You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 26

Quote

26

நீதிமன்ற வளாகத்தின் பரபரப்பான, பதற்றமான சூழலையும், வக்கீல்களின் வாதப் பிரதிவாதக் குரல்களையும் தாண்டி, அவளது கண்கள் கார்த்திக்கை மட்டுமே தேடிக்கொண்டிருந்தன. சுற்றிலும் அலைமோதும் மனிதர்களில் எவரும் அவளது பார்வையில் விழவில்லை.

அவள் தவிப்பைக் கண்ட இந்திரன், ஆறுதலாக அவளது தோளைத் தொட்டான். “கவலைப்படாத யாத்ரா... இன்னைக்கு ஜாமீன் கிடைச்சுடும்னு வக்கீல் ரொம்ப கான்ஃபிடென்ட்டா சொன்னாரு.” என்றான்.

அவள் இயந்திரத்தனமாகத் தலையசைத்தாள். ஆனால் அவளது மனம் கார்த்திக்கைத் தவிர வேறு எதையும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை. நெஞ்சுக்கூட்டுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத பயம் சுத்தியலால் அடிப்பது போல அடித்துக் கொண்டே இருந்தது.

சில நிமிடங்களில், இரண்டு காவலர்களின் நடுவே கார்த்திக் அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்த அந்த நொடி, யாத்ராவின் நரம்புகளின் வழியே பாய்ந்த ரத்தமெல்லாம் ஒரு கணம் உறைந்து, மூச்சே நின்றுவிட்டது போலிருந்தது.

அவனது தலையில் ஒரு பெரிய வெள்ளை நிறக் கட்டு போடப்பட்டிருந்தது. அதில் ரத்தக் கறை லேசாகத் தெரிந்தது. நெற்றியில் கன்றிப்போன காயம், உதட்டின் ஓரத்தில் காய்ந்த ரத்த வடு, முகமெல்லாம் சோர்வும் வலியும் அப்பியிருந்தது. எப்போதும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் அவனது உடல், இன்று லேசாகக் குனிந்திருந்தது. சிறைக்குள் அவன் தாக்கப்பட்டிருக்கிறான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

“கார்த்திக்...!” அவளது இதழ்கள் அதிர்வுடன் துடித்தன. குரல் தொண்டைக்குள்ளேயே அடைத்துக் கொண்டது.

ஆனால்... அத்தனை வேதனையிலும், வலியை மறைத்துக் கொண்டு அவளைப் பார்த்த அந்த நொடியில் கார்த்திக்கின் உதடுகள் விரிந்து புன்னகைத்தன. அவளது வருகை அவனுக்குள் ஏதோ ஒரு ஜீவனைப் பாய்ச்சியது போலிருந்தது.

“யாத்ரா...” அவன் மிக மென்மையாக அழைக்க, சுற்றியிருந்த உலகம் மறந்து அவனருகே ஓடிவந்தாள். அவளது கண்களில் இருந்து அணை உடைந்த வெள்ளமாய் நீர் நிரம்பி வழிந்தது.

“இது... இது என்ன கார்த்திக்...? தலையில என்னாச்சு...? யாரு இப்படி பண்ணுனது...?” அவளது குரல் உடைந்து கதறலாக வெளியே வந்தது. அவனது காயம்பட்ட முகத்தைத் தொடக் கைகள் துடித்தன, ஆனால் தொடவும் பயந்து காற்றில் தவித்தன.

அவன் மீண்டும் தன் பலவீனமான சிரிப்பை உதிர்த்தான். “ஏய், சின்னதுதான்டி... பெருசா ஒன்னும் இல்ல. ஜெயிலுல கைதிகளுக்குள்ள லைட்டா ஒரு சின்ன இஷ்யூ... அதுல தற்செயலா அடிபட்டுடுச்சு. நீ ஏன் இப்படி அழுகுற?” என்று அவளைச் சமாதானப்படுத்த முயன்றான்.

“சின்னதா...? இதையா சின்னதுன்னு சொல்ற...?” அவள் அழுகையை அடக்க முடியாமல் தன் வாயைப் பொத்திக்கொண்டு விம்மினாள்.

அப்போது பதற்றத்துடனும் கோபத்துடனும் அருகே வந்த இந்திரன், கார்த்திக்கின் தோளைப் பற்றி, “உண்மையை சொல்லு கார்த்திக். என்ன நடந்தது?” என்று தீவிரமாக கேட்டான்.

