You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kalyanam@ - Episode 15

Quote

15

 மகள் செய்த காரியத்தைப் பார்த்து அதிர்ந்த ஜஸ்டின், “என்ன பண்ற ரெஜி நீ?” என்று வினவ,

“எனக்குப் பிடிக்கல டேடி… அதான் தட்டி விட்டேன்” என்றவள் அவர்களை எல்லாம் வெறுப்புடன் பார்த்து பதில் கூறினாள். 

“விபூதி வைச்சுக்க பிடிக்கலன்னா… வேண்டாம்னு வாயால சொல்ல வேண்டியதுதானே… அதுக்கு எதுக்கு எங்க அம்மா கையைத் தட்டி விட்டீங்க” என்று வினோ சீற்றத்துடன் கேட்க, 

“விபூதி வைச்சுக்கப் பிடிக்கலன்னு தட்டிவிடல… உங்க அம்மா வைக்கிறது பிடிக்காமதான் தட்டிவிட்டேன்” என்ற ரெஜினாவின் பதில் கேட்டு பானுமதியின் முகம் கோபத்தில் கன்றி சிவந்தது.

“அப்படி என்னம்மா பண்ணிட்டேன் நான் உனக்கு… ஏதோ எங்க குடும்ப வாரிசை வயித்துல சுமக்கிறியேன்னு… நீ நல்லபடியா புள்ள பெத்துக்கணும்னு வேண்டிக்கிட்டு எங்க குலசாமி விபூதியை வைச்சு விடலாம்னு வந்தேன்… அது ஒரு குத்தமா?” என்று ஆவேசமாக ஆரம்பித்துக் கண்ணீருடன் முடிக்க,  

“ஆமா… உங்க குடும்பத்துக்கு எல்லாம் வாரிசு ஒரு கேடு” என்றவளின் பதலடி எல்லோரையும் அதிர வைத்தது.

மனைவியின் நடவடிக்கை புரியாமல் குழம்பி நின்ற ஆனந்தன் அவளின் கடைசி வார்த்தையில், “ரெஜி” என்று கத்திவிட்டான்.

“பொறுமையா இரு ஆனந்த்… அவ ஏதோ புரியாம இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கா” என்று ஜஸ்டின் அவன் தோளைத் தட்டி அமைதிப்படுத்தினார். 

“என் புள்ளய ஏன் அடக்குறீங்க… போய் உங்க பொண்ண அடக்குங்க… பணம் இருந்துட்டா மட்டும் போதுமா… ஒரு பொண்ணுக்குக் கொஞ்சமாச்சும் அடக்க ஒடுக்கம் வேண்டாமா” என்று ஈஸ்வரன் கடுப்புடன் பேச, 

“அதானே… இப்படி கூடவா ஒரு பொண்ணு பேசுவா…சை” என்று பானுமதி முகத்தைச் சுழித்தார்.  க்

வினோவும் தன் சார்புக்கு, “எல்லாம் பணக்கார திமிரு” என்றாள். 

ஈஸ்வரன் மேலும் மகனை உசுப்பும் விதமாக, “இந்த மாதிரி திமிரு பிடிச்சப் பொண்ண கட்டிக்கத்தான் எங்ககிட்ட எல்லாம் அவ்வளவு சண்டை போட்டியா… தலையெழுத்து” என்று தலையிலடித்து கொண்டார்.. 

அவர்களுடன் சேர்ந்து கொண்டு வினோவின் கணவன் பாலாவும், “பணம் இருந்துட்டா போதுமா மச்சான்… மானம் ரோஷமெல்லாம் காத்தோட பறக்க விட்டுருவீங்களா” என்று அவளைப் பணத்துக்காகதான் கல்யாணம் செய்தாய் எனச் சுட்டிக்காட்டிப் படுகுத்தலாகப் பேச ஆனந்தனின் கோபம் உச்சத்தைத் தொட்டது.

அந்தக் கோபம் மொத்தமும் ரெஜினாவின் புறம் திரும்ப, “என்னடி பிரச்சனை உனக்கு…? ஏன்டி இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க?” என்று எகிறி கொண்டு அவளிடம் சென்றான். 

