You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's AOA - 21

Quote

21

இலெமூரியா - இன்று வாழும் இலெமூர் எனப்படும் புதுவின விலங்கினம் மடகாஸ்கர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.

பிலிப்ஸ்க்லேடெர் என்னும் ஆராய்ச்சியாளர் தனது கூற்றுகளில் இலெமூர் இன விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன எனவும் மேலும் இவ்வகை தொல்லுயிர் எச்சம் ஆப்பிரிக்க மற்றும் கிழக்கு-அரபு கண்டங்களில் இல்லை எனவும் விளக்குகிறார்.

இவ்வாறு ஏற்பட்ட கணிப்பின் படி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா மற்றும் அதன் நிலப்பரப்பு பரந்து விரிந்து ஆப்பிரிக்க கண்டங்களுடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அச்சமயம் இருக்கப்பெற்ற இலெமூரியாக் கண்டமானது பல அரிய ஆன்மீக சக்திகள் பல கொண்ட இனங்களின் தலைமையிடமெனச் சிலர் கூறுகின்றனர்.

அஃது போலவே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலெமூரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றியிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள் பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லையெனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது.

தான் இத்தனை மணி நேரம் ராஜநாகம் கடித்து உயிரோடு இருப்பதே ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. அதற்கு பின்னணியில் நிச்சயம் அவளின் கைங்கரியம் இருக்கிறது. ஆனால் அது என்ன? எப்படி? என்பதுதான் என் மூளைக்கு எட்டவில்லை.

அந்தக் குழப்பத்திற்கெல்லாம் மேலான குழப்பம் அவள் எதற்காக என்னைக் காப்பாற்ற இத்தனை மெனக்கெடுகிறாள் என்பதுதான்.

நான் இப்படி யோசித்திருக்கும் போதே அவள் ஏதேதோ இலைகளை பறித்து எடுத்துவந்து என் கால்களில் கட்டிக்கொண்டிருந்தாள். என்ன செய்கிறாள் என்று கேட்டாலும், அவள் சொல்லும் பதில் எனக்கு புரியபோவதில்லை என்பதால் நானும் வீணாக அவளிடம் எதுவும் கேட்டு கொள்ளவில்லை. ஆனால் அவள் செய்கைகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்தேன்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அவள் என் முகத்திற்கு நேராக குனிந்து சமிக்ஞையால், ‘என்னை அமைதியாக அப்படியே படுத்திருக்க சொல்லிவிட்டு எங்கேயோ சென்றுவிட்டாள்.’

அவள் சென்ற மறுநொடியிலிருந்து எனக்கு இருப்பு கொள்ளவில்லை. கை கால்களை கூட அசைக்க இயலாமல் அப்படியே படுத்திருப்பது மிகுந்த வேதனையாக இருந்தது.

இன்னொரு புறம் என் மனம் மீண்டும் அவளை திரும்பி பார்ப்போமா என்ற தவிப்பில் கிடந்தது. அவள் சீக்கிரம் வர வேண்டுமே என்று எனக்குள் நொடிக்கு நொடி ஆவலும் எதிர்ப்பார்ப்பும் பெருகிக் கொண்டேபோனது.

அவளுக்கான காத்திருப்பில் நான் மரணத்தின் பிடியில் இருக்கிறேன் என்பதை கூட மறந்து போனேன். ஆனால் ஏதோ ஒரு நம்பிக்கை அவள் என்னைக் காப்பற்றிவிடுவாள் என்று ஆணித்தரமாக சொன்னது.

அவள் எப்போது வருவாள் என்ற என் காத்திருப்பு நீண்டு கொண்டேயிருக்க, அப்போது அவள் பரபரப்பாக தன் ஊர் மக்களை அழைத்து வந்திருந்தாள். அந்த சமயம் என் கண்பார்வை மெல்ல மெல்ல மங்கிக்கொண்டிருந்தது. என்னால் அவர்கள் யாரையும் சரியாகப் பார்க்க கூட முடியவில்லை. ராஜநாகத்தின் விஷம் தீவிரமாக எனக்குள் வேலை செய்ய தொடங்கிவிட்டது போலும்.

அதன் பின் என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் தெளிவாக விளங்கி கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் என்னைத் தூக்கி கொண்டுச் சென்றதை என்னால் உணர முடிந்தது. எங்கே என்னைக் கொண்டு சென்றார்கள்? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்று எதையும் என்னால் பார்க்கவும் முடியவில்லை. அதேநேரம் அவர்கள் பேசும் மொழி செய்கை என்று எதையும் புரிந்து கொள்ளவும் முடியவில்லை.

ஆனால் யாரென்றே தெரியாத என்னை அந்த மலைவாசி மக்கள் கண்ணும் கருத்துமாகக் கவனித்து கொண்ட விதமும் எனக்கு தேவையானவற்றை அவர்கள் மிகுந்த சிரத்தையோடு பார்த்து பார்த்து செய்த விதமும், என்னை வியப்புக்குள்ளாக்கியது.

அதே சமயம் நான் குணமாக வேண்டுமென்று அவர்கள் மிகுந்த சிரத்தையோடு எனக்கு வைத்தியம் பார்த்தனர்.

செயலிழந்திருந்த என் உடல் பாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சிகளைப் பெற ஆரம்பித்தன. ஆனால் அந்த பத்து நாட்களில் என் விழிகள் சுமந்தது இருளை மட்டும்தான். என்னால் பார்க்கவே முடியாமல் போய்விடுமோ என்று உள்ளுர அச்சம் படர்ந்தது. அந்தப் பத்து நாட்கள்தான் என் வாழ்வின் மிகவும் மோசமான நாட்கள் என்று சொல்லுவேன்.

ஆனால் அப்படியொரு சூழ்நிலையிலும் என்னை உயிர்ப்போடு வைத்திருந்தது… அவ்வப்போது தீண்டிவிட்டு சென்ற அந்தப் பெண்ணின் ஸ்பரிசம்… எனக்கு தெரியும்… அது நிச்சயம் அவள்தான்!

நாட்கள் கரைந்து செல்ல, அவர்கள் எனக்கு செய்த மருத்துவத்தின் பலனாக என் உடல் பாகங்கள் பழையபடி இயங்க ஆரம்பித்தது. எனக்கு கண் பார்வையும் தெரிய ஆரம்பித்தது.

அந்த மலையின் முகடு பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது. இயற்கையின் கண்கொள்ளாக் காட்சி அவை. இத்தனை நாளாக கண்பார்வைக் குன்றியிருந்த காரணத்தால் இந்தச் அழகான காட்சியைப் பார்த்து ரசிக்க முடியாமல் போயிருந்தது.

அந்த மலையின் உச்சியில் சிறு சிறு கூடாரம் போல் அமைத்து அந்த மக்கள் அனைவரும் அங்கே ஒரே கூட்டமாக வசித்திருந்தனர். அந்த கூடாரங்கள் குச்சிகளை குறுக்கே ஒன்றோடு ஒன்று பிணைத்திருந்தன. அதேநேரம் குச்சிகளின் துவாரங்களின் வழி களிமண் பூச்சுக் கொண்டு பூசிவிட்டு ஓலைகள் கொண்டு அவர்கள் மேற்கூரை வேய்ந்திருந்ததைப் பார்க்கவே அழகாக இருந்தது.

அங்கே மொத்தமாக பத்து இருபது கூடாரங்கள் மட்டுமே இருந்தன. என்னையும் அப்படியொரு வீட்டில்தான் தங்க வைத்திருந்தனர். என்னை ஒரு வயதான முதியவர்தான் வைத்தியம் பார்த்து கவனித்து கொண்டார்.

காடுகள் மலைகள் என்று முப்பொழுதும் வாழ்ந்து பழகியவன், ஆனால் அவர்களுடன் வசிப்பது எனக்கு உண்மையில் புது அனுபவமாகத்தான் இருந்தது.

எல்லோருமே ஒரே கூட்டமாக ஒற்றுமையாக அங்கே குடில் அமைத்து வசித்து வந்ததைப் பார்க்க மிகவும் அழகாக இருந்தது. அங்கே அவர்களோடு வசிப்பது எனக்கும் பிடித்திருந்தது.

அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் சாதாரண மக்களிடமிருந்து முற்றிலுமாக வித்தியாசப்பட்டது. பெண்கள் தங்கள் மேலங்கங்களை மறைத்தபடி நீண்டதாக ஒரு துணியை அவர்கள் உடல் முழுக்க சுற்றியிருந்தனர். ஆண்கள் தங்கள் இடைகளில் அதே போல் ஒரு துணியைக் கட்டிக் கொண்டு கூடவே தோளில் துண்டு போட்டிருந்தனர்.

