You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 9

Quote

9

இரண்டு நாளாக கார்த்திக், தேன்மொழியிடம் முகம் கொடுத்துக் கூடப் பேசவில்லை. இந்திரனின் சம்பந்தம் குறித்துத்தான் அவன் இப்படி இருக்கிறான் என்பதை ஓரளவுக்கு யூகித்தவர், "நான் பெத்த உனக்கே இவ்வளவு இருந்தா, எனக்கு எவ்வளவு இருக்கும்?" என்று அவரும் வீம்பாக இருந்தார்.

ஆனால், இன்னும் இரண்டு நாள் கழித்து அவனே நேராக வந்து தேன்மொழியிடம், "அம்மா, நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அப்புறம்... அந்தப் பெண் நம்ம சாதியும் இல்லை," என்று அதிர்ச்சி கொடுத்தான்.

"கார்த்திக்" என்று அதட்டினார் தேன்மொழி.

"அம்மா, நான் உன்கிட்ட அனுமதி கேட்கல... தகவல் சொல்றேன்," என்று மேலும் கடுப்பேற்றிவிட மகனைப் பளாரென்று அறைந்துவிட்டார். அந்த அறையை வாங்கிக்கொண்டு அப்படியே மரம் போல நின்றவன், "உங்க விருப்பத்தை நாங்க கேட்கலன்னு உங்களுக்குக் கோபம் வருது இல்ல, அதேதானே எங்களுக்கும்" என்றான்.

"என்னடா பேசுற?"

"அக்காங்கள் இரண்டு பேரும் நீங்க என்ன சொன்னீங்களோ அதுக்கு மறுவார்த்தை பேசினது இல்லை. சௌந்தர்யாவும் நீங்க பார்த்த சம்பந்தத்துக்கு மறுபேச்சு இல்லாம ஒத்துக்கிட்டா. இப்போ அவளுக்கு இந்திரனைப் பிடிச்சிருக்கு. ஆனா, நீங்க அவ விருப்பத்தைக் கேட்காம உங்க இஷ்டத்துக்கு ஒரு முடிவு எடுக்குறது எப்படி நியாயமா இருக்கும்?"

"என் பசங்களுக்கு எது நல்லதுன்னு எனக்குத் தெரியாதாடா?"

"எல்லாரையும் விடவும் உங்களுக்குதான் நல்லா தெரியும். அதனால்தான் இப்போ வரைக்கும் அக்காங்களும் சரி, சௌந்தர்யாவும் நீங்க யாரைக் காட்டுறீங்களோ அவங்களைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொல்லியிருக்காங்க." என்று அவர் போக்கிலேயே பேசினான். ஆனாலும் தேன்மொழி விடவில்லை.

"நீ அவங்க சாதியைப் பத்தி முன்னாடியே சொல்லியிருந்தா இவ்வளவு தூரம் வந்திருக்காது இல்ல?"

"நான் தெரியாமத்தான் கேட்குறேன். மேகலா அக்காவை நீங்க நம்ம சாதிப் பையன்னு பார்த்துத்தானே கட்டிக் கொடுத்தீங்க? ஆனா, அவர் அக்காவைச் சந்தோஷமா வைச்சிருக்காரா? என்னைக்காச்சும் உங்களை மதிச்சிருக்காரா? கல்யாணம் முடிஞ்சதுமே எவ்வளவு பிரச்சினை பண்ணாரு... கொஞ்சமாச்சும் ஒரே சாதிதானேன்னு நினைச்சாரா என்ன? இல்லையே!"

அவன் பேசப் பேச தேன்மொழியின் இறுக்கம் தளர்ந்தது.

"இப்போ என்ன சொல்ல வர்ற நீ?"