“என்ன பிரச்சனையா?” என்று நிதானமாக அவனை ஏறிட்டவள், 

“பிரச்சனையே நீதான்… உன்ன மாதிரி ஒரு சுயநலவாதி கூட வாழ எனக்கு இஷ்டம் இல்ல… முக்கியமா உனக்கு ஒரு குழந்தையைப் பெத்துக் கொடுக்க கொஞ்சமும் இஷ்டம் இல்ல… நான் இந்தக் குழந்தைய அபார்ட் பண்ண போறேன்” என்றவள் முகத்திற்கு நேராகக் கூறினாள். 

அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஆனந்தன் மனதில் இடியாக இறங்கிய அதேநேரம் மற்ற எல்லோரின் முகத்திலும் அதிர்ச்சியும் கோபமும் தெறித்தது. 

அப்போது முன்னே வந்து ஜஸ்டின், “ரெஜினா… யூ ர் கிராஸ் யுவர் லிமிட்ஸ்” என்று கண்டிப்பான குரலில் கூறும் போதே,  

பானுமதியும், “வயித்துல இருக்க புள்ளைய கலைக்குறன்னு மனசாட்சி இல்லாம சொல்றியே… நீ எல்லாம் என்ன பொம்பளையா இருப்ப?” என்று காட்டமாக அவளைப் பார்த்துக் குற்றம் சாட்டினார்.  

ஆனால் யாருடைய கோபமும் ரெஜினாவைக் கொஞ்சமும் பாதிக்கவில்லை. 

அவள் குத்தல் பார்வையுடன் பானுமதியை நோக்கி, “அதே கேள்வியை நானும் உங்களைக் கேட்குறேன்… பெத்த புள்ளையவே துரத்திவிட்ட நீங்க எல்லாம் ஒரு அம்மாவா? நீங்க எல்லாம் ஒரு பொம்பளையா?” என்று கேட்ட நொடி அவர் முகம் வெளிறியது.

அவளிடமிருந்து அவர் இப்படியொரு எதிர் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.  

ஆனந்தன் குடும்பத்திலிருந்த அத்தனை பேரின் முகமும் பேயரைந்தது போலானது. அத்தனை நேரம் மனைவியின் அவமதிப்பான பேச்சிலும் நடவடிக்கையிலும் கொந்தளித்து கொண்டிருந்த ஆனந்த் சட்டென்று தன் கோபம் அடங்கி அமைதியாகிவிட்டான்.    

ஆனால் மகள் பேசியதன் காரணம் புரியாத ஜஸ்டின், “நீ என்ன சொல்ற ரெஜினா?” என்று குழப்பத்துடன் வினவ அவள் பார்வை ஆனந்தனின் புறம் கூர்மையாகப் பாய்ந்தது. 

“நான் என்ன சொல்ற என்ன பேசுறனு உனக்குப் புரியுதா ஆனந்த்?” என்று அந்தக் கேள்வியை அவன் புறம் திருப்பினாள்.  அவள் பார்வையின் தீவிரம் தாங்காமல் அவன் மௌனமாக தலையைத் தாழ்த்திக் கொண்டான்.

அடுத்தடுத்த அவள் அங்கிருந்த மற்றவர்களை எல்லாம் பார்த்து, “உங்களுக்கும் புரிஞ்சிருக்குமே” என, யாருமே எதுவுமே பேசவில்லை 

“என்ன வினோ?” என்று கேட்க அவள் வாயைத் திறக்கவில்லை, 

அத்தனை நேரம் கூச்சலும் குழப்பமுமாக இருந்த அந்த வீடு அமைதியாகிவிட அவள் தன் தந்தையின் புறம் திரும்பி, “அவங்களுக்கு எல்லாம் நான் சொல்றது புரிஞ்சிடுச்சு… உங்களுக்குதான் புரியல டேடி… இந்த ஃபோட்டோவைப் பாருங்க புரியும்” என்றவள் தன் சக்கர நாற்காலியின் ஓரமாக வைத்திருந்த படத்தை எடுத்து நீட்டினாள்.

