You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 27

Quote

27

நீதிமன்ற அறைக்குள் நிலவிய அந்த நிசப்தத்தைக் கிழித்தெறிந்தது நீதிபதியின் கம்பீரமான குரல்.

"சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் வலுவாக இல்லை… குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறிய காரணத்தால், இந்த நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக்கை அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்கிறது."

அந்த ஒரு வரி… கார்த்திக்கின் காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. அவன் வாழ்க்கையை இருளுக்குள் தள்ளிய அந்த நீண்ட காத்திருப்பு, இன்று இறுதியாக ஒரு வெளிச்சத்தைக் கண்டது.

‘உண்மையாவே எல்லாம் முடிஞ்சிடுச்சா…?’

கிட்டத்தட்ட நான்கு மாத கால சிறைவாசத்திற்குப் பின் அவன் மீண்டும் சுதந்திர காற்றைச் சுவாசிக்கப் போகிறான். நம்ப முடியவில்லை. அவன் வாழ்வின் மிக மோசமான காலகட்டம் என்றால் இதுவாகத்தான் இருக்கும்.

ஒரு நீண்ட, ஆழமான மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டான். அவனது விரல் நுனிகள் லேசாக நடுங்கின. அது பயத்தால் எழுந்தது அல்ல; எதிர்பாராத அதிர்ச்சியும் பேரானந்தமும் தந்த நடுக்கம்.

அவன் அருகே வந்த தேவா, "கார்த்திக்…" என்று மெதுவாக அழைத்தார்.

அவரைத் திரும்பி நோக்கியவன் உதடுகளில் இப்போது ஒரு நிம்மதியான, அமைதியான புன்னகை அரும்பியிருந்தது.

"தேங்க்ஸ் சார்… ரொம்ப தேங்க்ஸ்," என்றான் தன் அடிமனதிலிருந்து வந்த நன்றியுணர்வோடு.

"இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு நம்பிக்கை இல்லை கார்த்திக், இந்த கேஸ்ல ஜெயிச்சுட முடியும்னு " என்று அவர் சொல்ல,

“எனக்கு உங்க மேல நம்பிக்கை இருந்துச்சு... அதனால்தான் இந்த கேஸை நீங்க வாதாடணும்னு நினைச்சேன்” என்றவன், அவர் கையைப் பிடித்துக் கொண்டு, “உங்களுக்கு என்ன செஞ்சாலும் தகும் சார்” என்றான்.

“நீ என் பிரண்ட் கார்த்திக்” என்று அவனை அணைத்துக் கொண்டார் தேவா. அங்கே வந்த இந்திரனும், கார்த்திக் விடுதலையான மகிழ்ச்சியில் அப்படியே அவனைக் கட்டிக்கொண்டான்.

“நான் பயந்துட்டே இருந்தேன்... நல்ல வேளை தீர்ப்பு நமக்கு சாதகமா வந்திருச்சு” என்று இந்திரன் சொல்லும் போது, கார்த்திக்கின் விழிகள் யாத்ராவைத் தேடின. ‘அவள் வரவில்லையா?’ என்று அவன் யோசிக்கும் போதே தேவா மீண்டும் அவன் கையைப் பிடித்து,

"இது இதோட முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சு அசால்ட்டா இருந்துடாதே. இனிமேதான் நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்" என்று எச்சரிக்க, அவன் மெலிதாகச் சிரித்தான்.

அந்தச் சிரிப்பிற்குப் பின்னணியில் அமரேஷ் மீதான அபரிதமிதமான வெறுப்பு இருந்தது. தான் அமரேஷிற்கு உருவாக்கித் தந்த பேரையும் புகழையும் தானே நிர்மூலமாக்குவது என்று மனதிற்குள் சபதம் எடுத்துக் கொண்டான்.

“சரி கார்த்திக், நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு தேவா கிளம்பிவிட, இந்திரனும் கார்த்திக்கும் காரை நோக்கி நடந்தனர்.

