You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 33

Quote

33

யாத்ரா இன்னும் முழுமையாக மயக்க நிலையிலிருந்து மீளவில்லை. தலையில் ஒருவிதமான சுழற்சி இருந்துகொண்டே இருந்தது. கண் முன்னே காட்சிகள் யாவும் சிறிது மங்கலாகத் தெரிந்தன. ஆரவ் அவளது தோளைப் பிடித்து, மிக நிதானமாக அருகிலிருந்த நாற்காலியில் அமர வைத்தான்.

“ரிலாக்ஸ்... நான் போய் தண்ணி எடுத்துட்டு வரேன்,” என்றவன் வெளியே சென்று அவளுக்குத் தண்ணீர் எடுத்து வரும்போது, மேஜையில் அவளது செல்பேசியைக் காண்கிறான். அதனையும் கையோடு எடுத்துக்கொண்டு அவளருகே வந்தவன்,

“இந்தா, முதல்ல தண்ணியக் குடி…” என்று தண்ணீரைத் தந்துவிட்டு, அவள் குடித்து முடிக்கவும், “இப்போ ஓகேவா?” என்று மிகவும் கனிவாக விசாரித்தான். அலுவலகத்தில் எந்நேரமும் கண்டிப்புடன் இருக்கும் ஆரவ், இப்போது இத்தனை மிருதுவாகப் பேசுவதே அவளுக்குப் பெரும் வியப்பாக இருந்தது.

அவள் மெதுவாகத் தலையசைக்க, அவன் அவளது செல்பேசியை அவள் கண்முன்னே எடுத்துக் காட்டி, “இது உன்னோடதுதானே?” என்று கேட்க, யாத்ரா அதிர்கிறாள்.

“எப்படி என் போன் உங்க கைல?”

“ஆபீஸ்லதான் இருந்துச்சு,” என்றான்.

அவள் குழப்பத்துடன் சில நொடிகள் யோசித்துவிட்டு, “அதுக்கு வாய்ப்பே இல்ல, நான் உள்ளே வந்தப்ப இருந்து போனை எடுக்கவே இல்ல,” என்று சொன்னாள்.

“அப்போ இங்க இந்த போன் எப்படி வந்துச்சு?”

அவனது கேள்விக்கு பதில் தேடியவள், ‘ஒரு வேளை கார்த்திக்... வந்திருப்பானோ…?’ என்று யோசித்தாள்.

அப்போது ஆரவ், “சரி விடு, எப்படியோ போன் கிடைச்சிடுச்சுல,” என்று சொல்ல, அவளுக்கு அது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

வேலை மீண்டும் ஆரம்பமானது. ஆனால் இன்றைய ஆரவ் முற்றிலும் வேறொரு மனிதனாகத் தெரிந்தான். அவனது குரல் மெதுவாகவும் நிதானமாகவும் இருந்தது.

'இவன் இவ்வளவு சாஃப்டா இருப்பானா…?' என்று நினைத்தவளுக்கு, அவளையறியாமல் உதட்டின் ஓரத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.

மாலை நேரம்… வேலை முடியும் தருணத்தில்

“மத்த வேலை எல்லாம் நாளைக்கு முடிச்சுக்கலாம், கிளம்பு,” என்றான்.

அவள் திடுக்கிட்டு, “இவ்வளவு சீக்கிரமா… இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு, முடிச்சிட்டு…” என்று இழுக்க,

“வேணாம்… நீ போய் முதல்ல ரெஸ்ட் எடு,” என்றான்.

“இல்ல சார், நான் இப்போ ஓகேதான்…”

“யாத்ரா கிளம்பு, இட்ஸ் மை ஆர்டர்” என்று ஆரவ் அதிகாரமாக உரைத்தாலும் அதில் அக்கறை இருந்தது.

அதன் பின் அவள் மறுக்கவில்லை. அவன் அதோடு விடவில்லை. “என் டிரைவர் உன்னை வீட்டுல டிராப் பண்ண சொல்றேன்,” என்றான்.

“இல்ல சார்… நான் போயிடுவேன், கேப்…” என்ற அவளை மேலே பேசவிடவில்லை.

“ஜஸ்ட் கோ” என்றான் அழுத்தமாக.

அந்தக் குரலில் மறுக்க முடியாத ஒரு அன்பான கண்டிப்பும், மென்மையும் கலந்திருந்தது. சில நிமிடங்களில்… யாத்ரா ஆரவ்வின் காரில் பயணமானாள். அவளது மனம் ஆரவ்வின் இந்த புது முகத்தைப் பற்றி நினைத்துக் கொண்டே வந்தது.

