது.

"என்ன கிருஷ்ணன் மேக்கப் சரியா போடலையா" என்றான் இயக்குனராக இருக்கும் கதிர்.

"இல்லை சார் மனசு ஒரு மாதரி இருக்கு.கொஞ்சம் ஷில்பா கிட்ட பேசணும். அனுமதி தருவீங்களா" என்று கேட்டதும்.

"ஷில்பா போ பேசிட்டு வா" என்று அனுப்பி வைத்தான் கதிர்.

இருவரும் அந்த மரத்தின் நிழலில் நின்றபடி பேசத்துவங்கினர்.

"ஷில்பா, உனக்கு என்னை பிடிச்சிருக்கு தானே அப்றம் ஏன் விலகி இருக்க இரண்டு நாளா."

அங்கு சற்று நேரம் அமைதி நிலவியது. சில்லென்ற அந்த மரத்தின் காற்று இருவர் மனதையும் லேசாக்கியது.

"கிருஷ்ணன்...உங்களை காதலிக்கிறது உண்மை தான். ஆனால் என் காதல் உங்கள் வாழ்க்கையை பாழாக்குதோனு தோன்றுது" என்றாள் விரக்தியாக.

"ஏய் என்ன சொல்ற நீ" என்றான் புருவத்தை உயர்த்தியபடி.

"நான் ஒரு திருநங்கை,எனக்கெல்லாம் நட்பு அமையறதே பாக்கியம் இதுல காதல் அமையும் போது அப்படி ஒரு சந்தோஷம் மனசுல. ஆனால் கல்யாணம் இதைபற்றி எல்லாம் யோசிக்கிறப்ப நடைமுறைக்கு சாத்தியமாகாதுனு தோன்றுது." என்றாள் கலங்கியபடி.

"கல்யாணம் பண்ணி கணவன் மனைவியா வாழலாமே இதுல என்ன தவறு ஷில்பா. எனக்கு நீ உனக்கு நான் அவ்வளவு தான். வேறு எதுவுமே நீ யோசிக்காத புரியுதா"என்று ஆறுதலாய் அவள் கைகளை பற்றவும்.

மீண்டும் ஷாட் ரெடி என்று கதிர் அழைக்கவும் சரியாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்தவுடன்...

"ஏய் ஷில்பா உனக்கும் கிருஷ்ணனுக்கும் என்ன பிரச்சனை"என்று வினவினான் கதிர்.

"ஒன்றுமில்லை கதிர்,நாங்க இரண்டு பேரும் விரும்புறோம் ஆனால் கல்யாணம் சாத்தியமில்லை அதான் எனக்கு மனக்கவலை " என்றதும்.

"ஷில்பா இங்கே பாரு. எப்போ உன்னை காதலிச்சானோ அப்போவே உன்னை ஏத்துக்கிட்டானு தானே அர்த்தம். அவனுக்கும் அப்பா அம்மா இல்லை, கிருஷ்ணன் தனியா வாழ்ற ஒரு மனிஷன். நீ அவருக்கூட வாழ யாரும் தடையாக இருக்கப்போறது இல்லை. பின்ன என்ன அவரை கல்யாணம் பண்ணிக்கோ" என்று அவள் கரக்களை அழுத்தியவாறு கூற..

"அதெல்லாம் சரிதான் கதிர். ஆனால் நான் தாயாக முடியாதே" என்று ஏக்கமாக கூறினாள் ஷில்பா.

"பெற்றால் தான் தாயா"என்றான் கதிர்.

"எனக்கு புரியல கதிர். தத்தெடுக்க சொல்றியா"? என்று வியப்பாக கேட்க.

"ஆமாம் ஷில்பா ஒரு குழந்தையை தத்தெடுத்து இரண்டு பேரும் சந்தோஷமா வாழுங்க" என்று ஆறுதலாய் உரைத்ததும் அவள் நிம்மதி பெருமூச்சு விட்டபடி தலையாட்டினாள்.

அவன் சொன்னதை எல்லாம் யோசித்த ஷில்பா உடனே கிருஷ்ணனின் காதலுக்கு சம்மதம் அளித்தாள். ஒரு காதலர்களை சேர்த்து வைத்த திருப்தியில் வீடு வந்து சேர்ந்தான் கதிர்.

