You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 14

Quote

14

விடியற்காலையில் பேருந்து நிலையம் வந்த யாத்ரா, 'ஏற்காடு டூ சேலம்' என்ற போர்டைப் பார்த்ததும் ஏறிக் கொண்டாள். அவள் ஜன்னல் ஓரம் அமர, பஸ் நகரத் தொடங்கியது. மலைச் சாலைகளில் அது வளைந்து நெளிந்து செல்ல, அவள் மனதில் ஒரு விதமான பதற்றமும் பயமும் ஆட்கொண்டது.

கார்த்திக்கைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷமா, வீட்டை விட்டு வந்த பயமா, அல்லது அவன் என்ன சொல்லப்போகிறான் என்ற எதிர்பார்ப்பா? இதெல்லாம் சேர்ந்த உணர்வுக் கலவையாக அவள் முகத்தில் திரண்டிருந்தன. முகத்தில் மோதிய குளிர்ந்த காற்று அந்தப் படபடப்பைச் சற்று குறைத்தது. அமைதியாகக் கண்களை மூடிக்கொண்டவள் அப்படியே உறங்கிப் போய்விட்டாள்.

சேலத்தில் இறங்கியதும் வீட்டிலிருந்து வந்த அழைப்புகளைப் பார்த்தாள். கூடவே தமையன் அழைத்திருக்க, கடுப்பில் போனை ஆஃப் செய்துவிட்டாள்.

‘இவன் யார் தன் வாழ்வில் முடிவு எடுக்க? இவனுக்குக் காதலிக்க உரிமை இருக்கும் போது, எனக்கு மட்டும் என்னுடைய துணையைத் தேர்வு செய்ய உரிமை இல்லை?’

உள்ளுக்குள் கோபம் தீயாய் எரிந்து கொண்டிருந்தது. ஆதலால் யாருடைய அழைப்பையும் ஏற்கக் கூடாது என்று முடிவாக இருந்தாள். சேலத்தில் இருந்து பொள்ளாச்சி பேருந்தில் ஏறியதும் மனம் ஒரு நிலையில் இல்லை.

அம்மா அப்பாவிற்குத் தேவையில்லாத மன உளைச்சலைக் கொடுத்துவிட்டோம் என்ற சின்ன கலக்கம் வந்தது. உடனடியாக அப்பாவின் எண்ணிற்கு, “நான் கார்த்திக்கைப் பார்க்க வந்திருக்கேன்... பார்த்ததும் கிளம்பி வந்துடுவேன் பா.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்று வாய்ஸ் மெசேஜ் ஒன்றை போட்டுவிட்டாள்.

அடுத்த சில நொடிகளில் இந்திரனிடமிருந்து அழைப்பு வந்தது. அவள் துண்டித்த போதும் அவன் தொடர்ந்து அழைத்தான். அவள் கடுப்பில் ஏற்று காதில் வைத்தாள்.

“ஏய் யாத்ரா, நீ பாட்டுக்கு யார்கிட்டயும் சொல்லாம கிளம்பி போயிருக்க, அறிவு இல்ல உனக்கு?” என்று திட்ட,

“நீ மட்டும் என்கிட்ட எல்லாமே சொல்லிட்டுதான் செய்றியா?” என்று கேட்க, அவன் குரல் சட்டென்று பிசிறு தட்டியது.

“நான் உன் நல்லதுக்காகத்தான் செஞ்சேன்.”

“என் காதலைப் பிரிக்கிறதுதான் நீ எனக்குச் செய்ற நல்லதா?”

“அந்த கார்த்திக் உன்னை ஏமாத்திக் காதலில் விழ வைச்சு இருக்கான்.”

“நீ கார்த்திக் தங்கச்சியை ஏமாத்தின மாதிரியா?”

“எங்க காதல் வேற.”

“அப்போ நீ காதலிச்சா அது நல்ல காதல்... நான் காதலிச்சா அது ஏமாற்றுக் காதல், பொய்க் காதலா?”

