You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kalyanam@ - Episode 10

Quote

10

அந்தப் பிரமாண்டமான நட்சத்திர விடுதியில் ரெஜினா ஆனந்தன் தம்பதிகளுக்கான இரவு விருந்தும் வரவேற்பும் நடைபெற்றது. பத்தாவது மாடியில் பல வண்ணப் பூக்கள், ஜொலிக்கும் விளக்குகள், அலங்காரங்கள் என ஏற்பாடுகள் அனைத்தும் மிகுந்த கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தன.

வந்தவர்கள் எல்லோரும் தமிழகத்தின் பெரும் வியாபார புள்ளிகள். ஜஸ்டினின் தொழில் முறை நண்பர்கள் மற்றும் அவர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் சில முக்கிய பொறுப்பாளர்கள்.

ஆனந்தன் தன் பெற்றோரையும் தங்கையையும் இந்த விருந்திற்கு அழைத்த போது அவர்கள் கலந்து கொள்ள விருப்பம் காட்டவில்லை. அவனும் அவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை.

ஆனந்தன் விலையுயர்ந்த கருப்பு நிற சூட்டும் ரெஜினா உயரமான லேவண்டர் ஸ்லீவ்லெஸ் கவுனும் அணிந்திருந்தாள். அது அவள் உடலுக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. அவளுடைய தோள்களின் மீது படர்ந்த சுருள்முடிகளும் அவ்வப்போது அவற்றை விலக்கி விடும் போது மின்னும் வைர காதணிகளும் அவளை ஒரு இளவரிசி போலக் காட்டியது. அதுவும் சிறிய அழகான முக அமைப்பும் வழுவழுப்பான கன்னங்களும் அவள் நிஜமா அல்லது அவள் வடிவமைக்கப்பட்ட அழகு பொம்மையா என்ற பிரமை உண்டானது.

ரெஜினா அப்போது அங்கே வந்திருந்த ஜான் குடும்பத்தைக் காட்டி, “இவன் ஜான் என் க்ளோஸ் ஃபிரண்ட்... அப்புறம் இவங்க தாமஸ் அங்கிள்... சாரா ஆன்ட்டி” என்று ஆனந்தனுக்கு அறிமுகம் செய்ய,

“தாமஸ் சாரை ஆஃபிஸில பார்த்துப் பேசி இருக்கேன்... நம்ம கம்பனிக்கு மெட்டீரியல்ஸ் ஸப்ளை பண்ணிட்டு இருக்காரு இல்ல” என, அவர் அவன் தோளைத் தட்டிக் கொடுத்து, 

“கங்கிராட்ஸ் ஆனந்த்... காங்கிராட்ஸ் ரெஜிமா” என்றார்.

சாராவும் ஆனந்திற்கு வாழ்த்துச் சொல்லிவிட்டுச் சக்கர நாற்காலியில் இருந்த ரெஜினாவை அணைத்துப் பிடித்துக் கண்ணீர் மல்க வாழ்த்துத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து ஜானும் அவளைக் கழுத்தோடு அணைத்துக் கொண்டு காதில், “சாரி நான் உன் மனசைக் கஷ்டப்படுத்திட்டேன்” என்றான் மெல்லிய குரலில்.

“அப்படி எல்லாம் எதுவும் இல்ல ஜான்... நான் அதை அப்பவே மறந்துட்டேன்” என்று அணைத்தபடியே அவன் முதுகைத் தட்டிக் கொடுத்துக் கூற, அந்தக் காட்சியைப் பார்த்திருந்த ஆனந்தின் முகம் சுருங்கிவிட்டது.

ஜானை ரெஜினாவுக்குத் திருமணம் செய்து வைக்க ஜஸ்டின் விரும்பியதும் அவன் மறுத்துவிட்டதும் மேலோட்டாமாக அவனுக்குத் தெரியும். அந்த ஜான் அவர் நண்பன் தாமஸின் மகன் என்று தெரியுமே தவிர இதுதான் முதல் முறை பார்க்கிறான்.

இருவரும் கட்டியணைத்துப் பேசுவதன் மூலமாக அவர்கள் உறவில் இருக்கும் நெருக்கம் புரிந்தாலும் அந்த நெருக்கத்தில் வெறும் நட்பு மட்டும்தான் என்று நம்ப கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.

‘வேணாம்னு சொன்னவனுக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கணுமா?’ என்று தன் மனதில் எழுந்த எண்ணத்தை அவன் காட்டிக் கொள்ளவில்லை. அப்போது ஜான் ரெஜினாவை விட்டு விலகி அவளுக்கு மீண்டும் கைக் குலுக்கிக் கொண்டே ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

‘இவன் போ மாட்டான் போல’ எரிச்சலுடன் பார்வையைத் திருப்பிய போதுதான் தங்கள் அலுவலக ஆட்கள் சிலர் நிற்பதைப் பார்த்தான்.

அத்தனை பேரும் அவன் முகத்திற்கு நேராக வாழ்த்தினாலும் முதுகிற்குப் பின்னே போய் அவன் பணத்திற்காக விலை போய்விட்டதாக கேலியும் கிண்டலும் செய்தவர்கள்.

அதுவும் அந்தக் குழுவில் மேலாளராக இருக்கும் இரத்னவேலுவின் கண்களில் இருக்கும் பொறாமை உணர்வையும் கடுகடுப்பையும் அவனால் தெள்ளதெளிவாக உணர முடிந்தது. இரத்னம் வேலைக்குச் சேர்ந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது.