“யாத்ரா எப்படி இருக்கா?” என்று கார்த்திக் ஆவலாகக் கேட்க,

“ஆ... நல்லா இருக்கா” என்ற இந்திரன் ஒருவித தயக்கத்துடன் பதிலளித்தான்.

இருவரும் காரில் ஏறினார்கள்.

கார்த்திக் சாளரத்தின் வழியே வெளியே ஓடும் மரங்களையும் மனிதர்களையும் பார்த்தவாறே சொன்னான்: "யாத்ராவை உடனே பார்க்கணும்…"

அவன் குரலில் உற்சாகமும் அதேநேரம் ஏக்கமும் தவிப்பும் கலந்திருந்தது.

அவன் முகத்திலிருந்த ஆர்வத்தைப் பார்த்த இந்திரன் மெல்லிய குரலில், “யாத்ரா இப்போ இங்க இல்லை” என்றான்.

கார்த்திக் அதிர்ச்சியுடன் திரும்பி, “இங்க இல்லைன்னா புரியலை...” என,

“அது...” என்று இந்திரன் ஏதோ சொல்ல வாயெடுக்க,

“எங்க வீட்டுல இல்லைன்னா உங்க வீட்டுல இருக்கா, அதானே…" என்று கேட்க, இந்திரன் மறுப்பாகத் தலையசைத்தான்.

“உங்க வீட்டுலயும் இல்லனா அப்போ...?”

“காலேஜ் ஜாயின் பண்றதுக்காக நேத்தே கிளம்பிட்டா.” என்ற நொடி அதிர்ந்த காரத்திக் பின்னர் தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு பேசினான்.

“பெங்களூர்தானே? போயிக்கலாம்” என்று சொல்ல, “இல்லை, மும்பை” என்றான் இந்திரன்.

“ஏன்  பெங்களூர் கிடைக்கலையா?”

“இல்லை, கிடைச்சது. ஆனா அவதான் மும்பைன்னு டிசைட் பண்ணா.”

கார்த்திக் முகத்தில் குழப்பம் படர்ந்தது.

 “இப்போ உடனே நான் அவளைப் பார்க்க முடியாதா?” என்றவன் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வதென்று இந்திரனுக்குத் தெரியவில்லை.

“மண்டேதான் ஜாயின் பண்ணப் போற... எதுக்கு இன்னைக்கே கிளம்பணும்? நாளைக்கு கார்த்திக்கைப் பார்த்துச் சொல்லிட்டுப் போலாம் இல்ல” என்று அவனும், “ஆமா, சொல்லிட்டுப் போகலாம் இல்ல” என்று அப்பாவும் சொன்னபோதும் யாத்ரா ஒப்புக்கொள்ளவில்லை.

“டிக்கெட் எல்லாம் புக் பண்ணியாச்சு” என்றாள்

“‘பரவாயில்லை, கேன்சல் பண்ணிடலாம்... நான் நாளைக்கு உனக்குத் தட்கல்ல போட்டுத் தாரேன்” என்று கூட அவன்  சொல்லிப் பார்த்தான். ஆனா அவள் கேட்கவே இல்லை.

அதுவும் யாத்ரா கார்த்திக்கின் வீட்டிலிருந்து வந்ததிலிருந்து யாரிடமும் முகம் கொடுத்து பேசுவில்லை. மிகவும் இறுக்கமாகவே இருந்தாள். கணவனை நினைத்து அவள் வருந்துகிறாள் என்றுதான் அவர்கள் நினைத்தனர். ஆனால் கார்த்திக்கைக் கூடப் பார்க்காமல் அவள் அவசரமாகக் கிளம்ப நினைத்தது அவர்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

கார்த்திக்கிடம் இதை எல்லாம் எப்படி சொல்வது என்று இந்திரன் யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில், “பரவாயில்லை, நான் அவகிட்ட வீடியோ காலில் பேசிக்கிறேன்” என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான் கார்த்திக்.

