You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kannadi Thundugal - Episode 20

Quote

20

ஒரு தவறை ஆண் செய்யும் போது சிறியதாகவும் அதுவே பெண் செய்யும் போது பெரியதாகவும் பார்க்கும் சமநிலையற்றச் சிந்தனை கொண்ட சமுதாயத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இன்றும் ஆணின் தவறுகளையும் பெண்ணின் தவறுகளையும் வெவ்வேறு அளவுகோல் வைத்துதான் நம் சமுதாயத்தில் பார்க்கின்றனர்.

தங்கத்தின் வீட்டிலிருந்து கோபமாக வெளியேறிய மகனை சண்முகம் தடுத்து நிறுத்தி, “வண்டில ஏறு” என, அவன் அப்படியே சிலையாக நின்றான். 

 “இப்போ வண்டில ஏறப் போறியா இல்லையா?” என்றவர் அதிகாரமாகச் சொல்ல அவன் அதன் பின் அமைதியாக ஏறிவிட்டான்.

அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த தீபா, “நீ போய் குளிச்சுட்டுக் கிளம்பி வா தங்கம்... மாமா வீட்டுக்குப் போலாம்” என,

“இல்ல க்கா நான் வரல... நீங்க போங்க” என்ற தங்கம் தரையில் தலைசாய்த்துக் கொண்டு ஒடுங்கிவிட்டாள்.

“தங்கம் என்னாச்சு?” என்று தீபிகா அவள் அருகில் வந்து அமர,

“என்னால முடியல க்கா... ஏற்கனவே மனசும் உடம்பும் இரணமா கிடக்கு... அங்கே வந்தா... அந்த இரணத்துல இன்னும் உப்பு தடவிதான்  பார்ப்பாங்க... என்னை விட்டுடுங்க க்கா... சாகறதுக்குக் கூட இப்போ என் உடம்புல தெம்பு இல்ல... அறுத்துப் போட்ட மாதிரி உடம்பெல்லாம் வலிக்குது... இத்தன நேரம் எப்படியோ சமாளிச்சிட்டு இருந்திட்டேன்... இனிமே முடியாது” என்றவளுக்குச் சற்று முன்பு வரை கிருபா தன் வீட்டில் படுத்திருந்ததை ஊர்காரர்கள் பார்த்துவிட்டால் என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்ற பயத்திலேயே உடல் வலி எல்லாம் மறத்துப் போய்விட்டது.

ஆனால் இப்போது உண்மையான வலியை வேதனையை அவள் உள்ளுர உணர்கிறாள். கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக, பெண்ணாக ஏன் ஜனித்தோம் என்று மனதாலும் உடலாலும் கூனிக் குறுகித் தன் கால்கள் இரண்டையும் பிணைத்துக் கொண்டாள். வலி உயிர் போனது

அவள் முனகலையும் அழுகையையும் கண்ட தீபிகாவிற்கும் அழுகை வந்துவிட்டது. அத்தனை நேரம் இருந்த கோபத்திலும் ஆற்றாமையிலும் தங்கத்தின் உடல் நிலையை அவள் கவனிக்கவில்லை.

அப்போதுதான் காயங்களும் கீறல்களுமாக இருந்த அவளின் முதுகுப்புறத்தையும் கைகளில் இரத்தம் உறைந்த சிவந்த தடங்களையும்  கண்டாள்.

‘என்ன மாதிரி பிறப்போ...? ஆம்பளையா புறந்துட்டா என்ன வேணா செய்யலாம்குற ஆங்காரம்!’ அந்த நொடி கிருபாவை வாயிற்குள் திட்டிவிட்டு,

“சரி நீ கொஞ்ச நேரம் படுத்துக்கோ... நான் உனக்குச் சுடு தண்ணி வைச்சு ஒத்தடம் கொடுக்கிறேன்” என,

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் க்கா... பிறப்பில இருந்தே வலியைப் பொறுத்துப் பழகிக்கிட்டவதான்... கொஞ்ச நேரத்துல இதுவும் சரியா போகும்” என்றவள் சொல்ல தீபிகாவின் கண்களில் கண்ணீர் நிறைந்து தளும்பியது.

“என்னை விட்டுட்டு... உங்க வாழ்க்கையைப் போய் பாருங்க” என்றவள் மேலும் சொல்ல,

“அப்படி எல்லாம் என்னால உன்னை விட்டுட்டுப் போக முடியாது தங்கம்...” என்றவள் தீர்க்கமாக உரைத்தாள்.

“நீங்க இங்க இருக்குறதால மட்டும் என் வலி சரியாயிடுமா...? இல்ல என் வாழ்க்கைதான் சரியாயிடுமா...? யார் வலியையும் யாரும் இங்க வாங்கிக்க முடியாதுக்கா... அவங்கங்க வலியை அவங்கவங்கதான் அனுபவிக்கணும்... அதே போல அவங்கவங்க வாழ்க்கையையும் அவங்கவங்கதான் வாழ்ந்தாகணும்... உங்க வாழ்க்கையை நீங்க பாருங்க... என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன்... எங்க போனாலும் என் புழைப்பு ஓடப் போகுது” என்றவள் விரக்தியாகப் பேச,  

“நீ எதுக்கு தங்கம் எங்கயோ போகணும்... அவன்தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறன்னு சொல்லி இருக்கான் இல்ல... பண்ணிக்கட்டும்... எந்த வீட்டுல நீயும் உங்க அம்மாவும் இத்தனை நாளா வேலைகாரியா இருந்தீங்களோ அந்த வீட்டுல இப்போ நீ எஜமானியா இரு... உன்னை...  உன் குடும்பத்தையே வேலைகாரியா நடத்திட்டு இருந்த மாமா குடும்பத்துக்கும் அதான் தண்டனையும் கூட” என்றவள் தீர்க்கமாக உரைக்க தங்கம் அலட்சியமாகப் புன்னகைத்து,

“கனவுல கூட இப்படி எல்லாம் நடக்காது... அதுவும் இல்லாம மாமா என் மேல இருக்க ஆசைல ஒன்னும் என்னைக் கட்டிக்கிறேன்னு சொல்லல... உங்க மேல இருக்கக் கோபத்துலதான் என்னைச் சீரழிச்சாறு... ஆசைப்பட்டாலும் கோபப்பட்டாலும் அவர் உங்களைதான் க்கா நினைச்சிட்டு இருக்காரு... எப்படி பார்த்தாலும் அவர் மனசுல நீங்கதான் இருக்கீங்க”

“என்ன உளறிட்டு இருக்க? உன் முன்னாடிதானே என்னைக் கழுத்தைப் பிடிச்சு நெறிச்சான்... போறதுக்கு முன்னடி உன்னைக் காணா பிணமா ஆக்கிறவன்னு மிரட்டிட்டுப் போயிருக்கான்”

“நீங்க அவர் கூட வாழ மாட்டன்னு சொன்ன கோபத்துலதான் அவர் அப்படி நடந்துக்கிட்டாரு”

“அது எனக்குத் தெரியும்... ஆனா நான் அவன் கூட வாழறதா இல்ல... நாங்க இரண்டு பேரும் எந்த ஜென்மத்திலயும் ஒத்துப் போய் ஒன்னா வாழவே முடியாது... ஆனா உன் கதை அப்படி இல்ல தங்கம்... நீ ஒரு வேளை அவனைப் புரிஞ்சிக்கிட்டு வாழலாம்... அவனும் கூட உன்னை சந்தோஷமா வைச்சுக்கலாம்” என்றவள் பேசும் போதே விழியோரம் ஒதுங்கிய நீரை மறைத்துக் கொண்டாள்.

