You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 28

Quote

28

காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்பார்கள். ஆனால், சில நேரங்களில் காலம் மனிதர்களை மாற்றுவதில்லை; அவர்களைப் புதியதொரு வார்ப்பாக, இன்னும் கொஞ்சம் கடினமான பளபளப்போடு செதுக்கிவிடுகிறது.

மும்பையின் அந்த அடுக்குமாடி குடியிருப்பில், அலாரத்தின் டிஜிட்டல் ரீங்காரம் துல்லியமாக காலை 5:30 மணிக்கு ஒலித்தது.

யாத்ரா கண்களை மெதுவாகத் திறந்தாள். விழித்த முதல் சில நொடிகள், 'தான் எங்கே இருக்கிறோம்' என்ற திகைப்புணர்வு இப்போதெல்லாம் அவளுக்கு ஏற்படுவதில்லை.

மெத்தையிலிருந்து எழுந்து, பால்கனி ஜன்னலைத் திறந்தாள். அரபிக்கடலின் ஈரப்பதத்தைத் தாங்கி வந்த மும்பையின் காலைக் காற்று முகத்தில் வந்து மோதியது. ஏற்காட்டின் மலைக்காற்றைச் சுவாசித்து வளர்ந்தவளுக்கு, இந்த உப்புக்காற்று ஆரம்பத்தில் பிடிக்கவில்லைதான். ஆனால், அவளது வாழ்க்கையைப் போலவே அதுவும் அவளுக்குப் பழகிப்போயிருந்தது.

தன் காலைப் பணிகளைத் தொடங்கியவள், குளித்துவிட்டு வந்து அலமாரியைத் திறந்தாள். ஒரு ஃபார்மல் டாப்பும், அடர் நிறப் பேன்ட்டும் எடுத்தவள், கண்ணாடியின் முன் நின்று தன்னைத் தயார்படுத்திக் கொள்ளத் தொடங்கினாள்.

உடைகளை அணிந்து, கலைந்த கூந்தலை நேர்த்தியாகக் கொண்டையிட்டாள். முகத்தில் எந்தவொரு ஒப்பனையுமில்லை; ஆனால், கண்ணாடியில் தெரிந்த அவளது கண்களில் பழைய துள்ளலும் உற்சாகமுமில்லை. அதில் ஒரு முதிர்ச்சியும், எவராலும் அசைக்க முடியாத சுயமரியாதையும் மட்டுமே மிஞ்சியிருந்தது.

அதன்பின் அவசரமாகத் தன் பையைத் தயார் செய்து அவள் கிளம்ப எத்தனித்தாள். அந்த நொடி, வரவேற்பறை தொலைக்காட்சிப் பெட்டியில் ஓடிக்கொண்டிருந்த 'பிரேக்கிங் நியூஸ்' அவள் இயக்கத்தை தடைப்படுத்தியது. அவள் கண்கள் திரையை நோக்கின.

"பிரபல நடிகர் அமரேஷின் புதிய படம் வெளியாக உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது..."

திரையில், அமரேஷின் பிரம்மாண்ட கட்-அவுட்டுகள் கிழிக்கப்பட்டு, பொதுமக்கள் செருப்பால் அடிக்கும் காட்சிகள் ஓடின.

"அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், இளம் நடிகை ஒருவரின் அருவருப்பான புகைப்படங்கள் மற்றும் ரகசிய உரையாடல்கள் நள்ளிரவில் வெளியானது தொடர்பாக இந்த சர்ச்சை வெடித்துள்ளது. 'என் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது, இதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என அமரேஷ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் கோபம் அடங்காததால், அவரது வீட்டின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு..."

அந்தச் செய்தியைப் பார்த்து ஒரு நொடி அப்படியே திகைத்து நின்றுவிட்டாள் யாத்ரா. பின் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு, ரிமோட்டை எடுத்துத் தொலைக்காட்சியை அணைக்க, திரை இருண்டது.

அவளது முகத்தில் எந்தவொரு உணர்ச்சி மாற்றமும் இல்லை; ஆனால், அவளது விரல்கள் ரிமோட்டைச் சற்று இறுக்கமாகப் பற்றியிருந்தன. பழிவாங்குதல் அவளது நோக்கமல்ல, ஆனால் பிரபஞ்சம் தன் கணக்குகளைச் சரியாகவே தீர்க்கிறது என்ற எண்ணம் அவளுக்குள் லேசாக மின்னி மறைந்தது.

அப்போது அவள் செல்பேசி அதிரவும், அதனைத் தன் கையில் எடுத்தாள். கூடவே வீட்டுச் சாவியையும் எடுத்து, கதவைப் பூட்டிக்கொண்டே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

"சொல்லும்மா..." என்றாள்.

