You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 30

Quote

30

இன்ப அதிர்ச்சி

உயிருக்கு உயிராய் நேசிப்பவர்களைப் பிரிந்திருப்பது உணர்வுப்பூர்வமாக எத்தனை வலி என்பதை அதை அனுபவிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்.

எல்லோருமே ஏதோ ஒரு சூழ்நிலையில் அத்தகைய இழப்பையும் வலியையும் கடந்து வரவே நேரிடும். அது மரணமாகவோ பிரிவாகவோ ஏதோ ஒரு வகையில் நிகழவே செய்கிறது. ஆனால் ரொம்ப சொற்பமான சிலருக்கு மட்டுமே தான் பிரிந்த உறவை மீண்டும் அதே போல் பெற இயலும். சையத்திற்கு அத்தகைய அதிசயம் நிகழ்ந்தது.

அவன் வாழ்வும் வீடும் இப்போதுதான் நிறைவு பெற்ற உணர்வு. அவன் பெற்ற வெற்றிகள் தர முடியாத நிறைவையும் சந்தோஷத்தையும் அவன் அம்மாவோடும் தங்கையோடும் பூரணமாய் இருந்த அந்த ஐந்து நாட்களில் அனுபவித்திருந்தான்.

இறைவனின் அருளோ? அல்லது விதியின் செயலோ? எதுவாயினும் அத்தகைய இன்பத்தை அவன் பெற துணை புரிந்தவள் அவளே!

அவளைப் பார்க்கவும் பேசவும் உள்ளுக்குள் தவிப்பும் ஏக்கமும் இருந்தாலும் அவளைச் சென்று பார்க்க ஏதாவதொரு அழுத்தமான காரணம் வேண்டுமே?!

ஆழமான சிந்தனையில் மூழ்கியிருந்தவன் தன் கைப்பேசியில் அவளின் முகத்தை ரசித்தபடி வீட்டின் வாசல்புறம் இருந்த ஊஞ்சலில் ஆடியபடி கனவுலகில் மிதந்திருந்தான் .

தன்னை மறந்த நிலையில் அவளின் காந்தமான விழிகளுக்குள் உள்ளார்ந்து சென்றிருக்க, சட்டென்று அவன் கைப்பேசியை தங்கை அப்ஃசானா பறித்துக் கொண்டாள்.

அவன் அதிர்ச்சியடைந்த நேரம், அவள் அந்தக் கைப்பேசியை எடுத்துக் கொண்டு விலகி ஓடியவள், "என்ன ண்ணா இத?" என்று புருவத்தை உயர்த்திப் பரிகசித்து கேட்க,

அவன், "அப்சானா போஃனை கொடுத்திரு" என்று அதட்டினான்.

"உம்ஹும் மாட்டேன்... நான் இந்த போட்டோவை அம்மாகிட்ட காட்ட போறேன்"  என்று ஒழுங்கெடுத்துவிட்டு அவள் ஓட,

"ஏ வேணா வேணா ப்ளீஸ்" என்று அவன் பதட்டமடைந்து கெஞ்ச,

"முடியாது... என்கிட்ட நீ பொய் சொல்லிட்ட இல்ல" என்று முகத்தைச் சுருக்கினாள்.

"என்ன பொய் சொன்னேன்?" இருவரும் வீட்டைச் சுற்றி ஓடிக்கொண்டபடியே பேச,

"பெட் ரூம்ல இருந்த ஜென்னி அக்கா போட்டோவை பத்தி கேட்டதுக்கு... நீ என்ன சொன்ன? ஏதோ புது படம்... ஸ்க்ரிப்டுன்னு கதை சொன்ன இல்ல" என்று கேட்டவளிடம்,

"கதை இல்ல... அதான் உண்மை"

"அப்போ இந்த போட்டோ"

"அது... சும்மா பார்த்துகிட்டிருந்தேன்"

"சும்மான்னு சொல்லிட்டு ஒரு மணி நேரம் பார்த்துட்டிருக்க"

"உனக்கு இதெல்லாம் ரொம்ப முக்கியமா... ஃபோனை கொடு முதல்ல" என்றபடி அவளை அவன் பிடிக்க முயல அவளோ அவன் ஃபோன் கேலரியை திறந்துவிட்டு,

"உன் ஃபோன் முழுக்க ஜென்னி அக்காவோட போட்டோவா இருக்கு" என்றாள்.

