You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 13

Quote

13

ஏற்காட்டின் மலைகளின் மூடுபனிக்குள் மெல்லத் மறைந்து கொண்டிருந்த செங்கதிர் சூரியன், வானத்தை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் தீட்டிக் கொண்டிருந்தான். ஆனால், அந்த எழில் கொஞ்சும் அமைதிக்கு மத்தியில், வீட்டுத் தோட்டத்தின் மரத்தடியில் தனிமையில் அமர்ந்திருந்தாள் யாத்ரா.

அவள் கையில் இருந்த செல்பேசி திரை மீண்டும் மீண்டும் ஒளிர்ந்தது. ஆனால், அவள் கவனம் அதில் இல்லை. கீழே கிடந்த ஒரு சிறு கல்லை எடுத்து, தரையில் புரியாத கோடுகளை வரைந்து கொண்டிருந்தாள். அவளது மனதும் இப்போது அந்தக் கோடுகளைப் போலவே தெளிவில்லாமல் இருந்தன.

எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. புத்தகத்தைத் திறந்தால், வார்த்தைகள் எல்லாம் கண்ணாமூச்சி விளையாடியது. ஒரு வரி கூட மூளைக்குள் பதிய மறுத்தது. இது அனைத்திற்கும் காரணம் கார்த்திக். அவன் மட்டும்தான். சற்று முன்பு அவர்களுக்குள் நடந்த அந்த உரையாடல்…

எப்போதும் போல கார்த்திக்கிற்குப் போன் செய்தாள். முதல் ரிங்கில் எடுப்பவன் இப்போதெல்லாம் மூன்றாவது நான்காவது ரிங்கில்தான் எடுக்கிறான். இன்றும் அதேபோலத்தான் நடந்தது.

எடுத்ததுமே, “ஷூட்டிங்ல இருக்கேன் யாத்ரா… கொஞ்சம் பிஸி,” என்று மிகச் சுருக்கமாகப் பதிலளித்தான். அவன் இப்படிச் சொல்வதும் முதல் முறை இல்லை. கடந்த ஒரு வாரமாக எப்போது அழைத்தாலும் ‘பிஸி’ என்று ஒரே பதிலைத்தான் வெவ்வேறு தொனியில் மாற்றி மாற்றிச் சொன்னான்.

மீண்டும் அதே வார்த்தையைக் கேட்டதும் எரிச்சலானவள், “நீ எப்போவுமே பிஸிதானா கார்த்திக்…?” என்று உடைந்த குரலில் கேட்டாள்.

“இப்போ கொஞ்சம் இம்பார்டன்ட் வேலை இருக்கு. நீ படிப்புல கான்சென்ட்ரேட் பண்ணு யாத்ரா. எக்ஸாம் வந்துடுச்சு, ஃபியூச்சர் பற்றி யோசி,” என்று அறிவுரை சொன்னான்.

“என் ஃபியூச்சர்ல அப்போ நீ இல்லையா?” என்று கேள்விக்கும் அவனிடம் மௌனம் மட்டுமே பதிலாக இருந்தது.

“நீ என்னை அவாய்ட் பண்றியா?”

“யாத்ரா” என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் அப்படியே நிறுத்திவிட்டான்.

“இல்லைன்னு சொல்ல மாட்டியா கார்த்திக்?”

‘அவகிட்ட இருந்து நீங்களே ஏதாவது காரணம் சொல்லி விலகிடுங்க’

இந்திரன் சொன்னதை நினைத்துக் கொண்டவன் அவள் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டான். அவன் கண்களில் கண்ணீர் சொட்டாகச் சொட்டாக வழிந்தது.

“அப்படின்னா ஓகே, இனி நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீயும் எனக்கு கால் பண்ணத் தேவையில்லை,” என்றவள் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

போனைத் துண்டிப்பது போல மனதின் உணர்வுகளைச் சுலபத்தில் துண்டித்துவிட முடியுமா என்ன?

‘இனி நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்’ என்ற வார்த்தை இதயத்தைத் துண்டு துண்டாக அறுத்தது போன்றதொரு வலி.