“உண்மையைத்தான் சொல்றேன்... பெருசா ஒன்னும் பிரச்னை இல்ல. நான் பார்த்துக்கிறேன்,” என்று கார்த்திக் மழுப்பலாகச் சொல்ல, யாத்ராவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அவன் தன்னை பயமுறுத்தக் கூடாது என்று மறைக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.

அவன் மெதுவாகத் தன் விலங்கிடப்பட்ட கையை நீட்டி, நடுங்கிக் கொண்டிருந்த அவளது கரங்களைப் பற்றினான்.

“நீ பயப்படுற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லடா... நான் நல்லாத்தான் இருக்கேன்.?” என்றான் வரவழைத்த புன்னகையோடு.

அவனது கைகளின் வெப்பம் அவளுக்குள் ஏதோ செய்தது.

அதேநேரம் அந்தத் தொடுதல், அவளுக்குள் இருந்த ஏக்கம், தவிப்பு, வேதனை என்று அனைத்தையும் குறைப்பதற்குப் பதிலாக, பல மடங்கு அதிகப்படுத்தியது.

அவளது தலையை மெதுவாகத் தன் விரல்களால் தடவிக் கொடுத்தவன், “நீ... நீ நல்லா இருக்கியா யாத்ரா?” என்று கேட்க, அவள் ஒரு நொடி பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.

அமரேஷின் அச்சுறுத்தல்கள், நள்ளிரவில் வரும் மிரட்டல் அழைப்புகள், இணையதளத்தில் அவளைப் பற்றிப் பரப்பப்பட்ட அவதூறான அவமானங்கள், வீட்டில் அத்தையின் சித்திரவதைப் பேச்சுக்கள்... எல்லாமே மின்னல் வேகத்தில் அவளது நினைவுக்குள் வந்து போயின. இதெல்லாம் கார்த்திக்கிற்குத் தெரிந்தால் துடிதுடித்துப் போவான் என்பதால் எல்லாவற்றையும் மென்று விழுங்கினாள்.

அவள் மௌனமாக நிற்பதைக் கண்ட இந்திரன், “யாத்ரா, உனக்கு ரிசல்ட் வந்ததை பத்தி கார்த்திக் கிட்ட சொல்லு” என்று அவளை உசுப்பினான். சூழ்நிலையை மாற்ற அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.

அவள் உடனே தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “ஆமா கார்த்திக்... ரிசல்ட் வந்திருச்சு... 96%,” என்றாள்.

அதைக்கேட்டதும் கார்த்திக் முகத்தில் அப்படியொரு பிரகாசம், அத்தனை சந்தோஷம்.  

“செம யாத்ரா! எனக்குத் தெரியும் நீ கண்டிப்பா சாதிப்பன்னு. எங்க ஜாயின் பண்ண போற?” என்று ஆர்வமாகக் கேட்டான்.

“ஐ ஐ எம் பெங்களூர்!” என்று இந்திரன் முந்திக் கொண்டு பதில் சொல்ல, யாத்ரா உடனே பதற்றமாக, “இன்னும் மெயின் இன்டெர்வியூ இருக்கு கார்த்திக், அதுலயும் செலக்ட் ஆகணும். அதுக்கு அப்புறம்தான் கன்பார்ம் ஆகும்,” என்றாள்.

“அதெல்லாம் நீ ஈஸியா செலக்ட் ஆயிடுவ. எனக்கு நம்பிக்கை இருக்கு,” என்றவன் கூற, அவளுக்கு சுத்தமாக நம்பிக்கையில்லை. ஏற்கனவே அவளது வாழ்க்கையே ஒரு நூலிழையில், அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், மேல்படிப்பு, கேரியர், பெங்களூர் இதைப் பற்றியெல்லாம் அவளால் எப்படி யோசிக்க முடியுமென்று தெரியவில்லை. கார்த்திக் இல்லாமல் தனக்கு ஒரு எதிர்காலமே இல்லை என்பது போல அவளுக்குத் தோன்றியது.

அதற்குள் நீதிமன்றத்திற்குள் வழக்கு எண் அழைக்கப்பட, “டைம் ஆச்சு,” என்று காவலர்கள் கார்த்திக்கை அழைத்துச் சென்றனர். இந்திரனும் யாத்ராவும் கலங்கிய கண்களோடு அவர்களைப் பின்தொடர்ந்து உள்ளே வந்தனர்.

வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் தேவா மிகவும் திறமையாகவும், சட்ட நுணுக்கங்களோடும் வாதாடிய போதும், எதிர்தரப்பு வக்கீலின் வாதம் மிகவும் தந்திரமானதாகவும், மேலிடத்து செல்வாக்கு மிக்கதாகவும் இருந்தது.

தேவாவின் அத்தனை ஆதாரங்களையும், வாதங்களையும் அவர்கள் சுக்குநூறாக உடைத்தெறிந்தனர். இறுதியாக நீதிபதி, காவல்துறை தரப்பு அறிக்கையை ஏற்றுக்கொண்டு, இம்முறையும் கார்த்திக்கின் பெயில் மனுவை ரிஜெக்ட் செய்து, வழக்கை அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

அந்த ஒரு நொடி... ஒட்டுமொத்த உலகமே தன் தலைமேல் இடிந்து உடைந்து விழுந்தது போல இருந்தது யாத்ராவுக்கு. கால்கள் பின்னின, தலை சுற்றியது. பக்கத்தில் நின்றிருந்த இந்திரன் அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

அப்போது காவலர்கள் கார்த்திக்கை மீண்டும் அழைத்துச் செல்ல முற்பட, அவன் காவலர்களிடம், “ஒரே ஒரு நிமிஷம் ப்ளீஸ்” என்று கெஞ்சிவிட்டு, வேகமாக யாத்ராவிடம் வந்தான்.

“அடுத்த ஹியரிங்ல பார்த்துக்கலாம்... நீ தைரியமா இரு” என்றான். அவனது குரலில் தன்னை பற்றி யோசிப்பதை விட  அவளைப் பற்றிதான் அதிகமாக கவலைப்பட்டான்.

அவனைக் கூட்டிச் செல்ல காவலர்கள் அவசரப்படுத்தி இழுத்தனர். “நீ பத்திரமா இரு யாத்ரா...” என்று அக்கறையுடன் சொல்லிவிட்டு, அவளது கையை மெதுவாகப் பிடித்து, பின் விட மனமே இல்லாமல் விட்டுவிட்டு நகர்ந்தான்.

அவன் மறைந்து செல்வதையே அவள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, வழக்கறிஞர் தேவா மிகுந்த சோர்வோடும் ஏமாற்றத்தோடும் அவர்கள் அருகே வந்தார்.

“இந்திரன், ஒரு நிமிஷம் தனியா வாங்களேன்... பேசணும்,” என்று அழைக்க,

“எதுவாக இருந்தாலும் என் முன்னாடியே சொல்லுங்க ப்ளீஸ். மறைக்காதீங்க,” என்றாள் யாத்ரா தீர்க்கமான குரலில்.

அவர் ஒரு நிமிடம் தயங்கிவிட்டு, அந்த அதிர்ச்சியான உண்மையை உடைத்தார். “நான் ஆரம்பத்துல இதை ஏதோ ஒரு சாதாரணப் பிராபர்ட்டி கேஸ், ஈஸியா முடிச்சிடலாம்னுதான் நினைச்சேன்... ஆனா, நிலைமை இப்போ முழுசா கைமீறிப் போயிட்டு இருக்கு. மேலிடத்துல இருந்து, இருந்து கோர்ட்டுக்கும் போலீஸுக்கும் பயங்கரமான பிரஷர் இருக்கு. அப்புறம்... இன்னைக்கு கார்த்திக்குக்கு ஜெயில்ல அடிபட்டது கூட தற்செயலான மோதல் மாதிரி தெரியல.”

தேவா பேசப் பேச, யாத்ராவின் காதுகளில் அமரேஷின் கொடூரமான குரல் எதிரொலித்தது. ‘நான் நினைச்சேன்னா... அந்த ஜெயிலுக்குள்ள வச்சே அவனைச் சமாதி கட்ட முடியும்!’

வழக்கறிஞர் தொடர்ந்து, “அமரேஷ் நினைச்சா மட்டும்தான்... கார்த்திக் வெளியே வர முடியும் போல இருக்கு!” என்று நம்பிக்கையிழந்து பேச இந்திரனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அவளது ஒட்டுமொத்த நம்பிக்கையும், தைரியமும் அந்த ஒற்றை வார்த்தையில் அப்படியே வேரோடு பிடுங்கி எறியப்பட்டது.

