You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's AOA - 19

Quote

19

பேரண்டம்(universe) என்பது அனைத்தையும் உள்ளடக்கியது எனக் கூறலாம். பேரண்டத்தின் ஒரு பகுதியே அண்டம்! அந்த அண்டத்தில் பிண்டம் (body) என்பது அதனின் சிறு வடிவே.

ஷெர்லியின் விழிகள் வியப்பில் ஆழ்ந்து அசையாமல் நின்றுவிட்டன. புவியீர்ப்பு விசை என்ற ஒன்றை அவள் பாதங்கள் அப்போது உணரவேயில்லை. அவள் கால்கள் மிதப்பது போன்றிருந்தது.

எப்போதுமே முன்னோக்கி பாயும் கடலலைகள் இப்போது தன் கரைகளை விட்டு பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.

“ஓ எம்ஜி!” என்று அவள் இதுவரை பார்த்திராத அந்தக் காட்சியை அதிசயித்து பார்த்துக் கொண்டிருக்க,

கைப்பேசியில் அவளிடம் தொடர்பு கொண்டிருந்த ஹரி, “ஷெர்லி என்னாச்சு? நீயும் பிரபாவும் எங்க போனீங்க?” என்றவர், அதற்குள்ளாக பிரபாவும் வீட்டில் இல்லையென்பதைக் கண்டறிந்து அச்சத்தோடு வினவினார்.

அவள், “ஹரி” என்றாள். அதற்கு மேல் அவளுக்குப் பேச வார்த்தைகளே வரவில்லை. சீறிபாயும் கடலலைகள் மொத்தமாக வடிந்து பின்வாங்கியிருந்த அந்தக் காட்சியை வியப்போடு பார்த்திருந்தாள்.

 “ஷெர்லி வேர் ஆர் யு?” என்று ஹரி சத்தமாகக் கேட்கவும்,

“டென்ஷன் ஆகாதீங்க! வீ ஆர் சேஃப்” என்றாள்.

அவருக்கு அப்போதுதான் மூச்சே வந்தது.

“நான் திரும்பியும் கூப்பிடுறேன் ஹரி” என்று சொல்லி அதன் பின் அழைப்பைத் துண்டித்துவிட்டாள். அந்தச் சூழ்நிலையில் அவளால் விவரமாக எதுவும் பேச முடியவில்லை. அவளுக்குத் தலை இன்னும் பலமாகச் சுழன்றது.

பிரபாவையும் கடலலைகளையும் மாறி மாறிப் பார்த்தவள் அப்படியே கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டாள். அவள் பார்வை பிரபஞ்சன் மீதுதான் பதிந்திருந்தது. அவள் தாத்தா அவளிடம் எப்போதோ சொன்ன விஷயம் அவள் நினைவிற்கு வந்தது.

‘பிரேசிலில் உள்ள ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்பிற்கும் டெக்சாஸிலுள்ள சூராவளிக்குமே தொடர்பிருக்கிறது என்ற கேயாஸ் தியரி.’ அந்தக் கருத்துப்படி ஒரு பேரழிவும் கூட ஏதோ ஒரு சிறு மையப் புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது என்பதுதான்.

 அதேபோல பிரபஞ்சனின் இந்த நிலைக்கும் கடல் உள்வாங்கியிருப்பதற்கும் விவரிக்க முடியாத ஆழமான தொடர்பிருக்கிறது என்று யோசிக்கும் போதே ஷெர்லியின் தேகம் சிலிர்த்துக் கொண்டது.

சுனாமி வரும் போது சில இடங்களில் கடல் உள்வாங்குவது என்பது இயற்கையான ஒன்று. ஆனால் இங்கே இந்த நொடி கடல் உள்வாங்கியிருப்பது பிரபஞ்சன்தான் காரணம் என்றே தோன்றியது. இந்தப் பூமியின் ஈடு இணையற்ற சக்தியான கடல் அவன் சக்தியின் முன்னே மண்டியிட்டு பின்வாங்கியது போன்றே அந்த அபூர்வக் காட்சி தென்பட்டது.

