You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kalyanam@ - Episode 7

Quote

7

ரெஜினா பேசியதன் எதிரொலியாக ஆனந்தனின் உறவினர்கள் முகத்தில் அதிருப்தி வெளிப்பட அந்தச் சூழ்நிலையை எப்படி சுமுகமாக சமாளிப்பது என்று ஜஸ்டின் புரியாமல் தவித்துப் போனார்.

அதற்குள் ஆனந்தன் எழுந்து நின்று, “தேங்க்ஸ் அங்கிள் கிளம்புறோம்... மேரேஜ் ஏற்பாடு பத்தின விஷயத்தை எல்லாம் அப்புறமா கூடப் பேசிக்கலாம்” என்று தன் உறவினர்களை அழைத்துக் கொண்டுப் புறப்பட்டான். அவர்கள் யாரையும் அடுத்த வார்த்தை பேசவிடவில்லை.

அந்த நொடி ஜஸ்டினுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால் அப்போதைக்கு எதுவும் பிரச்சனை உண்டாகவில்லை என்று அமைதியடைந்தார். 

ஆனந்தன் உறவினர் வண்டியில் ஏறி வீடு வரும் வரை சலசலத்துக் கொண்டே வந்தனர்.

‘நடக்க முடியாட்டியும் அந்தப் பொண்ணு எவ்வளவு திமிரா பேசுது’

‘எல்லாம் பணக்கார திமிரு... அதான் அப்படி பெரியவங்கள எடுத்தெறிஞ்சு பேசுது’

‘நான் கூட பார்த்ததும் ஐயோ பாவம்னு நினைச்சுட்டேன்... இந்த மாதிரி திமிருத்தனமா பேசுற பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஒத்துவரமாட்டா அண்ணி... பேசாம இந்தச் சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிடுங்க’

‘நாங்க வேண்டாம்னு சொல்லிட்டா அவன் கேட்டுடுவானா? இந்தப் பொண்ணைத்தான் கட்டுவேன்னு பிடிவாதமா இருக்கான்... எல்லாம் என் தலவிதி’

‘அது சரிதான்... இந்தக் காலத்துக்குப் புள்ளைங்க இப்படிதான் இருக்காங்க... பெரியவங்கள மதிக்குறதே இல்ல... அப்புறம் கஷ்டப்படும் போது நம்ம சொன்ன நல்லது புரிய வரும்’

வாய் வலிக்கும் வரை புலம்பித் தீர்த்து விட்டு அவர்கள் எல்லாம் களைந்து செல்லும் வரை ஆனந்தன் அமைதியாக இருந்தான். ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. இவர்களிடம் எல்லாம் பேசி எதுவும் ஆகாது என்று அவனுக்குத் தெரியும்.

ஆனால் வினோ கிளம்பும் போது, “நாங்களும் கிளம்புறோம் மா” என்று வாசலுக்குச் சென்று கணவனையும் மகனையும் முன்னே அனுப்பிவிட்டு தன் அம்மாவிடம், “நல்லா மரியாதை கொடுத்தாங்க பொண்ணு வீட்டுல... முக்கியமா அந்தப் பொண்ணு... இப்பவே இப்படினா கல்யாணத்துக்கு அப்புறம் உங்களை எல்லாம் அந்தப் பொண்ணு மதிக்காவா போகுது?” என்றாள் தூண்டிவிடும் விதமாக.

 அதுவும் அறைக்குள் அமர்ந்து யார் பேச்சையும் கண்டும் காணாமல் அலட்சியமாக ரூபிக்ஸ் க்யூபைத் திருப்பி கொண்டிருந்த ஆனந்தன் காதில் விழுவது போல சத்தமாகக் கூறினாள்.

அந்த நொடியே அவன் திருப்பிக் கொண்டிருந்த ரூபிக்ஸ் படுவேகத்துடன் பறந்து வந்து முகப்பறையில் விழுந்தது. 

எல்லோரும் அது வந்து விழுந்த வேகத்தைப் பார்த்துப் பதறும் போதே அவன் எழுந்து வெளியே வந்து, “இத பாரு வினோ... உன் கல்யாணத்தை உன் விருப்பப்படி எந்தக் குறையும் இல்லாம ஒரு அண்ணனா முன்ன நின்னு நான் நடத்திருக்கேன்.”

