You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 1

Quote

காதலும் கபடமும்

1

அந்த அதிகாலை நேரத்திலேயே சென்னை நகரம் அதீத பரபரப்பில் இருந்தது. அதற்குப் பெரிய காரணம் ஒன்றும் இல்லை. மாஸ் ஹீரோ அமரேஷின் ‘காதலும் கபடமும்’ பட வெளியீட்டிற்காகத்தான்.

தியேட்டர்களின் முன்பாக நின்ற அமரேஷின் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்குப் பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து அந்தப் போலி பிம்பத்தின் மீது அவர்கள் அன்பைப் பொழிந்து தள்ளிக் கொண்டிருந்தனர்.

இதெல்லாம் புதிது அல்ல. பல காலமாக நடப்பதுதான். ஆனால் அமரேஷிற்கு இது வெறும் ஐந்தாவது படம்தான். அவன் அப்பா, தாத்தா எல்லோரும் சினிமா தயாரிப்பாளர்கள். அம்மா சரஸ்வதி ஒரு காலத்தில் நடிகையாக இருந்தவர். அமரேஷின் தந்தை கஜேந்திரனை மணமுடித்த பின் அவர் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். மூத்தவள் அக்ஷயாவிற்கு சினிமாவில் ஆர்வமில்லை. அமெரிக்காவில் திருமணம் முடிந்து அங்கேயே செட்டிலாகிவிட்டாள். அமரேஷ் மட்டும் அவர்கள் சினிமா குடும்பத்தின் பாரம்பரியத்தைக் காப்பாற்றிக் கொண்டிருப்பவன்.

பட்டாசுப் புகைகளுக்கு இடையில், "அமரேஷ் அண்ணா" என்ற ரசிகர்களின் கோஷம் அந்த இடத்தையே அதிரச் செய்தன. இந்தக் களேபரங்களுக்குச் சற்றுத் தள்ளி, ஒரு சொகுசு கறுப்பு நிற செடான் கார் அசைவற்று நின்றது. அதன் கறுப்பு ஜன்னல்களுக்குப் பின்னால்தான் அந்த ஆர்ப்பாட்டத்திற்கெல்லாம் மூலதாரமானவன் இருந்தான்.

கார்த்திகேயன். உடலோடு கச்சிதமாகப் பொருந்தியிருந்த கறுப்பு நிற ஃபார்மல் ஷர்ட். லெதர் ஸ்ட்ராப் வாட்ச். ட்ரிம் செய்யப்பட்ட தாடி, தீர்க்கமான கண்கள். ஒரு பி.ஆர். மேனேஜராகத் திரைக்குப் பின்னால் இருந்தாலும், அவன் தோற்றம் ஒரு கார்ப்பரேட் சி.இ.ஓ-விற்கு இணையான கம்பீரத்தைக் கொண்டிருந்தது.

அவனுக்கு அருகே, விலையுயர்ந்த லெதர் சீட்டில் சாய்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தான் அமரேஷ். கேமராவிற்கு மிகவும் பிடித்த முகம். ஜிம்மிடம் மெருகேற்றிய உடல்வாகு, ட்ரெண்டியான ஹேர்ஸ்டைல். அவன் அணிந்திருந்த அந்த விலையுயர்ந்த டிசைனர் உடைகளும், கூலிங் கிளாஸும் அவனது வசீகரத்தைக் கூட்டியது.

திரையில் அவன் சிரிக்கும்போது கன்னத்தில் விழும் அந்தச் சிறிய குழி, லட்சக்கணக்கான பெண்களைச் சுண்டி இழுக்கும் காந்தம். ஆனால், அந்த வசீகரமான புன்னகைக்கு அடியில் ஒரு ஆணவம் எப்போதும் மெல்லிய கோடாக ஒளிந்திருக்கும்.

வெளியே தன் பெயருக்காகத் தவம் இருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களைப் பற்றி அவனுக்கு எந்தக் கவலை இல்லாமல் கார்த்திக்தான் மிகுந்த பரபரப்புடன் அவர்கள் எல்லாம் கையாண்டான்.