"சாதி உங்களுக்கு வேணும்னா ஒரு போலி மரியாதையையும் கௌரவத்தையும் கொடுக்கலாம். ஆனா, சந்தோஷத்தையோ நிம்மதியையோ கொடுக்காது. என் தங்கச்சி இந்திரன் குடும்பத்துல வாழ்ந்தா சந்தோஷமா இருப்பான்னு நம்பித்தான் அந்தச் சம்பந்தத்தைப் பேசி முடிக்கலாம்னு முடிவு பண்ணேன்." என்றவன், பட்டென்று அம்மாவின் கையைச் சேர்த்துப் பிடித்துக்கொண்டான். "நாளைக்கு என் தங்கச்சிக்கு ஒன்னுன்னா யார் வருவா? இந்தச் சமூகமும் சொந்தக்காரக் கூட்டமுமா வருமா? நான்தானே போகணும் அம்மா. அவக் கூடப் பிறந்த அண்ணன். நான் அவ வாழ்க்கைக்கு எதுவும் தப்பா பண்ணிடுவேனா?"

"நான் அப்படிச் சொல்லல கார்த்தி."

"அப்போ ஏன் என் முடிவை நம்ப மாட்டேங்குறீங்க?"

"நம்பாம இல்லடா, ஆனா..."

"ஆனா வூனா எல்லாம் வேணாம்... உங்களுக்கு பெத்த புள்ள நான் வேணுமா, இல்ல இந்த பாழாப்போன சாதி வேணுமா?"

அந்தக் கேள்வி மொத்தமாகத் தேன்மொழியைச் சுருட்டிவிட்டது. அதற்கு மேல் அவன் வார்த்தைக்கு மறுவார்த்தை அவரால் பேச முடியவில்லை.

"சரி, நிச்சயத்திற்குத் தேதி குறிப்போம்," என்று ஒரு வழியாகச் சம்மதம் சொல்லிவிட்டார். சௌந்தர்யாவுக்குத் தலைகால் புரியவில்லை. ஆனால் இறுதியாக இரு வீட்டாரும் மீண்டும் ஒன்றாக அமர்ந்து பேசினார்கள். ஒரே மாதத்தில் நிச்சயம், அடுத்த இரண்டு மாதத்தில் திருமணம் என்றும் தேதி குறிக்கப்பட்டது.

"இவ்வளவு நெருக்கத்துல தேதி குறிக்கணுமா" என்று தயங்கிய அம்மாவை எப்படியோ தாஜா செய்து சம்மதிக்க வைத்துவிட்டான். ஜோசியரிடம் பேசி சீக்கிரம் தேதி குறிக்கச் சொன்னதே அவன்தான். நாள் தள்ளிப் போய் மீண்டும் எதுவும் பிரச்னை வந்துவிடக் கூடாது என்று நினைத்தான்.

மண்டபம் பார்ப்பது, அழைப்பிதழ் தேர்வு செய்வது, சமையலுக்குச் சொல்வது என்று ஒரு பக்கம் திருமண வேலைகளும், மறுபக்கம் அமரேஷின் புதுப் படத்திற்கான திட்டமிடல் என்று நாள்கள் பறந்து கட்டிக்கொண்டு ஓடின.

மூச்சு விடக்கூட முடியாத அளவுக்கு வேலை. யாத்ராவைப் பற்றி யோசிக்கக்கூட அவனுக்கு நேரம் இல்லை.

இந்த நிலையில்தான் புடவை எடுக்க வேண்டும் என்று தேன்மொழி அவனை அழைக்க, "அம்மா, புடவை எடுக்குறதுக்கு எதுக்கும்மா நான்? நீங்களே போய் எடுத்துட்டு வாங்க. நான் என் கார்டைச் சௌந்தர்யாகிட்ட கொடுக்கிறேன்," என்று சொல்ல, அவர் ஒப்புக்கொள்ளவில்லை. வீட்டின் ஒரே ஆண் என்ற முறையில் அவன் வந்தே ஆக வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார்.

"அப்படினா நீங்க முன்னாடி போங்க. நான் ஒரு முக்கியமான வேலை இருக்கு, முடிச்சுட்டு கடைக்கு வந்துடுறேன்," என்று அவர்களை அனுப்பி வைத்தான்.

சௌந்தர்யா, அவளது சகோதரிகள், தேன்மொழி என எல்லோரும் கூட்டமாகக் கடைக்குக் கிளம்பிவிட்டனர்.

