You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic comedy

Virus Attack – 15

வைரஸ் அட்டாக்-15

நகல் விஸ்வா தன்னை சரியாக அடையாளம் கண்டுகொள்ளவும், “என்ன? சக்கும்மாவா… என்னை பத்தி… அதுவும் உன்கிட்ட சொன்னாங்களா?” என வியந்தவாறு, “சரி… வா! இங்க இருந்து சீக்கிரமா கிளம்பலாம். ஏற்கனவே நிஜ விஸ்வா அவங்க கஸ்டடியில இருந்து தப்பிச்ச காண்டுலதான் உன்னை இப்படிக் கிழி கிழின்னு கிழிச்சு வெச்சிருக்கானுங்க. இப்ப அந்த ஆளுங்க கைல மட்டும் சிக்கினோம்… அவ்வளவுதான்” எனப் பதறியவள், அவனுடைய கையை பிடித்து இழுத்தவாறு அங்கிருந்து வேகமாக வெளியேறினாள் மேனகா தன் ரெடிமேட் டர்பனையும் மறக்காமல் கையில் எடுத்துக்கொண்டு.

ஏற்கனவே உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அவனிடம் சில மரபியல் குறைபாடுகள் உண்டு. போதாத குறைக்கு, இரண்டு தினங்களாகப் பட்டினி போட்டு விஸ்வாவை பற்றிய தகவல்களைச் சொல்லச் சொல்லி அந்த அடியாட்கள் அடித்ததால் உடலெங்கும் காயம் பட்டிருக்க, அவளுடைய வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் திணறினான் அவன்.

அதை உணர்ந்து தன் வேகத்தைக் குறைத்து அவனுக்குத் தகுந்தாற்போல நடக்கத் துவங்கியவளுக்கு அந்த வனத்தின் வனப்பு மனதைப் பரவசப்படுத்த, ‘நீ ஹிம மழையாய் வரு… ஹ்ரிதயம் அணி விரலால் தொடு…’ என தன்னை மறந்து முணுமுணுத்தாள் மேனகா.

அந்த பாடல் வரிகள் நினைவுக்கு வந்ததும் விஸ்வாவின் நினைவும் ஒட்டிக்கொண்டு இலவச இணைப்பாகக் கூடவே வர, அன்று கடற்கரையில் மில்லியை இவள் கைகளில் கொடுக்கும்பொழுது அவன் பார்த்த அந்த இனம் புரியாத பார்வைக்கு விளக்கத்தை அவள் மனம் தேடியது.

அவள் ஏதோ சொல்கிறாள் அது நமக்குத்தான் புரியவில்லை’ என்கிற ரீதியில் “என்ன சொன்னீங்க மேனகா” என நகல் அவளிடம் தீவிரமாக கேட்க, “என்ன… நான் பாடினா… அது உனக்கு பேசற மாதிரி இருக்கா” என அவள் கடுப்பாகவும், “இல்ல…ல சாரி பசில எனக்கு காது அடைக்குது அதான்” என்றான் அவன் பதறியவனாக.

பார்றா… என்ன பார்த்து பயப்பட கூட இந்த உலகத்துல ஆளிருக்கு” என்ற எண்ணம் தோன்றச் சிரிப்புதான் வந்தது மேனகாவுக்கு.

ஒருவாறு அவனை அங்கிருந்து இழுத்துக்கொண்டு சிறிது தூரம் வந்தவளுக்கு அந்த காட்டில் திக்கும் தெரியவில்லை திசையும் தெரியவில்லை.

வரும்பொழுது அந்த அடியாட்களை பின்தொடர்ந்து வந்திருக்க, வந்த பாதை சுத்தமாக அவளுடைய கவனத்தில் பதியவில்லை. ஸ்தம்பித்துத்தான் போனாள் மேனகா.

