You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 4

Quote

4

ஏற்காட்டின் அந்த வளைந்து நெளிந்து செல்லும் சுருள் மலைச்சாலையில், கார்த்திக்கின் கார் ஒரு கருநாகத்தைப் போல நிதானமாக ஊர்ந்து ஏறிக்கொண்டிருந்தது.

ஜன்னலுக்கு வெளியே பசுமை போர்த்திய மலைச்சரிவுகளும், அவ்வப்போது எட்டிப் பார்க்கும் பள்ளத்தாக்குகளும் ரம்மியமாகத் தெரிந்தன. ஆனால் காருக்குள் நிலவிய அமைதி அந்த இயற்கை எழிலுக்கு நேர்மாறாக இருந்தது.

முன் இருக்கையில் அமர்ந்திருந்த இந்திரனின் உடல்மொழி படபடப்பைக் காட்டிக் கொடுத்தது. கைகளை இறுகக் கோர்த்தபடி அவன் ஜன்னல் வழியே வெறித்துக் கொண்டிருந்தான்.

ஸ்டீயரிங்கை பிடித்திருந்த கார்த்திக்கின் கண்கள் சாலையைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், அவனது கவனம் முழுவதும் சீரான இடைவெளியில் 'ரியர் வியூ மிரர்' பக்கமே திரும்பியது.

பின்பக்க இருக்கையில், ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தாள் யாத்ரா. அதே துறுதுறுப்பான முகம்... அதே ஆழமான கண்கள்.

“என் தங்கச்சியும் கூட வருவா” என்று இந்திரன் சொன்ன போதுதான், தோளில் ஒரு சிறிய பையுடன் அவள் காரை நோக்கி நடந்து வந்ததைப் பார்த்தான். அன்று திரையரங்கில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக் கடந்து சென்ற அதே முகம்.

இன்று மீண்டும் அவளைப் பார்த்த கணமே, வறண்ட நிலத்தில் தோண்டப்பட்ட ஊற்றுப் போல அவளது நினைவுகள் கார்த்திக்கின் மனதை ஆக்கிரமித்தன. உடலிலும் மனதிலும் ஒரு மெல்லிய குளிர்காற்று வீசியதைப் போன்ற உணர்வு அவனுக்குள் பரவியது.

அன்று திரையரங்கில் அத்தனை ஆர்ப்பாட்டம் செய்தவள், இன்று அமைதியின் உருவமாக அமர்ந்திருப்பது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. எளிமையான பேண்ட்-டாப் அணிந்திருந்த போதிலும், அவனது கண்களுக்கு நிறைவான அழகாகத் தெரிந்தாள்.

பொதுவாகவே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கும் பழக்கம் அவனுக்கு இல்லை. மூன்று சகோதரிகளுடன் வளர்ந்ததாலோ என்னவோ, மற்ற பெண்களை வேறு மாதிரியாகப் பார்க்க முடிந்ததும் இல்லை. ஒரு ஆசைப் பார்வை கூட இருந்ததில்லை.

ஆனால், யாத்ராவிடம் மட்டும் ஏதோ ஒரு விசித்திர ஈர்ப்பு. பாறையின் இடுக்கில் முளைக்கும் ஒரு சிறு விதையைப் போல, அவனது மன உறுதியை மீறி எட்டிப் பார்க்கும் ஒரு சலனம்.

அப்போது யாத்ரா தான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவிட்டு நிமிர்ந்தாள். ஜன்னல் கண்ணாடியை மெதுவாகக் கீழிறக்கி, மலையின் அந்தப் பரிசுத்தமான குளிர்ந்த காற்றைத் தன் முகத்தில் ஏந்திக்கொண்டாள்.

அந்தக் குளிர் காற்று அவளது அடர்ந்த கார்குழலைக் களைத்து விளையாடியது. கலைந்த தலைமுடியை மென்மையாகக் காதோரம் ஒதுக்கிவிட்ட அந்தச் சிறு அசைவு, கார்த்திக்கின் கவனத்தைச் சிதறடித்தது.

ஒரு நொடி தன்னைத் தானே எச்சரித்துக்கொண்டான் கார்த்திக். ஸ்டீயரிங்கை சற்று இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு பார்வையைச் சாலைக்குத் திருப்ப முயன்றான்.

‘இது என்னடா புதுசா...’ என்று மனதிற்குள் முனகினான். அந்தப் பக்கம் பார்க்கவே கூடாது என்று அவன் வைராக்கியம் கொண்ட தருணத்தில், இந்திரன் சட்டென்று திரும்பினான்.

“ஏய் யாத்ரா, ஜன்னலை மூடு. பனி உள்ள வருது பாரு!” என்று தங்கையை அதட்டினான் இந்திரன்.

“நம்ம ஊரு காத்து அண்ணா... ரொம்ப நல்லா இருக்கு,” என்று உள்ளார்ந்து உணர்ந்து சொன்னாள்.

அன்று மிரட்டலாக ஒலித்த அதே குரல், இன்று இவ்வளவு மென்மையாக மாறுமா? கார்த்திக்கின் இதழ்களில் ஒரு சிறு புன்னகை அரும்பியது.