கார்த்திக்கும் சொன்னது போல வேலையை முடித்துவிட்டு அந்தப் பிரம்மாண்டமான துணிக்கடைக்குள் நுழைந்தான். ஆனால், அவர்கள் இன்னும் ஒரு புடவையைக்கூடத் தேர்வு செய்திருக்கவில்லை.

சௌந்தர்யாவின் நிச்சயப் புடவைக்காக ஒட்டுமொத்தப் பெண்கள் குழுவும் ஒரே இடத்தில் கூடியிருந்தது. மறுபுறம் அவர்கள் காட்டிய எல்லாவற்றையும் வேண்டாமென்று மறுத்த சௌந்தர்யா, தூரத்தில் நின்று இந்திரன் கண்காட்டிக் காட்டிய புடவையை மட்டும் எடுத்துத் தோள் மீது வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இதை எல்லாம் பார்த்துத் தலையிலடித்துக்கொண்ட கார்த்திக், எதார்த்தமாகப் பார்வையைத் திருப்பியதில் தள்ளி நின்றிருந்த யாத்ராவைக் கண்டான். இவர்களுடன் ஒட்டாமல் அவள் பாட்டுக்குத் தனியாக உலவிக்கொண்டிருந்தாள்.

வேலை வேலை என்று ஓடியதால் அவளைப் பற்றி யோசிக்கக்கூட அவனுக்கு நேரம் இருக்கவில்லை. மீண்டும் அவளைப் பார்த்ததும் மனம் அப்படியே அவளிடம் சாய்ந்தது. அதுவும் மஞ்சள் நிற குர்தியில் தன்னந்தனியாக பிரகாசித்த அவளை அப்படியே தழுவிக்கொள்ள துடித்த மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டான். ஆனால் விழிகளை முடியவில்லை.

அவன் பேச்சைக் கேட்காமல் அவள் பின்னே சென்றது.

அவள் மட்டுமே அவன் உலகில் இருப்பது போல ஒரு மாயை உண்டானது. ஒவ்வொரு டிசைனையும் பொறுமையாக ரசித்தபடி நடந்தவளைப் பின்தொடர்ந்து செல்ல இருந்தவன், தோளில் யாரோ கை வைக்கவும் திடுக்கிட்டுத் திரும்பினான்.

இந்திரன், "கார்த்திக், எப்போ வந்தீங்க?" என்று விசாரிக்க, அவன் பெருமூச்சுடன், "இப்பதான் வந்தேன்... கொஞ்சம் வொர்க் இருந்துச்சு," என்று சமாளித்தவனுக்கு உள்ளுர குற்றவுணர்வு எட்டிப்பார்த்தது.

யாத்ராவின் மீது தான் கொண்டிருக்கும் விருப்பத்தை இந்திரனிடம் மறைப்பது சரியில்லை என்று மனம் சுட்டினாலும், இப்போதைக்கு அதைச் சொல்லும் சூழ்நிலை இல்லை என்று அவனுக்கு அவனே சமாதானம் செய்துகொண்டான்.

"ஒரு முக்கியமான கால் பேசணும்," என்று இந்திரனிடமிருந்து அப்போதைக்கு நழுவியவன், விழிகள் மீண்டும் அவளைத் தேடின.

வெள்ளைக் கற்கள் பதித்த ஊதா நிற லெஹங்காவின் அருகே அவள் கண்கள் ஆசையுடன் தழுவின. அதனை அவள் விரல்கள் தொட்டுச் சிலிர்த்த விதத்தில் ஒரு குழந்தைத்தனமான ஈர்ப்பு.

"பிடிச்சிருக்கா?"

பின்னாலிருந்து கேட்ட அவன் குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவள், "நீங்க... எப்போ?" என்று ஆச்சரியப்பட, "என்னைத் தேடினியோ?" என்றவன் குறும்பாகப் புன்னகைத்தான்.

"இல்லையே," என்றவள் அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கிவிட்டுத் திரும்பிக்கொள்ள, "பொய் சொல்லாதே," என, அவனைப் பார்க்காமல் மெலிதாகப் புன்னகைத்தாள்.