பயத்திலும் குளிரிலும் கைகள் சில்லிட்டுப் போக, அனிச்சையாக அவள் அணிந்திருந்த கோட் பாக்கட்களுக்குள் தன் கரங்களை  நுழைத்துக்கொண்டாள் அவள்.

அதிர்ஷ்ட வசமாக அதிலிருந்த அவளுடைய கைப்பேசி கையில் தட்டுப்படவும், அதில் கொஞ்சம் துணிவு வரப்பெற்றவளாக, அதை எடுத்துப் பார்த்தாள்.

அது கொடுத்த நிம்மதி சில நொடிகள் கூட நிலைக்கவில்லை. காரணம் அந்த இடத்தில் துளி அளவு கூட சிக்னல் இல்லை என்று சொன்னது அந்த கைப்பேசி.

இந்த சாமியார் கேடி பில்லான்னா, மிஸ்டர் சந்திரமௌலி கில்லாடி ரங்காவா இருப்பார் போலிருக்கு. இந்த ஆளு கிட்ட இருக்கற மாதிரி நமக்கும் ஒரு சாட்டிலைட் போனை அரேஞ் பண்ணி கொடுத்திருக்கலாம் இல்ல அவரு?’ என்று தன் போக்கில் எண்ணிக்கொண்டிருந்தவளின் பார்வை, ஐயோ பாவமாக அவளுக்கு அருகில் நடந்து வந்துகொண்டிருந்த நகலின் முகத்தில் படிய,  ஷாக் அடித்தது போல் இருந்தது அவளுக்கு எந்த ஒயரையும் தீண்டாமலேயே.

அட பாவி சந்திரமௌலி!” எனத் தன்னை மறந்து வாய் விட்டே கத்தியவள், விஸ்வாவை போன்றிருப்பவன் அவளை பரிதாபமாக பார்க்கவும், “பீ.டி.சி.ஏ.சி.விஸ்-34″ எனத் தட்டுத்தடுமாறி அவனை அழைத்தவள், “என்னவோ நீதான் ஐயோ பாவம் மாதிரி இப்படி பார்க்கறத விடு முதல்ல. இப்ப உனக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. ஒய் பிளட்… சேம் பிளட்தான்!

அந்த வில்லன் கிழவன் என்னையும் பலி கொடுக்கற ஐடியாலதான் இருந்திருக்கான் போலிருக்கு. அத புரிஞ்சுக்காம… நானும் இப்படி லூசு மாதிரி இங்க வந்து மாட்டிகிட்டேன்” என மூச்சு விடாமல் சொன்னவள், “சோறு மட்டும் நேராநேரத்துக்கு வெச்சாங்களே… உருப்படியா உனக்கு ஒரு பேரு வெச்சாங்களா பாரு?” எனக் குறை பட்டுக்கொண்டு, ‘பையோ டெக்னலாஜி-குளோனிங்-அசெக்சுவல்-காபி- விஸ்வா-34′ ஒவ்வொரு தடவையும் உன் வெர்ஷன் பேரை வெச்சு கூப்பிடறதுக்குள்ள ஒரு வழி ஆயிடுவேன்” என்று புலம்பிக்கொண்டே, வேருடன் சாய்ந்து புதையுண்டு, நீள மேடை போலிருந்த ஒரு காட்டு மரத்தின் மேல் உட்கார்ந்தாள் அவள்.

அவள் பேசுவதற்கெல்லாம் என்ன மாதிரி எதிர்வினை ஆற்றுவது என்பதுகூட புரியாமல், காலை சுற்றும் ஒரு பூனைக் குட்டியை போன்று, பதவிசாக அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்தவனை பார்க்கையில் பாவமாக ஆகிப்போனது அவளுக்கு.

