You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kalyanam@ - Episode 2

Quote

2

 ரெஜினாவின் அறை திறந்திருந்தது. மதி வாயிலில் நின்றபடி, “மேடம்” என்று அழைக்க,

“வா மதி” என்றவள் திரும்பி பார்க்காமல் மும்முரமாக சதுரங்க விளையாட்டில் ஆழ்ந்திருந்தாள்.

கருப்பு வெள்ளை என்று இரண்டு பக்க ஆட்டத்தையும் அவள் ஒருத்தியாகவே ஆடிக் கொண்டிருந்தாள். ரெஜினாவின் முக்கிய பொழுது போக்கில் ஒன்று சதுரங்கம் விளையாடுவது.

ரெஜி விளையாடுவதைப் பார்த்தபடி மதி அவள் பின்னே காத்திருக்க, “ஏன் நிற்குற... உட்காரு மதி” என்றவள் இம்முறையும் திரும்பி பார்க்காமல் ஆட்டத்தின் மீது பார்வையைப் பதித்தபடியே உரைக்க,

மதி அமைதியாகப் பின்னிருந்து இருக்கையில் அமர்ந்தாள்.

ரெஜினா தன் ஆட்டத்தை முடிக்கும் வரை பேசமாட்டாள். வேறு எதைப் பற்றியும் யோசிக்கவும் மாட்டாள்.

பெரும்பாலான நேரங்களில் தனியாகத்தான் விளையாடுவாள். அதேநேரம் அவளுடன் யார் விளையாடினாலும் அதிகபட்சம் பத்து நகர்வில் தோற்கடித்துவிடுவாள்.

மதி அங்கே வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் ரெஜி அவளுக்குக் கொடுத்த முதல் வேலையே சதுரங்கம் விளையாடுவதுதான். ஐந்தே நகர்வு. ரெஜி ஆட்டத்தை வென்றுவிட்டாள்.

அதற்குப் பிறகாக ரெஜி அவளுடன் ஆடிய ஒவ்வொரு ஆட்டத்திலும் எட்டு அல்லது பத்து நகர்வில் ராஜாவைச் சுற்றி வளைத்து ஆட்டத்தை முடித்துவிடுவாள்.

அதிலும் மதிக்கு வியப்பளிக்க கூடிய விஷயம் என்னவென்றால் ரெஜி எப்போது விளையாடினாலும் புது மாதிரியான யுக்திகளைக் கையாள்வாள்.

இதனால் ரெஜியுடன் யார் விளையாடினாலும் பத்து நிமிடத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். ஒரு வகையில் அவள் அதிக நேரம் விளையாடுவது அவளுடன் மட்டும்தான். விளையாட்டில் மட்டும் அல்ல.

 வாழ்க்கையிலும் ரெஜினா பல நேரங்களில் தன்னிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறாள். சில நேரங்களில் தன்னையே தோற்கடித்துக் கொள்ளவும் செய்கிறாள்.

சற்று முன்பு ஜஸ்டின் பயந்ததும் ரெஜினாவின் இந்தத் தனிமை உணர்வைப் பார்த்துதான். ரெஜி அவளுக்கான ஒரு தனி உலகத்தில் சஞ்சரிக்கிறாள்.

அதில் யாருக்கும் அனுமதி இல்லை. அவளது அழுகை, கோபம், வெறுப்பு, சலிப்பு என்று அத்தனை உணர்வுகளையும் அதற்குள் முடக்கி வைத்திருந்தாள். 

ஒரு வகையில் மதியை வேலைக்குச் சேர்த்ததன் காரணமும் கூட ரெஜினாவின் நல்ல துணையாக அவளால் இருக்க முடியுமென்ற காரணத்தால்தான்.