குளியலறைக்குள் சென்று ஷவரைத் திறந்தவன் அதன் அடியில் சிலையாக நின்றுவிட்டான். யாத்ராவின் அணைப்பு, முத்தம், காதல் என்று அவன் மனம் அவள் நினைப்புகளை அடுக்கியது. சுவரில் கையை ஓங்கி அறைந்தான். விழும் தண்ணீரோடு அவன் கண்ணீரும் கலந்து மறைந்தது. இந்திரன் சொன்ன அந்த ஒரு வரி,

“அவ வாழ்க்கையில காதலைக் கொண்டு வந்து நீங்க குழப்பம் பண்ணிட்டு இருக்கீங்க”

முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே வர, ஹாலில் அமர்ந்திருந்த சௌந்தர்யா அவனது முகத்தில் படர்ந்திருந்த சோகத்தைக் கவனித்தாள்.

“என்னாச்சு அண்ணா உனக்கு?” என்று அவள் கேட்க, “ஒண்ணுமில்லமா ஒர்க் பிரஷர்,” என்று சமாளித்தான்.

தன்னை மறக்க அவன் வேலைக்குள் மூழ்கினான். அடுத்த சில நாட்கள் பொள்ளாச்சியில் நடக்கவிருக்கும் ஒரு பிரம்மாண்ட படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகளில் தன்னைத் தொலைத்துக் கொண்டான். வேலைகள் மிகத் தீவிரமாக நடந்தன. பொள்ளாச்சி ஷெட்யூலை ஒரு வாரம் நீட்டிக்கச் சொன்னபோது, கார்த்திக் உடனே ஒப்புக்கொண்டான்.

சென்னைக்குத் திரும்பினால் யாத்ராவின் நினைவுகள் தன்னை உடைத்துவிடும் என்று அவனுக்குத் தெரியும். பொள்ளாச்சிக்குக் கிளம்பும் முன் இரவில், பால்கனியில் நின்றபடி யாத்ராவின் எண்ணைத் திரையில் பார்த்தான். ஒரு சின்ன ‘சாரி’ சொன்னால் எல்லாம் சரியாகிவிடும. மனம் கெஞ்சியது. ஆனால், கையை இறுக்கமாக மூடிக்கொண்டு போனை லாக் செய்தான்.

தூரத்தில் ஏற்காட்டில் யாத்ராவும், சென்னையில் கார்த்திக்கும் ஒரே நிலவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், இருவருக்கும் இடையே இருந்த அந்த மௌன இடைவெளி ஒரு நீண்ட பெருவெளியாக வளர்ந்து கொண்டே போனது. அந்தத் தூரம் எங்கே போய் முடியும் என்பது இருவருக்கும் தெரியவில்லை.

துறுதுறுவென்று ஓடிக்கொண்டிருக்கும் தன் மகள், திடீரென்று இப்படி மூலையில் முடங்கிக் கிடப்பதை பிரியாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதுவும் அந்த இரவின் குளிர் கொஞ்சம் கூட உரைக்காதது போல் நின்ற மகள் அருகே வந்து பிரியா,

“யாத்ரா... யாத்ரா” என்று தொடர்ந்து அழைத்தார். அவள் திரும்பக் கூட இல்லை.

“ஏய் யாத்ரா” என்று உலுக்கவும் அவள் ஏதோ கனவிலிருந்து மீண்டவள் போல நிமிர்ந்தாள். அவள் முகத்தில் அப்பிக் கிடந்த சோகத்தைப் பார்த்தவர்,

“கொஞ்ச நாளாவே நீ சரி இல்ல... இப்படிதான் எங்கேயோ பார்த்துட்டு கிறுக்கு பிடிச்ச மாதிரி உட்கார்ந்துட்டு இருக்க... ” என்று விசாரித்தாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல” என்றவள் அவரைத் தவிர்த்துவிட்டு எழுந்து உள்ளே செல்லப் பார்க்க பிரியா மகளின் கையை இறுக்கிப் பிடித்தார்.

“ஒழுங்கா என்ன விஷயம்னு சொல்லிட்டுப் போ”

“அதான் எதுவும் இல்லன்னு சொல்றேன் இல்ல”

“நானும் உன் வயசை கடந்துதான் வந்திருக்கேன்” என்றதும் யாத்ராவின் முகம் மாறியது.