நான் வேணா உனக்கு ஒரு நல்ல பேர் வெக்கட்டுமா?” என அவள் கேட்க, அதில் முகம் பிரகாசிக்க அவன் தலை அசைக்கவும், அதை மனதில் குறித்துக்கொண்டு, ‘ம்..ம்..’ என்று யோசித்தவள், “ஹான்… விஜித்!” என்று சொல்லிவிட்டு, “இனிமேல் உன்னை விஜித்னு கூப்பிடலாமா? உனக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள் மேனகா, தான் ஒருவனுக்குப் பெயர் வைத்த குதூகலத்துடன்.

நைஸ்ங்க மேனகா!” என்று அவன் புன்னகைக்க, “ஒருத்தரோட அனுமதியோட அவங்களுக்கு பேர் வெக்கறது உலக சரிதரத்துலயே இதுதான் முதல் முறை” என்றாள் அவள்.

அப்படினா எல்லாருக்கும் யார் பேர் வைப்பாங்க” என அவன் அப்பாவியாய் கேட்க, “வீட்டுல இருக்கற பெரியவங்க யாராவது வெப்பாங்க. இல்லனா அப்பா அம்மா கலந்து பேசி பேர் வைப்பாங்க. நம்ம ஊர்ல, அரசியல் வாதிங்க… பிலிம் அக்டர்ஸ்… சாமியாருங்க… யார் வேணாலும் பேர் வைப்பாங்க” என்றவள், “நம்ம தொல்லை நாயகி பத்தி தெரியாதில்ல உனக்கு. அவங்க அப்பா ஒரு அரசியல்வாதியோட பயங்கர விசுவாசி. அந்த ஆளு ஒரு அரைகுறை இலக்கியவாதி. நாயகி பிறந்ததும் அவர்தான் பேர் வெக்கணும்னு, பொழுது விடிய அவர் வீட்டுக்கே போய் நின்னு அந்த ஆளை பேர் வெக்க சொல்லி நச்சரிச்சிருக்காரு மனுஷன். எங்கயோ வெளியூர் போற அவசரத்துல இருந்தாராம் அந்த இ…வா…  சட்டுனு பேர் எதுவும் தோணல போலிருக்கு. நாயகி அப்பாவோட தொல்லை தாங்காம, தொல்லை நாயகின்னு பேர் வெச்சிட்டாரு. அதுக்கு பிறகு அந்த கட்சியும் சரி அந்த தலீவரும் சரி ஆளே அட்ரஸ் இல்லாம பூட்டானுங்க.

அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் அவரைத்தான் தேடிட்டு இருக்கா நம்ம நாயகி. அவ கைல அந்த ஆளு கண்டி மாட்டினான்னு வெய்யி, அவன் கைமாத்தான்” என நாயகியைப் போன்றே சொல்லிச் சிரித்தாள் மேனகா.

அதற்கு கொஞ்சம் கூட சிரிக்காமல் அவன் மௌனமாக இருக்கவும்,  அவள் அவனுடைய முகத்தை ஏறிட, ‘இந்த மொக்க ஜோக்குக்கெல்லாம் நான் சிரிக்க மாட்டேன்’ என்பதுபோல் மறுபடியும் அதே பரிதாப பார்வையை அவளை நோக்கி வீசினான் அவன். அதில் எரிச்சலாகி, “இப்ப என்ன” என அவள் கடுப்புடன் கேட்க, தன் வயிற்றைத் தடவியவன், “பசிக்குது” என்றான் இன்னும் பரிதாபமாக.

உண்மையில் வேதனை ஆகிப்போனது மேனகாவுக்கு. அங்கே சாப்பிட எதாவது கிடைக்குமா என அவள் சுற்றி முற்றிப் பார்க்க, அது ஒரு அடர்ந்த வனப் பகுதி என்பதால், சீக்கிரமே இருள் கவிழத் தொடங்கிவிட்டது அங்கே. விலங்குகளின் வினோத ஒலிகள் வயிற்றில் புளியைக் கரைக்க, அழுகையே வந்துவிடும் போலத் தோன்றியது மேனகாவுக்கு.

