You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kalyanam@ - Episode 3

Quote

3

திரௌபதி கா தண்டா – 2. இரட்டைப் பனிச்சிகரங்கள். பனித்துகள்களால் போர்த்தப்பட்ட அந்த வெண்சிகரமும் அதன் மேலே திரண்டிருந்த  வெண்மேகங்களும் ஒன்றோடு ஒன்று கொஞ்சிக் குலாவிக் கலவிக் கொண்டிருப்பது போல பிரமை உண்டானது ரெஜினாவிற்கு.

அந்தச் சிகரத்தின் அடிவாரத்தில் நின்றிருக்கும் ஒவ்வொரு கணமும்  அவளுக்கு உடல் மட்டும் இல்லை உணர்வுகளும் கூட சில்லிட்டு உறைந்து போவதாகத் தோன்றியது. சிந்தனையற்றுச் செயலற்று தன் கண் முன்னே பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் அவ்விரு சிகரங்களைக் கண்டு ஆச்சரியமும் அதிசயமும் கொண்டாள்.

மாவு மாவாகச் சிதறிக் கிடக்கும் அந்த ஐஸ் துகள்களைக் கையிலெடுத்துக் கொண்டு விளையாடும் தங்கள் குழுவினரின் சந்தோஷமும் கொண்டாட்டமும் ரெஜியையும் அப்போது தொற்றிக் கொண்டது.

அவளும் அவர்களுடன் இணைந்து விளையாடினாள்.

மெது மெதுவாக அவர்கள் நடை பயணம் நீண்டு கொண்டே போக, அந்தச் சிகரத்தின் உயரத்தில் ஏற கயிறுகள் வீசப்பட்டன. அதேநேரம் பாதுக்காப்பான முறையில் அவர்கள் ஏறுவதற்கான அத்தனை உபகரணங்களையும் குளிர் அண்டாதபடியான உடைகளையும் அணிந்து கொண்டு மெல்ல தங்கள் அடிகளை உயர உயர வைத்து வரிசையாக முன்னேறினர் அந்த மலையேறும் குழுவினர்.   

குழுவில் அனுபவம் வாய்ந்த ஷர்மா வழிக்காட்டியாக முன்னே சென்று கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னே ஹாசிப் செல்ல, நிக்கும் ரெஜியும் ஒருவருக்கு ஒருவர் கைக் கொடுத்தபடி பின்னே ஏறிக் கொண்டிருந்தனர்.

ஆட்டங்களும் கொண்டாட்டங்களும் குறைந்து பொறுப்புணர்வுடன் தங்கள் பாதைகளில் கண்ணும் கருத்துமாக அவர்கள் ஏறிச் செல்லும் போது ஒரு கெட்டியான ஐஸ் துண்டு சரசரவென்று மேலிருந்து சரிந்தது.

மலையேறும் குழுவினர்கள் ஒருவரை ஒருவர் கலவரத்துடன் பார்த்துக் கொள்ள, மேலே இருந்த ஷர்மா ஒன்றுமில்லை என்று கைக் காட்டினான்.

எல்லோரும் பழையபடி முன்னேற நிக் ரெஜியின் கயிற்றினைப் பிடித்து ஒரு நிமிடம் நிற்க சொன்னான். ஏதோ சரியில்லை என்றான். அவன் அந்த வார்த்தைகளைச் சொல்லி முடிக்கும் போது பனிச்சரிவு உண்டானது.

ஷர்மாவை நிமிர்ந்து பார்க்கும் போது அவன் அந்தப் பனிச்சரிவில் சிக்கி சுருண்டு விழ, எல்லோரும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்த கணத்தில் அந்தப் பனிச்சரிவு காட்டுமிரண்டி போல எல்லோர் மீதும் பாய்ந்து தன் வெறியாட்டத்தைத் தொடங்கியது.