"ஆமா... முதல்ல கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு."

"என்ன கேள்வி?"

"பிடிச்சிருக்கான்னு கேட்டேனே."

"திரும்பியும் முதல்லிருந்து ஆரம்பிக்காதீங்க?" என்று திரும்பி முறைத்தவளை,

"ஹலோ ஹலோ... ரிலேக்ஸ். நான் என்னைக் கேட்கல... இந்த லெஹங்காவைக் கேட்டேன்." என்று தெளிவுப்படுத்தினான்.

"ஓ அதுவா," என்றவள் சாதாரணமாகத் தலையைத் திருப்பிக்கொண்டு, "பிடிச்சிருக்கு... ஆனா வேணாம். ரொம்ப பாஷா இருக்கு," என்றாள்.

"இல்ல, உனக்கு நல்லா இருக்கும்," என்றவன், அருகிலிருந்த ஊழியரை அழைத்தான். "இந்த லெஹங்காவைப் பேக் பண்ணுங்க."

"வேணாம்னு சொல்றேன் இல்ல," என்று அவள் இடையிட்டதை அவன் காதில் வாங்கவில்லை.

அப்போது அந்த விற்பனையாளர் சற்றே தயக்கத்துடன், "சார்... அது சேல்ஸுக்கு இல்ல," என்றான்.

கார்த்திக்கின் புருவம் சற்றே சுருங்கியது. "இல்லன்னா ஏன் டிஸ்ப்ளேல வைச்சிருந்தீங்க?"

"சார்... நம்ம கடை திறந்தப்போ வந்த முதல் மாடல். ஓனருக்கு இதில் ரொம்ப செண்டிமெண்ட் இருக்கு. கம்பெனி பாலிசிப்படியும் இதை விற்க முடியாது."

ஒரு நொடி அமைதி நிலவியது.

"நான்தான் வேணாம்னு சொல்றேன் இல்ல," என்றவள் அதன் பிறகு அங்கே நிற்கவில்லை.

ஆனால், அவன் நகரவில்லை. ஆசையுடன் அவள் விரல்கள் அந்த லெஹங்காவைத் தொட்டுப் பார்த்த விதம் அவன் கண்ணுக்குள் நின்றது. அவன் மீண்டும் அந்த விற்பனையாளரிடம், "விலை சொல்லுங்க," என்று கேட்டான்.

"சார்... சொன்னேன்ல... அது..."

"நான் கேட்டது விலை."

அவன் குரல் அதிகாரமாக ஒலிக்க, அந்த விற்பனையாளன் மேலாளரை அழைத்தான். முன்பு சொன்ன அதே விஷயத்தை இன்னும் விளக்கி நிதானமாக அவன் சொல்லி முடித்த கணம் கார்த்திக், "உங்க ஓனருக்குக் கால் பண்ணுங்க," என்றான்.

ஊழியர்கள் எல்லாம் ஒரே நேரத்தில் அவனைத் திரும்பிப் பார்த்தனர். சூழ்நிலை மெதுவாக மாற்றமடைந்தது. சில அழைப்புகள்... விளக்கங்கள்... தயக்கங்கள்... இறுதியாக அந்த லெஹங்காவை அவன் வாங்கிவிட்டான். மறுபக்கம் யாத்ரா அவனைத் தவிர்க்க எண்ணித் தன் அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டே சுற்றினாள்.

ஒரு வழியாக ஷாப்பிங் முடிந்து எல்லோரும் ஆறாவது மாடி மின்தூக்கியில் இடித்துப் பிடித்து ஏறியபோது, யாத்ராவும் கார்த்திக்கும் அதன் ஒரு மூலையில் மாட்டிக்கொண்டனர். யாரைப் பார்க்கக் கூடாது எனத் தள்ளித் தள்ளிச் சென்றாளோ, அவனது மார்பிலேயே இடித்துக்கொண்டு நிற்க வேண்டிய நிலைமை அவளுக்கு.