“அப்போ கெடுத்தவனையே கட்டிக்கோன்னு சொல்றீங்க” தங்கம் படுத்தபடி தன் பார்வையை நிமர்த்திக் கேட்க,

“கேஸ் கொடுக்கலாம்... வான்னு சொன்னா நீதான் வரமாட்டேன்னுட்ட... என்னையும் கொடுக்க விடாம என் மானம் போயிடும்னு அழற... அப்போ வேற என்ன ஆப்ஷன் இருக்கு நம்மகிட்ட...”

”எனக்கும் இந்த முடிவுல முழுசா உடன்பாடு இல்லைதான்... ஆனா பிராக்டிக்கலா இந்தச் சூழ்நிலையை எப்படி நமக்கு சாதகமா மாத்திக்கிறதுதான் நம்ம யோசிக்கணும்.”

”எங்கேயோ போய் அடிப்பட்டு மிதிப்பட்டு வாழறதுக்கு ஊருக்குள் பதிவியும் பேரும் இருக்குற கிருபா மாதிரியான ஒருத்தனைக் கட்டிக்கிட்டு செட்டிலாகிட்டுப் போ.. அவன் கூடவே வாழ்ந்து தினம் தினம் அவன் தப்பை நீ ஞாபகப்படுத்திக்கிட்டே இரு... அவன் எனக்கு அதைதான் பண்ணான்” என்றவள் தங்கத்தின் கையைப் பிடித்துக் கொண்டு, 

“இதுக்கு மேல யோசிக்க ஒன்னும் இல்ல தங்கம்... உன் வலி எனக்குப் புரியுது... ஆனா இதை விட மோசமான வலியை நான் அனுபவிச்சிருக்கேன்... நான் காதலிச்சு கட்டின என் முதல் புருஷன் ஆறு மாசக் கர்ப்பிணியா இருந்த என்னைக் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளினான்.”

”உள்ள இருந்த என் குழந்தை சிதைஞ்சு இரத்தமா வழிஞ்சுது... அந்த வலியோடு வேதனையோடும் தூக்கிட்டுப் போக ஆளில்லாம எத்தனை மணிநேரம் கிடந்தேன்னு எனக்கே தெரியாது தங்கம்... அந்த வலி வேதனை எல்லாம் கடந்துதான் நான் இன்னைக்கு இங்க நிற்குறேன்...”

”இன்னைக்கு நடந்த எல்லாமும் கூட எனக்கு வலிக்குதுதான்... ஆனா இப்போ எனக்கு ஒரளவு தாங்கிக்குற தெம்பும் தைரியமும் இருக்கு” என்றவள் பேசியதைக் கேட்ட தங்கம் எழுந்து அவளை அணைத்துக் கொண்டாள்.

தீபிகாவும் அவளை அணைத்துப் பிடித்தபடி, “உன் வலி எல்லாம் தாங்கிட்டு நீ வந்துதான் ஆகணும் தங்கம்... உன் வாழ்க்கைக்காக” என்று சொன்னப் பிறகு தங்கம் மறுக்கவில்லை. குளித்து முடித்து அவளுடன் புறப்பட்டாள்.

இருவரும் மாமா வீட்டை அடைய அங்கே வாசலில் சில கட்சி சம்பந்தப்பட்ட ஆட்கள் இருந்தனர்.

“ஊர் தலைவர் கிருபாகரன் இருக்காருதானே?” என்று விசாரிக்க,

“யாருங்க நீங்க?” என்று அந்த கார் ஓட்டுனர் பதிலுக்குக் கேட்டார்.  

“இல்ல நான் ஒரு யூட்யூபர்... இளம் வயசு தலைவரா சார் செஞ்ச விஷயமெல்லாம் தெரிய வந்தது... அதான் அவரை நேர்காணல் பண்ண முடியுமான்னு” என்றவன் விவரத்தைக் கூற,

“உள்ளேதான் இருக்காரு... இன்னும் கொஞ்ச நேரத்துல ஐயாவே வருவாரு... பார்த்துப் பேசிக்கோங்க” என்று முடித்தான்.

அப்போது தங்கத்தை அழைத்துக் கொண்டு தீபிகா உள்ளே வர,  

“வணக்கம் மா” என்று அந்த ஓட்டுனர் கும்பிடு போட,

“யாரு இவங்க?” என்று அந்த யூட்யூபர் கேட்கவும்,

“பிரசினடெட் ஐயா பெஞ்சாதி” என்றான்.  

அவர்கள் பேசியதைக் கேட்டும் கேட்காமல் நடந்த தீபிகாவின் உதடுகள் அலட்சியமாக நெளிந்தன. ‘ஹ்ம்ம் பிரஸிடென்ட் பொண்டாட்டி’

அதன் பின் தங்கமும் தீபிகாவும் வீட்டிற்குள் நுழையும் போதே அவர்களைக் கண்ட சங்கரியின் முகம் கோபமாக மாறியது.

“இந்த வீட்டுல ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன்னு ரோஷமா போயிட்டு... இப்போ எதுக்குடி வர்ற? போடி வெளியே” என்று தீபிகாவிடம் எகிறிய அதேசமயம்,

“ஆமா நீ எதுக்குடி இவ கூட சேர்ந்து வர்ற?” என்று தங்கத்தையும் ஒரு சேர முறைத்தார். அவருக்கு இன்னும் விஷயம் தெரியவில்லை என்பது புரிந்த தீபிகா,  

“கொஞ்சம் முக்கியமா பேசணும் மாமி” என்றாள்.

“நீ ஒன்னும் முக்கியமா பேசிக் கிழிக்கத் தேவை இல்ல... இங்கிருந்து கிளம்பு” என்றவர் அவளைத் துரத்துவதிலேயே குறியாக இருக்க,   

“நான் வீட்டு உள்ள நின்னு பேசக் கூடாதுன்னா... போய் வாசல நின்னு பேசுவேன்... அப்புறம் உங்க குடும்ப மானம் சந்திச் சிரிச்சுப் போகும்” என்றவள் மிரட்ட சங்கரியின் முகம் உக்கிரமாக மாறியது.

ஆனால் அவர் பதில் சொல்வதற்கு முன்பாக படிக்கட்டில் இறங்கி வந்து கொண்டிருந்த சண்முகம், “உங்க குடும்பம் அது இதுன்னு... என்ன பேசுற தீபா... நீ இந்த வீட்டோட மருமக... இது உன் குடும்பம்” என்று அழுத்திச் சொல்ல தீபிகா எள்ளலாக நகைத்து,

“என் குடும்பமா? அப்படினா மாமி ஏன் என்னை உள்ள விடாம வெளியே போடின்னு துரத்துறாங்க” என்று கேட்க, சங்கரி அவளை முறைத்துப் பார்த்தார்.

“மாமிக்கு உன் மேல கொஞ்சம் மனவருத்தம் அவ்வளவுதான்... நீ அவ சொன்னதை மனசுல வைச்சுக்காதே... உள்ள வா” என்று சண்முகம்  இளக்கமாகப் பேசி அவளை உள்ளே அழைக்கவும், சங்கரி குழம்பி நின்றார்.  

