You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 1

Quote

1

நிதர்சனம்

  நடுநிசி இரவு!

சென்னை மாநகரமே இருளின் பிடியில் மூழ்கிக் கிடந்தது. அகன்று விரிந்த பெரிய சாலைகளில் அணிவகுத்து நின்ற போஸ்ட் கம்பங்கள் வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருக்க, மாயாஜாலமாய் அவ்வப்போது சில கனரக வாகனங்கள் விர்ரென அந்தச் சாலையில் பறந்து கொண்டிருந்தன.

இரவு நேரமென்பதால் கேட்பாரின்றி வாகனங்களெல்லாம் அதீத வேகத்தில் சென்று கொண்டிருக்க, அந்தச் சாலையின் வழியே தன் கட்டுப்பாட்டை இழந்து வந்து கொண்டிருந்தது அந்த அதிநவீன ஃபெராரி கார்!

நிச்சயம் சில கோடிகளை அந்த கார் விழுங்கியிருக்கும். அத்தனை பிரமிப்பாய் அதன் முன்புறத் தோற்றம் இருக்க, பளபளத்துக் கொண்டிருந்தது அதன் சிவப்பு வர்ணம்.  அந்த காரின் ஓட்டம் அதிபயங்கரமாய் இருந்தது. தன் கட்டுப்பாட்டை மீறிக் கொண்டு செல்கிறது என்பது நன்றாகவே தெரிந்தது. போக்கிடம் இல்லாமல் சாலையோரங்களில் படுத்துக்கிடந்தவர்களை எல்லாம் ஒரு நொடி அரண்டு போகச் செய்துவிட்டு அந்த கார் கடந்து செல்ல,

 'இதெல்லாம் பணம் படைத்தவர்களுக்கு சகஜம்தானே!' அவர்களின் மனோஎண்ணம்... ஆம்! சகஜம்தான்.

ஆனால் அதன் ஓட்டமும் வேகமும் யாருடைய உயிரையோ காவு வாங்கக் காத்திருக்கிறது எனும் போது சகஜம்தான் என்று கடந்து சென்றுவிட முடியுமா? எமனின் தூதுவனாய் வந்து கொண்டிருந்த அந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தான் டேவிட்!

டேவிட் அந்தோணி. பணக்கார மக்களின் தோற்றம்தான். இருபத்தைந்து வயதைத் தொட்டிருக்கும் என்றது அவனின் முகக்களை. சீரான தேகத்தோடு பளபளத்துக் கொண்டிருக்கும் அவனின் ஊதா நிற ஷர்ட்.

பவர் ஸ்டியரிங்கை திருப்பிக் கொண்டிருந்த அவன் கரங்களில் லூசாய் தொங்கிக் கொண்டிருந்த ரோலக்ஸ் வாட்ச்! அவன் முகத்தின் நிறமும் சாயலும் அவனை அமுல் பேபி என்றுதான் சொல்லத் தோன்றும், அந்த லேசான தாடிமட்டும் இல்லையென்றால்.

அந்த கார் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. அதனைக் கட்டுப்படுத்தும் நிலையிலும் அவன் இல்லை. மிதமிஞ்சிய போதை!

இத்தகைய சமயத்தில் காரை செலுத்துவது தவறென்று அவனுக்குத் தெரிந்திருக்காதா என்ன? ஆனால் அதை அவன் செய்தான். எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்த மனதிற்கு எதைச் செய்வது, எதை செய்யக் கூடாதென்ற விதிவிலக்கில்லை. அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைப் பற்றி அவன் மூளை அப்போதைக்கு யோசிக்கவும் இல்லை. அவனுக்குள் கோப்பை கோப்பையாய் இறங்கியிருந்த விஸ்கியின் வேலை அது.

நல்லவனாயிருப்பது அத்தனை பெரிய தவறா? அவன் மனம் ஓயாமல் இந்தக் கேள்வியை  எழுப்பிக் கொண்டிருந்தது. இன்று நேற்றல்ல. அவனுக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து!

ஆனால் அவனை இன்று அந்த எண்ணம் கொஞ்சம் அதீதமாய் பாதித்திருக்க, உலகத்தின் அந்த நிதர்சனம் அவனுக்கு இன்னும் பிடிபடவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பணம் படைத்தவனாய் இருந்தால் நல்லவனாய் இருக்கக் கூடாது. வியாபாரியாய் இருந்தால்... அப்படி ஒரு சிந்தனையே வரக் கூடாது. அதுவும் ஆளும் தொழிலதிபராய் இருந்துவிட்டால் நல்லவன் என்ற வார்த்தையே அவன் அகராதியில் இடம்பெற்றுவிடக் கூடாது.

