மோனிஷா நாவல்கள்
Kadhalum Kabadamum - Episode 17

Quote from monisha on July 6, 2026, 6:53 PM17
மேகக் கூட்டங்களைக் கிழித்துக் கொண்டு, சூரியனின் ஒளிக் கீற்றுகள் மெல்லத் தரை இறங்க, உலகம் முழுக்க ஒரு புதிய விடியலின் அழகை ரசிக்கக் காத்திருந்தது. ஆனால் யாத்ராவின் மனம், 'இந்த இருள் இன்னும் கொஞ்ச நேரம் நீடிக்கக் கூடாதா?' என்று ஏங்கியது.
காலத்தின் ஓட்டத்தை யாரால் நிறுத்த முடியும்? இயற்கையின் நியதிப்படி, நடக்க வேண்டியவைகள் நடந்தே தீரும்.
திருமண மண்டபத்தின் மொட்டை மாடிச் சுவரில் கைகளை ஊன்றி நின்றிருந்தாள் யாத்ரா. கீழே மங்கள இசைக்கான ஏற்பாடுகளும், உறவினர்களின் நடமாட்டமும் மெல்லத் தொடங்கிக் கொண்டிருந்தன. இன்னும் சில மணி நேரங்களில் திருமணச் சடங்குகள் தொடங்கிவிடும். அதற்குள் எப்படியாவது... ஒரே ஒரு முறையாவது கார்த்திக்கிடம் பேசிவிட வேண்டும் என்ற தவிப்பு அவளை அணு அணுவாக உலுக்கியது. தன் கையில் இருந்த செல்பேசியை இறுகப் பற்றிக் கொண்டு, அவனது பதிலுக்காகக் காத்து நின்றாள்.
ஆனால், அவன் அவள் செல்பேசி அழைப்புகள், குறுந்தகவல்கள் எதற்கும் பதிலளிக்கவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு இதையேதான் அவள் செய்தாள்; இப்போது அவன் செய்கிறான். வாழ்க்கை முழுக்கவுமா இப்படியே பழிக்குப் பழி வாங்கப் போகிறான் என்று நினைக்கும்போதே அவள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.
அப்போது படிக்கட்டுகளில் யாரோ ஏறி வரும் காலடிச் சத்தம் கேட்க, அவள் அவசரமாக முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
"உன்னை எங்கெல்லாம் தேடுறது... போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குற?" என்று பிரியா பதற்றமும் கோபமும் கலந்த தொனியில் கேட்க, அவள் சலிப்பாக முகத்தைத் திருப்பிக் கொண்டு பேசினாள்.
"எங்கே போயிடப் போறேன்... ஓடிப் போகக் கூட முடியாதே என்னால."
"யாத்ரா!"
"அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடாதீங்க, வரேன்," என்றவள் மணமகன் அறைக்குச் சென்றாள்.
அங்கே ஏற்கனவே இந்திரன் மணக்கோலத்தில் தயாராக இருந்தான். அவளைப் பார்த்ததும், "எங்கடி போன?" என்று பல்லைக் கடிக்க,
"ஓடி எல்லாம் போக மாட்டேன், கவலைப்படாதே," என்று அலட்சியமாகச் சொன்னாள்.
"ஒரு தடவை ஓடிப் போய்த்தான் இருக்கிற எல்லாப் பிரச்சினையும் இழுத்துட்டு வந்தியே... போதாதா?" என்று அவன் குத்தலாகச் சொல்ல, அவள் முறைத்துக் கொண்டு நின்றாள்.
"நீ சும்மா இரு இந்திரா," என்று அதட்டிய பிரியா, "நீயும் போய் சீக்கிரம் குளிச்சுட்டு வந்து ரெடியாகு," என, அவள் தயங்கி நின்றாள்.
"யாத்ரா, டைமாச்சு!" என்று சத்தமிட, அவள் அமைதியாகக் குளியலறைக்குள் புகுந்தாள். அங்கிருந்த கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைக் காணும்போதே அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
"எல்லாமே உன்னாலதான்... உன்னாலதான்!" என்று தன் மீதே குற்றம் சாட்டிக் கொண்டவளுக்கு, இன்னும் நடந்த எதையும் நம்ப முடியவில்லை.
அமரேஷ் எல்லை மீறியதைக் கூடக் காலப்போக்கில் அவளால் மறந்துவிட முடியும். ஆனால், கார்த்திக் குற்றம் சாட்டியது... அதுவும் நடந்ததை அவள் வீட்டில் மறைத்தற்குக் காரணம், தன் தப்பை எண்ணி அவளே அவமானப்படுகிறாள் என்று அவன் சுட்டிக்காட்டியது... அந்த வார்த்தைகள் எல்லாம் அவளைப் பெரிதும் காயப்படுத்தின.