ரெஜி சுதாரிக்கும் முன் நிக்கின் கரம் சுழற்றிப் பிடித்து அவளை விலக்கிக் கொண்டு வந்தது. கயிறுகள் தன் கட்டுப்பாட்டை இழந்து சரிய, அவள் பதறிப் போனாள்.

“ரெஜி ஹோல்ட் மீ டைட்லி” என்ற நிக்கின் குரல் ஒலிக்க, அவனை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள்.

என்ன நிகழ்கிறது என்பதை அவளால் பார்க்கக் கூட முடியவில்லை.

வெண்மை அழகானது. மென்மையானது என்பது எல்லாம் அப்போது பொய்த்துப் போய் அது தன் கோர முகத்தைக் காட்டியது.  அப்போது விஸ்வரூபம் எடுத்து வந்த வெள்ளை நிற அரக்கன் துரத்தித்  துரத்தி அவர்களை வேட்டையாடினான்.

அவள் மீதான நிக்கின் பிடி நழுவ பார்த்த போதும் அவன் தன் பிடியை விடவில்லை. அந்தக் கணம் ரெஜியின் உறக்கம் களைந்துவிட்டது.

மூச்சு வாங்க விழிகளைத் திறக்கும் போது வெளிறிப் போன நிக்கின் உயிரற்ற உடல் அவள் அருகே மிக நெருக்கத்தில் படுத்திருந்தது.

“ஆஅ” என்று கத்தியபடி பதறிக் கொண்டு எழுந்தவள்,  மிரட்சியுடன் மீண்டும் திரும்பி தன் படுக்கையைப் பார்க்கவும் அங்கே யாரும் இல்லை.

அது வெறும் தன் கற்பனை என்று அவளுக்கு உரைத்தது. படபடப்புடன் மூச்சு வாங்கிக் கொண்டே எட்டி மின்விளக்கைப் போட்டுவிட, அந்த அறையில் வெளிச்சம் பரவியது. இருப்பினும் அவள் இதய துடிப்பின் வேகம் அடங்கவில்லை.

அருகே மேஜையிலிருந்த தண்ணீர் ஜக்கைத் தொண்டையில் சரித்து ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் உட்கார்ந்தபடியே கண்களை மூடி பின்னோடு சாய்ந்தாள்.

மீண்டும் நிக்கின் உயிரற்ற உடல் கண் முன்னே வர பதட்டத்துடன் விழிகளைத் திறந்து கொண்டாள். இறந்து இரண்டு நாளான நிக்கின் உயிரற்ற வெளிறிப் போன உடலுடன் தானும் அந்த ஐஸ் துகள்களில் புதையுண்டுவிட போவதாக நம்பிய கணங்கள் எல்லாம் அவள் ஆழ் மன நினைவுகளிலிருந்து வெளியே குதித்தன.

அவ்வளவுதான். தானும் நிக்கும் ஒன்றாகப் புதைய போகிறோம் என்று எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு அப்போது தங்களின் உயிரற்ற உடல்களைக் கூட யாராவது மீட்க வர கூடும் என்று நம்பிக்கை இல்லை.

அவசரமாக அந்த நினைப்புகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள். அவள் யோசிக்க கூட விரும்பாத விஷயங்கள் அதெல்லாம். ஆனால் அவளால் முடியவில்லை. அன்று அங்கே மீட்பு குழு வராமல் இருந்திருக்கலாம்.

தானும் நிக்கும் அப்படியே ஜோடியாகப் புதைந்துப் போயிருக்கலாம்.  பல நூற்றாண்டுகள் கழித்துத் தங்களை யாராவது தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்திருக்கலாம். ஜோடியாகக் கிடைத்த அவர்கள் பிரேதங்களை வைத்து ஏதாவது புதுவிதமான காதல் கதைகளை உருவாக்கி கொண்டிருக்கலாம்.

ரெஜினா தலையை உலுக்கிக் கொண்டாள்.

