You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's VET - FINAL

Quote

44

சூரியன் மேற்கு வானிலிருந்து இறங்க, மெல்ல அங்கே இருள் கவ்வ தொடங்கியிருந்தது.

அரண்மனைக்கு பின்னே இருந்த தாமரை மண்டபத்தில் கடலலைகளின் ஆரவாரத்தில் தன்னை மறந்து கன்னத்தில் கரத்தைத் தாங்கி கொண்டு ஓர் அழகிய பெண்ணோவியமாய் அமர்ந்திருந்த தன்னவளை பார்த்தடி வந்தவன், "நீ இங்கதான் இருக்கியா? உன்னை எங்கெல்லாம் தேடுறது" என்றபடி வந்து நிற்க, அவள் அப்போதே அசைந்தாள்.

"வந்துட்டீங்களா?" என்றவள் அவனைப் பார்த்த பார்வையில் முகம் கொள்ளா புன்னகை!

"வந்துட்டீங்களாவா... நான் வந்து எவ்வளவு நேரமாச்சுன்னு தெரியுமா... ஃபோனையும் ரூம்ல வைச்சுருக்க... இந்த அரண்மனை முழுக்க நானும் தேவியும் தேடித் தேடிக் களைச்சுட்டோம்" என்றான்.

"சாரி வீர்... சும்மா நடந்து வந்தேனா. என்னவோ அப்படியே அமைதியாய் உட்கார்ந்திருக்கணும்னு தோனுச்சு... அதான் இங்கே" என்று தயங்கியபடி சொல்லவும்,

"சரி விடு... இங்க வா... நான் உன்கிட்ட ஒன்னு காண்பிக்கணும்" என்று வீரேந்திரன் அவளின் தோள்களை அணைத்தபடி அங்கயே அமர வைத்துவிட்டு, தன் கையில் சுருட்டி வைத்திருந்த ஓவியத்தை நீட்டினான்.

"என்னது வீர்?" என்ற கேள்வியுடன் அதனைப் பிரித்து பார்த்தவள் முகத்தில் வியப்பின் குறிகள். அது அந்த கீரிடத்தின் ஓவியம்.

விழிகள் விரிய பிரமிப்புடன் பார்த்தவள், "அந்த தர்மாவை சும்மா சொல்ல கூடாது... ரொம்ப திறமைசாலிதான்" என்று மெச்சினாள்.

"அந்த கீரிடம் இப்படிதான் இருக்குமா?" என்று வீரேந்திரன் ஆச்சரியத்துடன் கேட்க, "ம்ம்ம்... கிட்டதட்ட" என்றாள்.

பிறகு வீரேந்திரன் அவள் கரத்தைப் பற்றி, "சரி இங்க இருட்டா இருக்கு... உள்ளே போலாமே" என்றழைத்தான்.

"போலாம்... அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்லணும்"

"என்ன?"

"அது வந்து... நம்ம தேவி இல்லை" என்று மெதுவாக ஆரம்பித்தவள், "அவ... அவ ரகுவை லவ் பண்றா?" என்று எப்படியோ சொல்ல வந்ததை தயங்கி தயங்கி சொல்லி முடிக்க,

அவன் சாவகாசமாக, "அப்புறம்" என்றான்.

"என்ன? இவ்வளவு சாதாரணமா அப்புறம்னு சொல்றீங்க"

"ப்ச்... தெரிஞ்ச விஷயம்தானே... ரகு அடிப்பட்டு ஹாஸ்பெட்டில இருக்கும் போதே நான் இதை யூகிச்சேன்..."

"அப்படின்னா இன்னைக்கு ரகு கோயிலுக்கு வந்ததும் தெரியுமா?!"

"இன்னைக்குக் கோயிலுக்கு வந்தானா? என்கிட்ட உடம்பு சரியில்லைனு பெர்ஃமிஷன் கேட்டான்" என்று அவன் கூற, தானே உளறிவிட்டோமா என தமிழ் பதட்டமானாள். அவனோ அவசரமாய் தன் கைப்பேசியை எடுத்து ரகுவிடம் பேச அழைத்தான்.

"ப்ளீஸ் வேண்டாம்... நான்தான் அவனைக் கோயிலுக்கு வர்ற சொன்னேன்... வேணும்ன்னா என்னைத் திட்டுங்க" என்றவள் அவன் கரத்தைப் பிடித்து தடுக்கவும், அவளை அவன் கூர்மையாய் பார்த்தான்.

எந்நிலையிலும் நண்பனை விட்டுகொடுத்திராத அவளின் உறுதியைக் கண்டவன் மனதில் அவர்கள் நட்பின் மீதான லேசான பொறாமை உணர்வும் எட்டிப் பார்த்தது. அவள் கையை உதறிவிட்டு கைப்பேசியை எடுத்து உள்ளே வைத்தான்.

மேலே பேசாமல் கடலைப் பார்த்தபடி நின்றவனின் கரத்தைப் பற்றிக் கொண்டவள், "ப்ளீஸ் கோபம் வேண்டாம்" என்று சற்று இறங்கிப் பேசியவளை ஆச்சர்யமாய் பார்த்தான்.

வார்த்தைக்கு வார்த்தை சண்டை போடுபவள் இப்போதெல்லாம் எந்தப் பிரச்சனை வந்தாலும் அவற்றை எல்லாம் மறந்து உடனே இணக்கமாகிவிடுகிறாள். அவனாலும் அதற்கு மேல் பிடிவாதமாய் தன் கோபத்தைப் பிடித்திருக்க முடியவில்லை.

அதே நேரத்தில் சட்டென்று சமாதானமும் ஆக முடியவில்லை.

அவள் அவன் கரத்தைப் பிடித்திருக்க அவள் முகத்தைப் பார்த்தான்.

விழிகளை எடுக்க முடியாமல் கட்டியிழுக்கும் ஈர்ப்பு!

சிலாகிக்க வைக்கும் ஒரு உணர்வு!

அவள் கரத்தை தானும் அழுத்தமாய் பிடித்துக் கொண்டான்.

அப்போது அவள் மெலிதாய், "வீர்" என்றழைக்க, "ஹ்ம்ம்ம்" என்று சொல்லி அவளை நோக்கினான். அவன் கோபமெல்லாம் கண்காணாத தூரம் போயிருந்தது.

தமிழ் அவன் விழிகளைப் பார்த்தபடி, "நாம எத்தனை நாளைக்கு இங்யே இருக்க முடியும்... நம்ம வீட்டுக்குப் போலாமே" என்று அவள் சொன்னதும் மீண்டும் சினம் கொண்டவனாய்,

"எதுக்கு... அவமானப்படவா? " என்று கேட்டு எரிச்சலானான்.