நோ… மேனகா… நோ… நோ… இது நீ ஸ்ட்ரக் ஆகற நேரம் இல்ல. ஏதோ இவனை காப்பாத்தணும்னு ஒரு ஃபீலிங்ல கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி வந்து மாட்டிக்கிட்ட. ரெண்டுபேரும் நல்லபடியா ஊர் போய் சேர்ந்தாகணும்.

நீ இப்ப… இவனோட சேர்த்து உன்னை நீயே காப்பாத்திக்க வேண்டிய சூழ்நிலைல இருக்க. ஸோ… பீ பிரேவ்’ என தனக்கு தானே தைரியம் சொல்லிக்கொண்டு மறுபடியும் அவள் தன் பார்வையைச் சுழல விட, சற்று தொலைவில், கீழே உதிர்ந்து கிடந்த நாவல் பழங்கள் அவளுடைய கண்களில் தட்டுப்பட்டன.

ஒரு நிம்மதி பெருமூச்சுடன் வேகமாகப் போய் அதைப் பொறுக்கி, கையில் வைத்திருந்த டர்பனில் நிரப்பி, அசைய கூட முடியாமல் உடல் தளர்ந்துபோய் உட்கார்ந்திருந்த, சற்று முன் அவள் நாமகரணம் செய்திருந்த விஜித்துக்கு அருகில் கொண்டுவந்து வைக்க, அவனிருந்த கொலை பசியில், கொஞ்சம் கூட யோசிக்காமல் அதை கை நிறைய அள்ளி வாயில் போட்டுக்கொண்டான் அவன்.

ஏய் லூசு! அதை இப்படி சாப்பிட கூடாது!” என்றவள், “மண்ணு ஓட்டிட்டு இருக்கும். இங்க தண்ணி எங்க இருக்குனு தேடி போக முடியாது. அதனால வேற வழி இல்ல. சும்மா துடைச்சிட்டு, ஒண்ணு ஒண்ணா சாப்பிடு. தென்… இதுல இருக்கற சீட இப்படி துப்பிடு” என்று சொல்லிக்கொடுத்தவள், அப்படியே தானும் சாப்பிடத் தொடங்கினாள்.

அதெல்லாம் அவனுக்கு போதவே இல்லை.

கொஞ்சம் சாப்பிட்டதில் தெம்பு வந்திருக்கவே, அந்த மரத்தின் அருகில் சென்று, தானே  பொறுக்கி சாப்பிடத் தொடங்கினான் விஜித்.

அதுவும் திருப்தி அளிக்காமல் குட்டையாக இருந்த அந்த நாவல் மரத்தின்மேலேயே ஏறி, நேரடியாக பழங்களைப் பறித்து சாப்பிட்டு, ஓரளவுக்குத் திருப்தி அடைந்தபின்தான் மொபைல் போனில் இருந்த டார்ச் லைட் மூலமாக அவனுக்கு வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருந்த மேனாகவே அவனுடைய கண்களுக்குத் தெரிந்தாள்.

சாரி… தேங்க்ஸ்’ என இரண்டையும் அடுத்தடுத்து சொன்னவன், “வா மெனு… அங்கேயே போய் உட்காரலாம்” என்று உரிமையுடன் சொல்ல, வியப்புடன் அவன் கூடவே நடந்து வந்து மறுபடியும் முன்பு அமர்ந்திருந்த அந்த மரத்தின் மீதே உட்கார்ந்தவள், “என்னவோ ரொம்ப வருஷம் பழகின மாதிரி இப்படி பேசற” என அவள் விழி விரிக்கவும், “ஹா… ஹா… நான் லைவா வந்தே நைன்ட்டி த்ரீ டேஸ் தான் ஆகுது. இதுல ரொம்ப வருஷமாவா?” என்று சிரித்தவன், “உன்னை நேர்ல பார்த்த பிறகு, என்னவோ என்னோட ஒவ்வொரு ஜீனுக்குள்ளயும் நீ இருக்கற மாதிரி ஒரு பீல்” என்று வேறு சொல்ல, “நல்லா பேச கத்து வெச்சிருக்க நீ” என்றாள் மேனகா ‘இவன் என்ன பேசறோம்னு தெரிஞ்சிதான் பேசறானா?’ என்ற கலக்கம் வேறு உண்டானது அவளுக்கு.

