You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 36

Quote

36

மின்தூக்கியில் ஏறிய யாத்ராவின் மனம் ஒரு நிலையாக இல்லை. ஆபீஸிலிருந்து வரும் வழியில் ஆரவ் தன்னிடம் கேட்ட அந்த உதவி அவளது மூளையைக் குடைந்து கொண்டிருந்தது. தன் ஈகோவால் மகளை இழந்து தவிக்கும் ஒரு தந்தையாக அவனுள் இருக்கும் பாசத்தையும் ஏக்கத்தையும் அவளால் நிராகரிக்கவோ, மறுக்கவோ முடியவில்லை.

ஆனால், இதற்காகக் கார்த்திக்கிடம் பேச வேண்டும் என்று நினைக்கும் போதுதான் அவளுக்குள் ஒரு மெல்லிய உதறல் எடுத்தது. நேற்று அவன் வீட்டில் காட்டிய அந்த ஆவேசமும், இன்று ஆபீஸில் தன்னைத் தூணோடு சாய்த்து வம்படியாக நடந்துகொண்ட விதத்தையும் நினைக்கவே நெஞ்சு பதற்றமாக இருந்தது.

அப்போது 'டிங்' என்ற சத்தத்துடன் மின்தூக்கியின் கதவு திறக்க, அவளது சிந்தனை கலைந்து மெதுவாக நடந்து வந்தாள். வாசலில் வந்து நின்றதும், நேற்றிரவு கார்த்திக் தன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய அந்த காட்சி கண்முன்னே வந்து நிழலாடியது.

உள்ளே செல்ல அவளது மனம் தயங்கியது; அதே தயக்கத்துடனே அவள் காலிங் பெல்லை அழுத்த, அவளை கண்ட மாத்திரத்தில் சௌந்தர்யா சௌந்தர்யாவின் முகம் கடுகடுப்பாக மாறியது.

"அப்படியொரு ரோஷமா கிளம்பிப் போன... இப்போ என்ன பெட்டியோட வந்து நிற்குற?" என்று குத்தலாகக் கேட்க, யாத்ராவிற்கு அப்படியே திரும்பிப் போய்விடலாம் என்று தோன்றியது.

ஆனால், ஒருவாறு தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டவள், "இல்ல அண்ணி... அம்மா, அப்பா இன்னைக்குச் சாயந்தரம் வராங்க... அதான்..." என்று காரணத்தைச் சொல்ல, சௌந்தர்யா ஏளனமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்து கதவைத் திறந்துவிட்டாள்.

அறைக்குள் வந்துவிட்ட யாத்ரா, பெட்டியை ஓரமாக வைத்துவிட்டு, நேராகக் குளியலறைக்குச் சென்று ஷவரைத் திறந்தாள். மேலிருந்து கொட்டிய குளிர்ந்த தண்ணீருக்குக் கீழே அவள் அப்படியே உறைந்து போய் நின்றாள். தண்ணீர் அவளது உடலைத் தொட்ட போதும் கார்த்திக்கின் தீண்டல் நினைவு வந்தது. உடல் நனைய நனைய அவளது மனம் தீராத தாப உணர்வில் நனைந்தது.

"நாம பிரிஞ்சிருந்தாலும் நீ என்னைக்கும் என் பொண்டாட்டிதான்டி... கார்த்திக்கோட பொண்டாட்டி!" அவனது இந்த பிடிவாதமான காதல்தான் அவளை அவனுடன் சேரவும் விடாமல், அவனை விட்டுப் பிரியவும் விடாமல் அவளது நெஞ்சைப் போட்டுப் படாய்படுத்திக் கொண்டிருந்தது.

சிறிது நேரம் கழித்துத் தலையைத் துடைத்துக் கொண்டு, தளர்வான ஒரு நைட்டிக்கு மாறி அறைக்கு வெளியே வந்தாள் யாத்ரா. ஈரக் கூந்தலைத் தோளிலேயே விட்டிருந்தவளுக்கு இப்போதுதான் உடல் சற்றே ஆசுவாசமாவது போல இருந்தது.