 அப்படி நல்லவனாய் இருக்க எத்தனித்தால் அடிமுட்டாள் என்று சொல்லிவிடுவார்கள். ஆழக் குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள்.  அவன் தந்தை தாமஸ்அந்தோணி சொன்னது போல!

 தமிழ் மொழியில் பிரசித்தி பெற்ற ஜே நெட்வொர்க்கின் எம்.டி தான் தாமஸ்!

 உலகம் அறிந்த தமிழ் சேனல். முதியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை எல்லோருக்கும் அவரவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேனல்கள். ஜே நியூஸ், ஜே கிட்ஸ், ஜே மூவிஸ், இப்படியாகப் பல. அதனால்தான் வீட்டிற்கு ஒரு டீவி போதுவதில்லை.

 பெருமளவில் லாபம் ஈட்டிக்கொண்டிருக்கும் அந்த சேனல்களை நிர்வகிக்கும் தாமஸின் ஒரே வாரிசுதான் டேவிட். கல்வி ஞானம் நிரம்பப் பெற்றவன்.

சிலமாதங்களுக்கு முன்புதான் ஜே நெட்வொர்க்கின் ஜே எம்.டியாக பொறுப்பேற்றுக் கொண்டான். அன்றிலிருந்து தொடங்கியது பிரச்சனை. எல்லாவற்றிலும் அவன் கண்ணோட்டம் முற்றிலும் வேறாயிருந்தது. தாமஸ் பொறுமையிழுந்து அன்று அவனிடம் இது குறித்து பேசினார்.

 "இதோ பாரு டேவிட்... மீடியாங்கிறது நீ நினைக்கிற மாதிரி இல்ல... இன்னும் நீ பார்க்க வேண்டியதும் கத்துக்க வேண்டியதும் நிறைய இருக்கு, அதுக்குள்ள நீ ரொம்ப பெரிய டெசிஷன்ஸ் எல்லாம் எடுக்க வேண்டாம்" என்றார் அதிகாரத்தொனியில்!

 தந்தையின் வார்த்தை டேவிட்டை காயப்படுத்தியது. ஏற்கனவே அவனின் முடிவுகள் எல்லாம் ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. அவன் எது சொன்னாலும் அது சரிப்பட்டு வராது என தட்டிக்கழிக்கப்பட எதற்கு இந்த பதவி தனக்கு?

அவனுக்குள் கோபமும் குமுறலும் பொங்கிக் கொண்டிருக்க, தனக்கு நிர்வாகத்திறமை இல்லையோ என்று சந்தேகத்தோடு தந்தையை நோக்கி,

 "ஏன் டேட்?... என்னதான் இஷ்யூ உங்களுக்கு... என் ஐடியாஸ், தாட்ஸ் க்ரியேட்டிவ்வா இல்லையா? எதுவாயிருந்தாலும் நேரடியா சொல்லுங்க... நான் அதை அக்சப்ட் பண்ணிக்கிறேன்" என்று அமர்த்தலாகவே கேட்டான். அவர் தயக்கத்தோடு தன் தாடையை தடவியபடி யோசிக்கலானார்.

 டேவிட் மீண்டும், "சொல்லுங்க டேட்.. என்கிட்ட திறமை பத்தலயா? " என்றவன் அழுத்தமாய் கேட்க,  

அவர் தன் யோசனையை விடுத்து நிமிர்வாய் அமர்ந்து, "உன்கிட்ட புத்திசாலித்தனம் பத்தல டேவிட்" என்றார்.

"வாட்?"

"டேவிட்... உனக்கு மீடியாவோட பவர் என்னன்னு தெரியல... அட் தி சேம் டைம் நம்ம வெர்ல்ட் எவ்வளவு காம்படீட்டீவானதுன்னு  உனக்கு இன்னும் புரியல... நம்ம முதல் முதல்லா சேனல் ஆரம்பிக்கும் போது தமிழ்ல ஒரு இரண்டு சேனல் இருக்குமா?

ஆனா இன்னைக்கு... மோர்தென் டூ ஹன்ட்ரட் சேனல்ஸ்... இன்டிர்நேஷனல் சேனல்ஸ் எல்லாம் இந்தியாவில ஹிந்திக்கப்புறம்... அடுத்ததா டார்கெட் பண்ணி வர்றது தமிழ் லேங்குவேஜ்க்குதான்... தெரியுமா?!" என்று கேட்டுவிட்டு மகனை  அளவெடுத்தபடி பார்த்தார்.

