You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's VET - 19

Quote

19

வீரேந்திரனோ அந்த தருணத்தில் அவள் வதனத்தை ஆழ்ந்து ரசித்தபடி இருக்க, அவளோ அவனை நிமிர்ந்து பார்க்கத் துணிவில்லாமல் தரையைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

ஆனால் அவனுக்கு அவள் மீது துளியளவும் கோபம் இல்லை. சந்திரா அவன் வீட்டையடைந்ததும் நடந்த விஷயங்களை எல்லாம் அவனிடம் விவரமாய் விளக்கியதோடு அல்லாமல் தமிழை அடித்ததிற்காக அவனிடம் கொஞ்சம் கோபமாகக் கடிந்தும் கொண்டார்.

அதே நேரத்தில் தமிழ் தன் சித்தியிடம் அவனை விட்டுக்கொடுக்காமல் பேசியது குறித்து சொல்லிப் பாராட்டி புகழ்ந்து தள்ளிவிட்டார்.

முதல் சந்திப்பில் அவளின் தைரியத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு, பின்னர் அவளின் அழகில் மொத்தமாய் வசீகரிக்கப்பட்டுக் காதலாய் மாறியிருந்தது. இன்று அவள் தன் சித்தியிடம் தனக்காகப் பரிந்து பேசியதை அறிந்த போது அவன் மனம் அளவில்லா சந்தோஷத்தில் திளைத்தது.

அவள் முகத்தையே பார்த்திருந்தவனின் கண்கள் முழுக்க அப்போது காதல் நிறைந்திருந்தது. அவனைக் கட்டி இழுக்கும் விழிகளும் அவன் முத்தமிடத் துடிக்கும் இதழ்களும், அவள் தலை கவிழ்ந்தபடியே நின்றிருந்ததால் அவனை நிராகரித்திருப்பதாய் தோன்றியது.

"ஏ தமிழச்சி! நிமிர்ந்து என்னை பாருடி" என்று அவன் கிறக்கத்துடன் அழைக்க அந்தக் குரலும் அது ஒலித்த தொனியிலும் அவனைப் பாராமலே அவன் கோபமாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டவள் இந்தப் போக்கு இன்னும் தனக்கு ஆபத்தாயிற்றே என அச்சப்பட்டாள்.

உயர்ந்த கம்பமாய் வழிமறித்துக் கொண்டு நின்று கொண்டிருப்பவனை எப்படி விலக்கிவிட்டு வெளியேறுவதென அவள் அப்போது யோசித்திருக்க, பொறுமையிழந்தவனாய் தன் கரங்களால் அவள் முகத்தை நிமிர்த்தினான்.

அந்த நிலையில் அவனைப் பார்த்தே தீர வேண்டிய கட்டாயம் அவளுக்கு. அவனின் நேர்கொண்ட பார்வையிலும்... கம்பீரத்திலும்... யாரிடமும் தலைவணங்காத கர்வத்தினாலும் அவள் மனதை எப்போதோ பறிக்கொடுத்துவிட்டாள்.

இப்போது அவனின் நெருக்கத்தினாலும் அவனின் கூர்மையான பார்வைக்குள்ளும் அவள் அறியாது கட்டுண்டாள். அவள் எத்தகைய காதலை எதிர்நோக்கிக் காத்திருந்தாளோ அத்தகைய காதலை அவன் விழிகள் உணர்ச்சிப் பெருக்காய் சுரந்து கொண்டிருந்தன.

அந்தக் கணம் அவனை அவளுக்குள்ளே உணர்ந்துவிட்ட தருணம் அது.

தனிமையும் இரவும் அமைதியின் ஆளுமையும் கொண்ட அந்த அறை அவர்களைக் காதலின் உணர்வில் திளைக்க வைக்க, இருவருக்கும் இடையில் நின்றிருந்த கோபமும் மனவருத்தமும் எங்கோ தொலைந்து போனது.