அப்போது… திடீரென்று ஹாலில் இருந்து ஏதோ ஒரு பயங்கரமான சத்தமும், அலறலும் கேட்டது!

யாத்ரா பதறியடித்துக் கொண்டு ஹாலை நோக்கி ஓடி வந்தாள். அங்கே கண்ட காட்சியால் அவளது இதயம் ஒரு நொடி நின்றுவிட்டது போலானது. கர்ப்பிணியான சௌந்தர்யா நிலைதடுமாறித் தரையில் விழுந்து கிடந்தாள். அவளது முகம் வலியால் சுருங்கிப் போயிருக்க, அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுது கத்திக் கொண்டிருந்தாள்.

"அண்ணி! அண்ணி! என்னாச்சு அண்ணி?!" என்று பதறியபடி அவளருகே ஓடிவந்து மண்டியிட்ட யாத்ரா, சௌந்தர்யாவின் தோள்களைப் பிடித்துத் தூக்க முயன்றாள். ஆனால், முடியவில்லை.

"அத்தை... அத்தை?" என்று யாத்ரா பயத்துடன் சுற்றிலும் தேட,

"அவங்க... அவங்க கோயிலுக்குப் போயிருக்காங்க யாத்ரா... ஆஹ்... வலிக்குது..." என்று சௌந்தர்யா அழுதுகொண்டே வலியோடு சொன்னாள்.

யாத்ரா அதற்கு மேல் தாமதிக்கவில்லை. விறுவிறுவென்று அப்பார்ட்மெண்ட் வராந்தாவிற்கு ஓடிச்சென்று, பக்கத்து வீடுகளில் இருப்பவர்களை உதவிக்குக் கூச்சலிட்டு அழைத்தாள். இரண்டு பேர் ஓடிவர, அவர்களின் உதவியோடு சௌந்தர்யாவைத் தூக்கினாள். அடுத்த கணமே தன் செல்பேசியை எடுத்து அவசரமாக ஆம்புலன்ஸிற்கு கால் செய்து வரவழைத்தாள்., ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தாள்.

கூடவே, தன் அண்ணன் இந்திரனுக்கும் போன் செய்து தகவல் சொன்னாள்.

மருத்துவமனை வராந்தாவில் யாத்ரா கவலையுடன் நின்றுகொண்டிருக்க, செய்தி கேட்டு அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தான் கார்த்திக். அவனது முகம் பயத்தில் வெளுத்துப் போயிருந்தது.

நேராக யாத்ராவிடம் வந்தவன், "சௌந்தர்யாவுக்கு என்னாச்சு?" என்று விசாரிக்க, யாத்ரா வீட்டில் நடந்த சம்பவங்களை அவனிடம் சொன்னாள். அதைக் கேட்டதும் அவனது கண்கள் கலங்கின.

அப்போது அவசர சிகிச்சைப் பிரிவின் கதவைத் திறந்து கொண்டு தலைமை மருத்துவர் வெளியே வந்தார்.

"கொஞ்சம் காம்ப்ளிகேஷன்... குழந்தையையும் தாயையும் காப்பாத்தணும்னா இப்பவே ஆபரேஷன் பண்ணியாகணும். நர்ஸ் கொடுக்குற ஃபார்ம்ல (Form) உடனே சைன் பண்ணுங்க," என்று சொல்ல,

கார்த்திக் பதற்றத்துடன், “டாக்டர்... அவங்க ஹஸ்பெண்ட் டிராபிக்ல மாட்டிக்கிட்டாரு... வர கொஞ்சம் நேரம் ஆகும்,” என,

“நீங்க பேஷன்ட்டுக்கு யாரு?” என்று மருத்துவர் கேட்க,

“நான் அவங்க அண்ணன்,” என்று கார்த்திக் சொல்லவும், “அப்போ நீங்களே கையெழுத்து போடுங்க,” என்று சொல்லிவிட்டு மருத்துவர் செல்ல, செவிலியர் அந்தப் படிவத்தை எடுத்து வந்து நீட்டினார்.