‘நோ...  நான் இப்படி எல்லாம் யோசிக்கக் கூடாது... ஒரு வேளை நான் செத்துப் போயிருந்தா... டேட் ரொம்ப உடைஞ்சு போயிருப்பாரு... டேடுக்கு யாருமே இல்லாம போயிருக்கும்’ என்று வருந்திய ரெஜினா வலிந்து அந்த விபத்தின் நினைப்புகளை விட்டு வெளியே வந்தாள்.

தன் மீதிருந்த போர்வையைத் தள்ளியவள் மெதுவாக நகர்ந்து படுக்கையின் ஓரமாக வந்தாள். செயலிழந்த தம் கால்கள் இரண்டையும் கைகளால் இடம்பெயர்த்து கீழே தொங்கவிட்டாள்.

அருகே இருந்த சக்கர நாற்காலியைத் தன் புறம் நெருக்கமாக இழுத்துக் கைப்பிடிகளை மடித்துவிட்டாள். பின்னர் தன் கைகளால் அழுத்தி ஊன்றி அதன் மீது கச்சிதமாகத் தாவி அமர்ந்தாள். பின் தன் இரண்டு கால்களையும் நாற்காலியின் பிடிகளில் அவளே தூக்கி வைத்தாள்.

இரண்டு வருட பழக்கம். ஒரளவு யாருடைய உதவியும் இல்லாமல் தனக்கான சின்ன சின்ன வேலைகளை அவளே செய்யவும் பழகிக் கொண்டாள். 

விபத்து நிகழ்ந்து அவளை மீட்டு வந்த முதல் ஆறு மாத காலத்தில் சுயமாக எந்த வேலையும் செய்ய முடியாமல் படுத்த படுக்கையாகக் கிடந்தாள். அவள் உடலின் அத்தனை தேவைகளைச் செய்ததும் கழிவுகளை அகற்றிச் சுத்தம் செய்தததும் செவிலயர்கள்தான்.

தன் சொந்த கைகளைக் கொண்டு உண்ண கூட முடியாத மகாமோசமான நிலை. அதன் பின் முதுகு தண்டில் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சை மூலமாக அவள் கால் தவிர மற்ற பாகங்கள் இயங்கத் தொடங்கின.

கால்களுக்குப் பதிலாக சக்கர நாற்காலிகளில் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தாள். முந்தைய கொடுமைக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது. இருப்பினும் சக்கர நாற்காலி பயன்படுத்திய ஆரம்ப காலகட்டங்களில் கழிவறைக்குச் செல்ல உதவியாளர்களை நாட வேண்டியிருந்தது.

மெல்ல மெல்ல தன்னைத்தானே சக்கர நாற்காலியிலிருந்து படுக்கைக்கும் கழிவறைக்கும் இடமாற்றம் செய்யும் யுக்தியைக் கற்றுக் கொண்டாள்.

இயன்றளவு தன்னால் சுலபமாக அணிய முடிந்த உடைகளாகத் தேர்ந்தெடுத்து உடுத்திக் கொள்ள ஆரம்பித்தாள். ஒவ்வொரு முறை இது போன்ற வேலைகளைச் செய்யும் போதும், முன்பு அவள் த்ரிலிற்காக ஏறிய மலைகளின் உயரங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்றானது. தற்போதைய அவளது ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் முன்பை விடவும் அட்வெஞ்சரஸாக இருந்தன.

 ஏழு மலைகளையும் ஏழு கடல்களையும் தாண்டுவது போல.

தன் சக்கர நாற்காலியின் பொத்தன்களை அழுத்தி அறையின் பின் கதவிடம் வந்து அதனைத் திறந்துவிட்டு முன்னே நகர்ந்தாள்.

அவள் மாடியிலிருந்த போது அதிகம் விரும்பியது அதிலிருந்த விசாலமான பால்கனியைதான். நடக்க முடியாமல் அவளது அறையை ஜஸ்டின் தரைத்தளத்திற்கு மாற்றிய போதே மாடி அறையைப் போல பால்கனிகள் கொண்டவையாகக்  கீழே இருந்த அறையையும் புதுவிதமாக வடிவமைத்தார்.