“யாத்ரா இங்கே பாரு” என்று மகளின் கன்னத்தை மிருதுவாகத் தொட்டவர், “என்கிட்ட நீ எதையுமே மறைச்சது இல்ல... இப்போ என்னாச்சு... அம்மா உன்னை புரிஞ்சுக்க மாட்டேனா... சொல்லுடி” என்று இறங்கிய குரலில் கேட்க அந்த நொடியே அவள் கண்களில் கண்ணீர் திரையிட்டது

“என்னம்மா ஏன்மா அழுற?” அவர் மகளிடம் வாஞ்சையுடன் கேட்க,

“நான் கார்த்திக்கை லவ் பண்றேன் மா” என்றவள் அழுது கொண்டே அம்மாவை கட்டிக் கொண்டாள்.

ஏற்கனவே ஒரு முறை விளையாட்டாக கார்த்திக்கை காதலிப்பதாக சொன்னதை நினைத்துப் பார்த்தவர், “உண்மையா சொல்றியா?” என்று மகளின் முகத்தை நிமிர்த்திக் கேட்க,

“ஆமா ம்மா நான் கார்த்திக்கை விரும்புறேன்” என்று சொல்லி மீண்டும் அழுதாள்.

“அவரும் என்னை லவ் பண்றாரு... ஆனா இப்போ திடீர்னு என்னை அவாய்ட் பண்றாரு... ஏன் எதுக்குனு ஒண்ணுமே புரியல... என்னால படிக்க முடியல... சாப்பிட முடியல... வேற எந்த வேலையும் பார்க்க முடியல” என்று தேம்பிய மகளை, “சரி நீ அழாதே... நான் அப்பாகிட்ட சொல்லி கார்த்திக்கிட்ட பேசச் சொல்றேன்” என்று தேற்ற,

“ஒண்ணும் தேவை இல்ல... அவருக்கு நான் வேணாம்னா எனக்கும் அவர் வேணாம்” என்றவள் வீம்புடன் சொல்லிவிட்டு அறைக்குள் சென்று முடங்கிவிட்டாள்.

இரவு, பிரியா தன் கணவர் குமாரிடம் விஷயத்தை சொல்ல,

“உண்மையாவா பிரியா சொல்ற?” என்று அதிர்ந்தார்.

“ஆமாங்க” என்றவர் மகள் அழுததை எல்லாம் சொல்ல அவருக்குத் தாங்கவில்லை. யாத்ரா என்றால் அவருக்கு உயிர்.

பிரியா தொடர்ந்து, “எனக்கு தெரிஞ்ச கார்த்திக் நல்லவர்தான்... ஆனா அவரா ஏன் அவகிட்ட பழகணும்.. இப்போ ஏன் அவளை அவாய்ட் பண்ணணும்?” என்று கேட்க, குமாரின் கண்கள் சுருங்கின. வேறு சில விஷயங்களை அவர் மூளை கணக்கிட்டது.

“இத்தனை நாள் இல்லாம ஏன் இந்திரன் சென்னையில யாத்ராவுக்கு பாதுகாப்பில்லைன்னு சொல்லி இங்கே கூட்டிட்டு வந்து விட்டான்... அதுவும் கிளம்பும் போது அவளை போன் எல்லாம் பேச விடாதீங்கனு வேற சொல்லிட்டுப் போனான்” என்று மகனின் செயலை சந்தேகத்துடன் கூற, பிரியாவிற்குப் புரிந்துவிட்டது.

“இந்திரன் கிட்ட கார்த்திக் பேசி இருப்பானோ?”

“கண்டிப்பா பேசி இருப்பான்” என்றவர் தன் செல்பேசியை எடுத்துக் கொண்டு கோபமாகப் பின்பக்கம் சென்றார்.

“காலையில பேசிக்கலாம்” என்று பிரியா தடுத்தும் கேட்காமல், தனியாக வந்து மகனுக்கு அழைத்தார்.

அவன் எடுத்ததும், “கார்த்திக்கும் யாத்ராவும் காதலிக்கிற விஷயம் உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்று நேரடியாகக் கேட்க, அவன் மௌனமாகிவிட்டான்.

“அப்போ உனக்கு தெரியும்... ஒழுங்கா உண்மையை சொல்லு... நீ கார்த்திக்கிட்ட பேசுனியா?” என்றதும் அவன் தயங்கிய குரலில்,

“ஆமா பேசுனேன்” என்றான்.

“என்ன பேசுன?”