“தீபாவுக்குக் குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வா” என்றவர் மனைவியிடம் சொல்ல,

“இவளுக்கா?” என்று சங்கரி கடுப்புடன் கேட்க,

“போய் எடுத்துட்டு வா” என்று அதிகாரமாக உரைத்தார். அவர் நொடித்துக் கொண்டு சமையலறைக்குள் செல்ல எத்தனிக்க,

“தங்கத்துக்கும் எடுத்துட்டு வரச் சொல்லுங்க மாமா... பாவம் அவளுக்கு உடம்பு முடியல... உங்களுக்குதான் தெரியுமே” என, சண்முகத்தின் பார்வை எரிச்சலாக மாறிய போதும் தன் உணர்வுகளைப் பட்டென்று கட்டுப்படுத்திக் கொண்டார்.

ஆனால் தீபிகா சொன்னதைக் கேட்ட சங்கரி, “என்னது?” என்று கோபமாகத் திரும்பி வர,

“போய் தங்கத்துக்கும் எடுத்துட்டு வா” என்று சண்முகம் அதட்டினார். சங்கரிக்கு ஒன்றும் புரியவில்லை. எதிர்த்துப் பேச முடியாமல் இயலாமையுடன் அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டே அவர் உள்ளே சென்றுவிட்டார்.

“தீபா... நான் பேசுறதைக் கொஞ்சம் பொறுமையா கேளு” என்று  சண்முகம் மெதுவாகப் பேச ஆரம்பிக்க,

“கேட்கிறேன் மாமா... ஆனா கால் வலிக்குது நானும் தங்கமும் கொஞ்சம் உட்கார்ந்துக்கிட்டுமா?” என்றவள் கேட்கவும் சண்முகம் சரியென்று தலையசைக்க,

“வா தங்கம் உட்காரலாம்” என்று தீபிகா சோஃபாவைக் காட்டி அவளை உட்காரச் சொல்ல, “ஐயோ இல்லக்கா.. நான் கீழே உட்கார்ந்துக்கிறேன்” என்று தரையில் அமரப் போனாள்.

“அதெல்லாம் வேண்டாம் மேலே உட்காரு” என்று கட்டாயப்படுத்த,

“இல்ல க்கா வேண்டாம்” என்றவள் பிடிவாதமாக மறுக்க,

“நீங்களாச்சும் சொல்லுங்க மாமா” என்றவள் சண்முகத்தைப் பார்க்க அவரோ உச்சபட்ச எரிச்சலில் இருந்தார். இருப்பினும் ஒன்றும் பேச முடியாமல், “தங்கம் உட்காரு” என,

“அதான் மாமா சொல்லிட்டாரு இல்ல... உட்காரு” என்று அவளையும் அமர வைத்துவிட்டு இவளும் அமர்ந்து கொண்டாள்.  சண்முகம் பேச வாய் திறக்கவும்,

“கிருபா எங்கே?” என்று கேட்டாள் தீபிகா.

“அவன் மேல இருக்கான்” என்றவர் சொல்ல,

“அவரையும் கூப்பிடுங்க... பேசுவோம்” என,

“அவன் ஏற்கனவே ரொம்ப டென்ஷன்ல இருக்கான்மா... என்ன செய்றதுன்னு புரியாம கோபத்துல ஏதேதோ செஞ்சு வைச்சுட்டான்... நானும் நல்லா திட்டி விட்டுட்டேன்... தலைவலின்னு உட்கார்ந்திருந்தான்.”

”இப்பதான் வலி மாத்திரை கொடுத்துப் படுக்க வைச்சுட்டு வந்தேன்” என்றவர் சொன்னதைக் கூர்மையாகக் கேட்டிருந்த தீபிகாவிற்கு விவேக்கின் தந்தை காளிதாஸின் நினைவு வந்தது. எல்லோரும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டவள் பெருமூச்செறிந்து, 

“நீங்க பேசுறது உங்களுக்கே நியாயமா இருக்கா மாமா? பாவம் இந்தப் பொண்ணு... உங்க புள்ள செஞ்ச காரியத்தால வலியும் வேதனையோட இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்கா... ஆனா உங்க புள்ள வலி மாத்திரை போட்டு நிம்மதியா படுத்துட்டு இருக்கான்னு சொல்றீங்க” என்றவள் சண்முகத்தைக் குத்திப் பேசவும் அவர் முகம் தொங்கிவிட்டது. என்ன செய்வதென்று அவருக்கும் புரியவில்லை.

அப்போது சங்கரி காபி எடுத்து வந்தார். தங்கம் சோஃபாவில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவர் முகம் சுணங்கியது. அதேநேரம் ஏதோ பிரச்சனை என்றும் புரிந்தது.

‘எல்லாம் இந்த தீபாவாலதான்’ என்று மனதில் மருமகளை நிந்தித்துக் கொண்டே காபிகள் வைத்திருந்த தட்டை நீட்டினார். அதில் இரண்டு பீங்கான் கப்புகளும் ஒரு எவர் சில்வர் டம்ளரும் இருந்தது.  

“எனக்கு வேணாம் அவங்களுக்குக் கொடு” என்று சண்முகம் மறுக்க,

“எடுத்துக்கோங்க மாமா... குடிங்க” என்று அவரிடம் கப்பை எடுத்துக் கொடுத்த தீபிகா டம்ளரை அவள் எடுத்துக் கொண்டு கப்பை தங்கத்திடம் கொடுத்தாள்.

“இல்ல க்கா... நான் டம்ளர்ல குடிக்கிறேன்”

“எனக்கு டம்ளர் வேணும்... நீ கப்ல குடி” என்று கப்பை அவள் கையில் திணிக்க சங்கரியின் பொறுமை கரைந்துவிட்டது.

“என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல... உன் இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணிட்டு இருக்க” என,

“என்ன அப்படி பண்ணிட்டேன்?” என்று புரியாதவள் போலவே கேட்டாள் தீபிகா.

“அவ இந்த வீட்டோட வேலைக்காரி... அவளைப் போய் சரிக்குச் சமமா உட்கார வைச்சு நம்ம வீட்டாளுங்க குடிக்கிற கப்ல காபியைத் தூக்கிக் கொடுக்குற” என்று கடுப்புடன் கத்த,

“இதுல என்ன மாமி இருக்கு? வேலைகாரியா இருந்தாலும் அவளும் நமக்கு சொந்தம்தானே” என்றாள்.

“சொந்தமா இருந்தாலும் அவ இங்க வேலை செய்ற பொண்ணு” என்றவர் அழுத்திக் கூற,

“ஓ! உங்க வீட்டுல வேலை செய்ற பொண்ணுனா... அவளை நீங்க என்ன வேணா பண்ணலமா?” என்றவள் கேட்ட நொடி சண்முகம் முகம் வெளிறியது.

அவர் பதட்டத்துடன், “தீபா” என்று அழைக்கவும் அவர் புறம் திரும்பியவள், “மாமி இவளை வேலைகாரின்னு சொல்றாங்க... ஆனா கிருபா இவளை வீட்டுக்காரியா ஆக்கிக்கப் போறதா சொல்றான்... ஏன்  வீட்டுக்காரியேவா ஆக்கிக்கிட்டான்”   

“என்னங்க... இவ பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்கா” என்று சங்கரி சீறிய அதேநேரம் சண்முகம் எழுந்து நின்று,

“பிரச்சனை பண்றதுக்கே வந்திருக்கியா தீபா நீ” என்று எகிற,

“யாரு மாமா இங்க பிரச்சனை பண்ணது...? நானா உங்க புள்ளையா?” என்றாள்.