"அப்படி எல்லாம் ஆகாது வீர்... அனேகமா மாமாவோட கோபம் இப்போ குறைஞ்சிருக்கும்" அமர்த்தலாகவே உரைத்தாள்.

"சேன்ஸே இல்ல... எங்க அப்பாவோட கோபம் அவ்வளவு சீக்கிரம் மாறாது... ஐ நோ ஹிம் வெரி வெல்"

"புரிஞ்சுக்கோங்க வீர்... அப்பா மகன்கிட்ட கோபத்தைக் காட்டலாம்... வீம்பு பிடிக்கலாம்... ஆனா" என்று சொல்லாமல் தயங்கி நிறுத்தியவளைப் பார்த்து, "ஆனா...என்ன?" என்றவன் புரியாமல் வினவ,

அவள் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல், "ஆனா... அவங்க பேரன் பேத்திகிட்ட அப்படி கோபப்பட முடியாதே... நிச்சயம் கோபப்படவும் மாட்டாங்க" என்றதும் அவன் அவள் முகத்தை நிமிர்த்தி விழிகளைப் பார்த்தான்.

அவளின் அழகின் காரணம் இப்போது புரிந்தது. தாய்மையின் பூரிப்பு!

அவளை அவன் ஆரத்தழுவிக் கொள்ள, பெண்ணவள் அவனுக்குள் கரைந்து போனாள். கடலலைகளின் ஓயாத சத்தம் அவர்களின் செவிக்கு எட்டவில்லை. நிசப்தமாய் அவனுக்குள் அவளும் அவளுக்குள் அவனும் திளைத்திருக்க, அவளது விழியோரம் நீர் கசிந்து நின்றது.

அவன் அவளை இறுகி அணைத்தபடியே, "ஐ லவ் யூ டி என் தமிழச்சிசிசி" என்று சொல்லி அவள் செவிமடல்களைக் கூசச் செய்தவன்,

அவள் முகத்தை நிமிர்த்தி தன் கரத்தால் அவள் கன்னத்தை தழுவ, அவளின் தேஜஸ் நிரம்பிய புன்னகையில் அவன் மிச்சமின்றி தொலைந்தே போனான்.

அவனின் உணர்வுகளின் ஆழத்தை விவரிக்க வார்த்தைகளுக்கு வீரியம் இல்லையே!

அவன் சொல்லாததை அவன் விழிகள் மௌனமாய் எடுத்துரைக்க, அவன் உதடுகளோ பேசாமலே பேசிக் கொண்டிருந்தது. முத்தங்களின் வழியே...

இருவருமே அந்த இன்பகரமான தருணத்தை ரசித்து அனுபவித்திருந்தனர்.

சட்டென்று தன்னிலை அடைந்தவன், "எனக்கு ஒரு குட்டி தமிழச்சி வேணும்டி... உன்னை மாதிரியே" என்றான். அத்தனை நேரம் மௌனமாய் இருந்தவள், "நோ வே.. எனக்கு உங்களை மாதிரியே வேணும்... இதே போல ஷார்ப் ஐஸ்... நுனி மூக்குல கோபம்... எதையும் அஸால்ட்டா ஹேண்டில் பண்ற தைரியம்... இன்னும் இன்னும் சொல்லிட்டே போலாம்" என்றாள்.

"இதெல்லாம் என் தமிழச்சிகிட்டயும் இருக்கே"

"இந்தக் கதையெல்லாம் வேண்டாம்... எனக்கு குட்டி வீர்தான் வேணும்"

"உம்ஹும்... எனக்கு தமிழச்சிதான் வேணும்" என்றான் பிடிவாதமாக.

"நோ... வீர்தான்"

"அதெல்லாம் இல்ல... தமிழச்சிதான்"

அவள் தீர்க்கமாய் பார்த்து, "இதுநாள் வரைக்கும் நீங்க நினைச்சதை எல்லாம் பிடிவாதம் பிடிச்சு நடத்திருக்கலாம்... ஆனா இந்தத் தடவை முடியாது வீர்"

"ஓ... அப்படியா ! சரி பார்க்கலாமா?" சவாலாய் அவன் புருவத்தை ஏற்ற, "பார்க்கலாமே" என்றாள்.

45

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு

9… 8… 7… 6…

நேரம் குறைந்து கொண்டே வர நிற்காமல் ஓடினாள்.

5 விநாடிகள், "ஏய் தமிழச்சி... அதை தூக்கிப் போடு"

4 "ஏய்... தூக்கிப் போடுறிறிறிறி"

3 விநாடிகள்தான். கரத்திலிருந்த பாமை கைப்பற்றித் தூக்கி வீசினான்.

அது வானுயர பறந்து சென்று கடல் நீரில் வீழ்ந்து வெடிக்கவும், அலறியவள் படுக்கையில் இருந்து சுருண்டுவிழப் பார்த்த போது கெட்டியாய் இரும்பினை ஒத்த ஒரு கரம் அவளை விழாமல் தாங்கிக் கொண்டது.

பதட்டத்தோடு விழித்துப் பார்க்க அவன் உறக்கத்திலேயே அவளை நெருக்கமாய் இழுத்து அணைத்தவன், "கண்டதை நினைக்காம தூங்குடி" என்றான்.

அந்த மோசமான கனவிலிருந்து மீண்டவள், அவன் புறம் திரும்பிப் படுத்தாள். அதற்குள்ளாக மீண்டும் அவன் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தான்.

எத்தனை அயர்ந்த உறக்கத்தில் இருந்தாலும் அவளை விழ விடாமல் தாங்கிக் கொள்வது, இத்தனை வருடக் காலமாய் அவனுக்குப் பழகிய விஷயமாய் மாறியிருந்தது. அதுவே அவனின் ஆழமான காதலுக்கும் எடுத்துக்காட்டு.

அன்று மட்டும் தான் பாம் வெடித்து இறந்து போயிருந்தால்...

இப்படியொரு வாழ்க்கையை வாழ முடியாத துர்பாக்கியசாலியாய் இறந்து போயிருப்பேனே என்று எண்ணிக் கொண்டாள்.

அவள் விழியின் முன்னே அதே கம்பீரமும் ஆளுமையும் நிறைந்த அவன் முகம். அவனின் மீசை முடியில் எட்டிப் பார்க்கும் அந்த நரையும் கூட அவனின் கம்பீரத்தைப் பெருக்கியதென்றே சொல்ல வேண்டும்.