இந்திரன் உடனே, “அவ நம்பர் மாத்திட்டா... புது நம்பரை நான் அனுப்புறேன் கார்த்திக்” என்று விட்டு அவனை வீட்டில் இறக்கிவிட்டதும் அவள் புது எண்ணையும் அனுப்பி வைத்தான்.

 “உள்ளே வா” என்று கார்த்திக் இந்திரனை அழைக்க, “நான் வர்றது உங்க அம்மாவுக்குப் பிடிக்காது” என்று கிளம்பிவிட்டான் இந்திரன்.

அதேநேரம் கார்த்திக் வருவதைப் பார்த்த தேன்மொழி, ஓடி வந்து தன் மகனைக் கட்டிக்கொண்டு கதறி அழுதார். அதன்பின் பிடிவாதமாக அவனை வாசலில் நிற்க வைத்துத் திருஷ்டி சுற்றிப் போட்டு உள்ளே அழைத்து வந்தார்.

“நீ போய் குளிச்சிட்டு வா... அம்மா உனக்கு பிடிச்சது எல்லாம் சமைச்சு வைக்கிறேன் சாப்பிடுவ” என்று சொல்ல, அவன் தன் அறைக்கு வந்து நின்றான்.

அந்த நொடி பலவிதமான உணர்வுகள் அவனுக்குள் அலைமோதின. மறுபுறம் யாத்ரா அங்கே இல்லை என்பதை அவனால் தாங்க முடியவில்லை. அப்போதே அவளைப் பார்க்க வேண்டும் போல மனம் தவித்தது.

அவன் அப்படியே நின்றிருப்பதைப் பார்த்த தேன்மொழி, “சீக்கிரம் குளிச்சிட்டு வாப்பா” என, “இதோ போறேன்ம்மா” என்றவன் தன் மனதின் இறுக்கங்கள் தீருமளவுக்கு ஷவரில் நனைந்தான்.

அதன்பின் தேன்மொழி தான் சமைத்த உணவுகளைப் பரிமாற, அதனைத் திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அறைக்கு வந்து செல்பேசியை எடுத்துப் பார்த்தான்.

யாத்ராவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. ஆனால் சௌந்தர்யா, மாமனார், அவன் அக்காக்கள் என்று எல்லோரும் அழைத்திருந்தனர்.

ஒவ்வொருவராகப் பேசியவன், இறுதியாகச் சௌந்தர்யாவிடம் பேச, அவள் கண் கலங்கிப் பேசினாள் அவள்.

“சரி சரி, ஒன்னும் இல்லை அழாதே.”

“உன்னைப் பார்க்கணும் போல இருக்கு அண்ணா. ஆனா அங்கே அம்மா வந்தா திட்டுவாங்களோன்னு பயமா இருக்கு.”

“அம்மா கோபம் எல்லாம் எவ்வளவு நாளைக்கு? ம்ம்ம்... நீ வா, நான் அம்மாகிட்ட பேசிக்கிறேன்” என்றவன் இறுதியாக, “இந்திரன்கிட்ட கொடு” என்றான்.

“சொல்லு கார்த்திக்.”

“நீ யாத்ராகிட்ட பேசினியா?” என்று வினவ,

“பேசினேனே... உனக்குக் கால் பண்ணச் சொல்லிக்கூடச் சொன்னேனே” என்றான் இந்திரன்.

அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. ஏன் அவள் தனக்கு அழைத்துப்பேசவில்லை என்று அவன் மனம் தவிக்க, “நீ கவலைப்படாதே கார்த்திக், யாத்ரா கால் பண்ணுவா” என்றான் இந்திரன்.

என்னவோ அந்த வார்த்தைகள் அவனுக்கு ஆறுதலைத் தரவில்லை. வீடியோ கால் போட்டான். அவள் எடுக்கவில்லை.

ஆனால் சில நொடிகளில் அவளிடமிருந்தே அழைப்பு வந்தது. அவன் மகிழ்ச்சியுடன் எடுத்து, “யாத்ரா” எனவும், “கார்த்திக்...” என்றாள் அவளும்.

அந்த குரலைக் கேட்டதும்தான் அவனுக்கு மூச்சே வந்தது.