“ஆமா... அவன் பிரச்சனை பண்ணான்தான்... நான் மறுக்கல... ஆனா அவன் செஞ்ச எல்லாத்துக்கும் மூலகாரணம் நீதான்... உன்னாலதான் அவன் இப்படியொரு கேவலத்தைப் பண்ணி இருக்கான்” என்று சொல்ல அவரை நிதானமாக ஏறிட்டவள்,

“ஆமா... நான்தான் காரணம்... என் தப்புதான்... நான் ஒத்துக்கிறேன்... அதேபோல உங்க புள்ளை செஞ்ச தப்பையும் ஒத்துக்கச் சொல்லுங்க... அவர் செஞ்ச தப்பு என்னாலயா இருந்தாலும் அவன்தானே தப்பைச் செஞ்சவன்” என்றாள் தெளிவாக. அவர் இக்கட்டாக அவளைப் பார்க்க,

“உங்க புள்ளைய கூப்பிடுங்க... நாங்க வெயிட் பண்றோம்” என்றவள் நிதானமாக அமர்ந்து கொண்டு தங்கத்திடம் திரும்பி,

“காபி குடிக்காம கப்பைக் கைல வைச்ச்சிட்டு என்ன பண்ணிட்டு இருக்க... குடி” என, அவளோ இதெல்லாம் தேவையா என்பது போலச் சங்கடமாக நெளிந்தாள்.

“இப்போ காபி குடிக்கப் போறியா இல்லையா?” என்றவள் அதட்டவும் அவள் காபியை அருந்த தீபிகாவும் காபி குடிக்கத் தொடங்கினாள்.

சண்முகம் என்ன செய்வதென்று புரியாமல் அமர்ந்திருக்க சங்கரிக்கு இன்னும் நடப்பது என்னவென்றே புரியவில்லை.

அவள் காபியைக் குடித்து முடித்துவிட்டு, “கிருபாவைக் கூப்பிடலயா மாமா” என அவர் ஆழமான பார்வையுடன் அவளைப் பார்த்து மௌனம் காக்க,

“இன்னும் கொஞ்ச நேரத்துல என்னோட அம்மா அப்பா வருவாங்க... அவங்க கேட்குற கேள்விக்கும் இப்படியே எந்தப் பதிலும் சொல்லாமல் உட்கார்ந்திருப்பீங்களா?” என்றவள் கேட்க அவர் பதட்டத்துடன்,

“எல்லாத்தையும் ஃபோன் பண்ணிச் சொல்லிட்டியா?” என்றார்.

“வரச் சொல்லி இருக்கேன்... ஆனா இன்னும் எதுவும் சொல்லல” என்றதும் அவர் உடனடியாக தன் செல்பேசி எடுத்துத் தங்கைக்கு அழைத்தார்.

“ராஜி” என்று ஆரம்பிக்கும் போதே, “தீபா அவங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணி வரச் சொன்னாளாம்... அதுவும் ஏதோ பிரச்சனைனு வேற சொன்னாளாம்...  அதான் கிளம்பி வந்துட்டு இருக்கோம்... ஊருக்குள்ள வந்துட்டோம் ண்ணா... கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்” என,

“கிளம்புறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு ஃபோன் பண்ணி இருக்கலாம் இல்ல” என்றார் தங்கையிடம்.

“என்ன பிரச்சனை ஏதுன்னு தெரியாம கொஞ்சம் பதட்டமா இருந்துச்சு... அதான் சரி நேர்லயே வந்து பார்த்துடலாம்னு” என்று ராஜி இழுக்கவும் அவரின் பதட்டம் அதிகரித்தது.

“சரி வாங்க” என்று அழைப்பைத் துண்டிக்க,

“என்னதாங்க பிரச்சனை?” என்று சங்கரி பின்னோடு நின்று கேட்க,

“நீ கொஞ்சம் சும்மா இருக்கியா?” என்றவர் தீபாவை உஷ்ணமாகப் பார்த்து,

“உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா?” என்று கத்தினார்.  

“கொஞ்சம் இல்ல மாமா... நிறைய இருக்கு... அதனாலதான் அவங்கள வரச் சொன்னேன்... ஏன் னா இது அவங்களும் நீங்களும் செஞ்சு வைச்ச கல்யாணம்... எங்க வாழ்க்கைல நடக்கிற எல்லாத்துலயும் உங்களுக்கும் பொறுப்பு இருக்கு... பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கு” என்றவள் விளக்க அவர் சீற்றத்துடன்,

“நீங்க ரெண்டு பேரும் சண்டைப் போட்டுகிட்டுக் குடும்ப மானத்தை வாங்கிட்டு இருப்பீங்க... அதுக்கு நாங்க பொறுப்பாகணுமா?” என,

“அப்போ உங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லன்றீங்களா?” என்றவள் கேட்டாள்.

“எங்க கூட நீங்க ஒன்னா இருந்தலாவது நாங்க உங்க பிரச்சனைல தலையிட்டுச் சரி பண்ணி இருக்கலாம்... நீதான் வீம்புக்குனாலும் என் புள்ளைய தனியா கூட்டிட்டுப் போனியே...அப்புறம் நாங்க பொறுப்பாகணும்னா எப்படி?”

“அப்படினா சரி... உங்க புள்ளைய கூப்பிடுங்க நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்” என்றவள் மீண்டும் சுற்றி வளைத்து ஒரே புள்ளியில் வந்து நிற்க அவரால் அவளைச் சமாளிக்க முடியவில்லை.

அவர் அந்த நொடியே தங்கத்தைப் பார்த்து, “இத பாரு தங்கம் இவ வீம்புக்கானாலும் பேசிட்டு இருக்கா...  இவ சொல்றதைக் கேட்டு நீ உன் வாழ்க்கையை அழிச்சுக்காதே.”

”நடந்தது நடந்து போச்சு... அவன் செஞ்ச முட்டாள்தனத்தால உன் வாழ்க்கை அழிய வேண்டாம்... நல்லவனா பார்த்து நான் உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்... சீர் செனத்த நகை நட்டுன்னு எல்லாம் செய்றேன்...”

”கோவில் பக்கத்துல இருக்க இடத்தைக் கூட உன் பேர்ல எழுதி வைக்கிறேன்” என்று சண்முகம் அளந்து கொண்டிருக்க அதைக் கேட்ட தங்கத்திற்குத் தலைச் சுற்றியது என்றால் சங்கரிக்கோ உலகமே தலைகீழாகச் சுழன்றது. அதுவும் இவர்கள் பேசுவதை எல்லாம் வைத்து அவருக்குத் தோன்றிய கணிப்பு மிகவும் விபரீதமான நிலையில் செல்ல,

‘ச்சே ச்சே கிருபா அப்படி எல்லாம் பண்ணி இருக்க மாட்டான்... இது வேற என்னமோ?’ என்று தனக்குத்தானே சொல்லி சமாதானப்படுத்திக் கொண்டார்.

இன்னொரு புறம் சண்முகம் சொன்னதை எல்லாம் கேட்டு தங்கம் குழப்பத்துடன் தீபிகாவைப் பார்க்க,

 அவள் எள்ளலாக சண்முகத்தைப் பார்த்து, “ஏன் மாமா... இப்போ நீங்க சொன்ன மாதிரி தங்கத்துக்கு முதலயே பொறுப்பா ஒரு கல்யாணம் பண்ணி வைச்சு இருந்தா இந்தத் தப்பு நடந்திருக்காது இல்ல” என்றாள்.

