You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Muran Kavithaigal - 8

Quote

8

வீட்டின் பின்புறம் மாதவன் தீவிர யோசனையுடன் நடந்து கொண்டிருந்தார். ஜோசப் சொன்ன விஷயம் அவருக்கு அதிர்ச்சிதான். ஆனால் இப்போது தன் மகன் காதலித்திருக்கிறானா என்பது ஒரு மாதிரி வியப்பைதான் கொடுத்தது.

வீட்டிலிருந்த எல்லோருக்குமே அதே மனநிலைதான்.

மிருதுளா தங்கையிடம், “பாருடி… அவன் ஒரு வார்த்தை கூட இதைப் பத்தி நம்மகிட்ட சொல்லல” என்று பொறும,

“என்னால சத்தியமா நம்ப முடியல க்கா… ரஞ்சன் அண்ணாவா?!” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் சாதனா.

“என்னால கூடதான் இது உண்மையா இருக்கும்னு முதல நம்ப முடியல… ஆனா அவன் முந்தா நேத்து என்ன பண்ணி இருக்கான் தெரியுமா… நம்ம தருண்கிட்ட ஏதோ புக்கைக் கொடுத்து அந்த எதிர் வீட்டுப் பொண்ணுகிட்ட நமக்கு தெரியாம கொடுத்திட்டு வரச் சொல்லி இருக்கான்” என,

“நிஜமாவா?” சாதனா அதிர்ச்சியுடன் பார்க்க,

“ஆமா” என்றாள் மிருதுளா.

இவர்கள் ரகசியமாக தங்கள் அறைக்குள் விவாதம் செய்து கொண்டிருந்த அதேநேரம் ரஞ்சன் மெல்ல வீட்டிற்குள் நுழைந்தான். ஜோசப் வந்து சென்றதும் பெரிதாக கலவரம் நடக்குமென்று அவன் எதிர்பார்த்திருக்க, அந்த வீடே அமைதிக்குள் அமிழ்ந்திருந்தது அவனுக்கு வியப்பை ஏற்படுத்தியிருந்தது. கொஞ்சம் பயத்தையும்!

அப்போது ரஞ்சன் எதிரே வந்த உதய், “வாடா மச்சான்… இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு கமுக்கமா இருந்திட்டு நீ செஞ்சு வைச்சுருக்கப் பாரு… ஒரு வேலை” என்று கிண்டல் செய்யவும்,

“மாமா மெதுவா பேசுங்க” என்றவன் பயத்துடன் குரலைத் தாழ்த்திக் கூறினான்.

“மெதுவா பேசவா… நீ என்னடா அந்நியனா… கீழே இருந்தா அம்பி… மேலே இருந்த ரெமோவா? ஆனா சத்தியமா நம்ப முடியல… எப்படிறா அந்த ஃபிகரை கரெக்ட் பண்ண?” என்றதும் சட்டென்று அவன் முகம் மாறியதைப் பார்த்து,

“சரி சரி ஃபிகருன்னு சொல்லல… அந்தப் பொண்ணு பேர் என்ன?” என்று கேட்டான்.

“ஜோ…ஷிகா”

“என்னடா பேரு இது… ஜோ ஷிகா… அதென்ன ஹிந்தி கார பொண்ணா?”

“இல்ல மாமா… அவங்க தமிழ்தான்”

“என்னவோடா மச்சான்… நம்ம வீட்டாளுங்க எல்லாம் கல்யாணத்துக்குப் பார்க்கவே நம் ஜாதி புக்ல தான் பார்ப்பாங்க… நீ என்னடா மதம் விட்டு மதம் மாறி பார்த்து வைச்சு இருக்க… என்ன நடக்க போகுதோ?” என்றவன் பீதியைக் கிளப்ப, நிரஞ்சனுக்குத் தொண்டையிலிருந்து அடிவயிறு வரை ஏதோ தாறுமாறாக உருண்டது. கைகள் படபடத்தன.