அதுவும் அவன் தன்னை விட வயதில் ஆறு வயது பெரியவனாக இருந்த போதும் ஜஸ்டின் தன்னை உயர்த்திப் பேசுவதும் மேலும் மேலும் பதவி உயர்வுகள் தருவதும் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவனுக்கு உள்ளுர பொறாமை தீப் பற்றிக் கொண்டு எரிந்தது.

இப்போது அவர் மகளையே திருமணம் செய்து கொண்டு தான் அவரின் மருமகனாகிவிட்டது அவனை உச்சமான பொறாமை நிலைக்குத் தள்ளி இருக்கும் என்பதையும் ஆனந்தனால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் அவன் ரெஜினாவைத் தற்போது பார்க்கும் விதமும் தன் கைப்பேசியைப் பிடித்திருக்கும் விதமும்தான் ரொம்பவும் தவறாகப்பட்டது.

அந்த அலுவலக குழு அவர்களை நோக்கி வந்து வாழ்த்துச் சொல்லியது. இரத்னம் கடுப்புடன், “ஆனந்தா ம்ம்ம்... கங்கிராட்ஸ்” கைக் குலுக்கியபடி அவன் பார்வை ரெஜினாவின் புறம் திரும்பியது.

சிலருடைய பார்வையே அவர்கள் மனநிலையை அப்பட்டமாகக் காட்டிக் கொடுக்கும். அதற்கு ஏற்றார் போல ரெஜினாவிடம் பல்லை இளித்துக் கொண்டே வாழ்த்துத் தெரித்தவன் கண்கள் அவள் கழுத்து புறம் இறங்கியதைக் கண்ட ஆனந்தனுக்கு ஆத்திரம் பொங்கியது.

‘பொறுக்கி’ என்று பல்லைக் கடித்தவன் எல்லோர் முன்னிலையிலும் அவனை ஒன்றும் செய்ய முடியாமல் கைவிரல்களை இறுக்கி மடித்துக் கொண்டான்.

அவன் முகமாற்றத்தைப் பார்த்தவள், “என்ன ஆனந்த்... என்ன ஒரு மாதிரியா இருக்க?” என்று கேட்க,

“இல்ல... ஒன்னும் இல்ல” என்றான்.

“சரி... எனக்குப் பசிக்குது... சாப்பிட போலாமா?” என்றவள் முகம் குழந்தைத்தனமாக மாறிய விதத்தைப் பார்த்து இரசனையுடன் உதடுகள் விரித்தான்.

பணக்கார திமிர் பிடித்தவள் போல சில நேரங்களில் தோன்றினாலும் பல நேரங்களில் இவள் ஒரு குட்டி பெண் என்று எண்ணவே தோன்றியது. சில நேரங்களில் இவள் கோபம், பிடிவாதம் எல்லாம் ஒரு குழந்தை பெண்ணைப் போலவே அதிகம் தெரிய,

“என்ன பார்த்துட்டு இருக்க... போலாம் வா... பசிக்குது” என்று முகத்தைச் சுருக்கி அவள் காண்பித்த விதத்தை இரசித்துக் கொண்டே,

“சரி சரி போலாம்” என்று அவளுடன் உணவு பரிமாறும் இடத்திற்குச் சென்று அங்கே இருந்த பலவகையான உணவுகளில் அவளுக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்று கேட்டு அவளுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்தான்.

தூரத்திலிருந்து நடப்பதைப் பார்த்திருந்த ஜஸ்டின் தாமஸிடம் ஆனந்தனைப் பற்றிப் பெருமையாகப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அதேநேரம் ஆனந்தும் தனக்கான உணவுகளைத் தட்டில் வாங்கிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்த போதும் அவன் கவனம் உணவில் இல்லை. இரத்னம் உண்டு கொண்டிருப்பதையே பார்த்திருந்தான். அப்போது கைக் கழுவ சென்ற வேறொரு அலுவலக நண்பனைப் பார்த்துவிட்டு தன் உணவுத் தட்டை அங்கிருந்த மேஜையில் வைத்துவிட்டு, “நான் வந்துடுறேன்” என்று அவசரமாகச் செல்ல,

“ஆனந்த்” என, “டூ மினிட்ஸ்... வந்துடுறேன்” என்றவன் கைக் கழுவும் இடத்திற்குச் சென்று அந்த அலுவலக நண்பனைத் தனியாக அழைத்து,

“இரத்னம் என்ன சொன்னான்?” என்று கேட்க,

“அது ஆனந்த்” என்று தயங்கினான் அவன்.  

“உனக்கு இந்த வேலையில இருக்கணுமா வேணாமா?” என்று ஆனந்த் மிரட்டலாகக் கேட்க,

“அது இரத்னம்... இவனுக்கு மட்டும் எப்படிடா இப்படி எல்லாம் நடக்குது” என்றவன் நிறுத்தி மீண்டும் தயங்க, “இப்போ ஒரு வார்த்தை மறைக்காம சொல்லணும் நீ” என,

“காலில்லனாலும் சூப்பர் பிகரு... அது இதுன்னு... சாரோட டாட்டரைப் பத்திக் கொஞ்சம் மோசமா” என்று நிறுத்த,

“ராஸ்கல்” என்று சீறியவன், “அவ சாரோட டாட்டர் மட்டும் இல்ல இப்போ என் வொய்ஃப்” என்று சொல்லிக் கொண்டே அவனை விட்டு விலகி வந்து அங்கிருந்த கருப்பு நிற உடைகளில் இருந்த பாதுகாவலன் ஒருவனை அணுகினான்.