அதே நேரம்… மற்றொரு பிரதான வழியில்… ஆரவ் ஒரு சிறிய காரைத் தானே ஓட்டிக் கொண்டு முன்னே சென்றான். சாலையின் ஒரு திருப்பத்தில்… அவன் ஓட்டி வந்த கார், யாத்ரா சென்றுகொண்டிருந்த காரைக் கடந்து சென்றது. தற்செயலாக ஜன்னல் வழியாகப் பார்த்த யாத்ரா, ‘சார்… ஏன் இந்த கார்ல?’ என்று சிந்தித்தாள். சிறிது தூரம் சென்றதும்… அந்த கார் அங்கிருந்த ஒரு பள்ளிக்கு முன்பாகச் சென்று நின்றது.

அவள் ஓட்டுநரிடம், “ஆரவ் சார், ஓட்டிட்டு வந்த கார் தானே அங்கே நிற்குறது?” என்று சந்தேகமாகக் கேட்க,

“தினமும் சார் இந்த டைமுக்கு இங்க வந்து நிற்பாரு மேடம்,” என்றான்.

“ஏன்?”

“அந்த ஸ்கூல்லதான் அவர் பொண்ணு படிக்குது... பொண்ணை ரகசியமா பார்க்க ஸ்கூல் முடியற டைம்க்கு இங்க வந்து நின்னுடுவாரு…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஆரவ் காரிலிருந்து இறங்கி அந்தப் பள்ளியின் முன் நிற்பதைக் கண்டாள்.

‘இவனுக்கும் இப்படியும் ஒரு முகம் இருக்கா?’ என்று யாத்ராவிற்கு ஒரு பக்கம் வியப்பும், மறுபக்கம் அவன் மீதான நன்மதிப்பும் அதிகரித்தது.

அன்று மாலை அவள் வழக்கத்தை விட மிகவும் சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். தேன்மொழி வந்து கதவைத் திறக்க, எதுவும் பேசாமல் நேராகத் தனது அறைக்குள் சென்றுவிட்டாள். முகத்தைக் கழுவித் துடைத்துக் கொண்டு அவள் ஓய்வெடுத்துக் கொள்ள எண்ணிய சமயம் கதவு தட்டப்பட்டது.

தேன்மொழி வாசலில் காபியுடன் நிற்க, அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“நீங்க எதுக்கு இதெல்லாம் செஞ்சுக்கிட்டு... வேணும்னா நானே போட்டுக்க மாட்டேனா?”

“பரவாயில்ல எடுத்துக்கோ,” என்று கட்டாயப்படுத்த, அவள் எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டு மீண்டும் அறைக்குள் செல்லவும், “யாத்ரா…” என்ற தேன்மொழியின் குரல் அவளை நிறுத்தியது.

அவள் திரும்பிப் பார்த்தாள். “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்ம்மா…” அந்த குரலில் ஒரு பெரிய தயக்கம்.

காபியுடன் ஹாலுக்குள் நடந்து வந்து சோபாவில் அமர, தேன்மொழி மெதுவாகத் தன் பேச்சைத் தொடங்கினார்.

“நீ… கார்த்திக்கை விட்டுப் போனதுக்கு நான்தான் காரணம்…” என்றவர் சொன்ன நொடி யாத்ரா, “ச்சே! அப்படி எல்லாம் இல்லை அத்தை,” என்று மறுத்தாள்.

“இல்லம்மா… நான்தான் காரணம்,” என்று மீண்டும் கூறியவர் அவளது முகத்தை நேராகப் பார்த்தார். அவர் விழிகளில் குற்ற உணர்வு தேங்கிக் கிடந்தது.

“நீ அவனைக் கைவிடணும்னு நினைச்சிருந்தா… அவன் ஜெயிலுக்குப் போன அந்த வினாடியே போயிருப்பே… ஆனா நீ போகல, அவனுக்காகக் காத்திருந்தே… உன்னை வீட்டை விட்டுப் போக வச்சது நான்தான்… கண்டபடி என்னென்னவோ பேசி... உன்னை மட்டுமா, உன் குடும்பத்தையும் கூடப் பேசுனேன்... அதெல்லாம் எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பதான் உணர்றேன்... என்னை மன்னிச்சிடு யாத்ரா…”

யாத்ராவின் முகம் மிகவும் கனிவாக மாறியது. அவள் காபியை வைத்துவிட்டு அவர் கையைப் பற்றிக் கொண்டாள். “அப்படி எல்லாம் பேசாதீங்க அத்தை” என்று கூறிய போதும் அவர் நிறுத்தவில்லை.

