You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Meendum Uyirthezhu - 2

Quote

2

அரங்கநாதன் ஆதுர சாலை

நீலமலை கம்பீரமாய் உயர்ந்து வானை முட்டிக் கொண்டு நின்றது.

மரங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு உயர உயரமாய் வளர்ந்திருக்க, அரிய வகை மலர்களும் செடிகளும் அந்த மலை ராணியின் மேனியை மறைத்து மேன்மேலும் அவளை அழகுறச் செய்தது. அங்கே கமழும் மூலிகை வாசங்களும் பழங்களின் நறுமணங்களும் நாசிக்குள் புகுந்து மூளையை சில நிமிடங்கள் கிறுகிறுக்கச் செய்தன.

இயற்கையின் மீது அலாதியான காதல் கொண்ட குரங்கினங்கள், அங்கிருந்த மரங்களில் தாவியும் குதித்தும் விளையாடியும் பழங்களைப் பறித்து உண்டும் தங்களுக்கான ஒரு தனி ராஜ்ஜியத்தையே நடத்திக் கொண்டிருந்தன.

 பறவையினங்கள் தாம் வாழ்வதற்கான உகந்த இடத்தைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மரங்கள் தோறும் தங்கள் கூட்டை அமைத்து அவற்றில் குடிபெயர்ந்தன. இந்த இயற்கை சூழலுக்கு இடையில் எத்தகைய நோயும் தன் பலத்தை இழந்துவிடும் எனும் போது மருந்தும் வைத்தியமும் அவசியமில்லை. அதன் காரணத்தினாலேயே நீலமலையின் அடிவாரத்தில் அரங்கநாதன் ஆதுரசாலை அமைக்கப்பட்டது.

அதற்காக மகாதேவன் சௌந்தர மன்னர் அனைத்துவிதமான சௌகரியங்களையும் அமைத்துத் தந்தார். நகர வீதிகளில் வைத்தியர்கள் இருந்த போதிலும் சில குணப்படுத்த முடியாத பெரும் ஆபத்தான நோய்களையும் அந்த ஆதுரசாலையின் தலைமை வைத்தியர் சுவாமிநாதன் தீர்க்கவல்ல திறமைப் பெற்றவராயிருந்தார்.

 அவரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் வழிவழியாக  வைத்தியம் பார்த்தவர்கள். ஆதலால் அரிய வகை மூலிகையின் பயன்கள் பற்றி சுவாமிநாதன் நன்கு அறிந்திருந்தார். ஆரை நாடு மட்டுமே அன்றி பல்வேறு நாட்டு மக்களும் வைத்தியம் பார்க்க அரங்கநாதன் ஆதுரசாலையை நோக்கி வருவது வழக்கமான ஒன்றே. அவர்கள் அங்கேயே தங்கியும் நோய்களைக் குணப்படுத்திக் கொண்டு சென்றனர்.

இன்று விடிந்ததிலிருந்து ஆதுர சாலை வாசலில் பெண்டு பிள்ளைகளும் ஆடவர்களும் தலைமை வைத்தியரைக் காண காத்திருந்த சமயத்தில் குதிரையின் குளம்படி சத்தம் கேட்டது. அங்கே இருந்த அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்க, காற்றில் பறந்து வருகிறானோ என்ற எண்ணம் தோன்றுமளவிற்கு குதிரையின் மீது அமர்ந்தபடி வருகை தந்தான் ருத்ரதேவன்.

மக்கள் அவனை அடையாளம் கண்ட நொடியே இன்பம் பொங்க ஆர்பரித்தனர்.

"இளவரசர் ருத்ரதேவன்!" என்று சிலர் குதூகலிக்க,

"ஆம்" என்று பலரும் ஆமோதித்தனர்.

அத்தனை நேரம் நோய்வாய்ப்பட்டுச் சோர்வுற்றிருந்த முகங்கள் கூட பிரகாசிக்கத் தொடங்கியது.

