You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 3

Quote

3

கடந்த ஒரு வாரமாகவே தியேட்டர் விசிட், சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் கமெண்ட்களைப் பரப்ப பெய்ட் மீடியாவைக் கையாளுவது என கார்த்திக்கிற்கு வேலை பெண்டு நிமிர்ந்தது. இதில் அமரேஷ் யாரைச் சந்திப்பது, எந்தச் சேனலுக்குத் பிரத்யேகப் பேட்டி அளிப்பது என்பது வரை எல்லாமே அவனுடைய திட்டமிடல்தான். உதவியாளர் நீட்டிய ஐபேடில் இருந்த சந்திப்புப் பட்டியலை வேகமாகக் கோதினான்.

“இதைப் பாலோ பண்ணிக்கோங்க. அப்புறம் அந்த டி.கே. சேனல் கேட்டா நீங்களே டேட் இல்லைன்னு சொல்லிடுங்க.”

“ஆனா சார், அவங்க சேனலுக்கு நாலு மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்களே? படம் ரிலீஸ் டைம்ல அது பெரிய ரீச் கொடுக்குமே?” உதவியாளர் தயக்கத்துடன் இழுத்தான்.

கார்த்திக் நிமிர்ந்து அவனைப் பார்த்தான். “அந்தச் சேனல்ல இருக்கப் பொண்ணு ஏடாகூடமா கேள்வி கேட்பா... இவர் ஏதாவது 'கருத்து'ங்குற பேர்ல சொல்லி... அப்புறம் நல்லா ஓடுற படமும் சுத்தமா ஊத்திக்கிட்டுப் போகும். போன வாரம் இப்படித்தான் பிரஸ் மீட்ல இவரு பெண் சுதந்திரம் பத்தி ஒரு கருத்து சொல்லிட்டாரு... அந்தப் பேட்டி வைரலாகாம இருக்க நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். அந்தத் தப்பைச் சரி பண்ணத்தான் இப்போ இந்தப் பட்டியல்ல ரெண்டு டை-ஹார்ட் ஃபேன்ஸ் (Die-hard fans) பேரைச் சேர்த்திருக்கேன்.”

“புரியலை சார்?”

“சிம்பிள்! அவங்க ரெண்டு பேரும் அமரேஷோட தீவிர ரசிகர்கள். அவங்களை வச்சு ஒரு ‘எமோஷனல் மீட்’ வீடியோ எடுங்க. அமரேஷ் அவங்க வீட்டுக்குப் போய் சர்ப்ரைஸ் கொடுத்து அவங்க கூடச் சாப்பிடுற மாதிரி ஒரு சீன். அந்த வீடியோவை ரிலீஸ் பண்ணா, இவரு போன வாரம் பேசுன பேச்சு எல்லாம் தானா மறைஞ்சுடும். கோபத்தை விட இந்த மாதிரி எமோஷன்தான் இங்க நல்லா வேலை செய்யும்.”

கார்த்திக்கின் மூளை அடுத்தடுத்த நகர்வுகளை யோசித்து வேகமாக வேலை செய்தது. எதுவும் செய்யாமலேயே அமரேஷின் பிம்பமும் (Image) உயர்ந்தது. அன்று மாலை அமரேஷின் அடுத்த படப்பிடிப்பு விவகாரங்களை முடித்துவிட்டு, காரில் ஏறியபோதுதான் கார்த்திக்கின் கண்கள் அந்தப் பக்கவாட்டுச் சாலையோர ஐஸ்க்ரீம் பார்லரில் நிலைத்தன. தங்கை சௌந்தர்யா, யாரோ ஒரு இளைஞனின் கையைப் பிடித்துப் பேசிக் கொண்டிருந்தாள். இருவரின் சிரிப்புச் சத்தமும் அவன் நிற்குமிடத்திலேயே கேட்டது.