எப்போதும் போன்ற விசாரிப்புகளுடன் தொடங்கிய உரையாடலைக் கேட்டுக்கொண்டே மின்தூக்கியில் ஏறினாள்.

"யாத்ரா! நீ எப்போடி வீட்டுக்கு வரப் போறே? மாசத்துக்கு ஒரு தடவையாவது எங்களைப் பார்த்துட்டுப் போக முடியாதா?" மறுமுனையில் அம்மாவின் அதே பழைய கேள்விகள்.

"ஒர்க் கொஞ்சம் டைட் அம்மா... லீவ் கிடைக்க மாட்டேங்குது," என்று அவளது அதே அக்மார்க் சமாளிப்புகள்.

"முதல்ல எல்லாம் படிப்பு டைட்டா இருந்துச்சு... இப்போ வேலை?" என்று பிரியா சலித்துக்கொள்ள, "சரி சரி, நான் இந்த மாசம் வரேன்," என்று அந்தப் பஞ்சாயத்தை அதோடு முடிக்கப் பார்த்தாள் யாத்ரா.

ஆனால் அவர் நிறுத்துவதாக இல்லை. "நாளைக்கு உன் அண்ணன் இந்திரனோட வெட்டிங் அனிவர்சரி?"என, யாத்ரா சட்டென்று அமைதியானாள்.

அந்த அமைதியின் காரணத்தை உணர்ந்த பிரியா, "அதே நாள்தான்... உன் அனிவர்சரியும்..." என்று தணிந்த குரலில் சொன்னார்.

யாத்ராவின் மூச்சு ஒரு நொடி தடைபட்டது. நெஞ்சுக்கூட்டிற்குள் ஏதோ ஒரு பழைய காயம் விறுவிறுவென்று உயிர் பெறுவது போல் இருந்தது. இன்னும் அவளால் தாங்க முடியாத, கடந்து வர முடியாத ஒரே ஒரு பெயர் அது மட்டும்தான்.

"அம்மா... டிரைனுக்கு லேட்டாகிடும்... நான் அப்புறமா கால் பண்றேன்," என்றவள், தன் மனப்போராட்டத்தை மறைத்து அவசரமாக அழைப்பைத் துண்டித்தாள்.

மும்பை லோக்கல் ரயிலின் அலைமோதும் மனிதக் கூட்டம். அந்த நெரிசலிலும் வழக்கம்போல ஜன்னலோர இடத்தை அநாயாசமாகப் பிடித்து நின்றுகொண்டாள்.

வேகமாக நகரும் ரயிலின் ஜன்னல் வழியே புகுந்த காற்று அவளது கூந்தலைக் கலைத்துப் போட்டது. கண்களை மூடினாள். ஒரு நொடிக்கு, பழைய நினைவுகள் அவளுக்குள் வந்து போயின.

கார்த்திக்கின் காதல், அவனது தொடுகை, அணைப்பு, முத்தம், நெருக்கம் என்று எல்லாமே கணநேரத்தில் அவள் உணர்வுகளுடன் சதிராட... சட்டென்று கண்களைத் திறந்து உலகிற்கு வந்தாள். அவள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்திருந்தது. தன் மனவுணர்வுகளை எல்லாம் அப்படியே ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டு, அந்த மனிதக் கூட்டத்தைக் கடந்து வேகமெடுத்து முன்னே நடந்தாள்.

மும்பை கார்ப்பரேட் டவர்.

நகரத்தின் ஆகச்சிறந்த உயரமான கண்ணாடி மாளிகை அது. வரவேற்பறையில் இருந்து போர்ட்ரூம் வரை அவள் நடந்து சென்றபோது, இருபுறமும் இருந்த ஊழியர்கள் அவளை மரியாதையுடன் பார்த்து, "குட் மார்னிங் மேம்," என்றனர்.

ஐஐஎம் மும்பையின் தங்கப் பதக்கம் வென்றவள். தற்சமயம் அந்த நிறுவனத்தின் சீனியர் ஸ்டிராடஜி ஹெட்.

சிறு தலையசைப்புடன் அவர்களைக் கடந்து சென்று, மீட்டிங் ஹாலுக்குள் நுழையப் போன யாத்ராவை அவளது அசிஸ்டென்ட் பதற்றத்துடன் தடுத்தான்.

"மேம்... ஒரு நிமிஷம். இன்னைக்கு பிரசென்டேஷன் கொடுக்க வேண்டிய மேனேஜர் வரல."

"ஏன், என்னாச்சு?"

"அவர் பையனுக்கு உடம்பு சரியில்லைன்னு மெசேஜ் பண்ணியிருக்கார்."

"ஓ..." என்றவள் முகம் யோசனையாக மாற, அசிஸ்டென்டோ, "மேம், வேறொரு விஷயமும் இருக்கு," என்று இழுத்தான்.