அதனை வாங்கிய கார்த்திக்கின் கைகள் பயத்திலும் பதற்றத்திலும் கையெழுத்திட முடியாமல் நடுங்குவதை யாத்ரா கவனித்தாள். அவனது தவிப்பைப் பொறுக்க முடியாமல் அருகில் வந்தவள், “பயப்படாதீங்க கார்த்திக்... ஒண்ணும் ஆகாது... தைரியமா இருங்க,” என்று ஆறுதல் சொல்ல, அவளை அவன் நிமிர்ந்து பார்த்தான். அவளது வார்த்தைகளில் அவனுக்குள் ஒரு நிதானம் பிறந்தது.

“ம்ம்... சைன் பண்ணுங்க,” என்று யாத்ரா மீண்டும் மென்மையாகச் சொல்ல, அவன் அதன் பிறகு அந்தப் படிவத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்.

சௌந்தர்யாவை அறுவை சிகிச்சைக்குத் தயார் செய்து ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லும்போது, அவள் கார்த்திக்கைப் பார்த்து, “எங்க அண்ணா... அவரு இன்னும் வரலையா?” என்று அழுகையோடு கேட்க,

“வந்துட்டு இருக்கான்டி... நீ பயப்படாத... உனக்கு ஒன்னும் ஆகாது. குழந்தையும் நீயும் நல்லபடியா இருப்பீங்க," என்று தன் தங்கைக்குப் ஆறுதல் சொன்னான் கார்த்திக். யாத்ராவும் அவளருகே குனிந்து, “ஆமா அண்ணி... குழந்தை நல்லபடியா பிறக்கும், தைரியமா இருங்க அண்ணி,” என்று கூறினாள்.

அடுத்த சில நிமிடங்களில், அறுவை சிகிச்சை அறைக்குள் சௌந்தர்யா எடுத்துச் செல்லப்பட்டாள். கார்த்திக் பதற்றத்துடன் வராந்தாவில் அப்படியும் இப்படியுமாகப் பைத்தியம் பிடித்தவன் போல நடந்து கொண்டிருந்தான். அவ்வப்போது இந்திரனுக்கு வேறு போன் செய்து, “எங்கே இருக்க? எங்கே இருக்க? சீக்கிரம் வா!” என்று சொல்லியபடி இருக்க, அதனை கவனித்த யாத்ரா, “அண்ணன் வந்துடுவான் கார்த்திக்... நீ டென்ஷன் ஆகாம முதல்ல உட்காரு” என்றாள்.

ஆனால், அவன் அவளது வார்த்தைகளைக் கேட்காமல் மீண்டும் வராந்தாவில் நடக்க, “கார்த்திக்... இப்படி உட்காரு!” என்று அவனது கரத்தைப் பலவந்தமாகப் பிடித்து அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தாள் யாத்ரா. அவளது அந்த மென்மையான பிடி... சட்டென்று கார்த்திக்கை அப்படியே அமைதிப்படுத்தியது.

மூன்று வருடப் பிரிவுக்குப் பிறகு, அவளது கண்களிலிருந்த அந்தக் கனிவும், அவளது கரங்களின் ஆறுதலான பிடியும் அவனை ஒரு மாதிரி உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியது. பல நாட்களாகத் தங்களுக்குள் இருந்த பிரிவு, தவிப்பு, வேதனை, வலி எல்லாம் அந்த ஒற்றைத் தீண்டலில் சட்டென்று காணாமல் போனது போலிருந்தது.

அந்த நொடி... தன் கையை மிருதுவாகப் பற்றியிருந்த அவளது கையின் மீது, தன் மறுகரத்தை அவன் வைக்க எத்தனிப்பதற்குள்... "அண்ணா வந்துட்டியா!" என்று யாத்ரா தன் கையை உருவிக்கொண்டு இந்திரனை நோக்கி ஓடிவிட்டாள்.