ஒரு கையில் ஐபோன், மறு கையில் வாக்கி டாக்கி என அவன் கண்கள் வெளியே ஓடும் ஒவ்வொரு அசைவையும் அளவெடுத்துக் கொண்டிருந்தன. அவன் குரலில் ஒரு நிதானமான அதிகாரம் இருந்தது.

"மீடியா பாயிண்ட் கன்பார்ம் பண்ணுங்க... லெஃப்ட் சைட் பேரிகேட் இன்னும் கொஞ்சம் அட்ஜஸ்ட் ஆகணும். ஃபேன் கிளப் பிரசிடென்ட்க்கு சிக்னல் கொடுங்க," அவன் சொல்லச் சொல்ல வெளியே காட்சிகள் மாறின. மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்களுக்கே தெரியாமல், அந்தக் கூட்டத்தைத் ஒரு தேர்ந்த இசைக்கலைஞனைப் போலத் தன் விரல் நுனியில் ஆட்டிக்கொண்டிருந்தான் கார்த்திக்.

"சார்... இப்போ!" என்று கார்த்திக் சொன்ன மாத்திரத்தில், வெளியே வானவேடிக்கைகள் முழங்கின. அமரேஷ் காரை விட்டு இறங்கிய அந்த நொடி, தியேட்டர் வளாகமே பிளப்பது போலக் கூச்சல் எழுந்தது.

அமரேஷ் கையை அசைத்தான்; ஒரு வசீகரப் புன்னகையை உதிர்த்தான். அங்கே இருந்தவர்களுக்கு அவன் ஒரு 'தெய்வம்'. ஆனால், அந்தத் தெய்வத்தைச் சுற்றியிருக்கும் ஒளிவட்டத்தை வடிவமைப்பது கார்த்திக் என்கிற கார்த்திகேயன். அமரேஷின் பி.ஆர். மேனேஜர்.

தியேட்டர் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஒரு பெண் நிருபர் மைக்கை நீட்டினார். "சார், உங்க படத்துல வர்ற ஹீரோயின் கேரக்டர் ரொம்ப சுதந்திரமான பெண்ணா காட்டப்பட்டிருக்கு. நிஜ வாழ்க்கையில பெண்களின் சுதந்திரம் பத்தி உங்க கருத்து என்ன?"

அமரேஷ் அந்த நிருபரை ஒரு கணம் மேலோட்டமாகப் பார்த்தான். "இன்னைக்கு பெண்கள் ஃப்ரீடம் பத்தி நிறைய பேசுறாங்க... அது சந்தோஷம்தான். ஆனா ஒன்னு, அந்த ஃப்ரீடம்க்கு ஒரு லிமிட் தெரியணும். எல்லை மீறுற சுதந்திரம் என்னைக்குமே ஆபத்துதான்," என்று மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுச் சிரித்தான்.

அந்த இடமே ஒரு நிமிடம் நிசப்தமானது. அங்கிருந்த பத்திரிகையாளர்களின் முகங்கள் மாறின. இது ஒரு பெரிய சர்ச்சையாகப் போகிறது என்பதை உணர்ந்த கார்த்திக்கின் முகம் இறுகியது.

உடனடியாக அவன் தன் உதவியாளருக்குச் சிக்னல் கொடுத்து, "கட் பண்ணுங்க... நெக்ஸ்ட் கொஸ்டின்!" என்று கத்தினான்.

மீடியாக்காரர்கள் மேலதிகக் கேள்விகளைக் கேட்க முயல, கார்த்திக் சாதுர்யமாக அமரேஷை அங்கிருந்து அப்புறப்படுத்தி கேரவனுக்கு அழைத்துச் சென்றான்.

கேரவன் உள்ளே நுழைந்ததும் அமரேஷ் கால்களை நீட்டி அமர்ந்து கொண்டு மொபைலை நோண்டத் தொடங்கினான்.

 "சார், அந்த மாதிரி கமெண்ட்ஸ் வேண்டாமேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? இப்போ பாருங்க, சோசியல் மீடியால இதை வச்சே பாய்ஹாட் ட்ரெண்ட் பண்ணுவாங்க," என்றான் கார்த்திக் எரிச்சலுடன்.