தனிமையும் ஒதுக்கமும் இருவருக்கும் பழக்கமான உணர்வு என்பதால் ஒருவரை ஒருவர் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியுமென்று ஜஸ்டின் நினைத்தார். அவர் நினைத்ததுப் போலவே மதியைத் தனது நல்ல தோழியாக ரெஜி ஏற்றுக் கொண்டாள். மதியுடனான பழக்கத்தால் ரெஜி கொஞ்சம் கொஞ்சமாக தன் தனிமை உலகத்திலிருந்து வெளியே வந்திருந்தாள்.  

தன் வாழ்வின் தோல்விகள் இழப்புகளை மறந்து ஜானைக் காதிலிக்கவும் மணந்து கொள்ளவும் விரும்பினாள். ஆனால் அவளின் விருப்பம் பொய்த்துப் போனது. ஜஸ்டின் சொன்னது போல நிச்சயமாக அது அவளின் உணர்வுகளைக் காயப்படுத்தி இருக்கும்.

அந்த உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மீண்டும் அவள் தனக்குள்ளாகவே முடங்கிப் போவது ஆபத்து என்று மதியின் மூளை எச்சிரிக்கை மணி அடித்தது.

ரெஜியிடம் இது பற்றிப் பேச வேண்டுமென்று மதி நினைத்தாள். ஆனால் ரெஜி தன் ஆட்டத்தை முடிக்கவில்லை. அவளே நினைத்தால் ஒழிய அந்த ஆட்டம் முடியாது. எதிராளியின் மனதிலிருக்கும் யுக்தியைக் கச்சிதமாகத் தெரிந்து கொண்டு விளையாடும் விளையாட்டு சுலபத்தில் முடிவை எட்டாது.

மதி கவலையுடன் அவள் விளையாடுவதைப் பார்த்திருந்தாள். நேரம் கடந்து கொண்டே இருந்தது.

எப்போதும் போல அங்கிருந்த ரெஜினாவின் பலவிதமான புகைப்படங்களின் மீது பார்வையை ஓட்டினாள் மதி.

கூடை பந்து விளையாடும் ரெஜினா, புல்வெளியின் மீது எகிறி குதித்துப் பறப்பது போலக் கையசைக்கும் ரெஜினா, ஜஸ்டின் தலையில் இரு விரல்களால் கொம்பு வைத்தபடி அப்பாவி பெண் போல சிரிக்கும் ரெஜினா, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடல்கள் மலைகளில் செல்ஃபிக்களுடன் நிற்கும் ரெஜினா, இறுதியாக ட்ரக்கிங் உடையில் தன் குழுவுடன் ஒரு புகைப்படமும், கயிற்றைப் பிடித்து ஆபத்தான முறையில் மலை மீது தொங்கிக் கொண்டு தன்னைப் படம் பிடித்துக் கொள்ளும் ரெஜினா என்று சுவரு முழுக்கப் படங்கள்.

அத்தனை படங்களிலும் பாரபட்சம் பார்க்காமல் பளிச்சென்று வெள்ளை நிற பற்கள் ஒளிரும் வகையில் தம் விரிந்த இதழ்களால் அவள் புன்னகைப் பூத்திருந்தாள்.

கூர் நாசி, அடர்த்தியான புருவங்கள், தோள் மீது படர்ந்திருக்கும் கருப்பு நிற சுருள் சுருள் கூந்தலுடன் பார்ப்பவர்களைப் பார்த்த மாத்திரத்தில் கவரும் சாக்லேட் நிற தோலும் பழுப்பு நிற கண்களும் அவளுக்கு ஒரு தனித்துவமான அழகையும் கவர்ச்சியையும் கொடுத்திருந்தது.

 ரெஜினாவின் படங்களைப் பார்த்தபடி மதி யோசனையில் ஆழ்ந்திருக்க,

 “ஐ வொன்” என்ற உற்சாக குரல் அவள் சிந்தனையைக் களைத்தது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து எதிரே இருந்த வெள்ளை  ராஜாவை வீழ்த்திவிட்டாள் ரெஜினா. தோற்றதும் அவள்தான். வென்றதும் அவள்தான்.