“நீ இல்லாம… கார்த்திக்…” அதற்கு மேல் அவரால் பேச முடியாமல் வேதனையில் தொண்டை அடைத்தது. மெதுவாகத் தன்னைச் சீர்ப்படுத்திக் கொண்டவர், “அவன் வெளிய பார்க்கச் சாதாரணமா நடமாடுறான்… ஆனா உள்ளுக்குள்ள… நீ இல்லாம அவன் மொத்தமா உடைஞ்சுட்டான்…” என்று கூற, யாத்ரா வலியுடன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

“நீங்க ரெண்டு பேரும் திரும்பியும் சேரணும்…” என்றவர் மேலும் சொன்னதைக் கேட்ட அவள் மனம் தவிப்பில் ஆழ்ந்தது. “நீ மனசு வச்சா முடியும்மா,” என்றவர் விடாமல் பேச, மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு நிமிர்ந்தவள்,

“சரிங்க அத்தை… நான் யோசிக்கிறேன்,” என்று அப்போதைக்கு அவரைச் சமாளித்துவிட்டாள். அந்த வார்த்தைகளைக் கேட்டவர் முகத்தில் நிம்மதி பரவியது.

“சரிம்மா, நீ காபி குடி…” என்றுவிட்டு அவர் அங்கிருந்து எழுந்து செல்ல, அந்த காபியைப் பருகியவள் மீண்டும் அறைக்குள் வந்து ஒடுங்கிவிட்டாள். அவளது மனம் கார்த்திக்… கார்த்திக்... என்று அவனைச் சுற்றியே சுழன்றது. அவனது நெருக்கம்... அவனது பார்வை எல்லாமே அவளது உணர்வுகளுடன் விளையாடியது. அவனைப் பற்றி யோசிக்கக் கூடாது என்று பிடிவாதமாகக் கண்களை மூடியவள் அப்படியே உறங்கிவிட்டாள். இரவு உணவு உண்ண இந்திரன் கதவைத் தட்டி அழைக்கவும்தான் அவளுக்கு விழிப்பே வந்தது.

சில நிமிடங்கள் கழித்து… அவள் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்திருந்தாள். அங்கே தேன்மொழி, சௌந்தர்யா, இந்திரன் என அனைவரும் அமர்ந்திருந்தனர். கார்த்திக் மட்டும் இல்லை.

சௌந்தர்யாவின் பார்வை அவளை முற்றிலும் தவிர்த்தது. அதற்கு நேர்மாறாய்த் தேன்மொழி அவளைப் பார்த்துப் பார்த்துப் கவனித்தார். இரண்டுமே அவளுக்குச் சங்கடத்தைக் கொடுத்தது. அவள் முடிந்தளவு எதற்கும் வாயைக் கொடுக்காமல் சாப்பிட்டு முடித்து எழுந்து செல்ல எத்தனிக்க, இந்திரன் அவளது கையைப் பிடித்தான்.

“கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்,” என்று கூற, இருவரும் முகப்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த பேச்சிற்கு இடையில்  அவளது விழிகள் அவ்வப்போது வாயில்கதவை தொட்டது.

அதனை கவனித்துவிட்ட இந்திரன், “கார்த்திக்கைத் தேடுறியா…”என, அவள் மாட்டிக் கொண்ட உணர்வில், “இல்லையே,” என்று அப்பாவியாக மறுத்தாள்.

ஆனால், அவளது முகம் சிவந்து காட்டிக் கொடுத்துவிட்டது. சரியாக அந்த சமயம் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

“கார்த்திக்காத்தான் இருக்கும்... அவனுக்கு நூறு ஆயுசு,” என்று சொல்லிக் கொண்டே சென்று கதவைத் திறந்த இந்திரன், அவன் நின்ற கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.

“எப்பவும் இந்தளவு குடிச்சுட்டு வர மாட்டியே, என்னாச்சு உனக்கு?” என்றவன் விசாரிக்க, கார்த்திக் பதில் சொல்லாமல் போதை மயக்கத்தில் சிரித்தான்.

“சரி உள்ளே வா,” என்று கைத்தாங்கலாக அழைத்து வர, அந்தக்காட்சியைப் பார்த்த யாத்ரா, “என்னாச்சு அண்ணா?” என்று பதறினாள்.

அப்போது கார்த்திக்கின் பார்வை அவள் மீது விழுந்தது. உடனடியாக இந்திரனின் பிடியை உதறிவிட்டவன், தடுமாற்றத்துடன் அவள் அருகே வந்து நின்று, “நீ என்னடி பண்ணிட்டு இருக்க என் வீட்டுல?” என்று தடாலடியாகக் கேட்டதில் அவள் திகைப்புற்றாள்.