அவனுக்காகவும் அவன் காதலுக்காகவும் இன்னும் பல நூறு வருடகாலங்கள் கூட சலிக்காமல் அவனுடன் வாழலாம். இந்த எண்ணங்களைச் சுமந்தபடி உறக்கம் மறந்து அவனையே பார்த்திருந்தாள்.

வீரேந்திரன் ஐந்து வருடங்களுக்கு முன்பு கமிஷனராய் பதிவு உயர்வு பெற்றிருந்தான். அதே சமயம் தமிழச்சியின் பத்திரிக்கையும் நல்ல வளர்ச்சி பெற்று அவளுக்கென்ற சிறப்பான அங்கிகாரத்தைப் பெற்று தந்திருந்தது.

ஆதியின் பத்திரிக்கையும் அந்தளவுக்கு வளர்ச்சியைப் பெற்ற போது இரு தோழிகளும் சேர்ந்து தங்கள் பத்திரிக்கைகளை இணைத்து வீரதமிழச்சி என்று ஒரே பத்திரிக்கையாய் மாற்றி அதனை நிர்வாகம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் மக்களின் நம்பகமான பத்திரிக்கையாய் வீரதமிழச்சி வார இதழ் மாறியிருந்தது. இரு தோழிகளுக்கும் அது பேரும் புகழையும் அளவில்லாமல் பெற்றுத் தந்திருந்தது.

அதே சமயம் தமிழ் ஈன்றெடுத்த குழந்தை அவள் எதிர்பார்ப்பின்படி அவளின் பிரச்சனைகளுக்குத் தீர்வாய் அமைந்தது. மகேந்திரபூபதி அவர் குடும்ப வாரிசுக்காக அரண்மனையைக் கைப்பற்றும் எண்ணத்தைக் கைவிட்டார். மருமகள் மீது கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் அதுவும் நாளடைவில் மறைந்து போனது.

ராஜசிம்மன் அரண்மனையைச் செந்தமிழ் தொல்பொருள்துறைக்கு அளித்ததன் விளைவாக அது நம் தமிழனின் கௌரவத்தையும் அவனின் கட்டடக்கலையின் திறமையையும் பறைசாற்றும் வண்ணம் இன்றளவிலும் கம்பீரமாய் நின்று கொண்டிருக்கிறது.

நம் நாட்டு மக்களும் பல வெளிநாட்டுப் பயணிகளும் சிம்மவாசலில் அமைந்துள்ள நம் பாரம்பரிய அரண்மனையைத் தினமும் பார்வையிட்டுப் பெருமிதப்பட்டுக் கொண்டிருந்தனர்.

*

விடியலைத் தொட்ட அந்த நாளில் நேரம் கடந்து கொண்டே போனது.

அலறிய அலாரத்தை அடக்கிவிட்டு விஷ்வா உறங்கிக் கொண்டிருந்தான்.

ஆதி அவன் போர்வையை இழுத்துவிட்டு, "எழுந்திருடா" என்று சத்தமாய் கத்தவும், "லீவு நாளில் கூட ஏன்டி இப்படி டார்ச்சர் பண்ற?" என்று சொல்லியவன் மீண்டும் போர்வையைப் போர்த்திக் கொண்டான்

"லீவா... டே இன்னைக்கு ஸ்கூலுக்கு போகணும்... ஓபன் டே" என்றாள்.

விஷ்வா அதிர்ந்தபடி விழித்துப் பார்த்தவன் முகத்தைப் பரிதாபமாய் மாற்றிக் கொண்டு, "ப்ளீஸ்டி... நீயே போயிட்டு வந்துடுறியா" என்று கேட்டான்.

"அதெல்லாம் முடியாது... என்னை தனியா போய் திட்டு வாங்க சொல்றியா... நெவர்" என்றாள்.

"ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் டி... இந்த தடவை விட்டுறேன்" என்று கெஞ்சலாய் பார்த்தவனை மிரட்டலாய் பார்த்தாள்.

அந்தப் பார்வைக்கு சரணடைந்தவன், "சரி சரி... முறைக்காதே வர்றேன்" என்று சொல்ல,

"சீக்கிரம்" என்றவள், உடனே திரும்பி விறுவிறுவென அறையை விட்டு வெளியேறினாள்.

'இரண்டு மூணு வைச்சுருக்கவன் எல்லாம் நிம்மதியா இருக்கான்... ஒன்னே ஒன்னு வைச்சுக்கிட்டு நான் படற பாடு இருக்கே' என்று புலம்பியபடியே புறப்படத் தயாரானான்.

அந்த உயரமான பள்ளிக்கட்டிடத்தின் முன்னே நின்ற காரின் பின் இருக்கையின் கதவைத் திறந்து ஆதி வெளியே வர, விஷ்வா வாகன நிறுத்தம் நோக்கி காரை நகர்த்திச் சென்று நிறுத்தினான்.

ஆதி உள்ளே சென்று கொண்டிருக்க, விஷ்வா தன் மகனைத் திரும்பி பார்த்து, "விக்ரமா... இந்த தடவை என்னெல்லாம் சேட்டை பண்ணி வைச்சுருக்க" என்று தன்னுடைய தோற்ற சாயலிலயே வசீகரமாய் நின்றிருந்த தன் மகன் விக்கிரமாதித்தியனைக் கேட்டான்.

"இல்லப்பா... நான் இந்த தடவை எந்த சேட்டையும் பண்ணல... வேணும்னா என் ஃப்ரண்ட்டு சிம்மாவைக் கேட்டுப் பாருங்க"

"அவன் அப்படியே உன்னை விட்டுக் கொடுத்துட்டாலும்"

இப்படியே பேசிக் கொண்டபடி எட்டாம் வகுப்பு ஏ என்றிருந்த வகுப்பறை வாசலை இருவரும் அடைந்திருந்தனர்.

ஆதி அவனின் வகுப்பாசிரியை முன்பு அமர்ந்திருந்தாள். அவர் கொடுத்த அந்த அட்டையைப் பொறுமையாய் பிரித்துப் பார்த்திருக்க, ஆதித்தியன் முகத்திலோ அச்சத்தின் சாயல். ஆதி தயங்கி நின்ற தன் கணவனை உள்ளே அழைத்தாள்.

விக்ரமை பள்ளியில் சேர்த்த நாள் முதற்கொண்டு அவனைக் கடிந்து கொள்ளாத ஆசிரியர்களே கிடையாது. அவன் செய்த சேட்டைகளில் வேலையை விட்டுச் சென்ற ஆசிரியர்கள் கூட உண்டு.