“நான் அப்படிச் சொல்லல.”

“நீ அப்படித்தான் கார்த்திக்கிட்ட சொல்லி இருக்க, அவர் தங்கச்சி கல்யாணத்தை வைச்சு பிளாக் மெயில் பண்ணி இருக்க.”

“உன் நல்லதுக்காகத்தான் அப்படிச் செஞ்சேன்.”

“என் நல்லதுக்காகச் செய்றவன் என்கிட்ட பேசணும்... கார்த்திக்கிட்ட பேசி இருக்கக் கூடாது, பிளாக் மெயில் பண்ணி இருக்கக் கூடாது.”

“சரி தப்புதான்... நான் அப்படிப் பண்ணி இருக்கக் கூடாது... நீ வீட்டுக்கு வா பேசிக்கலாம்.”

“மாட்டேன்.”

“மாட்டேன்னா என்ன அர்த்தம்?”

“எனக்கும் கார்த்திக்கும் உன் கல்யாணம் நடக்கிற அதே மேடையில கல்யாணமும் நடக்கணும்... நீ நடத்தணும்… இல்லைன்னா நான் திரும்பி வீட்டுக்கு வர மாட்டேன்...”

“என்னடி பயமுறுத்துறியா?”

“நீ இப்படித்தானே கார்த்திக்கைப் பயமுறுத்தின?”

“யாத்ரா!”

“தேவை இல்லாம பேசாத, நான் சொன்னதை எல்லாம் செஞ்சுட்டு அப்புறம் எனக்குக் கால் பண்ணு,” என்று அதிரடியாகத் தமையனுக்குச் செக் வைத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான் இந்திரன். சிறு வயதிலிருந்தே யாத்ராவின் பிடிவாதத்தைப் பார்த்திருக்கிறான். எந்த ஒரு முடிவை எடுத்துவிட்டாலும் அதில் தீவிரமாக இருப்பாள். அந்தப் பிடிவாதமும் உறுதியும் அவளைப் பள்ளி, கல்லூரியில் முதல் மாணவியாகத் திகழ வைத்தது.

ஆனால் வாழ்க்கையிலும் அதே பிடிவாதம் ஒத்து வருமா? தங்கையின் முடிவை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று யோசிக்கவே தலை சுழன்றது. வீட்டில் சொன்னால், “எல்லாம் உன்னாலதான்” என்று அம்மாவும் அப்பாவும் அவனைத்தான் திட்டுவார்கள்.

கார்த்திக்கிடம் பேசலாம்தான். ஆனால் முந்தைய முறை அவனிடம் அடாவடித்தனமாக அடித்துப் பேசிவிட்டு, இப்போது அப்படியே தலைகீழாகப் பேசினால் தன்னைப் பற்றி என்ன நினைப்பான்?

இப்படியாக இந்திரனைச் சிக்கலில் மாட்டிவிட்ட யாத்ரா, அவள் அறியாமல் அமரேஷின் வலையில் சிக்கிக் கொள்ள இருந்தாள். அப்போது கார்த்திக்கிற்கு அழைத்து பேசலாம் என்று ஒரு மனசு அவளை நச்சரித்தது.

அதே சமயம் அவள் கைப்பேசியில், “Reached ah?” என்று அமரேஷிடமிருந்து செய்தி வந்தது. “On the way…” என்று பதிலனுப்பினாள். மறுநொடியே அடுத்த செய்தி வந்தது: “Don’t worry… I’ll pick you.”