இடையில் வந்த இந்திரன், “அவன் நிறைய குடிச்சிருக்கான்... இப்ப எதுவும் பேசிக்க வேணாம்... நீ உள்ளே போ யாத்ரா,” என்று தங்கையிடம் சொல்ல, அவளும் அவன் பேச்சை மறுக்காமல் அறைக்குள் செல்ல எத்தனித்தாள்.

ஆனால், கார்த்திக்கின் கரம் யாத்ராவின் மணிக்கட்டைக் மிக இறுக்கமாகப் பிடித்துக் கொண்டது!

“கார்த்திக், அவ கையை விடு!” என்று இந்திரன் சொல்ல, அவன் கேட்கவில்லை.

“அவ என் பொண்டாட்டி... நான் அவ கையை பிடிப்பேன்... இல்ல கட்டி பிடிப்பேன்! நீ யார் அதை கேட்க?” என்று போதை மயக்கத்தில் பதில் சொன்னான் கார்த்திக்.

“வரைமுறை இல்லாம பேசாத... வா உள்ளே போலாம்,” என்று இந்திரன் அவனது தோளை பிடித்த இழுத்துப் போக எத்தனிக்க, கார்த்திக் அவன் பிடியை ஆத்திரத்துடன் உதறினான்.

“யாரு... நான் வரைமுறை இல்லாம பேசுறேனா? உன் தங்கச்சிதான் வரைமுறை இல்லாம நடந்துக்குறா!”

“குடிச்சுட்டு உளறாத” என்று இந்திரன் சொல்ல,

“யாரு, நானா உளறேன்? நானா உளறேன்?” என்றவன் சீறலுடன் யாத்ராவின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து, “சொல்லுடி... உங்க அண்ணன்கிட்ட இன்னைக்கு ஆபீஸ்ல நடந்ததை சொல்லு!” என்று கர்ஜித்தான்.

நடுங்கிப் போன யாத்ரா, “நீ என்ன பேசுறன்னே எனக்குப் புரியல கார்த்திக்…” என்றாள்.

“கட்டினவனைத் தூக்கிப் போட்டுட்டு, கண்டவன் எவனையோ கட்டிப்பிடிச்சுக்கிட்டு நின்னுட்டு இருந்தியே அதை சொல்லுடி?” என்று அவன் போதையின் உச்சத்தில் வார்த்தைகளைக் கொட்ட, அதைக் கேட்ட இந்திரன் கோபத்துடன் கார்த்திக்கை அடிக்கப் பாய்ந்தான்.

“அண்ணா வேணாம்! ப்ளீஸ் விட்டுடு!” என்று யாத்ரா அலறியபடி ஓடிவந்து இந்திரனைத் தடுத்துப் பிடித்தாள்.

அதேநேரம் சத்தம் கேட்டு சௌந்தர்யாவும் தேன்மொழியும் அறையை விட்டு வெளியே வந்தனர்.

அவர்கள் மூவரையும் ஆழ்ந்து பார்த்த சௌந்தர்யா, “ஆமா என்ன நடக்குது இங்க?” என்று அதட்டலாகக் கேட்க, இந்திரன் அதே கோபத்துடன், “உங்க அண்ணன்தான் குடிச்சுட்டு வந்து என் தங்கச்சிக்கிட்ட தப்பு தப்பா பேசிட்டு இருக்கான்!” என்று கூறினான்.

 “அப்போ இது எல்லாத்துக்கும் நீதான் காரணமா?” என்று சௌந்தர்யா தன் தமையனுக்கு பதிலாக யாத்ராவை முறைத்தாள்.

“நான் எதுவும் பண்ணல அண்ணி…” என்று அவள் பதறிப்போய் பதில் பேச,

“என் அண்ணன் வாழ்க்கையை நாசம் பண்ணியே போதாதா?” என்று சௌந்தர்யா நேரடியாக அவளைக் குற்றம் சாட்டினாள்.

“சௌந்தர்யா போதும்!” என்று இந்திரனுக்கு முன்னதாகத் தேன்மொழி தன் மகளை அதட்டி வாயடைக்கச் செய்தார்.

யாத்ராவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகப் பெருகியது. “நான் அப்பவே சொன்னேன், இங்க தங்க மாட்டேன்னு... நீதான் கேட்கல. இப்ப பாரு... எவ்வளவு பிரச்சினை... போதும், நான் நாளைக்கே இங்கிருந்து கிளம்பிப் போறேன்,” என்று வருத்ததுடன் கூற,

“நாளைக்கு என்னடி, இன்னைக்கே போ!” என்று கார்த்திக் கத்தியபடியே, அவள் கழுத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு… வீட்டு வாசல் கதவு வரை கொண்டு வந்துவிட்டான்.