அந்த நொடி, 'நான் என்ன தப்பு செய்தேன்?' என்ற கோபம் எழுந்தது. உடனடியாக இன்ஸ்டாகிராமில் அமரேஷ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதைப் பற்றி எல்லாம் லைவ்வாகப் பேசி ஒரு வீடியோ போட்டுவிட்டாள்.
வீட்டினர் அதிர்ச்சியடைந்த அதே நேரம், அந்த வீடியோ வைரலாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பெண்கள் சார்ந்து அமரேஷ் மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இதுபோன்று யாருமே வெளியில் சொன்னதில்லை.
செய்தி சேனல்களும், யூடியூப் சேனல்களும் பலவும் அமரேஷைக் கிழி கிழியென்று கிழித்துக் கொண்டிருந்தன. சிலர் யாத்ராவின் அடையாளத்தைக் கண்டுபிடித்து நேரடியாகப் பேட்டி காண விரும்பினர்.
"நீ இதுவரைக்கும் பண்ணினதே போதும், இன்னும் பேசிப் பிரச்சினையைப் பெருசாக்காத," என்று இந்திரன் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கொண்டான்.
இந்த நிலையில், யாத்ராவின் மார்பிங் வீடியோ ஒன்று சமூக ஊடகங்கள் முழுவதும் பரப்பப்பட்டது. அவ்வளவு அருவருப்பாகவும் அசிங்கமாகவும் இருந்த அந்தக் காணொளியின் சிறு துணுக்குகளைப் பகிர்ந்த நெட்டிசன்கள், 'இது ஆளு இல்லடா, ஐட்டம்' என்று தரக்குறைவாகப் பதிவுகள் போட்டனர். அதனை அமரேஷின் ரசிகர்கள் பலரும் பகிர்ந்தனர்; மிக மோசமான கெட்ட வார்த்தைகளால் அவளை நிந்தித்தனர்.
இது ஒன்றும் புதியதல்ல. அரசியல் அல்லது சினிமா பிரபலத்தின் மீது ஒரு பெண் பாலியல் குற்றம் சாட்டினால், அந்தப் பெண்ணையே விமர்சிக்கும் போக்கு இங்கு காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கு யாத்ராவும் விதிவிலக்கில்லை.
ஆனால், அவள் இதற்காகவெல்லாம் அஞ்சவில்லை. "அது வெறும் என்னோட மார்பிங் வீடியோ, இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்," என்று அவள் தன் நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தாள்.
அதேபோல இந்திரனாலும் அவள் பெற்றோராலும் நடப்பதையெல்லாம் இயல்பாகக் கடக்க முடியவில்லை.
அந்த மார்பிங் வீடியோவைக் கண்ட இந்திரன் தாங்க முடியாமல் கார்த்திக்கிடம் சண்டைக்குப் போய்விட்டான். அவன் சட்டையைப் பிடித்து, "இதெல்லாம் உன்னாலதான்... உன்னை என் தங்கச்சி காதலிச்சதாலதான்!" என்று பழி போட, கார்த்திக் பதிலுக்கு, "நீ என்னை யாத்ராகிட்ட பேசக் கூடாதுன்னு சொன்னதாலதான் இதெல்லாமே நடந்துச்சு," என்று திருப்பிப் பழி போட்டான்.
"நீதானே அவளை அமரேஷ்கிட்ட கூட்டிட்டுப் போய் காட்டின?"
"ஆனா இப்படி எல்லாம் நடக்கும்னு நானும் நினைக்கலையே!"
"சுலபமா சொல்லிட்ட, ஆனா பாதிப்பு என்னவோ என் குடும்பத்துக்குத்தானே?"
"எனக்கு மட்டும் பாதிப்பு இல்லையா?"
"உனக்கு என்ன பாதிப்பு?"
"அந்த அமரேஷ்கிட்ட திரும்பவும் வேலை செய்ய மாட்டேன்னு சொல்லிட்டேன்... இப்போ வேலை இல்லாம இருக்கேன்... யாரால? எல்லாம் உன் தங்கச்சியால!" என்று கார்த்திக் சொல்ல, இந்திரனின் கோபம் சட்டென்று இறங்கிவிட்டது.
"சறுக்கு அடிப்பியா?" என்று கேட்டான் கார்த்திக்.
"அது கொஞ்சமா?" என்றதும் இருவரும் சேர்ந்து பாருக்குச் சென்றனர்.