அந்தப் படத்திலிருந்த இரண்டு சிறுவர்களில் ஒருவன் ஆனந்தன் என்பதை அடையாளம் கண்டு கொண்டவர்,  அருகே நின்ற சிறுவனை உற்றுப் பார்க்க, “யாருன்னு தெரியலயா டேடி… அதுதான் நம்ம மதி” என்றாள்.

“அப்படினா!!!” என்று அதிர்ச்சியுடன் நிமிர்ந்து மகளைப் பார்க்க, 

“மதி இவங்களோட இரண்டாவது புள்ள… ஆனந்தனுக்குக் கூடப் பிறந்தவ” என்றதும் அவர் ஆனந்தனைப் பார்த்து,

“ரெஜி சொல்றது உண்மையா ஆனந்த்” என, 

“இத்தனை நாளா சொல்லாத உண்மைய… இன்னைக்கு மட்டும் சொல்லிட போறாரா டேடி…மாட்டாரு… சொல்ல மாட்டாரு” என்றவள் சொன்னதைக் கேட்டு நிமிர்ந்த ஆனந்தன், “ரெஜினா நான் எக்ஸ்பிளைன் பண்றேன்… ப்ளீஸ் நாம இதைப் பத்தித் தனியா பேசுவோம்” என்று பொறுமையாகக் கூற, 

“ஷட் அப்… எவ்வளவு பெரிய உண்மையை மறைச்சிட்டு எனக்கு எக்ஸ்பிளைன் பண்ண போறியா?

என்ன எக்ஸ்பிளைன் பண்ணுவ… மதி உன் கூட புறந்தவன்னு சொல்லிக்க அவமானமா இருக்குனா” என்று சீறலாகக் கேட்க, 

“சத்தியமா அப்படி இல்ல” என்றான் ஆனந்தன்.

“பொய்… நீ பொய் சொல்ற… உன்னை நான் நம்ப மாட்டேன்” என்றவள் மற்ற எல்லோரையும் பார்த்து, 

“மதி என்ன தப்பு செஞ்சா… அவ ஒரு ட்ரான்ஸ்… திருநங்கை… திருநங்கையா பிறந்தது என்ன அவ தப்பா… அது அவ உடலில் ஏற்பட்ட மாற்றம்…அதுக்கு அவ என்ன பண்ண முடியும்…? அவ எப்படி அதுக்குப் பொறுப்பாக முடியும்?” 

”அவ திருநங்கைங்குற ஒரே காரணத்துக்காக அவளைக் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம வீட்டை விட்டு வெளியே துரத்தி இருக்கீங்க… நீங்களாம் மனுஷங்களா?” 

”என் கூட இரண்டு வாரம் மட்டுமே பழுகுன ஒருத்தனோட மரணத்தை இந்த நிமிஷம் வரைக்கும் என்னால மறக்க முடியல… என்னால இன்னும் அந்த இழப்புல இருந்து மீண்டு வர முடியல… நெருக்கமான பழகுன எனக்கே அப்படி இருக்குனா… கூடவே வளர்ந்து வாழ்ந்த ஒரு உறவை வேரோட அறுத்து அப்படியே தூக்கிப் போட்டு இருக்கீங்க.” 

”ஒரே நிமிஷத்தில பத்தொன்பது வருஷம் பெத்து வளர்த்த புள்ளைய அப்படியே நடுத்தெருவில தள்ளிட்டீங்க. எப்பயாச்சும் அவ உயிரோட இருக்காளா செத்தளானு  யோசிச்சி இருக்கீங்களா?” 

”யோசிச்சு இருக்க மாட்டீங்க இப்ப நான் பேசுற வரைக்கும் கூட உங்களுக்கு அவளோட ஞாபகம் கூட வந்திருக்காது.” 