கனத்த இதயத்துடனும், சொல்லொணாத் துயரத்துடனும் இருவரும் அங்கிருந்து கிளம்பி காரில் ஏறினர். காரின் ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தங்கையின் மௌனமான வலியை உணர்ந்த இந்திரன், “கவலைப்படாத யாத்ரா... கண்டிப்பா இதுக்கும் ஏதாவது ஒரு சொல்யூஷன் இருக்கும்,” என்று அவளுக்கு நம்பிக்கை தரும் விதமாகப் பேசிக் கொண்டே வந்தான்.

ஆனால் அவள் எதற்கும் பதில் பேசவில்லை. உள்ளுக்குள் ஏதோ ஒரு விபரீதமான முடிவை நோக்கித் தீவிரமாக யோசித்தபடி வந்தாள். அவளது கையை இந்திரன் லேசாகத் தொடவும், திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

“வீடு வந்திருச்சு யாத்ரா...” என்றான் காரை நிறுத்திவிட்டு.

திரும்பிப் பார்த்தவள், எதுவும் பேசாமல் காரின் கதவைத் திறந்து இறங்க முற்பட்டாள். அப்போது இந்திரன் மெல்லிய குரலில், “அன்னைக்கு மட்டும் அந்த அமரேஷ் போய் நீ பார்க்காம இருந்திருந்தா கார்த்திக் இவ்வளவு பிரச்னை வந்திருக்காது ” என்றான்.

நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல அதிர்ச்சியுடன் தன் அண்ணனை நோக்கினாள்.

அவளது பார்வையின் வீரியம் தாங்காமல் இந்திரன் பதறி, “இல்ல யாத்ரா... நான் உன்னைக் தப்பு சொல்லல. நான் என்ன சொல்ல வர்றேன்னா, கார்த்திக் மேல அமரேஷ் இவ்வளவு வன்மத்தைக் கொட்ட அன்னைக்கு நடந்த அந்தச் சம்பவம்தானே ஆரம்பப் புள்ளி... அதை நினைச்சுப் பார்த்தேன்,” என மழுப்பினான்.

அவள் அப்போதும் எதுவும் பேசவில்லை. காரில் இருந்து இறங்கிக் கொண்டாள்.

“என்னானாலும் எனக்கு உடனே கால் பண்ணு... சரியா?” என்றவன் தங்கையிடம் அக்கறையாக சொல்ல,

“சரி” என்று மட்டும் ஒற்றைச் சொல்லில் பதிலளித்து, அவனை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தவள் வாசல் படியில் நின்று, தன் கால்களில் இருந்து செருப்பைக் கழற்றிக் கொண்டிருந்தாள். அப்போது தேன்மொழியின் குரல் உரக்கக் கேட்டது. அவர் தன் மகள்கள் இருவரிடமும் அழுது, நெஞ்சில் அடித்துக் கொண்டு புலம்பிக் கொண்டிருந்தார்:

“எப்போ அந்த தரித்திரம் புடிச்சவ இந்த வீட்டு வாசப்படியை மிதிச்சாலோ... அப்பவே நம்ம குடும்பத்தோட மானம், மரியாதை, நிம்மதி, சந்தோஷம் எல்லாமே போச்சுடி”

யாத்ரா அப்படியே கதவோரம் நின்றுவிட்டாள். அவள் விழிகளில் இருந்து சுடுதண்ணீராய் கண்ணீர் வழிந்தோட, தன் கையின் பின்புறத்தால் அதனை துடைத்து கொண்டு உள்ளே நடந்தாள்.

நேராகத் தன் அறைக்குள் சென்று, பைகளை எடுத்து, தன்னுடைய துணிகளையும் பொருட்களையும் வேகம் வேகமாக அதில் நிரப்பிக் கொண்டாள். அவளது கைகளில் நடுக்கமில்லை, இப்போது ஒரு தெளிவு இருந்தது. கார்த்திக்கைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்றுஅவளுக்குப் புரிந்துவிட்டது.

பைகளைத் தூக்கிக் கொண்டு மீண்டும் வரவேற்பறைக்கு வெளியே வந்தாள். நேராக அழுதுகொண்டிருந்த தேன்மொழியின் முன்னே வந்து நின்றாள்.

“இதுக்குதானே ஆசைப்பட்டீங்க... நான் போறேன் மொத்தமா போறேன்... நிச்சயமா திரும்பி வரவே மாட்டேன்!” என்று ஆக்ரோஷமாகவும் உறுதியாகவும் சொல்லிவிட்டு, தன் கண்ணீரைத் துடைத்தபடி, அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் யாத்ரா.

You cannot copy content