”எனக்கு தங்கச்சியா நீயும் அதே மாதிரி நடத்துக்கணும்... நான் என் கல்யாணத்துக்கு உன்னைக் காசு, பணம் எல்லாம் செலவு பண்ணச் சொல்லல... எதுவும் குழப்பம் பண்ணாம இருந்தாலே போதும்.” என்றவன் மேலும் தன் அம்மா அப்பாவிடம், “அதேதான் உங்களுக்கும்” என்று அழுத்தமாக எச்சிரித்துவிட்டு தன் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டான். அதற்கு பிறகு அவர்கள் யாராலும் திருமண விஷயத்தில் எதுவும் பேச முடியவில்லை.

அவர்கள் பேசுவதற்கான வாய்ப்பை ஆனந்தனும் தரவில்லை. அதேநேரம் தன் உறவினர்கள் பேசியதற்காக ஜஸ்டினிடம் மன்னிப்பு கேட்க, அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“சொந்தக்காரங்கனாலே அப்படித்தான்... அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல... ஆனா ரெஜினா பேசுனதுல உங்க வீட்டுல பிரச்சனை இல்லையே... அப்புறம் கல்யாணத்துல” என்றவர் தயக்கத்துடன் கேட்க,

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல சார்” என்று விட்டு,

“எனக்குத் தெரிஞ்சு ரெஜினாதான் கோபமா இருப்பாங்கனு நினைக்குறேன்” என,

“அவ கோபமா இருந்தா இந்தக் கல்யாணம் வேண்டாம்னு அங்கேயே எல்லோர் முன்னாடியும் சொல்லி இருப்பா... ஆனா அப்படி எதுவும் சொல்லலையே” என்றார்.

அவனுக்கும் அது ஆச்சரியம்தான். அதேநேரம் அவள் அந்தச் சூழ்நிலையைத் திறமையாகக் கையாண்ட விதமும் ஒரே நொடியில் அத்தனை பேரின் வாயடைத்த விதமும் அவனைப் பெரிதுமாகக் கவர்ந்தது. முன்பு அவனுக்குப் பிடிக்காத அந்தத் திமிர்த்தனம் இப்போது ரொம்பவும் பிடித்திருந்தது.

நடந்ததற்கு மன்னிப்பு கேட்டு ஒரு குறுந்தகவலை அவளுக்கு அனுப்பி இருந்தான். ப்ளூ டிக் வந்ததே ஒழிய அவள் பதில் எதுவும் எழுதவில்லை.

இது விஷயமாக அவள் முன்னே சென்று பேச அவனுக்குத் தயக்கமாக இருந்தது. அதேநேரம் அவளிடம் தான் பேசுவதன் மூலமாக அது ஏதாவது சண்டையாக உருவெடுத்து இந்தத் திருமணம் தடைப்பட்டுவிடக் கூடாது என்று அவளிடம் பேசும் எண்ணத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டான்.

திருமணத்திற்காக நாள் குறிக்கப்பட்டது. ஆனந்தனின் பெற்றோர்கள் திருமணத்திற்கு ஒப்புகொண்டது போலக் காட்டிக் கொண்டாலும் அவர்களால் முடிந்த உபத்திரங்களையும் குழப்பங்களையும் செய்து கொண்டுதான் இருந்தார்கள்.

மிக முக்கியமாக மாப்பிளை வீட்டார் என்ற ஆளுமையை எடுத்துக் கொள்வது. இந்தத் திருமணத்தை எளிமையாக நடத்தச் சொல்லி ரெஜினா கேட்டுக் கொண்ட போதும் ஆனந்தன் பெற்றோர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை.

குறைந்தபட்சம் சொந்த பந்தங்கள் என்று கணக்கிட்டு ஒரு மூநூறு பேரையாவது அழைக்க வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள். மேலும் அவர்களின் சடங்கு சம்பிராதயபடி திருமணம் நடத்தப்பட வேண்டுமென்றும் கண்டிப்புடன் தெரிவித்தார்கள். 

ஜஸ்டினால் ஆனந்தன் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை மறுக்க முடியவில்லை. ஆதலால் பிரமாண்டமான திருமண மண்டபம் எடுத்து அவர்கள் வழக்கப்படியே காலையில் திருமணம் என்றும் இரவு ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கள் வியாபார நண்பர்களுக்கு விருந்து மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளும் நடத்தலாம் என்று முடிவுக்கு வந்தார்.

ரெஜினாவிற்கு ஆடம்பரமான திருமணத்தில் உடன்பாடில்லாவிட்டாலும் தன் தந்தையின் விருப்பத்திற்காகச் சம்மதித்தாள்.