அந்த அதிசய காட்சியை எத்தனை நேரம் அவள் அப்படியே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் என்று அவளுக்கே தெரியாது.

இன்னொரு புறம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் ஊழியர்களும் அந்தக் காட்சியைத்தான் ஆச்சர்யத்தோடுப் பார்த்திருந்தனர்.

அதன் பின் வெகுவாக அவர்கள் மனம் ஆசுவாசப்பட்டது. ஏதோ ஒரு பெரிய சக்திதான் நடக்கவிருந்த மோசமான விபத்திலிருந்து அவர்களையும் அந்த இடத்தைச் சுற்றி வசிக்கும் பல்லாயிரம் மக்களையும் காப்பாற்றியிருக்கிறது.

எல்லோரும் அவரவர்கள் மதம் சார்ந்த கடவுளை மனமுவந்து வேண்டி நன்றியுறைத்துவிட்டு மீண்டும் அந்த யூனிடிற்குள் சென்றனர். இனி சுனாமியின் பயமில்லை என்ற நிம்மதியோடு அந்த அணுஉலையிலுள்ள பிரச்சனையைக் கண்டறிந்து சரி செய்துவிட எண்ணினர்.

தொலைக்காட்சிகள் பரபரப்போடு சுனாமி பேரலைகளின் ருத்ரதாண்டவத்தைக் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தன. தமிழகத்தில் சென்னை மற்றும் கடலோர பகுதிகளில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியிருந்த அந்தக் காட்சிகளைப் பார்த்து எல்லோருமே அதிர்ந்திருந்தனர்.

 அதேநேரம் சில இடங்களில் கடல் உள்வாங்கிய காட்சிகளையும் விவரித்து கொண்டிருந்தார்கள். அதில் கல்பாக்கமும் அதனை சுற்றியுள்ள கடலோர பகுதிகளும் அடங்கும்.

ஹரியோடு சேர்ந்து இந்தச் செய்தியைப் பார்த்திருந்த லோகநாதனுக்கு அடங்கா வியப்பு உண்டானது. சத்யாவோ மிகுந்த சந்தோஷத்தோடு, “அப்போ நம்ம எல்லாம் தப்பிச்சோம்” என்று பெருமூச்செறிந்தான்.

“ஆமான்டா… எந்தக் கடவுள் புண்ணியமோ” என்று அவன் தமக்கை வேணி சொல்ல, லோகநாதன் முகத்திலும் நிம்மதி படர்ந்தது.

அவர்கள் எல்லோருமே நிம்மதியான மனநிலையோடு பேசிக் கொண்டிருக்க, அப்போதைய ஹரியின் மனநிலையோ ஷெர்லி பிரபாவைப் பற்றிய கவலையிலிருந்தது.

உடனடியாக ஹரிஅவர்கள் யார் கவனத்தையும் ஈர்க்காமல் வீட்டை விட்டு வெளியே வந்து கடற்கரை நோக்கி நடந்தார். அவர் நடந்து வந்து கொண்டிருந்த போதே அந்த ஊர் மீனவர்கள் எல்லோரும் அவரை வழிமறித்து,

 “பிரபா எங்க? அவரை பார்க்கணும்… தம்பிக்கு நன்றி சொல்லணும்” என்று கேட்டனர். உண்மையில் அவர்களை எந்தச் சக்தியோ பெரிய இழப்பிலிருந்து காப்பாற்றிவிட்டது என்றாலும் பிரபா அதனை முன்னமே உணர்ந்து அவர்களுக்கு எச்சரிக்கைச் செய்ததை எண்ணும் போதே, அவர்கள் பூரிப்பிலும் ஆச்சர்யமும் அடைந்தனர். அவர்களுக்கு எப்போதுமே பிரபா ஒரு  அதிசிய பிறவிதான். இம்முறையும் அவன் அதனை நிருபித்துவிட்டான்.