”ஏன்னா உங்களுக்குப் புழுப் பூத்துப் போன உங்க குடும்ப கௌரவம், மானம், லொட்டு லொசுக்குதான் முக்கியம்” என்றவள் திரும்பி வினோவைப் பார்த்து, “ஆமா என்னைப் பார்த்து என்ன சொன்ன நீ… பணக்கார திமிரு பிடிச்சவனா… நீங்க எல்லாம் யாரு… நடுத்தரவர்க்கத்துல ரொம்ப நல்லவங்களா?” 

”நீங்க எல்லாம்  குடும்பம் கௌவரத்துக்காகக் கொலை கூடப் பண்ணுவீங்க… என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்க எல்லாம் மதியைச் செஞ்சது கொலைதான்.. நீங்க வீட்டை விட்டுத் துரத்தன பிறகு அவ வாழுறதுக்காக ஒவ்வொரு நிமிஷமும் செத்துப் பிழைச்சு இருக்கா… பல நேரங்களில் தற்கொலை முடிவுக்குக் கூடப் போயிருக்கா.” 

”ஒரு வேளை அப்படி ஏதாவது செஞ்சு அவ செத்துப் போயிருந்தா கூட  நீங்க எல்லாம் வருத்தப்பட கூட மாட்டீங்க… யூ ஆர் ஆல் கோல்ட் ப்ளடட் மாடரர்ஸ்… இரக்கமற்ற கொலைகாரங்க .”

”கூடப் பிறந்தவனை, பெத்தப் புள்ளைய கொன்ன நீங்க எல்லாம் ஒரு குடும்பம்னு என்னால ஒத்துக்க முடியல… ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட்டா துணையா நிற்குறதுதான் குடும்பம்னா… நீங்க எல்லாம் குடும்பமும் இல்ல… மனுஷங்களும் இல்ல” என்று ஆவேசமாக ரெஜினா பேசிக் கொண்டிருக்கும் போது,

“போதும் நிறுத்துமா… விட்டா ஓவராத்தான் பேசிட்டு இருக்க” என்று கத்திய ஈஸ்வரன், “பெத்த புள்ளையாவே இருந்தாலும் அது அசிங்கம்… அசிங்கத்தை யாராச்சும் வீட்டுக்குள்ள வைச்சுக்க முடியுமா” என்றதும், 

ஜஸ்டின், “சை…  நீ எல்லாம் ஒரு மனுஷனாயா? ஆனந்தோட அப்பான்னு உன்னை எல்லாம் ரொம்ப உயர்வா நினைச்சிட்டு இருந்தேன்” கர்ஜித்தார்.  

அவர் உடனே, “இப்பவும் ஆனந்தனோட அப்பாவா இருக்கிறதுதான் எனக்குப் பெருமை… எந்த அசிங்கத்தோட அப்பவாவும் இருக்க நான் விரும்பல” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியவர், “உங்க பொண்ணு கால ஒடைச்சிட்டதால கூட வைச்சு இருக்கீங்க… இதுவே அப்படி ஒரு புறப்பா இருந்தா பார்த்துட்டு இருந்திருப்பீங்களா… நீங்களும் துரத்திதான் விட்டுருப்பீங்க” என்று ஏளனமாகக் கூற,

“சத்தியமா மாட்டாரு” என்ற குரல் வெளிபுறம் இருந்து வந்தது. எல்லோரும் திரும்பிப் பார்க்க மதி பெண்மையின் அங்கங்களுடன் மாறுப்பட்ட தோற்றத்தில் நின்றிருந்தாள். 

அவளுக்காக ரெஜினா பேசும் போதே வாயிலுக்கு வந்துவிட்டிருந்தாள். அவள் தனக்காகப் பேசியதை எல்லாம் கேட்டு அவள் கண்கள் முழுவதும் நீர் நிரம்பியிருந்தது. 