அமரேஷ் நிமிர்ந்து பார்த்தான். "விடு கார்த்தி... நெகட்டிவ் பப்ளிசிட்டியும் ஒரு பப்ளிசிட்டி தான். அந்தப் பொண்ணுங்க கத்தட்டும், அப்போதான் என் படம் இன்னும் அதிகமா பேசப்படும்." எதுவும் பேசாமல் நகர்ந்துவிட்டான் கார்த்திக்.

ஒன்றாக பயணித்தாலும் நேரெதிர் மனப்பான்மையும் கொள்கையும் கொண்ட இவர்கள் இருவரின் வாழ்க்கையில் அதிரடியாக நுழையப் போகும் பெண்தான் யாத்ரா.

அவள் காலைப் பொழுது இத்தனை பரபரப்புடன் விடியவில்லை. ஜன்னலைத் தாண்டி முகத்தில் வெயில் சுளீரென்று அடித்து அவள் ஏகாந்த உறக்கத்தைக் களைக்க முற்பட்ட போதும் அவள் அசைந்து கொடுக்கவில்லை.

சிறிய முள் பத்தைத் தொட்ட பிறகுதான் மெது மெதுவாக அவள் தன் உறக்கத்திலிருந்து மீண்டு எழுந்தாள். ஆனால் எழுந்ததும் முதலில் கையில் எடுத்தது தன் செல்பேசியை.

நேற்று அவள் போட்டிருந்த செல்பிக்கு எத்தனை லைக்குகள் வந்திருக்கிறது என்பதை பார்த்துவிட்டு, யூடியூப் பக்கம் வந்தாள்.

'காதலும் கபடமும்' பட வெளியீட்டின் ஆராவாரங்களை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்தாள்.

“கண்டிப்பா பெண்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்” என்று அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு அப்போதே அந்த படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகரித்தது.

ஆனால் இரவு ஷோவிற்குத்தான் அவளுக்கு டிக்கெட் கிடைத்தது. "என்ன... காலையிலேயே ஆரம்பிச்சாச்சா?" என்று சலித்துக் கொண்டே உள்ளே வந்தான் அவள் அண்ணன் இந்திரன்.

“எம்.பி.ஏ என்ட்ரன்ஸ் படிக்கிறேன்னு சொல்லிட்டுச் சென்னை வந்த... ஆனா ஒன்னும் நீ படிச்சு கிழிச்ச மாதிரி தெரியல.”

“அதெல்லாம் இல்ல நான் இந்தத் தடவை கண்டிப்பா என்ட்ரன்ஸ் கிளியர் பண்ணிடுவேன்.”

“நீ பண்றது எல்லாம் பார்த்தா எம்.பி.ஏ படிக்கிற மாதிரி தெரியல... அந்த அமரேஷுக்கு ரசிகர் மன்றத் தலைவி ஆகத் திட்டம் போட்டுட்டு இருக்க மாதிரி இருக்கு.”

யாத்ரா சற்றும் சளைக்காமல் நிமிர்ந்து அமர்ந்தாள். "அண்ணோய்... ரெண்டுமே நடக்கும் பாரு. அப்புறம் நான் ஆரம்பிக்கப் போற பிசினஸுக்கு அமரேஷ் தான் பிராண்ட் அம்பாசிடரா போடுவேன்!"

இவளைத் திருத்த முடியாது என்று தலையிலடித்துக் கொண்ட இந்திரன், “உன்கிட்ட மனுஷன் பேச முடியாது... சரி சரி டிபன் வாங்கி வைச்சு இருக்கேன்... சாப்பிட்டு ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரு” என்று விட்டு அவன் அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான்.

யாத்ராவின் பெற்றோர் ஏற்காட்டில் இருந்தனர். அண்ணன் இந்திரன் வேலைக்காக அங்கே தனியாக வீடு எடுத்துத் தங்கி இருக்க, எம்.பி.ஏ படிக்கிறேன் என்று சென்னைக்கு வந்தவள் அதைத் தவிர மற்ற எல்லா வேலைகளும் செய்கிறாள்.