ஹரி அவர்களிடம் என்ன சொல்வதென்று புரியாமல் சில நொடிகள் குழம்பியவர் பின், “அவன் இப்போ இங்க இல்ல… வீட்டுக்கு வந்ததும் உங்களை வந்து பார்க்க சொல்றேனே!” என்று சமாளித்துவிட்டு நகர்ந்தார்.

ஹரி பிறகு ஷெர்லியையும் பிரபாவையும் தேடிக் கொண்டு நடந்தவர் ஷெர்லியின் பேசிக்கு அழைப்பு விடுத்தார். அவள் அவர் அழைப்பை ஏற்பதற்கு முன்னதாகவே அவர்களைக் கடற்கரையில் பார்த்துவிட்டு ஓடி வந்தார்.

“ஷெர்லி” என்ற ஹரியின் அழைப்பு கேட்டு அவரைப் பார்த்துவிட்டு எழுந்து கொண்டவள், அவரை வேதனை நிரம்ப பார்த்தாள்.

ஹரியின் பார்வை ஷெர்லியைப் பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்ட அதேநேரம் பிரபாவைப் பார்த்து குழம்பியது. அவன் எப்போதும் விடியற்காலையில் யோகாசன பயிற்சிகள் செய்து பார்த்திருக்கிறார். ஆனால் இன்று என்ன புதிதாக அவன் இங்கே அமர்ந்திருக்கிறான் என்ற யோசனையோடு அவர் ஷெர்லியின் புறம் திரும்ப, அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

இன்னும் அவள் உணர்ந்த விஷயத்தை நிஜமென்று நம்ப முடியாத அதிர்ச்சியிலிருந்தாள்.

ஹரி ஷெர்லியின் முகத்தைப் பார்த்தே ஏதோ பிரச்சனை என்று கணித்தவர், “என்னாச்சு ஷெர்லி? நீ எப்போ இங்க வந்த? பிரபா என்ன பண்றான்?” என்று அவர் வரிசையாக அவளிடம் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தார்.

“ஹரி” என்றவள் அவனைப் பற்றி என்ன சொல்வது எப்படி சொல்வது என்று புரியாமல் மீண்டும் மௌனமாக கடலைப் பார்த்தபடி திரும்பி நின்று கொண்டாள்.

குழப்பமாக நின்ற ஹரி நேராகப் பிரபாவை நெருங்கி சென்றார். எப்போதுமே பிரபா பத்மாசன நிலையிலிருக்கும் போது ஹரி அவனை எந்தக் காரணம் கொண்டும் தொந்தரவு செய்யமாட்டார். ஆனால் இன்று ஏனோ அப்படி விட முடியவில்லை. அவனை எழுப்பியே தீர வேண்டுமென்று மனம் சொன்ன கட்டளையைக் கேட்டு அவர் அவனைத் தொட போகும் போது ஷெர்லி அவர் கைகளைப் பிடித்து பின்னே இழுத்துவிட்டாள்.

“டோன்ட்” என்று அச்சத்தோடு அவள் அவரைத் தடுக்க,

“என்ன ஷெர்லி? என்னாச்சு… அதையாச்சும் சொல்லு” என்றவர் அவளை அழுத்தமாக வினவ, அவள் மெல்ல அவனைத் தேடி வந்தது முதல் அவளுக்கு நடந்ததை விவரித்தாள்.

“நிஜமாவா?” என்றவர் நம்ப முடியாமல் கேட்கவும், “எஸ்” என்று அழுத்தி சொன்ன அவள் விழிகளில் அப்போது கண்ணீர் நிறைத்திருந்தது. அந்தக் கண்ணீரைப் பார்த்த பின்பும் அவரால் அவள் சொல்வதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

“என்னடா பண்ணி வைச்சிருக்க பிரபா” என்று ஆதங்கத்தோடுக் கேட்டு அவனை, “பிரபா” என்று அழைத்து பார்க்க, “உஹும்… நோ யூஸ் ஹரி… அவர் நம்ம பேசுற எதுக்குமே ரியாக்ட் பண்ண மாட்டிறாரு” என்றாள் ஷெர்லி.