அலங்காரம் தொடங்கி அழைப்பிதழ்கள் வரை அத்தனையிலும் ஆனந்தன் மற்றும் அவன் பெற்றோர்களைக் கேட்டு முடிவு செய்தார் ஜஸ்டின்.

திருமணத்திற்கு இரண்டு வாரங்களே இருந்த நிலையில் தன்னுடைய பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் ஊழியர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் அழைத்து அழைப்பிதழ்கள் வழங்கினாள் ரெஜினா.

அவள் ஒருவாறு அழைப்பிதழ்கள் வழங்கி முடித்துத் தன்னிடமிருந்து பெயர் பட்டியலைச் சரி பார்த்து கொண்டிருக்கும் போது மதி, அறைக்கதவைத் தட்டி உள்ளே வர அனுமதி கேட்டாள்.

“வா மதி... இன்னைக்கு அனிதா மிஸ் லீவா…? அவங்கள தவிர எல்லோருக்கும் கொடுத்துட்டோம்னு நினைக்கிறேன்” என்று கூற,

“கொடுத்துட்டீங்க மேடம்” என்றாள்.

“நீ எதுக்கும் லிஸ்ட்டை செக் பண்ணு... யாரும் மிஸ் ஆகலையே மதி” என்றதும் மதி அந்தப் பட்டியலை வாங்கி சரி பார்த்துக் கொண்டே,

“உங்களைப் பார்க்க வெளியே ஒருத்தர் வெயிட் பண்றாரு மேடம்” என்றாள்.

“யாரு மதி... யாராச்சும் பேரன்ட்ஸா”

“இல்ல மேடம்... உங்க ஃபியான்ஸி” என்றதும் அவள் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து, “ஆனந்தா?” என்று கேட்க,

“நீங்க எல்லோருக்கும் இன்விட்டேஷன் கொடுத்து முடிச்சதும் அவர் வந்ததைப் பத்தி உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ண சொன்னாரு.” என அவள் யோசனையுடன் நெற்றியைத் தேய்த்துவிட்டு கொண்டே,

“சரி கூப்பிடு” என்றாள்.

மதி வெளியே சென்ற சில நொடிகளில் ஆனந்த் கைகளில்  பூங்கொத்துடனும் முகமெல்லாம் புன்னகையுடனும் வந்து நிற்க அவள் கண்கள் அகல விரிந்தன.

“ஃப்ளவர்ஸ் ஃபார் யூ” என்றவன் அதனை நீட்ட,

“இது ஸ்கூல்... இங்கே போய் ஃப்ளவர்ஸ் எல்லாம்” என்றவள் சங்கடத்துடன் அவனை நோக்க,

“நம்ம மேரேஜ் பத்தி பேச ஆரம்பிச்ச பிறகான ஃபர்ஸ்ட் மீட்டிங் ஒரு மாதிரி ஸ்டிராங்க் டிஸ்கஷனா போயிடுச்சு... அடுத்த மீட்டிங் சொந்தகாரங்களுக்கு இடையில் மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியதா போச்சு... இந்த மீட்டிங்காச்சும் கொஞ்சம் பெட்டரா இருக்கலாம்னு” என்றவன் பேசவும்,

“அதுக்கு நீங்க வீட்டுக்கு வந்திருக்கலாமே ஆனந்த்... ஸ்கூலுக்கு வந்து இந்தப் பூவெல்லாம் கொடுத்து... சாரி... எனக்கு எம்பாரிஸ்ஸிங்கா இருக்கு” என்று அவள் கூற,

“இங்க ஏன் நான் வந்தேங்குறதுக்கு ரீஸன் இருக்கு ரெஜினா.... அதை நான் சொல்றேன்... ஆனா அதுக்கு முன்னாடி இந்த ஃப்ளவர்ஸ வாங்கிக்கலாம்தானே” என்றான்.

“ஓகே” என்று கை நீட்டி அந்தப் பூவைப் பெற்றுக் கொண்டு, “தேங்க்ஸ்” என்றவள் அதிலிருந்து வித் லவ் ஆனந்த் என்ற வார்த்தைகளைப் படித்துவிட்டுப் புன்னகைத்தாள். பின் அந்தப் பூங்கொத்தைத் தன் மேஜை மீது ஓரமாக வைத்துவிட்டு,  

“சாரி... நிற்க வைச்சே பேசிட்டு இருக்கேன்... உட்காருங்க” என்றாள்.