அவன் ஜஸ்டின் மற்றும் ரெஜினாவின் பாதுக்காப்பிறக்காக எப்போதும் வருபவன். அவன் ஆனந்தனுக்கும் பழக்கம். அவனிடம் இரகசியமாக இரத்னத்தைக் கைக் காட்டிப் பேசிவிட்டு மீண்டும் ரெஜினாவிடம் வந்தான்.

“ஏதாவது பிரச்சனையா ஆனந்த்?” என்று அவள் கேட்க,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல... சரி உனக்கு ஏதாவது வேணுமா…? எடுத்துட்டு வரவா?” என்று அவன் கேட்க, 

“இல்ல போதும்” என்றாள்.

அவன் அதன் பின் அவசர அவசரமாக தன் தட்டிலிருந்த உணவை உண்டு விட்டுத் திரும்பும் போது இரத்னம் ஜஸ்டினிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருந்தான். பாதுகாவலன் ஜெய் அவனைப் பின்தொடர,

“நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்” என்று அவளிடம் சொல்ல,

“ஓகே” என்றாள்.

அந்த நட்சத்திர விடுதியின் கார் நிறுத்தத்தில் இரத்னம் வகையாக அந்தப் பாதுகாவலன் கையில் சிக்கி விட்டான். அவனை அடித்துத் துவைத்து கொண்டிருக்க,

“ஜெய் போதும்” என்று அவனை நிறுத்திவிட்டு, “அவன் செல்ஃபோனை எடு” என்றான். கீழே அடிப்பட்டு விழுந்தவன் பாக்கெட்டில் இருந்த கைப்பேசியைக் கைப்பற்றியவன்,

“லாக்கை எடுடா” என்று மீண்டும் அடிக்க அவன் வேறு வழியில்லாமல் அதனை எடுத்துக் கொடுத்தான்.

அதனை வாங்கித் திறந்து பார்த்த ஆனந்தன் ரௌத்திரமானான்.

“பொறுக்கி நாயே... என் பொண்டாட்டியைக் கண்டபடிக்கு ஃபோட்டோ எடுத்திருக்கியா?” என்று மிதி மிதி என்று மிதிக்க,

“பொண்டாட்டியா?” என்று கேட்டு அத்தனை அடியிலும் அவனைப் பார்த்து எள்ளலாகச் சிரித்தவன், “அவ உன் பொண்டாட்டி இல்ல... உன்னை அவ விலை கொடுத்து வாங்குன எஜமானி... நீ அவ வேலைக்காரன்” என்றதும், 

ஆனந்தன் உக்கிரத்துடன், “என்னடா சொன்ன?” என்று அவனைச் சரமாரியாக அடித்து மிதிக்க, 

“சார் போதும் அவனை விடுங்க... நான் அவனைப் பார்த்துக்கிறேன்... என்கிட்ட விட்டிருங்க” என்று கூற,

இரத்னத்தை ஆவேசத்துடன் பார்த்து, “என் கண் முன்னாடி திரும்பி வந்த... மவனே எங்கயாச்சும் லாரி டயருக்குக் கீழே துண்டு துண்டா கிடப்ப” என்று எச்சரித்து விட்டு ஜெயிடம், “இவனை அடிச்சுத் தூக்கி வெளியே போடு” என்று விட்டு அந்த செல்பேசிப் படங்கள் யாவையும் அழித்து அதனைத் தூக்கிப் போட்டு சிதில் சிதிலாக உடைத்தான்.

 அதன் பின் அங்கிருந்து கிளம்பியவன் மின்தூக்கியில் நின்றபடி தன்னை ஒரு மாதிரி ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் விருந்து நிகழும் தளத்திற்குச் சென்றான்.

அவனை பார்த்ததும் ஜஸ்டின், “எங்கே போயிட்டு வர்ற ஆனந்த்?” என்று விசாரிக்க,

“ரெஸ்ட் ரூம் போயிருந்தேன் சார்... ரெஜிகிட்ட சொல்லிட்டுதான் போனேன்” என்று விட்டு முன்னே வர,

ரெஜினா அவனைப் பார்த்ததும் முறைத்துக் கொண்டே தன் சக்கர நாற்காலியை அவன் முன்னே வந்து நிறுத்தி, “ஏதாச்சும் பிரச்சனையா ஆன்ந்த்?” என்று கூர்மையாக அவனைப் பார்க்க,

“பின்ன பிரச்சனைதான்... காலைல சாப்பிட்ட பொங்கலும் இட்லியும் இடியாப்பத்தோட சேர்த்து இப்போ உள்ள போன கான்டினட்ல் எல்லாம் கொலப்ஸாகி வயித்த கலக்கிவுட்டுருச்சு” என்று படுத்தீவிரமாகச் சொல்ல,

 “ஐயோ... இதெல்லாமா சொல்லுவாங்க” என்று தலையில் அடித்துக் கொள்ள,

“நீதானே என்ன பிரச்சனைனு கேட்ட... அதான் சொன்னேன்” என்றவன் தோள்களைக் குலுக்க, 

“நீ சரியான ஆளு” என்று அவனை எட்டி அடித்துவிட்டுச் சிரித்தாள்.