அவனுக்கு சொம்பு நிறைய தண்ணீர் எடுத்து வந்தவள் அவனிடம் நீட்டியவாறு

"என்னங்க இன்னைக்கு ஷுட்டிங் எல்லாம் எப்படி போச்சு" என்று இன்முகத்துடன் விசாரித்தவுடன் அவனுடைய களைப்பு எல்லாம் போனது. அருந்ததியிடம் அன்று நடந்ததை எல்லாம் விளக்கினான்.

பேச்சு வாக்கில் இருவருக்கும் தங்களுடைய ஹனிமூன் பற்றிய சிந்தனை எழுந்தது.

"ஏன் அருந்ததி நம்ம இரண்டு பேரும் செக்கண்டு ஹனிமூன் பற்றி யோசிக்கவே இல்லை இவ்வளவு நாள். உனக்கு எதாவது ஐடியா இருக்கா" என்றவுடன்.

"இல்லைங்க எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. நீங்களே சொல்லுங்க" என்றவளை எதிர்நோக்கியவன் அவள் உள்ளங்கையை அழுத்தி பிடித்தபடி.

"ம்ம்ம் ஏன் அருந்ததி. நம்ம இ.சி.ஆர் ரெஸாட்ல போய் இரண்டு நாள் தங்கிட்டு வரலாமா" என்று அவள் பதிலுக்காக எதிர்நோக்கியவனை...

"போலாம். ஏங்க ஊட்டி கொடைக்கானல் அப்படி எதுவும் வேண்டாமா" என்று வினவியவளை தன் பக்கம் நெருக்கமாக அணைத்து.

"இந்த கொரனா பயத்தில் ரொம்ப ட்ராவல் பண்றது எல்லாம் பாதுகாப்பு இல்லை. அதான்" என்று அவன் சொன்னதும் அது சரியென்று பட்டது.

முதல் ஹனிமூன் ஏர்காடுக்கு சென்று வந்ததால் இந்த முறை பாதுகாப்பு காரணம் காட்டி இருவரும் ரிஸார்ட் செல்ல முடிவு எடுத்திருந்தனர்.

இதைப்பற்றி பேச்சு தன் அப்பாவிடம் ஆரம்பித்தான்.
"அப்பா...நானும் அருந்ததியும் ரிஸார்ட் போலாம்னு இருக்கிறோம்." என்று ஆரம்பித்ததும்.

"இதெல்லாம் சரியில்லை கதிர். வீட்டில் வயசு புள்ளைங்க இருக்கு. நீங்கள் எப்பப்பாரு இப்படி அங்க இங்கே போயிட்டு வந்த அதுங்களும் ஏங்கும். கொஞ்சம் பார்த்து சூதானமாக நடந்துக்கனும் புரியுதா" என்க...

"அதெல்லாம் சரிதான் ஆனால் எங்களுக்குனு ஆசை கனவு எல்லாம் இருக்காதா. எங்களுக்கு ஒரு ரிலாக்ஸ் தேவைப்படுது இல்லையாப்பா. அதை ஏன் நீங்கள் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க" என்று வாதாட துவங்கினான்.

ஐயோ இதனால் சண்டை ஏதும் வந்துவிட போகிறது என்று சமாதானம் செய்ய முயற்சித்தாள் அருந்ததி.

"என்னங்க விடுங்கள் பரவாயில்லை"என்று பிடித்து இழுத்தவளை உதறியவன்.

"அப்பா,நீங்க சொல்லுங்கள் நான் கேட்டதுல என்ன தப்பு இருக்கு. என் மனைவியை நான் அழைச்சிட்டு போறதுக்கு நான் ஏன் உங்கள் கிட்டலாம் முதல்ல அனுமதி கேட்கணும். ஏதோ பெரியவங்க அப்டிங்கிற ரெஸ்பெக்ட் தந்தா ரொம்ப தான் பண்றீங்க" என்றான் சற்று அழுத்தமான குரலில்.

இதுவரை இப்படி ஒரு அழுத்தம் அவன் தந்தை முன் பேசும்போது தென்படவில்லை.

"இது என்ன புது பழக்கம்" என்றார் விருதாச்சலம்.

"என்ன" என்றான் முறைத்தபடி.

