You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kalyanam@ - Episode 9

Quote

9

மணமேடையில் ரெஜினாவும் ஆனந்தனும் அமர்வதற்கான உயரமான இருக்கைகள் வைக்கப்பட்டன. முன்பே ஆனந்தன் திருமணச்சடங்குகளை மேற்கொள்ள வந்த புரோகிதர்களிடம் ரெஜினாவால் நடக்க முடியாது என்பதால் சடங்குகளை எல்லாம் மிக எளிமையாகவும் சுருக்கமாகவும் வைத்துக் கொள்ள சொல்லி இருந்தான்.

அதேநேரம் தன் பெற்றோரிடம் தேவை இல்லாத எந்தச் சடங்கையும் இழுத்துவிடக் கூடாது என்றும் கண்டிப்புடன் அறிவுறுத்தி இருந்தான். ஆதலால் அவர்களும் முடிந்தளவு அடக்கி வாசித்தனர். இருப்பினும் உறவினர்களிடம் இருந்து சில அரசல் புரசலான அவதூறுகள் அதிருப்திகள் எல்லாம் எழாமல் இல்லை. ஆனால் அதை எல்லாம் அவன் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

நலங்கு, புடவைக் கொடுப்பது போன்ற அத்தனை சடங்குகளும் ரெஜினாவிற்கு சிரமம் கொடுக்காத வகையில் என்று மணமகள் அறையிலேயே வைத்து முடிக்கப்பட்டுவிட்டது.

திருமணத்திற்கு பிரத்யேகமாக அலங்காரம் செய்யும் பெண்கள் மூவர் ரெஜினாவிற்கான மணமகள் ஒப்பனைகளைச் செய்ய வந்திருந்தார்கள். ஒப்பனைகளுக்கு யாரும் தொந்தரவு செய்ய கூடாது என்று அறையில் யாரையும் அனுமதிக்கவும் இல்லை.

இந்த நிலையில் அந்தப் பெண்கள் ரெஜினாவிடம் அவள் அணிந்திருந்த பளபளக்கும் தங்கநிறப் பட்டுப் புடவை நிறத்திற்குப் பொருத்தமான பல வகையான காதணிகள் ஆரங்கள் போன்றவற்றைக் காட்டி அவளிடமே எதை அணிவது எது சரியாக இருக்கும் என்று கருத்துக் கேட்டனர். எல்லாமே நன்றாக இருப்பது போல தோன்றியதால் அவளுக்கு முடிவு எடுப்பது சிரமமாக இருந்தது.

எதைச் சொல்வது எதை விடுவது என்று புரியவில்லை.

ரெஜினாவிற்கு அந்த நொடி மதியின் நினைவுதன் வந்தது. அவளுக்கு அலங்காரம் செய்து கொள்வதில் அலாதியான விருப்பம்.

“மேடம் இந்த கலர் உங்களுக்கு சூட் ஆகும்... இந்த இயர் ரிங் செமையா இருக்கும்... இதைப் போட்டுக்கோங்க” என்று எங்கே ரெஜினா  புறப்பட்டாலும் மதி அவள் உடை மற்றும் ஒப்பனைகளில் ஆலோசனைகள் தெரிவிப்பாள். அது மிகக் கச்சிதமாக இருக்கும்.

ஆனால் மதியால் இன்று அவளுடன் இருக்க முடியவில்லை. மதியின் அறுவை சிகிச்சையின் தேதியும் திருமண தேதியும் ஒரே நாளில் வந்துவிட்டது. தேதியை மாற்றிக் கொள்வது பற்றிப் பேசினாலும் ஏனோ மதியின் மனம் அதை ஏற்கவில்லை என்பது புரிந்தது.

இது போன்ற விழாக்களில் பங்கேற்க அவள் விரும்பாமல் ஒரு வகையில் இப்படியொரு இக்கட்டான நிலையை அவளே உருவாக்கிக் கொண்டாள் என்று ரெஜினாவிற்குப் புரியாமல் இல்லை.