சாஜிம்மா இவர்களின் சத்தம் கேட்டு, "என்ன நடக்குது இங்க?" என்று இருவரையும் ஒரு சேர அதட்டி கொண்டு அங்கு வந்து நிற்க அஃப்சானா உடனே தன் அம்மாவிடம் ஓடிச்சென்றாள்.

"அம்மா...  அண்ணா ஃபோன்ல இருக்க  போஃட்டோ எல்லாம் பாரேன்" என்க,

"போட்டோவா...?" என்று  கேட்கும்  போதே, சையத் அவசரமாய் தன் ஃபோனை பறித்துக் கொண்டான்.

"அதெல்லாம் ... ஒண்ணும் இல்லம்மா" என்று அவன் போஃனை மறைத்துக் கொள்ள அஃப்சானா விடாமல், "ண்ணா கொடுங்க" என்று அவள் வாங்க முற்பட,

"முடிஞ்சா வாங்கிக்கோ" என்று பின்னோடு நகர்ந்தவன் அவளிடமிருந்து தப்பிக் கொள்ள திரும்பி ஓடி பின்னோடு வந்த ஜெனித்தாவின் நெற்றியில் மோதி நின்றான். அவள் நெற்றியை வலியால் தேய்த்துக் கொண்டிருக்க, அவனோ தன் வலியை மறந்து அவளை அதிசயித்தபடி பார்த்தான்.

அவன் பார்வை அவளிடமே நிலைப்பெற்று நின்றுவிட அவளோ வலி தாங்காமல், "என்ன சையத் நீங்க? இப்படிதான் வீட்டுக்கு வர்றவங்கள வெல்கம் பண்ணுவீங்களா?"  என்று அவள் கேட்டதும் அவன் நிலைமை உணர்ந்து,

"ஸாரி ஸாரி ஜென்னி... வாங்க... ப்ளீஸ் உட்காருங்க" என்று சொல்லும் போது அப்ஃசானாவும் ஆவலோடும், "அக்கா" என்று அவளை கட்டிக் கொண்டாள்.

"வா ஜென்னிம்மா... பார்க்க மாட்டோமான்னு நானே நினைச்சுகிட்டே இருந்தேன்" என்று சாஜிம்மா அவளை ஆவலாய் வரவேற்க,

அப்ஃசானா உடனே, "ஆமாம் ஆமாம்... இங்க நாங்களும் நினைச்சுகிட்டே இருந்தோம்... என்ன ண்ணா?" என்றவள் சையத்தை பார்க்க, அவன் தன் ஒற்றை விரலை காட்டி மிரட்டினான்.

ஜென்னி புரியாமல் சையத்தை என்ன என்ற கேள்வியோடு பார்க்க,

"அவ அப்படிதான்... லூசு மாதிரி பேசிட்டிருப்பா... நீங்க உட்காருங்க" என்றாள்.

"யாரு... நான் லூசா?" என்று அப்ஃசானா தமையனை முறைக்க,

"என்ன சும்மா உனக்கு அண்ணன் கூட சண்டை... வா இங்கே" என்று சாஜி மகளை மிரட்டினார்.

ஜென்னி நடப்பவற்றை எல்லாம் பார்த்திருக்க, "நீங்க உட்காருங்க ஜென்னி" என்று மீண்டும் அவன் சொல்ல அவளும் அமர்ந்தாள்.

சாஜிம்மா புன்னகையோடு, "நீங்க பேசிட்டிருங்க... நான் சாப்பிட ஏதாச்சும் எடுத்துட்டு வர்றேன்" என்க,

"வேண்டாம் சாஜிம்மா... நான் இப்பதான் சாப்பிட்டு வந்தேன்" என்று மறுத்தாள்.

"அதெல்லாம் முடியாது... சாப்பிட்டுதான் போகணும்" என்று சாஜிம்மா சொல்ல அஃப்சானாவும், "ஆமாம் ஆமாம் நீங்க சாப்பிட்டு கொஞ்ச நேரம் எங்க கூட இருந்துட்டுதான் போகணும்" என்றாள்.

"சரி உனக்காக... இருந்துட்டா போச்சு" என்று ஜென்னி சம்மதிக்கவும், "சூப்பர்" என்று அவள் குதூகலித்தாள்.

சாஜி உள்ளே சென்ற அதே சமயம் அஃப்சானா, "நானும் இதோ வந்திடுறேன் கா" என்றவள் அவளை இமைக்காமல் பார்த்திருந்த  தமையனின் காதோரம் ,

"ண்ணா... கொஞ்சம் உன் வாட்டர் பாஃல்ஸை க்ளோஸ் பண்ணு" என்றதும் அவன் திரும்பி முறைக்கவும், அவள் உடனடியாக அவனிடம் சிக்காமல் தப்பிக் கொண்டாள்.