மாற்றி மாற்றிக் குற்றம் சாட்டிக் கொண்டவர்கள் குடிக்கத் தொடங்கியதும், 'எல்லாம் தப்பும் என்னோடதுதான்' என்று மாறி மாறித் தங்களுடைய தப்பைத் தாமே ஒப்புக்கொண்டனர்.
"இந்தப் பிரச்சினையை நான் சரி பண்றேன்," என்று கார்த்திக் அவனுக்குக் குடித்துவிட்டு வாக்குறுதி கொடுத்தான்.
"இந்தப் பிரச்சினையை மட்டும் நீ சரி பண்ணா, நான் என் தங்கச்சியை உனக்கே கல்யாணம் பண்ணிக் கொடுக்குறேன்... என் கல்யாணம் நடக்கிற அதே மேடையில!" என்று இந்திரன் மறுவாக்குறுதி கொடுத்தான்.
குடிபோதையில் பேசிக் கொண்டவர்கள் கப்சிப்பென்று வீட்டில் வந்து படுத்துவிட்டனர். ஆனால், அடுத்த நாள் கார்த்திக் சொன்னது போலவே அந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டிருந்தான்.
அவனுக்குப் பரிச்சயமான நியூஸ் சேனல்கள், யூடியூபர்களிடம் எல்லாம் அமரேஷ் பற்றிய தனக்குத் தெரிந்த பல ரகசியங்களில் ஒன்றிரண்டைப் போட்டுவிட்டான். அது சார்ந்த ஆதாரங்களையும் அவன் வழங்க, சூழ்நிலை மீண்டும் அமரேஷுக்கு எதிராகத் திரும்பியது.
"அவன் அந்தப் பொண்ணு சொன்ன மாதிரி பொறுக்கிதான் போல," என்று பேச ஆரம்பித்தனர். யாத்ரா மீது வேண்டுமென்றே பரப்பப்பட்ட வதந்திகள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போயின.
கார்த்திக்கை அழைத்து இந்திரன் நன்றி சொல்ல, "நான் சொன்னதைச் செஞ்சுட்டேன்... நீ சொன்னது?" என்ற போதுதான் அவனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது.
"என்ன? குடிபோதையில உளறிட்டியோ?" என்று கார்த்திக் எள்ளலாகக் கேட்க, "அப்படியெல்லாம் இல்ல, நான் சொன்னா சொன்னதுதான்," என்றான் இந்திரன் திடமாக.
"அப்போ உங்க வீட்டுல பேசிட்டுச் சொல்லு," என்றவன் அழைப்பைத் துண்டிக்க, இந்திரனுக்கு வீட்டில் பேசுவதை நினைத்தாலே கொஞ்சம் பதற்றமாக இருந்தது.
அவன் அம்மா அப்பாவை மட்டும் தனியாக அழைத்துப் பேசினான்.
"இப்போ நடந்த பிரச்சினைக்கு எல்லாம் ஒரே தீர்வு யாத்ராவைக் கார்த்திக்கிற்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுதான்," என்று சொன்ன மகனைப் பிரியாவும் குமாரும் நம்ப முடியாமல் பார்த்தனர்.
"யாத்ராவாலதான் கார்த்திக் வேலையைக் கூட விட்டுட்டான்... இப்போ ரிஸ்க் எடுத்து அவளைப் பெரிய சிக்கலிலிருந்து காப்பாத்தியிருக்கான்... அவனை விட யாருப்பா யாத்ராவை நல்லா பார்த்துக்க முடியும்?" என்று ஒரு தூண்டிலைப் போட,
"நீ சொல்றதெல்லாம் சரிதான், ஆனா உடனே ஏன் பண்ணனும்?" என்று கேட்டார் குமார்.
"ஏன்னா, இப்பதான் யாத்ராவுக்குக் கல்யாணம்கிற அடையாளம் அவசியம்... எல்லாரும் அவளைப் பார்க்கிற பார்வை மாறும்... அதுவும் இல்லாம கார்த்திக் கண்டிப்பா அவள் படிப்பை நிறுத்த மாட்டான்."
அவன் பேசப் பேசப் பிரியாவின் மனம் மாறியது. "இந்திரன் சொல்றதும் சரியாத்தான் இருக்கு."
"ஆனா யாத்ரா இதுக்குச் சம்மதிக்கணுமே?"
"என் ரிசப்ஷன் முடிஞ்சு சொல்லிக்கலாம்."
"அது தப்புடா," என்று பிரியாவும் குமாரும் ஒருசேரச் சொல்ல, "அப்படின்னா இப்பவே போய் சொல்லுங்க," என்றவன் கைகட்டி நிற்க, அவர்களுக்கும் அவளிடம் அது பற்றிப் பேசப் பயமாக இருந்தது.