“நீங்க வேற பயப்படுத்தாதீங்க… மாமா”

“பயப்படுத்துறேனா? இந்தப் பயமெல்லாம் நீ நம்ம வீட்டுல இருந்து எதிர் வீட்டுப் பொண்ணுக்கு நூல் விடுறதுக்கு முன்னாடி இருந்திருக்கணும்… அதுவும் என் பையன்கிட்டயே புக் கொடுத்து தூது அனுப்புனியாம்… சொன்னான்… ம்ம்ம்… ஐயோ பாவம்னு உன்னை நினைச்சா… நீ என்னவெல்லாம் வேலைப் பார்த்து வைச்சிருக்கடா டேய்… நாம பீரடிக்கும் போது கூட உன் ஆளான்னு கேட்டேனே… அப்பவாவது சொன்னியாடா?” என்றவன் மூச்சு விடாமல் பேச,

“நான் சொல்லாம்னுதான் மாமா நினைச்சேன்” என்று ரஞ்சன் பம்மிக் கொண்டிருந்தான்.

“நீ நினைச்சி காய வைச்சதெல்லாம் போதும்… போ உங்க அப்பா பின்னாடி பக்கமா இருக்காரு… அவர்கிட்ட போய் பேசு” என,

“பயமா இருக்கு மாமா… நீங்களும் கூட வாங்களேன்” என்றான்.

“நல்ல கதையா இருக்கே… லவ் பண்ணும் போது தனியாதானே பண்ண… இப்ப என்னடா கூட துணைக்கு ஆளைக் கூப்பிடுற… போய் நீயே சமாளி” என, அவன் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு பின்புற வாசலைத் தாண்டி வந்தான்.

அப்படியும் இப்படியுமாக நடந்து கொண்டிருந்த மாதவன் மகனைப் பார்த்தும் நின்று அவனைக் கூர்ந்து பார்க்க, அவனுக்கு அந்தப் பார்வையிலேயே தலை கிறுகிறுத்தது.

அவன் என்ன பேசுவதென்று புரியாமல் மௌனமாக நிற்க மாதவன் மகனை நோக்கி, “இப்பவாவது ஏதாவது பேசப் போறியா?” என்று கேட்டதும்,

“அப்பா” என்றவன் குரல் பதட்டத்துடன் வெளியே வந்தது.

மாதவன் கைகளைக் கட்டிக் கொண்டு, “எத்தனை வருஷமா நடக்குது?” என, அவர் கேள்வியிலும் முகத்திலும் கோபம் இல்லையென்று பட்டது.

அந்த கணமே அவனுக்குள் ஒரு தைரியம் புகுந்து கொள்ள, “நான் லவன்த் படிக்கும் போதுதான் எனக்கு ஜோஷிகா ஃபிரண்டானா… ரொம்ப நல்ல கேரக்டர் ப்பா…

நான் எப்படின்னு உங்களுக்கே தெரியும்… யார்கிட்டையும் பேசிப் பழகமாட்டேன்… ரொம்ப சென்ஸிட்டிவ்… எனக்கு என் முகத்தைக் கண்ணாடில பார்க்கக் கூட பிடிக்காது… அந்தளவுக்கு என் அபியரன்ஸ்னால ரொம்ப தாழ்வு மனப்பான்மைல இருந்தேன்.

ஆனா எல்லாத்தையும் மாத்தினது ஜோதான்பா… அவதான் என்னையும் ஒரு தன்னம்பிக்கையான மனுஷனா உணர வைச்சா… நான் ஒரு அளவு நல்லா படிச்சு இந்த இடத்துல இருக்கேனா… அவதான் ப்பா காரணம்…

அவ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சு பார்க்க கூட முடியல பா” என்றவன் படபடவென தன் மனதிலிருந்த எண்ணங்களை எல்லாம் கொட்டிவிட,

“அப்போ உங்க அம்மாவும் நானும் உனக்கு செஞ்சதெல்லாம் ஒன்னும் இல்ல.. அந்தப் பொண்ணுனாலதான் நீ இன்னைக்கு இப்படி இருக்கன்னு சொல்ற” என்று எகத்தாளப் பார்வையுடன் கேட்டார்.