கண்ணாடி வழியே அந்தப் புன்னகையைப் பார்த்த யாத்ரா, நெற்றியைச் சுருக்கி அவனை முறைத்தாள். அவன் மீண்டும் அவளைக் கண்ணாடியில் பார்க்க முயல, இருவரின் விழிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

அதேசமயம், எதிரே ஒரு பேருந்து அதிவேகமாக வர, “கார்த்திக் பார்த்து!” என்று அலறினான் இந்திரன்.

கார்த்திக் நொடிப்பொழுதில் ஸ்டீயரிங்கை இடதுபுறம் ஒடித்துத் திருப்பினான். கார் ஒரு சிறு குலுக்கலுடன் நின்றது. நல்லவேளையாக விபத்து தவிர்க்கப்பட்டது. காரைக் காப்பாற்றிவிட்டான், ஆனால் தடம் புரளும் தன் மனதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

‘பயந்துட்டாளா’ என்பது போல அவன் மீண்டும் கண்ணாடியில் அவளைப் பார்க்க, அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் வெளியே வீசிய குளிர்ந்த காற்றிற்கு நேரதிராக இருந்த அந்த கண்களின் வானிலை...

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவனை பார்த்த கணத்திலிருந்து அவள் முறைத்துக் கொண்டிருந்தாள்.

நேற்று இரவு இந்திரன் தன் காதலைப் பற்றிச் சொன்னதுமே, “ஏன் என்கிட்ட சொல்லல?” என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டவள், கார்த்திக் பேசியதைப் பற்றி இந்திரன் விவரித்ததும், அவள் கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டாள்.

“பெரிய இவனா அவன்? நீ எதுக்கு அவன் சொல்றதை அப்படியே கேக்கணும்?” என்று கொதித்தாள்.

“சௌந்தர்யாக்காகத்தான் யாத்ரா... அவளுக்கு எந்தப் பிரச்சனையும் வந்திடக்கூடாது,” என்று அண்ணன் சொன்னதும் வேறு வழியின்றி அமைதியானாள். ஆனாலும் கார்த்திக் மீது அவளுக்குப் பெரும் அதிருப்தி இருந்தது.

கார் இப்போது இந்திரனின் வீட்டிற்குத் திரும்பியது. “இதோ இந்த லெப்ட்...” என்று இந்திரன் வழிகாட்டினான். அந்தச் சாலை மிகவும் குறுகலாகவும், இருபுறமும் ஊதா நிறப் பூக்கள் பூத்துக் குலுங்கும் செடிகளுடனும் சொர்க்கம் போலக் காட்சியளித்தது.

சாலையின் முடிவில் ஒரு அழகான வீடு தெரிந்தது. பழைய காலத்து ஓடு போட்ட வீடு என்றாலும், ஒரு கோபுரத்தைப் போன்ற வடிவம் அதற்கு ஒரு கம்பீரத்தைத் தந்தது. வீட்டின் கூரை மீது பச்சை வண்ணக் கொடிகள் படர்ந்து கிடந்தன. மலையின் மேகங்கள் அந்த வீட்டைத் தொட்டுச் செல்வது போலத் தெரிந்தது.

அந்தக் காட்சியைக் கண்ட கார்த்திக் மெய்மறந்து நின்றான். ‘நாமும் இது போன்ற ஒரு அமைதியான இடத்தில் வீடு கட்டி வாழ வேண்டும்’ என்ற ஆசை அவனுள் துளிர்விட்டது.

“இதான் எங்க வீடு, உள்ளே வாங்க,” என்று இந்திரன் அழைக்க, கார்த்திக் காரை நிறுத்திவிட்டு பையை எடுக்க எத்தனித்தான். அதற்குள் யாத்ரா மின்னலெனக் காரிலிருந்து இறங்கி “அம்மா... அம்மா...” என்று கத்திக் கொண்டே உள்ளே ஓடிவிட்டாள்.

“வீடு ரொம்ப அழகா இருக்கு இந்திரன்,” என்று பாராட்டியபடி அவனுடன் நடந்தான் கார்த்திக்.

இந்திரன் மெல்லிய தயக்கத்துடன், “இல்ல... இது எங்க சொந்த வீடு இல்ல,” என்றான்.

கார்த்திக் திடுக்கிட்டான். “சொந்த வீடு இல்லையா? ஆனா நீங்க இருபது வருஷமா இங்க இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேனே?”

தன்னை பற்றி எல்லாம் விசாரித்துவிட்டுத்தான் பெண் கொடுக்கும் முடிவிற்கு வந்திருக்கிறான் என்பதை நினைத்துக் கொண்ட இந்திரன்,

 “ஆமா... ஆனா இது அந்த எஸ்டேட் ஓனர் வீடு. அவங்க சென்னையில இருக்காங்க. வருஷத்துக்கு ரெண்டு தடவை மட்டும் வந்து தங்குவாங்க. என் அப்பாவும் அம்மாவும் தான் இதை மெயின்டைன் பண்றாங்க. நாங்க பின்னாடி இருக்கிற சின்னப் பகுதியில தங்கியிருக்கோம்,” என்றான்.