“திரும்பத் திரும்ப நீ வீம்புக்கானாலும் பேசிட்டு இருக்க தீபா... ஒரு பிரச்சனையை முடிக்கத்தான் பார்க்கணும்... அதை வளர்க்கப் பார்க்கக் கூடாது” என்றவர் சொல்ல,

“நானும் முடிக்கத்தான் நினைக்கிறேன்... ஆனா அதுக்கு உங்க புள்ள இங்கே வரணும்” என்றவள் அழுத்திச் சொல்ல,

“அவன் வர மாட்டான்... நீ என்ன பன்றியோ பண்ணிக்கோ... அதுக்கு மேல நான் பார்த்துக்கிறேன்” என்று சண்முகம் அடாவடியாகச் சொல்லும் போதே வாசலில் ராஜேஸ்வரியும் பாலாஜியும் வந்து நின்றனர்.  

தீபிகா அவர்களைப் பார்த்தாள். ஆனால் அவர்கள் இருவரும் மகளைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் நேராக சங்கரியிடமும் சண்முகத்திடமும் சென்று பேச, அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அவர்கள் பேசி முடிக்கட்டும் என்று அவள் ஒதுங்கி நிற்க,

“என்ன ண்ணா பிரச்சனை?” என்று ராஜி கேட்டார்.

“உன் பொண்ணுதான் எங்களோட ஒரே பிரச்சனை” என்று சண்முகம் தீபாவைக் கைக் காட்டினார்.

“ஐயோ என்ன அண்ணா இப்படி சொல்ற?” என்று பதறிய ராஜி,

 “என்னடி பண்ண? ஏன் டி இப்படி எங்களை அவமானப்படுத்திட்டே இருக்க?” என்று மகளிடம் கோபத்தைக் காட்ட,

“யார் யாரை அவமானப்படுத்துனா? நீங்கதான் என்னை அவமானப்படுத்திறீங்க? நடந்தது என்னன்னு கூடக் கேட்காம... நான்தான் தப்பு செஞ்சன்னு நீங்களாவே முடிவு பண்ணிக்கிட்டா என்ன அர்த்தம்?” என்று அவள் பொரிய, மகளின் கோபத்தைப் பார்த்து வாயடைத்து நின்றார் ராஜி.

“இப்போ என்னதான் பிரச்சனை தீபா?” என்று பாலாஜி மகளைப் பார்த்துக் கேட்க,

“உங்களுக்கு என் பேர்லாம் கூட ஞாபகம் இருக்கா ப்பா?” என்று எகத்தாளமாக அவள் கேட்டு வைக்க,

“இப்படி தான் ஏடாகுடமா பேசிட்டு இருக்கா உங்க பொண்ணு” என்று சண்முகம் இடையில் வர,

“நீங்க நடுவுல வராதீங்க மாமா... நான் எங்க அம்மா அப்பாகிட்ட பேசிட்டு இருக்கேன்” என்றவள் சொன்னதுதான் தாமதம்.

 “என்னடி மாமாகிட்ட மட்டு மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க?” என்று ராஜி பளாரென்று மகளை அறைந்துவிட,

“என்ன பன்ற?” என்று பாலாஜி மனைவியைத் தடுத்தார்.

அடி வாங்கி வலியுடன் கன்னத்தைத் தேய்த்துவிட்டுக் கொண்டவள், “அடிமா... அடிச்சு என்னைக் கொல்லு... ஆனா அதுக்கு முன்னாடி ஒரே ஒரு நிமிஷம் நான் என்ன சொல்றேன்னு கேளு” என்றதும் அங்கே ஒரு கனமான மௌனம் சூழ்ந்தது.

அவள் உண்மையைச் சொல்லிவிடப் போகிறாளே என்று சண்முகம் அச்சம் கொள்ளும் போதே கிருபா பைக்கைக் கொளுத்தியதில் ஆரம்பித்து நடந்த அனைத்தையும் தீபிகா அவளின் பெற்றோரிடம் விவரித்துவிட்டாள்.

ராஜி அதிர்ச்சியுடன் தமையன் புறம் திரும்பி, “என்ன அண்ணா இதெல்லாம்? கிருபாவா இப்படி?” என்று கேட்க, அவரால் பதில் பேச முடியவில்லை. சங்கரியும் மகன் இப்படியொரு காரியத்தைச் செய்தானா என்று நிலைகுலைந்து நின்றார்.

இதற்கு மேல் கிருபா இங்கே வராமல் இருந்தால் சரியாக வராது என்று சண்முகம் தன் அலைபேசி எடுத்து மகனுக்கு அழைத்துக் கீழே வரச் சொன்னார். கீழே வந்தவனின் பார்வை தீபிகாவைதான் முற்றுகையிட்டது. அவன் கீழே வந்த பிறகும் யாருமே பேசவில்லை. யாருமே அவனை ஒரு வார்த்தை கூடக் கேட்கத் துணியவில்லை.

தீபிகாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் தப்பு செய்த போது எப்படியெல்லாம் அவளை நிறுத்தி வைத்துக் கேவலப்படுத்தினார்கள். யோசிக்காமல் அசிங்கப்படுத்திப் பேசினார்கள்.

ஆனால் இப்போது இவன் இத்தனை மோசமான அசிங்கமான காரியத்தைச் செய்திருக்கும் போதும் அவனைக் கேள்வி கேட்கத் தயங்குகிறார்கள்.

இதுதான் ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடா?

பெண் செய்யும் தப்புக்களைப் பட்டியிலடும் இந்தச் சமுதாயம் ஆண் செய்யும் தப்புக்களைக் கணக்கில் கூடச் சேர்த்துக் கொள்வதில்லை.

அங்கே நிலுவிய மௌனத்தைப் பார்த்து அவளுக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது. அத்தனை நேரம் அவளிடமிருந்த திடம் மொத்தமும் உடைந்து விடுமோ என்று பயந்தவள் ஒரு மாதிரி சுதாரித்துக் கொண்டு,

“யாரும் அவனை எதுவும் கேட்க மாட்டீங்களா?” என்று அவளே பேச்சைத் தொடங்கி வைத்தாள். ஆனால் அப்போதும் மௌனம்.

“ஏன் மாமி... நான் ஓடிப் போயிட்டன்னு என்னைப் பார்த்து என்னலாம் கேட்டீங்க? குடும்ப மானத்தைக் குழித் தோண்டிப் புதைச்சிட்டான்னு சொல்லி எங்க அம்மா அப்பாகிட்ட என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேற சொன்னீங்க.”

”இப்போ சொல்லுங்க... குடும்ப மானத்தைக் குழித் தோண்டி இல்ல... வெட்டிக் கூறுப் போட்டுட்டு வந்திருக்கான் உங்க புள்ள... அவனை வீட்டை விட்டுப் போகச் சொல்லுங்க பார்ப்போம்?” என்று அவள் நறுக்கென்று கேட்கவும் அவர் விக்கித்து நின்றார். அவரால் பதில் பேச முடியவில்லை.