அதுவும் அவர்கள் தினமும் கொண்டு வரும் அரிய வகையான பழங்களின் ருசிக்கு என் நாக்கு அடிமையாகி போனது. அதேநேரம் அவர்கள் மாமிச உணவுகளை விறகு அடுப்புகள் கொண்டு சமைக்கும்போதே அதன் வாசனை என் நாசியைத் துளைக்க ஆரம்பித்துவிடும். அந்த உணவுகளின் ருசி என்னை வேறொரு உலகத்திற்கே இட்டு சென்றது.

அவர்கள் தாங்கள் சமைத்த உணவுகளைத் தடித்த இலைகளிலும் மரப்பட்டைகளிலும் வைத்து பரிமாறினர். சமைக்க வேண்டிய உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்கள் அனைத்தையும் அவர்கள் வசிக்கும் இடங்களைச் சுற்றியே பயிரிட்டுக் கொண்டனர். அதேநேரம் தாளிக்கும் எண்ணெய்களுக்காக மரத்தின் வித்துகளிலிருந்து வழிந்த நெய் போன்ற ஒரு திரவத்தை உபயோகம் செய்தனர். 

முழுக்க முழுக்க அந்த மலைவாழ் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வந்தனர். அதேநேரம் இந்த மக்களின் செயல்பாடுகளை நான் கவனித்தவரை அவர்கள் சாதராண மலைவாசிகள் என்று எனக்கு தோன்றவில்லை.

பெரும் வரலாற்று பின்னணிகள் கொண்ட மக்களாகவே எனக்கு தோன்றியது. அவர்கள் பேச்சு நடை, உடை, பாவனை செய்யும் செயல்களிலான நேர்த்தி உடலமைப்பு வாழும் முறைமை என்று யாவும் பழமைத்துவமும் உயர்மட்ட நாகரிகமும் கொண்டவையாக இருந்தது.

மலையடிவாரத்தில் வசிக்கும் கிராமத்து மக்கள் சொன்னது என் நினைவுக்கு வந்தது. ‘அவர்களின் கடவுளர்கள் அந்த மலை மீது வசிக்கிறார்கள் என்று!’

அந்த நம்பிக்கைக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

அதுவும் இதுநாள் வரை அந்த மக்கள் எந்த கடவுளையும் வணங்கவில்லை. எந்த இறை வழிப்பாடுகளும் அவர்கள் இதுநாள் வரை செய்தது போல் தெரியவில்லை.

இந்த விஷயம்தான் என்னை மிகுந்த ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. எல்லா இன மக்களும் அவர்களுக்கென்று ஒரு இறை வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். ஆதிவாசிகள் உட்பட.

ஆனால் இவர்கள் யாருமே கடவுள் என்ற ஒன்றினைப் பற்றி யோசிப்பது கூட இல்லை. அவரவர்கள் தங்களின் அன்றாட வேலைகளை கவனிப்பது உண்பதற்கு காய்கறிகள் விளைவிப்பது, தேவைக்கு அதிகமாக இருப்பதைக் கீழே உள்ள கிராம மக்களுக்குக் கொண்டு சென்று விற்று வருவது என்றிருந்தனர்.

அதேநேரம் விற்றப் பொருட்களுக்கு ஈடாக தங்களுக்குத் தேவையான துணிமணிகளை அவர்கள் வாங்கி கொள்கின்றனர். இருப்பினும் இது போன்று அடிக்கடி அவர்கள் மலையை விட்டு கீழே இறங்குவதில்லை. மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே!

அதுவும் ஆண்கள் மட்டுமே செல்கிறார்கள். பெண்கள் யாருமே அந்த மலைக்குக் கீழே இறங்குவது வழக்கமில்லை. அதேபோல மலைக்கு மேல் வர யாருக்குமே அனுமதி இல்லை. அப்படி அத்துமீறி வருபவர்களை ராஜநாகம் உயிரோடு விடுவதுமில்லை.

இதில் எனக்கு ஆச்சர்யமான விஷயம் ராஜநாகம் இந்த மலைவாசி மக்களை ஏன் தீண்டுவதில்லை? இல்லை அதுவே இவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கிறதா?

இப்படியாக எனக்கு அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிகுந்ததால் நான் முழுமையாக குணமானதை அவர்களிடம் காட்டிக் கொள்ளவில்லை. அந்த மக்களுடன் அங்கேயே வசித்து அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள விழைந்தேன். அதற்காக வேண்டி என் நாட்குறிப்பேட்டில் அவர்களைப் பற்றிய தகவல்களை எழுதி சேகரித்துக் கொண்டேன்.

நான் இப்படியொரு மனநிலையில் இருக்க, அந்தப் பெண் மட்டும் என்னைச் சுற்றியே வந்து கொண்டிருந்தாள். அவள் என்னை விட வயதில் ரொம்பவும் சிறியவள் என்பதாலும் அதேநேரம் காதல், திருமணம் போன்றவற்றின் மீது எனக்கு அதிகம் ஈடுபாடு இல்லாத காரணத்தாலும் அவளிடமிருந்து நான் விலகி இருக்க முயன்றேன். இருப்பினும் என் மனம்  அவளிடம் அலைப்பாய்ந்து கொண்டிருந்ததும் உண்மை. அவளைப் பார்க்க நான் தவிர்த்த போதும் தினம் தினம் அவள் வருகைக்காகக் காத்திருந்ததும் உண்மை!

இந்த இயற்கை எழில் கொஞ்சம் மலைகளில் அவளுடன் சுற்றித் திரிய வேண்டுமென்று மனிதினோரம் ஒரு ஆசைத் துடித்து கொண்டிருந்ததும் உண்மை.

இப்படி இருவேறு மனநிலையில் நான் சிக்கிக் தவித்துக் கொண்டிருக்க, நான் அறியாமலே அப்படியொரு வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.

அன்றொரு நாள் மாலை வேளை, நான் என் டைரியில் குறிப்பெழுதிக் கொண்டிருக்கும் போது  நான் வசித்திருந்த குடிலுக்குள் அந்தப் பெண் நுழைந்தாள்.

அவளை நான் திகைப்போடுப் பார்க்க அவள் புன்னகை முகத்தோடு செய்கையால் என்னை அவளுடன் வர சொல்லி அழைத்தாள். முதலில் தயக்கமாக இருந்தாலும் பின்னர் நான் அவள் பின்னோடு சென்றேன்.

மலைகளின் அடர்ந்த வனப்பகுதிகளுக்கு அவள் என்னை அழைத்து சென்றாள். நாங்கள் செல்லும் பாதைகளில் நீரோடைகள் சலசலத்து ஓடிக் கொண்டிருக்க, அருகே ஒரு அருவியூற்றின் சத்தம் என் செவிகளை நெருங்கி வந்தது.

அவள் என்னை அந்த அருவிக்குத்தான் அழைத்து செல்கிறாள் என்று எனக்கு புரிந்தது. எதுவும் பேச்சுக் கொடுக்காமல் அவள் பின்னோடு நடந்தேன். அவளுடனான அந்தக் காட்டுப் பயணம் மிகவும் ரசனையாகவும் அழகாகவும் இருந்தது.

நான் அந்த உணர்வை மனதார ரசிக்கத் தொடங்கிய சமயம் அருவியின் இரைச்சல் என்னை மிகவும் நெருங்கி வந்தது. என் மனம் அவள் பின்னோடு பயணிக்க, என் முளை அது தப்பு என்று எனக்கு அறிவுறுத்தியது.

அவள் என் எண்ணவோட்டங்களை அறியாதவளாக அங்கிருந்த செடிகளையும் புதர்களையும் விலக்கிக் கொண்டு என்னை உள்ளே அழைத்து சென்றாள்.

அந்தக் காட்சியைப் பார்த்து நான் வியந்து நின்றுவிட்டேன். காண கிடைக்காத ஓர் அரிதான காட்சிதான் அது. மலையின் உச்சிப் பகுதியிலிருந்து பேரிரைச்சலோடுக் கொட்டிக் கொண்டிருந்தது அந்த அருவி.

அதன் சாரலோ பாறை மீது பட்டு என் மீது தெறிக்கையில் என் தேகமெங்கும் குளிர் பரப்பியது. சிலிர்ப்பு உண்டானது.