அவனும் பதிலுக்குச் சிரிக்க அவர்கள் இருவரையும் கண்ணார பார்த்து மகிழ்ந்த ஜஸ்டின் அவர்களிடம் வந்து, “நீ ரெஜியைக் கூட்டிட்டு கிளம்பு ஆனந்த்... இனிமே நான் பார்த்துக்கிறேன்... மேக்ஸிமம் எல்லா கெஸ்டும் போயாச்சு” என்றார்.

ஆனந்த் உடனே ரெஜினாவைப் பார்க்க அவளும் கிளம்பலாம் என்று தலையசைத்தாள்.

“புது வீட்டுக்குத்தானே போறீங்க... நம்ம ட்ரைவர் விக்னேஷைக் கூட்டிட்டுப் போங்க” என்று ஜஸ்டின் கூற,

“இல்ல சார்... நானே டிரைவ் பண்ணிட்டுப் போயிடுவேன்” என்றான். அவர் யோசித்துவிட்டு, “ரொம்ப லேட்டாகிடுச்சேனு பார்த்தேன்... சரி பார்த்துப் பத்திரமா போங்க” என்று அவர்களைப் புத்தம் புது காரில் அனுப்பி வைத்துவிட்டு அவரின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் ஜெய் மற்றும் அருணை அழைத்து அவர்கள் பத்திரமாக வீடு போய் சேரும் வரை காரில் பின்தொடர சொன்னார்.

ரெஜியை காரில் தூக்கி அமர்த்தியவன் பின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இயக்க, “டிரைவர்தான் இருக்காரு இல்ல... எதுக்குத் தேவை இல்லாம நீ டிரைவ் பண்ணிட்டு” என்று கேட்டாள்.

“நமக்குள்ள எந்த மூணாவது மனுஷனும் வரக் கூடாது... அது டிரைவராவே இருந்தாலும் சரி” என்றான். அவன் குரல் ஒலித்தத் தொனி கடினமாக இருந்தது.

நிக்கைப் பற்றித்தான் குத்தலாக மூன்றாவது மனிதன் எனச் சுட்டுகிறானோ என்று யோசித்தவள் இப்போது அந்தப் பேச்சை எடுப்பதா வேண்டாமா என்று குழம்ப, “உன்னை என் கூட அனுப்பிட்டுப் பின்னாடியே நம்மள ஃபாலோ பண்ண பவுன்ஸரஸ் அனுப்பி இருக்காரு உங்க அருமை டேடி” என்று முன் கண்ணாடியைப் பார்த்துக் கூற அவள் திரும்பிப் பார்த்தாள்.

தூரமாக அவர்கள் கார் பின்தொடர்வதைப் பார்த்து, “நாம பத்திரமா போய் சேரனும்னு அனுப்பி இருப்பாரு” என்று அவள் சாதாரணமாகக் கூற,

“நான் உன்னைப் பத்திரமா கூட்டிட்டுப் போறன்னானு பார்க்கக் கூட அனுப்பி இருக்கலாம்” என்றான். அந்த வார்த்தை சுருக்கென்று அவளைக் குத்த,

“இப்போ என்ன சொல்ல வர்ற நீ…? டேட் உன்னை நம்பாம அவங்கள அனுப்பினாருனா?” என்று கேட்டாள்.

“இருக்கலாம்” என்றான்.

“என்ன பேசுற நீ…? உன்னை நம்பாமதான் என்னை உனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாரா?” என்று கேட்க,

“நேத்து வரைக்கும் அவர் கம்பனில வேலை பார்க்கிற விசுவாசமான ஊழியன் நான்... ஆனால் இப்போ அப்படி இல்லையே... அவரோட மருமகன்... இனிமேயும் அப்படியே விசுவாசமா இருப்பேனானு சந்தேகம் வந்திருக்கலாம் இல்ல”

“ஸ்டாப் இட் ஆனந்த்... டேடி அப்படி எல்லாம் யோசிக்குற ஆள் இல்ல” என்று கோபமாகக் கத்திவிட்டு அவள் முகத்தைக் ஜன்னல் பக்கமாகத் திருப்பி வெளியே பார்க்கத் தொடங்கினாள்.

இரத்னம் பேசியது அவன் மூளைக்குள் புகுந்து குழப்பிவிட்டதில் ஏதேதோ முட்டாள்தனமாக ரெஜினாவிடம் பேசிவிட்டதை உணர்ந்த ஆனந்த், “ரெஜி ஐம் சாரி” என்று எட்டி அவள் கரத்தைப் பிடித்துக் கூற,

“கையை விடு” என்று அவள் அவசரமாக தன் கரத்தை இழுத்துக் கொண்டாள்.

“நீ கோபப்படும் போது ரொம்ப க்யூட்டா இருக்க” என்றதும் அவள் கடுப்புடன் திரும்பி,

“வண்டி ஓட்டுறன்னு பார்க்க மாட்டன்... மண்டையை உடைச்சிடுவேன்... கம்னு வண்டியை ஓட்டு” என்று எச்சரிக்க,

“சாரி சாரி சாரி சாரி... நான் பேசுனது தப்புத்தான்” என்றவன் பாடமாகப் படிக்க அவள் பெருமூச்செறிந்து, 

“நீ என்ன மாதிரியான ஆளுடா” என்றாள்.

“டா வா” அவன் அதிர்ச்சியாவது போல பாவனை செய்ய,

“ஆமான்டா” என்றவள் மீண்டும், “நீ என்ன மாதிரியான கேரக்டர்... முதல அதைச் சொல்லு” என்று வினவினாள்.

