You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's VET - 28

Quote

28

சத்தமின்றி தேவியின் அறைக்குள் நுழைந்த தமிழ், தங்கையை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தலாம் என எண்ணி அவள் கண்களை மூட எத்தனித்தாள். ஆனால் தேவியோ அப்போது தலையணை மீது கன்னங்களைத் தாங்கி பிடித்தபடி ஏதோ ஒரு புகைப்படத்தைத் தீவிரமாகப் பார்த்து கொண்டிருந்தாள்.

தமிழ் அந்த படத்தைப் பார்த்து, "என்னடி இது?" என்று அதனைக் கையிலெடுத்தாள். அது தமிழும் ரகுவும் சேர்ந்திருந்த புகைப்படம்.

“அக்கா நீ… நீ எப்போ வந்த” என்று கொஞ்சம் தடுமாறியவள்,

“உன்னை பத்திதான் நினைச்சிட்டு இருந்தேன்… அதான் உன் ஃபோட்டோவை” என்று அவள் தயக்கமாக இழுக்க,

"என் ஞாபகமா வைச்சுக்க உனக்கு இந்த ஃபோட்டோதான் கிடைச்சுதா?" என்று கேட்டாள்.

தேவி தலைகவிழ்ந்தபடி நின்றிருக்க, "பதில் சொல்லுடி" என்று தமிழ் அவள் முகத்தை நிமிர்த்தினாள். அவளிடம் பதிலில்லை.

"உனக்கு ரகுவைப் பிடிச்சிருக்கா தேவி?" என்று நேரடியாக தமிழ் கேட்கவும் தேவியின் துருதுருப்பான விழிகள் மின்ன, உதடுகள் நாணத்தால் துடித்தன. அவள் முகமே அவள் எண்ணத்தை வெளிக்காட்டிவிட,

"இது சரி பட்டு வராது தேவி... வேண்டாம்" என்றவள் தங்கையிடம் உரைத்தாள்.

அந்த கணமே தேவியின் விழிகள் கண்ணீரை உதிர்க்கவும், “புரிஞ்சிக்கோ தேவி… ஸ்டேட்டஸ்... இல்ல சாதி மதம் இப்படி எதையும் நினைச்சு சொல்லல... பிராக்டிக்கலா இந்த ரிலேஷன்ஷிப் சரியா வராது" என்றாள்.

தேவிக்கு சகோதரியின் வார்த்தைகள் பேரதிர்ச்சியாய் இருந்தது.

"நீங்க இப்படி சொல்வீங்கன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கல க்கா" என்றவள் சொல்லி அழத் தொடங்கிவிட்டாள்.

"இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி அழற" என்று தமிழ் அதட்ட, அவள் குழந்தை போல தேம்பினாள். மேலும் தங்கையின் மனதை வேதனைப்படுத்த விரும்பாமல், "சரி அழாதே... நாம இதை பத்தி ரகுகிட்ட பேசலாம்" என்றாள்.

தேவியின் கண்ணீர் உறைந்தது. தன் தமக்கையை நம்பிக்கையுடன் நோக்கியவள், "கண்டிப்பா பேசி சம்மதிக்க வைச்சிருவீங்க இல்ல" என்று கேட்க,

"ஏய் என்ன விளையாடுறியா? நாம பேசலாம்னு சொன்னேன்... சம்மதிக்கிறதெல்லாம் அவன் பாடு... உன் பாடு" என்றாள்.

தேவியின் முகம் மீண்டும் துவண்டது. தமிழ் யோசனையோடு, "ஆமாம்... அவனை போய் உனக்கு எப்படிறி பிடிச்சது... அப்படி என்னடி பண்ணான்? எனக்கு தெரியாம உன்கிட்ட நூல் ஏதாச்சும் விட்டானா?" என,

"ச்சே... அப்படி எல்லாம் இல்லக்கா... இன்னும் கேட்டா அவரோட அந்த கேரக்டர்தான் என்னை இம்ப்ரஸ் பண்ணிடுச்சு... நேத்து என் காலேஜ் ஃப்ரண்டு ஒருத்தன் பிரப்போஸ் பண்ணிட்டான்... நான் அவன்கிட்ட ஃப்ரண்ட்லியா பேசினதை அட்வான்டேஜா எடுத்துக்கிட்டான்... இடியட்...