அதேநேரம் ஆணுடலைப் பெண்ணாக மாற்றும் இந்த அறுவை சிகிச்சைகள் அவளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாயந்தது என்பதையும் உணர்ந்த ரெஜினா,

“சரி உன் இஷ்டம் மதி... ஆனா நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்... நீ ஒன்னும் கவலைப்படாதே... ஆப்ரேஷன் நல்லபடியா முடியும்... உனக்கு என்ன ஹெல்ப் தேவைனாலும் என்னை இல்ல டேடை  கான்டெக்ட் பண்ணு... நீ மூணு மாசம் முழுசா ரெஸ்ட் எடுத்துட்டு உன்னோட ட்ரீட்மென்ட் எல்லாம் முடிச்சிட்டு வா... உன்னுடைய புதுவிதமான தோற்றத்தைப் பார்க்க நான் ஆர்வமா இருக்கேன். ”ஆல் தி பெஸ்ட்” என்று இரண்டு நாட்கள் முன்பு கண்கள் கலங்க வழியனுப்பி வைக்க, 

மதியும் கண்ணீருடன், “உங்களுக்கும் ஆல் தி பெஸ்ட் மேடம்” என்று விடைபெற்றாள்.

அந்த நொடி மதியின் அறுவைச் சிகிச்சை நல்லபடியாக முடிய வேண்டுமென்று எண்ணி ரெஜினாவிற்கு கவலை உண்டானது.

அவர்கள் உடலே அவர்களுக்கு மிகப் பெரிய சத்ரூவாக செயல்படுவதும் விரும்பியும் விரும்பாமலும் அதனைத் தினமும் சுமந்து கொண்டு வாழ்வதும் எவ்வளவு பெரிய சாபக்கேடு.

உடல் வேறு மனம் வேறாக இருக்கும் அந்த மனிதர்களின் வலிகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. அதனை அனுபவிப்பவர்களால் மட்டுமே அந்த வலியின் ஆழத்தை உணர முடியும்.

 இதெல்லாம் எண்ணியவள் மதிக்காக வருத்தமும் பட்டாள். அதேநேரம் சந்தோஷமும் கொண்டாள். இன்றிலிருந்து தனக்குப் பொருந்தவே பொருந்தாதக் கூட்டுக்குள் இருந்து அவள் வெளியே வந்து பரந்து விரிந்த வான் நோக்கி சுதந்திரமாகப் பறக்கப் போகிறாள். தன் சிறகுகளை விரிக்கப் போகிறாள்.

 ரெஜினா மதியைப் பற்றி யோசித்திருக்கும் போது, “மேடம் இதுல எந்த செட் போடுறது” என்று மீண்டும் ஒப்பனை செய்யும் பெண்கள் அவளிடம் கேட்க அவளுக்கு எரிச்சல் வந்தது.

“ஏதாவது ஒன்ன போடுங்க.. உங்களுக்குத் தெரியாதா?” என்று விட்டு திரும்பும் போது,  

“ரெடியாயிட்டீங்களா... வரச் சொன்னாங்க” என்று அழைக்க வந்தாள் வினோ. அவளை முதலில் எங்கேயோ பார்த்ததுப் போல தோன்றினாலும் பின்னர் ஆனந்தனின் தங்கை என்று நினைவு வந்தது.

“ஒரு நிமிஷம்” என்று அவளை அழைத்தவள்,

“இந்த நெக்லஸ்ல எதைப் போட்டா நல்லா இருக்கும்…? எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு” என்று கேட்டு வைக்க அவளை ஒரு மாதிரி அலட்சிய பார்வை பார்த்தாள் வினோ.

அவளைப் பொறுத்துவரை ரெஜினா என்பவள் மிகவும் திமிர் பிடித்த மரியாதை தெரியாத பெண் என்பதுதான்.