அவனுடன் தேன்மொழியும் வந்திருந்தார். நடந்ததை எல்லாம் கேட்டறிந்ததும், "ஐயோ... இந்த நேரம் பார்த்து நான் கோயிலுக்குப் போயிருக்கக் கூடாது! என் பொண்ணுக்கு இப்படி ஆகிடுச்சே!" என்று தேன்மொழி தலையிலடித்துக் கொண்டு அழ,

"ம்மா... சௌந்தர்யாவுக்கு ஒண்ணும் ஆகாதும்மா, அமைதியா இரு," என்று கார்த்திக் அவளைக் கட்டிப்பிடித்துச் சமாதானப்படுத்தினான். அதே நேரம், கவலையாக நாற்காலியில் உட்கார்ந்துவிட்ட தன் அண்ணன் இந்திரனுக்கு யாத்ரா ஆறுதல் கூறினாள்.

அப்போது ஆபரேஷன் தியேட்டரிலிருந்து முகமலர்ச்சியுடன் வெளியே வந்த மருத்துவர், "ஆண் குழந்தை பிறந்திருக்கு! தாயும் குழந்தையும் ரெண்டு பேருமே நல்லா இருக்காங்க," என்ற நற்செய்தியைக் கூறினார்.

அந்த விநாடி, அத்தனை பேர் முகத்திலும் சொல்லொணாச் சந்தோஷம் படர்ந்தது. நர்ஸ் துணியில் சுற்றப்பட்டிருந்த அந்தப் பிஞ்சுவடிவக் குழந்தையை வெளியே கொண்டு வர, நெகிழ்ச்சியுடன் முதன்முதலில் தன் கைகளில் வாங்கினான் இந்திரன். அதன் ஸ்பரிசம் உடலில் பட்ட அடுத்த விநாடி, அவனது கண்கள் ஆனந்தக் கண்ணீரால் குளித்தன.

அதன் பின், பேரக்குழந்தையைத் தன் கைகளில் வாங்கிப் பாசத்தோடு முத்தமிட்டார் தேன்மொழி. குழந்தையைப் பார்த்ததும் கார்த்திக்கின் முகத்தில் அப்படியொரு சந்தோஷமும் பூரிப்பும் அரும்பியது. தன் தங்கை மகனை அவன் ஆசையோடு பார்க்கும்போது, யாத்ராவின் மனதிற்குள் இன்று காலையில் அவன் ஆரவ்வின் மகள் நிமிஷாவைக் கைகளைப் பிடித்து, ஐஸ்கிரீம் வாங்கித் தந்து கொஞ்சிய அந்தப் 'பாசக்கார அப்பா' முகம் வந்து வந்து போனது. இவனுக்குள் இப்படி ஒரு பேரன்பு ஒளிந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது அவளது நெஞ்சு உருகியது.

தேன்மொழி குழந்தையைத் தூக்கிக் கொண்டு யாத்ராவின் அருகே வந்தார். "இந்தா யாத்ரா... குழந்தையை வாங்கிக்கோ," என்று அவளிடம் நீட்ட, யாத்ரா சட்டென்று ஒரு நொடி தயங்கி, "இல்ல அத்தை... வேணாம்... நீங்களே வச்சிருங்க," என்று மறுத்தாள்.

ஆனால் தேன்மொழி விடவில்லை. "இல்லடா... என் சௌந்தர்யாவும் என் பேரப் புள்ளையும் இன்னைக்கு நல்லபடியா இருக்காங்கன்னா... அதுக்கு நீதான் காரணம். நீ மட்டும் நேரத்துக்கு அவளை ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கலைன்னா என்ன ஆகியிருக்கும்? இந்தா... முதல்ல நீ வாங்கு," என்று கட்டாயப்படுத்தினார். அருகில் நின்ற இந்திரனும் தன் தங்கை யாத்ராவைப் பார்த்துப் புன்னகையோடு, 'வாங்கு' என்பது போலக் கண்காட்டினான்.