அவன் பதறிக் கொண்டு, “இல்லபா நான் அப்படி சொல்லல… நீங்களும் அம்மாவும் எனக்கு எல்லாமே கொடுத்தீங்க… ஆனா ஜோ எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தா ப்பா” என்றான்.

மாதவன் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “சரி… ஸ்கூல் டேஸ்ல இருந்து லவ் பண்ற… ஆனா ஏன் இத்தனை நாளா என்கிட்டயும் அம்மாகிட்டயும் சொல்லல” என்று கேட்டுவிட்டுச் சட்டென்று நிறுத்தி,

“ஆமா… உங்க அம்மாவுக்குத் தெரியுமா? சொல்லி இருக்கியா” என்று சந்தேகத்துடன் பார்த்தார்.

“இல்ல ப்பா தெரியாது… நான் அம்மாகிட்டயும் சொல்லல… அதுவும் நான் ஜோவை லவ் பண்றதால அக்கா தங்கச்சிங்க லைஃப்ல இல்ல மேரேஜ்ல எந்தக் குழப்பமும் வந்திர கூடாதுன்னு நினைச்ச்ச்ச…சு மறைச்சிட்டேன்” என்றவன் ஒரு மாதிரி தயக்கத்துடன் முடித்தான்.

மாதவன் கண்களில் சட்டென்று ஒரு இலகுத்தன்மை வந்தது. இத்தனை வருடங்கள் இல்லாமல் இன்று அவருக்கு  மகன் மீது தனி மரியாதை உண்டானது.

அதுவும் இதுநாள் வரையில் அவர்கள் பேசிய மிக நீண்ட உரையாடல் இதுவாகதான் இருக்கும் என்று தோன்றியது. என்னதான் மகன் வேலை சம்பாத்தியம் என்று அவருக்குப் பொருளாதார வகையில் துணை நின்றிருந்தாலும் அவன் குடும்பத்துடன் பெரிதாக ஒட்டுதல் இல்லாமல் நடந்து கொள்வதாகவே அவர் எண்ணினார்.

அதுவும் அவனுடைய இந்த அமைதியான சுபாவம் எப்போதும் அவருக்கு ஒரு மாதிரி எரிச்சலைதான் ஏற்படுத்தும். இவன் எப்படி எதிர்காலத்தில் தன் வாழ்க்கையை எதிர்கொள்வான் என்ற கேள்வியும் பயமும் கூட இருந்தது.

ஆனால் இன்று ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் என்று அறிந்ததும் அதிர்ச்சி வியப்பு என்று எல்லாம் வந்து போனாலும்,

‘நம்ம மகன் காதலிக்கிறானா… பரவாயில்லயே’ என்று ஒரு மாதிரி பெருமிதமும் எட்டிப் பார்த்தது.

அதுவும் அவன் மனம் திறந்து அவரிடம் பேசியது இத்தனை வருடங்களாக அவர்களுக்கு இடையில் நிரப்பப்படாமல் இருந்த மிகப் பெரிய வெற்றிடத்தை நீக்கியிருந்தது.

எல்லாம் தாண்டி ஜோஷிகா மகனின் வாழ்க்கைக்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவள் என்றும் அவனின் பேச்சில் புரிந்து கொண்டார். ஜாதி மதமெல்லாம் அந்த நொடி அவர் நினைப்பில் கூட நிற்கவில்லை.

மகனின் காதலுக்குத் துணை நின்று அவன் திருமணத்தை முடித்துவிட வேண்டுமென்ற தீர்மானமான எண்ணம் அவர் மனதில் வந்து அமர்ந்து கொள்ள,

“சரி ரஞ்சன்… பேசி முடிச்சிடுவோம்” என்றார்.

“அப்பா” என்ற ரஞ்சனின் கண்கள் கலங்கிவிட்டன.

“சரி உள்ளே வா… பேசுவோம்” என்றவர் பெரிதாக உணர்ச்சிகளை காட்டாமல் மகனை அழைத்துவிட்டுச் சென்றுவிட, அவன் திகைப்பிலாழ்ந்தான்.