அதைப் பார்த்ததும் அவள் மனதில் ஒரு பரவசம். அதுவும் அவனுடனான செல்பியை இன்ஸ்டாவில் பகிர்ந்து போது ஏகப்பட்ட லைக்குகள். ஆனால் அந்தப் படத்தில் அமரேஷ் வந்து லைக் போடக்கூடும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு பெரிய நடிகன் மிகச் சாதாரணமாகத் தன்னிடம் பேசுகிறான் என்ற உணர்வு ஏற்படுத்தும் போதை அலாதியானது. ஆனால் அவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருக்கும் அவன், எந்த ஆதாயமும் இல்லாமல் ஏன் தன்னிடம் பேச வேண்டும்? அது என்ன விபரீதத்தில் தன்னைக் கொண்டு போய் விடும் என்று யோசிக்க அவள் மூளை மறந்து போனது. அது அவனுடைய நாயகன் பிம்பத்தின் மீதான நம்பிக்கை.

அதே வேளையில், 'கார்த்திக்கிடம் சொல்லாமல் இப்படி வருவது சரியா?' என்ற மெல்லிய குற்ற உணர்வும் உள்ளுக்குள் எழுந்ததுதான். பேசலாமா என்று ஒரு நொடி யோசித்தாள். ஆனால் அவன், ‘ஏன் இங்கே வந்தாய்?’ என்று கேட்டால் என்ன சொல்வது? எதுவாக இருந்தாலும் நேரில் பார்த்துப் பேசிக்கொள்ளலாம் என்று அந்த எண்ணத்தை உடனடியாகத் தள்ளி வைத்தாள். அதற்கு அமரேஷ் வேண்டாமென்று சொன்னது ஒரு முக்கிய காரணம்.

ஒரு வழியாகப் பேருந்து பொள்ளாச்சியில் வந்து இறங்கியது. அங்கே மாலை நேரத்து நெரிசல் அலைமோதிக் கொண்டிருக்க, கீழே இறங்கியவள் அமரேஷ் எண்ணிற்குத் தகவல் அனுப்பினாள். அவன் பார்ப்பானா என்று சந்தேகித்தாள். ஆனால் சில நிமிடங்களில் ஒரு கருப்புக் கார் அவள் முன்னே வந்து நின்றது.

“நீங்கதான் யாத்ராவா… சார் கூட்டிட்டு வர சொன்னாரு,” என்றான் டிரைவர். அவன் பார்வை ஒருவித ஏளனத்துடன் அவளை நோக்கியது. ஒரு நொடி தயக்கம்… ஆனால் அந்தத் தயக்கத்தை விட கார்த்திக்கைப் பார்க்கும் ஆர்வம் மேலோங்கியது. அவள் காரில் ஏறிவிட்டாள்.

பெரிய சாலை மெதுவாகக் குறுகியது. அதன் பின் ஒரு கரடுமுரடான மண் பாதை. இருபுறமும் உயர்ந்த தென்னை மரங்கள். நிலவொளி கூட உள்ளே நுழைய முடியாத அடர்ந்த தோப்பு. அந்த நிழல் அவளுக்கு ஒரு வித அசௌகரியத்தைத் தந்தது. கார் செல்லச் செல்ல வெளிச்சம் குறைந்து கொண்டே வந்தது.

அந்தப் பயங்கரமான மௌனத்தைச் சுமந்திருந்த ஒரு ஓட்டு வீட்டின் முன் கார் நின்றது. “சார் இங்கேதான் இருக்காரு,” என்றான் டிரைவர். அவள் சுற்றிப் பார்த்தாள். எங்கும் படப்பிடிப்பு நடப்பதற்கான அறிகுறியே இல்லை. லைட்டுகள் இல்லை, கேமராக்கள் இல்லை, மனித நடமாட்டமே இல்லை.

“இங்கே ஷூட்டிங் நடக்கலையா?” என்று கேட்டாள்.

“அது இன்னும் உள்ளே… ஆனா ஐயா இங்கேதான் ஓய்வு எடுக்குறாரு,” என்றவன் அவளை உள்ளே தள்ளாத குறையாக வழிநடத்திக் கொண்டு வந்து அந்த வீட்டின் முன்னே நிறுத்திவிட்டான்.