வேறு வழியின்றி, யாத்ரா அந்தப் பச்சைக் குழந்தையைத் தன் கைகளில் ஏந்தினாள். பஞ்சு போன்ற அந்த உடலின் ஸ்பரிசம் அவளது கைகளில் பட்டதும், அவளது உடம்பிற்குள் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல சிலிர்த்துக் கொண்டது. அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்து, அவளையறியாமல் உதட்டைக் குவித்து அவள் கொஞ்சத் தொடங்கினாள்.

அவள் குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்து, உலகையே மறந்து கொஞ்சிக் கொண்டிருப்பதை, கார்த்திக் ஓரமாக நின்று தன் விழிகளால் அணு அணுவாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்குள் இருக்கும் அந்தத் தாய்மையின் பேரழகு அவனது தவிப்பையும் காதலையும் பலமடங்கு அதிகப்படுத்தியது.

தற்செயலாகத் தன் பார்வையை நிமிர்த்திய யாத்ரா, இமைக்காமல் தன்னையே பார்த்திருந்த கார்த்திக்கின் கலங்கிய விழிகளை கண்டு திகைப்படைந்தாள். அந்தப் பார்வை பேச முடியாத பலநூறு உணர்வுகள் வார்த்தைகளின்றியே அவளிடம் ஏக்கத்துடன் கடத்திக் கொண்டிருந்தன.  

அந்தச் சமயத்தில்... யாத்ராவின் அம்மா பிரியாவும், அப்பா குமாரும் மருத்துவமனைக்குள் ஓடிவந்தனர். "யாத்ரா... என்னாச்சு?" என்று அவர்கள் மகளிடம் வந்து பதற்றத்துடன் நிற்க, அவள் பட்டென்று கார்த்திக்கிடமிருந்து தன் தலையை உலுக்கிக் கொண்டாள்.

அவர்களுக்குக் குழந்தை காட்ட, இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அதன் பின் அனைவரும் சென்று வார்டில் இருந்த சௌந்தர்யாவைப் பார்த்துப் பேசிவிட்டு வந்தனர்.

சிறிது நேரம் கழித்து வந்த நர்ஸ், "இங்க ஒரு அட்டெண்டர் மட்டும் இருந்தா போதும்... எல்லாரும் கிளம்பலாம்," என்று சொல்ல, தேன்மொழி தங்கிக் கொள்வதாகக் கூறினார்.

"நான் வெயிட்டிங் ஹால்ல இருக்கேன்," என்றான் இந்திரன் தன் மனைவியின் அருகிலேயே இருக்க விரும்பினான்.

இருவருக்கும் இரவு உணவு வாங்கித் தந்த கார்த்திக், யாத்ராவையும் அவளது பெற்றோரையும் தன் காரில் அழைத்துச் சென்றான். முன்சீட்டில் குமார் அமர்ந்திருந்தார். பின்சீட்டில் யாத்ராவும் அவளது அம்மா பிரியாவும் அமர்ந்திருந்தனர்.

வண்டி ஓட்டிக் கொண்டிருந்தாலும், கார்த்திக்கின் கண்கள் மட்டும் முன்கண்ணாடி வழியே பின்னாடி அமர்ந்திருந்த யாத்ராவையே தீவிரமாக நோட்டமிட்டுக் கொண்டிருந்தன. யாத்ராவும் ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பது போலத் அவனது பார்வையைத் தவிர்க்கப் போராடினாள். ஒருவகையில் இருவரின் மனமும் ஒரே போல அலைபாய்ந்து தத்தளித்துக் கொண்டிருந்தது.

வீட்டை அடைந்ததும் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த உணவை யாத்ரா பிரித்து, மேஜையில் எல்லோருக்கும் பரிமாறிவிட்டு அவளும் சாப்பிட அமர்ந்தாள்.

அப்போது, தற்செயலாக மேஜைக்கு அடியில் அவளது பாதம்... கார்த்திக்கின் காலின் மீது பட்டுவிட்டது!