அந்த நெக்லஸ் அனைத்துமே மிகவும் விலையுயர்ந்ததாக தெரிய,  இவள் வேண்டுமென்றே தன்னை அழைத்து அவளின் பணக்காரத் திமிரைக் காட்டிக் கொள்கிறாள் என்றே தோன்ற,

“உங்களை மாதிரி ஹை க்ளேஸுக்குத் தெரியாதது என்ன எங்களை மாதிரி மிடில் கிளேஸுக்குத் தெரிய போகுது” என்று இளக்கார பார்வையுடன் கூறிவிட்டு நொடித்துக் கொண்டு அவள் அறை வாசலுக்கு வர அங்கே ஆனந்தன் நின்றிருந்தான். அவளுக்குப் பக்கென்று ஆகிவிட்டது.

அவளை அவன் முறைத்துப் பார்க்க, “இல்ல ரெடியாயிட்டாங்களானு கேட்க வந்தேன்” என்று பம்மினாள்.

“நீ கேட்க வந்ததும் தெரியும்... நீ என்ன பேசுனனும் தெரியும்” என்று கடுகடுத்தவன், “போடி” என்று துரத்தி விட்டு அறைக் கதவைத் தட்ட அந்த ஒப்பனை பெண்கள் திரும்பி வாசலைப் பார்த்தார்கள்.

“உள்ளே வரலாம் இல்ல” என்று அவன் குரல் கேட்கவும் ரெஜினா அவசரமாகத் திரும்பி, “ஆனந்த்” என்று விழிகளை விரிக்க,

“என்ன அடையாளம் தெரியாத மாதிரி உன்னை மாத்திட்டாங்க” என்று கிண்டல் செய்ய ரெஜினாவின் முகம் சிறுத்துப் போனது. அவள் உடனே அந்த ஒப்பனை பெண்களை திரும்பிப் பார்த்து முறைக்க,

“சார் என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க... நாங்க நல்லாத்தான் மேக் அப் போட்டிருக்கோம்” என்று அவனைக் கலவரத்துடன் பார்த்தனர்.

“ஷி இஸ் நேச்சுரல் பியூட்டி... அதுவும் அவளோட ஸ்கின் கலர்தான் அவளோட அழகோட சிறப்பு... நீங்க அதையே மாத்தி வைச்சு இருக்கீங்க” என்று கேட்க அவள் கண்ணாடியில் பார்த்தாள்.

அவன் சொன்னது போல அவள் இப்போது அதிக சிவப்பாகத் தெரிந்தாள்.

“இல்ல சார் ஃபோட்டோக்கு” என்றவர்கள் ஏதோ சொல்ல வர,

“ஃபோட்டோக்கும் ரெஜினா கலர் நல்லாத்தான் இருக்கும்... மேக் அப்பைத் துடைச்சிட்டு அவ ஒரிஜினல் கலர்ல இருக்க மாதிரி சிம்பிளா மேக் அப் போடுங்க போதும்” என்று அவன் கட்டளையாகக் கூற அந்தப் பெண்கள் திருதிருவென்று விழிக்க ரெஜினா முறைப்புடன்,

“இது போடுறதுக்கே எவ்வளவு நேரமாச்சு தெரியுமா... திரும்பி முதல இருந்துனா என்னால முடியாது” என்றாள்.

“போடத்தான் லேட்டாகும்... களைக்க லேட்டாகுது... நீயே சொல்லு உனக்கு இது பிடிச்சிருக்கா?” என்று கேட்க அவள் அவனை ஆச்சரியமாக பார்த்தாள். அவன் அவளுடைய மனசாட்சி போலப் பேசிக் கொண்டிருந்தான்.