அப்போது இன்னொரு வியப்புக்குரிய விஷயம் அரங்கேறியது. செந்தூரம் பூசி கொண்ட வானத்தில் அஸ்தமிக்க காத்திருந்த சூரியக்கதிர்கள் பட்ட நொடி, அந்த இடமே வானவில்லின் வண்ணங்ளால் பிரதிபலிக்க தொடங்கின.

இயற்கையின் ஆச்சரியங்களை வெறும் வார்த்தைகள் கொண்டு விவரிக்க முடியுமா என்ன? இயற்கையானது இறைவன் தீட்டிய வண்ண ஓவியம்!

பேச்சிழந்து என்னை மறந்த நிலையில் அந்தக் காட்சியை நான் பார்த்திருக்கும்போது அந்தப் பெண் என் முன்னே வந்து வண்ண மலர்களாலான ஓர் அழகிய மாலையை என் கழுத்தில் சூட்டினாள்.

நான் அதிர்ந்து அவளைப் பார்க்க, இந்த இயற்கையின் சாட்சியாக அவள் என்னை மணக்க விரும்புவதாகச் செய்கை மொழியில் உரைத்தாள்.

எனக்கு அந்த நொடி என்ன செய்வதென்றே புரியவில்லை. அதன் பிறகு அவள் அதே போல் ஒரு அழகிய பூமாலையை அணிவித்துவிட சொல்லி என்னிடத்தில் நீட்டினாள். அவள் யோசித்துதான் செய்கிறாளா? என்னைப் பற்றி என்ன தெரியும் அவளுக்கு. நான் அந்த மாலையை வாங்காமல் திரும்பி நடக்க, அவள் முகம் சுருங்கி போனது. என் முன்னே வந்து வழிமறித்தவள் வேறு எந்தப் பெண்ணையாவது விரும்புகிறேனா என்று செய்கை மொழியில் கேட்டாள்.

நான் இல்லையென்று தலையசைத்தேன். உடனடியாக அடுத்த கேள்வியாக என்னைப் பிடிக்கவில்லையா? என்று கேட்டாள். அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வேன்.

அவள் கண்களைப் பார்த்து என்னால் பொய்யுரைக்க முடியவில்லை. மெளனமாக அங்கிருந்த மரத்தில் சாய்ந்தபடி நின்று கொண்டேன். மொழிகள் புரியாவிட்டாலும் அவள் மனம் எனக்கு புரிந்தது. என் மனம் அவளுக்குப் புரிந்தது.

ஆனால் என் உலகம் வேறு. அவள் உலகம் வேறு. என் வாழ்க்கை வேறு. அவள் வாழ்க்கை வேறு. இதை எப்படி அவளுக்கு நான் புரிய வைப்பேன். மெளனமாக யோசனையில் ஆழ்ந்தேன்.

அருவி கொட்டும் சத்தம் அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்த சமயம், திடீரென்று தண்ணீரில் ஏதோ தவறி வீழ்வது போன்ற ஒலி என் மனதை உலுக்கியது. திரும்பி பார்த்த போது அவள் அந்த அருவி கொட்டி கொண்டிருந்த ஆழமான தண்ணீர் குளத்தில் குதித்துவிட்டிருந்தாள்.

பதறி போய் நான் அவளைக் காப்பாற்றும் நோக்கில் அந்த நீரின் ஆழமும் வேகமும் தெரியாமல் குதித்துவிட்டேன். அவளுக்கு எதுவும் நேர்ந்துவிட கூடாதே என்ற பதட்டம் மட்டுமே என் மனதில் இருந்தது.

ஆனால் விஷக்கடியால் பாதிக்கப்பட்ட காரணத்தால் என் உடலின் சக்தி மொத்தமும் வற்றியிருந்தது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்த என் ஆற்றலை மீட்டு கொண்டிருந்தேன். அந்த நிலையில் வீரியமாக பாய்ந்து ஓடும் நீர் வீழ்ச்சியில் எதிர் நீச்சலடிப்பது எனக்கு மிகுந்த சிரமமாக இருந்தது.

அந்தத் தண்ணீரின் அழுத்தம் என்னை உள்ளிழுத்து கொண்டு செல்ல, ஒரு பெண்ணின் மரணத்திற்கு நான் காரணமாகிவிட கூடாதே என்ற குற்றவுணர்வோடு தத்தளித்தேன்.

அப்போது ஒரு கரம் என்னை வலிந்து இழுத்து ஒரு பாறையின் அருகே தள்ளியது. அந்தப் பாறையைக் கெட்டியாக நான் பிடித்து ஏறி வந்த போது அவள் என் முன்னே நின்றிருந்தாள்.

என்னைக் காப்பாற்றியதும் அவள்தான் என்று அறிந்த போது ஒருவித அவமானமான உணர்வு. அவள் என்னை பார்த்து நக்கலாக சிரித்தாள்.

அந்தப் பார்வையிலும் புன்னகையிலும் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தது. அப்போதுதான் என் முட்டாள்தனமே புரிந்தது. அவள் அந்த மலைகளிலேயே பிறந்து வளர்ந்த பெண்.

அவளுக்கு நீச்சல் தெரியாமல் இருக்காது. இந்த அருவி வீழ்ச்சியின் ஆழம் தெரியாமலும் இருக்காது. தான்தான் அறிவீனமாக ஆழம் தெரியாமல் உள்ளே குதித்துவிட்டோம் என்று புரிந்தது. மூளையிலிருந்து சிந்தித்திருந்தால் அந்த விஷயம் எனக்கு பிடிப்பட்டிருக்கும். ஆனால் நான் மனதிலிருந்து சிந்தித்துவிட்டேன். அதுவும் அவளுக்காக!

அதன் மூலமாக என் மனதையும் எனக்குள் குடிக்கொண்டிருக்கும் அவளுக்கான தவிப்பையும் நானே அவளுக்கு காட்டியும் கொடுத்துவிட்டேன். வினாடி நேரத்தில் அவள் என்னை முட்டாளாக்கிவிட்டாளே!

அதுவும் அவள் கேலியான பார்வையோடு என்னைப் பார்த்த விதத்தில் எனக்குள் கோபத் தீ மூள, அவளை அந்த நொடி ஏதாவது செய்ய வேண்டுமென்று எல்லைகளை மீறி சிந்தித்தது என் மனம்.

அதேநேரம் அவள் தேக வளைவுகளைத் தெளிவாகக் காட்டிக் கொண்டிருந்த நீரில் நனைந்திருந்த அவளின் உடை என் மோக உணர்வுகளைத் தூண்டிவிட்டிருக்க,

பனியில் நனைந்த ரோஜா இதழ்களைப் போல ஈரம் சொட்டிக் கொண்டிருந்த அவள் இதழ்களின் மீதே என் பார்வை வீழ்ந்தது.

அவள் மீதான கோபத் தீ மோகத் தீயாக உருவெடுக்க, அவளை நெருங்கி அணைத்து அவள் இதழ்களில் முத்தம் பதித்தேன். இயற்கையின் சாட்சியாக அவள் எனக்கு மாலை சூட்டினாள். நான் அதே இயற்கையின் சாட்சியாக அவளையே எனக்கு மாலையாகச் சூட்டிக் கொண்டேன்.

சூரியன் அஸ்தமித்த அதே நேரத்தில் எங்கள் உறவு உதயமாகியிருந்தது. இயற்கையோடு இயற்கையாக… எந்த ஆதாரமும் இல்லாமல் மொழி பெயரென்று எதுவும் அறியாமல் மனதால் இணைந்து நாங்கள் இருவரும் உடல்களைப் பரிமாறி கொண்ட தருணம்.

அவளின் பெயர் ‘செல்லா’ என்பதை கூட பின்னாளில்தான் நான் அறிந்து கொண்டேன். செல்லா மீதான தீராத காமும் தெவிட்டாத காதலும் என் வாழ்க்கையே தடம் புரண்டு திசை மாற்றியது. அவளே என் உலகமாகி மாறிப் போனாள்.

நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதைக் குறித்து அங்குள்ள மக்கள் யாரும் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்பதுதான் வியப்பு! அதற்கு காரணம் அங்கே அவர்களிடத்தில் ஒரு வழக்கமிருந்தது. மலைவாசிப் பெண்கள் யார் மீது விருப்பம் கொள்கிறார்களோ அவர்களுடன் களவு கொள்ளும் உரிமை அந்தப் பெண்களுக்கு உண்டு. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் அதிலும் பெரிய சிக்கலிருந்தது.