“கார்த்திக், அவளை விடு!” என்று இந்திரனும் தேன்மொழியும் கத்தினர். ஆனால், கார்த்திக்கின் கண்களுக்கு இன்று எவரும் தெரியவில்லை; எவர் குரலும் அவன் செவிகளில் விழவில்லை. அவனது கண்ணில் ஆரவ்வின் தோளில் யாத்ரா சாய்ந்திருந்த காட்சி மட்டும்தான் எரிந்து கொண்டிருந்தது.

“வலிக்குது கார்த்திக்…” என்றவள் கெஞ்சக் கெஞ்சக் கேட்காமல், மூர்க்கத்துடன் அவள் கழுத்தை பிடித்து வந்து கதவுக்கு வெளியே தள்ளிவிட்டான்.

“யாத்ரா!” என்று அலறிய இந்திரன் அவளைத் தாங்கிப் பிடிக்க ஓடிவந்தான்.

ஆனால், அவள் தரையில் சென்று விழுந்துவிட, அந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் சிலர் அந்தக்காட்சியை நின்று வேடிக்கை பார்த்தனர்.

“ஏண்டா இப்படி பண்ண…?” இந்திரன் கோபத்தின் உச்சத்திற்குச் சென்று கார்த்திக்கைப் பார்த்துக் கத்தினான்.

“என்னை வேணாம்னு விட்டுட்டுப் போனவளுக்கு என் வீட்டுல இடம் இல்ல!” என்று ஆவேசமாக பேசியவன் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை. தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டான்.

அப்பார்ட்மெண்ட் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க தன் தங்கையைத் தூக்கிவிட்ட இந்திரன், “குடிச்சதுல மூளை கெட்டுப் போச்சு அவனுக்கு... நீ உள்ளே வாம்மா” என்று அழைக்க, அவள் அப்படியே சிலையாக நின்றாள். இன்னும் அவளால் நடந்ததை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

“யாத்ரா உள்ளே வா, அண்ணாவுக்காக வாடா,” என்று இந்திரன் அவளது கைகளை பிடித்துக் கெஞ்சவும் அவளால் மறுக்க முடியவில்லை.

அறைக்குள் வந்து அமைதியாக உட்கார்ந்து கொள்ள, “சாரிம்மா, இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைக்கல…” என்று இந்திரன் கூறினான்.

“நான் கார்த்திக்குச் செஞ்ச அநியாயத்துக்கு இதெல்லாம் ரொம்ப கம்மி அண்ணா”

 “என்ன பேசுற நீ, அப்படி எல்லாம் இல்ல”

“இல்ல அண்ணா, ஐ டிசர்வ் திஸ்” என்றவளின் வார்த்தைகளிலிருந்து வலி இந்திரன் மனதை தாக்கியது. எப்படி அவளை சமாதானம் செய்வது என்றே அவனுக்கு தெரியவில்லை.  

அவள் மேலும், “நீ போய் படுத்துக்கோ அண்ணா... நானும் படுத்துக்கப் போறேன்... எனக்குக் காலைல ஆபீஸ்ல நிறைய வொர்க் இருக்கு,” என்று சொல்ல,

“நான் வேணா இந்த ரூம்லயே படுத்துக்கட்டுமா?” என்று இந்திரன் கரிசனத்துடன் கேட்டு அவள் தலையை தடவிக் கொடுத்தான்.

“அதெல்லாம் வேணாம் அண்ணா, நீ போ,” என்று அவனை அனுப்பிவிட்டுப் படுக்கையில் சாய, அவளது கண்களினோரம் கண்ணீர் துளித் துளியாகக் கசிந்தூற்றிக் கொண்டே இருந்தது.

அதேநேரம், கார்த்திக்கை உண்டு இல்லை என்று செய்வதற்காக அறைக்குள் கோபத்துடன் நுழைந்த இந்திரன், அவன் போதை மயக்கத்தில் உறங்கிவிட்டதைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டான். உள்ளூறக் கோபம் பொங்கினாலும் அப்போதைக்கு எதுவும் செய்ய முடியாத கையாலாகாத்தனத்துடன் அவனும் அமைதியாகப் படுத்துக் கொண்டான்.

காலையில் இந்திரனுக்குச் சீக்கிரமாக விழிப்பு வந்துவிட்டது. அவன் நேராக யாத்ராவை பார்க்கச் செல்ல, அவளது அறை முற்றிலும் காலியாக இருந்தது. அவளது பெட்டி, பை எதுவும் அங்கே இல்லை.

You cannot copy content