ஆனா ரகு உங்களோட இத்தனை வருஷ நட்பை எவ்வளவு கண்ணியமா பார்த்திருக்கிறாரு... ஹீ இஸ் கிரேட்" என்று தேவி சொன்னதுதான் தாமதம்.

தமிழ் குலுங்கி குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தாள். தேவிக்கு ஒன்றும் புரியவில்லை.

தமிழ் சிரித்து சிரித்து வயிற்றைப் பிடித்து கொண்டவள், "முடியல" என்று சொல்லியபடி பெரும்பாடுபட்டு சிரிப்பை நிறுத்தினாள்.

"ஏய் லூசு... நீ பார்க்கிற ரகு வேற... அவன் ஊருப்பட்ட பொண்ணுங்கள என் கண் முன்னாடியே ஸைட் அடிச்சி சுத்தி இருக்கான்... இன்னும் கேட்டா... ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைக்கும் ஏகப்பட்ட பொண்ணுங்கிட்ட ரோஸ் கொடுத்து பல்ப் வாங்கி இருக்கான்" என்று சொல்லி மீண்டுமே சிரித்தாள்.

ஆனால் தேவி தீர்க்கமான பார்வையோடு, "அதெல்லாம் சரி... ஆனா அவர் உங்களை ஸைட் அடிச்சுருக்காரா? இல்லை எப்பையாச்சும் உங்க கிட்ட பிரப்போஸ் பண்ணி இருக்காரா?!" என்று கேட்ட நொடி தமிழ் புருவங்கள் நெரிய, "அதெப்படிறி பண்ணுவான்... நாங்க ஃப்ரண்ட்ஸ்" என்றாள் அழுத்தமாக!

"அது... அதுதான் விஷயம்..... உன் நட்பையும் நம்பிக்கையையும் இத்தனை வருஷமா காப்பாத்துறாரே... அப்படிப்பட்டவர் நிச்சயம் எல்லா உறவுக்கும் மதிப்பு கொடுப்பாரு... பெண்களை மரியாதையா நடத்துவாரு... இதைவிட ஒருத்தருக்கு வேறென்னக்கா தகுதி வேணும்... கல்யாணம் செஞ்சிக்கிட்டா அவரை மாதிரி ஒருத்தரை செஞ்சிக்கணும்... இல்லக்கா... அவரைதான் செஞ்சிக்கணும்" என்று அவள் சொன்ன விதத்தில் ரகு எந்தளவுக்கு அவள் மனதில் உயர்ந்து நிற்கிறான் என்பது தமிழுக்கு நன்கு புரிந்திருந்தது.

"இன்னமும் நீ சின்ன பொண்ணுன்னு நான் நினைச்சிட்டிருக்கேன் தேவி... ஆனா நீ வளர்ந்திட்டன்னு இப்ப எனக்கு நல்லாவே புரிய வைச்சிட்ட... உன் வாழ்க்கை பத்தின முடிவை தனியா நீயே எடுக்கிற தெளிவும் தைரியமும் உன்கிட்ட இருக்கு... ஸோ கோஹெட்... ஆனா.... இப்பவும் சொல்றேன்... இதுல என்னைக் கூட்டுச் சேர்க்காதே... ரகுவாச்சு நீயாச்சு" என்றாள்.

"இப்படி சொன்னா என்னக்கா அர்த்தம்? நான் அவர்கிட்ட பேசினதே இல்ல... அப்புறம் எப்படி இந்த விஷயத்தைப் பத்தி"

"வெற்றியோ தோல்வியோ... முயற்சி பண்ணனும்... நீ பேசிப் பாரு... அவன் மனசில என்ன இருக்குன்னு நீயே கேட்டுத் தெரிஞ்சிக்கோ... அது என்னவாயிருந்தாலும் ஏத்துக்கோ" என்றதும் தேவி ஆழ்ந்த யோசனைக்குள் போனவள் மீண்டும் தமக்கையை நோக்கி,

"எனக்கு பயமா இருக்குக்கா?" என்றாள்.