ஆனால், இந்திரன் தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீட்டில் சம்மதித்துவிட்டதாக அவன் கார்த்திக்கிடம் கூற, அவன் தேன்மொழியிடம் பேசினான்.
"யாத்ராவுக்கு நடந்த எல்லாத்துக்கும் நான்தான் காரணம். அமரேஷை அவளுக்கு அறிமுகம் செஞ்சு வச்சதே நான்தான்... என்னால்தான் அவள் இவ்வளவு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டாள்... அதையெல்லாம் நான்தான் சரி பண்ணனும்," என்றவன் அம்மாவின் மனதை ஒரு மாதிரி கரைத்துச் சம்மதமும் வாங்கிவிட்டான்.
ஆனால் சௌந்தர்யா - இந்திரன் கல்யாண வரவேற்பு நடந்து முடியும் வரை யாத்ராவிடம் யாருமே இந்த விஷயத்தைக் கூறவில்லை. இரவு அவர்கள் திருமணத்திற்குத் தாம்பூலம் மாற்றும் நேரத்தில்தான் பிரியா விஷயத்தைப் போட்டு உடைத்தார்.
"யாரைக் கேட்டு இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க நீங்க?" என்றவள் பொங்க,
"இதுவரைக்கும் உன் வாழ்க்கையில எல்லா முடிவையும் நீதான் எடுத்திருக்க, நாங்க எப்பவுமே அதுல தலையிட்டது இல்ல... ஆனா இப்போ," என்று பிரியா நிறுத்த,
"இப்போ என்னம்மா ஆச்சு?" என்று சீறினாள் யாத்ரா.
"உன் மேல இருந்த நம்பிக்கை போச்சு," என்றான் இந்திரன்.
"நீ பேசாத, உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல."
"சம்பந்தம் இல்லையா... நான் உனக்காக என் கல்யாணத்தை நிறுத்தக் கூடத் தயாரா இருந்தேன்... நீ படிக்கணும், நீ ஆசைப்பட்டது எல்லாம் நடக்கணும்னு நான் உனக்காகக் கார்த்திக்கிட்ட சண்டை போட்டேன்."
"உன்னை நான் என்னவோ சண்டை போடச் சொன்ன மாதிரி பேசுற!"
"ஆனா எல்லாமே நீ ஆரம்பிச்சு வச்சதுதான்... கார்த்திக்கைக் காதலிச்சது தொடங்கி இப்போ அந்த வீடியோ வரைக்கும் எதையுமே நீ யோசிச்சுச் செய்யல... இப்போ எங்களை இந்த நிலைமைக்குத் தள்ளியிருப்பதும் நீதான்!"
"இல்ல... இதுக்கு எல்லாம் நான் காரணம் இல்ல... நான் எந்தத் தப்பும் செய்யல," என்றவள் அதையே சொல்ல,
"ஆமா, நீ எந்தத் தப்பும் செய்யலமா," என்று சொன்ன குமார், "நாங்கதான் தப்பு செஞ்சுட்டோம்," என்று மனம் வருந்தினார்.
"அப்பா!" என்றவள் அதிர்ச்சியுடன் திரும்ப, "எல்லோரும் சொல்ற மாதிரி எங்க வளர்ப்புலதான் தப்பு," என்று சொல்லும்போதே குமாரின் கண்கள் கலங்கின.
அவர் மேலும், "எங்க பேர்லதான் தப்பு, உன் பேர்ல தப்பில்லை... இந்திரன் சொன்னது போல நான்தான் உனக்கு அதிக செல்லம் கொடுத்துக் கெடுத்துட்டேன்... இன்னும் கேட்டா இது முழுக்க முழுக்க என் தப்புதான்."
"ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதீங்கப்பா," என்றவள் அவர் கையைப் பிடித்துக் கொள்ள,
"நானும் உங்க அம்மாவும் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்ட போது எங்க அம்மா, அப்பா, சொந்தக்காரங்க எல்லோரும் எதிர்த்தாங்க... நல்லாவே வாழ மாட்டோம்னு சொன்னாங்க... அவங்களுக்கெல்லாம் இன்னைக்குச் சந்தோஷமா இருக்கும்."
