You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's VET - 2

Quote

2

உச்சபட்ச பரபரபப்பில் இயங்கிக்  கொண்டிருந்தது அந்தக் காவல் நிலையம்.

அசிஸ்டென்ட் கமிஷ்னர் ராஜவீரேந்திரபூபதி தன் அறைக்குள் உக்கிரமாக நின்றிருந்தான். அவனது உயரமும் கம்பீரமும் காக்கி உடையில் அவனை இன்னும் மிடுக்காய் காட்ட, அந்தக் கூர்மையான விழிகளின் சிவப்பு அவனின் சீற்றத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

சாதாரண சமயங்களில் அவன் முன்னிலையில் செல்லவே அந்தக் காவல் நிலையைத்தின் காவலர்கள் தயங்குவார்கள். அந்தளவு கண்டிப்பான பேர் வழி அவன்.

ஆனால் தற்சமயம் நடந்திருக்கும் பிரச்சனையோ எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றியது போலத்தான். கோபத்தில் அவன் எரிமலையாகக் கொதித்து கொண்டிருக்க, அவன் முன்னே செல்பவர்கள் எல்லோருமே வெந்து நொந்து போய்தான் வெளியே வந்தனர்.

இந்த நிலையில் அவன் அலைப்பேசி ஓயாமல் ரீங்காரமிட்டு அவனை எரிச்சல்படுத்த, கோபமாய் அதனை எடுத்து பெயரைப் பார்த்தவன் தன் தந்தை மகேந்திரபூபதி என்றறிந்து சற்று நிதானித்து அழைப்பை ஏற்றான்.

"ஹெலோ வீர்" என்ற கம்பீரமான குரலில் மகேந்திரன் அழைத்தார். அவனோ பதிலின்றி மௌனமாகவே இருந்தான்.

அவர் எல்லா விஷயமும் தெரிந்துதான் அழைத்திருப்பார் என்று அவனுக்குத் தெரியும். அவர் நிச்சயம் அவன் பக்கமிருக்கும் நியாயத்தைக் கேட்கமாட்டார் என்றறிந்தே அவன் அமைதி காக்க, அவரோ இதுதான் சமயம் என்று அவனை வறுத்து எடுத்துவிட்டார். தவறே செய்யாமல் இந்த மாதிரியான வசைகளைக் கேட்பதில் அவனுக்குக் கடுப்பாக இருந்தது. உள்ளுர இரத்தம் கொதித்தது. ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

அவரோ அவன் பக்க விளக்கம் எதையும் கேட்காமல், "நீ இலட்சியம் கனவுன்னு சொல்லி கிழிச்சது போதும்... ஒழுங்கா வேலையை ரிஸைன் பண்ணிட்டு வந்து சேரு... இதுக்கு மேலயும் குடும்ப கௌரவத்தைக் கெடுக்காதே... சொல்லிட்டேன்" என்று சொல்லி அழைப்பைத் துண்டிக்க, அவன் கோபம் பன்மடங்கானது.

அந்த நொடியே அவன் தன் கைப்பேசியைச் சுக்கல் சுக்கலாக உடைத்தெறிந்தான்.

ராஜ குடும்பத்தில் பிறந்தவன் அவன். குடும்பத்தில் ஆடம்பரத்திற்கும் செல்வ செழிப்பிற்கும் பஞ்சமில்லை. எனினும் போலிஸ் வேலைதான் அவனின் ஒரே இலட்சியம். கனவு. ஆசை எல்லாம்.

இந்த வேலைக்காகத் அவன் எந்தளவு போராடினான் என்று அவனுக்குத்தான் தெரியும். தன் தந்தையின் பணபலம், பதவி என்று எதனையும் உபயோகிக்காமல் தன் திறமையை மட்டுமே முன்னிறுத்தி நேர்வழியில் மிகவும் சிரமப்பட்டே இந்த பதவியைப் பெற்றிருந்தான்.

ஆனால் எல்லாமே ஒரு நொடியில் பொய்யாய் போனது. கடைசியில் தன் தந்தை சொன்னது போல குடும்ப கௌரவத்திற்குப் பங்கம் வந்ததுதான் மிச்சம். தனக்கான அங்கிகாரத்தைத் தேடிக் கொள்ள நினைத்தது அத்தனை பெரிய தவறா? என்ற அவன் உள்ளம் கேட்ட கேள்வி மனதில் கனத்தது.