மேஜை முழுக்க எம்.பி.ஏ நுழைவுத் தேர்வுக்கான தடிமனான புத்தகங்கள், பேனாக்கள், குறிப்பேடுகள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. கூடவே அமரேஷின் ஒரு சிறிய ஸ்டைலான போஸ்டர் நேர் எதிராக ஒட்டப்பட்டிருந்தது.

அதன் கீழே அவளே கைப்பட எழுதியிருந்தாள்: "Be your own Boss". அவளுக்கு இரண்டின் மீதும் விருப்பம் இருந்தது. ஒன்றுக்கு மற்றொன்றை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்தாள்.

அன்று இரவு நகரத்தின் ஒரு பிரபலமான மாலின் தியேட்டருக்குள் யாத்ராவும் அவள் தோழிகளும் நுழைந்தனர். யாத்ரா அதிக உற்சாகத்துடன் காணப்பட்டாள். விளக்குகள் அணைக்கப்பட்ட கணத்தில் முகத்தில் மாஸ்க், தலையில் தொப்பி என அடையாளங்களை மறைத்துக்கொண்டு அமரேஷ் நுழைய, அவனைப் பின்தொடர்ந்து கார்த்திக்கும் புகுந்தான். பதற்றத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அமரேஷை இருக்கைக்கு அழைத்து வந்து அமர வைத்தான்.

சரியாக அதே சமயம் திரையில் அமரேஷின் என்ட்ரி சீன். யாத்ரா தன்னை மறந்து எழுந்து நின்று கத்தினாள். கையில் இருந்த ஸ்டீல் டிபன் பாக்ஸை எடுத்து, அந்தத் தியேட்டர் சீட்டின் கைப்பிடியில் தாளம் போட்டாள்.

டங்... டங்... டங்...

சுற்றியிருப்பவர்கள் அவளைத் திகைப்புடன் பார்த்தனர்.

அமரேஷ் கவனமும் அவள் புறம் திரும்பியது. அவனுக்கு இரண்டு வரிசை முன்னே அமர்ந்திருந்தாள்.

துறுதுறுப்பான கண்கள், சிக்கனமாகச் சீவப்பட்ட தலைமுடி, ஒரு சிறிய மூக்குத்தி, கையில் ஒரு வாட்ச். இவை எல்லாம் அவளை ஒரு கல்லூரி மாணவியாகக் காட்டியது.

அவனுடன் சினிமாவில் நடிக்கும் நாயகிகளின் அழகிற்கு அவள் இணையில்லைதான். ஆனால் அந்த எளிமையான அழகில் ஒரு தனி வசீகரம் இருந்தது. அவனை ரசித்து ஆராதிக்கும் அவள் கண்களைப் பார்க்கும்போது அவனுக்குப் போதை ஏறியது. தன் கண்களை அவளிடமிருந்து விலக்கவே முடியவில்லை.

“சார் படம் ஸ்க்ரீன்ல ஓடுது” என்று கார்த்திக் அவன் காதில் கிசுகிசுக்க, “நான் வந்தது இதுக்குத்தானே” என்றான்.

“என்ன?”

“இந்த மாதிரி ஃபேன்ஸைப் பார்க்கத்தானே."

கார்த்திக்கும் அவளை ஒரு முறை பார்த்துவிட்டுச் சொன்னான், “ஏதோ விவரம் தெரியாத அப்பாவிப் பொண்ணு மாதிரி இருக்கு.”

“அப்படியா தெரியுது?” என்று கேட்ட அமரேஷின் கண்களுக்கு அந்த அப்பாவித்தனம் எல்லாம் அப்போது தெரியவில்லை.

திரையில் தன் நாயகன் செய்யும் ஒவ்வொரு சாகசத்தையும் விசிலடித்தும், கைதட்டியும் கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருந்தாள் யாத்ரா. அவளுக்குத் திரைதான் உலகம்; ஆனால் அமரேஷுக்கோ அந்தத் திரையை விட, முன்னால் அமர்ந்து தன்னைத் தெய்வமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் உணர்ச்சிகளே பெரிய கேளிக்கையாக இருந்தன.