அதுக்கு தகுந்த மாதிரியும்தான் என் டீ…என்…ஏவ அக்ட்டிவேட் பண்ணிவெச்சிருக்காங்க சக்குமா” என்றவன், “எனக்கு விஸ்வாவையும் நேர்ல பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு” என்று முடித்தான்.

நல்ல ஆசைதான் போ” என்றவள், “மொதல்ல நாம இங்க இருந்து உயிரோய நல்லபடியா ஊர் போய் சேருவோமா பாரு” என அவள் பட்டென்று சொல்லிவிட மறுபடியும் பீதி அடைந்தான் அவன்.

ச்ச… இவனே ஒரு குழந்தை மாதிரித்தான். ஏன் இப்படி சொன்னோம்’ என அவள் தன்னைத்தானே நொந்துகொண்டு, “உனக்கு நான் ஏன் விஜித்னு பேர் வெச்சேன் தெரியுமா?” என அவள் கேட்கவும்,”ஏன்?” என்றான் அவன் ஆர்வமாக.

அவன் மனதை திசை திருப்பும் தன் எண்ணம் நிறைவேற, அதில் தானும் உற்சாகமானவள்,”விஜித்னா ஜெயிக்க பிறந்தவன்னு அர்த்தம்” என்று சொல்லிவிட்டு, “ஏற்கனவே முப்பத்து மூணு சாம்பிள் ஃபைலியர் ஆகி… முப்பத்தி நாலாவதா நீதான் சக்ஸஸ் ஆன. நீ லைவ்ல வர வரைக்கும் சக்கும்மா வாயில இருந்து எத்தனை தடவ சக்சஸ்ங்கற வார்த்தை வந்திருக்கும்னு தெரியுமா? அதனாலதான் அந்த பேர் வெச்சேன். ஸோ… நீ எந்த நிலைமையையும் ஜெயிக்க கத்துக்கோ” என அவனுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக அவள் சொல்லிக்கொண்டிருக்க, அவளுடைய தன்னம்பிக்கையையே குலைக்கும் விதமாக  தூரத்தில் திடீரென்று ஏதோ வெளிச்சம் தெரியவும், அதுவும் சிறு புள்ளியாகத் தெரிந்த அந்த வெளிச்சம் அவர்கள் இருவரும் உட்கார்ந்திருந்த இடம் நோக்கி நகர்ந்து வேறு வரவும், நெஞ்சுக் கூடு உலர்ந்துபோனது மேனகாவுக்கு.

அந்த சிறு வெளிச்சம் கூட அவர்கள் அருகில் வரும் நேரம் பார்த்து முற்றிலும் அணைந்து போக, சில நிமிடங்களிலெல்லாம் ஒரு உருவம் அந்த பகுதியே அதிரும் வண்ணம் தடதடவென நடந்து அவர்களுக்கு வெகு அருகில் வரவும் ‘வீ….ஈஈல்’ என்று அலறினாள் மேனகா.

கூடவே அவளுக்கு இணையாகக் கத்தி அலறியது அந்த உருவமும்.

ஆளரவம் அற்ற அந்த அடர்ந்த காட்டுக்குள் அதுவும் அந்த அரையிருளில் இரண்டு உருவங்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அந்த உருவம் பயந்து அலறிக்கொண்டிருக்க, அது தொல்லை நாயகி என அறியவே சில நிமிடங்கள் பிடித்தது மேனகாவுக்கு.