“இரு, நான் வீடியோ காலில் போடுறேன்” என்றவன் சொல்ல, “வேண்டாம்!” என்று உடனடியாக, மறுத்தாள்.

“எனக்கு இப்பவே உன்னைப் பார்க்கணும்... கையில் காசு மட்டும் இருந்திருந்தா டிக்கெட் போட்டு நேரா அங்கே வந்து இறங்கியிருப்பேன்” என்றவன் ஆர்வம் பொங்க சொல்ல, அவள் குரலில் அத்தகைய ஆர்வம் இல்லை.

 “அப்படியெல்லாம் எதுவும் பண்ணாதே கார்த்திக்” என்றாள் குளிர்ந்த குரலில்.

“ஏன்? உனக்கு என்னைப் பார்க்கணும் போல இல்லையா?” என்ற கேள்விக்கு அவள் சில நொடிகள் தாமதித்து, “இல்லை” என்று பதில் சொல்ல, அவன் அதிர்ச்சியடைந்தான்.

“இல்லையா...?” அவள் மௌனமாக இருக்க, “என்னாச்சு, என்மேல கோபமா? எங்க அம்மா எதுவும் மோசமா பேசிட்டாங்களா?” என்றவன் மெதுவாகக் கேட்க, “பேசுனாங்க... ஆனா பிரச்சினை அது இல்லை... வேற” என்றாள்.

“வேற என்ன?”

“கார்த்திக், நான் உன்கிட்ட...” என்றவள் அடுத்த வார்த்தை பேச முடியாமல் நிறுத்த, “என்னடி... சொல்லு” என்றான்.

“சாரி கார்த்திக்... நம்ம ரிலேஷன்ஷிப்” என்றவள் ஒரு நொடி நிறுத்திவிட்டு பின் மீண்டும் தொடர்ந்தாள். “வொர்க் அவுட் ஆகாது!”

அந்த வார்த்தையை ஜீரணிக்கவே அவனுக்குச் சில நொடிகள் பிடித்தது.

“பைத்தியக்காரத்தனமா பேசாதே!” என்று அவன் உடனே கத்திவிட, “நான் சொல்றதை நிதானமா கேளு கார்த்திக்” என்றாள்.

“நீ முதல்ல நான் சொல்றதை நிதானமா கேளு! இந்த பிரச்சினை முடிஞ்சு போச்சு... சரியா? மொத்தமா முடிஞ்சு போச்சு... இனிமே இப்படி எதுவும் நடக்காது. அப்புறம் எங்க அம்மா ஏதாவது உளறியிருந்தா அதையெல்லாம் நீ பெருசா எடுத்துக்காதே... இனிமே அவங்க உன்கிட்ட அப்படிப் பேசாம நான் பார்த்துக்கிறேன்” என்றவன் படபடப்புடன் பேசி முடிக்க, அவள் அமைதியாக பதில் சொன்னாள்.

“நீ ஜெயிலுக்குப் போனதோ, இல்ல உங்க அம்மா என்கிட்ட அப்படிப் பேசுனதோ பிரச்சினை இல்லை கார்த்திக்”

“அப்புறம் வேற என்னதான்டி பிரச்சினை?” என்றவன் குரலில் கோபம் தெறித்தது.

“நாம கல்யாணம் பண்ணிக்கிட்டதுதான்!”

“என்னடி சொல்ற நீ?”

“நாம கல்யாணம் பண்ணியிருக்கவே கூடாது... பெரிய தப்பு பண்ணிட்டோம் கார்த்திக்.”

அந்த நொடி அவள் நடந்ததை எல்லாம் யோசித்து மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்று தோன்ற அவன் தன் குரலை நிதானப்படுத்தினான்.

“யாத்ரா, நீ நடந்ததை எல்லாம் வச்சு குழப்பத்துல பேசுற... சரி விடு. நான் நேர்ல வர்றேன்... நம்ம பொறுமையா இதைப் பத்தியெல்லாம் பேசுவோம்.”