அவள் தயக்கமாகக் கதவைத் திறந்து உள்ளே செல்ல, அமரேஷ் ஒரு சோபாவில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்ததும் ஒரு விகாரமான புன்னகையுடன் எழுந்து வந்தான்.

“கார்த்திக் எங்க?” அவள் குரல் நடுங்கியது.

“ஒரு வேலையா போயிருக்கான்… வந்துருவான். நீ ஏன் அவனைப் பத்தியே கவலைப்படுற?” என்றான். அவள் பார்வை அந்த மது பாட்டிலின் மீது விழ, “உட்காரு யாத்ரா,” என்றான்.

“நான் கார்த்திக்குக் கால் பண்றேன்,” என்று நடுங்கும் விரல்களால் போனைத் தேடினாள்.

“சொல்றேன் இல்ல உட்காரு,” என்றபடி அவள் தோளைத் தொட, தீயைத் தொட்டது போல பட்டென்று விலகினாள். அவன் இன்னும் நெருங்கி வர, உடல் நடுங்கியது.

“ஆமா ஏன் இப்படி வேர்க்குது உனக்கு?” என்று தன் கைக்குட்டையை எடுத்து அவள் முகத்தருகே வரவும், “நான் போறேன்,” என்றவள் நகர, அவன் மறித்து நின்றான். அவள் பயந்தாள்.

“நீ என்னோட ஃபேன் இல்லையா… அப்புறம் என்கிட்ட பேசாம அவனையே தேடுற? நான் நினைச்சா உன்னை எவ்வளவு உயரத்துக்குக் கொண்டு போக முடியும் தெரியுமா?” என்றவன் அவளது முகவாயைப் பிடிக்க முயன்றான். அவன் கையைத் தட்டிவிட்டவள், “நான் கார்த்திக்காகத்தான் வந்தேன்…” என்றவள் வாசலை நோக்கி ஓட முயன்றாள்.

அவன் மின்னல் வேகத்தில் அவளது வழியை மறித்தான். “நீ ரொம்ப அழகா இருக்கே யாத்ரா…?” அவனது கண்கள் போதையில் சிவந்திருந்தன. “நான் நினைச்சா உனக்கு ஆக்டிங் சான்ஸ் வாங்கித் தர முடியும்… பெரிய ஸ்டார் ஆக்க முடியும்… ஆனா அதுக்கு நீ எனக்கு ஒத்துழைக்கணும்.”

“எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லை… வழியை விடுங்க,” என்று அவள் பின்னோக்கி நகர்ந்தாள். ஆனால் வழி விடாமல் அவளை இன்னும் பின்னோக்கித் தள்ளவும் அவளது முதுகு சுவரில் முட்டியது.

“இவ்வளவு தூரம் வந்துட்டு, உடனே போகணும்னா எப்படி? கொஞ்ச நேரம் என் கூட இருந்துட்டு போ,” என்றவன் வக்கிர பார்வையுடன் கூறிய நொடி, “மரியாதை கெட்டுடும்... ஒழுங்கா வழியை விடு,” என்று சீறினாள்.

அவன் சத்தமாகச் சிரித்தான். திரையில் அவள் பார்த்து ரசித்த வசீகர சிரிப்பில்லை அது. ஒரு வித அருவருப்புடனும் அசிங்கத்துடனும் இருந்தது. அந்தச் சிரிப்புடன் அவளை இன்னும் நெருங்கினான்.

“மரியாதை எல்லாம் உன்கிட்ட நான் எதிர்பார்க்கல செல்லம்... நான் எதிர்பார்க்குறதே வேற,” என்றவன் அவளது கழுத்தைச் சுற்றித் தன் கையை வளைத்தான். அவளது மூச்சுக்காற்று அவனது நெடியால் திணறியது.

அவனைத் தள்ளிவிடப் போராடினாள். அவன் பிடியைத் தளர்த்த முயன்று அவனது கைகளைக் கிள்ளினாள். ஆனால் அந்தப் பிடியில் ஒரு மிருகத்தனமான வலிமை.