தன் தந்தையிடம் நிறைய போராடி சம்மதம் வாங்க வேண்டுமென்று எண்ணி அவன் ரொம்பவும் பயந்து கொண்டிருந்தான். ஆனால் அவர் அவனது பயத்தைத் தேவையற்றதாக மாற்றிவிட்டார். மிகச் சாதாரணமாக சம்மதம் கொடுத்துவிட்டார். நடப்பது நிஜமா கனவா என்று அவனால் நம்பவே முடியவில்லை. உள்ளமெல்லாம் உற்சாகத்தில் துள்ளியது.

 அந்த நொடி தன் தந்தையை மானசீகமாகக் கட்டியணைத்து மனதில் நன்றி உரைத்தான். இப்போதும் கூட அவரை நெருங்கி அணைக்க முடியாத ஒரு சின்ன இடைவெளி இருக்கதான் செய்தது. ஆனால் மனதளவில் இப்போது அந்த இடைவெளியும் காணாமல் போய்விட்டது.

உள்ளே சென்ற மாதவன் நேராக சமையலறைக்குள் நுழைந்தார். வீட்டிலேயே அவர் அதிகம் செல்லாத அறை அதுதான். எப்போதாவது ரேணுவிடம் பேச வேண்டுமென்றால் மட்டுமே அவர் அங்கே செல்வார்.

கணவன் உள்ளே நுழைவதைக் கண்ட ரேணுவின் மனம் படபடத்தது. அந்த எதிர் வீட்டு ஆள் பேசிவிட்டுப் போனதை கேட்டதிலிருந்தே ஏதோ பெரிதாக நிகழப் போகிறது என்ற அச்சம் அவருக்குள் பரவியது.

சமையலில் கவனம் செல்லவில்லை.

“ரேணு… ஏதோ கருகிற மாதிரி ஸ்மெல் வருது” என்று உள்ளே வந்த மாதவன் சொல்லவும்தான் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை உடனடியாக இறக்கி வைத்து பாத்திரம் மாற்றினார்.

“ஏ பதட்டப்படாம செய்” என்றவர் மனைவியின் கைகள் வேகமாக செயல்படுவதைப் பார்த்து பதறிக் கொண்டு உரைத்தார். ஆனால் அதெல்லாம் அவருக்குப் பழக்கம்தான். பல வருட காலமாக அவர் மூளை இந்த வேலைக்குப் பழக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று மனமும் மூளையும் ஒரு நிலையில் இல்லை. மகனின் காதல் விஷயம் அவரை அதிர வைத்ததென்றால் கணவனின் கோபத்தை நினைத்து அச்சம் தலை முதல் கால் வரை பரவியது.

“ரேணு… நீ அந்த எதிர்வீட்டுக்காரர் பேசனதைக் கேட்டியா?” என்றவர் ஆரம்பிக்க, ஜிவ்வென்று ஒரு உணர்வு வயிற்றில் இறங்கியது.

“இல்லையே… என்ன சொன்னாரு” என்றவர் கவனிக்காதது போல கேட்க,

“அது வந்து…” என்று தயக்கத்துடன் ஆரம்பித்து முழுவதுமாக ஜோசப் சொன்னதைச் சொல்லி முடிக்கும் போது அடிக்கப் போகும் புயலுக்காக ரேணு அமைதியாகக் காத்திருந்தார்.

ஆனால் இறுதியாக அவர் சொன்ன வார்த்தை ரேணுவின் மனதில் ஒரு சூறாவளியைக் கிளப்பிவிட்டது.

“நாம பேசாம ரஞ்சனுக்கு அந்தப் பொண்ணையே பேசி முடிச்சுடலாம்” என்றவர் சொன்னதுதான் தாமதம். ரேணுவின் முகம் கோபத்தில் சிவந்தது.