“ப்ளீஸ் வேணாம் கார்த்திக், வராதே! எனக்கு உன்னைப் பார்க்க விருப்பமில்லை.” என்றவள் பட்டென்று சொல்லிவிட அந்த வார்த்தை அவனை மொத்தமாக உலுக்கிப்போட்டது.

“விருப்பமில்லையா...?”

“ஆமா, விருப்பமில்லை! ப்ளீஸ் என்னை விட்டுடு... என்னால இந்த பிரஷரை ஹேண்டில் பண்ண முடியலை... சுத்தமா முடியலை” என்றவள் குரல் அழுகையின் விளிம்பில் ஒலிக்க,

“ஹேண்டில் பண்ண முடியலைன்னா புரியலை எனக்கு... எல்லா உறவிலயும் பிரச்சினை வரத்தான் செய்யும்... நம்ம அதையெல்லாம் ஹேண்டில் பண்ணித்தான் ஆகணும்” என்றவன் அழுத்தமாகக் கூறினான்.

“அதான் என்னால முடியலைன்னு சொல்றேன் இல்ல! ப்ளீஸ் என்னை விட்டுடு கார்த்திக்...”

“விட்டுடவா? நீயும் நானும் என்ன இப்போ லவ்வர்ஸாடி? ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃப்!” என்று அவன் சொன்னதுதான் தாமதம்.

“என்ன ஒரு பத்து நாள் ஒண்ணா வாழ்ந்தோம்... அவ்வளவுதானே?” என்று அவள் மிகச் சாதாரணமாகக் கேட்க, அவளின் அந்த வார்த்தைகளில் அவனது காதலும், அவளுக்காகக் காத்திருந்த தவிப்பும் தடம் தெரியாமல் போனது.

“அவ்வளவுதானா...?” கார்த்திக்கின் குரல் மொத்தமாய் உடைந்து சுக்குநூறாக அவன் குரலிலிருந்த வலியை உணர்ந்தவள்,

“நான் என்ன சொல்ல வந்தேன்னா...” என்று மேற்கொண்டு விளக்கம் அளிக்க எத்தனித்தாள்.

“அதான் முடிஞ்சு போச்சுன்னு சொல்லிட்ட இல்ல விடு” என்ற அவனுக்கு அதற்கு மேல் அவள் பேசுவதைக் கேட்கும் பொறுமையும் இல்லை. தெம்பும் இல்லை.

அவன் மரத்துப் போன குரலில் சொன்னான்.

“உன் துணிச்சலைதான் நான் முதல காதலிச்சேன்... ஆனா இப்பதான் உன்னோட உண்மை முகம் தெரியுது... நீ ஒரு கோழை... பிரச்னையை பார்த்து பயந்து ஓடுற கோழை... தப்பு பண்ணிட்டேன்...

 உன்னை நான் காதலிச்சிருக்கவே கூடாது... இல்ல இல்ல உன்னை நான் பார்த்திருக்கவே கூடாதுடி

உன்னை மட்டும் பார்க்காம இருந்திருந்தா எனக்கு இவ்வளவு கஷ்டமும் வந்திருக்காது... பிரச்னையும் வந்திருக்காது... நான் பாட்டுக்கு  நிம்மதியா என் வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருந்திருப்பேன்... எல்லாம் உன்னாலதான்டி... எல்லாம் உன்னாலதான்

உன்னை காதலிச்சு என் வாழ்க்கையை நான் அழிச்சுக்கிட்டேன்... நானே என் தலையில மொத்தமா மண்ணை வாரி போட்டுக்கிட்டேன் சை! எல்லாமே வேஸ்டு

என் வாழ்க்கையில இனிமே உன்னை நான் பார்க்கவே கூடாதுடி... தப்பி தவறி கூட பார்த்திர கூடாது.” என்று உணர்ச்சி பொங்கி பேசிய மறுகணமே கார்த்திக் அழைப்பைத் துண்டித்தான்.

அந்த நிமிடத்தோடு அவர்களது உறவும் துண்டிக்கபட்டது.

You cannot copy content