அவர்கள் இன மக்கள் அவர்கள் இனத்தவரை தவிர வேற்று இனத்தவரை காதலிக்கக் கூடாது என்ற பகிரங்க தடை இல்லாவிட்டாலும் அந்தப் பெண்கள் மலையிறங்க அனுமதிக்காததற்கு காரணம் அதுதான்.

ஆனால் செல்லாவின் பிடிவாதம் அந்தத் தடையெல்லாம் நொறுக்கியது. நான் ராஜ நாகம் தீண்டி மரணிக்கும் தருவாயில் கிடந்த போது, அவள் அவர்கள் ஊராரிடம் என்னைக் காப்பாற்ற சொல்லி வாதாடி இருக்கிறாள். அவர்கள் சம்மதிக்காத காரணத்தால் என்னைக் காதலிப்பதாகவும் மணக்க விரும்புவதாகவும் என்னைக் காப்பாற்ற வேண்டி அவள் சொன்ன பொய்யால் என் உயிர் காப்பாற்றப்பட்டது.

இந்த விஷயங்களை எல்லாம் பின்னாளில் நான் தெரிந்து கொண்ட போது உண்மையிலேயே அவளின் தூய்மையான அன்பில் நெகிழ்ந்து போனேன். அவள் மொழியையும் கொஞ்சம் கொஞ்சமாக கற்கக் தொடங்கினேன். ஆனால் அவளுக்கு என் மொழியைக் கற்க வேண்டிய அவசியமிருக்கவில்லை.

என் ஆழ் மனதின் சிந்தனைகளைக் கூட ஒரு பார்வையாலேயே அறிந்து கொண்டு விடுவாள். பல நேரங்களில் அது கூட எனக்கு வியப்புக்குரியாகவே இருந்தது.

அதற்கு காரணம் அவர்கள் முன்னோர்களுக்கு மனதிலுள்ள எண்ணங்களைப் படிக்கும் ஆற்றல் இயல்பாகவே இருந்ததாம். அதில் செல்லா மட்டும் விதிவிலக்கா என்ன? அவளும் என் மனதின் எண்ணங்களைப் படித்துவிடுவாள்.

அவளுடன் வாழத் தொடங்கிய நாட்களிலிருந்து என் மனம் முழுக்க அவளே ஆக்கிரமித்து கொண்டாள். இயற்கையை விட காதல் மிக அழகானது என்று தோன்ற வைத்தாள்.

 என் நாடு… என் வாழ்க்கைமுறை… என் தேடல்… என்று எல்லாவற்றையும் மறந்து அவளுடன் ஓர் இனிமையான வாழ்க்கையை வாழ தொடங்கினேன். அதுவே பேரின்பம் என்று எண்ணினேன்.

அந்த ஒரு வருடத்தில் எனக்கும் செல்லாவிற்கும் இரட்டை குழந்தைகள் பிறந்தன. ஓர் ஆண் ஒரு பெண். ஆண் குழந்தை செல்வன். அவன் நிறத்தால் என்னை பிரதிபலித்தாலும் அவளை போன்று அழகான கருவிழிகள் கொண்டிருந்தான். பெண் குழந்தை நீலா, நிறத்தில் அவளைப் போன்று மாநிறமாக இருந்தாலும் என்னைப் போன்று அவள் பச்சை நிற விழிகள்  கொண்டிருந்தாள்.

****

இந்த வரிகளைப் படித்த ஷெர்லி சில நொடிகள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள். தன் தந்தைக்கு உடன் பிறந்த தங்கை இருந்திருப்பாள் என்று இதுவரை அவளின் தாத்தா கிறிஸ்டோபர் ஒரு முறை கூட சொன்னதில்லையே. அது ஏன்? எதனால்? அவளுக்குக் குழப்பமாக இருந்தது.

சில நிமிட யோசனைக்குப் பின் மீண்டும் அவள் படிக்கத் தொடங்கினாள்.

செல்லாவிற்கு செல்வன் என்றால் அதிக செல்லம். எனக்கோ நீலாதான் மிகவும் செல்லமானவள். கண் மூடித் திறப்பதற்குள் ஒரு வருடம் கடந்து சென்றுவிட்டது.

நானும் தமிழ் மொழியை சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டேன். அவர்கள் பேசுவதையும் விரைவாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அப்படித்தான் எனக்கு நிறைய சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன.

முக்கியமாக செல்லாவின் முன்னோர்கள் பற்றி.

அவர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையில் நிறைய விஷயங்களை ஆய்வு செய்து அதனை அவர்கள் செயல்படுத்தியும் இருக்கின்றனர்.

‘அணு’ என்பது தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்பு என்று நான் நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அந்த எண்ணத்தை செல்லா உடைத்தாள்.

 இந்தப் பிரபஞ்சத்தின் உயரிய சக்தியை எனக்குக் காண்பித்தாள். அது வெளியே எங்கும் இல்லை. அது நமக்குள்ளாகவே உறைந்து கிடக்கிறது என்பதைப் புரிய வைத்தாள்.

அடுத்த இரு வருடங்கள் இதைப் பற்றிய ஆழ்ந்து ஆராய்ச்சியில் இறங்கினேன். அந்த மக்களின் பாரம்பரியம் கிட்டத்தட்ட பல்லாயிரம் வருடங்கள் முன்பு என்ற என் கணிப்பு சரியாக இருந்தது. அவர்கள் முன்னோர்கள் வழி வழியாக சொன்ன கதையும் அவர்கள் அங்கே வந்து சேர்ந்த கதையும் ஏதோ ஒரு வரலாற்றின் தேடலுக்கு முடிவாக இருக்கும் என்று தோன்றியது. 

இயற்கையின் பேராற்றல் கொண்ட இந்தப் பிரபஞ்சத்தின் சூட்சமத்தை அறிந்து கொண்ட இவர்களின் முன்னோர்களுக்குப் பேரழிவை முன்னமே அறிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தது.

அவ்வாறு குமரி கண்டத்தின் பேரழிவினை முன்னமே அறிந்து கொண்டவர்கள் தங்கள் இனத்தவரைக் காப்பாற்ற எண்ணி இந்த மலை மீது தஞ்சம் புகுந்தனர்.

மலைகளாக உயர்ந்த பேரலைகளால் எங்கும் கடல் சூழ்ந்தது. இந்த உயரமான மலையின் மீது அடைக்கலம் புகுந்தவர்கள் அந்தப் பேரழிவிலிருந்து தப்பிக் கொண்டனர்.

 பின்னர் அவர்கள் இனத்தினர் அங்கேயே காலம் காலமாக வசிக்க தொடங்கினர். இவர்களின் இனத்தினர் வேறு இனத்தினரோடு மணமுடிக்காத காரணத்தால் இவர்களின் ஆற்றல் இன்றளவும் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதுதான் வியப்பு!

அதேநேரம் இவர்கள் இந்த மலையையும் அவர்கள் சந்ததியையும் பாதுக்காப்பதை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதினர். அதேநேரம் விரும்பியவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றனர்.

வியப்புகுரிய இன்னொரு விஷயம் யாருமே ஓரிரு குழந்தைகள் மேல் பெற்று கொள்ளவில்லை. குழந்தைகள் பிறவாமல் தடுத்து கொள்ளும் சில மூலிகை மருந்துகளைத் தொடர்ச்சியாக உண்டு தேவையற்ற கருத்தரிப்புகளையும் அவர்கள் தவிரத்தனர்.

இன்றைய காலகட்ட கல்வியறிவுகளை விட அவர்களின் இயற்கை அறிவு மேம்ப்பட்டதாக இருந்தது. அது என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இதை போன்ற விஷயங்களை நான் சேகரித்து போதுதான் எனக்கு முதல் முதாலாகச் செல்லாவை சந்தித்த போது நடந்த ஓர் அதிசியம் நினைவுக்கு வந்தது. அது என் கற்பனையோ என்றுதான் முதலில் நான் எண்ணினேன். ஆனால் இப்போது யோசித்தால் அப்படி இருக்குமோ என்று சந்தேகம் உதித்தது.

அது பற்றி அவளிடம் நான் வினவினேன்.

மனிதனுக்கு மறையும் சக்தி இருக்குமா? அது அவர்கள் இனத்திற்கு உண்டா? எனக்கே நான் கேட்ட கேள்வி அபத்தமாக இருந்த போதும் என்னை அங்கே நடக்கும் அதிசியங்கள் யாவும் அப்படி ஒரு கேள்வியை அவளிடம் கேட்கத் தூண்டியது.

ஆனால் கடைசியில் அவள் சொன்ன பதிலைக் கேட்டு நான் ஸ்தம்பித்து விட்டேன்.