ருத்ரதேவன் பெரும் எதிர்பார்ப்புக்கும் காத்திருப்புக்கும் பிறகு ஜனித்த சௌந்தர கொங்கணனின் ஒரே ஆண் வாரிசு என்பதால் அவன் சிறு வயதினனாய் இருந்த போதிலிருந்தே ஆரை நாட்டு மக்களின் செல்லப்பிள்ளை. அவன் வருங்கால அரசன் என்ற மதிப்பு மரியாதையைக் கடந்து அவன் இயல்பாய் பழகும் விதத்தில் மக்கள் அவன் மீது அதீத அன்பு கொண்டிருந்தனர்.

அதுமட்டுமின்றி அவனின் நற்குணங்களால் மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றிருந்தான் என்றே சொல்லலாம். இப்போது அவன் ஆதுரசாலை வாசலில் குதிரையை நிறுத்தித் தாவி இறங்க அங்கே இருந்த எல்லோரும் சிறியோர் பெரியோர் என வயது வரம்பின்றி, "இளவரசர் ருத்ரதேவன் வாழ்க!" என்று குரலை உயர்த்திக் கோஷமிட்டனர்.

ருத்ரதேவன் தம் வசீகரமான புன்னகையோடு மக்களை நோக்கி, "இப்படி கோஷமிட்டு என்னை வேற்றாளாக மாற்ற வேண்டாம்... நானும் உங்களில் ஒருவன்... அதுவுமின்றி இங்கு நோயுற்றவர்கள் இருக்கிறார்கள்... ஆதலால் அமைதி காத்தருளுங்கள்" என்று சொன்ன மாத்திரத்தில் அவன் வார்த்தையை மீற முடியாமல் எல்லோரும் அமைதியாயினர்.

அந்த இளம் வயதில் அவனுக்கிருந்த முதிர்ச்சி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்த, ருத்ரதேவன் அங்கிருந்தவர்களின் நலன் குறித்தும் பொறுமையோடு விசாரித்தான். ஆதுர சாலையின் துணை வைத்தியர்கள் சென்று தலைமை வைத்தியரிடம்

இளவரசனின் வருகை குறித்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே ருத்ரதேவன் குடிலுக்குள் நுழைந்தான்.

சுவாமிநாதன் பார்க்கையில் காவி உடை அணிந்து கொண்டு வெண்மையான தாடியுடன் நெற்றியில் நாமம் போன்ற திலகமும் இட்டிருந்தார். அவரின் முகத்தில்  ஒரு வித அமைதி நிரம்பியிருந்தது. அவரின் ஒளிப்பொருந்திய கண்களிலும் புன்னகையிலும் தேஜஸ் நிறைந்திருந்தது.

ஒருவரைப் பார்த்தவுடனேயே பீடித்திருக்கும் நோயைக் கணித்திடும் திறமை அவரிடம் தனித்துவமாய் இருந்தது. சுவாமிநாதன் வரும் நோயாளிகளின் நாடியைப் பிடித்து விவரங்களை அறிந்து கொண்டு குணப்படுத்தத் தேவையான மூலிகை மருந்துகளின் சூட்சுமங்களை உரைக்க துணை வைத்தியர்கள் சிறு உரல்கள் கொண்டு அதை இடித்துத் தயாரித்துக் கொடுத்தனர்.

உணவுகளில் அந்த மூலிகைக்கு ஒவ்வாதவற்றை உண்ண வேண்டாமென நோயாளிகளுக்கு அறிவுறுத்தவும் செய்தார். இவ்வாறு அவர் தம் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருப்பதை ருத்ரதேவன் மக்களிடம் இருந்து கேட்டறிந்து கொண்டான்.  இப்போது அவரை முதல் முறை சந்தித்ததுமே அவரின் தோற்றத்தைக் கண்டு ருத்ரதேவனுக்கு எண்ணிலடங்கா மரியாதை உண்டானது.

தலைமை வைத்தியரின் தேவைகளை அவ்வப்போது மன்னர் வீரர்களை அனுப்பிக் கேட்டறிவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இம்முறை இளவரசரே வந்திருப்பது அவருக்கு ஆச்சர்யத்தை உண்டாக்கியது. ஏதேனும் முக்கியமான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறாரோ என எண்ணமிட்டபடி சுவாமிநாதன் அன்போடும் மரியாதையோடும் ருத்ரதேவனை வரவேற்றார்.