அத்தனை சேட்டைக்காரன்!

விக்ரம் பயங்கொள்வது ஆதியைப் பார்த்தால் மட்டும்தான். அவள் கிடைக்கும் ஆயுதத்தில் எல்லாம் விரட்டி விரட்டி அடித்துப் பார்த்துவிட்டாள்.

ஆனால் அடி வாங்கிய அடுத்த நொடியே அவற்றை எல்லாம் துடைத்துப் போட்டுவிட்டு தன் லீலைகளைத் தொடங்கிவிடுவான்.

இப்போதே இப்படி என்றால் வருங்காலத்தில்... நினைக்கும் போதே உள்ளம் பதறும் அவளுக்கு!

அதற்குக் காரணம் ஆதி செல்லம்மாவிற்கு ஒரே மகள். விஷ்வாவும் சாரதாவிற்கு ஒரே மகன். பாட்டிகள் இருவரின் படுச்செல்லம். ஒற்றைப் பேரன் வேறு. அவனை சமாளிக்கவே ஆதிக்கு நேரம் சரியாய் இருக்க இன்னொரு குழந்தையா?

கனவிலும் அப்படி ஒன்றை அவள் எண்ணவும் தயாராக இல்லை.

அவனின் ரிப்போர்ட் கார்ட்டை வாங்கிப் பார்த்தான் விஷ்வா. வகுப்பில் இரண்டாவதாக வந்திருந்தான். அது ஒன்றும் புதியச் செய்தி அல்ல. படிப்பில் அவன் அதிபுத்திசாலிதான்.

விக்ரமின் ஆசிரியர் அவர்கள் இருவரை நோக்கி தன் கதாகாலட்சபத்தை ஆரம்பித்தார்.

"மிஸ்டர் & மிஸஸ். விஷ்வா... சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... உங்க சன் ரொம்ப ரொம்ப நாட்டி... எந்த டீச்சரையும் க்ளாஸ் எடுக்கவே விடாம சதா கமென்ட் பாஸ் பண்றான்... இட்ஸ் ஸோ இரிடேட்டிங்... எல்லா சப்ஜக்ட் டீச்சர்ஸும் இதே கம்பிளைன்ட்தான்... எவ்வளவோ வார்ன் பண்ணியாச்சு... ஹ்ம்ம்ம்... கொஞ்சங் கூட மாறவே மாட்டிறான்" என்று இறுகிய முகத்தோடு உரைக்க, ஆதி சினம் பொங்க தன் மகனை நோக்கினாள்.

'போட்டுக் கொடுத்துட்டியே பத்மா... உனக்கு இருக்கு' என்று ஆசிரியை மனதிற்குள் வைதாலும் வெளியே அமைதியின் சொரூபமாய் நின்றபடி, "சாரி மிஸ்... இனிமே அப்படி நடந்துக்கமாட்டேன்" என்று சொல்லி அத்தனை பரிதாபமாய் பார்த்தான்.

ஆசியருக்கு அவனின் முகப்பாவனையைப் பார்க்க வியப்பாகவும் பரிதாபமாகவும் இருந்தது. விக்ரமின் நடிப்பெல்லாம் ஆதியின் முன்னிலையில்தான். அவள் அந்தப்புறம் போனால் இவன் இந்தப்புறம் தன் சேட்டையைத் தொடங்கிவிடுவான்.

அவர்கள் பேசி முடித்துவிட்டு வெளியேறிய சமயம், செந்தமிழ் அந்த வகுப்பறை வாசலில் வந்து நின்றாள். அவள் பின்னோடு அவள் மகன் சிம்மபூபதி வந்து கொண்டிருந்தான்.

அமைதியோடு கூடிய தேஜஸான புன்னகையே அவனின் சிறப்பம்சம். அதை தாண்டி ஒரு ராஜகளை அவன் பார்வையிலும் நடையிலும்!

சிறு வயதினன் எனினும் நடவடிக்கைகளிலும் செயலிலும் அதீத முதிர்ச்சி.

நம் தமிழ் மொழியின் பாரம்பரிய இலக்கியங்களை எல்லாம் அந்த வயதிலேயே கற்றுத் தேர்ந்தவனாயிருந்தான். அத்தகைய அறிவு கூட அவன் முதிர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம்.

விக்ரமும் சிம்மாவும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். இருவரும் வெவ்வேறு விதமான குணம் படைத்தவர்கள் எனினும் சிறுவயதிலிருந்து நெருங்கிய நண்பர்களாகவே வளர்ந்திருந்தனர். அந்த நண்பர்கள் இருவரும் பார்த்த மாத்திரத்தில் பார்வையாலேயே தங்கள் நட்பைப் பரிமாறிக் கொண்டுப் புன்னகைத்து கொள்ள, ஆதி தமிழைப் பார்த்த கணம் புன்னகையோடு,

"வா தமிழ்... இப்பதான் உனக்கு கால் பண்ணலாம்னு நினைச்சேன்" என்று உரைத்தாள்.

"நானும் நீ வந்திட்டியான்னு யோசிச்சுட்டு இருந்தேன்" என்றவள் விஷ்வாவைப் பார்த்து,

"எப்படி இருக்கீங்க விஷ்வா சார்?" என்று நலம் விசாரித்தாள்.

"ம்ம்ம்... நல்லா இருக்கேன்மா"

"நீ, விக்ரமா?" என்று விக்ரமின் தலையைக் கோதியபடி தமிழச்சிக் கேட்க,

"சூப்பரா இருக்கேன் ஆன்ட்டி" என்று பதிலுரைத்தான்.

"அவன் சூப்பராதான் இருப்பான்... நாங்கதான் அவன்கிட்ட பாடாத படுறோம்" என்றாள் ஆதி பதிலுக்கு. விக்ரமின் முகம் களையிழந்து போனது.

"ஏன்டி அப்படி சொல்ற?" என்று தமிழ் கேட்க, ஆதி அவனின் ஆசிரியை வாசித்த பாராட்டு மடலை வார்த்தை மாறாமல் ஒப்புவித்தாள்.

இதைக் கேட்ட சிம்மபூபதி முந்திக் கொண்டு "விக்ரம் அப்படி எல்லாம் இல்ல ஆன்ட்டி" என்று சொல்லி ஆதியை நோக்கினான்.

அப்போது ஆதியும் தமிழும் ஒருவர் முகத்தைப் ஒருவர் பார்த்து பெருமிதம் கொண்டனர். இருவரும் தவறி கூட ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்திராமல் இருப்பது அவர்களின் நட்பின் பெருமையைப் பறைசாற்றியது.