அவர்கள் முன்னோர்களுக்கு மறையும் சக்தி மட்டுமில்லை. மரணத்தை வெல்லும் சக்தியும் இருந்தது என்று!

மரணத்தை வெல்லும் சக்தியா? அதெப்படி சாத்தியம்? என்று கேட்டேன்.

இந்தக் கேள்விக்கு அவள் பதில் சொல்லாமல் இருந்திருக்கலாம். நானும் கேட்காமல் இருந்திருக்கலாம். ஆனால் எதுவோ என்னைக் கேட்க தூண்டியது. அவளும் என்னிடம் அவற்றைப் பற்றி விவரித்தாள்.

அதாவது அவர்கள் முன்னோர்கள் பலரும் ஜீவசமாதி அடைந்துவிட்டதாகக் கூறினாள். அவள் சொன்னதை என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.

ஜீவசமாதி என்றால் என்ன என்று நான் வினவ, அவள் எனக்கு விளக்கமளித்தாள்.

அது உடல் சம்பந்தப்பட்டது அல்ல. ஆன்மா சம்பந்தப்பட்டது. உடல் அழியும். ஆனால் ஆன்மா அழியாது. தங்களின் முன்னோர்கள் யாரும் இன்றுவரை இறக்கவில்லை. அழியவில்லை.

ஆன்ம சக்தியாக மாறி இந்தப் பூமியைப் பேரழிவிலிருந்து காத்து கொண்டிருக்கின்றனர் என்றாள். இதுவரை அவள் சொன்ன எல்லாவற்றையும் நம்பிய நான் இதை நம்பத் தயாராக இல்லை.

அதற்கு சாத்திய கூறுகளே இல்லையென்று சொன்னது என் மூளை. மனிதனின் இயக்கம் என்பது உடல்தானே! இதென்ன புதிதாக ஆன்மா எங்கிருந்து வந்தது.

அப்போதுதான் செல்லா எனக்கு ஓர் அதிசயத்தை நிகழ்த்தி காட்டினாள். உடனடியாக அவள் ஓர் மூலிகையைப் பறித்து உண்டு நாசியை அழுத்தி மூச்சைக் கட்டுபடுத்திக் கொண்டு விழிகளை மூடி தியான நிலைக்குச் சென்றாள்.

சில நொடிகள் கழித்து அவள் உருத்தெரியாமல் என் கண்களிலிருந்து மறைந்துவிட்டாள்.

அந்தக் காட்சியைப் பார்த்து கொண்டிருந்த என் காலடியில் பூமி நழுவிச் சென்ற உணர்வு. தலைக் கிறுகிறுத்தது. நடந்ததை நம்பவும் முடியாமல் அதேநேரம் நம்பாமல் இருக்கவும் முடியாமல் அப்படியே தரையில் சரிந்தேன்.

சில நொடிகள் கடந்து செல்ல, அவள் மீண்டும் என் கண் முன்னே தோன்றினாள்.

பேச்சற்று அவளைப் பார்த்திருந்த என்னிடம் அவள் சொன்னாள். பிரபஞ்சத்தின் பேராற்றலை முழுவதுமாக உணர்ந்தவர்களால் எதுவும் சாத்தியம்.

காற்றில் கரைவதும்… கடலலைகளை நிறுத்துவுதும்… வானை அளப்பதும்கூட அவர்களால் சாத்தியம்தான்.

மறையும் சக்தி என்பது காற்றோடு தங்களைக் கரைத்து கொள்ளும் சக்தி.

அவள் சாப்பிட்ட மூலிகையைப் பற்றி கேட்டேன். அது மூலிகையின் சக்தியல்ல. ஆத்மாவின் சக்தி என்றாள்.

இந்தப் பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கும் அனைத்து சக்திகளுமே நுண்ணிய அணுக்களினால் உருவானவை. மனிதனும் அதற்கு விதிவிலக்கல்ல. அவனும் நுண்ணிய அணுக்களின் கூட்டுதான். இந்த நுண்ணிய அணுக்கள் சேர்ந்திருக்கும் போது அவன் உருப்பெருகிறான் எனில் அதுவே தனித்தனியாகப் பிரியும்போது… அந்த உருவானது உருக்குலைந்து போகும்.

அவள் சொன்னதைக் கேட்டு வாயடைத்து போனேன். அவள் சொன்னது வெறும் வார்த்தையல்ல. அந்த உண்மையின் ஆழம் அதிநவீன அறிவயிலின் உச்சமாக இருந்தது.

பூமியிலுள்ள பொருட்களை இன்றைய அறிவியலாளர்கள் ஆராய்ந்து அதன் ஆற்றலைக் கண்டறிந்து ஆக்கபூர்வமாக உபயோகம் செய்து கொண்டனர். இன்னும் மேலே போய் சந்திரனில் குவிந்திருக்கும் வளங்களை சுரண்ட ராகெட் அனுப்ப முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால் செல்லாவின் முன்னோர்கள்… தங்களுக்குள்ளாகவே புதுப்புது ஆற்றலை உற்பத்தி செய்து கொண்டிருந்தனர். தங்கள் தேகத்தையே ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டனர்.

அப்போது அவள் சொன்ன வாக்கியம் என் மனதில் ஆழமாக இன்றளவும் பதிந்து போனது.

‘அண்டத்திற்குள் பிண்டம்… பிண்டத்திற்குள் அண்டம்…’

அதாவது இந்தப் பிரபஞ்சத்தின் சக்தி ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஆன்மாவாக உறைந்து கிடக்கிறது. ஒவ்வொரு ஆன்மாவிற்குள்ளும் பிரபஞ்சத்தின் சக்தி உறைந்து கிடக்கிறது.

இவ்விதம் சொன்னவள் அன்று அந்த மலையிலுள்ள ஒரு ரகசிய இடத்திற்கு அழைத்து சென்றாள். யாருமே மலையின் அந்தத் திசைக்கும் மட்டும் செல்லவே மாட்டார்கள்.

அடர்ந்த காடுகள் சூழ்ந்த அந்தப் பகுதிக்குள் செல்ல செல்ல சூரிய ஒளி நுழைய முடியாமல் இருண்டு கிடந்தது. நான் அந்த இருளில் நடக்கும் போது மீண்டும் குருடாகிவிட்டது போல் உணர்ந்தேன். செல்லாதான் என்னைப் பத்திரமாக வழி நடத்தி சென்றாள்.

அவளுக்கு மட்டும் இந்த இருளிலும் எப்படி பார்க்க முடிக்கிறது என்பது வியப்புதான்.

அந்த இருண்ட காட்டுக்குள் நடக்க நடக்க என் பொறுமை வற்றிப் போனது.

அந்தப் பயங்கர இருள் என் மனவலிமையை குன்ற செய்தது. திரும்பி போய்விடலாம் என்று நான் எண்ணிக் கொண்ட போதும் ஒரு சிறிய வெளிச்சம்!

அந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்தது. தூரமாகத் தெரிந்த ஒரு மலைக் குகையிலிருந்து ஒளி வெள்ளமாக வந்தது அந்த வெளிச்சம்.

அந்த அதிசயத்தக்க காட்சியைப் பார்த்த பின் நான் செல்லாவைக் கேள்வியாகப் பார்த்தேன்.

செல்லாவின் முன்னோர்கள் பலரும் அங்கேதான் ஜீவசமாதி அடைந்தனராம். பெரும்பாலும் நடக்க போகும் அதிபயங்கரமான பேரழிவுகளை அவர்கள் குலத்தில் பிறந்த ஆண்கள் தங்கள் மனோபலத்தைக் கொண்டு கணிக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர்.

அப்படியான அழிவுகளின்போது எந்த உயிர் சேதமும் ஏற்பட கூடாது என்று அவர்கள் தங்கள் உயிரையே அதாவது ஆன்மாவை எரித்து கொள்கின்றனர். அதேபோல செல்லா இனத்தில் பிறக்கும் பெண்கள் இனப்பெருக்கம் செய்து அவர்கள் சந்ததியைக் காக்கின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு இரண்டு சந்ததிகளின் இடைவெளியில் இரட்டை குழந்தைகள் ஜனிக்கின்றன.

அதுவும் பலரும் மணப்பதற்கு முன்பாகவே இறந்துவிட்ட காரணத்தால் அவர்கள் குலத்தில் தற்போது செல்லாவை மணக்கும் ஆண்மகன்களே இல்லாத ஓர் இக்கட்டான சூழலில்தான் அவள் என்னைச் சந்தித்தது.