டேவிட் பேக்கெட்டில் தன் கரங்களை நுழைத்தபடி, "ஏன்னா பொழுதுபோக்கிற்கு தமிழ் மக்கள் அதிக முக்கியத்துவம் தருவாங்க... அதனால" என்று சொல்லி இயல்பாய் தோள்களைக் குலுக்கினான்.

"ரைட்... பட் மோர்தென் எண்டர்டைன்மென்ட்... இட்ஸ் அ பொலிட்டிக்கல் பவர்... இட்ஸ் அ பிஸ்னஸ்... உலக சந்தையை தமிழ்நாட்டில கொண்டு வந்து நிறுத்திற பிஸ்னஸ்" என்றார்.

"அப்போ மீடியாங்கிறது மக்களுக்காக இல்ல... உலக சந்தையில இருக்கிற குப்பைகளை விற்கிறதுக்காக... அப்படிதானே டேட்?"

இந்த வியாபார உலகின் மிகப் பெரிய உண்மையை வெகு சாதாரணமாய் கேட்டுவிட்டான். அவர் உதட்டில் மெல்லிய புன்னகை இழையோடியது.

"பரவாயில்ல டேவிட்... ஒரளவுக்கு புரிஞ்சிக்கிட்ட... பட் இது பத்தாது... இன்னும் நீ நிறைய தெரிஞ்சிக்க வேண்டியதிருக்கு" என்றார்.

அவன் முகமெல்லாம் கோபத்தால் சிவக்க தொடங்கியது. அவன் கற்றக் கல்விக்கும் இவர் சொல்லும் விஷயங்களுக்கும் துளிகூட சம்பந்தமில்லை.

எல்லா துறைகளில் ஓர் இருண்ட உலகம்  இருக்கிறது. அதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய பொறுப்பில் இருப்பது மீடியாக்கள்தான். ஆனால் மீடியாவே அப்படியொரு இருண்ட உலகின் பிரதிநிதியாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதிர்ச்சியில் நின்றவனின் தோளில் கைபோட்டபடி , "டேவிட்... இது ஒண்ணும் மக்கள் சேவை நிறுவனம் இல்ல... கார்ப்ரேட் கம்பெனிசோட கூடாரம்... எல்லோரும் எந்த மாதிரி உணவை சாப்பிடணும்... என்ன படிப்பு படிக்கணும்... எந்த மாதிரி படங்களைப் பார்க்கணும்.. என்ன ஸ்டைல்ல டிரெஸ் பண்ணணும்... எப்ப சிரிக்கணும்... எப்ப அழணும்... எந்த அரசியல்வாதி ஆட்சிக்கு வரணும்... எந்த அரசியல்வாதியை டம்மி பீசாக்கணும்?... எந்த நீயூஸை பெரிய நேஷனல் இஷ்யூவாக்கணும்? எந்த நீயூஸை மக்கள் பார்வைக்கே வராம மறைக்கணும்னு

இப்படி எல்லாத்தையும் டிசைட் பன்ற ரூலிங் பவரா நாம இருக்கணும்... நாம மட்டும் இருக்கணும்... அப்படி இருந்தா மட்டும்தான் இந்த காம்படீட்டிவ் உலகத்தில நாம் நிற்க முடியும்..... அதைவிட்டுவிட்டு அறிவுப்பூர்வமான நிகழ்ச்சி நடத்தறேன்... மக்களுக்கு நல்லது செய்றேன்னு ஆரம்பிச்சா... இந்த கார்ப்ரேட் உலகம் நம்மல தூக்கி போட்டுட்டு போயிட்டே இருக்கும்... புரிஞ்சிக்கோ டேவிட்... இதான் பேஃக்ட்!" என்றார்.

அந்த கசப்பான உண்மையை அவனால் இப்போதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நம் சமுதாயத்தை நாமே குழி தோண்டி புதைப்பதா ?

அவன் ஒரு நொடி கூட யோசிக்காமல்,  "ஸாரி டேட்... என்னால நீங்க சொல்றது எல்லாம் ஏத்துக்க முடியல... ஐ க்விட்" என்று சுருக்கமாய் சொல்லியவன் தன் தந்தையின் கரத்தை தன் தோள் மீதிருந்து தட்டிவிட்டு அந்த அறையை விட்டு விறுவிறுவென வெளியேறினான்.