கோபத்தை விடவும் ஒருவிதப் பதற்றமே அவனைத் தொற்றிக்கொண்டது. அவனுக்குத் தன் வீட்டின் நிலைமை பற்றி நன்றாகத் தெரியும். சௌந்தர்யா கருவில் இருந்தபோதே அப்பா இறந்துவிட்டார். அந்தச் சூழலில், தான் ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்ததைக் கூட ஆரம்பத்தில் அம்மா அறிந்திருக்கவில்லை. தன் குழந்தைகளைக் காக்க அவனது அம்மா பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

ஒரு சிறிய ஹோட்டல் நடத்திதான் அம்மா குடும்பத்தைக் கரையேற்றினார். அப்பாவின் குடும்பச் சொத்து கொஞ்சம் கைகொடுத்தது. ஆனாலும், 'தகப்பன் இல்லாத குடும்பம்' என்ற எச்சரிக்கையுணர்வு அம்மாவிற்கு மகள்கள் மீது கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. படிப்புக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை அவர்கள் சுதந்திரத்திற்குத் தரவில்லை. மூத்த அக்கா மேகலா கல்லூரி முடித்த கையோடு, கடன் வாங்கி அவசர அவசரமாகத் திருமணத்தை முடித்து அனுப்பினார் அம்மா.

இரண்டாவது அக்கா ராதா, ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலைக்குப் போக ஆசைப்பட்டாள். ஆனால், "வேலைக்குப் போற இடத்துல எதாவது ஆகிடுமோ?" என்கிற அம்மாவின் அதீத பயம் அவள் விருப்பத்தையும் முடக்கியது. மீண்டும் கடன், மீண்டும் ஒரு திருமணம். ராதாவின் கனவுகள் வீட்டுப் பத்திரத்தோடு அடகு வைக்கப்பட்டன.

மேற்கொண்டு படிக்க ஆசை இருந்தாலும், குடும்பப் பொருளாதாரத்தைச் சீர் செய்ய கார்த்திக் வேலைக்குச் சேர்ந்தான். அங்குதான் அமரேஷின் தந்தை கஜேந்திரனின் அறிமுகம் கிடைத்தது. மகனை நாயகனாக்க அவர் எடுத்த முதல் படம், திரையிடலுக்கு முன்பே 'தோற்றுவிடும்' எனப் பலரால் விமர்சிக்கப்பட்டது. கஜேந்திரன் நிலைகுலைந்து போயிருந்தார்.

அப்போதுதான் கார்த்திக் களமிறங்கினான். ரிலீஸ் தேதி மாற்றம், சமூக வலைதளங்களில் புத்திசாலித்தனமான விளம்பரங்கள், சில முக்கிய விமர்சகர்களைச் சாதகமாகக் கையாண்ட விதம் என அவன் போட்ட ‘ஸ்கெட்ச்’ உண்மையில் மேஜிக் செய்தது. ஓடாது என்று முத்திரை குத்தப்பட்ட படம், பல கோடி லாபத்தை அள்ளிக் கொடுத்தது. மகிழ்ச்சியில் கஜேந்திரன் பரிசளித்த காரில்தான் இன்று அவன் அமர்ந்திருக்கிறான்.

அமரேஷின் திமிரான சுபாவம் ஆரம்பத்தில் அவனுக்கு எரிச்சலைத் தந்தாலும், தன் குடும்பத்தை உயர்த்த அதையெல்லாம் அவன் சகித்துக்கொண்டான். இன்று அவர்கள் குடும்பமும் பொருளாதார ரீதியாக உயர்ந்துவிட்டது. சௌந்தர்யாவைப் பொறியியல் படிக்க வைத்தான். கேம்பஸ் இன்டர்வியூவில் அவளுக்கு வேலை கிடைத்தது. ஆனால் அம்மா ஒப்புக்கொள்ளவில்லை. அவரைச் சம்மதிக்க வைக்கவே அவன் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது.

இதில்... காதல் என்றால்? சுத்தம். வீட்டில் பெரும் பூகம்பமே வெடிக்கும். அதுவும் என்றோ ஓடிப்போன சதாசிவம் வீட்டுப் பெண்ணைப் பற்றி இப்போதும் வன்மத்துடன் பேசிக் கொண்டிருக்கும் அம்மாவிற்கு, சௌந்தர்யாவின் இந்தக் காதல் தெரிந்தால் அவ்வளவுதான். அப்போது அவர்கள் இருவரும் ஜோடியாகப் பைக்கில் செல்வதைப் பார்த்த கார்த்திக், காரின் ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

அமரேஷ் போன்ற ஒருவனுக்கு மேலாளராக இருந்து, எத்தனையோ நெருக்கடிகளைச் சாமர்த்தியமாகச் சமாளித்தவன் அவன். தன் தங்கைக்கும், அம்மாவிற்கும் ஒரு பாதிப்பும் வராமல் இதை எப்படிக் கையாள்வது என்று நிறைய யோசித்துக் குழம்பி, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

தங்கையின் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்றவன், “அவனைக் கூப்பிடு நான் பேசணும்” என, அவள் புரியாமல் பார்த்தாள்.