துவண்டபடி ஹரி அப்படியே மணலில் அமர்ந்து கொள்ள ஷெர்லி அவரருகில் அமர்ந்து கொண்டாள். இருவருமே அவனாக எழுந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் அமர்ந்தனர்.

இரவு நடுநிசியை எட்டியது. கல்பாக்கம் அணுமின் நிலையம்.

அங்கிருந்த எல்லோருமே அந்த இயந்திர கோளாறை சரி செய்ய தீவிரமாக தங்களாலான முயற்சியைச் செய்து கொண்டிருந்தனர். பிரச்சனனயின் மூலத்தைக் கண்டுபிடிப்பதற்குள் அணுக்கசிவின் அளவு அதிகரித்து கொண்டேயிருந்தது.

இப்படியே போனால் அந்த யூனிட் இன்னொரு செர்னோபில்லை கண் முன்னே காட்டிவிடுமோ என்று அச்சத்தை உருவாக்கியிருந்தது. ஆனால் இன்னும் அந்த மாதிரி எந்த ஆபத்தும் நிகழாமல் ஏதோ ஒரு சக்திதான் அவர்களை இந்த நொடி வரை காப்பற்றிக் கொண்டிருந்தது என்று மட்டும் புரிந்தது.

நேரம் கடந்து சென்று கொண்டேயிருந்தது. பிரபா கண்விழிக்கவேயில்லை. அவனைச் சுற்றிலும் அங்கு வசிக்கும் மீனவ கூட்டம் சூழ்ந்து கொண்டது. ஹரியோடு லோகநாதனும் சத்யாவும் நின்றிருந்தனர்.

“பிரபா… ப்ளீஸ் கெட்அப்” என்று வாயிற்குள் முனகியபடி கவலை தோய்ந்த முகத்தோடு நின்றிருந்தாள் ஷெர்லி!

உள்வாங்கியிருந்த கடலலைகள் இன்னும் பழைய நிலைக்கு திரும்பாததால் அலைகளின் சத்தம் குறைந்து ஒருவித நிசப்த நிலை அங்கே சூழ்ந்திருந்தது.

எல்லோருமே பிரபாவை விட்டு ஒரு சில அடிகள் விலகியே நின்றனர். அங்கே வந்த மீனவ தலைவன் யார் சொல்வதையும் கேட்காமல் பிரபாவைத் தொட எத்தனித்து அலறிக் கொண்டு தள்ளி சென்று வீழ்ந்த அந்தக் காட்சி எல்லோரையுமே மிரட்சிக்குள்ளாக்கியது. யாருக்குமே நடப்பதையும் நடந்து கொண்டிருப்பதையும் என்னவென்று கணிக்கக் கூட முடியவில்லை.

அவன் உடம்பில் முன்பைவிடவும் உஷ்ணம் அதிகரித்திருந்தது. அந்த மீனவத் தலைவனின் விரல்கள் நெருப்பைத் தொட்டது போல் கைகள் வெந்து போயிருந்தன. அவனைச் சுற்றி கண்களுக்குத் தெரியாத நெருப்பு வளையம் உண்டாகியிருந்தது போன்ற உணர்வு!

ஹரி மிகுந்த வேதனையோடுக் காணப்பட்டார். சேதுதான் அவரருகில் நின்று சமாதானம் செய்து கொண்டிருந்தான். ஆனால் அவர் மனம் அவன் சொன்னதை காதில் கூட வாங்கவில்லை.

என்ன நடக்கிறது என்று யோசித்தபடி அதிர்ச்சியோடு நின்றவருக்கு அப்போதுதான் ஒரு எண்ணம் உதித்தது.

மணி அப்போது இரவு மூன்றை எட்டியிருந்தது.

அணுமின் நிலையத்தில் இயல்பைவிட உஷ்ணம் அதிகரித்து கொண்டே போனது. அங்கிருந்த எல்லோருடைய டென்ஷனும் அதிகரித்தது. மனதிலிருந்த நம்பிக்கை மொத்தமாக வடிந்து போனது.