“தேங்க்ஸ்” என்றவன் அமர்ந்து கொள்ள,

“ஏதாச்சும் குடிக்கிறீங்களா? காபி, டீ, கூல் ட்ரிங்க்ஸ்...” என்றவள் கேட்க,

“குடிக்கலாம்... பட் இங்க இல்ல... வெளியே போய்” என்றதும் அவள் யோசனையுடன்,

“வெளியவா?” என்றாள்.

“ஜஸ்டின் சார் ஒரு முக்கியமான இடத்துக்கு உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாரு... கிளம்புவோமா?” என்றவன் கேட்க,

“கூட்டிட்டு வரச் சொன்னாரா... எங்க?” என்று கேட்டாள்.

“அது ஸர்ப்ரைஸாம்... உடனே வரச் சொன்னாரு... போலாமா?” என்றவன் எழுந்து நிற்க, 

அவள், “ஓ... அப்படியா... என்கிட்ட எதுவும் சொல்லல... நான் எதுக்கும் டாடுக்கு கால் பண்ணிப் பேசிட்டு வரேன்” என்றாள்.

“நான் என் கார்கிட்ட வெயிட் பண்றேன்... பேசிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு சென்றான். 

அவள் தன் செல்பேசி எடுத்து அழைத்து தன் தந்தையின் குரல் கேட்ட மறுகணம், “டேட்... என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல…? எதுக்கு ஆனந்தை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டீங்க... வந்து எங்கயோ கிளம்பணும்னு கூப்பிடுறாரு... எங்க? என்ன விஷயம்?” என்று அவள் படபடவென்று பொரிய அவர் நிதானமாகப் பேசினார்.

“ரிலாக்ஸ் ரெஜி... நீ ஆனந்த் கூடக் கிளம்பி வா... நான் எல்லாம் சொல்றேன்” என்று விட்டு அவள் அடுத்த வார்த்தை பேசுவதற்குள் அவர் அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

 “டேட்” என்று கடுப்பாக மேஜை மீது குத்தியவள்,  

மதியை உள்ளே அழைத்து, “ஆனந்த் கூட நான் இப்போ போகணும். டேட் எங்கேயோ வரச் சொல்றாரு” என,

“அதுக்கு ஏன் மேடம் டென்ஷன் ஆகுறீங்க... போயிட்டு வாங்க” என்றாள்.

“போயிட்டு.... வாங்களா.... என்ன விளையாடுறியா மதி? நீயும் என் கூட வா”

“அதெப்படி மேடம்... கல்யாணம் பண்ணிக்கப் போற நீங்க ஏதாச்சும் பெர்ஸ்னலா பேசுவீங்க... நான் உங்க கூட வந்தா நல்லா இருக்காது”

“மதி உன்னைக் கொன்னுடுவேன்... நீ வரலனா யார் என்னை வீல் சேர்ல இருந்து கார்ல தூக்கி உட்கார வைப்பா... யார் இறக்கி விடுவா... அதெல்லாம் வேலைக்கு ஆகாது... நீ வரலனா நான் எங்கயும் போகல”

மதி புன்னகைத்து, “என்ன மேடம் பேசுறீங்க…? ஆனந்த் சாரை நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க... இதெல்லாம் இனிமே அவர்தானே செய்ய போறாரு.” என,

“கல்யாணத்துக்கு அப்புறங்குறது வேற... ஆனா இப்போ.... ஆ... காட்...  டேட் ஏன் இப்படி எல்லாம் பண்றாரு... நீ வரலைனா நான் டேடுக்கு ஃபோன் பண்ணி எங்கயும் வரலன்னு சொல்லிடுவேன்” என்றவள் கடுகடுப்புடன் பேச,

“ஐயய்யோ... அப்படி எல்லாம் சொல்லாதீங்க மேடம்.... நானும் வரேன்” என்று மதி உடன் வர ஒத்துக் கொள்ளவும்தான் ரெஜினா கிளம்ப முடிவெடுத்து வர, ஆனந்த் அவன் கார் மீது சாய்ந்தபடி காத்திருந்தான்.

மதி ரெஜினாவை ஓட்டுநர் அருகே இருந்த இருக்கையில் அமர்வதற்கு உதவினாள். அதன் பின் ஆனந்தன் அவளது சக்கர நாற்காலியை டிக்கியில் மடித்து வைத்துவிட்டு, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தாள்.