உண்மையில் அவளுக்கும் இதெல்லாம் பிடிக்கவில்லை. ஆனால் ஒப்பனை என்ற பெயரிலான இது போன்ற போலி முகங்களைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். அதுவும் சமீப காலமாக திருமணங்களின் அடையாளங்களாகவும் கௌரவமாகவும் மாறிவிட்டது.

இருப்பினும் அவள் யோசனையுடன், “இப்போ மேக் அப் எல்லாம் களைச்சு... வேண்டாம் ஆனந்த்... லேட்டாகும்”  என்று அமைதியாகக் கூற,

“யாருக்கு லேட்டாகும்... மாப்பிளை நானே இங்க இருக்கேன்...  அவசரமா நீ மட்டும் மணமேடைக்கு போய் என்ன பண்ணப் போற?” என்று கிண்டலாகச் சொன்னவனை அவள் முறைப்பாகப் பார்க்க, அவன் பதிலுக்கு ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

அவன் கிளம்புவதற்கு முன்பாக அந்த ஒப்பனை பெண்களைப் பார்த்து அங்கிருந்த பல வகையான நகைகளில் ஒரு பெட்டியை எடுத்துக் கொடுத்து, “இந்த செட் நல்லா இருக்கும்... இதை ரெஜினாவுக்குப் போட்டுவிடுங்க” என்று விட்டுச் சென்றான். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அப்போது அந்தப் பெண்கள் அவள் முகத்தைச் சாய்த்து அந்த ஒப்பனைகளைத் துடைத்தபடி,

“உங்களோடது லவ் மேரஜா மேடம்?” என்று கேட்க, ஏன் அப்படி கேட்டார்கள் என்று அவர்களை அவள் வியப்புடன் ஏறிட்டாள்.

“இல்ல மேடம்... சார் உங்ககிட்ட பேசிட்டுப் போனதைப் பார்த்த போது அப்படி தோனுச்சு” என, அவள் மௌனமாக மறுத்துத் தலையசைத்தாள்.

அவளுடைய நினைவுகள் அன்று அவன் முத்தமிட்ட நாளை நோக்கி நகர்ந்தது. அவன் முத்தமிட்ட போது தான் நிக் பெயரைச் சொன்னது எவ்வளவு பெரிய அபத்தம் என்று நினைத்து நினைத்துக் குமுறினாள்.

குற்றவுணர்வில் கூனிக் குறுகிப் போனாள். அவனிடம் பேசிச் சமாதானம் செய்ய எண்ணி அவன் பேசிக்கு அழைத்த போதும் அதனை ஏற்காமல் அவளது குற்றவுணர்வை அதிகப்படுத்தியவன் இப்போது எதுவுமே நடக்காதது போலப் பேசிச் சிரித்துவிட்டுப் போனது அவளுக்குக் கோபத்தைத்தான் வரவழைத்தது.

இவன் உண்மையில் நடந்ததை மறந்துவிட்டானா இல்லை கல்யாணத்திற்காக இப்படி போலி முகம் காட்டுகிறானா? என்று யோசித்தாள்.

அதேநேரம் பணத்திற்காக தன்னைத் திருமணம் செய்பவனிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். அவனுக்குத் தேவை பணமும் ஆடம்பரமான வாழ்க்கையும். அது அவனுக்கு தன்னைத் திருமணம் செய்தால் மட்டுமே கிடைக்கும் எனும் பட்சத்தில் அவன் வேறு என்ன செய்வான். 

எதார்த்தம் இதுதான் எனப் புரிந்தாலும் மனம் வலித்தது. ஏதோ ஒரு ஓரத்தில் அவன் நேசம் தனக்கானதாக இருக்க கூடாதா என்று அவள் மனம் ஏங்கியது. ஏக்கத்தின் வெளிப்பாடாக கண்களின் ஓரம் நீர் கசிய ஒப்பனை செய்து கொண்டிருந்தவள்,

“சாரி மேடம்... கண்ல பட்டிருச்சா?” என்று அக்கறையுடன் கேட்டு அவள் கண்ணீரை லாவகாமாகத் துடைத்துவிட்டாள்.