புகுஷிமாவில் நடந்த அணு உலை விபத்தும் சரி. செர்னோபிலில் நடந்த உலை வெடிப்பும் சரி. அவை அந்தளவு பாதிப்பை உண்டாக்கியதற்கு காரணம் அங்கே சேகரித்து வைக்கப்பட்டிருந்த அணுகழிவுகள்தான்!

அதே நிலை கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கும் வந்தால் இங்கேயும் அதே அவல நிலைதான். அந்த அணுஉலையில் பணிபுரிந்து கொண்டிருந்த அனைவரையும் பெரிதாக அச்சம் சூழ்ந்து கொண்டது. நிலைமை சீராகும் என்ற நம்பிக்கை அவர்கள் மனதை விட்டு மெல்ல நீங்கியிருந்தது.

பிரபா இன்னும் கண்விழிக்கவில்லை. ஹரியின் பதட்டம் அதிகரித்து கொண்டே போனது. ஏதாவது செய்து அவனை விழிக்க வைக்க வேண்டுமென்று எண்ணிய ஹரிக்கு அப்போது ஒரே சிறிய நம்பிக்கை பிரபாவின் யோகசான ஆசான் குணபாலன் அவர்கள்தான்.

சேதுவை உடன் அழைத்து கொண்டு ஹரி அந்த இரவிலும் குணபாலன் வீட்டைத் தேடிக் கொண்டு சென்றார். அவர் வீட்டினைத் தேடிக் கண்டுபிடிக்கும்போது விடியற்காலை மணி ஐந்து!

குணபாலனின் பேத்தி வித்யாதான் கதவைத் திறந்தாள். முதலில் அவர்கள் அந்த நேரத்தில் வந்திருக்கும் காரணம் புரியாமல் அவள் குழம்பி நிற்க, ஹரி அவளிடம் நிலைமையின் தீவரத்தைச் சொல்லி குணபாலனைப் பார்க்க வேண்டுமென்று கேட்டார்.

முந்தைய தினம் பிரபா அங்கே வந்த செய்தியை வித்யா ஹரியிடம் சொல்லிக் கொண்டே அவர்கள் இருவரையும் குணபாலன் அறைக்கு அழைத்து சென்றாள்.

ஹரி அப்போது நடந்த விஷயங்களை விளக்கமாக குணபாலனிடம் தெரிவிக்க, அவருக்கு பிரபாவின் செய்கையின் மூலகாரணம் புரிந்து போனது.

அந்த நொடியே அவர் கண்களில் நீர் பிரவாகமாகப் பெருகியது. ஆனால் அந்தக் கண்ணீர் வேதனையால் வடிந்ததல்ல. தன் சிஷ்யனின் ஆற்றலைக் கேட்ட பெருமிதத்தில் வழிந்த ஆனந்தக் கண்ணீர்.

ஹரிக்கு குணபாலன் முகத்தைப் பார்த்து ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. பிரபாவின் செயலில் ஏதோ ஆழமான காரணமிருக்கிறது என்று மட்டும் புரிந்தது.

அவர் மனம் தாங்காமல், “ஐயா! பிரபாவை எப்படி விழிக்க வைக்கிறதுன்னு நீங்கதான் ஒரு வழி சொல்லணும்” என்று கேட்டார். குணபாலன் பதில் சொல்லாமல் அவர் படுக்கை எதிரே இருந்த புத்தக அலமாரியை காண்பித்து ‘அண்டமும் பிண்டமும்’ என்ற புத்தகத்தின் பெயரை குறிப்பிட்டு எடுத்து வர சொன்னார். ஹரியும் அதனை எடுத்து வந்து கொடுக்க, குணபாலன் அதிலிருந்த ஒரு பக்கத்தைத் திருப்பி ஹரியிடம் தந்துவிட்டார்.

குணபாலனுக்கு அந்த விஷயத்தைச் சொல்ல தைரியமில்லை.