“ஏன்மா... நீயும் சைலன்டா இருக்க...? பொண்ணுன்னு கூடப் பார்க்காம வார்த்தைக்கு வார்த்தை என்னை எவ்வளவு எல்லாம் அவமானப்படுத்திப் பேசுவ... இப்போ உன் அண்ணன் மகன் செஞ்ச காரியத்தைக் கேட்டு ஒரு வார்த்தை கூடப் பேசாம நிற்குற?” என்றதும் ராஜி மகளை நிமிர்ந்துப் பார்க்க இடையில் வந்த சண்முகம்,

“தீபா போதும்... இப்படி பேசிப் பேசித்தான் அவனை இப்போ இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து நிறுத்தி இருக்க” என்றார்.  

அவரை முறைத்துப் பார்த்தவள், “என் மேலயே பழியைப் போட்டு உங்க புள்ள செஞ்ச தப்பைச் சரிகட்டப் பார்க்காதீங்க மாமா” என்றாள்.

“நான் சரிக்கட்ட எல்லாம் பார்க்கல... ஒத்துக்கிறேன்... அவன் தப்பு செஞ்சான்தான்... ஆனா அதுக்குக் காரணம் யாரு... நீதானே... ஒரு ஆம்பளய சீண்டுற மாதிரி பேசுனா அவன் என்ன பண்ணுவான்?” என்று கேட்கவும் அவளுக்குக் கோபமேறியது.

“நானும் உங்க வழிக்கே வரேன்... நான் தப்பா பேசினேன்னு அவன் தப்பு செஞ்சான்னா... அவனும் எத்தனையோ தடவை என்னைத் தப்பா பேசி இருக்கான்... நானும் இதே போலப் போய் தப்பு செஞ்சிட்டு வந்தா ஒத்துக்குவீங்களா இல்லை இப்படி ஊமையா நின்னு வேடிக்கைதான் பார்ப்பீங்களா?” என்றவள் கேட்ட மறுகணம்,

அத்தனை நேரம் மௌனமாக நின்ற கிருபா, “என்னடி பேசுற?” என்று அவளிடம் எகிறி கொண்டு வரவும்,  

பாலாஜி முன்னே வந்து, “என் பொண்ணு கேட்டதுல என்னடா தப்பு?” என்றதும் கிருபா அடங்கி ஒடுங்கி அமைதியாக நின்றுவிட்டான்.

சண்முகம் இப்போது அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க நினைத்து,  “தீபா கேட்டதுல எந்தத் தப்பும் இல்ல... ஆனா அதேசமயம் இன்னொரு விஷயத்தையும் யோசிச்சு பார்க்கணும் பாலா.”

”தீபா அவசரத்துல வாழ்க்கையைத் தொலைச்சிட்டு வந்து நின்ன போது... பழசை எல்லாம் மறந்து கிருபா அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்... அவ மேல எவ்வளவு விருப்பம் இருந்தா அவன் அத்தனைக்குப் பிறகும் தீபாவைக் கல்யாணம் பண்ணி இருப்பான்.”

”இன்னைக்கு அதேமாதிரி அவனும் ஒரு தப்பு பண்ணிட்டு நிற்குறான்... ஆனா அது தீபாவுக்குத் துரோகம் பண்ணனுங்குற எண்ணத்தில இல்ல... ஒரு அவசரத்துலயும் கோபத்துலயும்தான்” என்றவர் பேசிக் கொண்டே போக, அந்த நொடி பாலாஜியின் கோபமும் கூட மட்டுப்பட்டுவிட்டது. அவர் மகளின் தப்பைச் சுட்டிக்காட்டி அவர் பிள்ளையின் தப்பைப் பூசிமொழுகப் பார்த்தார்.

அரசியல்வாதி இல்லையா? எப்படி சமார்த்தியமாக ஒரு விஷயத்தைச் சமாளிக்க வேண்டுமென்று அவருக்குத் தெரிந்திருந்தது.

ஆனால் தீபிகாவால் அவரின் பூசி மொழுகலைச் சகிக்க முடியவில்லை. “மாமா போதும் நிறுத்துறீங்களா?” என்று விட்டு, “சும்மா என் விஷயத்தைப் பத்திப் பேசி எங்க அப்பாவை கார்னர் பண்ணாதீங்க.”

”ஒரு விஷயத்தை முதல நீங்க தெளிவா புரிஞ்சிக்கணும்... நான் என் மனசுக்குப் பிடிச்சவனோட ஓடிப் போனதும் உங்க புள்ள ஒரு பொண்ணை விருப்பமில்லாம ரேப் பண்ணதும் ஒன்னு இல்ல.”

இன்னும் கேட்டா... அவன் செஞ்சது கிரிமினல் குற்றம்... போலீஸ்கிட்ட போனா அவன் பத்து வருஷம் ஜெயில்ல களி திங்கணும்” என்றவள் சொல்வதைக் கேட்டு கிருபா கோபமாக முன்னே வரவும் சண்முகம் அவனைக் கண் காட்டி நிறுத்திவிட்டு, 

“போதும் நிறுத்துறியா... போலீஸ் அது இதுன்னு பைத்தியகாரத்தனமா பேசிட்டு இருக்க... போலீஸ்கிட்ட போனா அவனோட அது முடிஞ்சு போயிடுமா... தங்கமும் சேர்ந்துதான் அவமானப்படுவா... நம்ம குடும்பமும் சேர்ந்து அசிங்கப்படும்... நீயும் அதே குடும்பத்துலதான் இருக்கேன்னு ஞாபகம் இருக்கட்டும்”

“ஆமா ஆமா... இருக்கேன்” என்று வாயிற்குள் முனகிக் கொண்டவள் அந்த நொடி கொஞ்சம் நிதானித்து,

“சரி நீங்க சொல்றபடி போலீஸ் போக வேண்டாம் எதுவும் போக வேண்டாம்... நான் உங்க புள்ளைக்கு டிவோர்ஸ் கொடுத்துறேன்... நீங்க தங்கத்தை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சுருங்க... இந்தப் பிரச்சனை இதோட முடியட்டும்” என்று விட, சண்முகம் வாயடைத்து நின்றுவிட்டார்.

என்ன பேசுகிறாள் இவள் என்று சங்கரி அதிர ராஜி மகளின் கையைப் பிடித்து ஓரமாக வந்து,

“பெரிய தியாகின்னு நினைப்பாடி உனக்கு... அப்படியே வாழ்க்கையைத் தூக்கிக் கொடுக்குற?” என,

“நான் தூக்கி எல்லாம் கொடுக்கலமா... எனக்கே அவன் கூட வாழறதுக்கு விருப்பம் இல்ல... பாதிக்கப்பட்ட அந்தப் பொண்ணாவது வாழட்டும்னுதான் நானே ஒதுங்குக்கிறேன்” என்றாள். ராஜிக்கு மகள் மீது அப்படியொரு கோபம் வந்தது.

அவர் பேச எத்தனிப்பதற்குள், “நான் தீபாகிட்ட தனியா பேசணும் அத்தை” என்றான். அங்கிருந்து எல்லோர் பார்வையிலும் ஆச்சரியம் தோன்ற,

“தீபா வா” என்று அவன் அவள் சம்மதத்தைக் கூட எதிர்பார்க்காமல், “கையை விடு நான் வரல” என்று அவள் மறுத்தும் அறைக்கு இழுத்துச் சென்று கதவை அடைத்துவிட்டான்.

“பைத்தியமா நீ... இப்போ எதுக்கு என்னை இங்கே இழுத்துட்டு வந்த?”