கார்த்திக்கிற்கோ எப்போது அந்தப் படம் முடிந்து தொலையும் என்று இருந்தது. தியேட்டரின் ஏசி குளிரிலும் அவனுக்குப் பிடரியில் வியர்த்தது. இந்த மாதிரி தேவையற்ற அசட்டுத்தனமான காரியங்களை அமரேஷ் அடிக்கடி செய்வது உண்டு.

 ஒரு சூப்பர் ஸ்டார் இப்படித் திரையரங்கிற்குள் ரகசியமாக வந்து அமர்வது எவ்வளவு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது கார்த்திக்கிற்குத் தெரியும். ஆனால், அவனது எச்சரிக்கைகளை அமரேஷ் ஒருபோதும் மதித்ததில்லை. வேறு வழி இல்லாமல், தன் முதலாளியின் இந்த விபரீத விளையாட்டுக்கு அவனும் உடந்தையாக இருக்க வேண்டியிருந்தது.

படம் முடிந்து கூட்டம் வெளியேறத் தொடங்கியது. நிம்மதியடைந்த கார்த்தி, அமரேஷைப் பத்திரமாக முன்னே நகர்த்தி அழைத்துச் சென்றான். குறுகலான அந்தப் பாதையில் யாத்ரா தன் தோழிகளுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டே சென்றாள்.

அப்போதுதான் அது நடந்தது. யாரோ ஒருவன் அவளை அநாகரீகமாகத் தொட்ட அந்த உணர்வு. சட்டென்று திரும்பினாள். பின்னால் ஒருவன் மாஸ்க் அணிந்து நின்றிருந்தான்.

நிமிடம் கூட யோசிக்கவில்லை. அவளது வலது கை காற்றில் சுழன்று அவன் கன்னத்தில் அறைந்தது. மால் வளாகமே ஒரு நிமிடம் அமைதியானது.

"மரியாதையே தெரியாதா உனக்கு? படிச்சவன் மாதிரி டிரஸ் பண்ணிட்டு என்ன பொறுக்கித்தனம் இது?" என்று கத்தினாள் யாத்ரா.

“பிரச்னை வேண்டாம்” என்று தோழிகள் யாத்ராவின் கை பிடித்து அழைத்து செல்ல, கார்த்திக் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

யாத்ரா வெறுப்புடன் அவனைப் பார்த்துவிட்டு வெளியேற, அந்தச் சூழ்நிலையில் கார்த்திக்கால் எதுவும் செய்ய முடியவில்லை.

காரில் ஏறியதும், “அந்தப் பொண்ணு ஏதோ தப்பா புரிஞ்சிட்டு அடிச்சுருச்சுனு நினைக்கிறேன்” என்று கார்த்திக் சமாளிக்க, “அதெல்லாம் இல்ல” என்று சொல்லிச் சிரித்த அமரேஷ், “நீதானே ஏதோ அப்பாவின்னு சொன்ன, அதான் அப்பாவியான்னு சோதிச்சுப் பார்த்தேன்” என்றான்.

“என்ன பண்ணீங்க?” என்று பதற்றத்துடன் வினவிய கார்த்திக்கை பாவமாகப் பார்த்த அமரேஷ், “நீதான்டா ரொம்ப அப்பாவியா இருக்க” என்றான்.

கார்த்திக் முகம் இறுகியது. அமரேஷ் தன் கன்னத்தை தொட்டுத் தடவிக்கொண்டே சொன்னான்.

“நான்தான் தொட்டேன்னு தெரிஞ்சிருந்தா... அடிச்சு இருக்க மாட்டா... கூட நின்னு செல்ஃபி கேட்டிருப்பா." என, அந்த வார்த்தை கார்த்திக்கிற்கு இன்னும் உச்சமான அருவருப்பை உண்டுபண்ணியது.

மௌனமாக அந்த உணர்வை தனக்குள் புதைத்துக் கொண்டான்.

You cannot copy content