ஹரி அந்தப் பக்கத்தைப் படித்துக் கொண்டிருக்கும் போது சூரியன் மெல்ல வானில் எழும்பிக் கொண்டிருந்தான்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நிலைமை சீராகும் நம்பிக்கை எல்லோருக்கும் குன்றிக்கொண்டேயிருந்த நிலையில் அந்த இயந்திர கோளாறின்ஆணிவேரான மூலத்தை அவர்கள் கண்டறிந்தனர். அந்தக் கணமே அவர்கள் எல்லோர் மனதில் மெல்ல நம்பிக்கைப் படர்ந்தது.

அதேநேரம் அடுத்த நாளின் விடியலை நோக்கி அனைத்து ஜீவராசிகளும் காத்திருந்தன.

‘நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியர்களின் உஷ்ணத்தைத் தாங்கக் கூடிய சக்தி உள்ளது. மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையது. அது அசுத்த மாயா காரிய அணுக்களால், ராக துவேஷங்களால் திரையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாய காரிய அணுக்கள் சுத்த அணுக்களாக மாறுவதற்கும் உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்று நமது வள்ளல் பெருமான் கூறி இருக்கிறார்கள்.’

அண்டத்தினுள்ளேஅளப்பரிதானவள்
பிண்டத்தினுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தினுள்ளே குணம் பலகாணினும்
கண்டத்தினுள்ளே கலப்பறியார்களே!

இது திருமூலரின் திருமந்திரப் பாடல்.

படித்து கொண்டிருந்த ஹரிக்கு அதற்கு பின்னாக நிறைய அதிர்ச்சிகள் வரிசையாக காத்திருந்தன. அதற்கு மேல் மனம் தாங்காமல் புத்தகத்தை நழுவவிட்டார்.

குணபாலன் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. ஆனால் அதோடு கூடவே ஒரு நம்பிக்கையற்ற பார்வை ஹரி மனதை பிசைய, “ஐயா!” என்று கண்ணீரோடு அவரைப் பார்க்க,

“ஆருட சமாதி நிலை… பிரபா இத்தனை நாளா இதை பத்தின ஆராய்ச்சியைதான் செஞ்சிட்டு இருந்தான்… அவன் இந்தளவு தீவிரமான பிரம்மச்சரியம் கடைபிடிச்சதும் இதற்காகத்தான்” என்றார்.

ஹரிக்கு சில நாட்கள் முன்பு பிரபா சொன்ன விஷயங்கள் நினைவுக்கு வந்தன.

“மனிதனுக்குள் இருக்கும் கடவுள் சக்தியை உணர வேண்டும்… அதான் என்னோட தீஸிஸ்” என்றான்.

“அதெப்படிறா முடியும்?” என்று ஹரி சிரித்து கொண்டே கேட்க, அதற்கு பிரபா சொன்ன விளக்கம் இப்போது அவர் நினைவுக்கு வந்தது.

“இந்த உடல் 16 அலைகளால் ஆனது. மனமாகவும், புத்தியாகவும் இயங்குபவை 19 அலைகள். மின்காந்த சக்திதான் இந்த 35 அலைகளாக இயங்குது. இதுதான் நம்மை அலைக்கழிக்கின்றன. இந்தச் சக்தி அனைத்தையும் அலை பாயாமல் நிறுத்தி நாம் ஒன்றுபடுத்தப் பயிலும் போது சக்தியெல்லாம் திரண்டு சிவம் என்ற நிலையை அடையும்…

இந்த அலைகளை நிலையாக நிறுத்த முதல் முயற்சியாக மூச்சைக் கட்டுப்படுத்தணும்… மூச்சு கட்டுப்பட்டால்தான் மனம் கட்டுப்படும். அதனால் தான் யோகா பயிற்சியில் மூச்சுப் பயிற்சி முக்கிய அங்கமா இருக்கு.

மூச்சை அடக்கி நிறுத்துவதைக் கும்பகம்னு சொல்லுவாங்க… அந்த நிலையில் எண்ணங்கள் இருக்காது. மனம் அடங்கி நிற்கும். மனம் அடங்குகின்றபோது ஆத்ம சக்தி பரவும்.