ஆதி அப்போதுதான் கவனித்தாள்.

"ஏ தமிழ்... எங்கடி உன் பொண்ணு தமிழச்சியைக் காணோம்" என்றதும் விக்ரமும் வியப்போடு,

"அதானே எங்க அந்த கேடி?" என்றான்.

தமிழச்சி செந்தமிழின் இரண்டாவது மகள். சிம்ம பூபதியைவிட இரண்டு வயது சிறியவள். முதல் குழந்தை ஆணாய் பிறந்து தமிழ் தன் சவாலில் வென்றுவிட்டாலும் வீரேந்திரன் அத்தனை சீக்கிரத்தில் தோல்வியை ஏற்பானா? எப்படியோ அவனின் ஆசை இரண்டாவது முயற்சியிலேயே கிட்டிவிட்டது.

தமிழச்சி எங்கே என்று கேட்டதும் தமிழ் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சிம்மபூபதியை நோக்கி,

"எங்கடா உன் தங்கச்சியை காணோம்?" என்று வினவினாள்.

"நீங்க வீட்டுக்கு வா... வைச்சுக்கிறேன்னு சொன்னதுதான்... மேடம் அப்பவே தாத்தாகிட்ட அடம்பிடிச்சி இழுத்துட்டுப் போயிட்டாங்க" என்று அவன் சொல்லவும் மகனைப் புருவத்தைச் சுருக்கி முறைத்தாள்.

"சாரிம்மா... நீங்க முன்னாடி போகும் போதே பின்னாடி ஸ்டியர் கேஸ் வழியா போயிட்டா? நான் உங்ககிட்ட சொன்னா அப்பாகிட்ட போட்டுக் கொடுத்திருவேன்னு மிரட்டுறா மா" என்றான்.

ஆதி தன் தோழியின் புறம் திரும்பி, "நீ ஊரையே ஏமாத்துவ... உன்னையே ஏமாத்துறா... உன் பொண்ணு... உன்னை விட பெரிய தில்லாலங்கடிதான்" என்றாள்.

"நீ வேற ஆதி... அவ இந்த வயசிலயே கிளாஸ்ல இருக்கிற எல்லார் கூடயும் சண்டைப் பிடிக்கிறாலாம்... ஏகபோகத்துக்கு கோபம் வேற வருது... அவளை என்ன பண்றதுன்னே தெரியல... எல்லாம் அவங்க அப்பா கொடுக்கிற இடம்... அதான் ஓவரா ஆடுறா?" என்று கடுப்பானாள்.

இப்படியாக நீண்டு கொண்டிருந்த அவர்கள் சம்பாஷணையால் நேரம் கடந்து செல்ல, ஆதி தன் தோழியிடம் விடை பெற்று கணவனோடும் மகனோடும் புறப்பட்டாள்.

அதற்குப் பிறகு சிம்மபூபதியை அழைத்துக் கொண்டு தமிழ் அவனின் வகுப்பறைக்குள் நுழைய, அவனின் ஆசிரியர் சிம்மாவைப் பற்றிப் புகழ்ந்து தள்ளிவிட்டார்.

அவன்தான் அந்த வகுப்பிலேயே முதலிடம். இம்முறை மட்டும் அல்ல. வரிசையாய் ஒவ்வொரு வகுப்பிலும். அவன் எல்லா ஆசிரியர்களுக்கும் பிடித்தமான மாணவன் என்ற பெயர் வேறு.

தமிழுக்கும் வீரேந்தினுக்கும் மகன் எனினும் அவன் குணத்தில் அவர்களைப் போல் அல்ல. முற்றிலும் வேறு.

தமிழ் அவனிடம் வியந்து கண்டறிந்தது அவளின் தாத்தா சிம்மவர்மனின் சாயலும் குணமுமே!

*

ஆதி வீட்டை அடையும் வரை ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.

விஷ்வா மகனிடம், "உங்கம்மா செம கோபத்துல இருக்கா? உனக்கு செம மாத்து இருக்கு" என்றவன் எச்சரிக்க, விக்ரம் அரண்டபடியே நுழைந்தான்.

விக்ரமைப் பார்த்ததும் சாரதாவும் கருணாகரனும் பேரனின் ரிப்போர்ட் கார்ட்டை வாங்கி பார்த்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

ஆதி கோபமாக, "உங்க பேரன் படிப்பெல்லாம் படிச்சுருவாரு... ஆனா கொஞ்சம் கூட ஒழுக்கமே கிடையாது" என்றாள்.

அதோடு நிறுத்தாமல் மகனை நோக்கி உக்கிரமாய், "ராஸ்கல்! எவ்வளவு திமிர் இருந்தா இந்த வயசில டீச்சர்ஸ் பாடம் எடுக்கும் போது கமென்ட் பாஸ் பண்ணுவ?" என்று சீற்றத்தோடுப் பொங்கினாள்.

உடனே சாரதா பேரனைப் பார்த்து, "ஏன் தங்கம் அப்படி எல்லாம் பண்ற?" என்று பரிவாய் கேட்கவும் ஆதியின் கோபம் அதிகரித்தது.

விக்ரம் உடனே, "நான் எதுவும் தப்பா செய்யல பாட்டி... மிஸ் கிளாஸ் நடத்தும் போது எல்லோரும் தூங்குறாங்க... நான் ஒரு நல்லெண்ணத்தில கமென்ட் பண்ணி எல்லோரையும் எழுப்பிவிட்டேன்" என்று தன் செயலுக்கு நியாயம் கற்பித்தான்.

ஆதி உடனே தன் கணவனை நோக்கி, "நல்லெண்ணமா? உங்க பையன் எப்படி சமாளிக்கிறான் பார்த்தீங்களா?!" என்றதும் விஷ்வா தன் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் உதிர்த்துவிட்டான்.

அப்படியே உங்களை மாதிரியே இருக்கான் என்று பார்வையாலேயே அவள் சொல்ல விஷ்வா தோள்களைக் குலுக்கினான். ஆதி விக்ரமைப் பார்த்தபடியே உள்ளே செல்ல, ஏதோ பெரிய ஆயுதத்தோடு வரப் போகிறாள் என்று மட்டும் எல்லோருமே யூகித்து அவள் சென்ற திசையிலேயே பார்வையைப் பதித்தனர்.

விக்ரமிற்கு பயத்தில் கரமெல்லாம் சில்லிட்டுப் போக, "அப்பா காப்பாத்துங்க" என்று உதவிக்கு தந்தையை அழைத்தான்.