ஆனால் அவள் வெற்றியை மட்டுமே கொண்டாடுகிறாள். அதுதான் ரெஜினா ஜஸ்டின். அவள் தன் சக்கர நாற்காலியைத் திருப்பிக் கொண்டு மதியிடம் வந்தாள்.

அவள் முகத்தில் துளி கூட வேதனையோ, ஏமாற்றமோ இல்லை. மாறாக அவள் முகத்தில் படங்களில் இருந்தது போல அதே பளிச்சிடும் புன்னகை ஒளிர்ந்தது.

எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிந்த ஓடை நீராக இருக்கும் ரெஜியின் முகத்தைப் பார்த்தப் பின் ஜானைப் பற்றிய பேச்சை எடுப்பதா, வேண்டாமா என்று மதி குழம்ப, 

“ஆமா மதி... எப்படி போச்சு உங்க பர்த்டே பார்ட்டி” என்று ரெஜி முந்திக் கொண்டு தன் விசாரிப்புகளைத் தொடங்கினாள்.

“ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு... ஆனா என்ன... ஜெயா அவங்க அம்மா கால் பண்ணி விஷ் பண்ணுவாங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தா.... இந்த முறையும் அது நடக்கல.”

”ஒவ்வொரு பர்த்டேவுக்கும் அவங்க அம்மா அவளுக்குப் பிடிச்ச பால் கொழுக்கட்டை செஞ்சு தருவாங்களாம்... அதெல்லாம் சொல்லி ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருந்தா.”

“இப்படி எத்தனை நாளைக்கு வருத்தப்பட்டுட்டு இருக்க போறீங்க... நம்ம உணர்வுகளை மதிக்காதவங்கள நாமளும் மதிக்காம விட்டுடுறதுதான் நல்லது... பெட்டர் அவங்கள பத்தி யோசிக்காம விட்டுட்டா கொஞ்சமாச்சும் நமக்கு அமைதியும் நிம்மதியும் மிஞ்சும்” என்று பேசிக் கொண்டே ரெஜி சதுரங்க காய்களை எல்லாம் கச்சிதமாக அடுக்கி தன் கப்போர்டில் வைக்க,

“நீங்க சொல்றது சரியா இருக்கலாம்... ஆனா சாத்தியமா தெரியல” என்று மதி கூற அவள் புறம் தன் சக்கர நாற்காலியைத் திருப்பிக் கொண்டு வந்த ரெஜினா,

“ஏன் சாத்தியம் இல்லன்னு சொல்ற?” என்று கேட்டாள்.  

“அவங்க நம்ம மேல வைச்ச அன்பு எப்படிப்பட்டதோ தெரியல... ஆனா நாம அவங்க மேல வைச்சிருக்கிறது உண்மையான, உணர்வுபூர்வமான அன்பு... அது அவ்வளவு சீக்கிரத்தில தூக்கிப் போடவோ, இல்ல மறந்துடவோ முடியறது இல்ல.”

ரெஜி உதட்டை சுழித்து, “இதுக்கு பேர் அன்பு எல்லாம் இல்ல மதி... சுயபச்சாதாபம்... அவங்க உங்களை ஒதுக்கிட்டதை நினைச்சு நினைச்சு நீங்க வருத்தப்படுறீங்க... உங்க சுயபச்சாதபத்தோட வெளிப்பாடுதான் இந்த வருத்தம்.”

”ஆனா உங்களை மாதிரி அவங்க வருத்தப்பட மாட்டாங்க... ஏன்னா அவங்கள யாரும் ஒதுக்கல... அவங்க எதையும் இழக்கல... உங்க இடத்துல நின்னு உங்க வலியை அவங்க உணரவோ வருத்தப்படவோ நிச்சயமா அவங்களால முடியாது.”

நமக்காக நாமதான் அழணும்... அழுது முடிச்சு நம்மை நாமே தேத்திக்கவும் செய்யணும்... தட்ஸ் இட்” என்றாள்.