அரைமணி நேரத்தில் மீண்டும் அவர்கள் தங்கள் ஒப்பனையை முடித்துவிட்டனர்.

“இப்போ எப்படி இருக்கு மேடம்?” என்று அவளிடம் கேட்க கண்ணாடியில் தன்னைப் பார்த்தவளுக்குப் பூரண திருப்தி உண்டானது. அதேநேரம் அவன் தேர்வு செய்த நகைகள் அவள் உடைகளுக்கு அலங்காரத்திற்கும் பாந்தமாக பொருந்தியிருந்ததைப் பார்த்து வியப்பானது.  

அந்தப் பெண்கள் உடனே, “சாருக்கு ஃபோன் பண்ணுங்க மேடம்... அவரும் பார்த்துட்டா” என்று கேட்கும் போது,

“எதுக்கு... அதெல்லாம் வேண்டாம்” என்று ரெஜினா சொல்லும் போதே, அவன் கதவைத் தட்டி உள்ளே வந்தான்.

‘இவன் என்ன மாயாவி மாதிரி நினைச்ச உடனே வந்து நிற்குறான்’ என்று அவள் யோசித்திருக்கும் போதே அவன் கண்கள் அவளை அப்படியே விழுங்குவது போலப் பார்த்தன.

“சார் இப்போ ஓகேவா சார்?” என்று அந்தப் பெண்கள் கேட்க அவன் பதில் பேசவில்லை. மாறாக தன் மூன்று விரல்களைக் காட்டி அவன் செய்த செய்கையில் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது என்பதை சொல்லாமல் சொன்னான்.

அவனுடைய செய்கையிலும் பார்வையிலும் ஒப்பனைகளைத் தாண்டி ரெஜினாவின் முகம் நாணத்துடன் சிவந்தது. அதனை இரசனையுடன் பார்த்த  ஆனந்த் அந்தப் பெண்களிடம், “நீங்க போங்க” என்றான்.

அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு பின் அந்த அறையை விட்டுச் செல்லவும், “நாம போலாமா ரெஜி” என, அவள் அதிர்ந்தாள்.

“எங்க?”

“நம்ம கல்யாணத்துக்குதான்” என்றவன் சொலல் அவன் கூப்பிட்ட விதத்திலேயே அவளுக்குப் புரிந்துவிட்டது.

“இல்ல நான் வீல் சேர்ல வர்றேன்” என,

“நீ மண்டபத்துக்குள்ள வரும் போது பார்க்கலயா... மணமேடைக்குப் போகணும்னா ஸ்டெப்ஸ்ல ஏறணும்” என்றான். அவள் வரும் போது அதை எல்லாம் கவனிக்கவே இல்லை.

அவள் கடுப்புடன், “மண்டபம் புக் பண்ணும் போது அதெல்லாம் கூடப் பார்க்க மாட்டீங்களா நீங்க?” என்று கேட்க,

“அதெல்லாம் நானும் சாரும் நிறைய பார்த்தோம்... ஆனா பார்த்த எல்லாம் இடத்துலயும் ஸ்டெப்ஸ் இருந்துச்சு ரெஜினா... மத்த மண்டபத்தை கம்பேர் பண்ணும் போது இந்த மண்டபம் ஓரளவுக்கு பரவாயில்ல... மணமேடைக்கு மட்டும்தான் ஸ்டெப்ஸ் இருக்கு” என்றவன் கூறிய சமாதானங்கள் ஒன்றும் அவள் மூளைக்கு ஏறவில்லை.

அவள் தலையைப் பிடித்தபடி அமர்ந்து கொள்ள, “ரெஜி போலாம் லேட்டாகுது” என்றான்.