அன்றாட வாழ்க்கையில் நமக்கு வருகின்ற பிரச்சனைகள் எல்லாம் பெரிது படுத்தப்படுவது நமது அறியாமையால் தான். ஆத்மத் தொடர்பு கொண்டவர்களுக்குப் பிரச்னைகள் இருக்காது. தீர்வு தான் இருக்கும்.

நாம் ஆத்மாவை இனித்தான்அடையணும்னு இல்ல. ஏற்கனவே நாம் ஆத்மா தான். அதை நாம் புரிஞ்சிக்கணும்…

நம்ம வாழ்க்கையைக் கொண்டு செலுத்துவதும், உரிய வழிகாட்டிகளைத் தருவதும் கூட இறைவன் தான். நாம் இந்தப் பாதையை நோக்கித் திரும்புகின்ற வரை நாம் இதை நோக்கித்தான் செலுத்தப் படுகின்றோம்னு கூட நமக்குத் தெரியாது. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னுதான் நினைக்க தோணும்

ஆனால் எல்லாவற்றிற்கும் பின்னால் அவன் கை இருக்குன்னு ஞானம் பெற்ற பிறகுதான் விளங்கும். அவன் தான் நான் என்பது புரியும் போது நம்ம ஓட்டம் நின்னுடும்.

மனிதனாகிய நமது சக்தி ஓட்டம் நிறுத்தப்பட்டால் நாம் அந்நிலையில் சிவமாக மாறுகின்றோம். ஜீவனை சிவமாக்க மௌனம் அவசியம். இங்கு மௌனம் என்பது வாய் பேசாமலிருக்கிறது இல்ல. எண்ண அலைகள் எழாத நிலையும் அல்ல. ஆத்ம இணைவில் ஏற்டுகின்ற நிறைவு.” என்று அவன் சொல்லி முடித்த போது ஹரி அலட்சியமாக, “போடா! நீ சொல்றது ஒன்னும் விளங்கல” என்று சொல்லி எழுந்து சென்றுவிட்டார்.

“ஒரு நாள் உங்களுக்கு நான் சொன்னது புரியும்” என்றவன் சொன்ன வாக்கியம் இப்போது ஹரியின் மனதைப் பலமாக தாக்கியது.

“உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் தெள்ளத்தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்” என்று அவன் இன்று புரிய வைத்துவிட்டான்.

ஹரி ஸ்தம்பித்தபடி நிற்க குணபாலன் அப்போது,

“இனி அவன் இந்தப் பூலோக வாழ்விற்குத் திரும்பமாட்டான்… அவன் உடலோட உஷ்ணம் குறையும்போது அவன் ஆன்மா இந்தப் பிரபஞ்ச சக்தியாக மாறி பிரபஞ்சத்தோட கலந்துவிடும்” என்றார்.

ஹரி எல்லாவற்றையும் கேட்டுக் கலங்கி கனத்த மனதோடு அங்கிருந்து புறப்பட்டார்.

வானம் வெளுத்து பூமியில் வெளிச்சம் பரவியிருந்தது. பூமியின் சுழற்சியில் ஒரு பக்கம் காரிருள் சூழ இன்னொரு புறம் வெளிச்சம் படர தொடங்குவதே இந்தப்   பிரபஞ்சத்தின் விதி!

அந்த நேரம் கல்பாக்கம் அணுஉலையின் பிரச்சனைக் கண்டறியப்பட்டு அது மிகுந்த சிரத்தையோடும் கவனத்தோடும் சீர் செய்யப்பட்டிருந்தது. முனைப்போடு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் மனதில் அப்போதே நிம்மதி படர்ந்தது.

இனி எந்தப் பிரச்சனையும் இல்லை என்று அவர்கள் அமைதியடைந்தனர்.

Quote

herbal chelation [url= https://forums.dieviete.lv/profils/127605/forum/ ] https://forums.dieviete.lv/profils/127605/forum/ [/url] natural ibs remedies

You cannot copy content