அழகெல்லாம் ஒன்றிணைந்து சங்கமித்திருக்கும் தேவதையாகவே அவனுக்கு அவள் காட்சியளித்த அதேநேரம் அவளின் வீங்கிய கன்னத்தைப் பார்த்தவனுக்குக் உள்ளுர குற்றவுணர்வு குத்தியது.

தன் கரத்தால் காயம்பட்டிருந்த அவளின் கன்னத்தை அவன் மிதமாய் ஸ்பரிசிக்க, அவனின் மிருதுவான தீண்டலில் அவளும் கொஞ்சம் கிறங்கித்தான் போனாள்.

அவன் மெல்ல அவள் இதழ்களை நெருங்க, அவனை நிராகரிக்க மனம் வராமல் அமைதி காத்தவளுக்கு அந்த நொடி நினைவிருந்ததெல்லாம் அவன் மீதான காதல் உணர்வு மட்டும்தான்.

அவளின் மௌனமே அவளுடைய சம்மதமாய் எடுத்துக் கொண்டவன் அவன் காதலின் முத்திரையாய் அந்த முதல் முத்தத்தை அவளின் இதழ்களுக்கு வழங்க, ஓயாமல் சண்டையிட்டிருந்த அந்த உதடுகளுக்கு இப்போது அந்த முத்தமும் மௌனமும் தேவைப்பட்டது போல் அவை ஆழ்ந்து லயித்திருந்தன.

கோபங்களைச் சுமக்கும் போது காதல் அவளுக்குள் மறைந்து கிடக்க, இப்போது நேர்மறையாய் நிகழ்ந்த அந்த நிகழ்வு ஒரு சில விநாடிகள் மட்டுமே நீடித்தது.

அவனின் முத்தத்தின் போது அவனுடனான கசந்த நினைவுகள் மீண்டும் முன்னே தோன்றி அவள் வெறுப்பையும் கோபத்தையும் உயிர் பெறச் செய்ய, அவசரமாய் அவனைப் பிரித்து தள்ளிவிட்டு விலகி வந்தவள்,

தன் உதட்டை அழுந்தத் துடைத்து கொண்டபடி ,"சே... என்ன மாதிரி மனுஷன் நீங்க... என் உணர்வுகளைப் பத்தி கவலையே படாத உங்களுக்கு... என் உடம்பு மட்டும் தேவைப்படுதோ?" என்று கேட்டுவிட்டாள்.

அவனுக்கோ அந்த வார்த்தை கட்டுப்படுத்த முடியாத கோபத்தை ஏற்படுத்த அவளை அடிக்க கை ஓங்கியவன் ஏற்கனவே ஒருமுறை அவளை அடித்துக் காயப்படுத்திவிட்டோம் என்ற எண்ணத்தால் மீண்டும் அதே தவறை செய்ய விருப்பப்படாமல் தன் கரத்தை இறக்கினான்.

அந்த முத்தத்தால் எண்ணிலடங்கா இன்பத்தை அவனுக்கு அவள் வழிங்கிய சில நொடிகளிலேயே அவனை அவள் நிராகரித்து உச்சபட்ச அவமானத்திலும் தள்ளிவிட,

அவளை என்ன செய்வதென்றே அவனுக்குப் புரியவில்லை. அவளுக்கு உண்மையிலேயே மனரீதியான பிரச்சனையா என்று சந்தேகிக்கவே தோன்றியது. ஆனால் அது அப்படி அல்ல. பெண்ணின் உணர்வுகள் எப்போதுமே விளங்கி கொள்ள முடியாத புதிர்தான். பெண்ணின் மூளையும் ஆணின் மூளையும் வெவ்வேறானது என்று அறிவியலே சொல்கிறது.

தூக்கத்தில் கூட பெண்ணின் ஆழ்மனம் விழித்திருக்கும் என்பதும், எந்நிலையிலும் அவளால் எந்தச் சிந்தனையும் இல்லாமல் இருக்கவே இயலாதெனவும் சொல்கிறது.