தமிழின் முகத்தில் மீண்டும் குறும்புத்தனம் குடியேற, "பயமா இருக்கா... அதுவும் ரகுவைப் பார்த்தா... நீ வேற... அவன் சரியான மாங்காடி... உன்னை மாதிரி ஒருத்தி லவ் சொன்னா... கும்பிடு போட்டு கல்யாணம் பண்ணிப்பான்... ஆனா இப்பவும் சொல்றேன் ஒரு முறை நல்லா யோசிச்சிக்கோ... நீயா போய் புதைகுழில விழுந்திட்டு என் பேர்ல பழிப் போடக்கூடாது" என்றாள்.

"விளையாடதீங்க... கொஞ்சம் சீரியஸா யோசிச்சு பேசுங்க... சித்தியும் ரவியும் சேர்ந்துக்கிட்டு ரகுவை எப்படி எல்லாம் இன்ஸல்ட் பண்ணி இருப்பாங்க... இன்னும் கேட்டா... உங்க இரண்டு பேரையும் சேர்த்து வைச்சு... சே... அப்படி இருக்கும் போது அவர் எப்படி என்னை" என்று கேட்டு வருத்தமுற்றாள்.

"ஹ்ம்ம்ம்... கரெக்ட்தான்...இதை நினைச்சுதான் நானும் உன்கிட்ட முதல்ல வேணாம்னு சொன்னேன்"

தேவி கோபமாக, "அவங்க இரண்டு பேரும் செஞ்ச தப்புக்கு நான் தண்டனை அனுபவிக்கணுமா?" என்று கேட்டதும்

ரவி கதவருகில் வந்து நின்று, "நீ தண்டனை அனுபவிக்க வேண்டாம் தேவி... நான் செஞ்ச தப்பை நானே சரி செய்றேன்... ரகுகிட்ட நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்றான்.

சகோதரிகள் இருவரும் வியப்பை வெளிப்படுத்த, ரவி உள் நுழைந்ததும் தேவி, "நிஜமாதான் சொல்றியா?" என்று கேட்டாள்.

"ஹ்ம்ம்" என்று தலையசைக்க தமிழ் புன்னகையோடு,

"மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்... மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்... என் தம்பி பெரிய மனுஷனாகிட்டான்" என்று அவன் தோள்களைத் தட்டிப் பெருமிதம் கொண்டாள்.

"என்னை அப்படி நீங்க மாத்திட்டீங்கக்கா" என்றான் ரவி.

"இப்போ அக்கான்னு கூப்பிட்டியா ரவி… அதுவும் மரியாதையா வேற பேசுற… டே எனக்கு காலில் தரையில நிற்க மாட்டேங்கது" என்றவள் வியப்புடன்  கேட்க, "ஹ்ம்ம்ம்… இனிமே இப்படித்தான்" என்றவன் புன்னகை முகமாக தலையசைத்தான்.

"வேண்டாம் ரவி... நீ என்னை தமிழ்னே கூப்பிடு"

தேவி குறுக்கிட்டு, "கூப்பிடட்டுமே... இப்ப எதுக்கு வேண்டாங்கிறீங்க" என்றாள்.

தமிழ் அவள் புறம் திரும்பி, "அப்போ நீ அவனை அண்ணான்னு கூப்பிடுறி" என்றாள்.

தேவி தோள்களைக் குலுக்கியபடி, "கூப்பிட்டா போச்சு... என்னடா அண்ணா" என, தமிழ் அவள் தலையில் நங்கென்று கொட்டினாள். அவள் முகம் வலியில் சுணங்கவும் ரவி சிரித்தபடி, "நல்லா போடுங்க க்கா" என்றான்.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு மூவருமே இன்றுதான் அவர்களின் சகோதரத்துவத்தை முழுமையாய் உணர்ந்து கொண்டனர்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content