போதாக்குறைக்கு அவன் டிபார்ட்மன்ட்டில் சேர்த்து வைத்த மரியாதை, பெயர், புகழ் அதனோடு தன் தந்தையிடம் இலட்சியத்திற்காகப் பிடித்த பிடிவாதம் என எல்லாமும் ஒரே நாளில் தலைகீழானது.

இது எல்லாமே அந்த தமிழச்சியால்தான்.

'யார் அந்தப் பெண்?... எதுக்கு என்னைப் பத்தி இப்படி எல்லாம் அவங்க பத்திரிக்கையில தப்பா எழுதணும்' என்று எண்ணிக்கொண்டான்.

அப்போது கான்ஸ்டபிள் அவன் அறை வாசலருகில் அச்சத்தோடு வந்து அனுமதி கேட்டு நின்றார். அவன் பேசாமல் புருவங்களை உயர்த்தி கேள்வியோடுப் பார்க்க,

"சார்... தமிழச்சிப் பத்திரிக்கையில் இருந்து சப் எடிட்டர் தமிழச்சி வந்திருக்காங்க" என்று சொன்னதுதான் தாமதம்.

"உடனே உள்ளே அனுப்புங்க" என்றவன் இருக்கையிலிருந்து கோபமாக எழுந்து நின்று கொண்டான்.

'வரட்டும்... இந்த வீர் யாருன்னு இன்னைக்கு நான் அவங்களுக்குப் புரிய வைக்கிறேன்' என்று தனக்குள் இருந்த சினத்தை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டு காத்திருந்த சமயத்தில்,

செந்தமிழ் வாசலில் வந்து நின்று, "மே ஐ கம்மின்" என்று அனுமதி கோரினாள்.

"எஸ்" என்று சொல்லி நிமிர்ந்து பார்த்தவனுக்குக் கோபத்திற்குப் பதிலாய் வியப்பு உண்டானது.

‘பத்திரிக்கை ஆசிரயர் தமிழச்சி’ என்றதும் நாற்பது ஐம்பது வயது நிரம்பிய பெண்மணியை எதிர்பார்த்தான். ஆனால் நேர்கொண்ட விழிகளோடும் அச்சத்தின் சாயல் கூடப் படியாத முகத்தோடு நின்ற இளம் காரிகையைக் கண்டு அவனையறியாமல் ஒருவிதமான ஈர்ப்பு உண்டானது.

மெல்ல தன்னைத்தானே சமன்படுத்திக் கொண்டபடி, "நீதான் அந்த தமிழச்சியா?" என்று கேட்க,

"ஆமாம்" என்று அவள் இயல்பாகத் தலையசைத்தாள். அந்தக் கண்களில் துளி கூட அச்சமில்லை.

இப்போது அவனுக்குள் இருந்த கோபம் முழுவதுமாய் தலைத்தூக்க மேஜை மீதிருந்த அந்தப் பத்திரிக்கையை எடுத்து விசிறியடித்தான். அது தரையில் சென்று அவள் காலடியில் விழ, அது அவள் முகத்திற்கான குறிதான். ஆனால் அந்தளவுக்கு அவமரியாதையாய் நடந்து கொள்ள மனம் வராமல் அதனை அப்படி வீசியவன்,

 "அப்போ என்னைப் பத்தி எழுதினது" என்று அடங்காத சீற்றத்தோடுக் கேட்க

இதையெல்லாம் அவள் எதிர்பார்த்தே அங்கே வந்ததால் அவள் சிறிதும் பயமின்றி,"ஆமாம்... நான்தான் எழுதினேன்" என்று உரைக்க எத்தனை திமிர் இவளுக்கு என்ற எண்ணம் அவனுள் தோன்றிற்று.

"பத்திரிக்கை நடத்தினா உங்க இஷ்டத்துக்கு என்ன வேணா எழுதுவீங்களா... எழுதுறது பொய்யா உண்மையான்னெல்லாம் விசாரிக்கமாட்டீங்களா?" என அழுத்தமாக வினவ,

"எதையும் விசாரிக்காம எல்லாம் எழுதில ஏசிபி சார்... எல்லாம் தெளிவா விசாரிச்ச பிறகுதான் எழுதினேன்... அன்... உங்களை மாதிரியான ஆளுங்க டிப்பார்ட்மெண்ட்ல இருக்கிறதே தப்பு... அதுவும் இந்த மாதிரி பதவில இருக்கிறது ரொம்ப ரொம்ப பெரிய தப்பு" என்றாள்.

கோபத்தில் அவன் உதடுகள் துடித்தன.