எப்படி இருந்தாலும் கணவன் சம்மதிக்கமாட்டார். தானாக இதில் பேசி எந்தக் குழப்பமும் செய்ய வேண்டாமென்ற ரேணுவின் எண்ணத்தை அவர் உடைத்துவிட்டார்.

நிலைமைத் தலைகீழாக மாறியிருந்தது.

“எது” என்று சீறலாக திரும்பியவர், “அந்தப் பொண்ணை ரஞ்சனுக்குப் பேசி முடிக்கணுமா?” அவர் கண்களில் கோபம் தெறித்தன.

“ரஞ்சன் அந்தப் பொண்ணை விரும்பும் போது நாம என்ன பண்ண முடியும்?” என்றவர் எதார்த்ததைப் பேச,

“விரும்புறாங்குறதுக்காக யாரை வேணா கல்யாணம் பண்ணி வைச்சுட முடியுமா? நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்… அந்தப் பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வரவும் முடியாது… வரவும் கூடாது… அந்தப் பொண்ணைக் கட்டிக்கிட்டா என் பையன் வாழ்க்கையே நாசமாகிடும்” என்றவர் குரல் உயர்ந்தது. ரேணுவின் குரல் முதல்முறையாக சமையலறைத் தாண்டிக் கோபமாகவும் அதிகாரமாகவும் ஒலித்தது.

“உங்க அம்மாவா கத்துறாங்க மிருது” என்று உதய் மனைவியிடம் கேட்க,

“ஆமா… எல்லாம் ரஞ்சன் காதல் விஷயமாதான்” என்றபடி இருவரும் வெளியே வந்து எட்டிப் பார்த்தனர்.

கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்த ரஞ்சனின் எண்ணங்கள் அம்மாவின் குரல் உயர்ந்த விதத்தில் எதார்த்தத்திற்கு இழுத்து வரப்பட்டன.

அவன் மெல்ல உள்ளே வர, “நீ புரிஞ்சிக்காம கத்திட்டு இருக்க ரேணு” என்று மாதவன் பொறுமையாகப் புரிய வைக்க முயன்றார்.

“நான் எல்லாம் புரிஞ்சுதான் பேசுறேன்… உங்களுக்குதான் என்னாச்சுன்னு எனக்கு புரியல”

நிரஞ்சன் சமையலறையில் வாயிலில் வந்து நின்று, “அம்மா” என்று அழைக்க, அவர் உக்கிரமாக நின்றார்.

“வாடா நல்லவனே… ஏன்… உனக்கு காதலிக்க ஊரு உலகத்துல வேற பொண்ணே கிடைக்கலயா?” என்று கேட்க,

“இல்ல மா… ஜோ ரொம்ப நல்லப் பொண்ணு” என்ற போது சுரீரென்று அவன் கன்னத்தில் அறை விழுந்தது.

“ரேணு” என்று மாதவன் அதிர நிரஞ்சன் தன் அம்மாவா தன்னை அடித்தார் என்ற அதிர்ச்சியில் நின்றிருந்தான். அந்த அடி அவன் கன்னங்களில் விழவில்லை. அவன் இதயத்தில் விழுந்தது போல அத்தனை ஆழமாக வலித்தது.

மாதவன் அப்போது மனைவியிடம், “நீ இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற… கொஞ்சம் பொறுமையா இரு” என,

“அதெல்லாம் பொறுமையா இருக்க முடியாது… அந்த எதிர் வீட்டுப் பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வரக் கூடாது” என்று திட்டவட்டமாகச் சொன்னவர் அதற்கு மேலாக இந்த விவாதத்தைத் தொடர விரும்பாமல் திரும்பி தன் சமையல் காரியங்களில் ஆழ்ந்துவிட்டார்.

படபடவென பாத்திரங்கள் தாறுமாறாக இடம் மாறின.

‘கண்ணீருடன் நின்ற மகனைத் தோளில் அணைத்து வெளியே அழைத்து வந்தார் மாதவன்.