அன்று அந்த இருளில் மின்மினி பூச்சிகளைப் பின்தொடர்ந்து வந்தவளின் விதி என்னை சந்திக்க நேர்ந்ததின் காரண காரியங்களை யார் அறிய கூடும்.

அந்த ஊரில் உள்ள எல்லோருக்கும் செல்லா மீதான அக்கறையும் மதிப்பிற்கான காரணமும் புரிந்து போனது. அவள் என்னுடன் வாழ விருப்பம் கொள்கிறேன் என்று சொன்ன போது அந்த மக்கள் என்னை முயன்று காப்பாற்றியது அவர்கள் சந்ததிகள் அழிய கூடாது என்பதற்காகத்தான்.

அறிவியல் இன்னும் ஆராய்ந்து தேடிக் கொண்டிருக்கும் கடவுள் அணுவை செல்லாவின் சந்ததிகள் பல்லாயிரம் வருடங்கள் முன்பே கண்டறிந்து வைத்து கொண்டிருக்கின்றனர்.

அதன் காரணத்தால்தான் செல்லாவின் குலத்தைக் காக்கும் தார்மீக பொறுப்பை அந்த மலைவாசி மக்கள் ஏற்றுச் செய்து கொண்டிருந்தனர். அவள் மட்டுமே ஓர் அதிசிய பொக்கிஷத்தின் மிச்சமாக இருந்தாள். 

எனக்கு அவள் சொன்ன விஷயங்களை கேட்டு சிலிர்த்துக் கொண்டது. அதேநேரம் எந்த மின்சக்தியும் இல்லாமல் ஒளியால் மிதக்கும் அந்த மலைக்குகை எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. ஒளிரும் ஏதோ ஒரு அரிய வகை தனிமம் அந்த மலைக்குகையில் இருக்க கூடும் என்ற சந்தேகம் உதித்தது.

‘ஆன்மாவிற்கு பல்லாயிரம் சூரியனின் ஒன்றிணைந்தது போன்ற சக்தி உண்டாம். அவர்கள் முன்னோர்கள் அந்த ஆன்ம சக்தியைத் திரட்டி வைத்திருக்கின்றனர். அதனால் உண்டான ஒளி பிழம்புதான் அது’ என்ற செல்லாவின் வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கையில்லை.

அங்கிருந்து புறப்படும்போது செல்லாவை முன்னே செல்ல விட்டு நான் அந்த மலையிலிருந்த கற்களையும் கொஞ்சம் மணல்களையும் எடுத்து ரகசியமாக முடித்து வைத்துக் கொண்டேன்.

சில பிழைகள் காலப்போக்கில் மறைந்துவிடும். சில பிழைகள் காலத்திற்கும் அழியாத வடுவாக மாறிவிடும். ஆனால் சில பிழைகள் காலத்தையே திசை மாற்றிவிடும். எதிர்காலங்களைப் புரட்டிப் போட்டுவிடும். நான் அப்படியொரு பிழையைச் செய்ய துணிந்தேன்.

நன்கு இருள் சூழ்ந்தப் பிறகு என் அருகில் படுத்திருந்த செல்லாவையும் என் மகனையும் ஏக்கமாகப் பார்த்தேன். நீலாவோ என் மார்பிலேயே படுத்து உறங்கியிருந்தாள். திரும்பி வந்துவிடத்தானே போகிறோம் என்ற தைரியத்தில்தான் அவர்களை விட்டு புறப்பட்டேன்.

ஆனால் நான் செய்யும் காரியமே என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்தாக முடியும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

நீலாவை பாய் விரிப்பில் கிடத்திவிட்டு அவள் விழித்துக் கொள்ளா வண்ணம் அவள் நெற்றியில் மென்மையாக முத்தம் பதித்தேன்.

செல்லாவையும் செல்வனையும் தலைகளை வருடிக் கொடுத்துவிட்டு அவர்கள் யார் உறக்கமும் கலையாத வண்ணம் மெல்ல எழுந்தேன். ஒரு தீப் பந்தத்தைக் கையில் ஏந்திக் கொண்டு தோளில் பையை மாட்டிக் கொண்டு நான் புறப்பட்டேன். ஒரு வேளை நான் செல்வதை செல்லா மட்டும் பார்த்துவிட்டால் என் எண்ணம் நடவாது. நிச்சயமாக அவள் என்னை மலைக்குக் கீழே போக அனுமதிக்க மாட்டாள். இந்த ஊர் மக்களும் சம்மதிக்க மாட்டார்கள்.

முடிந்தளவு எந்தவித சின்ன சத்தமும் எழுப்பாமல் அந்த மலைக்காட்டு வழியாக கீழே இறங்கி சென்றேன். அந்த இரவின் குளிரும் மலையில் வீசும் சில்லென்ற காற்றும் என் தேகத்தை நடுக்கமுற செய்தது.

இருண்ட அந்தக் காட்டுப் பகுதிக்குள் செல்ல அச்சமாக இருந்த போதும் என் மனதின் கேள்விகளும் தேடலும் எனக்கு ஒருவித அசட்டுத் துணிச்சலைக் கொடுத்திருந்தது.

அதுவும் பகலில் சென்றாலே இருள் கவ்வியிருக்கும் அந்த இடமானது இப்போது பயங்கரமான இருளில் மூழ்கி கிடந்தது. அந்த சிறு பந்த வெளிச்சமும் இல்லையென்றால் அதற்குள் என்னால் பிரவேசிப்பது கூட அசாத்தியம்.

அதுவும் என்னைப் பின்தொடர்ந்த இரவு பூச்சிகளின் சத்தம் கூட சில அமானுஷ்ய சத்தத்தை போல் கேட்டது. மூன்று வருடமாக இந்த மலை எனக்கு மிகவும் பழக்கப்பட்டுப் போன காரணத்தால் எனக்கு அந்தப் பயணம் மிகுந்த சிரமத்தைத் தரவில்லை. ஆனால் யாரோ என்னைப் பின்தொடர்ந்து வந்தது போன்று தோன்றியது.

நான் திரும்பி பார்க்க துணியவில்லை. மிகவும் ஜாக்கிரதையாக நான் அடி மேல் அடி எடுத்து வைத்து நடந்தேன். மனதில் ஒருவித திகிலுணர்வு. இருப்பினும் நான் பின்வாங்கி கொள்ள தயாராகயில்லை.

நான் அடுத்த நாள் காலை அந்த மலைக்கு கீழ் உள்ள கிராமத்தை அடைந்த போது பலரும் என்னை அதிர்ச்சியாகப் பார்த்தனர். நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன் என்பதை அவர்கள் யாராலும் நம்ப முடியவில்லை.

ஆனால் அவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் நிலைமையில் நானில்லை. நான் எடுத்து வந்தவற்றை சோதித்து பார்க்கும் ஆராய்ச்சி கூடம் மெட்ராஸ் மாகாணத்திலிருந்தது.

அப்போது கூட நான் செய்ய போகும்  செயலின் எதிர்வினைக் குறித்து யோசிக்கவில்லை. அந்த மலையில் ஏதோ அரிய வகை தனிமம் இருக்கிறது. அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் மட்டுமே எனக்கு இருந்தது.

ஆனால் மனித புத்தியானது தனக்கு தேவையானவற்றை அடைய எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை நான் அறியேன். காடுகள் வனவிலங்குகள் என்று பழகிய எனக்கு மனித இனத்தின் வஞ்சக புத்தி தெரியவில்லை.

அந்த மலையில் கண்டறிந்த அதிசிய தனிமத்தைப் பற்றி அறிந்தவர்கள் அதனை அடைய பேராசைக் கொண்டனர். காலங்கள் தாண்டி மண்ணுக்குள்ளும் பாறைகளுக்குள்ளும் இருக்கும் அந்த தனிமம் விலை மதிப்பற்றது என்று பேசிக் கொண்டனர்.

எனக்கு அவர்களின் விபரீத எண்ணம் புரிந்த போது பிரச்சனை கை மீறியிருந்தது.

நான் திரும்புவதற்குள் அவர்கள் அந்த மலையைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டனர். அவர்கள் அதனை அடைய வேண்டுமென்ற பேராசையில் மலை மீது ஏறும் வழி தெரியாமல் தோல்வி கொண்டனர்.