"என்ன சொன்ன... நான் இந்தப் பதவில இருக்கிறது தப்பா... உனக்கு என்னைப் பத்தி என்ன தெரியும் ... நேர்மையில்லாதவன்... மோசமானவன்... இப்படி ஏதாச்சும் எழுதியிருந்தா கூட போனா போதுன்னு விட்டிருப்பேன் ... ஆனா பொண்ணுங்க கிட்ட தப்பா நடந்துக்கிறன்னு எழுதியிருக்க..

என்ன தெரியும் உனக்கு என்னைப் பத்தி… ஹான்… நான் ஏசிபியா இப்போ இந்த யூன்பாஃர்ம்ல இருக்கிறதனால நீ தப்பிச்ச... நான் மட்டும் வீரேந்திரனா இருந்தேன்... உன் நிலைமை ரொம்ப மோசமாயிருக்கும்? " என்றான் மிரட்டல் தொனியில், "இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல... நீ எழுதினதுக்கெல்லாம் தப்புன்னு மறுப்பு செய்தி போடற வழியைப் பாரு" என்றான்.

"ஏன் மறுப்பு போடனும்? முடியாது" என்று அவள் திட்டவட்டமாக மறுக்க,

"முடியாதா... என்ன நினைச்சிட்டிருக்க உன் மனசில... ஏதோ சின்ன பொண்ணாச்சேன்னு பார்க்கிறேன்... இல்லேனா வேற மாதிரி நான் ஆக்ஷன் எடுத்திருப்பேன்" என்று கொந்தளிக்க,

"பொண்ணுங்கன்னா மட்டும் உங்களுக்கு இரக்கம் வந்திருதா ஏசிபி சார்... அதனாலதான் அந்த வில்லிவாக்கம் கேஸ்ல ராதாதான் குற்றவாளின்னு தெரிஞ்சும் நீங்க அந்த மார்டரை ஆக்ஸிடென்ட்டா மாத்திட்டீங்க... இல்ல" என்றாள்.

"ஸ்டாப் இட்... ஏதோ போன போதுன்னு பார்த்தா ரொம்ப ஓவரா பேசிட்டிருக்க.... நான் செய்ற எல்லாத்துக்கும் உனக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்ல..."

"அதேபோல் நானும் யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல ஏசி சார்... என் பத்திரிக்கையில வேலை செய்றவங்கள மிரட்டினது... பத்திரிக்கை சுதந்திரத்தில தலையிட்டதுன்னு... அதோடு உங்களைப் பத்தின புகார் எல்லாத்தையும் உங்க மேலதிகாரிகிட்ட அனுப்பி உங்களை வேலையில இருந்து தூக்க வைக்க முடியும்" என்று அவள் படபடவென பொறிந்து தள்ள,

அவன் அலட்சியாகச் சிரித்தப்படி, "உன்னால முடிஞ்சா செய்... பார்ப்போம்" என்றான்.

"ஏன் முடியாது? என்னால முடியும்" என்றவள் திடமாகக் கூற,

”என்ன முடியும் உன்னால?” என்று எகத்தாளமாகக் கேட்டவன் அவளை நெருங்கி வரவும் லேசாக அவள் கண்களில் அச்சம் பரவியது.

அவள் பின்னோடு நகர அவன் அதே புன்னகையோடு, "நீ கதை கதையா என்ன வேணா எழுதலாம் தமிழச்சி… ஆனா நிஜத்தில எல்லோரும் அதை நம்பணும்ல... அதுவும் இல்லாம இப்படி சரியான ஆதாரமில்லாத ஸில்லியான்ன கம்பிளைன்ட்டுக்கெல்லாம் டிஸ்மிஸ் பண்ண மாட்டாங்க மிஸ். தமிழச்சி... ஸோ பெட்டர் நான் உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டன்னு போய் கம்பிளைன்ட் கொடு... அப்படி செஞ்சன்னா… நீ நினைச்சது நடக்கும்" என, அவள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தபடி நின்றாள்.

"என்ன ஷாக்காயிட்ட? போய் கம்பிளைன்ட் கொடு... அந்த கம்பிளைன்ட்டை எப்படி ஃபேஸ் பண்ணனும்னு எனக்கு நல்லா தெரியும்" என்று அவன் அலட்டிக் கொள்ளாமல் சொல்ல, அவள் முகம் கோபத்தில் சிவந்தது.

"ரொம்ப டூ மச்சா பேசிறீங்க மிஸ்டர் வீரேந்திரன்... இதுக்கெல்லாம் நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க" என்றாள்.