“நான் உன்கிட்ட தனியா பேசணும்”

“எனக்கு உன்கிட்ட எதுவும் பேச வேண்டாம்” என்றதும் அவன் அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டு, “ப்ளீஸ் நான் சொல்றது கொஞ்சம் கேளு” என்றான். அவன் அப்படி நிதானமாகப் பேசவும்,

“சரி சொல்லு” என்றவள் கைகளைக் கட்டிக் கொண்டு அவனைப் பார்த்து நிற்க,

“என்னால தங்கத்தைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது... ஆனா அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தர முடியும்” என்றான்.

“நீதானே அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறன்னு சொன்ன...  இப்போ எதுக்கு மாத்திப் பேசுற”

“என்னால உன்னை விட்டுக் கொடுக்க முடியாது... நீ என் மேல கோபப்படு... சண்டைப் போடு... என்ன வேணா பண்ணு... ஆனா என்னை விட்டுப் போகாதே” என்றவன் அவளைப் பார்த்து கரைந்துருக இவன் என்ன பழையபடி ஆரம்பித்துவிட்டான் என்று அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

“என்னால உன்னைத் தவிர வேறொரு ஒரு பொண்ணை நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது” என்றவன் மேலும் பேச,

“நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது.. ஆனா படுக்க மட்டும் முடியுமா?” என்றவள் அவனை முறைத்துக் கொண்டு நிற்க,

“அது என்னை மீறி ஒரு ஆவேசத்துல கோபத்துல நடந்திடுச்சு” என்றவன் அதே சமாளிப்பான வார்த்தையைச் சொன்னான்.

“எவ்வளவு ஈஸியா ஒரு பொண்ணோட வாழ்க்கையை நாசமாக்கிட்டு என்னை மீறி நடந்திடுச்சுன்னு சொல்ற... நீ செஞ்ச காரியத்தால ஒரு பொண்ணு உடல் ரீதியா எவ்வளோ காயப்படுவா... மனரீதியா எவ்வளோ தூரம் பாதிக்கப்படுவான்னு எல்லாம் உனக்கு தெரியுமா...? என்னவோ ஈஸியா என்னை மீறி நடந்துடுச்சுன்னு சொல்ற?” என்றவள் ஆவேசமாக அவனை வெளுத்து வாங்க,

“நடந்து முடிஞ்சதைப் பேசுறதால எதுவும் ஆகப் போறதில்ல தீபா... நான் அந்தத் தப்பை என்னால முடிஞ்ச வரைக்கும் சரி பண்ணப் பார்க்குறேன்... என்னை நம்பு” என்றவன் பொறுமையாக அவளுக்கு விளக்கம் தந்தான்.

“ஓஒ... நடந்து முடிஞ்சதைப் பேசக் கூடாது... ஆனா நீ மட்டும் பேசுவ... ஓடிப் போயிட்ட ஓடிப் போயிட்டன்னு என்னை வார்த்தையால குத்திக் குத்திக் கிழிப்ப... அப்படிதானே?” என்றவள் கேட்கவும்,

“இனிமே சத்தியமா அப்படி பேச மாட்டேன் தீபா” என்றான்.

“இல்ல கிருபா... வேண்டாம்... நமக்குள்ள இனிமே சரிப்பட்டு வராது” என்றவள் கதவைத் திறக்கப் போக,

“தீபா நான் சொல்றதைக் கேளு” என்று அவளைக் கதவோடு சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்டு,

“தீபா தீபா... உனக்குப் பிடிக்குற மாதிரி நான் என்னை மாத்திக்கிறேன்... செஞ்ச தப்பை எல்லாம் திருத்திக்குறேன்... ப்ளீஸ்... என்னை விட்டுப் போகாதே” என்றவன் கெஞ்ச, அவனை மன்னித்துவிடலாமா என்று ஒரு நொடி அவள் மனம் சலனப்பட்டது.

ஆனால் தங்கத்தின் வேதனை கண் முன்னே வந்த மறுகணம் சை! இவனைப் போய் மன்னிப்பதா என்ற எண்ணம் வந்தது. அவனோ அவளின் அந்தச் சிறுமௌனத்தைச் சாதகமாகக் கொண்டு அவளைச் சேர்த்து அணைத்துக் கொள்ளவும், “கிருபா... என்னை விடு” என்று பதறி விலக்க,

அவனோ, “எனக்கு நீ வேணும் தீபா” என்றவன் அவளை வெளியேற விடாமல் பிடித்துக் கொண்டான்.

“கிருபா விடு” என்றவள் அவன் பிடியை உதற அவள் போராடவும், “முடியாது... என்னால உன்னை விட்டுக் கொடுக்க முடியாது” என்று மீண்டும் மீண்டும் உரைத்து அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

 “என்னால உன் கூட வாழ முடியாது... சத்தியமா வாழ முடியாது... சீ போடா” என்றவள் அசூயை உணர்வுடன் கூறி இம்முறை பலம் கொண்டு அவனைத் தள்ளிவிட்டுக் கதவைத் திறக்கப் போனாள்.

அவள் தள்ளிவிட்டு வேகத்தில் பின்னே நகர்ந்தவன், “என் கூட வாழ முடியாதுனா... வேற எவன் கூடடி போய் வாழப் போற?” என்று உஷ்ண பார்வையுடன் கேட்க,

“எவன் கூடவோ வாழுறனோ இல்லையோ உன்னை மாதிரி ஒருத்தனோட சத்தியமா வாழ மாட்டேன். என்னைக் கேட்டா தங்கமும் உன்னை மாதிரி ஒருத்தனோட வாழாம இருக்கிறதுதான் நல்லது” என்றவள் சொல்லிவிட்டு அறையைத் தாண்டும் போது அவன் கரம் அவள் தலைமுடியைப் பற்றிக் கொண்டது.

“ஆஅ...” என்றவள் வலியில் குரல் கொடுக்க,

“என்னடி சொன்ன...? என் கூட வாழ மாட்டியா” என்றவன் அந்த அறையிலிருந்த நிலைகண்ணாடியின் முன்னே நிறுத்தி, “அப்போ சாவுடி” என்று வெறிக் கொண்டு அவள் நெற்றியை அதில் மோதினான். திரும்பத் திரும்ப மோதினான்.

 கண்ணாடி உடைந்து அவள் நெற்றியில் குருதி ஆறாகப் பெருக, “ஆஆஆஆஅ... அம்மா” என்றவள் கதறித் துடித்தாள். அவளின் அழுகுரல் கேட்டுக் கீழே நின்றிருந்த எல்லோரும் ஓடி வந்தனர். முதலில் வந்து நின்றது பாலாஜிதான்.

அந்தக் காட்சியைப் பார்த்து அவர் நடுங்கிவிட்டார். “டேய்... என்னடா பண்ற என் பொண்ண?” என்றவர் சத்தமிட்டபடி வந்து கிருபாவை இழுத்துத் தள்ளினார். அதற்குள் பின்னோடு வந்த சங்கரி சண்முகம் ராஜியும் தலையெல்லாம் இரத்தமாகிக் கிடந்த தீபிகாவின் நிலையைப் பார்த்து அதிர்ந்தனர்.

“தீபா” என்று ராஜி அருகே ஓடி வர,

“இத்தனை பேர் இருக்கும் போதே என் பொண்ணைக் கொல்லப் பார்க்குறியே... தனியா நீ அவளை என்ன எல்லாம் கொடுமை பண்ணி இருப்பபடா பாவி”  என்று பாலாஜி ஆக்ரோஷத்துடன் முடிந்த மட்டும் கிருபாவை உதைத்துத் தள்ளிவிட்டு, மகள் அருகில் சென்றார்.