நேராக உள்ளே வந்த மதி ஈஸ்வரனைப் பார்த்து, “எல்லோரையும்  உங்களை மாதிரி நினைச்சுட்டீங்களா? ஜஸ்டின் சார் ஒன்னு உங்களை மாதிரி கிடையாது… அவர்தான் எனக்குப் புது வாழ்க்கை கொடுத்தாரு… வேலை கொடுத்தாரு… இதோ இப்போ புது உருவம் கொடுத்திருக்காரு… எங்களை மாதிரியானவங்க எத்தனையோ பேருக்கு அவரோட ஆஃபிஸ்ல, ஸ்கூல்ல எல்லாம் வேலைக் கொடுத்து உதவிட்டு இருக்காரு.” 

”ஜஸ்டின் சார் மாதிரி ஒரு அப்பா கிடைக்கலன்னு நான் எத்தனையோ நாள் வேதனைப்பட்டு இருக்கேன், தெரியுமா உங்களுக்கு” என்று சொல்லிவிட்டு விசும்பி விசும்பி அழ, 

“நீயும் என் மகதான் மதி… உன்னையும் நான் அப்படித்தான் பார்க்குறேன்” என்ற ஜஸ்டின் மதியின் தோளைத் தட்டிக் கொடுக்க எல்லோர் முகத்திலும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகள் அலைமோதியது. 

பானுமதி மதியைப் பற்றி ரெஜினா பேச ஆரம்பித்ததுமே உடைந்துவிட்டார். வினோவின் கவலையே அவள் கணவன் பாலாவிற்கு விஷயம் தெரிந்துவிட்டதே என்றுதான். அவனிடம் வீட்டில் இரண்டே பிள்ளைகள்தான் என்று சொல்லி இருந்தார்கள்.

உறவுக்காரர்கள் எல்லோருக்கும் அரசல் புரசலாக மதியைப் பற்றி விஷயம் தெரிந்தாலும் யாருமே அவனைப் பற்றிப் பேசத் தயாராக இல்லை. அதுவும் அவர்கள் மூன்று வருடத்திற்கு முன்பாக வீடு மாறி வந்துவிட்ட பின் மதி என்ற ஒருவன் அவர்கள் குடும்பத்தில் இருந்ததற்கான எந்தவித அடையாளமுமே இல்லாமல் அழித்துவிட்டார்கள்.

இப்போது பாலாவிற்கு இந்த உண்மை தெரிந்துவிட்டதே என்று அவள் கவலை கொண்டிருக்க, 

ஈஸ்வரனோ, “இதுக்கு மேல இங்க நின்னு… நடக்குற அசிங்கத்தை எல்லாம் பார்த்துட்டு என்னால இருக்க முடியாது… எல்லோரும் இப்போ வரீங்களா இல்லையா?” என்று அதிகாரமாகச் சொல்லி  எல்லோரையும் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். 

பானுமதி மட்டும் மதியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார். ஆனந்தனுக்கு அந்த வீட்டில் நிற்க எந்தப் பிடிப்பும் இல்லையென்று தோன்ற அவனும் அவர்களுடனே கிளம்பி வெளியே சென்றான். 

ஜஸ்டின் யாரையும் தடுக்கவில்லை. மகளின் சீற்றத்தைத் தவறென்று அவரால் சொல்ல முடியவில்லை. ஆனால் அவள் வாழ்க்கையைக் குறித்துக் கவலை ஏற்பட்டிருந்தது. 

ஆனந்தன் ஏன் தன்னிடம் உண்மையை மறைக்க வேண்டுமென்று ஆதங்கம் மனதிலிருந்தது. இந்த நிலையில் மதி நேராக ரெஜினாவின் முன் மண்டியிட்டு அவள் கையைப் பிடித்துக் கொண்டு கதறினாள்.

“எங்களை மாதிரியானவங்கள அசிங்கம் அவமானம்னு ஒதுக்குனவங்கதான் அதிகம்… பக்கத்துல நின்னா கூட அசிங்கத்தைப் பார்க்குற மாதிரி பார்த்துட்டு எட்ட போயிடுவாங்க.” 