“யாத்ராவை அவாய்ட் பண்ண சொன்னேன்”

“முழுசா சொல்லு என்ன சொன்ன?”

“நீ என் தங்கச்சி கூட பழகினா... நான் உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேன்” என்ற மகன் சொன்னதை கேட்ட குமார் உக்கிரமானார்.

“செருப்பாலடி... நிச்சயம் எல்லாம் பண்ணி முடிச்சுட்டு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லுவியா நீ?”

“அந்த கார்த்திக் யாத்ரா மனசை கெடுத்து இருக்கான்பா... திட்டம் போட்டு அவளை லவ் பண்ண வைச்சு இருக்கான்”

“நீயா ஏதாவது கற்பனை பண்ணி பேசாத... அவங்க இரண்டு பேருக்கும் பிடிச்சு இருக்கு அவங்க காதலிச்சு இருக்காங்க... இதுல நீ தலையிடுறது தப்பு”

“அவன் தங்கச்சி வாழ்க்கைல அவன் முடிவு எடுக்கும் போது நான் என் தங்கச்சி வாழ்க்கைல முடிவு எடுக்க கூடாதா?”

“கார்த்திக் அவன் தங்கச்சியோட காதல் சேரணும்னுதான் இவ்வளவு எல்லாம் பண்ணி இருக்கான்... ஆனா நீ என்ன பண்ணி வைச்சு இருக்க?” என்று குமார் நிதானமாகப் புரிய வைக்க, இந்திரன் அவர் விளக்கத்தை ஏற்கவில்லை.

“சௌந்தர்யா வேற யாத்ரா வேற பா... யாத்ராவுக்கு நிறைய கனவு இருக்கு லட்சியம் எல்லாம் இருக்கு... அவ கார்த்திக்கை கல்யாணம் பண்ணா இது எதுவும் நடக்காது... அவங்க அம்மா நடக்க விட மாட்டாங்க”

“அது அவளோட பிரச்னை... அதை அவ பார்த்துப்பா... உனக்கு அவ காதலில தலையிட எந்த உரிமையும் இல்ல...”

“நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்”

“நீ என்னடா ஒத்துக்குறது... கார்த்திக்கை இப்பவே என் பொண்ணு கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டாலும் நான் பண்ணி வைப்பேன்”

“கார்த்திக் யாத்ராவை கல்யாணம் பண்ணா நான் சௌந்தர்யாவை கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்”

“என்னடா பேசுற?”

“நான் சொன்னது சொன்னதுதான்... என் கல்யாணம் நடக்கணும்னா கார்த்திக் யாத்ராவை கல்யாணம் பண்ணக் கூடாது” என்று இந்திரன் பிடிவாதமாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட, குமார் அதிர்ச்சியானார். மகன் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறான் என்று அவருக்குப் புரியவில்லை.

அப்போது எதார்த்தமாக அங்கே வந்த யாத்ரா அனைத்தையும் கேட்டுவிட்டாள். மேலும் அறைக்குள் சென்ற குமார் மகன் சொன்னதை எல்லாம் மனைவியிடம் தெரிவிக்க, கதவிற்கு வெளியே நின்ற யாத்ராவின் கண்கள் தீயாகத் தகித்தன.

“இந்த விஷயம் யாத்ராவுக்கு தெரிய வேணாம்... சொல்லாதீங்க” என்று பிரியா சொல்ல, “இல்ல அது தப்பு” என்றார் குமார்.

“இந்திரன் சொன்னதுலயும் நியாயம் இருக்கு... அவளுக்கு இப்போ படிப்புதான் முக்கியம்... ஒழுங்கா படிச்சு எம்.பி.ஏ சேரட்டும்... அப்புறம் பார்த்துக்கலாம்” என்று அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டவள் கோபம் இன்னும் அதிகமானது.

அறைக்குத் திரும்பியவளுக்கு உடனடியாக கார்த்திக்கிடம் பேச வேண்டுமென்று தோன்றியது.

அவள் அழைக்க அவன் எடுக்கவில்லை. ஆனால் தொடர்ந்து அடிக்க, அழைப்பு ஏற்கப்பட்டது.

“கார்த்திக் நான் உன்கிட்ட பேசணும்” என, அந்தப் பக்கத்திலிருந்து எந்தப் பதிலும் இல்லை.