“ஐயோ கடவுளே... தீபா” என்று ராஜி இரத்தத்தில் தோய்ந்திருந்த தன் மகளின் நெற்றியில் வழியும் இரத்தத்தைக் கைக் குட்டையில் அழுத்திப் பிடிக்க, பாலாஜி மகளைத் தூக்கச் சென்றார்.

சண்முகம் தூக்க அவருக்கு உதவிக்கு வரவும், “யாரும் என் பொண்ண தொட வேண்டாம்... நான் பார்த்துக்கிறேன்” என்று அவரே தனியாக மகளைத் தாங்கிக் கொண்டு இறங்க, ராஜி மகளின் நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டே அவருடன் நடந்தார்.

என்ன ஏதென்று புரியாமல் கீழே நின்றிருந்த தங்கம் பதறிக் கொண்டு ஓடி வந்தாள். இரத்தத்தால் நனைந்திருந்த அவள் முகத்தைக் கண்டு, “ஐயோ அக்காவுக்கு என்னாச்சு?” என்று கேட்கும் போது அவர்கள் அவளைத் தூக்கிக் கொண்டு கடந்து சென்றுவிட்டனர்.

என்ன நடந்திருக்கும் என்று தங்கத்திற்கு ஓரளவு புரிந்தது.  

அவர்கள் பின்னோடு சண்முகமும் சங்கரியும் மாடியிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்த தங்கம் முகம் சுழித்துவிட்டுத் திரும்பும் போது கிருபா மாடியின் மேலே நின்றதைப் பார்த்து,

“நீ எல்லாம் மனுஷ ஜென்மமாடா... நேத்து நான் கொடுமைக்காரனா கெட்டவனான்னு என்கிட்ட கேட்ட போது எனக்கு அப்போ தெரியல நீ இப்படிப்பட்டவன்னு... இப்போ சொல்றேன்... நீ கொடுமைக்காரன் மட்டும் இல்ல... கேவலமானவன் அசிங்கமானவன்... தூ... உன் கூட எல்லாம் ஒரு பொம்பள வாழுவாளா டா” என்றவள் காரி உமிழ்ந்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

வாசலில் கட்சி ஆட்கள் எல்லாம் நின்றிருக்க அவர்களைக் கடந்து பாலாஜி மகளைத் தூக்கிக் கொண்டு தான் வந்து காரில் ஏறிக் கொண்டார்.

அவர் மகளை மடியில் கிடத்திவிட்டு, “சீக்கிரம் காரை ஹாஸ்பிட்டல் எடுத்துட்டுப் போங்க தம்பி” என்றி ஓட்டுனரிடம் கூறும் போது,   

“அப்பா... வலிக்குது பா” என்றாள் வலி தாங்க முடியாமல்,

“ஒன்னும் இல்லடா... சரியாயிடும்... நாம இப்போ ஹாஸ்பிட்டல் போயிடலாம்” என்றவர் மகளைச் சமாதானப்படுத்த, அவளுக்கு மயக்கம் வரவில்லை. கொஞ்சமும் நினைவு தப்பவில்லை. ஏதேதோ பினாத்திக் கொண்டே வந்தாள்.

“நான் செத்துப் போயிட்டா நல்லா இருக்கும்பா”  

“அப்படி எல்லாம் பேசாத தீபா மா” என்றவர் கண்களில் கண்ணீர் வழிய, முன்னே அமர்ந்திருந்த ராஜியும் மகளின் வேதனையைப் பார்த்துத் துடித்துக் கொண்டிருந்தார்.

“தீபாமான்னு என்னை நீங்க பாசமா கூப்பிட்டு ரொம்ப வருஷம் இருக்குபா”

“இல்லடா... உன் மேல எப்பவுமே அப்பாவுக்குப் பாசம் இருக்குடா”

“எனக்குத் தெரியும்... ஆனா நீங்க அதை காட்டல... நான் உங்க பேச்சைக் கேட்காம ஓடிப் போயிட்டேன்”

“அதெல்லாம் இப்போ பேச வேண்டாம்டா”

“எனக்குப் பேசணும் பா... நான் சாகிறதுக்கு முன்னாடி என் மனசுல இருக்கிறதைப் பேசணும்”

“அப்படி எல்லாம் சொல்லாதே ம்மா... நீ பேசுமா... அப்பா கேட்குறேன்... நீ பேசு” என்றவர் கூற,

“நான் ஓடியே போயிருக்கமாட்டேன் பா... காதல் எல்லாம் வேண்டா தீபா மா... படிடான்னு எனக்குப் புரியிற மாதிரி நீங்க சொல்லி இருந்தா நான் ஓடிப் போயிருக்க மாட்டேன்பா... ஆனா நீங்க சொல்லாம கொள்ளாம நிச்சயம் பண்ணவும் நான் பயந்துட்டன் பா... பயந்து ஓடிப் போயிட்டேன்” என்றவள் சொல்லி முடிக்கும் போது,

“தப்புதான்... அப்பா தப்பு பண்ணிட்டேன் டா... என் மூளைக்கு அப்போ இதெல்லாம் தோனாமா போச்சு... மானம் கௌரவம்னு பைத்தியக்காரத்தனமா யோசிச்சிட்டேன் டா”

“நானும் பைத்தியக்காரத்தனமா யோசிச்சிதான் தப்பு பண்ணிட்டேன்பா”

“இல்லமா... நீ தப்பு செய்யல... தப்பெல்லாம் என் பேர்லதான்... உன்கிட்ட நான் பொறுமையா பேசி இருக்கணும்... பேசி நல்லது கெட்டதைச் சொல்லிப் புரிய வைச்சு இருக்கணும்... எல்லாமே என்னோட தப்புதான்... உன் வாழ்க்கையை நான்தான்மா அழிச்சிட்டேன்” என்றவர் குற்றவுணர்வுடன் தலையிலடித்துக் கொண்டு அழ,

“நீங்க அழாதீங்க பா” என்றவர் கையைப் பிடித்துத் தடுக்க, கார் அப்போது மருத்துவமனை வாசலில் நின்றது.

“ஹாஸ்பிட்டல் வந்திருச்சுடா... எல்லாம் சரியாயிடும்”

“இல்ல நான் சாகத்தான் போறேன்... நிம்மதியா செத்துப் போகப் போறேன்” என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளைச் சிகிச்சை அறைக்குத் தூக்கிச் சென்றனர்.

இதே போன்றதொரு வலியையும் வேதனையையும் அவள் முன்பே அனுபவித்து அதிலிருந்து அவள் மீண்டும் வந்திருக்கிறாள். அப்போது அவளுக்கு வாழ வேண்டுமென்ற ஆசை இருந்தது. இந்த நொடி அவளுக்குத் துளிக் கூட வாழ வேண்டுமென்ற ஆசையே இல்லை.

எல்லாவற்றிற்கும் மேல் அவள் வாழ்க்கை அவளுக்குக் கொடுத்ததெல்லாம் வலிகளும் கூர்மையான வார்த்தைகளும்தான். அப்படியான வாரத்தைகளால் அவள் தினம் தினம் பல்வேறு மனிதர்களால் உடைக்கப்பட்டாள். அந்த மனிதர்களில் அவள் ஆழமாக நேசித்த உறவுகளும் அடக்கம்.

Quote

Super ma 

You cannot copy content