"இல்லை,தனிப்பட்ட முறையில் சம்பாதிக்கிறோம்னு திமிரா?இயக்குனர் அப்டிங்கிற கர்வமா கதிர்" என்று மகனை அதிகார தொனியில் கேட்க.

"ஹாஹா. அப்பா இதெல்லாம் எல்லாம் ஆம்பள புள்ளைக்கு வர கர்வம் தானே? எனக்குனு தனிபட்ட முறையில் குடும்பம் வாழ்க்கை என்று அமைந்தப்றம் நான் ஏன்பா என் தனிப்பட்ட சந்தோஷத்துக்கு கூட உங்கள் கிட்ட அனுமதி கேட்கணும்" என்றான் அவனுக்கே உரிய தொனியில்.

"டேய் நீ இருக்கிறது கூட்டுக்குடும்பத்தில் புரியுதா"என்று அவனுக்கு நினைவுப்படுத்தினார். அவனுக்கும் நினைவுக்கு வந்தது.

'இது தான் , இதே பிரச்சினை தான் எல்லாத்துக்கும் காரணம். தனியே போவது தான் நல்லது என்று முடிவு செய்தான்'

கோபித்துக்கொண்டு தன் அறைக்குள் வந்தவனை தலையை வருடியவள்

"என்னங்க இதெல்லாம் மாமா கிட்ட ஏன் இப்படி பேசுறீங்க" என்று கேட்க.

"நம்ம வெளியே போற விஷயத்தை சொல்றது கூட தப்பா? கூட்டுக்குடும்பம் என்றால் எல்லா ஆசையும் அடக்கிக்கொண்டு இருக்கனும்னு எதாவது சட்டமா அருந்ததி" என்று வினவியவனை அருகில் அமர்ந்தவாறு.

"மாமா சொல்றதும் சரிதானே வீட்ல காயத்ரி, கவியரசி இரண்டு வயசு பொண்ணுங்க இருக்கிறப்ப நம்ம இப்படி ரிஸார்ட் எல்லாம் போறது நல்லது இல்லைங்க. நம்ம கணவன் மனைவியா போறோம் இருந்தாலும் அதெல்லாம் தப்பு தான். அந்த இரண்டு பேருக்கும் மனசுல தப்பான ஆசை வளர நாமலே காரணமா இருக்கக்கூடாது தானே? அதனால தான். இன்னும் கொஞ்சம் நாள் பொறுத்துக்கலாம். காயத்ரி கவியரசி இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிட்டா எல்லாம் சரியாகிடும்" என்று பக்குவமாய் பேசியவளை நோக்கி...

"நல்லா பேசுற அருந்ததி. எல்லாம் ஓகே தான். கூடிய சீக்கிரம் இதுக்கெல்லாம் விடிவுகாலம் வரதான் போகுது பாரு" என்று சொல்லிவிட்டு திரும்பியவனை தன் பக்கம் திருப்பி அவன் நெஞ்சில் தலைசாய்த்து....

"ஒருவகையில் உங்களை நினைச்சா பெருமையாக இருக்கு" என்றாள் சிரித்தவாறே.

"ஏன் அப்படி "என்றான் அணைத்தப்படி.

"ஆமாம் இதுவரை உங்கள் அப்பா முன்பு நீங்க இப்படி எல்லாம் பேசினது இல்லை. எனக்காக தான் இப்படி எல்லாம் பேசுறீங்க. இந்த செக்கண்டு ஹனிமூன் ப்ளான் கூட எனக்காக தானே. "என்றவளை நெற்றியில் முத்தம் வைத்தவன்...

"ஹாஹா உண்மை தான். என்னை காதல் சிறைப்பிடித்தவளே நீ தானே?, ஷார்ட் பிலிம்ஸ், பிரண்டுஸ், வீடுனு இருந்தவனுக்கு காதல்னு ஒரு உலகம் இருக்குனு காட்டியவளே நீ தானே"....என்றான் மீண்டும் நெற்றியில் முத்தம் பதித்தப்படி.

அவனுடைய அணைப்பில் குழந்தைப்போல் அடங்கிக்கொண்டு அப்படியே சிறிது நேரம் அவன் பிடியிலிருந்து வெளிவராமல் இருந்தாள்.

தொடரும்.

 

You cannot copy content