"அதெல்லாம் கஷ்டம் விக்ரம்... தப்பித்தவறி தடுத்தேன்னு வைச்சுக்கோ... எனக்கும் சேர்த்து அடிக் கொடுப்பா உங்க அம்மா" என்றான்.

அவனின் பாட்டி தாத்தா கூட ஆதி அவனை அடிக்க வந்தால் தடுக்க மாட்டார்கள். அவள் எது செய்தாலும் சரியென்று எண்ணம் கொண்ட மாமனார் மாமியார் ஆயிற்றே. ஆதியிடம் இருந்து விக்ரமை காப்பது சிரமம்தான்.

இதேபோல ஒரு காட்சி தமிழின் வீட்டிலும் அரங்கேறியது.

பள்ளியில் இருந்து புறப்பட்ட தமிழ், சிம்மனை மட்டும் வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டு முக்கியமான வேலை என்று அலுவலகத்திற்குச் சென்றுவிட்டாள். அவள் வீட்டை அடைந்ததும் முதலில் தேடியது மகளைத்தான்.

"தமிழச்சி" என்று அழைத்தபடி வீடு முழுக்கவும் தேட, சிம்மனும் அவள் தாத்தா மகேந்திரனும் சந்திராவும் கூட அவள் எங்கே என்று தேட ஆரம்பித்தனர்.

அம்மா வீட்டினுள் நுழைந்த மாத்திரத்தில் எங்கயோ சென்று ஒளிந்து கொண்டுவிட்டாள். அத்தனை சீக்கிரத்தில் சிக்கவும் மாட்டாள்.

எல்லோருமே பயந்து போக தமிழ் இறங்கிய குரலில், "தமிழச்சி வெளியே வா... அம்மா உன்னை அடிக்க மாட்டேன்" என்றழைத்து பார்த்தாள். அப்போதும் பதிலில்லை.

இந்த வாக்குறுதிக்கெல்லாம் அவள் மகள் இறங்கிவிடுவாளா?!

அவள் வீரேந்திரனின் செல்ல மகளாயிற்றே!

இறுதியாய் எல்லோருமே அவளை வீடு முழுவதும் தேடித் தேடிச் சோர்ந்து போய் முகப்பறையில் அமர்ந்திருக்க, அந்தச் சமயம் வீரேந்திரன் போலீஸ் உடையில் கம்பீரமாய் வீட்டிற்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் எல்லோருக்கும் கிலி உண்டானது.

தன் தொப்பியை மனைவியிடம் கழட்டிக் கொடுத்தவன் தலைமுடியைக் கோதியபடி, "ஆமா வீடே அமைதியா இருக்கு... எங்க என் தமிழச்சியை காணோம்" என்று கேட்டான்.

உள்ளே வந்த மாத்திரத்தில் தன் மகள் இல்லாததை அவன் கவனித்துவிட்டான். "வீர் அது" என்று அவள் தயங்கவும்,

"என்ன தமிழ்? உங்க வீட்டுக்கு அனுப்பியிருக்கியா?.. உம்ஹும் இருக்காதே... என் தமிழச்சி என்கிட்ட சொல்லாம எங்கயும் போக மாட்டாளே" என்று சந்தேகம் கொண்டவன்.

"தமிழச்சிமா... தமிழச்சிசிசிசி" என்று அழைத்துப் பார்த்தான்.

அவன் மனைவி, மகள் இருவரையும் ஒரே போல அழைத்தாலும் அவனின் அழைக்கும் தொனி மாறுபடும். மனைவியை அழைக்கும் போது அதிகாரமும் காதலும் தெரிய, மகளை அழைக்கும் போது அமிழ்ந்தக் குரலில் அன்பும் அக்கறையும் வெளிப்படும்.

மகளைத் தேடும் கணவனின் கரத்தைப் பற்றியவள் நடந்ததை எல்லாம் முழுமையாய் விவரித்தாள். அவளை அனலாய் பார்த்தவன் மகள் எங்கே ஒளிந்திருப்பாள் என்று கணித்து அவர்களின் அறை நோக்கி நடந்தான்.

உள்ளே நுழைந்த மாத்திரத்தில், "டேட்" என்று அவன் மகளின் குரல். இருவரும் குரல் வந்த திசையில் நிமிர்ந்து பார்க்க, உயரமாய் மேலே இருந்த பெரிய கப்போர்டில் அமர்ந்திருந்தாள் அவன் செல்ல மகள்.

அவளைப் பார்க்கும் போதெல்லாம் மனைவியின் அந்த சிறு வயது புகைப்படம்தான் அவன் நினைவுக்கு வரும். அதே சாயல்தான்.

அதில் உள்ள குட்டி தமிழச்சியின் அதே துருதுருவிழிகள் அப்படியே இருந்தன. அதே துருதுருப்பான குணமும் கூட அப்படியே என்று மனதில் எண்ணிப் புன்னகைத்துக் கொண்டான்.

ஆனால் தமிழ் மகளின் மீது அதீத கோபத்தோடு, "நீ இங்கதான் இருக்கியாடி? உன்னை" என்று அவளை அடிக்க முன்னேறியவளின் கரத்தை வீர் அழுத்தமாய் பற்றி நிறுத்தினான்.

"பாருங்க வீர்... எல்லோரும் எங்கெல்லாம் தேடிட்டுருக்கோம்... இவ பாட்டுக்கு எது மேல ஏறி உட்கார்ந்துட்டிருக்கான்னு... அவளை" என்று சொல்லியபடி கோபம் கொண்டு மகளிடம் முன்னேறியவளின் கரத்தை வீர் பற்றி தன் புறம் திருப்பியவன்,

"உன் பொண்ணு வேற எப்படிறி இருப்பா?" என்று அலட்டிக் கொள்ளாமல் கேட்க தமிழ் மௌனமானாள்.

"நீ போ... நான் அவளைக் கூட்டிட்டு வர்றேன்" என்று அவன் மனைவியைப் பார்த்து சொல்லவும் அவளுக்குக் கோபம் அடங்கவேயில்லை.

அவனை அவள் முறைப்பாய் பார்க்க, அவனின் பார்வையும் எதிர்த்திசையில் அவளைக் கோபமாய் மோதியது. அதற்கு மேல் அங்கே நின்றால் ஏதேனும் வாக்குவாதம் நேர்ந்துவிடுமோ என எண்ணியவள் ஆற்றாமையோடு, "நீங்க ரொம்பதான் அவளுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுக்கிறீங்க" என்று புலம்பிக் கொண்டே வெளியே போனாள்.