அந்த பால்கனி கதவைத் திறந்தால் அவள் தினமும் காலை சூரியோதயத்தைப் பார்க்கலாம். கடல்களிலும் மலைகளிலும் இயற்கை அழகுடன் பார்த்து இரசித்த சூரியோதயத்தையும் அஸ்தமனத்தையும் இப்படி அறைக்குள் அடைந்து கொண்டு பார்ப்பது அவளுக்கு உள்ளுர வலித்த போதும் இதுதான் இனி தன் வாழ்வின் நிதர்சனம் என்பதை அவள் ஒரளவு பழகிக் கொண்டாள்.

தன் தந்தையின் அளவிட முடியாத அன்பிற்காக எதையும் ஏற்றுக் கொள்ளவும் அவள் தயாராக இருந்தாள். 

அதனால்தான் அப்பாவிடம் பணிப்புரியும் ஆனந்தனை மணந்து கொள்ள அவள் சம்மதித்தாள். ஜான் பிரச்சனை ஓய்ந்திருந்த சில நாட்களிலேயே ஜஸ்டின் ஆனந்தனைப் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தார்.

மகளுக்கு அவன் ஒரு நல்ல துணையாகவும் இணையாகவும் இருக்க முடியிமென்று அவர் மிக ஆழமாக நம்பியது எதனால் என்று இப்போதும் அவளுக்குப் புரியவில்லை.

அவர்களுக்குச் சொந்தமான கல்லூரியில்தான் ஆனந்தன் இளங்கலை படித்தான். கல்லூரி விழாவில் கலந்து கொண்ட போதுதான் ஜஸ்டின் முதல் முறையாக ஆனந்தனைப் பார்த்தார். அவனுடைய துறுதுறுப்பு, திறமை, புத்திசாலித்தனம் என்று அத்தனையும் ஜஸ்டினைக் கவர்ந்தது. அவன் இளங்கலை முடித்ததும் தன் நிறுவனத்தில் வேலையில் சேர்த்துக் கொண்டார்.

அதேநேரம் ஆனந்தன் தன் முதுகலையைப் படித்து முடிக்க உதவிய ஜஸ்டின் அதன் பின் அவனைத் தன்னுடைய குழுமத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தினார்.

அவருக்குப் பிறகான அவர்கள் நிறுவனத்தில் அத்தனை பொறுப்புகளையும் தற்சமயம் கவனித்துக் கொள்வது ஆனந்தன்தான். அதுவும் ரெஜினா அடிப்பட்டு மருத்துவமனையிலிருந்த சமயங்களில் அவர்களின் நிறுவனத்தின் பொறுப்புகளை எல்லாம் ஆனந்தன்தான் பார்த்துக் கொண்டான்.

அந்தளவு அவன் ஜஸ்டினின் நம்பிக்கைக்குரியவனாக மாறி இருந்தான்.

ரெஜினாவிடம் ஆனந்தனைப் பற்றிப் பேசும் போதெல்லாம் ஜஸ்டின் முகத்தில் உற்சாகம் பொங்கும். 

‘அவனைப் பார்க்கும் போது என்னைச் சின்ன வயசுல பார்த்த மாதிரியே இருக்கு ரெஜி’ என்று ஜஸ்டின் பெருமைப்பட்டுக் கொள்வார்.

ஜஸ்டினுக்கு ஆனந்தன் போன்ற இளமையும் துறுதுறுப்பும் புத்திசாலித்தனமும் கொண்டவனைப் பிடிப்பதில் எந்தவித ஆச்சரியமுமில்லைதான்.

ஆனால் தனக்கு அவனைத் திருமணம் செய்து வைக்கும் அவருடைய யோசனையில்தான் ரெஜினாவிற்குப் பெரிதாக உடன்பாடில்லை. பல வருடங்களான நெருங்கிய நண்பனான ஜானை மணக்க அவள் சம்மதித்தது வேறு.