மதி அப்போது ரெஜினாவிடம் இறங்கி, “நீங்க முன்னாடி போங்க மேடம்... நான் பின்னாடி பைக்ல உங்களை பாலோ பண்ணிட்டு வரேன்” என்று சொல்ல,

“உன்னை கொன்னுடுவேன்... ஒழுங்கா பின்னாடி சீட்ல உட்காரு” என்று ரெஜினா கோபமாக பல்லைக் கடித்தாள்

“ஓகே ஓகே மேடம்” என்று பயபக்தியுடன் சம்மதித்து அவள் அமர்ந்துவிட அவர்கள் சம்பாஷணையைக் கேட்டு ஆனந்த் புன்னகையுடன் காரை இயக்கினான்.

கார் கிளம்பியதும், “எங்க போறோம்?” என்று அவள் ஆனந்திடம் வினவ,

“லொகேஷன் அனுப்பி இருக்காரு... மத்தபடி எனக்கும் எங்க எதுக்குன்னு எதுவும் தெரியாது.” என்றான். அதன் பிறகு அவர்களுக்குள் எந்த உரையாடலும் நிகழவில்லை.

மூவரும் அமைதியாக வர, ஆனந்த் மதியை முன்னிருந்து கண்ணாடியில் பார்த்தான். அவள் ஏதோ செய்கையில் உரைத்தாள். அதன் பிறகு மீண்டும் செல்பேசியில் இருந்த கூகுள் மேப் காட்டிய லொகேஷனைக் கவனித்தபடி காரை அதன் பாதைகளில் இயக்கினான் ஆனந்தன்.

சென்னைப் போக்குவரத்து நெரிசல்கள், சிக்னல்கள் அனைத்தையும் தாண்டி அவ்விடத்திற்கு அவர்கள் சென்று சேர முக்கால் மணிநேரமாகி இருந்தது.

“வந்துட்டோம்னு நினைக்கிறேன்” என்று ஆனந்த் குழப்பத்துடன் தன் செல்பேசிக் காட்டும் இடத்தைச் சரிபார்க்க,

“இங்க பக்கத்துல எங்க கெஸ்ட் ஹவுஸ் இருக்கு... அங்க போறோமா?” என்றாள்.

“ஓ அங்கதான் வரச் சொல்லி இருப்பாரோ” என்றவன் கேட்க அவள் வெளியே பார்த்து முதலில் சந்தேகமாக யோசித்தவள், “ஆ அதோ... வொயிட் அன் ப்ளூ... அந்த ஹவுஸ்” என்று கைக் காட்டினாள்.

ரெஜினாவிற்கு ரொம்பவும் பழக்கப்பட்ட இடமாக இருந்தாலும் அந்த பங்களா முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட்ட வித்தியாசமான தோற்றத்தில் இருந்தது.

அவன் காரை அந்தப் பங்களாவின் வாசலில் நிறுத்த காவலாளி அவர்களைப் பார்த்ததும் கதவைத் திறந்துவிட்டார். காரை ஓட்டி வந்து அந்தப் பங்களாவின் முன்னே நிறுத்திவிட்டு இறங்கிய ஆனந்த் அவளது சக்கர நாற்காலியை டிக்கியிலிருந்து எடுத்து அதனைப் பிரித்து நிறுத்தினான்.

ரெஜினா அதில் அமர்வதற்கு மதி உதவி செய்தாள்.

நவீன கட்டமைப்புடன் புது வண்ணம் பூசியிருந்த அந்தப் பங்களாவை நிமிர்ந்து பார்த்த ரெஜினாவின் மனம் வேதனையில் புழுங்கியது.

அவளது இளமை காலங்களின் சின்னஞ்சிறு அழகான நினைவுகளைச் சேகரித்து வைத்திருக்கும் அப்பங்களாவில் அவள் காலடி தடங்கள் பதியாத இடமே இல்லை.

ஆனால் அதே இடத்திற்கு இப்போது நடக்க முடியாமல்  சக்கர நாற்காலியில் வந்திருப்பதை எண்ணும் போது அவளுக்கு வேதனை தாங்கவில்லை. நெஞ்சம் விம்மியது. தன் கட்டுப்பாட்டை மீறி எல்லோர் முன்னிலையிலும் கதறி அழுதுவிடுவோமோ என்று பயமாக இருந்தது.

தன் உணவுர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க அவள் என்னதான் போராடினாலும் அவள் கண்களிலிருந்து நீர் வழிந்துவிட்டது.

shanbagavalli, Marli malkhan and 2 other users have reacted to this post.
shanbagavalliMarli malkhankothai.sureshbhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content