தன் மனைவி சென்றதும் மகளின் புறம் நிமிர்ந்தவன், "இதெல்லாம் என்ன வேலை தமிழ்ச்சி?" என்று கேட்டவனின் வார்த்தையில் கண்டிப்பு இருந்தாலும் பார்வையில் இல்லை.

"இல்ல டேட்... நான் எதுவுமே செய்யல... தமிழச்சிதான்... மிஸ் சொல்றதை அப்படியே கேட்டுட்டு என்னை அடிக்க வர்றா"

"அம்மா அடிக்க வந்தா... நீ தப்பு செய்யலன்னு நின்னு ப்ரூப் பண்ணு... அதை விட்டுவிட்டு இப்படியா மேல ஏறி உட்கார்ந்திருக்கிறது?"

"போங்க டேட்... தமிழச்சிக்கு எதையும் கேட்கிற பொறுமையே இல்லை... முதல்ல என்னை அடிச்சிட்டுதான் மறுவேலையே பார்ப்பா?"

"நீ பொறுமையா பேசினா... அவ நிச்சயம் அடிக்க மாட்டா... மோரோவர் அம்மா எது சொன்னாலும் அது உன் நல்லதுக்குதான்னு நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் இல்ல"

தமிழச்சி தலைகவிழ்ந்து, "சொல்லி இருக்கீங்க" என்றாள்.

"அப்புறம்....." என்று கேட்டபடி அவன் பார்வை முறைப்பாய் மாற அவள் மௌனமானாள்.

மகளின் முகப்பவனை மாறியதைக் கவனித்தவன், "சரி விடு... இனிமே நீ இப்படி பண்ணக் கூடாது... திரும்ப நீ இப்படி நடந்துக்கிட்டன்னா... நான் உன் கூட பேசவே மாட்டேன்... காட் இட்" என்று அவன் அழுத்திச் சொல்லவும்,

தன் தந்தையின் லேசான கோப பாவனையைக் கூட தாங்க முடியாமல் கண்ணீர் தளும்பியது அவள் கண்களில்!

மகளின் ஒற்றை துளி கண்ணீரிலயே கரைந்தவன் உடனே அவளைக் கைகப்பிடித்து இறக்கிவிட்டு,

"அட! என் தமிழச்சி அழறாலா... அப்போ நீ அப்பா மாறி ஸ்டிராங் இல்லயா?" என்று கேட்டான்.

கண்களில் வந்த கண்ணீரை மறைத்துக் கொண்டவள், "நோ நோ... நான் அழமாட்டேன்... என் டேட் மாதிரி நான் ஸ்டிராங்தான்" என்றாள்.

"வெரி குட்... அப்பதான் நீ பெரியவளானதும்... அப்பா மாதிரி போலீஸ் ஆஃபிஸர் ஆக முடியும்" என்றதும் அவள் தன் தந்தையைக் கட்டிக் கொண்டாள். அவனுமே பூரிப்போடு அவளை அணைத்துக் கொண்டான். மனைவியின் மீதான அபரிமிதமான காதலே மகள் மீதும் பாசமாய் அவனுக்கு உருவெடுத்திருந்தது என்பதில் ஐயமில்லை.

இருவரும் ஒன்றாய் கரத்தைப் பிடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவர்கள் நேராய் தமிழ் முன்னிலையில் சென்று நிற்க தமிழச்சி தன் தாயின் கரத்தைப் பற்றி, "சாரி தமிழச்சி... நான் இனிமே கிளாஸ்ல யார்கிட்டயும் சண்டை போடமாட்டேன்... ப்ராமிஸ்" என்று உறுதியளித்தாள்.

எல்லோருக்குமே தந்தை மகளுக்கான அந்த உறவின் மீது அத்தனை வியப்பு! ஆனால் தமிழுக்கு அதீத கோபமே தலைத்தூக்கியது.

மகளைப் பார்த்தவள், "எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு மனுஷங்களாவே தெரியிலயா... அதென்னடி உங்க அப்பா சொன்னா மட்டும் கேட்கிற?!" என்று வினவினாள்.

தமிழச்சி தன் அப்பாவின் மீது சாய்ந்து அணைத்தபடி, "ஏன்னா அவர்தானே என்னோட ஹீரோ" என்று ராகமாய் சொல்ல வீரேந்திரன் பெருமிதப்பட்டு மனைவியினை நோக்கிய போது அவள் உதடுக்குள்ளேயே முனங்கிக் கொண்டாள்.

அதனைக் கவனித்தவன் மகள் முன்னிலையில் மனைவியை எதையும் கேட்க விரும்பாமல் அமைதி காத்தான். உணவருந்த மேஜை மீது அமர்ந்திருந்த போது வீர் தமிழைப் பார்க்க, அவனிடம் பாரா முகமாகவே பரிமாறினாள்.

உணவு முடிந்த பின் தமிழச்சி தன் தாத்தா பாட்டியுடன் உறங்கச் சென்றுவிட, சிம்மபூபதி தன் பெற்றோர்களின் அறையருகில் உள்ள ஒரு தனி அறையில் படுத்துக் கொண்டான்.

வீரேந்திரன் அறைக்குள் வந்ததும் மனைவி சொன்ன வார்த்தையை நினைவுபடுத்தியபடி, "ஏ தமிழச்சி... பாப்பா என்னை ஹீரோன்னு சொன்ன போது நீ ஏதோ முனங்குனியே... என்னது?" என்று கேட்டான். அவள் அவனை அலட்சியமாய் பார்த்துவிட்டு அறையிலிருந்த டீவியை ஆன் செய்து சௌகரியமாய் அமர்ந்து கொண்டு பார்க்க, "திமிரா... என்ன சொன்னேன்னு சொல்லு?" என்று கேட்டு ரிமோட்டைப் பறித்தான்,

"இப்ப என்ன சொன்னன்னு கண்டிப்பா தெரியணுமா?" என்று எரிச்சலாய் பார்த்தாள்.

"ஆமாம்"

"அவளுக்கு நீங்க ஹீரோ... ஆனா எனக்கு நீங்க வில்லன்னு சொன்னேன்... போதுமா?"

அந்த வார்த்தைகள் அவனை வெகுவாய் கோப்படுத்த, "இவ்வளவு வருஷமாச்சு... இருந்தும் உன் கோபமும் திமிரும் இன்னமும் மாறவே இல்லயில்ல" என்றவன் கடுகடுக்க,

"நீங்க அப்படியே மாறிட்டீங்களாக்கும்" என்று சொன்னபடியே வெடுக்கென ரிமோட்டை அவனிடமிருந்த வாங்கினாள்.