சையத்தும் அவள் அமர்ந்திருந்த சோபாவின் அருகிலிருந்து இருக்கையில் அமர்ந்தபடி, "சொல்லாம கொள்ளாம வந்து சர்ப்ரைஸ் கொடுத்துட்டீங்க" என்க,

"இல்லயே... நான் கால் பண்ணேனே... உங்க செகரட்ரி கூட நீங்க வீட்டில இருப்பீங்கன்னு சொன்னாங்க" என்றாள்.

"அப்படியா... மது என்கிட்ட சொல்லலயே... அவ வேற இன்னைக்கு லீவு... ப்ச்... அப்படி எதையும் மறக்க மாட்டா... ஏதோ டென்ஷன்ல சொல்லாம விட்டிருப்பாளா இருக்கும்" என்றவனை ஆழ்ந்து பார்த்தவள்,

"நீங்க உங்க கூட இருக்குற யாரையும் விட்டுகொடுக்காம பேசுறீங்க... சையத்" என்றாள்.

"எல்லாமே வாழ்க்கை நமக்கு கத்துத் தர்றதுதான் ஜென்னி... நான் என் குடும்பத்தை விட்டு தனியா இருந்த போது மது எனக்கு ஒரு துணையா கூட இருந்திருக்கா... அவளையும் என் ஃபேமிலியாதான் நான் நினைக்கிறேன்"

அவன் சொன்னதை வியப்போடு பார்த்து புருவத்தை உயர்த்திவள், "கிரேட்" என்று புகழ்ந்த அதே நேரம், "ஆனா எல்லோரையும் அப்படி கண்ணை மூடிட்டு நம்பிடாதீங்க" என்றாள் கொஞ்சம் இறுக்கத்தோடு!

அவன் குழப்பமாக, "ஏன் அப்படி சொல்றீங்க?" என்று கேட்க,

"ஹ்ம்ம்... சும்மா பொதுவாதான் சொன்னேன்" என்றாள்.

அவள் ராகவை சொல்கிறாளோ என்று சிந்திக்கும் போது அப்ஃசானா  குடிப்பதற்கு காபி கோப்பைகளைத் தட்டில் எடுத்துக் கொண்டு வந்தாள். அதனைப் பருகி கொண்டிருக்கும் போதே அஃப்சானா தன் தமையனிடம் சமிஞ்சையால் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க,

அதை ஜென்னி கவனித்துவிட்டு, "என்ன அஃப்சானா? என்கிட்ட சொல்ல மாட்டியா?" என்று வினவவும்,

"சொல்லலாமே" என்று அஃப்சானா சொல்ல, சையத் தன் தங்கையைப் பார்த்து வேண்டாம் என தலையசைத்தான்.

அஃப்சானா தன் தமையனின் தவிப்பை கண்டுகொள்ளாமல், "நீங்க வாங்க க்கா... உங்களுக்கு நான் ஒண்ணு காண்பிக்கிறேன்" என்று அவள் கரத்தைப் பற்றி எழுப்பினாள்.

"என்ன காண்பிக்கப் போற?" என்று ஜென்னி புரியாமல் அஃப்சானா  சென்ற திசையில் நடந்தாள். அவளிடம் அந்த ஓவியத்தைக் காட்டத்தான் அழைத்துப் போகிறாள் என்பதை யூகித்த சையத்திற்கு பதட்டமானது.

அந்த ஓவியம் வேறு அவன் படுக்கையறையில் இருக்கிறது. அதை அவள் பார்த்தால் நிச்சயம் தவறாக எண்ணிக் கொள்வாள் என்று யோசித்தவனுக்கு அவளை எப்படித் தடுப்பது என்றே புரியவில்லை.

அதற்குள் அவனின் அறைக்குள் அவர்கள் நுழைந்துவிட, அவனும் பின்னோடு நுழைந்தான். ஜென்னி அப்படியே ஆச்சர்யமாய் பார்த்து நின்றிருந்தாள். அவள் வியப்பிற்குக் காரணம் அவனின் புத்தக அலமாரி.

சையத் பெருமூச்சுவிட்டு அப்ஃசானாவிடம் கைகூப்பிக் கெஞ்சினான்.

'போய் தொலை' என்று அவள் முனகி முகத்தைச் சுளித்தாள்.