ஆனால் ஆனந்தன் அவளுக்குச் சுத்தமாகப் பழக்கமில்லாத ஒருவன். அப்பாவுடன் பலமுறை அவனைப் பார்த்திருந்த போதும் அவன் மீது அவளுக்கு எந்தவித உணர்வும் உண்டானதில்லை. நல்லவன், கெட்டவன் போன்று எந்தவிதமான கருத்துக்களும் இருந்ததில்லை.

இருவரும் பழகவோ, பேசவோ செய்தது இல்லை. ஆனால் முந்தைய வருடம் அவள் இதே போல படுக்கையிலிருந்து சக்கர நாற்காலியில் இடம்பெயர்த்துக் கொள்ள முயன்ற போது தரையில் தவறி விழுந்துவிட்டாள்.

அப்போது அவளுடைய கவனிப்பாளரான அனிதாவை அவள் உதவிக்கு அழைத்தாள்.

“அனி... அனி கம் ஹியர்... ஹெல்ப் மீ” என்று அவள் கத்தி அழைத்துப் பார்த்தும் அனிதாவிற்குக் கேட்கவில்லை.

அப்போது ஜஸ்டினைப் பார்க்க வந்திருந்த ஆனந்தன் அவள் அழைப்பு சத்தம் கேட்டுத் தயக்கத்துடன் கதவைத் திறக்க, அவள் கீழே விழுந்திருந்தாள்.

உடனடியாக அறைக்குள் வந்தவன் எதையும் யோசிக்காமல் அவளைக் கைகளில் தூக்கிப் படுக்கையில் அமர வைத்த மறுகணமே அவன் கன்னத்தில் அறைந்துவிட்டாள் ரெஜி. 

அவன் அதிர்ந்து நிமிர, “யாரைக் கேட்டு என் ரூமுக்குள் வந்த நீ…? யாரைக் கேட்டு என்னை நீ தூக்குன?” என்று சீற்றத்துடன் கேட்க, அவன் முகம் குன்றிப் போனது.

“இல்ல மேடம்... நீங்க கீழே விழுந்திருந்தீங்க” என்றவள் விளக்கம் கொடுக்க வர,

“நான் கீழே விழுந்திருந்தனா... நீ என் ஹெல்பரைக் கூப்பிட்டு என்னைத் தூக்கச் சொல்லி இருக்கணும்... அதை விட்டு நீயே தூக்கிடுவியா?” என்றவள் கண்களிலிருந்து கோபத்தைப் பார்த்து,

“சாரி மேடம்” என்று அமைதியாகப் பணிந்தான்.

“ஹெல் வித் யுவர் சாரிஸ்... ஃபர்ஸ்ட் கெட் அவுட் ஆஃப் மை ரூம்” என்றவள் கத்திவிட அவன் அமைதியாக அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

இந்த விஷயம் தெரிந்த ஜஸ்டின் அனிதாவை வேலையை விட்டு நீக்கிவிட்டார். அதேநேரம் ஆனந்தன் செய்தது ஒன்றும் அத்தனை பெரிய தவறில்லை என்றும் அவன் அந்த நேரத்தில் அவளுக்கு உதவவே நினைத்ததாக அவர் வக்காலத்தும் வாங்கினார்.

ஆனால் அவளால் ஏனோ அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் தொட்டுத் தூக்கியதையே அவள் விரும்பாத போது அவனையே வருங்கால கணவனாக யோசித்துப் பார்ப்பதெல்லாம் சாத்தியமே இல்லை.

இது பற்றி ஒரு வாரமாக தந்தையுடன் நிறைய வாக்கு வாதங்களை மேற்கொண்டிருந்தாள். ஆனால் ஜஸ்டின் அவர் முடிவில் உறுதியாக இருந்தார். அதுவும் ஆனந்தன் அவளை திருமணம் செய்ய சம்மதித்துவிட்டதாகச் சொன்ன போது அவருடைய உறுதியும் ஆர்வமும் அதிகமாகிவிட்டது.