“யாரைக் கூப்பிடச் சொல்ற?”

“நடிக்காத” என்று பல்லைக் கடித்தவன், “நீ லவ் பண்றியே அந்த நல்லவனைக் கூப்பிடு, நான் பேசணும்” என்றான்.

“அண்ணா...” என்றவள் அதிர, “கூப்பிடுடி!” என்றான். அவள் உள்ளே சென்று இந்திரனை அழைத்து வந்தாள்.

“ஹலோ” என்றவன் கையை நீட்ட, அவன் இறுக்கமான முகத்துடன், “வெளியே போய் பேசலாம் வாங்க” என்றான் அதிகாரமாக. இந்திரன் திரும்பிச் சௌந்தர்யாவைத் தயக்கமாக நோக்க, “அண்ணா ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு” என்று இழுத்தாள்.

“இரண்டு பேரும் ஜோடியா ஐஸ்க்ரீம் பார்லர் போக மட்டும் டைம் கிடைக்குதோ?” அவன் குத்தலாகக் கேட்கவும் இந்திரன் தயங்கிவிட்டு, “ஓகே, நாங்க சொல்லிட்டு வந்துடுறோம்” என்றான்.

“சௌந்தர்யா வேண்டாம், நீங்க மட்டும் வாங்க... நான் வெயிட் பண்றேன்” என்று விட்டு அவன் அங்கிருந்து நகர்ந்துவிட, சௌந்தர்யா கவலையுடன் இந்திரனைப் பார்த்தாள்.

“அண்ணன் என்ன பேசப் போகுதுன்னு தெரியலையே?”

“டென்ஷன் ஆகாத, நான் பார்த்துக்கிறேன்” என்றவன் கீழே இறங்கிச் செல்ல, கார்த்திக் தன் காரின் மீது சாய்ந்து நின்று காத்திருந்தான்.

“நான் பைக்ல வரட்டுமா?”

“வேண்டாம்... கார்ல போயிடுவோம்” என்று சொல்ல, இந்திரன் மறுத்துப் பேசாமல் ஏறிக் கொண்டான்.

கார்த்திக் எதுவும் பேசாமல் வரவும் இந்திரனே பேசத் தொடங்கினான். “ப்ளீஸ், சௌந்தர்யாவை லவ் பண்ணாதீங்க அது இதுன்னு சொல்லாதீங்க” என, அவனைத் திரும்பி முறைத்தவன் காரை ஓரமாக நிறுத்திவிட்டுப் பேசத் தொடங்கினான்.

“நான் லவ் பண்ணாதன்னு சொன்னா... நீங்களும் சரி, என் தங்கச்சியும் சரி கேட்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். அதேநேரத்துல எங்க அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட், இந்தக் காலத்து ஆளுங்க மாதிரி இல்ல. சோ, நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.”

“என்ன முடிவு?” என்று இந்திரன் முகம் யோசனையாக மாற, “உங்க கல்யாணத்தைப் பேசி முடிக்கிறதுன்னு” என்றான்.

ஆனால் அதைக் கேட்ட இந்திரன் முகத்தில் சந்தோஷம் இல்லை. “என்ன, கல்யாணம்னு சொன்னதும் மூஞ்சி மாறுது?”