“ஓ அப்படி கேட்குறியா?” என்றவன் தன் தோள்களைக் குலுக்கி, “நல்லவன் வல்லவன்... நாலு தெரிஞ்சவன்” என்று உருட்ட,

“விளையாடதே ஆன்ந்த்... நான் சீரியஸா கேட்குறேன்” என்றாள்.

“அப்போ சீரியஸா நீ என்னை நல்லவனு ஒத்துக்கமாட்டியா”

“சத்தியமா ஒத்துக்க மாட்டேன்... உன்னைப் பத்தி யோசிச்சாலே மண்டை காயுது... அதுவும் நீ ஒவ்வொரு டைமும் ஒவ்வொரு மாதிரியான முகத்தைக் காண்பிக்குற” என அவள் சொல்வதைச் சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டே அவன் காரை இயக்க,  

அவள் தொடர்ந்து, “முதல் தடவை ரொம்ப பிராக்டிக்லா புத்திசாலித்தனமா பேசுன... இரண்டாவது தடவை உங்க வீட்டாளுங்க முன்னாடி அப்படியே சைலன்டா அப்பாவி மாதிரி உட்கார்ந்துட்டு இருந்த... கெஸ்ட் ஹவுஸ் போன போது ஃபிளவர்ஸ் எல்லாம் கொடுத்து ரொமான்டிக்கா பேசுன... அப்புறம் நிக் பேரைச் சொன்னதும்…” என்றவள் பேசிக் கொண்டிருக்கும் போதே,

“இப்போ அவன் பேரை எதுக்கு எடுக்குற... நான் ஏதாவது அவனைப் பத்திப் பேசுனேனா இல்ல அவன் யாருனு உன்கிட்ட கேட்டேனா?” என்று சீறலானான் ஆனந்தன்.

“நீ கேட்டா நான் நிக்கைப் பத்திச் சொல்ல தயாரா இருக்கேன்” என்றவள் கூற,

“ஆனா நான் கேட்க தயாரா இல்ல... திரும்பவும் உன் வாயால அவன் பேரைச் சொல்றதையும் நான் விரும்பல” என்றவன் அழுத்தமாகக் கூறினான். அது ஒரு மாதிரி எச்சிரிக்கை தொனியில் வெளிப்பட,

“என்ன ஆர்டர் போடுறியா?” என்று அவள் பதிலுக்குக் கேட்டாள்.

“சத்தியமா இல்லைங்க மேடம்... கெஞ்சிக் கேட்டுக்கிறேன்... அவன் பேரைச் சொல்ல வேண்டாம்... ப்ளீஸ்” என்று அவன் ஒரு மாதிரி இறங்கிப் பேசுவது போல பாவனை செய்தாலும் அதிலும் அதிகார தொனிதான் தெரிந்தது.

அவளைப் பயம் பற்றிக் கொண்டது. இவனுடனான தன்னுடைய உறவு எப்படி இருக்கப் போகிறது என்ற எந்தக் கணிப்பிற்கும் அவளால் இதுவரை வர முடியவில்லை. அதுவும் காலையில் திருமண மண்டபத்தில் பேசிய ஆனந்தன் எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கும் என்று யோசிக்கும் போதே மனம் வலித்தது.

கார் அவர்களின் நீலாங்கரை பங்களாவின் சாலைக்குள் நுழைந்தது. தூரத்தில் இருந்தே புது வீட்டிற்கான விளக்கு அலங்காரங்கள் பளபளத்தன. காலையில் திருமண முடித்ததும் இருவருமாக இங்கே வந்து முதலில் கிறிஸ்த்துவ முறைப்படி ஜபமும் பின்னர் பால் காய வைத்து ஒரு சிறிய பூஜையும் முடித்தனர்.

தன் பெற்றோரை அவன் இங்கே தங்கிக் கொள்ள சொன்ன போது, “நாங்க எதுக்கு இங்க தங்கணும்... எங்களுக்கு மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் இல்ல” என்று சம்பந்தாசம்பந்தமில்லாமல் உளறியவர்களை அவன் சமாதானப்படுத்த முயலவில்லை.

நிச்சயமாக இவர்களுக்கும் ரெஜினாவிற்கும் ஒத்துப் போகாது. ஆதலால் இவர்கள் இருவரும் தனித்தனியாக இருப்பதே நல்லது என்று அவர்கள் முடிவைத் தனக்கு சாதகமாகவே எடுத்துக் கொண்டான்.  

ஆனந்தன் காரைப் பார்த்த காவலாளி கதவைத் திறக்க அவர்களைப் பின்தொடர்ந்த கார் திரும்பி போய்விட்டது.

அதனைக் கவனித்தவன் பின் வரவேற்பு பலகையில் ரெஜினா ஆனந்தன் இல்லம் என்று பொறிக்கப்பட்டிருந்ததைப் பார்த்து உள்ளுர கர்வமாக உணர்ந்தான்.

அதன் பின் காரை உள்ளே கொண்டு வந்து நிறுத்தியவன் நேராகச் சென்று வீட்டுக் கதவைத் திறந்துவிட்டுத் திரும்பி வந்து ரெஜினாவை கார் இருக்கையிலிருந்து தூக்கிக் கொள்ள, அவள் அமைதியாக இருந்தாள்.