அதற்குப் பிறகு அவளால் மறுக்கக் கூட முடியவில்லை. தந்தையின் விருப்பத்தை நிராகரிக்க அவளுக்கு மனம் வரவில்லை. ஆனால் தன் இறுதி முடிவைச் சொல்வதற்கு முன்பாக ஆனந்தனிடம் பேச வேண்டுமென்றாள்.

“கண்டிப்பா ரெஜி” என்றவர் உடனடியாக ஆனந்திடம் பேசிவிட்டு,

“காலையில வரன்னு சொல்லி இருக்கான்மா” என்று உற்சாகமாகக் கூற, அவளுக்கு அத்தனை ஆர்வமும் உற்சாகமும் இல்லை. அவனிடம் போய் தான் என்ன பேசுவது என்று கடுப்பாகத்தான் இருந்தது.

தன் உதவியாளர் கீதாவைத் தன்னுடைய காலை நேர பணிகளுக்கு அவளை உதவிக்கு வைத்துக் கொண்டாள். அவளுக்கு ரொம்பவும் பிடித்த மஞ்சள் நிற குர்தியை அணிந்து கொள்ள கீதா உதவினாள்.

உடைகள் அணிந்து ஒப்பனையும் செய்து கொண்டு தனது முழுத் தோற்றத்தைக் கண்ணாடியில் பார்த்தவளுக்கு ஏனோ திருப்தி உண்டாகவில்லை. மாறாக அவளின் சக்கர நாற்காலிதான் அதிலும் பூதாகரமாகத் தெரிந்தது.   

ரெஜினாவின் முகம் சுருங்கிப் போக அப்போது அங்கே வந்த மதி, “குட் மார்னிங் மேடம்... என்ன இன்னிக்கு மத்த நாளை விட ஸ்பெஷலா தெரியுறீங்க” என்று உற்சாகமாகக் கூறி கொண்டே வர,

“குட் மார்னிங்... மதி” என்று விட்டு தன் சக்கர நாற்காலியை அவள் புறமாகத் திருப்பியவள் மேலும், “இன்னைக்கு நான் ஸ்கூலுக்கு வரல... நீ மட்டும் போயிட்டு வா” என்றாள்.  

“தெரியும் மேடம்... ஜஸ்டின் சார் சொன்னாரு” என்றவள் உதட்டில் விரிந்த புன்னகையைப் பார்த்த ரெஜி,

“ஓ அப்போ... நீயும் இந்த ஆனந்த் விஷயத்துல டேட் கூட கூட்டோ?” என்று புருவத்தைச் சுருக்கிக் கேட்டாள்.

“இல்லவே இல்ல மேடம்... சாராதான் இதைப் பத்திச் சொன்னாரு” என்றாள் பயபக்தியுடன் கூறவும்,

“நம்பிட்டேன்” என்றவள் மேலும் அவளை ஆழ்ந்து பார்த்து,

“சரி... நீ அந்த ஆன்ந்த் பத்தி என்ன நினைக்குற?” என்று கேட்டு வைக்க மதி உற்சாகமாகப் பதில் கூறினாள்.

“உங்களை மாதிரியே செம டேலென்ட்டானவரு மேடம்... உங்களை மாதிரியே செஸ் விளையாடுவாராம்... ஸ்கூல் டேஸ்ல ஏதோ நேஷன்ல் சாம்பியனாம்” என்று அவனை அவள் புகழ்ந்து தள்ள,

“லூசா மதி நீ... ஆன்ந்த் சூப்பரா செஸ் விளையாடுவன்குறதுக்காகப் போய் அவனை நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா…? நாங்க என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கை  பூரா செஸ்ஸா விளையாடிட்டு இருக்கப் போறோம்?” என்று ரெஜி கடுப்புடன் கேட்க மதி கொஞ்சமும் அசரவில்லை.