“இல்லை... எனக்குச் சௌந்தர்யாவைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம்தான். ஆனா எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா... அவ கல்யாணத்தை முடிச்சுட்டு...” என்றவன் சொல்லி முடிப்பதற்குள், “அதுவரைக்கும் ஜாலியா என் தங்கச்சிகூட ஊர் சுத்தலாம்னு திட்டம் போட்டு இருக்க?” என்று கேட்க, இந்திரனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“இதைப் பாரு, நீ என் தங்கச்சிகூட ஊர் சுத்துனதை நான் பார்த்த மாதிரி வேற யாராவது பார்த்து, அது எங்க அம்மா காதுக்குப் போய்... பெரிய பிரச்சனையாகிச் சண்டையாகி... ஹும்... என்னால முடியாது. அதனால பேசாம என் தங்கச்சியை உடனே கல்யாணம் பண்ணிக்கோ” என்றான்.

“உடனேவா?”

“ஆமா, நான் வீட்டுல வந்து பேசுறேன். இது ஒரு அரேஞ்சுடு மேரேஜ் மாதிரி செட்டப் பண்ணிடலாம்.”

இந்திரனுக்குத் தலை சுற்றியது. அவன் பேச்சற்று அமர்ந்திருக்க, “என்ன, உங்க வீட்டுலயும் பிரச்சனை பண்ணுவாங்களா?” என்று கேட்கவும் அவன் மறுப்பாகத் தலையசைத்தான். “வீட்டுல எல்லாம் பிரச்சனை இல்லை... சொன்னா புரிஞ்சிக்குவாங்க. ஆனா எனக்குத்தான்...”

“என்ன உனக்கு?”

“இப்பதான் நாங்க பழகவே ஆரம்பிச்சிருக்கோம்... அதுக்குள்ளே கல்யாணம்...” என்று இந்திரன் தயக்கத்துடன் சொல்ல, “ஓ அப்படி... சரி விடு, நீ என் தங்கச்சிகூடப் பழகிப் பார்த்து முடிவு எடு. நான் அதுவரைக்கும் உன் தங்கச்சிகூடப் பழகிப் பார்க்குறேன்” என, இந்திரனுக்குச் சுர்ரென்று ஏறிவிட்டது.

“ஹலோ!”

“ஏன் கோபப்படுற? நீ சொன்னதையேதானே நானும் சொன்னேன்.”

“ஆனா நீங்க சொன்ன அர்த்தத்துல நான் சொல்லல.”

“எல்லாம் ஒரே அர்த்தம்தான்.”

“சரி, நீங்க சொல்ற மாதிரின்னா கூடச் சௌந்தர்யா முடிவும் இதுல முக்கியம்” என்று கூற, கார்த்திக் உடனடியாக அவளின் செல்லிடப்பேசிக்கு அழைத்தான். தன்னுடைய முடிவை அவளிடம் விளக்கியவன், “உனக்கு இதுல சம்மதமா?” என்று கேட்டுவிட்டு அலைபேசியைச் ஸ்பீக்கரில் போட, “எனக்கு ஓகே அண்ணா!” என்று அவள் குரல் உற்சாகமாக ஒலித்தது.

“சரி, நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்” என்று அழைப்பைத் துண்டித்தவன், “இப்போ என்ன சொல்றீங்க இந்திரன்?” என்று கார்த்திக் கேட்க, அவன் முகம் சுண்டிவிட்டது.

“சரி ஓகே, நான் என் வீட்டுல பேசுறேன்.”

“உங்க அம்மா அப்பா ஏற்காடுலதானே இருக்காங்க?”

“ஆமா.”

“ஒண்ணு பண்ணுங்க, இரண்டு பேருமா நாளைக்கே போய் அம்மா அப்பாவைப் பார்த்துப் பேசுவோம்.”

அதிர்ச்சியான இந்திரன், “நீங்க எதுக்கு? நான் போய் முதல்ல விஷயத்தைச் சொல்றேன்” என்றதும், “எனக்கு உங்க வீட்டைப் பார்க்கணும், உங்க அம்மா அப்பா எல்லாம் எப்படிப் பேசுறாங்க என்னன்னு நேரடியா பார்த்துத் தெரிஞ்சுக்கணும்” என, இந்திரனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

“கார்லயே போயிடலாம் இல்ல? காலைல ஆறு ஏழு மணிக்கு போனா போதும் இல்ல?” என்று எல்லா முடிவையும் அவனே எடுத்துவிட, இந்திரனுக்கு 'ஏன்டா அவன் தங்கையைக் காதலித்துத் தொலைத்தோம்' என்றாகிவிட்டது.

You cannot copy content