"நான் பேசினது டூ மச்னா... நீ என்னைப் பத்தி எழுதினியே... அது டூ மச் இல்லயா?" என்று கேட்டவன் பார்வை அவளை ஆழத் துளையிட அவளால் ஏனோ பதில் பேச முடியவில்லை.

"நீ ஸ்பாயில் பண்ணது என் டிக்னிட்டியை... அதை நான் அவ்வளவு லேசில விடமாட்டேன்... இதுக்காக நீ உன் வாழ்க்கை பூரா வருத்தப்படற மாதிரி செய்றேன்" என்றவன் வஞ்சமாகக் கூற,

"உங்களால் முடிஞ்சதை செஞ்சிக்கோங்க… ஐ டோன்ட் கேர்" என்று தெனாவட்டாகச் சொல்லிவிட்டு அவள் வெளியேறிவிட்டாள்.

இருப்பினும் செந்தமிழ் உள்ளத்திலிருந்த உறுதி தளர்ந்து லேசான தடுமாற்றம் உண்டானது. வீரேந்திரனின் நேர்கொண்டு பார்த்துப் பேசும் விழிகளில் நேர்மை இருப்பதாக அவள் மனதிற்குத் தோன்றியது.

ஒரு வேளை தான்தான் சரியாக விசாரிக்காமல் தவறு செய்துவிட்டோமோ என்ற சந்தேகம் உண்டான போதும் அவன் அவளை நெருங்கி வந்ததை எண்ணும் போது ஒரு விதமான எரிச்சலும் கடுப்பும் உண்டாக, அவனை விடக்கூடாது. ஏதாவது செய்தே தீர வேண்டும் என்ற மனதில் தீர்மானித்துக் கொண்டாள்.

மறுபுறம் வீரேந்திரன் மனதிலும் அவளின் சந்திப்பு ஒருவித குழப்பத்தை உண்டுபண்ணியது. அவளின் விழிகளில் தெரிந்த துணிச்சலும் நேர்மையும் ஏதோ தவறான புரிதலே இவற்றிற்கெல்லாம் காரணம் என்று அவன் மனம் யோசித்த போதும் அவன் மூளை அவள் அவனுக்கு செய்த அவமானத்திலேயே வேரூன்றிக் நின்றது.

அதேநேரம் வீரேந்திரன் அறையை விட்டு செந்தமிழ் வெளியேறியதை கவனித்தபடியே அந்த அறைக்குள் நுழைந்தாள் மற்றொரு பெண்.

அழகான நேர்த்தியான முகமும் காந்த விழிகளும் நடுத்தர உயரமும் கொண்ட அந்தப் பெண் ஸ்வேதா வீரேந்திரனுக்கு விரைவில் மனைவியாகப் போகிறவள். அந்த உரிமையில்தான் நேராய் கதவைக் கூட தட்டாமல் அவள் அறைக்குள் நுழைந்தவள், ஏற்கனவே எரிச்சலோடும் கோபத்தோடும் இருந்தவன் முன்னே சென்று, "வீர்" என்றழைத்து அவன் கவனத்தை ஈர்த்தாள். ஸ்வதாவை பார்த்ததும் அவன் முயற்சி செய்து புன்னகைக்க எண்ணிய போதும் அவனால் முடியவில்லை.

"இதெல்லாம் என்ன வீர்" என்றவள் தமிழச்சி பத்திரிக்கையை அவனிடம் நீட்டி விளக்கம் கேட்க,

"நான் போலீஸ் டிப்பார்ட்மண்ட்ல இருக்கேன்... இந்த மாதிரி தப்பான நீயூஸ் ஆயிரம் வரலாம்... அதெல்லாம் நீ நம்பிகிட்டு என்னை க்வஷின் பண்ணி இரிடேட் பண்ணாதே... இத பத்தி நாம அப்புறம் பேசுவோம்... ப்ளீஸ் இப்போ கிளம்பு... எனக்கு வேலை இருக்கு" என்று அவன் சலனமற்ற பார்வையோடு சொல்லிவிட்டு தன் வேலையைத் தொடர, இருளடர்ந்தது அவள் முகம்.

"யாரோ ஒரு பொண்ணுகிட்ட இவ்வளவு நேரம் பேசிட்டிருந்தீங்க... என்கிட்ட பேசிறதுக்குதான் உங்களுக்கு நேரம் இல்லயா?" என்று கேட்டவள் அந்த நொடியே கோபமாய் வெளியேறிவிட்டாள்.

அவன் "ஸ்வேதா" என்று அழைத்தை அவள் காதிலேயே வாங்கவில்லை

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content