“நீங்க என்ன விளையாட்டு விளையாடினாலும் அவரு நிச்சயம் உங்களுக்கு டஃப் கொடுப்பாரு மேடம்” என்று மதி அடக்கப்பட்ட புன்னகையுடன் கூற, ரெஜி முறைப்பாகப் பார்த்து,

“மவளே... நீ என் பக்கத்துல வாயேன்” என்று ஓங்கிக் குத்துவது போல சைகை செய்ய, மதி சிரித்தாள். ரெஜியும் அவளை முறைத்துக் கொண்டே சிரிக்க,

மதி சட்டென்று இறங்கி ரெஜியிடம் அமர்ந்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

அவள் முகத்திலிருந்து விளையாட்டுத்தனங்கள் மறைந்திருக்க ரெஜியிடம், “நீங்க ஆனந்த் சார்கிட்ட பேசிப் பார்த்துட்டு முடிவு எடுங்க மேடம்” என்றாள் பொறுமையாக.

ரெஜினா யோசனையுடன் அவளைப் பார்த்து, “நான் டேடோட முடிவுக்கு எதிரா எதுவும் செய்ய மாட்டேன் மதி... அவருக்கு ஆனந்தைப் பிடிச்சிருக்குனும் போது நானும் மறுக்க போறதில்ல... மத்தபடி இது சும்மா ஒரு ஃபார்மலான டாக்தான்” என,

“நீங்க அப்படி யோசிக்காதீங்க மேடம்... நீங்க பேசிப் பாருங்க... உங்களுக்கும் ஆனந்த் சாரை பிடிக்கும்” என்றாள்.

“எனக்கு ஆனந்தைப் பிடிக்குணும்கிறது ஓகே... ஆனா ஆன்ந்துக்கு என்னை மாதிரி நடக்க முடியாத வீல் சேர்ல இருக்கவளை எப்படி பிடிச்சிருக்க முடியும்…? இந்தச் சொத்துக்கு எல்லாம் ஒரே வாரிசு நான்தானு ஓகே சொல்லி இருப்பானோ?” என்றவள் கேட்டுப் புருவத்தை நெறிக்க  மதி அதிர்ச்சியுடன் எழுந்து நின்று கொண்டாள்.

“என்ன மதி ஷாக்கா பார்க்குற... வேற என்ன காரணம் இருக்க முடியும்…? அவன் என்னை கல்யாணம் பண்ணிக்க…? இட்ஸ் சிம்பிளி மணி” என,   

“நீங்களா அப்படி ஒரு முடிவுக்கு வராதீங்க மேடம்...  இந்தக் கேள்வியை அவர்கிட்ட கேட்டு என்ன பதில் சொல்றாருன்னு பாருங்க” என்றாள் மதி.

“கேட்டா உண்மைய சொல்லுவானா…? தியாகம், நன்றி கடன்னு ஏதாவது கதை சொல்லப் போறான்... அந்தக் கதை எல்லாம் வேற நான் கேட்கணும்” என்றவள் கடுப்படித்துக் கொள்ள,

மதி மெல்லிய புன்னகையுடன், “ஈவினிங் வந்ததும் எனக்கும் அந்தக் கதையைச் சொல்லுங்க மேடம்” என்றவள் பள்ளிக்குப் புறப்பட தயாராக, 

“ஸுர்... ஆனா நான் இப்பவே சொல்றேன்... கதை போறிங்காதான் இருக்க போகுது” என்று ஆனந்த் பற்றிய தன் முன் கணிப்பைக் கூறினாள் ரெஜினா. 

 

shanbagavalli, thavamalar.jagan and 2 other users have reacted to this post.
shanbagavallithavamalar.jagankothai.sureshbhavanya lakshmi.nagarajan
Quote

Anand Regikku surprise kuduppana illai shock kuduppana? 

Quote

Super ma 

You cannot copy content