ராஜ நாகங்கள் அந்த மலைகளில் ஏறினாள் தீண்டுவிடும் என்பதை அறிந்தவர்கள் அதற்கு வேறொரு உபாயம் தேடினர். தற்கால மனிதனுக்கு பொன்னும் பொருளுமே பெரிதாக தெரிந்தது. உயிர்களின் மதிப்பு தெரியவில்லை. ஈவு இரக்கமே இல்லாமல் அந்த மலையை அவர்களின் பேராசைக்காக மொத்தமாக தீக்கிரையாக்கினார்கள்.

நான் அங்கே செல்லும் போது சாம்பல் மட்டுமே மிஞ்சியது. இறைவனின் ஓவியமாக நான் ரசித்த அந்த இயற்கை காட்சிகள் யாவும் உருக்குலைந்து போயின. சந்தோஷமாக வசித்திருந்த மிருகங்கள் பல அந்த நெருப்பிற்குள் கருகிப் போயின. அந்த வாயில்லா ஜீவன்களின் வலியை கண்டு நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனே!

சுயநலம்! சுயநலம்! முழுக்க முழுக்க சுயநலம்! தன்னலனுக்காகவும் தேவைக்காகவும் எதையும் கொன்றுக் குவிக்கும் சுயநலம்!

என்னுடைய சுயநலமும் இதில் அடங்கியிருக்கிறது. செல்லாவிற்கு அந்த மக்களுக்கும் எதுவும் ஆகிவிட கூடாது என்ற ஒரு சிறிய நப்பாசை எனக்குள் ஒட்டிக் கொண்டிருந்தது. மலையின் உச்சியில் சென்று பார்த்தேன்.

காட்டுத் தீ அதிவேகமாகப் பரவி அந்த மலையையே நிர்மூலமாக்கியிருந்தது. ஒரு கூடாரம் கூட மிச்சமாக இருக்கவில்லை.

யாராவது ஒருவேரேனும் உயிரோடு இருப்பார்களா என்ற என் தேடலுக்குப் பதிலாக தீயின் கோர தாண்டவத்தின் மிச்சங்கள் மட்டுமே இருந்தன.

செல்லா என்று நான் கண்ணீர் விட்டுக் கதறிய சமயம் என் செவிகளில் யாரோ முனகும் சத்தம் கேட்டது. அந்தத் திசை நோக்கி விரைந்தேன். செல்லா உயிரோடு இருந்தாள்.

என் கண்களில் கண்ணீர் ஊற்றாகப் பெருகிற்று. எந்த அழகை கண்கொட்டாமல் ரசித்து லயித்தேனோ அந்த அழகு தீத் தழும்புகளோடு இருந்தன.

போகட்டும்! அவள் இருக்கிறாளே! ஓடிச் சென்று அணைத்து கொண்டேன். கட்டியணைத்து அழுதேன். என் பாவம் தீராதா என்று!

ஆனால் அவள் அழவில்லை. என்னிடம் கோபித்து கொள்வாளோ என்று அச்சத்தோடு நிமிர்ந்து பார்த்து போது,

‘நீங்க திரும்பி வருவீங்கன்னு எனக்கு தெரியும்’ என்றாள்.

அந்த ஒற்றை வாக்கியம் என்னை உயிரோடு கொன்று புதைத்தது.

என்னை அவள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அப்போதுதான் செல்வனும் நீலாவும் எங்கே என்று தேடிவிட்டு அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன்.

அவள் தன் உயிரைக் காத்து கொள்ள மிகவும் போராடியிருக்கிறாள் என்பது அவள் அயர்ச்சியான பார்வையிலும் அவள் முகத்திலிருந்த தீத் தழும்புகளிலும் எனக்குப் புரிந்தது. ஆனால் அவள் விழிகளில் தைரியம் வற்றிவிடவில்லை.

அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி என்னைத் தோண்ட சொன்னாள். என்னையே பார்த்து கொண்டிருந்த அவளின் முகத்தில் பதட்டம் குடிக்கொண்டிருந்தது. நானும் அவள் சொன்னபடி செய்தேன்.

அந்த மணலின் மேல் நிறைய தண்டுகள் சொருகியிருந்தன. அவற்றை நீக்கிவிட்டு தோண்டினேன். மேலோட்ட மணல்கள் இருந்தாலும் அடியில் ஓலைகளும் அதற்கு கீழாகக் கட்டைகளைக் குறுக்கும் நெடுக்குமாக அடுக்கி இருந்தது. அவற்றை எடுத்துவிட்டு பார்த்த போது பாதுக்காப்பாகத் துணியால் மூடியபடி உள்ளே செல்வனிருந்தான். நல்ல வேளையாக அவனுக்கு எதுவும் ஆகவில்லை. உறங்கிக் கொண்டிருந்தான்.

மகனைக் காப்பாற்றிய அவளின் சமயோசித புத்தியை எண்ணி என்னால் அந்தத் தருணத்திலும் வியக்காமல் இருக்க முடியவில்லை. முன்பே செல்லா வர போகும் ஆபத்தைக் கணித்திருக்கிறாள். அங்கிருந்த மக்களுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறாள். ஆனால் விதி வலியது. அதற்குள்ளாகத் தீத் அவர்கள் கூடாரத்தை முற்றுகையிட்டன.

ஆனால் இந்த நேரத்தில் நீலா எங்கே போனாள்? அந்தக் கேள்வியை நான் செல்லாவிடம் கேட்க எத்தனித்தபோது அவள் என்னைப் பார்த்து கேட்டுவிட்டாள்.

“நீலா எங்கே?”

அதிர்ந்து நான் அவளைப் பார்க்க, என் முகபாவனையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.

“நீங்க போன அன்னைக்குக் காலையில நீலாவும் இல்லை”

இதென்ன விதியின் புது விளையாட்டு. அன்று மலையிலிருந்து இறங்கியபோது என்னை யாரோ பின்தொடர்ந்தது போன்று ஏற்பட்ட உணர்வு, ஒருவேளை அது நீலாவோ என்ற சந்தேகத்தை எழுப்பியது.

நான் மனமுடைந்து அவள் முகம் பார்க்க, “அப்போ நீலாவை நீங்க அழைச்சிட்டுப் போகலையா?” என்று கேள்வியோடு பார்த்தாள்.

அவள் பார்வையில் என் மீதான நம்பிக்கைச் சுக்குநூறாக உடைந்திருந்தது. காதல் பார்வைப் பார்த்த அதே விழிகள் என்னை நம்பிக்கையற்று பார்த்த மறுகணமே மரணித்துவிட்டன.

அந்தப் பார்வையில் நானுமே அன்று மாண்டு போனேன். அதற்குப் பிறகு நான் வாழ்ந்த வாழ்க்கை செல்வனுக்காக மட்டும்தான். சரியான விசா அனுமதியின்றி மூன்று வருடங்கள் இந்தியாவில் வசித்த காரணத்தால் பெரிய பெரிய இன்னல்களை கடந்து நானும் செல்வனும் அமெரிக்காவிற்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டோம்.

தன் உயிரையும் கொடுத்து செல்லா அவனை காப்பாற்றியிருக்கும் போது நான் அவனைப் பொறுப்போடு வளர்ப்பது முக்கியமென்று கருதினேன்.

செல்வனுக்கு ஜான்சன் என்று பெயர் மாற்றினேன். அவன் வளர வளர தன் முன்னோர்களின் அடையாளமே இல்லாமல் அமெரிக்காவின் கலாச்சாரத்திற்கு உரியவனாகவே வளர்ந்தான்.

அமெரிக்கப் பெண்ணைத் திருமணமும் செய்து கொண்டான். ஒரு இனமே சுவடின்றி அழிந்து விட்டது என்று தோன்றி, நான் விரக்தி நிலையை எட்டிய போதுதான் நீ பிறந்தாய் ஷெர்லி.

மனிதன் அழியலாம். மரபணுக்கள் அப்படி அழியாது. நான் உன்னுடைய முகத்தில் செல்லாவையும் நீலாவையும் பார்த்தேன்.

உன்னை செல்லாவின் வழிதோன்றலாக வளர்ப்பதே என் வாழ்கையின் லட்சியமாகக் கொண்டேன். உனக்குள் எந்த விதித்திலும் அமெரிக்க நாட்டின் கலாச்சாரம் நுழையாமல் பார்த்து கொண்டேன். அதற்காகவே உன் தந்தை தாயிடமிருந்து நான் உன்னைப் பிரித்து வைத்தேன்.