அவனும் மரியாதையோடு வைத்தியரை இரு கரம் கூப்பி வணங்கினான். அங்கே உட்கார அரியாசனம் இல்லை என்ற போதும் வைத்தியர் எதிரே தரையிலேயே தயக்கமின்றி அமர்ந்தான். அவனின் எளிமையும் மரியாதையும் அவரைச் சிலிர்ப்பில் ஆழ்த்தியது.

"வர வேண்டும் இளவரசரே... உங்களைக் கண்டதில் பெரும் மகிழ்ச்சி” என்றவர் பணிவான பாவனையில், “மன்னிக்க வேண்டும்... தாங்கள் அமர்வதற்கான தகுந்த ஆசனம் கூட இங்கே இல்லை" என்று வருத்தம் கொண்டார்.

"முதலில் நீங்கள் இளவரசரே என்று அழைக்க வேண்டாம்... ருத்ரன் என்றே அழைக்கலாம்... மரியாதைக்குரிய நீங்கள் என்னிடம் மன்னிப்பு கோர வேண்டிய அவசியமில்லை... நான் உங்களின் ஆதுர சாலைக்கு வந்ததே என் பாக்கியமாகக் கருதுகிறேன்... இதில் ஆசனம் எல்லாம் அவசியமில்லை" என்று ருத்ரதேவன் நிதானமாகவும் தெளிவாகவும் உரைக்க சுவாமிநாதனுக்கு அவனின் பேச்சைக் கேட்டு மெய்சிலிர்த்தது.

"நீங்கள் நேரில் வந்திருக்கிறீர்கள் என்றால் ஏதேனும் முக்கியமான விஷயமாக மன்னர் தங்களை அனுப்பி இருக்கிறாரா?" என்று சுவாமிநாதன் தன் சந்தேகத்தைக் கேட்க,

 "மக்களின் நலனை விட மன்னருக்கு... வேறென்ன முக்கியமாய் இருக்க முடியும் வைத்தியரே... நீங்கள் மக்களுக்காகச் செய்யும் சேவையை நம் பிரதேசம் கடந்து பலருமே அறிந்து உங்களின் சிறப்பைக் குறித்துப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றனர்...

அத்தகைய திறமை கொண்ட தங்களை சந்திக்கவும் உங்கள் தேவை குறித்து அறியவும் நானே நேரில் வந்தேன்" என்று ருத்ரதேவன் உரைக்க அவனின் பேச்சின் முதிர்ச்சியாலும் தெளிவான சிந்தனையாலும் வைத்தியர் சுவாமிநாதன் ஈர்க்கப்பட்டார்.

ருத்ரதேவன் பார்வையிலும் பேச்சிலும் உள்ள ஈர்ப்புவிசை எல்லோரையும் ஈர்க்கவல்லது. அது அக்னீஸ்வரியை மட்டும் விட்டு வைத்ததா என்ன? அவள் அவனின் நினைப்பால் பீடித்திருக்க ஆதுரசாலைக்கு வெகு அருகாமையில் இருந்த சிறு குடிலை நோக்கி அப்போதுதான் மெதுவாய் நடந்து வந்தாள்.

 மனம் எங்கேயோ அலைபாய்ந்து கொண்டிருக்க, அவளின் பாதங்களோ பழகிய வழித்தடம் என்பதால் பாதை மாறாமல் கொண்டு வந்து சேர்த்தது. அந்த சிறு குடிலின் வாசலில் பூக்கள் அக்னீஸ்வரியை அழகாய் வரவேற்க அவள் அவற்றை எல்லாம் கவனிக்கவில்லை. அருகில் இருந்த ஆதுர சாலையில் ருத்ரதேவனின் வருகையால் ஏற்பட்டிருந்த சலசலப்பையும் கவனிக்கவில்லை.

வாசலில் பிணைக்கப்பட்ட அவனின் கம்பீரமான குதிரை அவளைக் கண்டதும் தன் எஜமானனின் மனம் புரிந்து கனைத்து அழைக்க, அந்தச் சத்தமும் அவள் செவியில் விழவில்லை. ஆனால் அந்தக் கனைப்பின் அழைப்பை வைத்தியரிடம் பேசிக் கொண்டிருந்த ருத்ரதேவன் கவனித்துக் காரணம் புரியாமல் திகைத்தான்.

chitti.jayaraman has reacted to this post.
chitti.jayaraman

You cannot copy content