“இதெல்லாம் சொல்றது ஈஸி மேடம்... ஆனா அது சுலபத்துல செய்ய முடியறது இல்ல”  

“பட் இதைத் தவிர வேற ஒன்னும் சொல்யூஷன் நமக்கு இல்ல மதி... கஷ்டமோ ஈஸியோ நம்ம இதைச் செஞ்சித்தான் ஆகணும்... பிகாஸ் நமக்கு நாம வேணும்... மத்தவங்க நம்மள ஒதுக்குனத நினைச்சு நம்ம மேல நாமே சுயபச்சாதாபப்படுறதை விட்டு நம்மை நாம நேசிக்க கத்துக்கணும் மதி.”

”லவ் யுவர்செல்ஃப்... இந்தத் தாராக மந்திரம் நம்ம மாதிரி இருக்கவங்களுக்கான நம்பிக்கை... ஜெயாகிட்ட இதைச் சொல்லு” என்று ரெஜி பேசி முடிக்கும் வரை அமைதி காத்த மதி பின்னர் மெதுவாக,

“ஜானோட நிராகரிப்பையும் இப்படிதான் கடந்து வந்தீங்களா” என்று கேட்டுவிட்டாள். அப்போதும் ரெஜியின் முகத்தில் எந்தவித கலக்கமும் இல்லை.

“ஓ... டேட் டோல்ட் யூ” என்று கேட்டுப் புன்னகைத்தவள்,

“ஜான் சொன்னதுல தப்பு ஒன்னும் இல்ல... அவன் இப்பவும் எனக்கு நல்ல ஃப்ரண்ட்தான் மதி” என்றாள்.  

“அப்ப உங்களுக்கு உண்மையா வருத்தமா இல்லயா?”

“துளி கூட இல்ல” என்றவள் சொன்னதைக் கேட்டு மதி ஆச்சரியமாகப் பார்க்க, ரெஜி தொடர்ந்தாள்.

“நீ இந்த ஒரு வருஷமாதான் என் வாழ்க்கைல இருக்க மதி... ஸோ உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்ல” என்றபடி அவள் எதிரே வந்து தன் சக்கர நாற்காலியை நிறுத்திவிட்டு,

“ஜான் என் பிரபோஸல மறுத்ததை விடவும் பெரிய விஷயமெல்லாம் என் வாழ்க்கைல நடந்திருக்கு மதி…”

”என்னோட பதினைஞ்சாவது வயசுல எங்க மாம் டேடோட டிவோர்ஸ்... என் மாம் லிண்டாவுக்கு ஒருத்தரோட தொடர்பு இருந்துச்சு…”

”மாம் கூட நானும் போலாந்து போயிருந்த போது அவங்க இரண்டு பேரையும் ஒன்னா ஒரே பெட்ல” என்று நிறுத்தி வார்த்தைகளை விழுங்கிக் கொண்டவள்,

“டேட் எவ்வளவோ மாம் கூட இருக்க பிரச்சனையை சார்ட் அவுட் பண்ண ட்ரை பண்ணாரு.”

ஸ்டில் இட் டஸன்ட் வொர்க் அவுட்... டிவோர்ஸ் பண்ணிக்கிட்டாங்க... மாம் என்னை அவங்க கூட போலாந்து வர சொன்னாங்க... ஆனா நான் டேட் கூட இருக்குறதுன்னு டிசைட் பண்ணிட்டேன்.”