“நான் வரல” என்றவள் மெல்லிய குரலில் சொல்ல,

“அப்போ இங்க வைச்சே தாலி கட்டிடட்டுமா?” என்றவன் கேட்ட நொடி அவள் கடுப்புடன் நிமிர,

“சாரி... வேற என்ன ஆப்ஷன் இருக்கு... நம்மகிட்ட” என்றான்.

“டேட் எங்க?”

“அவர் வெளியே இருக்காரு... நான்தான் உன்னை கூட்டிட்டு வரேன்னு சொன்னேன்” என அவள் மீண்டும் முறைத்து, “இதுவும் உங்களோட ரிவஞ்சா மிஸ்டர் ஆனந்த்?” என்று கேட்க,

“வெல்... இருக்கலாம்” என்றவன் புன்னகையைப் பார்த்து அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது. “யூ” என்று அவசரத்திற்கு அருகே இருந்த ஹேர் ஸ்ப்ரே பாட்டிலைத் தூக்கி வீச,

“ஏய் வேணா” என்று குனிந்துவிட்டான்.

அது ஓரமாக சென்று விழ, “நல்ல வேளை தப்பிச்சேன்” என்றவன் மேலும், “கல்யாணத்துக்கு அப்புறம் பண்ண வேண்டியதெல்லாம் இப்பவே பண்ணா எப்படி?” என்று கேட்க,

“ஏன் என் ஃபோனை எடுக்கல?” என்று சீறலாகக் கேட்டாள்.

“அதெல்லாம் பேசுற நேரமா ரெஜி இது... இப்போ கல்யாணம்தான் முக்கியம்... யாராச்சும் நம்மல இங்க தேடி வர்றதுக்குள்ள நம்மளே போயிடுவோம்” என்றான்.

அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள, “போலாமா?” என்று கேட்க அவள் மௌனமாக இருந்தாள். அவளுக்கும் அப்போது வேறு வழி இல்லை.

“அடிக்க மாட்ட இல்ல” என்று கேட்டுக் கொண்டே நெருங்கி வர அவனை நிமிர்ந்து பார்த்து முறைக்கவும் அவன் அவளைத் தன் கைகளில் தாங்கிக் கொண்டான்.

அவனை நேராகப் பார்த்தவள், “இந்தக் கல்யாணத்துல உன்னோட மோட்டிவ் பணம் மட்டும்தான் இல்ல ஆனந்த்” என்று கேட்க,

“ஆமாம்” என்றதும் அவள் முகம் வாடிப் போனது.

 அவன் புன்னகைத்து, “ஆனா என் டெஸ்டினேஷன் எதுவா இருந்தாலும் என் ஜர்னி உன் கூடத்தான்” என்றான்.

அவள் ஆச்சரியத்துடன் நிமிர, “இந்த நிமிஷத்துல இருந்து நம்ம பாதையும் நம்ம பயணமும் ஒன்னு... வாழ்க்கை பூரா நம்ம பயணம் இனிமே இப்படித்தான் இருக்கப் போகுது” என்றவன் மேலும், 

“இனிமே என் கால்கள்தான் உனக்கும் கால்கள்” என்று சொல்லி முடிக்கும் போது அவள் நெகிழ்ந்துவிட, அவன் கரங்கள் அவளைப் பத்திரமாக கொண்டு வந்து மணமேடையில் சேர்த்திருந்தன.

அவன் அவளைத் தாங்கிப் பிடித்திருந்த நொடிகளில் அத்தனை பாதுக்காப்பாகவும் அரவணைப்பாகவும் உணர்ந்தவளுக்கு இயல்பாகவே நிக்கின் நினைவு வந்தது. ஆனால் இப்போது ஆனந்தை அவள் நிக்காக பார்க்கவில்லை. அவளின் நிக்கை ஆனந்தனிடம் பார்த்தாள். மனதார அவனை நேசிக்க தொடங்கினாள்.  

shanbagavalli, kothai.suresh and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
shanbagavallikothai.sureshbhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content