“கார்த்திக் இப்போ என்கிட்ட பேசப் போறியா இல்லையா நீ?” என்று சத்தமிடவும், “நான் கார்த்திக் இல்ல அமரேஷ்” என்று பதில் வர, அவள் திகைப்புற்றாள்.

"அமரேஷா?"

“ஆமா கார்த்திக் அவனோட பெர்சனல் போனை காரவன்லயே மறந்து வைச்சுட்டு போயிட்டான்” என்று கூற அவள் தயக்கத்துடன், “சரி நான் கார்த்திக் வந்தா பேசிக்கிறேன்” என்று அழைப்பை துண்டிக்கப் போக,

“நீதானே அன்னைக்கு ஃபங்க்ஷன்ல என் கூட போட்டோ எடுத்துக்கிட்டது?” என்று கேட்டான் அமரேஷ்.

“ஆமா சார் நான்தான்”

“சார் எல்லாம் வேணாம்... கால் மீ அமரேஷ்”

“இல்ல... அது எப்படி?”

“கார்த்திக் என்கிட்ட வேலை பார்த்தாலும் அவன் என் பிரண்ட்தான் அப்போ நீயும் எனக்கு பிரண்ட் மாதிரிதானே” என்றவன் சொல்ல அவள் மெல்லிய குரலில்,

“நீங்க இப்படி சொன்னதுக்கு தேங்க்ஸ்... கார்த்திக் வந்தா ப்ளீஸ் எனக்கு கால் பண்ணச் சொல்லுங்க” என்றாள். அவளுக்கு அப்போது கார்த்திக்கிடம் பேச வேண்டும். அவ்வளவுதான்.

அவள் குரலிலிருந்த அந்தத் தவிப்பை உணர்ந்து கொண்ட அமரேஷ், “கார்த்திக்கும் நீயும் லவ் பண்றீங்களா?” என்று கேட்டான். அவள் அந்த கேள்விக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

“பெர்சனல் கேள்வி கேட்டனா?”

“எனக்கு கார்த்திக்கிட்ட பேசணும்” என்றவள் மீண்டும் சொல்ல,

“நானும் கார்த்திக்கும் ஷூட்டிங்காக பொள்ளாச்சி வந்திருக்கோம்... வேணா நீயும் வா... நேர்ல கார்த்திக்கை மீட் பண்ணலாம்... ஷூட்டிங் கூட பார்க்கலாம்” என்றவன் அடுக்கடுக்காகப் பேசியதில் அவள் மனதில் பதிந்த ஒரே விஷயம் கார்த்திக்கை நேரில் பார்ப்பது.

“பொள்ளாச்சில எங்க?” என்றவள் மெதுவாகக் கேட்க, “நான் லொகேஷன் ஷேர் பண்றேன்... நீ நேர்ல வா... கார்த்திக்கிற்கும் சர்பிரைஸா இருக்கும்” என்றான்.

வீட்டில் என்ன சொல்வது என்று யோசித்திருக்கும் போதே, “என்ன யாத்ரா வர்றியா?” என்று அமரேஷ் கார்த்திக்கின் செல்பேசியில் சேகரித்து வைத்திருந்த யாத்ராவின் படங்களை எல்லாம் வன்மமாக ரசித்தபடி கேட்டான்.

“சரி அனுப்புங்க” என்றாள்.

“நான் என் போன்ல இருந்து அனுப்புறேன்... கார்த்திக்குக்கு தெரிய வேணாம்... பக்கத்துல வந்துட்டா எனக்கு கால் பண்ணு... நான் கார் அனுப்புறேன்" என்றவன் சொன்னதன் உள்நோக்கத்தை அவள் அப்போது புரிந்து கொள்ளவில்லை.

காதலனைப் பார்த்தே தீர வேண்டும் என்ற அந்த ஒற்றைத் தவிப்பில், வேறு எதையும் யோசிக்காமல் சம்மதித்தாள் யாத்ரா. தன் அண்ணன் செய்த துரோகமும், கார்த்திக்கின் மௌனமும் அவளை அந்த முடிவை நோக்கித் தள்ளியிருந்தது. ஆனால், தவிப்பிலும் உணர்ச்சிவசத்திலும் அவள் எடுத்த அந்த ஒரு சிறு முடிவு, தன் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போடக் கூடும் என்பதை பாவம் அவள் அப்போதைக்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை.

You cannot copy content