அவனின் செயலில் தாமஸ் கொஞ்சம் அரண்டு போனாலும்  நிச்சயம் நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு அவனே தன்னிடம் திரும்பி வருவான் என எண்ணி அமைதியடைந்தார். கோபத்தில் புறப்பட்ட டேவிட் சென்ற பெராஃர்ரி கார் நின்றது ஒரு பெரிய பாரில்.

அவனின் மனம் ஆற்றாமையால் வெதும்பிக் கொண்டிருந்தது. அவன் சிறுவயதிலிருந்து படித்தது உதகமண்டலத்தில் உள்ள ஒரு பெரிய கிறிஸ்துவப் பள்ளி. அதுவும் அங்கேயே தங்கி பயின்றான்.

அவனைப் பார்க்க எப்போதாவது அவன் தந்தை வருவார். அம்மாவோ சிறு வயதிலேயே விவாகரத்து கேட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதுவும் அவருக்குச் சேர வேண்டிய ஜீவனாம்சம் எல்லாம் கணக்குப் போட்டு வாங்கிய பின்.

ஆனால் அவனை மட்டும் மறந்து தந்தையிடம் விட்டுச் சென்றுவிட, அந்த கிறிஸ்துவ பள்ளியும் அங்கிருந்த சிஸ்டர்களுமே அவனுக்கு எல்லா உறவுகளுமாய் இருந்தனர். தாமஸிற்கு திருமணத்தின் மீதான பற்றுதல் அறுந்து போனது. மீண்டும் திருமணம் செய்து நஷ்டப்பட அவர் விரும்பவில்லை.

அதே நேரத்தில் பெண்களின் தொடர்பெல்லாம் இல்லாத உத்தமன் என்றும் இல்லை. அதெல்லாம் தேவைக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் ரகரகமாய் இருந்தது.

ஏனோ டேவிடிற்கு அதிலெல்லாம் பிடித்தம் இல்லை. லண்டனில் மேற்படிப்பு படிக்க சென்ற போது ப்ரீஸ்ட்டாகும் முயற்சியில் அவன் ஈடுபட்ட போது அவன் தந்தை உள்புகுந்து தடுத்துவிட்டார். அவன் ப்ரீஸ்டாகிவிட்டால் அத்தனை சொத்திற்கும் யார் வாரிசாவது ?

வேறுவழியில்லை. அவன் விரும்பினாலும் விரும்பாவிடிலும் அந்த மோசமான உலகிற்குள்தான் அவன் வாழ்க்கை.

இந்த உலகம் வஞ்சகமானது. சுயநலமானது. வியாபாரம் என்ற மாய விலங்கை மக்களின் கரங்களில் பூட்டி அவர்களே அறியாவண்ணம் அடிமைகளாக மாற்றியிருக்கிறது.

ஆனால் அவன் கற்றதெல்லாம் அந்த வியாபார உலகிற்குப் பொருந்தாதவை.  பாரபட்சமின்றி எல்லோரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும். எல்லோருக்கும் சேவை செய்ய வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் தீங்கிழைக்கக் கூடாது.

இந்த எண்ணமெல்லாம் அவனை உணர்ச்சிவசப்பட வைக்க, தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்ப்பதற்குக் கூட அவனுக்கு நண்பர்கள் கிடையாது. ரொம்பவும் குறுகிய உலகம் அவனுடையது. அதில் தோராயமாய் அவன் மட்டும்தான்!

ரொம்பவும் நல்லவன் என்ற காரணத்திற்காகவே அவனிடம் யாரும் நட்பு பாராட்டுவதில்லை. சிறு தவறையும் ஏற்க முடியாத காரணத்தால் அவனும் இயல்பாய் யாரிடமும் நட்பு கொண்டு விடுவதில்லை.

இந்த எண்ணங்களால் அவன் தனிமைப்படுத்தப்பட, இன்றளவில் அந்த தனிமையை அவனால் விட்டொழிக்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத் தனிமையை போக்கிக் கொள்ளும் மருந்தாக அவன் கண்டறிந்தது தான் போதை.

கடந்த ஏழு வருடமாய் அவன் லண்டன் மாநகரின் கலாச்சாரத்தில் ஊறிப் போயிருந்தான். குடிப்பது ஒன்றும் அங்கே அத்தனைப் பெரிய தவறில்லை. ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து அருந்துவது குடும்பத்திற்குள்ளேயே இயல்பாய் நடக்கும் ஒன்று.