"இன்னைக்கு மீட்டிங்கிற்கு பாஸ் வராறாம்," என்று அவன் அடுத்த அதிர்ச்சியைக் கொடுக்க, "மிஸ்டர் தேவேந்திரன் மேத்தாவா?" என்று கேட்டுத் தன் புருவத்தைச் சுருக்கினாள் யாத்ரா.

"இல்ல, அவர் சன் ஆரவ் மேத்தா. லண்டன்ல இருந்து நேத்துதான் வந்திருக்கார். சென்னை நியூ பிராஞ்ச் ஓப்பனிங் ப்ராஜெக்ட் பத்தி அவர்தான் இன்னைக்கு ரிவியூ பண்ணப் போறார்," என்றான்.

யாத்ராவின் முகம் இன்னும் தீவிரமாக மாறியது. தேவேந்திரன் மேத்தாவிடம் அவள் பலமுறை பேசியிருக்கிறாள், ஆனால் ஆரவ் பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது. அவள் யோசனையில் ஆழ்ந்துவிட, "மேனேஜர் இல்லாத நேரத்துல இப்படி..." என்று அவளது அசிஸ்டென்ட் உதறலுடன் அவளைப் பார்த்தான். சுற்றிலும் இருந்த மற்ற ஊழியர்களின் முகத்திலும் பயம் கலந்த பதற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது.

ஒரு நொடி நிசப்தம்.

"ஐ வில் ஹேண்டில் இட்," என்று உறுதியாகச் சொன்ன யாத்ரா, தன் இருக்கையில் சென்று அமைதியாக அமர்ந்து மடிக்கணினியைத் திறந்தாள். அவளது குரலில் இருந்த அந்த நிதானம், அங்குள்ளவர்களின் பதற்றத்தை பாதியாகக் குறைத்தது. புது பாஸ், லண்டன் ரிட்டன், திடீர் விசிட் என எதற்கும் அவள் அசரவில்லை.

பிரசென்டேஷன் தொடங்கியது. போர்ட்ரூமின் பிரதான நாற்காலியில் அமர்ந்திருந்தான் ஆரவ் மேத்தா.

உயரமான தோற்றம், கூர்மையான கண்கள், முகத்தில் ஒரு கர்வமான புன்னகை. இந்திய ஊழியர்களின் திறமை எந்த லட்சணத்தில் இருக்கிறது என்று சோதிக்கும் நோக்கம் அவன் பார்வையில்.

ஸ்லைடுகள் ஒவ்வொன்றாக நகர, யாத்ராவின் குரல் அந்த அறை முழுக்க எதிரொலித்தது. துல்லியமான ஆங்கில உச்சரிப்பு, தெளிவான வர்த்தகத் திட்டங்கள், ஒரு சின்னத் தயக்கமோ தடுமாற்றமோ இல்லாத ஆளுமை. சென்னையில் எங்கு, எப்படிப் புதிய கிளை தொடங்கப்பட வேண்டும் என்ற நுணுக்கங்களை அவள் விவரித்த விதம், ஆரவ் மேத்தாவின் கவனத்தை முழுமையாக ஈர்த்தது.

இறுதி ஸ்லைடு முடிந்து அவள் பிரசென்டேஷனை முடிக்க, அறையிலிருந்த மற்ற எல்லோருடைய முகத்திலும் மெச்சுதலும் பாராட்டும் நிறைந்திருந்தது. ஆனால், ஆரவ் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. அவன் என்ன நினைக்கிறான் என்பதை அந்த கூர்மையான விழிகள் காட்டிக் கொடுக்கவில்லை; அதே மரக்கட்டையான முகபாவனையுடனேயே கடைசி வரை அமர்ந்திருந்தான்.

மீட்டிங் முடிந்து அனைவரும் கலைந்தனர். யாத்ரா தன் கேபினுக்கு வந்து அமர்ந்து, ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டாள். எல்லோர் முன்பும் துணிச்சலாக இருப்பது போலக் காட்டிக்கொண்டாலும், உள்ளூற அவளுக்கும் கொஞ்சம் உதறியதுதான்.

அப்போது, அவளது கேபின் கதவு தட்டப்பட, அவள் நிமிர்ந்து பார்த்தாள். ஆரவ் மேத்தாவின் தனிப்பட்ட செயலாளர் ராகேஷ் உள்ளே வந்திருந்தான்.

"ஆரவ் சார் ஒரு பிளான் சேஞ்ச் சொல்லச் சொன்னார், மேம்."

"என்ன பிளான் சேஞ்ச்?"

"சென்னை பிராஞ்ச் விசிட்டுக்காக நாளைக்குக் காலைல 6 மணிக்கு ஃபிளைட் புக் பண்ணியிருக்கு. மேனேஜருக்குப் பதிலா உங்களை அவரோட சென்னைக்கு வரச் சொல்றார் சார்," என்றான்.