அவளுக்கு இப்போது அவன் தொடுகையும் பிடியும் ஓரளவு  பழகிவிட்டிருந்ததில் பெரிதாக எதிர்ப்பு எதுவும் காட்டுவதில்லை. மண்டபத்தில் மணமேடைக்கு அவன் தூக்கிச் சென்று அமர வைத்த போது எல்லோர் பார்வையிலும் தெரிந்த வியப்பும் ஜஸ்டின் கண்களில் மின்னிய ஆனந்த கண்ணீரையும் அவள் அப்போது நினைவுப்படுத்திக் கொண்டாள்.

அவளுக்குமே அந்த உணர்வும் அந்த நிகழ்வும் மனதிற்கு நெருக்கமானதாக இருந்தது. அதற்கு பிறகான தாலி கட்டும் சடங்கு எல்லாம் அவளுக்குப் பெரிய பாதிப்பை எற்படுத்தவில்லை.

அந்த நொடி, “ரெஜி” என்று அவன் குரல் அவள் சிந்தனையைக் கலைக்க அப்போதுதான் அவன் அவளைச் சக்கர நாற்காலியில் உட்கார வைக்காமல் தூக்கிக் கொண்டே வீட்டிற்குள் செல்ல எத்தனிப்பதைக் கவனித்தாள்.

“ஆனந்த் என்னை இறக்கி வீல் சேர்ல உட்கார வை” என, 

அவன் புன்னகையுடன், “நாட் பாஸிப்பில்” என்றான்.

“நீ ரொம்ப அடமென்ட்டா நடந்துக்குற ஆனந்த்”

“நீ என்ன கேரக்டர்னு கேட்டியே உண்மையிலேயே அதான் என் கேரக்டர்... அடமென்ட்” என்றவன் மேலும்,

“எங்க வீட்டுல நான்தானே முதல் குழந்தை...  அதான் அதிகாரம், அடம் எல்லாம் எனக்கு ஜாஸ்தி... நான் அடம் பிடிச்சு ஒன்னு வேணும்னா அது எனக்கு கிடைச்சே ஆகணும்.”

”ஒரு போட்டில நான் கலந்துக்கிட்டா அதுல நான் ஜெய்ச்சே ஆகணும்... என் வீட்டுப் பொறுப்பைப் பார்த்துக்கிறதுல கூட நான்தான் செய்வேன்னு ஒரு கர்வமும் அடமும் இருக்கு... யாருக்காக எதையும் விட்டுக் கொடுத்துப் பழகாதவன் நான்” என்று மும்முரமாகப் பேசிக் கொண்டே நடந்தவன் வாயிலுக்கு வெளியே நின்றுவிட, அவளும் அவன் சொல்வதை எல்லாம் ஆழமாகக் கேட்டிருந்தாள்.

“ஆனா உன் ஒருத்திக்காக என்னோட அடம் தலைகணம் எல்லாத்தையும் விட்டுக் கொடுத்துட்டேன்... நான் உன்னை கிஸ் பண்ண அன்னைக்கு உன்னை மாதிரி வேற எவ செஞ்சு இருந்தாலும் போடினு தூக்கிப் போட்டுட்டுப் போயிருப்பேன்... ஆனா உன்னை” என்றவன் சொன்னதைக் கேட்டுப் பெரிதாகப் பதறாமல் அலட்சியமாக உதட்டைச் சுழித்தவள்,

“தூக்கிப் போட்டுட்டுப் போயிருந்தா உனக்கு இந்தச் சொத்தும் பணமும் கிடைச்சிருக்காது இல்ல... அதான்” என்றாள்.

“நான் இப்போ சொல்ல போறதை நீ நம்புவியான்னு தெரியல... ஆனா அதான் உண்மை.”

“இதை விட நூறு மடங்கு சொத்துக் கொடுத்தாலும் இனிமே உன்னைவிட்டுக் கொடுக்க நான் தயாரா இல்ல” என்று சொல்ல அவள் வியப்புடன் நோக்கினாள்.  அந்தக் கணம் அவன் கால்கள் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க முகப்பறைகளின் மின்விளக்குகள் தானாகவே ஒளிர ஆரம்பித்தன.

அவன் மேலும் உள்ளே வர ஸரவுன்ட் ஸ்பீக்கரில் மிதமான பியானோவின் இசை ஒலிக்க ஆரம்பித்தது.

“என்ன திடீர்னு மியூஸிக் கேட்குது” என்றவள் அவனைப் புரியாமல் பார்க்க,

“நம்ம உள்ளே வந்ததும் அதுவா வருது... அந்த மாதிரி செட் பண்ணி இருக்காங்க” என அந்த பியானோ இசை அவர்களின் உணர்வுகளைத் தூண்டும் விதத்திலிருந்தது. மிக மிக மென்மையான நுண்ணிய மனவுணர்வுகளைத் தூண்டும் இசை.

இசை அழ வைக்கும். சிரிக்க வைக்கும். வியக்க வைக்கும். மயங்க வைக்கும். காதலில் கரைய வைக்கும். காமத்தில் கலக்க வைக்கும்.

அந்த இசை நாதத்தில் அதீதமான காமத்தின் உணர்வு தூண்டல்கள் உண்டாவதை உணர்ந்தவள் ஆனந்தைக் கூர்மையாகப் பார்த்து, “பொய் சொல்லாதே... நீதானே இந்த மியூஸிக்கை செட் பண்ண” என, அவன் கண்ணடித்தான்.