”ஆனா நீங்களோ எனக்கு வேலைக் கொடுத்துக் கூடவே வைச்சு இருந்தீங்க… ஒரு நாள் கூட என்னை மதிப்புக் குறைவா நடத்துனது இல்ல… ஆனா இன்னைக்கு… அது எல்லாத்துக்கும் ஒரு படி மேல போய் எனக்காக என் இடத்துல நின்னு என் வலியைப் பேசி இருக்கீங்க மேடம்” என்று மதி அவள் மடியில் முகம் புதைத்துக் கொண்டு அழுதாள்.

“என்ன மதி பேசுற… எப்பயாச்சும் உன்னை நான் என்கிட்ட வேலைப் பார்க்குற ஒருத்தியா பார்த்துருக்கேனா…? நீ என் ஃபிரண்டு மதி… உன்னை எதுக்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது” என்று மதியை ரெஜினா  சமாதானப்படுத்திப் பேசினாள். அவள் ஒருவாறு அமைதியானதும், 

“ஆமா… அவங்கதான் உண்மையை மறைச்சிட்டாங்க… நீயாச்சும் உண்மையைச் சொல்லி இருக்கலாம் இல்ல… ஆனந்த் உன் அண்ணன்னு சொல்லி இருக்கலாம் இல்ல” என்று கேட்க அவள் முகம் வெளிறியது.

“ஆமா மதி நீ ஏன் சொல்லல?” என்று ஜஸ்டினும் அதே கேள்வியைக் கேட்க, 

“நீ அப்பவே சொல்லி இருந்தனா… இந்தக் கல்யாணம் வேண்டாம்னு நான் நிறுத்தி இருப்பேனே” என்று ரெஜினா உரைத்தாள். 

பதறிப் போன மதி, “ஐயோ… மேடம் அண்ணா மேல எந்த தப்பும் இல்ல… தப்பெல்லாம் என் பேர்லதான்” என்றாள்.

“சும்மா உன் அண்ணனைக் காப்பாத்தப் பொய் சொல்லி சமாளிக்காத” என்று கூற, 

“சத்தியமா இல்ல மேடம்… அண்ணனை உண்மையைச் சொல்ல வேண்டாம்னு சொன்னதே நான்தான்” என்றாள்.

“என்ன சொல்ற நீ?” என்றவள் கேட்கும் போதுதான் மதி ஏதோ யோசித்தவளாகத் திரும்பிப் பார்த்து,  “ஆமா அண்ணா எங்க?” என, 

“அவனும் அவங்க கூடவே போயிட்டான்” என்று அலட்சியமாகக் கூறினாள் ரெஜினா.

“அண்ணா போயிட்டாங்களா?” என்று தலையைப் பிடித்துக் கொண்டவள்,  “ஒரு நிமிஷம் மேடம்… நான் வந்துடுறேன்” என்று விட்டு அவசரமாக மதி வெளியே ஓடினாள்.

  அவள் வெளியே செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஈஸ்வரன் ஆனந்திடம், “சை என்ன பொண்ணு இவ… இந்தத் திமிரு பிடிச்சவளைக் கட்டுறதுக்குதான் எங்களை எல்லாம் உதாசீனப்படுத்துனியாடா… பாரு… இப்போ உன்னையே அசிங்கப்படுத்திட்டா” என,

“பின்ன காசுக்காகக் கல்யாணம் பண்ணா வேற என்ன பண்ணுவா?” என்று பாலா சமயம் சந்தர்ப்பம் பார்த்து அவனைக் குத்தினான். 

அத்தனை நேரம் நொந்து போய் நின்றிருந்த ஆனந்தன் அப்போதுதான் அவர்களை நிமிர்ந்து பார்த்துப் பேசினான்.