அவள் அவனின் முத்தத்திற்குள் மூழ்கியிருந்தாலும் அவனின் மீது சேகரித்து வைத்திருந்த கோபமும் வெறுப்பும் அதன் நினைவுகளும் விழித்துக் கொண்டுவிட தன் பெண்மையை அவனிடம் விட்டுக்கொடுத்து எப்படி தான் இறங்கிப் போனோம் என அவளின் செயலால் அவளே அருவருப்பாய் உணர்ந்தவள் உணர்ச்சிவசத்தாலும் கோபத்தாலும் செய்வதறியாது அவனிடம் அப்படி நடந்து கொண்டுவிட்டாள்.

என்ன நிகழ்ந்ததென்று இருவருமே சற்று நிதானித்துச் சிந்தித்து கொண்டனர். முதலில் அந்த அறையில் சூழ்ந்திருந்த நிசப்தத்தை தன் கணீர் குரலால் சிதறடித்தவன் வீரேந்திரன்தான்.

"என்னைப் பார்த்து என்னடி வார்த்தை சொன்ன?" என்றவன் சீற,

"தப்பா என்ன சொன்னேன்... நீங்க அப்படிதானே என்கிட்ட நடந்துக்கிட்டீங்க" என்று அவளும் அவனிடம் பதிலுக்குச் சீறினாள்.

"அப்போ நான் உன்னைக் கட்டாயப்படுத்தி கிஸ் பண்ணேன்னு சொல்ல வர்றியா?" என்றவன் கேட்க, அந்தக் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

அவனே மீண்டும், "ஏன்டி ஸைலன்டா நிக்கிற... சொல்லு... நான்தான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்லு... என் மேல தப்பு தப்பா பழியைப் போடறது உனக்கும் வழக்கமாயிடுச்சு... எனக்கும் அதெல்லாம் பழகிடுச்சு... பட் ஒன் திங்... நான் கிஸ் பண்ணும் போது நீ அதை அக்செப்ட் பண்ணிக்கலன்னு சொல்லு பார்ப்போம்" என்று அவன் கேட்கவும் அவள் தாங்க முடியாமல் முகத்தை மூடியபடி கண்ணீர் வடிக்கத் தொடங்கினாள்.

இத்தனை வருட காலமாய் பாதுகாத்த பெண்மை அவளுக்கு உயர்ந்ததுதானே. ஏனோ அந்த சிறு சஞ்சலத்தையும் அவள் பெரும் குற்றமாகவே கருதினாள்.

அவன் தன் மனக்கட்டுபாடுகளை உடைத்தானா? இல்லை தானே அத்தனை பலவீனமாய் இருந்தேனா? என அவளுக்கு அவளே கேட்டுக் கொண்டாள்.

அவனுக்கோ அவள் அப்படி அழுவதைப் பார்த்து கோபமாய் வந்தது. தனக்கு முத்தம் தந்ததை அத்தனை அவமானத்துக்குரிய விஷயமாய் அவள் கருதுவது அவன் மனதை ரொம்பவும் காயப்படுத்தியது.

அதோடு அல்லாது அவனை நோக்கி அவள் வீசிய வார்த்தை அவனை அழுத்தமாய் காயப்படுத்த, எரிச்சலோடு அவள் முகத்தை மூடியிருந்த அவள் கரங்களை தன் கரங்களால் அழுத்தமாய் பற்றி விலக்கினான்.

"கையை விடுங்க" என்று அவள் தன் கரத்தை மீட்கப் போராட, அவன் அவளின் அழுது சிவந்திருந்த கண்களைப் பார்த்தபடி, "என்னை இப்படி யாருமே அசிங்கப்படுத்த முடியாது... தேங்க்ஸ்... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்... நான் உன்னை உண்மையா காதலிச்சதுக்கு நீ செஞ்சது பெரிய உதவி... இதை நான் என்னைக்குமே என் வாழ் நாளில் மறக்க மாட்டேன்" என்று வலியோடும் வேதனையோடு சொல்லி அவள் கரத்தை விடுவித்துவிட்டு ஒதுங்கிச் சென்றான்.