“நீ என்ன மாதிரியான ஆளுடா?” என்றவள் கடுப்புடன் கேட்க,

“நீ எந்த மாதிரி விரும்புறியோ அந்த மாதிரியான ஆளு நான்.” என்றவன் கரங்கள் அவளை அவர்கள் படுக்கையறைக்குத் தூக்கிச் சென்றன.

பூக்களால் அவர்கள் படுக்கையறை அலங்கரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தவள் மனம் தடுமாற அதனுடன் அந்த பியானோ இசையும் அவளைப் பின்தொடர்ந்து வந்து உணர்வுகளுடன் விளையாடியது.

“டயர்டா இருக்கியா ரெஜி” என்றவன் கேள்வியும் பார்வையும் அவளை இன்னும் தாக்கியது. 

“எதுக்குக் கேட்குற” அவள் தவிப்புடன் அவனை நோக்க,

“எதுக்குனு உனக்குத் தெரியாதா?” என்றவன் கரங்கள் இன்னும் அழுத்தமாக அவள் மீதான பிடியை இறுக்கின. அவன் கரங்கள் அவள் தேக வளைவுகளில் பதிந்தன.

அவள் நாணத்துடன் தலையைத் தாழ்த்திக் கொள்ள அவன் இதழ்கள் அவள் கழுத்தில் மோதின.

“ஆனந்த்” என்றவள் நாணத்துடன் முனக, மெதுவாக அவளைப் படுக்கையில் கிடத்தியவனின் இதழ்கள் பதிந்த இடங்களில் எல்லாம் அவள் உணர்வுகள் தூண்டப்பட்டன.

இருப்பினும் மனமும் உடலும் இந்தக் கூடலுக்குத் தயாராக இல்லையோ என்ற ஒரு எண்ணம் அவளுக்குள் எழ, “இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே... நாம டைம் எடுத்துக்கிட்டு” என்று அவள் தயங்கி விலக முயற்சித்தும் முடியவில்லை. அவன் இதழ்கள் அவள் இதழ்களை மூடியிருந்தன.

அவன் அவள் விருப்பத்தை எல்லாம் தாண்டி அவள் உடலுடன் அன்றே கூடிவிடுவது என்று அதிக அவசரம் காட்டினான்.

அவளால் அசைய முடியவில்லை. அவளது சொரணையற்ற கால்கள் அவளுக்கு உதவவில்லை. அந்த கூடல் நிகழ்ந்து முடியும் வரை அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

அவன் நெற்றியில் முத்தமிட்டு, “லவ் யூ ரெஜி” என்று விட்டு மெல்ல சரிந்து அவள் அருகே படுத்த போது அவள் கண்களினோரம் ஈரம் கசிந்தது.

அவன் உறங்கிவிட்ட போதும் அவள் உறக்கமில்லாமல் மேற்சுவரில் மின்னிக் கொண்டிருந்த மெல்லிய சிவப்பு வெளிச்சத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.

‘ஆனந்துக்கும் எனக்கும் இடையில இருக்குறது என்ன லவ்வா இல்ல லஸ்ட்டா...  இல்ல மேரேஜ்ங்குற ரிலேஷன்ஷிப்புக்கான அவசர தேவைகளா? கட்டாயத்துக்காக ஒரு வேளை செக்ஸ் வைச்சுக்கிட்டானோ?’ இப்படி எல்லாம் யோசித்துக் கொண்டே அவள் உடல் ஓய்ந்த போதும் மனம் ஓயவில்லை.  

‘அவன் பேசுற வார்த்தைல எவ்வளவு உண்மை இருக்கு? எவ்வளவு பொய் இருக்கு?’ என்றவள் உறக்க நிலையிலும் மனதிற்குள்ளாகவே பேசிக் கொண்டிருந்தாள்.

‘டிட் ஹி லவ் மீ?’ அவளே கேட்டுக் கொண்ட அந்தக் கேள்விக்கு, “நோ” என்று திட்டவட்டமாகப் பதில் வந்தது. பதில் வந்த திசையில் திரும்பியவள் நிக்கின் வெளிறிய முகத்தைப் பார்த்து மிரண்டுவிட்டாள்.

“காட் நிக்” என்று கத்தியபடி கண் விழித்தவள் தன்னை மறந்து உறங்கிப் போனதைக் கூட அப்போது உணரவில்லை.

தான் கனவில் நிக்கைப் பார்த்துக் கத்திவிட்டோம் என்று விளங்கிய மறுகணம் ஆனந்தின் நினைவு வந்தது. நிக் என்று சொன்னது அவனுக்குக் கேட்டுவிட்டதோ என்ற பதட்டத்துடனும் பயத்துடன் தன் வாயைப் பொத்திக் கொண்டு ஆனந்த் படுத்திருந்த திசையில் திரும்பி பார்த்தாள்.

அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவள் படுக்கையிலிருந்து இறங்க முற்பட்ட போது அவளுடைய சக்கர நாற்காலி அங்கே இல்லை என்பதைக் கவனித்தாள்.

அப்போதுதான் ஆனந்தன் அவளை காரிலிருந்து வீட்டிற்குள் தூக்கி வந்திருந்த நினைவு வரத் தலையிலடித்துக் கொண்டவள் பின் வேறு வழி இல்லாமல், “ஆனந்த்” என்று தயங்கித் தயங்கி மெல்லிய குரலில் எழுப்பினாள்.

அவன் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்க, “ஆனந்த எழுந்திரு” என்று தொட்டு உலுக்கினாள்.