அவன் மீண்டும் கோபமாக அந்த டீவியை அணைத்தான்.

தமிழ் வெறுப்போடு, "உங்கப் பொண்ணுக்கு மட்டும் எல்லா சுதந்திரமும் உண்டு... எனக்கு இங்க டிவி பார்க்கக்கூட உரிமையில்லையா?" என்றாள்.

இந்தக் கேள்வியைக் கேட்டதும் பதிலேதும் பேசாமல் ரிமோர்ட்டை தூக்கியெறிந்துவிட்டுத் திரும்பி படுத்துக் கொண்டான். அவர்கள் இருவரும் ஒரு காலத்தில் ஊரே வேடிக்கைப் பார்க்க சண்டைப் போட்டிருந்தாலும், குழந்தைகள் முன்னிலையில் அந்தத் தவறைச் செய்வதில்லை என உறுதி பூண்டிருந்தனர்.

வெளியே அவன் எது சொன்னாலும் விருப்பமில்லாவிடிலும் கேட்டுவிடுவது போல அவள் தலையசைத்தாலும், அறைக்குள் வந்த மாத்திரத்தில் தான் சேகரித்த மொத்த கோபத்தையும் ஏதோ ஒரு விதத்தில் காட்டுவாள்.

இப்போதைக்கு அவள் வெறுப்பைக் காண்பிக்க ஒரு வழி அந்தத் தொலைக்காட்சி. அவளின் மனமும் அந்தத் தொலைக்காட்சி நிகழ்வுகளில் லயிக்கவில்லை.

எனினும் மகள் விஷயத்தில் தன் கணவன் ரொம்பவும் செல்லம் தந்து கெடுக்கிறான் என்றும், ஏன் தனக்கே அவளைக் கண்டிக்கும் உரிமையைத் தரமாட்டேன் என்கிறான் என்றும் ஒரு தாயாக எழுந்த ஆதங்கம்தான் அவளை அவனிடம் அப்படிக் கோபப்பட வைத்தது.

இப்படி யோசித்திருக்கும் போதுதான் அந்த டிவி செய்தி ஒளிபரப்பானது.

யதச்சையாகதான் கவனித்தாள்...

தான் பார்த்தது உண்மைதானா? அவள் விழிகள் அந்த நொடியே இரண்டு மடங்கு பெரிதாகின. அவசர அவசரமாய் அருகிலிருந்த கணவனை உலுக்கி எழுப்பினாள்.

"வீர்ர்ர்ர்ர்" என்று அவள் சத்தமிட சலிப்போடு எழுந்தவன்

"தூங்கின பிறகுதான் கத்தி என் உயிரை எடுப்ப, இப்போ முழிச்சிட்டிருக்கும் போதேவா" என்றவன் சலிப்பு தட்ட கேட்க, அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

டிவியின் மீதிருந்த பார்வையை எடுக்காமலே அவனிடம் அந்தக் காட்சியைக் காண்பிக்க அவனும் அதனை, "என்னது?" என்றபடி வேண்டா வெறுப்பாய் நோக்கினான்.

"கடலின் ஆழத்தில் கிடைத்த ஓர் ஆபூர்வமான சிலை. ராமேஸ்வரம் கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கண்டறிந்த அதிசயம்.

கடலின் அடி ஆழத்தில் ஆறடிக்கும் உயரமுள்ள இராஜ கம்பீர பெண் கடவுள் சிலை கண்டறியப்பட்டது. பெரும் போராட்டத்திற்கு பின் அந்தச் சிலை கடல் வீரர்களின் உதவியோடு மீட்கப்பட்டது. இந்தச் சிலை தற்போதைக்கு கடலோர பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில், அந்தச் சிலையின் காலம் குறித்து கண்டறியத் தொல்பொருள் ஆய்வாளர்களிடம் அந்தச் சிலை விரைவில் ஒப்படைக்கப்படப்படும் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறாக அந்தப் பெண் செய்தி வாசிப்பாளர் சொல்லிக் கொண்டிருக்க, இருவருமே தங்கள் விழிகளை எடுக்கவேயில்லை.

வீரேந்திரனும் வியப்போடு பார்த்து கொண்டிருக்க தமிழுக்கு மெய்சிலிர்த்துப் போனது.

அந்தச் சிலைதானே அது. பலமுறை கேட்டுக் கொண்டாள்.

அவளால் நம்பமுடியவில்லை. ஆனால் உண்மை!

அவளுக்குள் உண்டான பிரமிப்பினை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அத்தனை கம்பீரமாய் இருந்தது அந்தச் சிலை வடிவம்.

கனவிலும் எண்ணியதில்லை.

அவளின் காலத்தில் அந்தச் சிலையை மீண்டும் பார்ப்பாள் என்று!

மயிர்க்கூச்சம் உண்டானது அவளுக்கு!

காரிருள் சூழ்ந்து சூரியனை மறைக்க முயற்சித்தால் அவன் மறைந்துவிடுவானா?!

இல்லை மறைக்கத்தான் இயலுமா?

தமிழனின் பாரம்பரியத்தையும் பெருமையையும் என்றுமே அழிக்க முடியாது என்பதற்கான அழுத்தமான சான்றே அந்தச் சிலை!

அந்த கீரிடத்தை எதன் காரணத்தால் நம் சந்ததியினர் இத்தனை காலங்களாய் பாதுகாக்கின்றனர் என்று அவளுக்குள் பலமுறை கேள்வி எழும். இன்று அவற்றிற்கெல்லாம் விடை கிட்டியது போல் இருந்தது.

அந்தச் சிலையின் பிரமாண்டத்தை அவள் கற்பனை செய்திருக்கிறாள். ஆனால் இப்பொழுது பார்க்கும் போது அந்தச் சிலை கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்றாய் அதிகம்பீரமாய் இருந்தது.

அதனின் நேர்த்தியான வடிவமைப்பும் வேலைப்பாடும் அந்தச் சிலையின் இன்னொரு சிறப்பம்சம்.

உண்மையிலேயே பொக்கிஷம் அந்தக் கீரிடம் அல்ல.

அந்தச் சிலைதான் விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்று தோன்றியது அவளுக்கு!

ஆம்! அதுதான் பொக்கிஷம்!

அதுவே நம் தமிழ் பாரம்பரியத்தின் சிறப்பும் பெருமையும் கூட.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content