மேனகாவாவது நிலைமையைப் புரிந்துகொண்டு தன் கத்தலை நிறுத்திவிட்டாள். ஆனால் அது மேனகாதான் என்பதைக் கூட உணராமல் வீரிட்டுக்கொண்டிருந்தாள் நாயகி.

ஏற்கனவே பலவித காரணங்களால் அரண்டுபோயிருந்த விஜித்துக்கு மேலும் பீதியில் மூச்சு திணறத் தொடங்க, “ஹேய்… நாயகி! மொதல்ல வாயை மூடு” என்று சத்தமாக ஒரு அதட்டல் போட்டாள் மேனகா. தன் பெயர் காதில் விழுந்த பிறகுதான் கொஞ்சம் அடங்கினாள் நாயகி.

பின் தன் கையில் வைத்திருந்த செல் போன் டார்ச்சை தன்னுடைய முகத்துக்கு அருகில் காண்பித்து, “நாயகி! நான்தான் மேனகா” என அவள் இழுத்துப் பிடித்த பொறுமையுடன் சொல்ல நிதானத்துக்கு வந்தாள் நாயகி.

பின் விஜித்திடம் திரும்பி, “விஜி! கூல்! டென்ஷன் ஆகாத. இவதான் நான் சொன்ன நாயகி” என மேனகா சொல்லவும் அவனும் சற்று இயல்பு நிலைக்குத் திரும்பினான்.

கைப்பேசியில் மணியைப் பார்க்க, அதுவோ எட்டு என்று காண்பித்தது.

எது எப்படியோ, இந்த இரவு நேரத்தில் கூட, அதுவும் இப்படி ஒரு அடர்ந்த காட்டுப்பகுதிக்குள், தனக்கு நெருக்கமான ஒருத்தி தன்னை தேடி வந்திருக்கவும் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்த மேனகா, “என்ன நாயகி! நீ எப்படி இங்க வந்த?” என வியப்புடன் கேட்க, “அது ஒரு அம்மாம்பெரிய பிலாஷு பாக்கு யம்மா!” என்றவாறு நடந்து வந்த களைப்பில் அவளுக்கு அருகில் தொப்பென உட்கார்ந்தாள் தொல்லைநாயகி.

நான் அங்க இருந்து வந்தே ஃபியூ ஹவர்ஸ் தான் ஆகுது. அதுக்குள்ள என்ன அம்மாம்பெரிய ஃப்ளாஷ் பேக்” என மேனகா நொடித்துக்கொள்ள, “அல்லாத்தையும் சொல்றேன் யாமா… ஆனா அதுக்கு முன்னால” என்றவாறு நாயகி அவளை ஒரு பார்வை பார்க்கவும், “என்ன பெருசா சொல்லப்போற… யம்மா… யம்மா… பயங்கரமா பசிக்குது யம்மா… அதான” என மேனகா நக்கலாக கேட்க, “தேய்வோம் யம்மா நீயி” என உச்சி குளிர்ந்தாள் நாயகி.

மிச்சம் மீதம் இருந்த நாவல் பழங்களை, கூடை போன்று இருந்த அவளுடைய டர்பனுடன் சேர்த்து மேனகா நாயகியின் கைகளில் திணிக்க, “சூப்பராகீதும்மா இந்த நாவ பயம்” என்றவாறு கருமமே கண்ணாக அதைச் சாப்பிடத் தொடங்கினாள் நாயகி.

அவள் முடிக்கும் வரை பொறுமையாக இருந்தவள், “மில்லிய தனியா விட்டுட்டு நீ ஏன் வந்த நாயகி” என மேனகா நிதானமாகவே கேட்க, “அதான் சொன்னானே யாமா அது ஒரு பெரிய பிலாஷு பேக்குன்னு” என்றவள், “அது இன்னாமா… இம்மாந்தூரம், அதுவும் இந்த அதுவான காட்டுல தனியா ஒருத்தி உன்ன தேடிக்கினு வந்திருக்கேன். என்னையெல்லா பார்தா உனக்கு மனுசியா தெர்லயா. சும்மானாலும் மில்லி மில்லின்னு அந்த வெள்ள பெர்ச்சாளியாவே கேட்டுகுனு கிடக்குற!” என மேனகாவின் பொறுமையை சோதித்தாள் நாயகி.