அவன் சொன்னது எதுவும் அந்த நொடி தமிழின் மனதைப் பெரிதாய் பாதிக்கவில்லை. எனினும் அவன் காதல் என்று சொன்ன வார்த்தை மட்டும் கொஞ்சம் நெருடலாய் இருந்தது.

அவனோ அப்போது எரிச்சலோடு படுக்கையின் மீது அலங்கரித்திருந்த பூக்களை உதறி வீசிவிட்டுப் படுத்து கொள்ள, அந்த அறையே நிசப்தத்தில் மூழ்கியது.

நேரம் கடந்து கொண்டே போக அவளோ நின்ற இடத்திலிருந்து அசையாமல் நின்றிருந்தாள். அவளைக் கோபமாய் நோக்கியவன், "இப்போ எதுக்கு அங்கயே நிற்கிற... வந்து படு" என்றான்.

"எங்கே படுத்துக்கிறது?" என்று அவள் பதிலுக்கு கேட்க,

"ஏன்? இந்த ஃபுல் பெட்டையும் நீயே அக்குப்பை பண்ணிக்கனுமா? போய் அந்தப்பக்கம் படுத்துக்கோ... இல்லன்னா கீழே போய் படு" என்றான்.

"எனக்கு கீழே எல்லாம் படுத்து பழக்கமில்ல"

"அப்படின்னா மேடம் போய் அந்தப்பக்கம் படுத்துக்கோங்க... நான் உங்கப் பக்கத்தில கூட வரமாட்டேன்... போங்க" என்று சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

'எனக்கு உருள்ற பழக்கம் வேற இருக்கே... இப்ப என்ன பண்றது... கீழே விழுந்தா பரவாயில்ல... பட் அந்தப் பக்கம் போயிட்டா... பேசாம கீழே படுத்துக்கலாம்?' என முடிவெடுத்தவள் போர்வையையும் தலையணையை எடுக்கவும் அதனைக் கவனித்தவன் கடுப்பாகி, "ஒரே ரூம்ல படுத்துக்கணும்னு முடிவாயிடுச்சுல... ஒரே பெட்ல படுத்தா மட்டும் என்னவாம்... என்னை டென்ஷன் படுத்தாம படுத்திரு" என்றான்.

இவன் வேறு புரிந்து கொள்ளாமல் பேசுகிறானே என எண்ணியவள் கீழே படுத்தால் தேவையில்லாமல் எதையாவது பேசி சண்டைதான் வரும் என யோசித்து தயக்கத்தோடு அவள் படுக்கையில் படுத்துக் கொள்ள இருவரும் எதிர்புறமாய் திரும்பிப் படுத்துக் கொண்டனர்.

தான் எங்கே அவன் பக்கம் உருண்டு சென்றுவிடுவோமோ எனப் பயத்தில் ரொம்பவும் ஓரமாய் படுத்து கொண்டவள் வெகுநேரம் உறக்கமில்லாமல் புரண்ட பின்னரே நித்திரைக்குள் ஆழ்ந்தாள்.

ஆதவன் விடிந்துவிட்டதை அறிவித்து வெகு நேரம் கடந்துவிட, அயர்ந்து உறக்கத்தில் கிடந்தவள் கதவு தட்டும் ஓசைக் கேட்டே மெல்ல கண் விழித்தாள்.

முகத்தைத் துடைத்துக் கொண்டுக் கதவைத் திறக்க அறை வாசலில் சந்திரா நின்றிருந்தார்.

"டிபன் எடுத்து வைக்கிறேன்... சீக்கிரம் குளிச்சிட்டு வாம்மா" என்றவர் சொல்லிச் செல்ல, "ஹ்ம்ம்" என்று தூக்க கலக்கத்திலேயே தலையசைத்தாள்.

அவர் சென்ற பின்னர் கதவை மூடிவிட்டு அந்த அறையைச் சுற்று முற்றும் பார்த்து, 'இது ரூம் மாதிரியே தெரியல... ஜெயில் மாதிரி இருக்கு... சே... கூடவே ஒரு போலீஸ்காரன் வேற' என்று முனங்கிக் கொண்டே கடிகாரத்தைப் பார்த்து,

'அச்சோ! மணி பத்தா?' என்று அதிர்ச்சியானாள்.