சென்னை என்று கேட்டதும் யாத்ராவின் உடலில் மெல்லிய நடுக்கம் பரவியது. மூன்று வருடங்களாகிவிட்டன அவள் சென்னை பக்கம் போய்!

'ஏற்காடு மட்டும் போறே, என் வீட்டுக்கு வந்தா என்ன உனக்கு?' என்று இந்திரன் அவளிடம் சண்டை போட்டு, ஒரு நிலைக்கு மேல் அவளிடம் பேசுவதையே நிறுத்திவிட்டான்.

"மேம்..." என்று ராகேஷ் கூப்பிட, அவளது நினைவுகள் கலைந்தன.

சட்டென்று தன்னை மீட்டெடுத்தவள், "ஓகே, ஐ வில் பி தேர்" என்றாள் கறாரான குரலில்.

அவன் அறையை விட்டு வெளியேறியதும் யாத்ரா தன் முகத்தை கைகளால் அழுந்தத் துடைத்துக்கொண்டாள். தவிர்க்க நினைத்த இடத்திற்கே காலம் அவளை மீண்டும் இழுத்துச் செல்கிறது.

இரவு வேலையை முடித்து அலுவலகத்திலிருந்து கிளம்பிய யாத்ரா, பரபரப்பான ஒரு வணிக வீதியிலுள்ள ஒரு புகழ்பெற்ற கடிகாரக் கடைக்குள் நுழைந்தாள். கண்ணாடிப்பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடிகாரங்களை நிதானமாகப் பார்த்தவள், அழகான ஒரு கப்பிள் வாட்ச் செட்டை தேர்ந்தெடுத்தாள்.

"இதைக் கிப்ட் பேக் பண்ணிடுங்க," என்றாள் விற்பனையாளரிடம்.

அவர் அதை எடுத்துச் சென்றபோது, யாத்ராவின் கண்கள் தற்செயலாக இன்னுமொரு கடிகாரத்தின் மீது விழுந்தது. அது மிகவும் எளிமையான, அதேநேரம் கம்பீரமான ஓர் ஆண்களுக்கான கடிகாரம். சிம்பிள் அண்ட் எலிகண்ட். அவளுக்குள் ஏதோ ஒரு பழைய நினைவு சுண்டி இழுக்க, அந்த வாட்சையும் கையில் எடுத்தாள்.

"இதையும் தனியா கிப்ட் ராப் பண்ணிடுங்க."

அறைக்குத் திரும்பியவள், தன் பயணப் பையைத் திறந்து, அந்த கப்பிள் வாட்ச் கிப்ட் பாக்ஸை அண்ணனுக்காக நேர்த்தியாக உள்ளே வைத்தாள்.

பின்னர், தனியாக வாங்கிய அந்தச் சிறிய கிப்ட் பாக்ஸைத் தன் கையில் எடுத்தாள். ஒரு சிறிய ஸ்டிக்கரை எடுத்து, சில நொடிகள் அதை வெறித்துப் பார்த்தாள். அவளது கை விரல்கள் லேசாக நடுங்கின. பேனாவை எடுத்து அதன் மேல் எழுதினாள்:

Happy Anniversary Karthick

வழியும் கண்ணீரைத் தடுக்காமல், அந்த வரிகளை எழுதி முடித்து, அதை அந்தப் பரிசின் மேல் ஒட்டினாள்.

அதன்பின், அவள் தன் அலமாரியின் திறந்தாள். அதற்குள், இதேபோல இன்னும் இரண்டு பரிசுகள் பிரிக்கப்படாமல் அப்படியே கிடந்தன.

மூன்று வருடங்கள்... மூன்று பரிசுகள்... ஒவ்வொரு வருடத்தின் நினைவாக!

அந்தப் புதிய பரிசையும் அதனோடு பத்திரமாக அடுக்கினாள். அலமாரியை மெதுவாக மூடிவிட்டு, அதன் கதவிலேயே சோர்ந்து சாய்ந்து நின்றுகொண்டாள்.

இறுக்கிப் பிடித்திருந்த அவளது கட்டுப்பாட்டை மீறி, கண்களிலிருந்து ஒரு துளிக் கண்ணீர் கன்னத்தில் வழிந்து இறங்கியது. அதை அவள் துடைக்க முற்படவில்லை. அது அவளது மாறாத காதலின் சாட்சியாக அப்படியே அவள் கன்னத்திலேயே காய்ந்து போய்க்கொண்டிருந்தது.

சில காதல்கள் பிரிவினால் முடிந்துவிடுவதில்லை...

அது பேசாமல், பார்க்காமல் வாழக் கற்றுக்கொள்கிறது!

You cannot copy content