“காப்பாத்துங்க... யாராச்சும் காப்பாத்துங்க!” என்று கதறினாள். ஆனால் அந்தத் தோப்பு வீட்டைச் சுற்றி கிலோமீட்டர் கணக்கில் மனித சஞ்சாரமே இல்லை. அவளது அலறல் தென்னை மரங்களின் இடையே காணாமல் தேய்ந்து போனது. அவள் கண்கள் கார்த்திக்கைத் தேடின. ‘காப்பாத்து கார்த்திக்’ என்று மனதிற்குள் கதறின.

அதே நேரத்தில்… கார்த்திக் அமரேஷைத் தேடிக் கொண்டிருந்தான். அவனுக்குத் தெரியாமல் எங்கேயும் செல்ல மாட்டானே என்று யோசித்தவன், உதவியாளரைப் பார்த்ததும், “அமரேஷ் எங்க?” என்று கேட்டான்.

“டைரக்டர்கிட்ட பேசிட்டு இருந்தாரு…” என்றான்.

“நான் இப்பதான் டைரக்டரைப் பார்த்துட்டு வந்தேன்… அமரேஷ் அங்கே இல்லையே,” என அந்த உதவியாளர் திருதிருவென்று விழித்தான்.

“ஒழுங்கா சொல்லு… சார் எங்கே?” என்று அழுத்திக் கேட்க, அந்த உதவியாளர் பயந்துபோய், “யாரோ ஒரு பொண்ணு வந்திருக்காம்… அவளை அந்தத் தோப்பு வீட்டுக்கு வரவழைச்சிருக்காரு அண்ணா… யாருக்கும் தெரியக்கூடாதுன்னு சொன்னாரு,” என்று ரகசியமாகச் சொல்ல, கார்த்திக்கின் கண்கள் சிவந்தன.

‘ஷூட்டிங் வந்துட்டு என்ன வேலை பார்த்துட்டு இருக்கான் இவன்? விஷயம் வெளியே லீக்கானால் என்ன ஆகுறது... இவன் இமேஜ் பத்தி நான்தான் கவலைப்படுறேன், இவனுக்கு அதை பத்தி கொஞ்சமும் கவலை இல்லை,’ என்று கார்த்திக் தலையில் அடித்துக் கொண்டான். அமரேஷின் புத்தி அவனுக்குத் தெரியும்.

"யாரு அந்தப் பொண்ணு?" என்று தொடர்ந்து கேட்க, “யாருன்னு எல்லாம் தெரியல,” என்று இழுத்தான். அமரேஷின் இந்த வக்கிர நடவடிக்கை கார்த்திக்கிற்குள் எரிச்சலைக் கிளப்பியது. ‘ஆனால் என்ன செய்வது... அவன் பெரிய ஹீரோவாக இருக்கிறானே?’ என்று நினைத்துக் கொண்ட நொடி அவனது கைப்பேசி அதிர்ந்தது.

திரையில் யாத்ராவின் பெயர் ஒளிர்ந்தது. ‘டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்’ என்று விட்டு அவளே ஏன் கூப்பிடுகிறாள்? அவளின் அழைப்பை ஏற்கவும் பேசவும் மனம் துடித்தாலும் அவன் அதைச் செய்யவில்லை. அவளிடம் பேசினால் தன் மனம் இறங்கிவிடும், தன் தங்கையின் திருமணம் கேள்விக்குறியாகிவிடும் என்ற பயத்தில் அவள் அழைப்பை ஏற்கவில்லை.

தன்னுடைய தனிப்பட்ட அலைபேசியை அணைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். அதே நேரம் அவள் கையிலிருந்த அலைபேசியைத் தட்டிவிட்ட அமரேஷ், ஆவேசமாக மீண்டும் அந்த வீட்டிற்குள் இழுத்து வந்து தள்ளிக் கதவைப் பூட்டினான்.

You cannot copy content