நாயகி, நாயகி! அதுக்கு ஏற்கனவே நிறைய டெஸ்ட் ஊசி போட்டு வெச்சிருக்கேன் நாயகி! போறாததுக்கு ஏதோ கழுகு வேற அதை கொத்தி வெச்சிருக்கு நாயகி! அத வெளியில விட்டு அது யாரையாவது கடிச்சு வெச்சா ரொம்ப பிரச்சனை ஆகும் நாயகி! அப்படின்னு இதையெல்லாம் விளக்கமா சொன்னா மட்டும் உன் மண்டையில ஏறிடுமா என்ன?” என மேனகா எரிச்சலுடன் கேட்க, அதில் ‘இனிமே மில்லி பெருச்சாளியால புச்சா எந்த பிரச்னையும் ஆவப்போறதில்ல… ஏற்கனவே சோலி முடிஞ்சிபோச்சாங்காட்டியும்… அஆங்…’ என மைண்ட் வாய்ஸில் பேசியவாறு நாயகி திருதிருவென விழித்தது அங்கே சூழ்ந்திருந்த இருளால் மேனகாவின் கண்களுக்கு புலப்படவில்லை பாவம்.

*

மேனகா அவசரமாக அந்த குடிலை விட்டு வெளியில் செல்லும்பொழுது காலை மணி பதினொன்றிருக்கும்.

அவள் திடுதிப்பென அப்படி வெளியில் சென்றதை நாயகி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

கடந்த இரு நாட்களாக அவள் அப்படி ஓடுவதும் அவளை பின் தொடர்ந்து போய் அவளிடம் பல்பு வாங்குவதுமாக ஏற்கனவே நொந்தே போயிருந்தாள் அவள்.

அதனால் மறுபடியும் அவள் பின்னாலேயே ஓட தயாராக இல்லை நாயகி. பேசாமல் அப்படியே இருந்துவிட்டாள்.

அப்பொழுதென்று பார்த்து மில்லி தாறுமாறாகக் கத்த, பயந்தே போனவள் அதன் கூண்டுக்கு அருகில் சென்று பார்க்க, தேனீ போன்ற தோற்றத்துடன் சிறியதாக இருந்த ஏதோ விசித்திரமான காட்டுப் பூச்சி ஒன்று அந்த கூண்டுக்குள் நுழைந்து மில்லியை நன்றாக கடித்துக்கொண்டிருந்தது.

வெள்ளை வெளேர் என்றிருத்த மில்லியன் வயிற்றில் செந்நிறத்தில் ஒட்டிக்கொண்டிருந்த அந்த பூச்சி பார்வைக்கு நன்றாகத் தெரிய, கூண்டைத் திறந்து அந்த பூச்சியிடமிருந்து மில்லியை விடுவிக்க பயமாக இருந்தது நாயகிக்கு.

மில்லி போட்ட காட்டுக் கூச்சலில் கலவரமாகிப்போய்,  செய்வதறியாமல் அந்த கூண்டை அப்படியே தூக்கிக்கொண்டு அங்கிருந்து வெளியில் வந்தவள் பதட்டத்தில் கால் போன போக்கில் தலை தெறிக்க ஓடத்தொடங்கினாள்.

எதேச்சையாக அந்த ஆசிரமத்தின் தியான மண்டபம் அவளுடைய கண்களில் படவும் அனிச்சையாக அதன் உள்ளே நுழைந்துவிட்டாள் அவள்.

நிம்மி மட்டும் அங்கே தனிமையில் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்திருக்க, மில்லியில் ஓலத்தில் அவருக்கு தூக்கிவாரி போட, பட்டென கண் திறந்தார் அவர்.