ஆதலால் அந்தக் குடிப்பழக்கம் அவனின் நண்பனாய் மாறிப் போனது. அவன் தனிமையை போக்க துணைபுரிந்தது. ஆனால் இன்று அவன் தந்தை பேசியதெல்லாம் கேட்டபின் அந்தக் கோபத்தையும் வேதனையையும் ஆற்றிக் கொள்ள குடிக்கத் தொடங்கியவன் தன் அளவைக் கடந்து குடித்துவிட்டிருந்தான்.

குடிப்பது உடல் நலனிற்குக் கேடு என்று அவனுக்குத் தெரியும். ஆனால் குடி குடியைக் கெடுக்கும் என்று யாரும் அவனுக்குச் சொல்லித்தரவில்லை போலும்.

இன்னும் சில விநாடிகளில் அந்த வார்த்தையின் வலிமையை நேரடியாய் அனுபவிக்கப் போகிறான். அப்போது டேவிட் புரிந்து கொள்வான். இந்த உலகத்திலேயே ரொம்பவும் சிரமத்திற்குரிய விஷயம் எதுவென்று ? குடிபோதையில் தள்ளாடியவன் அதற்குப் பின் காரை எடுத்ததும் ஓட்ட ஆரம்பித்ததெல்லாம் அவன் மூளைக்கே அப்பாற்பட்ட செயல்.

டேவிடின் மூளை மெல்ல மெல்லச் செயலிழந்து மயக்க நிலைக்குச் செல்ல எத்தனிக்க, அவன் எப்படி அந்தக் காரை ஓட்டிச் செல்கிறான் என்பதே விந்தைதான். விரைவில் எங்கயோ அந்த கார் மோதி நிற்கப் போகிறது என்று எண்ணும் தருவாயில் நிகழ்ந்தது அந்தப் பயங்கரமான விபத்து.

"அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா" என்ற ஒரு அலறல் சத்தம்.

சடாரென்று பிரேக்கின் மீது தன் கால்களை அழுத்தி நிறுத்தினான். அதிர்ச்சியில் அவனின் மொத்த போதையும் இறங்கியது. அவனின் கார் முன்கண்ணாடியில் செங்குருதி படிந்திருந்தது. அதனைப் பார்த்த கணமே விக்கித்துப் போனான்.

என்ன நிகழ்ந்தது ? பின்னோக்கி யோசித்துப் பார்த்தான்.

அவன் காரின் வேகத்திற்கு சரியாய் ஒரு பெண் ஓடிவந்து வீழ்ந்தாள் அல்லது தான்தான் போதையில் இடித்தோம். அவள் கார் முன்கண்ணாடியில் பட்டுத் தூக்கியெறியப்பட்டாள். இதெல்லாம் ஒரு விநாடிக்கும் குறைவாய் நிகழ்ந்து முடிந்திருந்தது.

இத்தனை வேகமாய் மோதிய பிறகும் அந்தப் பெண்ணின் உடலில் உயிர் இருக்குமா ? அவசரமாய் தன் கார்கதவை திறந்து வெளியே வந்தவன் தள்ளிச்சென்று தூரமாய் விழுந்துகிடந்த அந்தப் பெண்ணின் அருகாமையில் சென்றான்.

இரத்தம் தோய்ந்த தேகத்தோடு அவள் உடைகளெல்லாம் களையப்பட்டிருந்தது. அந்த நொடியே வெலவெலத்துப் போய் நடுங்கியவன் உடனடியாய் தன் சட்டையைக் கழட்டி அந்தப் பெண்ணுக்கு அணிவித்தான்.

அப்போது அவள் மூச்சுக்காற்றின் உஷ்ணத்தை உணர்ந்தான். உயிர் இருக்கிறது. உடலில் அசைவிருக்கிறது. உதடுகள் எதையோ முனகிக் கொண்டிருந்தன.

துவண்டு கிடந்தவளை உடனடியாய் தன் கரத்தில் தூக்கிச் சென்று காரின் பின் இருக்கையில் கிடத்தினான். காரை எடுப்பதற்கு முன் தன் பார்வையை அந்த இடத்தைச் சுற்றிலும் படரவிட்டான். ஆள் அரவேமேயில்லை. யாரும் அந்த விபத்தைப் பார்த்திருக்கவில்லை.