”அப்புறம் மாம் அந்த பெர்ஸனை செகன்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டதா கேள்விப்பட்டேன்... டேட் கிட்டயும் யாராச்சும் அவருக்குப் பிடிச்சவங்களா பார்த்து மேரேஜ் பண்ணிக்க சொன்னேன்... ஏன் அவர் தனியா வாழணும்னு... பட் ஹி செட் நோ…”

”அப்பத்துல இருந்து எனக்கு எல்லாமே என் டேட்தான்... என் டேடுக்கு நான்தான்…”

”டேடுக்குப் பிறகு எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் அட்வெஞ்சர்ஸ்... முக்கியமா ட்ரெக்கிங்... சின்னதுல இருந்து பெரிய மலை வரைக்கும் நிறைய ஏறி இருக்கேன்...ராஜீவ்... ஷர்மா... மகின்னு என்னோட ட்ரெக்கிங் க்ரூப் ரொம்ப பெருசு... மொத்தம் இருபது பேர்.”

”இரண்டு மாசத்துக்கு ஒரு தடவ எல்லோரும் சேர்ந்து ப்ளான் போடுவோம்... க்ரூப்பா ட்ரெக்கிங் போயிட்டு வருவோம்... அந்தத் தடவதான் முதல் முறையா உத்திரகாண்ட்ல இருக்க திரௌபதி பீக் ஏறலாம்னு டிசைட் பண்ணி ப்ளான் போட்டு இருந்தோம்…”

”நாம வாழ்க்கைல மறக்கணும் நினைக்குற படுமோசமான ஆக்ஸிடென்டும், மறக்க முடியாத முதல் காதல் அனுபவமும் எனக்கு அங்கதான் உண்டாச்சு, தெரியுமா மதி?” என்றவள் முகத்தில் சொல்லவொண்ணா வேதனை நிரம்பியது.  

ரெஜி மேலும், “அப்பத்தான் எங்க க்ரூப்ல நிக் ஜாயின் பண்ணான்...  அவனுக்கு நிறைய மவுன்டைன்ஸ் ஏறுன அனுபவம் இருந்தது…”

”அந்தப் பயணத்துலதான் எனக்கும் அவனுக்கும் இடையில ஏற்பட்ட பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா நெருக்கமான உறவா மாறுச்சு... நாங்க அன்னைக்குக் காலைல எங்க கேம்ப்ல இருந்து கிளம்பிட்டு இருந்தோம்... நிக்கும் நானும் ஒன்னாதான் ஏறிட்டு இருந்தோம்... ட்ரக்கிங்ல எப்பவுமே ரிஸ்க் இருக்கத்தான் செய்யும்…”

”ஆனா நாங்க போன போது ஏற்பட்ட எதிர்பாராத மோசமான பனிச்சரிவு... அதை யாரும் முன்னமே கணிச்சிருக்க வாய்ப்பு இல்ல... மேலே ஏறுற வரைக்கும் எனக்கு எதுவும் கெட்டதா நடக்க போகுதுன்குற உணர்வு கொஞ்சம் கூட இல்ல…”

”அப்போ மலைல இருந்து ஒரு துண்டு ஐஸ் உருண்டு விழுந்துது”

”எல்லோரும் முதல அதைச் சாதாரணமா எடுத்துக்கிட்டாங்க... நாங்க அதைப் பெருசா எடுத்துக்காம ஏறிட்டே இருந்தோம்.”

”பட் நிக் ஃபீல் பண்ணான்... ஏதோ தப்பா நடக்கப் போறதா என்கிட்ட சொன்னான்... நாம பாதுகாப்பா இருக்கணும்னு அவன் சொல்லிட்டு இருந்த போது சட சடன்னு ஐஸ் கரைஞ்சு உருக ஆரம்பிச்சுது…”

”நாங்க எல்லாம் என்ன நடக்குதுன்னு ரியலைஸ் பண்றதுக்குள்ள  எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு...  திடீர்னு உருவான அந்தப் பனிச்சரிவு எங்களை அடிச்சு கீழே தள்ளிடுச்சு…”

”எங்க கயிறு எல்லாமே சரிய ஆரம்பிச்சிடுச்சு... நடக்குற எதுவுமே கண்ணுக்குத் தெரியல... ஆனா நிக் மலைல வலுவான இடத்துல தன்னோட ஆக்ஸ் வைச்சு அழுத்திட்டு என்னையும் கீழே விழாம ஹோல்ட் பண்ணிக்கிட்டான்…”