அதேசமயத்தில் மாடியில் நிரஞ்சனின் செல்பேசி அடித்து அடித்து ஓய்ந்து கொண்டிருந்தது. ஜோஷிகாவிற்கோ அவர்கள் வீட்டில் தங்கள் திருமணத்தைப் பற்றி என்ன சொல்லி இருப்பார்கள் என்ற பதட்டம்.

வீட்டிற்கு வந்த தந்தையிடம், “டேடி… என்னாச்சு… பேசுனீங்களா என்ன சொன்னாங்க” என்று ஆர்வம் மேலிட கேட்டதற்கு,

“அதை ஏன் என்கிட்ட கேட்குற… பத்து வருஷமா நீ ரகசியமா காதலிச்சியே… உன் ஸோ கால்ட் லவ்வர்… அவன்கிட்ட கேளு” என்று சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்துவிட,

“ரொம்ப டூ மச்சா பண்றீங்க டேடி” என்றவள் சொன்னது கேட்காத வண்ணம் தன் அறைக்கதவை மூடிக் கொண்டார். அவளுக்கு அப்படியொரு எரிச்சல் வந்தது.

கதவின் மீது ஓங்கிக் குத்திவிட்டு, ‘ஆ வலிக்குதே’ என்று கையைப் பிடித்துக் கொண்டே தன் செல்பேசியை எடுத்து அவனுக்கு அழைத்து அழைத்து அயர்ந்து போனாள்.

அப்போது வாயிலில் அழைப்பு மணி ஓசைக் கேட்டு அவள் எழுந்து செல்வதற்குள் முந்திக் கொண்டு முன்னே சென்ற ஜோசப் அந்த உணவு பொட்டலத்தை வாங்கிக் கொண்டு வந்து சாப்பிட அமர்ந்தார்.

அதில் ஒரே ஒருவருக்கான உணவு மட்டுமே இருப்பதைப் பார்த்து பார்வையை அகல விரித்தவள், “எனக்கு ஆர்டர் பண்ணலயா?” என்று கேட்க,

“உன் ஃபோன்லயும்தான் ஆப் இருக்கு… காசு இருக்கு… போட்டு ஆர்டர் பண்ணிக்கோ” என்றார்.

“டேம் இட்… ஏன் இப்படி நடந்துக்கிறீங்க” என்றவள் கடுப்புடன் கேட்க,

“நீ என்ன… எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டா செய்ற… உனக்கு தேவையானதை நீயே செஞ்சிக்கும் போது… இதெல்லாம் நீயே செஞ்சிக்க முடியாதா?” என்றவர் சாப்பிட்டுக் கொண்டே பேச, அவள் முகம் சிவந்தது.

“உங்களை” என்றவள் கோபமாக அந்த உணவைத் தட்டிவிட போகவும் அவர் வெகுஜாக்கிரதையாக தன் உணவுப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டார்.

அவளின் சீற்றம் அடங்கவே இல்லை.

“என்னதான் டேடி உங்க பிரச்சனை… நான் லவ் பண்றதா இல்ல நிருவை லவ் பண்றதா?” என்று அவள் கையைக் கட்டிக் கொண்டு அவர் எதிரே வந்து நின்று கேட்க,

“ஆப்வியஸ்லி… இரண்டாவதுதான்” என்றவர் எழுந்து கைக் கழுவச் செல்ல,

“நிருகிட்ட உங்களுக்கு என்ன பிரச்சனை” என்றவர் பின்னோடு வந்து கேட்டாள்.

“அவன் உனக்குப் பொருத்தமானவனா இருக்கமாட்டான்னு எனக்கு தோனுது” என்று சொல்லி மகளைப் பார்க்க,

“சீரியஸ்லி” என்ற அவள் கண்களில் ஜிவு ஜிவுவென்று கோபம் கனன்றது.

“எஸ்…. சீரியஸ்லி” என்றவர் மகளைப் பார்த்து, “நீ உன் காதலுக்காக இவ்வளவு தூரம் என்கிட்ட சண்டைப் போடுற கோபப்படுற… ஆனா அவன் அவங்க அப்பாகிட்ட பேசவே பயப்படுறான்… ஹி இஸ் எ கவர்ட்” என, அந்த வார்த்தையைக் கேட்டு அவள் வெடித்துவிட்டாள்.