அதிவேகமாய் தன் காரை மீண்டும் செலுத்த, இம்முறை ரொம்பவும் சீராய் சென்றது அந்த கார். அவ்வப்போது உயிர் இருக்கிறதா என்று அவன் திரும்பிப் பார்க்க, அவள் மூச்சு ஏற்ற இறக்கமாய் இருந்ததை அவனால் உணர முடிந்தது.

காரை இன்னும் அதிவேகமாய் செலுத்தியவனின் கண்முன்னே விளக்கொளியில் பிரகாசித்த ஒரு மருத்துவமனையின் பெயர் பலகைத் தென்பட்டது. காரை அந்த மருத்துவமனைக்குள் செலுத்தினான். படபடப்போடு அந்தப் பெண்ணை கரத்தில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் ஓட, அந்த காட்சியைப் பார்த்த அங்கிருந்த நர்ஸ் ஸ்டெரச்சரை வரவழைத்தார்.

அவனும் அந்தப் பெண்ணோடே நகர்ந்து செல்ல, அவளோ மயக்க நிலைக்குச் செல்லாமல் எதையோ முனகிக் கொண்டிருந்தாள். என்ன சொல்லிக் கொண்டிருக்கிறாள்? அவள் யார்? அவள் முகம்கூட தெரியாதளவுக்கு செங்குருதியில் நனைந்திருக்க, அதைப் பார்த்து மனமிறங்கி அவன் கண்களில் கண்ணீர் துளிர்த்து விழுந்தது.

கண்ணீரைத் துடைத்தபடி, "கர்த்தர் உம்மோடு துணை இருப்பாராக!" என்று அவன் சொல்லும் போதே அவள் தீவிரசிகிச்சை அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டாள். மனதைத் திடப்படுத்தி கொண்டவன் தன் கழுத்திலிருத்த சிலுவையைப் பற்றி ஒரு நொடி தியானித்தான்.

பின்னர் மெல்ல அங்கிருந்த இருக்கையில் சரிந்தான். அவனின் கரமெல்லாம் இரத்தம் தோய்ந்திருந்தது. மேற்சட்டையின்றி அவனின் வெள்ளை பனியனெல்லாம் சிவப்பாய் மாறியிருந்தது. அவன் அப்படி அமர்ந்திருப்பது அவனைக் கடந்து செல்லும் ஒவ்வொருவரின் பார்வையையும் ஈர்த்தது.

ஆனால் அவன் மனமெல்லாம் நிகழ்ந்த விபத்தைப் பற்றி மட்டுமே நினைத்திருக்க, தான் குடித்துவிட்டு வண்டி ஓட்டிய காரணத்தால்தான் இப்படி நிகழ்ந்துவிட்டது என்று தலையில் அடித்துக் கொண்டான்.

மன்னிக்க முடியாத பாவத்தை செய்துவிட்டோம் என்று தனக்குத்தானே திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டான். சிகிச்சை அறையிலிருந்து ஒரு பெண் மருத்துவர் வெளியே வர, இவன் எழுந்து நின்று கொண்டு,

"டாக்டர்... அந்த பொண்ணு" வார்த்தைகள் வராமல் அவன் தடுமாற,

அந்த பெண் மருத்துவர் அவனை ஏற இறங்க அருவருக்கத்தக்கப் பார்வை ஒன்றை உதிர்த்தார். அவன் பேசும் போது அவன் குடித்திருக்கிறான் என்பதை அவரால் உணர முடிந்திருக்கும்.

"நீங்க யாரு அந்த பொண்ணுக்கு?" இறுக்கமாய் பார்த்தபடி அந்த பெண் மருத்துவர் கேட்க, சற்று நேரம் தயங்கி நின்றவன் நடந்த எல்லாவற்றையும் தெளிவுபடுத்தினான். ஆனால் அந்த டாக்டர் அவன் சொன்ன எதையுமே நம்பாமல் சந்தேகமாய் பார்த்தபடி,

"அப்போ நீங்கதான் ஆக்சிடென்ட் பண்ணீங்களா?" என்று கேட்க, குற்றவுணர்வோடு தலையை மட்டும் அசைத்தான்.

"சத்தியமா ஆக்சிடென்ட் மட்டும்தான் பண்ணிங்களா?"

"டாக்டர்" என்றான் கம்மிய குரலில்.

"உங்க பேர் என்ன மிஸ்டர் ?"

"டேவிட் அந்தோணி"

"உடனே போலீசுக்கு சொல்லணும்... இட்ஸ் நாட் ஜஸ்ட் ஆக்சிடென்ட் கேஸ்... இட்ஸ் அ ரேப் கேஸ்" என்றதும் டேவிடின் உடலெல்லாம் நடுக்கமுற்றது.