அவன் திடுக்கிட்டு அவளை நிமிர்ந்து பார்க்கவும், யாத்ரா பதறித் துடித்துத் தன் கால்களை அவசரமாய் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். அவளது இதயம் பயத்தில் வேகமாக அடித்துக் கொண்டது. அதன் பின் எவ்விதப் பேச்சும் இல்லாமல், ஒரு கனமான மௌனத்தில் அவர்களின் இரவு உணவு கழிந்தது.

“நாங்களும் யாத்ரா ரூம்ல படுத்துக்கிறோம்” என்று குமார் கூற,

“அது ரொம்ப சின்ன ரூம் மாமா நீங்க சௌதர்யா ரூம்ல படுத்துக்கோங்க” என்றான்.

“இல்ல தம்பி இருக்கட்டும்”

“நான் சொல்றேன் இல்ல” என்றவன் அவர்களுக்கு அறையை தயார் செய்து கொடுத்துவிட்டு தன் அறைக்கு செல்ல இருந்தவன் யாத்ரா பால்கனியில் நின்று செல்பேசியில் பேசிக் கொண்டிருந்ததை கவனித்தான்.

“சாரி நாளைக்கு நான் கிளம்ப முடியாது... என் அண்ணிக்கு குழந்தை பொறந்திருக்கு” என்ற அவள் அந்த நிலவொளியில் காற்றில் அலைபாயும் முடியை காதோரம் ஒதுக்கிக் கொண்டே பேசுவதை பார்த்தான் .

மூன்று வருடப் பிரிவு, இன்று ஆபீஸில் அவன் கண்ட பொறாமை, எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவமனையில் குழந்தையைக் கொஞ்சிய அவளது தாய்மையின் பேரழகு... என அவனுக்குள் இருந்த அத்தனை கட்டுப்பாடுகளும் அந்த நள்ளிரவில் நொறுங்கிப் போயின.

அதற்கு மேல் அவனால் ஒரு விநாடி கூடப் பொறுக்க முடியவில்லை!

அவளை நெருங்கி வந்து நிற்கவும் அவன் போனை வைத்து விட்டு திரும்பவும் சரியாக இருந்தது.

“என்னாச்சு?” என்றவள் கேட்டதுதான் தாமதம். அவன் கரம் மூர்க்கத்துடன் அவளின் மெல்லிய இடையைப் பற்றித் தன் மார்போடு இழுத்தன்.

“கார்த்திக்... விடு...” என்று அவளது உதடுகள் முணுமுணுத்து முடிப்பதற்குள், அவனது இதழ்கள் அவளது இதழ்களின் மீது ஒரு காதல் வன்முறையை செய்ய தொடங்கியது.

அது வெறும் முத்தம் இல்லை; மூன்று வருடப் தாபமும் வன்மமும் கலந்த ஒரு தீவிரமான காதல் தாக்குதல்! அவளது இதழ்களைத் தன் முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவன், அவளை அணுவணுவாக வளைத்துத் தன் காதலின் ஆழத்தில் மூழ்கடித்தான்.

அவனது தோள்களைப் பற்றித் தடுக்க முயன்ற அவளது விரல்கள்... மெல்ல மெல்ல தனது வீரியத்தை இழந்தன. எதிர்க்க முடியாத நிலைக்கு அவளது உடல் அவனது தீண்டலில் கரைந்தது. உள்ளமோ தன்னை மறந்து அவனிடம் சரணடைந்தது.

நீண்ட நெடிய அந்த முத்த நொடிகளுக்கு பிறகு மெதுவாக அவளை விடுவித்தவன் அடுத்த கணமே ஒரு வார்த்தை கூட பேசாமல் தன் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டான்.

யாருமற்ற அந்த இருளில் தனித்துவிடப்பட்ட யாத்ரா, உதடுகளில் எரியும் அவனது முத்தத்தின் சூட்டுடன் அந்த மூடிய அறைக்கதவை ஏக்கத்துடன் வெறித்தாள்.

You cannot copy content