“போதும் டேடி… நிரு ஒன்னும் பயந்தா கொள்ளி கிடையாது… அவன் வீடும் குடும்பமும் அந்த மாதிரி… அவ்வளவுதான்” என்றாள்.

“எக்ஸாக்ட்லி… அவன் குடும்பம் அந்த மாதிரி… நீ எப்படி அங்கே போய் சர்வைவ் ஆக முடியும்… யூ கான்ட்… நீங்க பத்து வருஷம் காதலிச்சிருக்கலாம்… ஆனா ஒரே ஒரு மாசம் கூட நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு சேர்ந்திருக்க மாட்டீங்க… முக்கியமா உன்னால அவங்க குடும்பத்துல போய் வாழ முடியாது… அதனால நீ உன் டெசிஷனைப் பத்தி இன்னும் ஒரு முறை யோசிக்கிறதுதான் நல்லது” என்றவர் படபடவெனப் பேசிவிட்டு மீண்டும் சென்று தன் அறைக்குள் பூட்டிக் கொண்டார்.

ஜோ சோஃபாவில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட சிறிது நேரத்திற்கெல்லாம் அவளது கைப்பேசி ஒலித்தது. அவள் எடுத்து பேச நிரஞ்சன் தன் வீட்டின் நிலவரத்தை விவரித்தான்.

காதல் என்ற கரையில் பாதங்களை நனைத்துக் கொண்டு நிற்பது சுகமாகவும் சுலபமாகவும் இருக்கலாம். ஆனால் கல்யாணம் என்ற கடலுக்குள் குதிப்பது சுலபமான காரியமில்லை. ஆரம்பக்கட்டத்திலேயே அலைகளின் வேகத்தில் சிக்கிச் சின்னாபின்னமான உணர்வுதான் இருவருக்கும். ஆனால் இன்னும் ஆழத்திற்குச் செல்ல செல்ல எதிர்நீச்சல் போடாவிட்டால் அவர்கள் காதலும் வாழ்க்கையும் மூழ்கிப் போய்விடும் அபாயமும் இருந்தது.

vanitha16, Rathi and Thani Siva have reacted to this post.
vanitha16RathiThani Siva
Quote

ஜோசஃபின் கேள்வி நியாயமானது, யதார்த்தமானது. காதலை வீட்டில் சொல்ல தைரியமில்லாமல் பெண்ணின் அப்பாவைவைத்து கேக்கவைத்தது எவ்வளவு பெரிய கோழைத்தனம். அவன் அம்மாவிடம் பேசி இருக்க வேண்டும் அல்லது ஜோசஃபிடம் சென்றாவது பேசி இருக்க வேண்டும்.

காட்டாற்று வெள்ளம் போல் ஒரு இலக்கு / ஒழுங்கு இல்லாமல் வாழும் ஜோஷியை எப்படி ரேணுவிற்கு பிடிக்கும். அவள் சுதந்திரமாக வளர்க்கப்பட்டவள். அவளால் எப்படி ரேணுகாவை போல் ஒரு சிறிய வரையறைக்குள் வாழமுடியும்? ஆரம்பித்திலேயே அவர்களுக்குள் முட்டிகொள்ளாதா. அப்படி நேர்கையில் நிரஞ்சன் எப்படி சமாளிப்பான்? யார் பக்கம் பேசுவான்? இப்படி கட்டுப்பாட்டிற்குள் வைத்தால் ஜோஷியால் தான் நிம்மதியாக வாழ முடியுமா. எண்ணங்களால் இரு துருவங்களான மாமியாரும் மருமகளும் ஒரே வீட்டிற்குள் வாழ்ந்தால் நிரஞ்சன் குடும்ப வாழ்க்கை கண்டிப்பாக தோல்வியுறும். அதனால் ஜோசஃபின் கவலை மிக சரியே.

monisha and Thani Siva have reacted to this post.
monishaThani Siva
Quote

Super ma 

You cannot copy content