"நோ டாக்டர்... நான் அப்படிப்பட்டவன் அல்ல... என் கார்ல அவங்க வந்து விழுந்தாங்க... நானும் ரொம்ப ஸ்பீடா வந்ததால... ஆனா வேறெந்த தப்பும் நான் செய்யல" என்று படபடப்போடு அவன் சொல்ல,

அந்த பெண் மருத்துவரும் சற்று நிறுத்தி யோசித்தவர் மீண்டும், "சரி குடிச்சிட்டு டிரைவ் பண்ணது தப்பிலையா?" என்று கேட்டதும் தலைகவிழ்ந்தவன், "இட்ஸ் மை மிஸ்டேக்" என்றான்.

"இட்ஸ் நாட் அ மிஸ்டேக்... இட்ஸ் அ க்ரைம்... அதுவும் அந்த பொண்ணுக்கு பார்வை கிடையாது மிஸ்டர். டேவிட்" என்றார்.

"என்ன சொல்றீங்க டாக்டர் ?"

"எஸ்"

இதையெல்லாம் கேட்ட பின் அவனுக்கு  தன் மீதே அதீத வெறுப்பு உண்டானது.

பார்வையில்லாத பெண்ணை, அதுவுமே அபயம் தேடி ஓடி வந்தவளை காப்பாற்றயிருக்க வேண்டிய நான் இடித்துக் கொன்றிருக்கிறேன். ஆம் கிட்டதட்ட கொலை செய்துவிட்டேன்  அந்தப் பெண் மரணித்துவிட்டால் தன்னை மன்னித்துக் கொள்ளவே முடியாது.

குற்றவுணர்வின் உச்சத்தில் அவன் கண்ணீர் தளும்ப,

"டாக்டர் ப்ளீஸ் அந்த பொண்ணை காப்பாத்திடுங்க... என்ன செலவானாலும் பரவாயில்லை...ப்ளீஸ்" தன் இரு கரங்களையும் கோர்த்தபடி நின்று கெஞ்சினான்.

அந்த மருத்துவருக்கு வியப்பாய் இருந்தது. யாரென்று தெரியாத பெண்ணுக்காகவா இவன் இப்படித் துடிக்கிறான் என்ற கேள்வியோடு அவனை பார்த்தவர்,

"சான்ஸ் ரொம்ப குறைவு... பல்ஸ் ரேட்லாம் ரொம்ப டவுனாயிடுச்சு... ஷீ இஸ் ஆல் மோஸ்ட் டெட்னுதான் சொல்லணும்" என்று இரக்கமில்லாத வார்த்தைகளை ரொம்பவும் இயல்பாய் உதிர்த்துவிட்டு அந்த மருத்துவர் அங்கிருந்து சென்றுவிட முகத்தை மூடிக் கொண்டு தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதான்.

அவன் வாழ்வில் இதுவரையில் எந்தப் பெண்ணையும் தீண்டியதில்லை. தாயின் ஸ்பரிசத்தைக் கூட அவன் உணர்ந்ததில்லை. முதல்முறையாய் ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை உணர்ந்தான். அதுவும் குற்றுயிரும் குலையுயிருமாக!

தாங்கிக் கொள்ள முடியாத வலியோடும் வேதனையோடும் நின்றிருந்தவனின் அலைப்பேசி அழைத்து அவன் கவனத்தை ஈர்த்தது. அழைப்பை ஏற்றதுமே எதிர்புறத்தில் அவன் தந்தை, "டேவிட்" என்றார்.

"ஹ்ம்ம்ம்" என்றான் சிரத்தையின்றி.

"உடனே ஹாஸ்பிடல விட்டு கிளம்பு"

"டேட்... உங்களுக்கு எப்படி ?"

"சொன்னதை செய்" அதிகாரத்தோடு அவர் உரைக்க

அவன் தயக்கத்தோடு, "டேட்.. அந்த பொண்ணு" என்று கேட்டான்.

"சாகப் போறவ பக்கத்தில நீ இருந்தா உயிர் பிழைச்சிட போறாளா? ஜஸ்ட் லீவ்" என்றார் அழுத்தமாய்!

இந்த விஷயங்களெல்லாம் அவர் எப்படி தெரிந்து கொண்டிருக்கிறார் என்பது புரியாதவன், பின் அவர்தான் லீடிங் சேனலின் எம்.டியாயிற்றே என்று தனக்குள்ளேயே பதில் தேடிக் கொண்டான்.