"அப்படி எல்லாம் இல்லப்பா... இந்தப் பிரச்சினை எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்... நான் கண்டிப்பா நல்லாப் படிச்சு உங்க பேரைக் காப்பாத்துவேன்... உங்க வளர்ப்பு தப்பில்லைன்னு நிரூபிப்பேன்," என்று யாத்ரா நம்பிக்கையுடன் கூற, மகள் தலையை வருடியவர்,
"இப்போ இந்த நிமிஷம் நிரூபிக்க முடியுமா உன்னால?" என்று கேட்க, அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
"அப்பா!" என்றவள் அதிர்வுடன் நோக்க,
"உன் விருப்பத்துக்கு மாறா நாங்க என்னைக்குமே நடந்துக்கிட்டது இல்ல... இந்த ஒரு விஷயத்தை எங்களுக்காக நீ செய்யக் கூடாதாம்மா?" என்று குமார் மகளிடம் இறைஞ்ச, அவள் பதறிப் போனாள்.
"உங்களுக்காக நான் என்ன வேணா செய்வேன் பா... நீங்க சொன்னா அதை மறுக்க மாட்டேன்... ஆனா அந்தக் கார்த்திக் நடந்த எல்லாமும் என் தப்புன்னு சொன்னான்," என்றவள் அழுதுகொண்டே தன் நிலைப்பாட்டை உரைத்தாள்.
"அதே கார்த்திக்தான் உன் பேர்ல எந்தத் தப்பும் இல்லைன்னு மீடியாவையெல்லாம் சொல்ல வச்சான்... அவன் நல்லவன்மா... அன்னைக்கு உன்கிட்ட ஏதோ ஆதங்கத்துல அப்படிப் பேசிட்டான்," என்று சொல்ல, அவளுக்கு அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவள் மௌனமாக நின்றுவிட்டாள்.
"இதுக்கு மேல நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்," என்றவர் வெளியே சென்றுவிட, சில நொடிகள் யோசித்தவள் பின் அம்மா கொடுத்த புடவை, நகைகளையெல்லாம் உடுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.
அவர்கள் தட்டை மாற்றிக் கொள்ள கார்த்திக் அருகே நின்றிருந்தான். அவளை அவன் திரும்பிப் பார்க்கவில்லை; அவனும் அவள் புறம் திரும்பவில்லை. அவளுக்குத் திருமணத்தை இனி நிறுத்த முடியாது என்று புரிந்துவிட்டது. ஆனால், இதில் கார்த்திக்கின் நிலைப்பாடு என்னவென்றுதான் புரியவில்லை.
அன்று அவன் கோபத்தில் பேசியதாகவே இருந்தாலும், ஒரே ஒரு முறை அவளிடம் மன்னிப்புக் கேட்டிருக்கலாமே! ஆனால், அவன் அவளைத் தொடர்பு கொள்ளக்கூட முயற்சி செய்யவில்லை.
இந்தக் குழப்பங்களின் நடுவேதான், அவள் திருமணத்திற்காகக் குளித்துவிட்டுத் தயாரானாள். ஒவ்வொரு நகையையும் அவள் உடலில் பூட்டும்போது, மனம் வலித்தது.
மணமேடையில் ஒரு பக்கம் சௌந்தர்யாவின் கையைப் பிடித்தபடி, ஒரு முழுமையான மணமகனின் நிம்மதியோடு இந்திரன் அமர்ந்திருந்தான். மறுபக்கம், யாத்ராவின் அருகில் கார்த்திகேயன். அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. தான் காதலித்த பெண்ணைக் கரம் பிடிக்கிறான் என்ற மகிழ்ச்சியும் இல்லை. ஏதோ சூழ்நிலைக் கைதியாக இங்கு அமர்ந்திருக்கிறோம் என்ற உணர்வுதான் அவன் முகத்தில் வெளிப்பட்டது.
கெட்டி மேளம் முழங்கியது. நாதஸ்வரத்தின் சத்தம் காதைப் பிளக்க, அட்சதை தூவ... இரு தம்பதியரின் திருமணமும் நடந்தேறியது. கார்த்திக் அவள் கழுத்தில் தாலி கட்டிய அந்த நொடியில், யாத்ராவின் உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்கியது.
ஆனால், வளர்ப்புத் தப்பாகிவிட்டதோ என்று கலங்கிய தன் பெற்றோரை எல்லோர் முன்பும் அவமானப்படுத்திவிடக் கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.
புகைப்படக் கலைஞர்களின் கேமரா வெளிச்சத்திற்கும், உறவினர்களின் வாழ்த்துகளுக்கும் முன்னால், தன் வலிகளை அழுகைகளை காட்டிவிடக் கூடாது என்பதற்காக ஒரு பொம்மையைப் போலச் சிரித்த முகத்தோடு கார்த்திக்கின் அருகில் துணைவியாக நின்றாள் யாத்ரா.
17