“கார் வாங்கித் தரலனா கல்யாணமே பண்ண மாட்டேன்னு சொன்ன நீயெல்லாம் என்னைப் பத்திப் பேசக் கூடாது” என, 

“அண்ணா என்ன பேசுற?” என்று வினோ எகிறிக் கொண்டு வர, 

“போடி” என்றவன் தன் அப்பாவின் புறம் திரும்பி, 

“நீங்க என்ன சொன்னீங்க… இவள மாதிரி திமிரு பிடிச்சவள கட்டுறதுக்கா எங்களை உதாசீனப்படுத்தினனு கேட்டீங்க இல்ல… ”

”இப்போ சொல்றேன் கேளுங்க… இவளை மாதிரி பொண்ண கட்டுறதுக்கு… உங்களை இல்ல இந்த உலகத்தையே கூட எதிர்த்துக்கலாம்” என்றவன், 

மேலும், ”அவ இப்போ நம்மள எல்லாம் பார்த்துக் கேட்ட ஒவ்வொரு வார்த்தையும் நியாயமான வார்த்தை… கூடப் பிறந்த நான் கூட மதிக்காக நிற்காத போது அவ நின்னுருக்கா… பேசி இருக்கா… நான் அவளைக் கல்யாணம் செஞ்சதுக்காகப் பெருமை படுறேன்” என்று திடமாகக் கூற,

“வெட்கமே இல்லையாடா உனக்கு… அவ இவ்வளவு தூரம் உன்ன அசிங்கப்படுத்துன பிறகு அவள கட்டினதுக்குப் பெருமை படுறேன்னு சொல்ற” என்று கோபப்பட்ட ஈஸ்வரன்,

“எப்படிடா இப்படி மாறி போன நீ” என்று தலையிலடித்து கொண்டார். 

மேலும், “இவன் திருந்த மாட்டான்… இன்னும் அந்தப் பொண்ணுகிட்ட அசிங்கப்பட்டுச் செருப்படி வாங்குனாதான் இவனுக்குப் புத்தி வரும்… நாம இதுக்கு மேல இங்க நின்னா… நமக்குதான் அவமானம்… வாங்க நாம போலாம்” என்று அவர்கள் காரில் ஏறிப் புறப்பட்டுவிட்டனர்.

அவர்கள் சென்ற திசையைப் பார்த்திருந்தவன் மீண்டும் திரும்பி அந்த வீட்டைப் பார்த்தான். ரெஜினா பேசியது எல்லாம் யோசிக்க யோசிக்க உள்ளம் வலித்தது. 

அதற்கு மேலும் அந்த வீட்டில் நிற்க அவனுக்கு மனம் வரவில்லை. அந்தக் கணமே தன் காரில் ஏறி அமர்ந்து கொண்டு அவன் புறப்படத் தயாராக, “அண்ணா… எங்க அண்ணா போற…? உள்ள வா ண்ணா” என்று ஓடி வந்து தடுத்தாள் மதி. 

“மதி ப்ளீஸ் என்னை விட்டுடு… என்னால இதுக்கு மேலயும் அவமானப்பட முடியாது” என்றவன் தன் காரை இயக்க, 

“அண்ணா போகாத அண்ணா… ரெஜினா மேடம் சொன்னா புரிஞ்சுபாங்க… நான் பேசுறேன் ண்ணா… நீ உள்ள வா அண்ணா” என்று மதி மீண்டும் அழைக்க,

“நீ எதுவும் பேசவும் வேண்டாம்... அவ என்னைப் புரிஞ்சிக்கவும் வேண்டாம்… என்னைத் தூக்கிப் போடுறது அவளுக்கு அவ்வளவு சுலபமா இருக்குனா… என்னாலயும் அது முடியும்.”

”இனி அவ முகத்துல கூட முழிக்க மாட்டேன்னு போய் சொல்லிடு” என்று விட்டு தன் காரைக் கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான். 

அவன் சென்ற வேகத்தைப் பார்த்து மிரண்ட மதி, ‘எல்லாம் என்னால… முதலையே நான் உண்மையைச் சொல்லி இருக்கணும்… இப்போ நான் என்ன பண்ணுவேன்?’ என்று தலையிலடித்துக் கொண்டாள். a

Marli malkhan, kothai.suresh and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
Marli malkhankothai.sureshbhavanya lakshmi.nagarajan
Quote

Evvalavu periya unmaiyai maraithuvittu Anandukku kovam vera varudhu 😡😡😡

Quote

Super ma 

You cannot copy content