சற்று நேர யோசனைக்குப் பின், "நோ டேட்... நான் அந்த பொண்ண ஆக்ஸிடென்ட் பண்ணியிருக்கேன்... தப்பு என்னுடையது... என்னால முடிஞ்சா அந்த பொண்ணு உயிரைக் காப்பாதணும்... இல்லன்னா நான் போலீஸ்ல சரண்டராகணும்" தீர்க்கமாய் உரைத்தான்.

"ஆக்ஸிடென்ட் கேஸ் ஒகே... வாட் அபௌட் தி ரேப் கேஸ்?"

"டே...ட்ட்ட்" அதிர்ச்சியில் திக்கித் திணறியது அவனுக்கு.

"கண்டிப்பா அதுவும் உன் மேலதான் விழும்... நீ வேற குடிச்சிருக்க... அது ஒண்ணு போதும்"

"நோ... நான் எந்த தப்பு செய்யல... அதெப்படி?" அவமானத்தில் புழுங்கியது அவன் மனம்.

"புரிஞ்சுக்கோ டேவிட்... நீ சாதாரண ஆளில்ல... ஜே நெட்வொர்க்கோட அடுத்த எம்.டி... நீ விரும்பினாலும் விரும்பலன்னாலும் இந்த உலகம் உன்னை அப்படித்தான் பார்க்கும்... சோ நம்ம நெட்வொர்க்கு காம்பட்டீட்டரா இருக்கிற எல்லா சேனல்காரனும் உனக்கெதிரா நிற்பான்

“நீ தப்பே செய்யலன்னாலும் நீதான் தப்பு செஞ்சன்னு திரும்ப திரும்ப சொல்லி மக்கள் மனசுலபதிய வைச்சிருவான்... நம்ம பேஃமிலி இமேஜை மொத்தமா உடைச்சிடுவாங்க... நீ தப்பு செய்யலன்னு நிரூபிச்சா கூட அது உன் பவராலதான் நடந்ததுன்னு சொல்லுவாங்க”

“ரொம்ப முக்கியமான விஷயம்... ஷீ இஸ் பிளைன்ட்... ஸோ இது பெரிய நேஷ்னல் இஷ்யூவா மாறிடும்... உன் ஃலைபே மொத்தமா ஸ்பாயிலாயிடும்... கொலைப் பழி கூட பரவாயில்லை... பட்" என்று மேலே பேசாமல் அவர் நிறுத்திய போது

 டேவிட் கதிகலங்கிப் போயிருந்தான். அவன் பதிலின்றி யோசித்திருக்க அவர் மேலும், "டேவிட்... நீ நல்லவனா இருக்கணும்னு நினைச்சா... இந்த உலகம் உன்னை சிலுவையில அறைஞ்சிட்டுதான் மறுவேலை பார்க்கும்... ஸோ நீ உடனே அங்கிருந்து கிளம்பு... நான் இந்த பிரச்சனையை டீல் பண்ணிக்கிறேன்"  என்று சொல்லி முடித்ததவர் அவன் பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்தார்.

அவன் தந்தை சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. அவன் குடிக்காமல் இருந்தாலாவது குற்றமற்றவற்றவன் என நிரூபிக்க முயலலாம். இப்போது அதற்கும் வழியில்லையே!

கொலைப் பழியைக் தாங்கிக் கொள்ளலாம். ஒரு பெண்ணிடம் தவறாய் நடந்து கொண்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை சத்தியமாய் ஏற்க முடியாது. அதற்கு தன் உயிரையே துறந்துவிடலாம். நல்லவனாய் நின்று இப்படியொரு பழியை சுமப்பதைவிடக் கெட்டவனாக இருப்பது மேல். இந்தச் சிந்தனையில் இருந்தவனின் முன்னிலையில் வந்து நின்ற நர்ஸ்,

அவன் சட்டையைக் கொடுக்க, அடுத்த கணமே அதனைப் பெற்றுக் கொண்டு அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினான். அந்தச் சம்பவம் டேவிடிற்கு உலகின் நிதர்சனத்தை ஆணித்தனமாய் புரிய வைத்துவிட்டது.

நம்மை இந்த உலகம் நல்லவனாய் வாழவிடாது. அப்படி நல்லவனாய் வாழ்வது இந்த உலகிலேயே ரொம்பவும் சிரமமான விஷயமும் கூட...

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content