திருதிருவென விழித்தவாறு அவருக்கு முன்னால் நின்றிருந்த நாயகியை அவர் எரிச்சலுடன் பொசுக்கி விடுவதுபோல் பார்க்க, “சாமி… சாமி… மன்னிச்சிக்க சாமி… பாவம் சாமி இந்த பெருச்சாளி” என்று அவள் கெஞ்ச, அவர் மேலும் முறைக்கவும், அந்த மறைப்பு வேறு அவளுக்கு மேனகாவை நினைவு படுத்த, “ச்ச… ச்ச… பெர்ச்சாளி இல்ல சாமி… பெர்ச்சாளி  இல்ல… எலி சாமி…  எலி… வெள்ள எலி” என்றவள், “பாவம்…  அத இந்த பாளா போன பூச்சி கடிச்சிகினு கிடக்கு… அதைப் காப்பாத்து சாமி” என அவள் சரளமாகச் சென்னை தமிழில் சொல்ல, குரல் மாற அவள் எடுத்துக் கொண்ட மருந்தின்  நேரம் முடியும் நிலையிலிருந்ததால் அதன் வீரியம் குறைந்து அவளுடைய குரல் வேறு கீச்சுக்கீச்சென்று ஒலிக்க, நெற்றியைச் சுருக்கி அவளை விசித்திரமாகப் பார்த்தார் நிம்மி.

மில்லியின் இரைச்சல் வேறு அவர் பொறுமையை சோதிக்க, வேறு வழி இல்லாமல், பதட்டத்தில் நாயகி கீழே வைத்திருந்த கூண்டில் அருகில் உட்கார்ந்தவர், அதன் கதவைத் திறந்து மில்லியை வெளியில் எடுத்து, அதன் உடலில் கடித்துக்கொண்டிருந்த அந்த பூச்சியைப் பிய்த்து வீசி எறிந்தார் நிம்மி. அந்த வேகத்தில் பூச்சி கடித்த இடத்திலிருந்து ரத்தம் வரவும், வலி பொறுக்க முடியாமல் அவரது விரலில் வெடுக்கென கடித்துவிட்டது மில்லி.

சுருக்கென்ற வலியில் மில்லியை கீழே நழுவ விட்டவர் தன் விரலில் வழிந்த ரத்தத்தைப் பார்த்ததும், “அறிவில்ல, எலி… தவளை இதெல்லாமா தூக்கிட்டு வருவீங்க” என ஆத்திரத்துடன் கத்த தொடங்க, உச்சபட்சமாக அரண்டுபோயிருந்த மில்லி வேறு துள்ளிக் குதித்து அங்கும் இங்கும் ஓடவும், பயந்து போன நாயகியும் வீலென்று அலறிக்கொண்டே மில்லிக்கு இணையாக இங்கும் அங்கும் குதித்து ஓட, ஒரே ரணகளமாகிப்போனது அங்கே.

அதில் கடுப்பாகி அவர் நாயகியை பிடித்து இழுக்க எத்தனிக்கவும், அவள் அணிந்திருந்த டர்பன் அவர் கையில் வசமாகச் சிக்கி கழன்று கீழே விழ, என்ன செய்கிறோம் என்றே உணராமல் தாடியை நாயகியே தன் கைகளால் பிய்த்தெறிய, அவளுடைய உண்மையான முகத்தை பார்த்ததும் அசந்துதான் போனார் நிர்மாலானந்தா.

நீல சாயம் வெளுத்துப்போச்சு… டும்… டும்… டும்…

சிங்கு வேஷம் கலைஞ்சு போச்சு டும்… டும்… டும்…’தான் என்பது புரியவும், அங்கிருந்து தலை தெறிக்க ஓடினாள் நாயகி அனைத்தையும் மறந்து.

One thought on “Virus Attack – 15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content