கார்த்திக்கின் முகத்திலிருந்த ஆர்வம் சட்டென்று வடிந்தது. “அப்போ உங்களுக்குச் சொந்த வீடுன்னு ஒன்னும் கிடையாதா?” என்று அவன் கேட்ட தொனியில் ஒரு மாற்றம் தெரிந்தது.

“இனிமேதான் வாங்கணும் கார்த்திக்,” என்று இந்திரன் சொல்ல, கார்த்திக் மௌனமாகிவிட்டான்.

அப்போது இந்திரனின் பெற்றோர் குமாரும் பிரியாவும் வெளியே வந்தனர். “என்னடா சொல்லாம கொள்ளாம வந்திருக்கீங்க?” என்று விசாரித்தபடி, “ஒரு முக்கியமான வேலைம்மா... அப்புறம் இவர் என்னோட பிரண்ட் கார்த்திகேயன்,” என்று அறிமுகம் செய்ய, “வாங்க தம்பி, உள்ள வாங்க,” என்று இருவரும் முகமலர வரவேற்றனர். அவர்களின் இளமை மாறாத தோற்றம் கார்த்திக்கை வியக்க வைத்தது.

இந்திரன் அவனது காதருகே குனிந்து, “இப்போதைக்கு எதையும் சொல்ல வேண்டாம், அப்புறமா பேசிக்கலாம்,” என்று ரகசியமாகச் சொன்னான். கார்த்திக் ஒப்புதலுக்குத் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றான்.

வீட்டின் உட்புறம் அத்தனை நேர்த்தியாகவும், கலை நயத்துடனும் இருந்தது. குமார் சோபாவில் அமரச் சொல்ல, கார்த்திக் அமர்ந்தான். ஆனாலும் அவனது விழிகள் யாத்ராவைத் தேடின. அதற்குள் அவள் எங்கே மறைந்தாள்?

பிரியா சுடச்சுடத் தேநீர் கொண்டு வந்து கொடுக்க, அதைப் பருகிக் கொண்டே மீண்டும் ஒருமுறை சுற்றிலும் பார்த்தான். அவள் தென்படவே இல்லை. ஒருவேளை அவள் தன்னைத் தவிர்க்கிறாளோ என்று தோன்றியது.

தனது செல்பேசியை எடுத்துப் பார்த்தான். மலைப்பகுதி என்பதால் சிக்னல் மிகக் குறைவாக இருந்தது.

“ஒரு கால் பேசணும்... இங்கே சிக்னல் எங்கே நல்லா கிடைக்கும்?” என்று கேட்டான்.

“பின்பக்கம் கார்டன்ல நல்லா கிடைக்கும் தம்பி,” என்று குமார் சொல்ல, இந்திரன் அவனைப் பின்வாசலுக்கு அழைத்துச் சென்றான். பின்புறம் ஒரு அழகான நந்தவனம் இருந்தது. ஒரு சிறிய நீரூற்று, அதைச் சுற்றி அமர்வதற்குப் பலகையிலான இருக்கைகள் என அந்த இடமே ஒரு கவிதை போல இருந்தது.

ஆனால் கார்த்திக்கின் மனமோ, ‘என்ன தான் வசதியா இருந்தாலும் இது அவனோட சொந்த வீடு இல்லையே’ என்ற எண்ணத்திலேயே உழன்றது.

இந்திரன் அங்கிருந்து நகர, கார்த்திக் தனது உதவியாளருக்கு அழைத்தான்.

“என்ன சார்? பேசி முடிச்சிட்டீங்களா? பொண்ணு வீட்டுக்காரங்க ஓகேவா?” என்று மறுமுனையில் கேட்க, கார்த்திக் சீற்றமடைந்தான்.

“என்னடா பேசி முடிக்கச் சொல்ற? இந்திரனுக்குச் சொந்த வீடு கூட கிடையாதுங்கறான். இதுதான் நீ விசாரிச்ச லட்சணமா? சொந்த வீடு கூட இல்லாதவனுக்கு எப்படி என் தங்கச்சியைக் கட்டிக் கொடுக்க முடியும்?” என்று கடுகடுத்தான்.

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, “ஏன்... வீடு இல்லன்னா எங்க அண்ணனுக்கு உங்க தங்கச்சியைக் கொடுக்க மாட்டீங்களா?”

பின்னால் இருந்து கேட்ட யாத்ராவின் குரலில் அதிர்ந்து திரும்பினான் கார்த்திக்.

யாத்ரா, கைகளைக் கட்டிக் கொண்டு, கண்கள் சிவக்க அவனை நேருக்கு நேராக முறைத்துப் பார்த்தபடி நின்றிருந்தாள். அந்த அந்திச் சாயும் சூரிய ஒளியில் அவளது மூக்குத்தி அழகாகப் பிரகாசித்ததை, அந்த கோபப் பார்வையையும் தாண்டி அவன் மனம் ரசித்தது.

You cannot copy content