அவர்களின் சாயல்களும் எண்ணங்களும் கூட உன்னை அணுகாமல் பார்த்து கொண்டேன். அது தவறென்று தெரிந்த போதும் நான் அத்தகைய காரியத்தைச் செய்தேன். உனக்கு தமிழ் பேசப் பயிற்றுவித்தேன். உனக்குள் நீ ஒரு தமிழினம் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தேன். உன் வருங்கால வாழ்க்கையை தமிழ்நாட்டில் இருக்க வேண்டுமென்ற காரணத்திற்காகதான் நீ ஒரு தமிழனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தை உனக்குள் ஆழமாக விதைத்தேன்.

ஒரு பெரிய பேரழிவின் தொடக்கமாக பிறந்த நான் பல பேரழிவுகளுக்குக் காரணமாகிவிட்டேன் என்ற எண்ணமே என்னைக் குற்றவுணர்வில் கொன்று புதைத்தது.

தமிழ்நாட்டில் சுனாமி பேரலைகள் தாக்கியது என்னை பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியது. பல்லாயிரம் உயிர்களின் இறப்புகளுக்கு நானே காரணமாகிவிட்டேனே!

செல்லாவின் முன்னோர்கள் இருந்திருந்தால் அப்படி ஒரு பேரழிவு தமிழகத்தைத் தாக்கி அந்தளவு உயிரிழப்புகள் நேர்ந்திருக்கதோ என்னவோ?!

தினம் மனதால் அந்தச் சம்பவத்தை எண்ணி எண்ணி நான் வருந்தாத நாளே கிடையாது. அதற்கு பின்புதான் எனக்கு வாழும் துணிவில்லாமல் போனது. இன்னொரு பேரழிவைக் காண எனக்கு மனஉறுதியுமில்லை.

நீ வளர்ந்த பிறகு நிச்சயம் இதனை எடுத்து படிப்பாய் என்ற நம்பிக்கையோடு இந்தக் கடிதத்தையும் உனக்காக எழுதி வைக்கிறேன்.

ஷெர்லியின் கண்கள் நீரால் நிரம்பி அந்தப் பக்கங்களை நனைத்துவிட்டன. வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் பெரும்  குற்றவுணர்வோடு கடந்து கொண்டிருந்த தன் தாத்தாவின் வலி மிகுந்த  வாழ்க்கையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த வேதனை அவள் மனதையும் வாட்டியது.

அவள் தாத்தா கடைசியாக அவளுக்கு எழுதிவைத்திருந்தக் கடிதத்தை படித்தாள்.

‘மை டார்லிங் ஷெர்லி,

நீ எனக்கு கடவுள் கொடுத்த மிகப் பெரிய பொக்கிஷம். உன் குழந்தைத் தனமான புன்னகையில்தான் என் வாழ்க்கையின் பாவங்கள் கரைந்து புனிதமடைகிறது.

நீ இல்லாமல் போயிருந்தால் விரக்தியும் வெறுமையும் மட்டுமே எனக்கு மிச்சமாக இருந்திருக்கும். நான் பைத்தியம் பிடித்து இந்நேரம் ஒரு மனநோயாளியாக இருந்திருப்பேன். அதுவே நான் செய்த பாவங்களுக்கு எனக்கு நல்ல தண்டனையாகவும் இருந்திருக்கும்.

ஆனால் தண்டனைக்குப் பதிலாக எனக்கு நீ உன் அளப்பரிய அன்பையும் அரவணைப்பையும் தந்திருக்கிறாய். இன்னும் இன்னும் தந்து கொண்டிருக்கிறாய். அதற்கு பதில் உபாகாரமாக நான் என்ன செய்வேன்.

 உன்னைப் பத்திரமாக பார்த்து கொள்வதன் மூலமாக என் பாவங்களுக்கு நான் கொஞ்சம் விமோசனம் தேடிக் கொள்ள முயல்கிறேன். ஆனால் இனி அது முடியாது. உன்னை விட்டு நான் வெகுத்தொலைவு போகப் போகிறேன். என்னுடைய முடிவை நானே தேடிக் கொள்ள போகிறேன்.

அன்புடன்

கிறிஸ்டோபர்’

பின்குறிப்பு: உன் கழுத்திலிருக்கும் செயின் உன் முன்னோர்களின் ஆசிர்வாதம். ராஜநாகம் கடித்த போது என் உயிரை காப்பாற்ற செல்லா என் கைகளில் கட்டிவிட்டது. மிகவும் சக்தி வாய்ந்த அந்த டாலரை உன் பத்தாவது பிறந்த நாள் போது ஷெர்லி என்ற பெயரோடு வடிவமைத்து பரிசளித்தேன். 

அவளுக்கு அந்த நாள் இன்னும் நன்றாக நினைவிலிருந்தது. அந்த டாலரை அணிவித்த ஒரு சில நாட்களில்தான் அவளின் தாத்தா தற்கொலை செய்து கொண்டதும் நடந்தது. 

கடைசியாக கிறிஸ்டோபர் அந்த டாலரை பற்றி எழுதிய வரியை ஷெர்லி படித்துவிட்டு வியப்பின் விளம்பிற்கே சென்றாள்.

‘அதை சாதாரண டாலர் என்று நினைத்துவிடாதே ஷெர்லி. அது உன் கழுத்திலிருக்கும் வரை உன்னை மரணம் கூட எளிதில் நெருங்க முடியாது.’

அப்போது ஷெர்லிக்கு அந்த டாலரை முதல் முறையாகதான் கடற்கரையில் தொலைத்ததும் உயிருக்காகப் போராடியதும் அவள் கண்முன்னே நிழலாடியது.

அந்த நொடியே ஷெர்லியின் கரம் அவள் கழுத்திலிருந்த டாலருக்குச் சென்றது. அதிர்ச்சி!

அவள் கழுத்தில் அது இல்லை.

“மை காட்”

எங்கே போயிருக்கும் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது, அவள் செல்ல போகும் விமானத்திற்கான அழைப்பு கேட்டது. என்ன செய்வதென்று புரியாமல் அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அதேநேரம் அவள் கைப்பேசி ஒலித்தது. சோர்வோடு அதனை எடுத்து பார்த்தாள். ஹரிதான் அழைத்திருந்தார். தான் விமானம் ஏறிவிட்டோமா என்று கேட்பதற்காக இருக்கும்.

அந்த எண்ணத்தோடு அழைப்பை ஏற்று, “ஹரி… நான் இன்னும் ப்ளைட்டு ஏறல… என் செயின் மிஸ்ஸிங்… இட்ஸ் மோர் பிரிஷியஸ்” என்று படபடப்போடு அவள் சொல்லிக் கொண்டிருக்க,

எதிர்புறத்தில் சத்தமே இல்லை.

“ஹரி” என்று மீண்டும் அவள் அழைக்க, பதிலில்லை.

அவளை அச்சம் பற்றிக் கொண்டது. பிரபாவிற்கு ஏதேனும் ஆகியிருக்குமா என்ற எண்ணமே அவளைப் பெரிதும் வேதனைப்படுத்தியது.

“ஹரி…ப்ளீஸ்… பிரபாவைப் பத்தி மட்டும் என்கிட்ட பேசிடாதீங்க… எனக்கு எதையும் கேட்க வேண்டாம்… எனக்கு அவ்வளவு கட்ஸ் இல்லை… சாரி” என்று அவள் குரல் அழுகை தொனியில் மாறிய அந்த நொடி அவள் காதில் ஒலித்தது பிரபஞ்சனின்அழைப்பு.

“ஷெ..ர்..லி”

அதிர்ச்சியில் அவளுக்குப் பேச வார்த்தைகள் எழவில்லை. மெல்ல சுதாரித்துக் கொண்டு,

“ஒஎம்ஜி… பிர… பிரபா… பிரபா ஆர் யு ஓகே?” என்றாள்.

அவள் குரல் நடுங்கியது. அவள் இருக்கும் இடம் பொருள் எல்லாம் மறந்து போக செய்தது. எதிர்புறத்தில் மீண்டும் மௌனம்.

அவள் பதட்டத்தோடு,

“பிரபா… ஸ்பீக்” என்று சத்தமாகக் கத்திவிட்டு அழத் தொடங்கினாள். அங்கிருந்த எல்லோரும் அவளை வித்தியாசமாகப் பார்த்தனர்.

அவன் நிறுத்தி நிதானமாக அந்த இரண்டே வார்த்தையைதான் சொன்னான்.

“டோன்ட் கோ”

உலகிலுள்ள பல்லாயிரம் மொழிகள் கூட அப்போதைய அவள் மனநிலையை விவரிக்க முடியாது. கண்ணீர் மட்டுமே அவள் உணர்வுகளின் மொழி பேசிக் கொண்டிருந்தது.

You cannot copy content