அதன் பிறகு அவள் தாமதிக்காமல் மளமளவென தன் காலை பணிகளை முடித்தவள், அலுவலகத்திற்குப் புறப்பட்டு சென்றால் மனதின் அழுத்தம் கொஞ்சம் குறையலாம் என்று எண்ணித் தயாரானாள்.

இரண்டு மூன்று நாளாய் புடவையில் அலங்காரங்களோடுச் சுற்றித் திரிந்ததை எண்ணிய போது கடுப்பாய் இருந்தது. எப்பவும் போல் அவள் பாணியில் உடையணிந்து கொள்ள தன் பெட்டியை ஆராய்ந்தாள்.

அதேநேரம் பேன்ட் ஷர்ட் அணிந்து கொள்வது கொஞ்சம் சங்கடமாய் இருக்க, ஒரு கருப்பு நிற ஜீன்ஸ் மற்றும் வானின் நீலத்தில் ஒரு டாப்ஸை அணிந்து கொண்டு கண்ணாடியின் முன்னிலையில் நின்றாள்.

ஏதோ ஒரு வலி. அவள் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் தாலி. அதை பார்க்க பார்க்க கோபம் மூண்டது அவளுக்கு.

அவசர அவசரமாய் நடந்து முடிந்துவிட்ட திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத தவிப்பு. அதுவும் இல்லாமல் அறிவிப்பின்றி தான் திருமணம் முடித்துவிட்டு வந்திருப்பதைப் பார்ப்பவர்கள் எல்லோருக்கும் அந்தத் தாலி புலப்படச் செய்துவிடும்.

எல்லோரும் தன்னைக் கேள்வி கேட்பார்கள். இன்னும் சிலர் ஏன் சொல்லவில்லை என உரிமையோடு கோபித்து கொள்வார்கள்.

யாரிடம் தன் நிலையைப் புரிய வைக்க முடியும் எனச் சலிப்புற்றவள், பின் அந்த எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நேராக சந்திராவிடம் அலுவலகத்திற்கு செல்வதைப் பற்றி சொல்லி மரியாதை நிமித்தமாக அனுமதி கேட்க,

"சரி போயிட்டு வாம்மா... டிபன் எடுத்து வைச்சிருக்கேன்... வா சாப்பிட்டு கிளம்புவ" என்றவர் காலை உணவைப் பரிமாற, அவள் வேண்டாமென மறுத்த போதும் அவர் விடாமல் அவளைக் கட்டாயப்படுத்தினார்.

வேறுவழியின்றி உணவு உண்ண அமர்ந்தவள் அந்த வீட்டை அளவெடுத்தபடி பார்க்க,

சந்திரா அவள் எண்ணத்தை ஒருவாறு கணித்துவிட்டு, "வீரை தேடுறியா" என்று கேட்க, அவள் பதில் பேசாமல் அவரை நோக்கினாள்.

"அவன் எப்பவோ கிளம்பிட்டானே ம்மா" என்றவர் சொல்ல அவள் முகம் திகைப்பாய் மாறியது.

அவர் மேலும், "உன் புருஷன் இருக்கானே... இடி பூகம்பமே வந்தாலும் யூனிஃபார்ம் மாட்டிட்டுக் கிளம்பி போயிட்டே இருப்பான்... அவனுக்கு வேலைதான் முதல்ல" என்றவர் சொல்ல அவள் உள்ளூர எரிச்சலாகி,

'அவன் ஒன்னும் என் புருஷன் இல்ல' என்று மனதில் எண்ணிக் கொண்டாள்.

அதன் பிறகு தமிழ் சந்திராவிடம் சொல்லிவிட்டு பத்திரிக்கை அலுவலகத்திற்குச் செல்ல, அங்கே அவள் எண்ணியது போலவே அவள் திருமணத்தைப் பற்றி கேலியும் கிண்டலும் அரங்கேறியது.