“என்ன ரெஜினா” என்று தூக்க கலக்கத்துடன் அவளைப் பார்க்க,

“எழுந்திரு... என்னோட வீல் சேரைப் போய் எடுத்துட்டு வா” என,

“எடுத்துட்டு வரலயா?” என்றவன் கேட்க,

“ஆமா எடுத்துட்டு வரல” என முடியைக் கோதி யோசித்தவன், “சாரி கார்லயே இருக்கு... எடுத்துட்டு வரேன்” என்று முகத்தைத் துடைத்தபடி எழுந்து சென்று அவளின் சக்கர நாற்காலியைப் பிரித்துக் கொண்டு வந்து முன்னே வைத்தான்.

பின் அவளைத் தூக்க வர, “ப்ளீஸ் என்னால முடியும்” என்றவள் அவனைத் தடுத்துவிட்டு,

“எனக்கு லெப்ட் சைட் வாட்ரோப்ல இருந்து நைட் டிரஸ் மட்டும் எடுத்துக் கொடு” என்றாள். அவன் எடுத்துக் கொடுத்த உடையைக் கழுத்தில் மாட்டிக் கீழே இறக்கியவள் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொள்ள,

“வேறு ஏதாச்சும் ஹெல்ப்” என்று கேட்டான்.

“வேண்டாம் ஆனந்த்... நீ படுத்துக்கோ” என்றவள் குளியலறைக்குள் வந்து தன்னைச் சுத்தம் செய்து கொண்டாள்.

அங்கிருந்த கண்ணாடிகள் வாஸ் பேஸின் அனைத்தும் அவள் அமர்ந்த வகையில் பயன்படுத்துவதற்கு ஏற்றார் போல அமைக்கப்பட்டிருந்தன. அந்தக் கண்ணாடியை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அதில் நிக்கின் முகம் தெரிந்தது. அவன் அவளைப் பார்த்து நகைத்தான்.

அவள் உடனடியாக  தலையைக் கவிழ்ந்து, “நிக் ப்ளீஸ் போயிடு... என்னை விட்டுப் போயிடு” என்று கெஞ்ச,

“அதெப்படி முடியும்... ஐ லவ் யூ ரெஜி” என, 

“பட் ஐ டோன்ட்” என்றவள் நிமிர்ந்து பார்க்காமலே கூற,

“லயர்” என்றவன் திட்டினான்.

“நிக் போ... என் முன்னாடி இனிமே வராத... போயிடு... எனக்குப் பயமா இருக்கு” என்றவள் முகத்தை மூடி விசும்ப ஆரம்பித்தாள்.

“நீ அவனுக்காகப் பயப்படுறியா…? ஹி இஸ் எ சீட்... ஃபிராட்... அவன் உன் பணத்துக்காகவும் சொத்துக்காகவும்தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான் ரெஜி... அவன் செக்ஸ் வைச்சுக்கிட்டது கூட உன் சொத்துக்கு முழுசா உரிமை கொண்டாடத்தான்” என்று கூற,

“ஷட் அப் நிக்... ஷட் அப்... கெட் லாஸ்ட்” என்று நிமிர்ந்து அவள் சத்தமிட அந்தக் குரலும் அவனும் காணாமல் போய்விட்டார்கள்.

அதேநேரம், “ரெஜி என்னாச்சு... என்ன சத்தம்...ஏதாவது பிரச்சனையா?” என்று ஆனந்தன் கதவைத் தட்ட,

“இல்ல ஆனந்த்... அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்றவள் அவசரமாக எட்டி பிளஷை அழுத்திவிட்டு முகத்தை நன்றாகத் தண்ணீரில் கழுவித் துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

தான் பேசியதெல்லாம் வெளியே கேட்டிருக்குமோ என்று கலவரத்துடன் வாசலில் நின்றவனை அவள் உறுத்துப் பார்க்க, அவன் சாதாரணமாகத்தான் இருந்தான். அப்படி ஒன்றும் கேட்டது போல தெரியவில்லை.

அவனோ மிகுந்த அக்கறையுடன், “என்ன ஹெல்ப்னாலும் என்கிட்ட கேளு... ஒன்னும் தயங்காத” என்று கூறிக் கொண்டே,

“படுத்துக்குறியா... தண்ணி ஏதாவது எடுத்துட்டு வரவா?” என்று கேட்க, “ம்ம்ம்” என்றாள்.

பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தவன் அவள் குடித்து முடித்ததும் அதனை வாங்கி மேஜை மீது வைத்துவிட்டு, “இரு நான் ஹெல்ப் பண்றேன்” என்று படுக்கையில் அமர போனவளை லாவகமாக தூக்கிப் படுக்க வைத்து, போர்வையை அவள் மீது போர்த்திவிட்டான்.

“தேங்க்ஸ் ஆனந்த்” என,

“லவ் யூ ஆனந்த்னு சொல்லு ரெஜி” என்றவன் அவளை நெருங்கி அணைத்துப் படுத்துக் கொள்ள அவனையே ஆழ்ந்து பார்த்தவளுக்கு வார்த்தை தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.

சிரமப்பட்டு வார்த்தையை கொணர்ந்தவள், “லவ் யூ ஆனந்த்” என, 

“மீ டூ ரெஜி” என்று அவன் அவள் காதுமடலை உரசிக் கொண்டே கிசுகிசுத்தான்.

அவள் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் படுத்திருக்க, அவன் கரம் அவளை அரணாக அணைத்துப் பிடித்திருந்தது.

shanbagavalli and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
shanbagavallibhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content