அவன் அணிந்திருந்த வாசனைத் திரவியத்தின் மணம் அவள் மூச்சை முட்டச் செய்தது. அவனை நிமிர்ந்துகூட பார்க்கத் தைரியமில்லாமல் அவள் குனிந்திருக்க, நேர்மாறாக கார்த்திக்கின் விழிகள் அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தன.

நான்காவது மாடியில் கூட்டம் கொஞ்சம் குறைந்தது. அந்த இடைவெளியில் அவள் முன்னே செல்ல முயன்றாள். ஆனால், அவளது மணிக்கட்டை அவன் கை இறுக்கிப் பிடித்தது.

அதிர்வுடன் அவள் நிமிர, கார்த்திக்கோ எதுவுமே நடக்காதது போல லிஃப்டின் எண்களைப் பார்த்தபடி நின்றிருந்தான். அவனது முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. ஆனால் கைகள் மட்டும் அவளது மென்மையான விரல்களுக்குள் கோர்த்துக்கொள்ள, அந்தத் தீண்டல் அவளை என்னவோ செய்தது.

தன் கையை விடுவிக்க அவள் முயல, அவன் பிடியை இன்னும் கொஞ்சம் இறுக்கி அவளைத் தன் பக்கம் இழுத்தான்.

"கையை விடுங்க கார்த்திக்," என்று பல்லைக் கடித்தபடி முணுமுணுத்தாள் யாத்ரா.

"நீ ஓடாம இருந்தா... நான் ஏன் உன்னைப் பிடிக்கப் போறேன்?" அவளைப் பார்க்காமலே அவனது குரல் ரகசியமாக ஒலித்தது.

"விடுங்க... இல்லன்னா அண்ணாகிட்ட சொல்லிடுவேன்," என்று அவள் மிரட்ட, கார்த்திக் அவள் பக்கம் மெதுவாகத் தலையைத் திருப்பினான். அவனது கண்களில் ஒருவிதக் குறும்பும் காதலும் மின்னின.

அவள் காதருகே குனிந்து, "உனக்குப் பிடிக்கலைன்னா... இப்போவே என்னைப் பளார்னு ஒரு அறை அறைஞ்சிருப்ப. அண்ணாவைக் எல்லாம் கூப்பிட மாட்ட," என்றான். அவன் குரலில் இருந்த அந்த நம்பிக்கை அவளை வாயடைக்கச் செய்தது.

படபடக்கும் அவளது இதயத் துடிப்பும் கார்த்திக்கிற்குப் புரிந்தது. தரைத்தளம் வந்ததும் லிஃப்ட் கதவுகள் திறக்க, அவன் மெதுவாகத் தன் விரல்களைத் தளர்த்தினான். அவன் கையை எடுத்த பிறகும், அந்த இடத்தின் சூடு அவள் கைகளில் அப்படியே இருந்தது.

அவன் ஒரு நிமிடம் அவள் கண்களைப் பார்த்துவிட்டு, ஒரு சிறு புன்னகையுடன் முன்னே செல்ல, யாத்ரா அங்கேயே சிலையென நின்றாள். அவளது உடல் லேசாகச் சிலிர்த்தது.

"ஏன்டி ஒரு மாதிரி இருக்க?" என்று அவள் அம்மா பிரியா கேட்க, "ஒன்னும் இல்லையே," என்று மழுப்பியவளுக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரிந்தது. என்னதான் பெற்றோரிடம் வெளிப்படையாக பேசினாலும், மனதில் தோன்றும் அத்தனை உணர்வுகளையும் பகிர்வது சாத்தியமில்லை என்று.

அதுவும் காதலை....

அன்று என்னவோ விளையாட்டாக சொல்லிவிட்டாள். இன்று அவளை அறியாமலே அது உண்மையாகி கொண்டிருக்கிறது. அவனை அவள் மனம் நேசிக்கத் தொடங்கிவிட்டது.

அந்த கணம் யாத்ராவின் மனதை ஒரு சேர பயமும் பரவசமும் ஆட்கொண்டது.

You cannot copy content