”ரொம்ப நேரம் எங்களால தாக்குப் பிடிக்க முடியல... ஆனா நிக் போராடினான்... என்னைப் பிடிச்சிட்டு இருந்த அவனோட பிடி அவ்வளவு டைட்டா இருந்துச்சு…”

”ஆனா மேலே இருந்து உருகிட்டு வந்து பெரிய பனிப்பாறை நிக்கையும் என்னையும் ஒரே நொடில கீழே தள்ளிவிட்டுடுச்சு... நிக்கும் நானும் கீழே உருண்டு விழுந்தோம்.”

”என்ன நடந்ததுன்னு நாங்க உணர்றதுக்குள்ள உருண்டு வந்த பனிப்பாறை எங்களைத் தூரமா தூக்கி வீசிடுச்சு... விழுந்த இடத்துல நிக் எனக்குக் கீழே இருந்தான்... அவன் தலை எல்லாம் ரத்தம்…”

”நிக் அவன் சுயநினைவை இழந்துட்டு இருந்தான்... நிக் நிக்குனு நான் கத்திக் கதறவும் அவன் கண்ணை முழிச்சுப் பார்த்தான்... அவன் கை என் கன்னத்துகிட்ட வந்தது.”

”ரொம்ப சிரமப்பட்டு வாய திறந்து லவ் யூ ரெஜினு சொல்லிட்டு” அதற்கு மேல் பேச முடியாமல் ரெஜி விழிகளை மூடிக் கொண்டாள்.

“மேடம்” என்று மதி அவள் கை மீது கை வைக்க, அவள் இமைகளின் வழியே கண்ணீர் சொட்டியது.

“நிக் சொன்ன கடைசி வார்த்தை அதுதான் மதி” என்றவள் மெல்ல கண்களைத் திறந்து நனைந்த விழிகளுடன் மதியைப் பார்த்து, “உனக்கு தெரியுமா மதி... சாகுற கடைசி நொடி வரைக்கும் நிக் என்னை ஹோல்ட் பண்ணிட்டு இருந்தான்” என்ற போது மதியின் விழிகளும் ஆச்சரியத்தில் விரிந்தன.

ரெஜி தொடர்ந்து அன்று நடந்தவற்றைக் கூறினாள்.

“என் உடம்புல அப்போ எந்தக் காயமும் இருந்த மாதிரி தெரியல... ஆனா எழுந்திருக்க ட்ரை பண்ண போதுதான் என்னோட முதுகுல ஒரு பயங்கரமான வலி உண்டாச்சு…”

”அந்த வலி இருக்கே... ப்ப்ப்ப் பா... அந்த வலிக்கு நான் செத்தே போயிருக்கலாம்னு தோனுச்சு... சுத்திலும் ஐஸ்…”

”அந்த ஐஸ்ல தாங்க முடியாத வலியோட விறைச்சுப் போற அளவுக்குக் குளிர்ல உயிரில்லாத நிக் உடம்புக்குப் பக்கத்தில இரண்டு நாள் நரக வேதனையை அனுபவிச்சேன்... எப்படி நான் என் உயிரைப் பிடிச்சிட்டு இருந்தேனு எனக்கு இப்பவும் தெரியல…”

 ”மீட்புக் குழு எங்களைத் தேடிட்டு வந்த போது எங்க க்ரூப்ல உயிர் பிழைச்சது நான் ஒருத்தி மட்டும்தான்... எங்க குழுவுல நிக் உட்பட அத்தனை பேரும் அப்போ இறந்துட்டாங்க... அதுல இரண்டு பேரோட உடல் கிடைக்கவே இல்ல…”

”என் உடம்புல கூட அப்போ உயிர் மட்டும்தான் மிஞ்சி இருந்தது. கழுத்துக்குக் கீழ இருந்த மொத்த உறுப்புகளும் பாரலைஸாகி எழுந்திருக்க முடியாம ஆறு மாசம் படுத்த படுக்கையாதான் இருந்தேன்... என்னை விட டேட்தான் ரொம்ப உடைஞ்சு போயிட்டாரு.”