அதுவும் வீரேந்திரனை அவள் எதிர்த்துக் கொண்டது அந்த அலுவலகம் முழுக்கவும் அறிந்த கதை என்பதால் அதைக் குறித்து அனைவரும் பரிகசித்து பேச, அவளுக்கு அவர்கள் பேசுவதைக் கேட்கக் கேட்கப் பற்றிக் கொண்டு வந்தது.

இருந்தும் பொறுமை காத்தவள் அவர்கள் எல்லோரையும் சமாளித்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்தாள். தன் இருக்கையில் அமர்ந்தபடி வேலைகளில் மெல்ல மெல்லக் கவனத்தைச் செலுத்த முயற்சித்து நடந்த நிகழ்வுகளை சில மணிநேரங்கள் மறக்க முயற்சி செய்தாள்.

மாலை நேரமாகி வேலை முடிந்துவிட ஏனோ வீட்டிற்குப் போக விருப்பமின்றி அமர்ந்திருந்தவளுக்கு அப்போதுதான் தர்மா வீட்டில் இருந்து எடுத்த அந்த டைரியின் நினைவு வந்தது. அது இப்போதும் அவளின் அலுவலகத்திற்கு எடுத்து வந்த பேகில்தான் இருந்தது.

தன் பேகினை ஆராய்ந்து அதனை வெளியில் எடுத்தவள், அதில் அப்படி என்ன இருக்க முடியும் என்று ஆர்வமாய் பிரிக்க முதல் பாதி பக்கங்களின் எழுத்துகள் தற்போது வழக்கில் இல்லாத எழுத்துகளாக இருந்தன.

ஆனால் அது மற்றவர்களுக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம். அது அவளுக்குப் புரியும். அவையெல்லாம் கல்வெட்டிலிருந்து எடுத்து எழுதப்பட்ட எழுத்துகள்.

இது தமிழி வகைதான் எனச் சிந்தித்தவள் அதன் அர்த்தத்தைத் தான் பொறுமையாகவே கண்டறிய வேண்டும் என எண்ணிவிட்டு டைரியின் பின் பாதி பக்கங்களைத் திருப்ப, அது இயல்பான தமிழில் இருந்தது.

அவற்றை ஆர்வமாய் படிக்கத் தொடங்கினாள்.

'26 டிசம்பர் 2004 பேரழிவை உருவாக்கிய சுனாமி பேரலைகள். குழந்தைத்தனமாய் கரையைத் தொட்டுவிட்டு ஓடிவிடும் அலைகள் அன்று மட்டும் அசுரனாய் உருவம் தறித்து கரையைக் கடந்து வந்து பல்லாயிரம் உயிர்களைப் பலியாக்கிவிட்டதன் நோக்கத்தை யார் அறியக் கூடும்.

இயற்கையை விளையாட்டாய் எடுத்துக் கொள்பவர்களுக்கு அது தன் சுயரூபத்தைக் காட்டிவிட்டது. சமுத்திரத்தின் கொந்தளிப்பில் காணாமல் போன உயிர்கள் பல. உடைமைகள் பல. அந்தப் பேரிழப்புகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஆனால் அத்தகைய கடல் கொந்தளிப்பில் எனக்கு மட்டும் அந்தச் சமுத்திரம் தந்தது பெரும் வரலாற்றுப் பொக்கிஷத்தை.'

எதிர்பாராத அந்த 'பொக்கிஷம்' என்ற வார்த்தை தமிழை வியப்புக்குள்ளாக அடுத்தப் பக்கத்தைத் திருப்ப எத்தனிக்கும் போது அவளுடைய அறைக் கதவு தட்டப்பட்டது. அந்த டைரியை மூடி ஓரம் வைத்தவள், "கம்மின்" என்றாள்.

உள்ளே நுழைந்தவன் அவளைப் பார்த்து கேலியான புன்னகையோடு, "லேட்டாயிடுச்சுன்னு உன் ஹஸ்பண்ட்டே உன்னை அழைச்சிட்டுப் போக வந்திருக்காரு... சீக்கிரம் கிளம்பு... மத்த வேலை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்" என்று சொல்ல அவள் குழப்பமாய்,

"என்ன சாய்? கிண்டல் பண்றியா?" என்று கேட்டாள்.