 ”ஹாஸ்பிட்டல் ஹாஸ்பிட்டலா அலைஞ்சு திரிஞ்சு எனக்கு ட்ரீட்மென்ட் பார்த்து இப்போ நான் வீல் சேர்ல உட்கார அளவுக்கு இருக்கன்னா அதுக்கு டேட்தான் காரணம்... டேட் மட்டும்தான் காரணம்.”

”என்னோட சந்தோஷம்தான் அவரோட சந்தோஷமும்... ஜானை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோஷமா இருப்பனு அவர் நினைச்சாரு…”

”ஆனா அவரா என்கிட்ட இதைப் பத்திப் பேச தயங்குனதாலதான் நானே ஜானைக் காதலிக்குறதாவும் கல்யாணம் பண்ணிக்குறதாவும் சொன்னேன்.”

”எனக்கும் ஜானை ஒரு நல்ல ஃப்ரண்டா பிடிக்கும்... நான் காலேஜ் படிக்கும் போது ஜான் என்கிட்ட பிரபோஸ் பண்ண போது நான் ஒத்துக்கல... நாம எப்பவும் ஃப்ரண்ட்ஸா இருக்கலாம்னு அவன்கிட்ட சொல்லிட்டேன்... ஜான் அதுக்கு அப்புறம் என்னை எந்த விதத்துலயும் தொல்லை பண்ணல.”

”எனக்கு இப்படியொரு ஆக்ஸிடென்ட் ஆனப் பிறகும் அவன் எனக்கு ஒரு நல்ல நண்பனாதான் இருந்தான்... ஸோ அவன் எனக்கு ஒரு நல்ல பார்டனரா இருப்பான்னு அப்பா நினைச்சதுல தப்பு ஒன்னும் இல்ல... டேட்காகதான் நான் அவன்கிட்ட கேட்டேன்…” 

”ஜான் நோ சொல்லிட்டான்... அது ஒன்னும் என்னைப் பெருசா பாதிக்கவே இல்ல... ஆனா டேட் ரொம்ப நொறுங்கிப் போயிட்டாரு... அவரை எப்படி சமாதானப்படுத்துறதுன்னு எனக்கு தெரியல மதி” என்று வருத்தத்துடன் ரெஜி சொல்லி முடிக்க மதியின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

அவர்களின் அப்பா மகள் உறவைப் பார்த்து அவளுக்கு உண்மையில் பொறாமையாக இருந்தது.

“அங்க ஜாஸ்டின் சார் உங்களைப் பத்தி கவலைப்படுறாரு... நீங்க என்னடானா இங்க அவரைப் பத்தி கவலைப்பட்டுட்டு இருக்கீங்க... உங்க ஃபாதர் டாட்டர் பாண்டிங் பார்த்து எனக்கு அவ்வளவு ஆச்சரியமா இருக்கு ரெஜி மேடம்” என்று மதி வியப்புடன் கூறிய அதே சமயம் அவர்கள் அறைக்கு வெளியே நின்ற ஜஸ்டின் கண்கள் கண்ணீரில் நனைந்திருந்தன. மகளின் ஒவ்வொரு வார்த்தையும் அவர் மனதை நெகிழ்த்தி உருகச் செய்தது. 

shanbagavalli, thavamalar.jagan and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
shanbagavallithavamalar.jaganbhavanya lakshmi.nagarajan
Quote

Indha ud padikkumpodhu migavum kashtamaaga irundhadu. But Regi character wow 🤩 super. Father and daughter bonding paarthu Mathi mattum illai naanum poraamai patteen. My father died when I was 3 years old so still I am missing my father very much. 

Quote

Wow super bonding 

You cannot copy content