"நான் சொல்றதை நம்பலன்னா எட்டி பாரு... நல்லா விறைப்பா நிக்கிறாரு ஏசிபி சார்" என்றதும், அவள் தன் அறை ஜன்னலின் திரையை விலக்கிவிட்டுப் பார்க்க கீழே கம்பீரமாய் போலீஸ் உடையில் காரில் சாய்ந்தபடி நின்றிருந்தான் வீரேந்திரன்.

'இவரு ஏன் இங்க வந்திருக்காரு... நான் கொஞ்ச நேரம் கூட நிம்மதியாவே இருக்க கூடாதோ' என்று அவள் உள்ளுர பொறும,

"பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி... கிளம்புறது" என்றான் சாய்.

"நான் போயிக்கிறேன்... நீ முதல்ல கிளம்பு" என்றவள் உரைக்கவும் அவன் சென்றுவிட, அவள் அவசரமாய் தர்மாவின் டைரியை தன் மேஜையில் இருந்த டிராவில் பத்திரமாய் வைத்துப் பூட்டினாள்.

பின்னர் அவள் புறப்பட்டு அலுவலகத்தின் வாசலுக்கு வரவும், "சீக்கிரம் வா... போகணும்" என்று காரணம் சொல்லாமல் அதிகாரமாய் அழைத்தான் வீரேந்திரன்.

"எங்க போகணும்... நீங்க எதுக்கு வந்தீங்க?" என்றவள் முறைப்பாய் கேட்க,

"என்னைப் பத்தி உன்கிட்ட ஒரு பொண்ணு தப்பு தப்பா சொன்னான்னு சொன்னியே" என்றவன் நிதானமாய் சொல்ல, அவளும் ஆர்வமாய், "ம்ம்ம்" என்று தலையசைத்தாள்.

"அந்தப் பொண்ணை விசாரிச்சு யார் அப்படி அவளை செய்ய வைச்சதுன்னு கண்டுபிடிச்சிட்டேன்" என்றதும் அவள் எதிர்பார்போடு "யாரு?" என்று கேட்க,

அவன் அவளை ஆழமாகப் பார்த்து, "உனக்கு தெரியாதா?" என்று கேட்டான்.

"எனக்கெப்படி தெரியும் ஏசிபி சார்?" என்று அவள் புரியாமல் கேட்கவும்,

"நிஜமாதான் சொல்றியா?!" என்றவன் சந்தேகமாய் பார்க்க அவள் குழப்பத்தோடு,

"ஏன் இப்படி கேட்கிறீங்கன்னு எனக்கு தெரியல... ஆனா யாருன்னு நான் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.. அந்த ஒரு நியூஸ் என் வாழ்க்கையே புரட்டிப் போட்டிருச்சு... என் கனவு என் ஆசை எல்லாத்தையும் சாம்பலாக்கிடுச்சு" என்று சொல்லவும் அந்த வார்த்தை அவனின் நெஞ்சை ஆழமாய் துளைத்தது.

அதை அவள் உணராமல் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டிருக்க அவன் அவளிடம், "கவலைப்படாதே... உன் பிரச்சனை எல்லாத்துக்கும் இன்னையோட ஒரு முடிவு கட்டிடுவோம்" என்றான்.

"என் பிரச்சனை முடியுமா? ப்ச்... இந்த ஜென்மத்தில அதுக்கான வாய்ப்பு இருக்கும்னு எனக்கு தோனல" என்றவள் சொல்லி அவனைக் குத்தலாய் பார்க்க,

"முடியும் தமிழ்... நீ வா" என்றவன் தீர்க்கமாகச் சொல்லி அவளை அழைத்துச் செல்ல, அவள் குழப்பமான மனநிலையோடு காரில் ஏறி அவனுடன் புறப்பட்டாள். ஆனால் வேகமாய் பயணித்த அந்த கார் அவள் வீட்டின் வாசலிலேயே சென்று நிற்கும் என அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content