ஜென்னி அதற்குள் அவன் புறம் திரும்பி, "இதெல்லாமே நீங்க படிக்கிற புக்ஸா?" என்று அதிசயத்து அவள் கேட்க,

"ஆமாம்... ஏன் அவ்வளவு ஆச்சர்யம்? என்னை பார்த்தா புக்ஸ் படிக்கிறவன் மாதிரி தெரியலயா?"

"அப்படி இல்ல... நிறைய வேற ரிலீஜிய்ஸ் புக்ஸும் இருக்கே... அதான்"

"என்னைப் பொறுத்த வரைக்கும்... புத்தகம், கலை, காதல், அன்பு... இதையெல்லாம் சாதி சமயங்கிற எல்லைக் கோட்டுக்குள்ள நிறுத்திட முடியாது... அதுவுமில்லாம சாதி நல்லொழுக்கத்தை போதிக்குதே ஒழிய பிரிவினையை போதிக்கிறதில்ல " என்று அவன் உரைக்க,

அந்த வார்த்தைகள் ஜென்னியின் மனதிற்குள் சையத்தினை ரொம்பவும் மரியாதைக்கும் மதிப்புக்குரியவனாய் உயர்த்தியது. அவள் பேச்சற்று நின்றிருக்க, அவன் கேள்விகுறியோடு, "நான் சொன்னது கரெக்ட்தானே ஜென்னி?" என்று கேட்க,

அவள் ஆமோதித்து, "ஹன்டிரன்ட் பர்ஸன்ட் கரெக்ட்" என்றாள்.

அதற்குள் கீழே சாஜி குரல் கொடுக்க சையத் உடனே, "அம்மா கூப்பிடுறாங்க... போலாமா?" என்று கேட்டதும் அவள் "ஹ்ம்ம்" என்று முன்னே செல்ல,

அண்ணனின் பேச்சு வல்லமையைப் பார்த்து வியந்திருந்த அஃப்சானாவோ, "நல்லா பேசிறே ண்ணா... இதான் சாக்குன்னு காதலுக்கு சாதியில்லைன்னு சொல்லி செமயா ரூட் போட்ட... ஆனா  புரிஞ்சுதான்னுதான் தெரியல" என்க, அவன் கோபமாய் "உன்னை" என்று அவள் காதை திருகப் போனான்.

அவள் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிவிட, சையத் பின்புறம் இருந்த அவள் ஓவியத்தைப் பார்த்து, "நல்ல வேளை" என்று நிம்மதி பெருமூச்சுவிட்டு அறைக்கதவை மூடினான்.

ஜென்னி கீழே சென்ற மாத்திரத்தில் சாஜி அவளுக்காக  வகை வகையான உணவுகளை எடுத்துவைத்துச்  சாப்பிட்டே ஆக வேண்டும் என அன்புக்கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்.

ஜென்னியும் அவர் மனம் வருத்தப்படாமல் இருக்க, உண்ட போதும் ஒரு நிலைக்கு மேல் முடியாமல் அஃப்சனாவை தவிப்போடு பார்க்க,

"அக்கா பாவம் விட்டுங்கம்மா" என்று தன் அம்மாவிடம் பரிந்துரைத்தாள்.

"அதெல்லாம் முடியாது... சாப்பிட்டுதான் ஆகணும்" என்று சாஜி கட்டாயப்படுத்த, சையத் நமட்டுச் சிரிப்போடு "ஆமாம் சாப்பிட்டுத்தான் ஆகணும்... நான் எல்லாம் எங்க அம்மா தோசை சுட்டுக் கொடுத்தா கணக்கு வழக்கமில்லாம சாப்பிடுவேன்... வேணா கேட்டுப் பாருங்க" என்றான்.

"இதெல்லாம் ஒரு பெருமையா?" என்று ஜென்னி முறைத்தபடி கேட்க,

"பின்ன... சாப்பிடறதுக்காகதானே நாமெல்லாம் உயிர் வாழ்றோம்"  என்றான்.

"என்ன அஃப்சானா உங்க அண்ணன் இப்படி பேசிறாரு" என்று கேட்டு அவளைப் பார்க்க,

"உங்களுக்கு தெரியாதுக்கா... முன்ன எல்லாம் எங்க அண்ணனுக்கு சாப்பிடுறது சினிமா பார்க்கிறது... இது இரண்டும்தான் வேலை... ஒரு கையில ரிமோட்... இன்னொரு கையில தட்டு... அதான் சையத் அண்ணா" என்க,

சையத் கோபமாகி, "அம்மா பாருங்கம்மா என்னைப் பத்தி எப்படி சொல்றா?" என்று கேட்க, சாஜி அந்த உண்மையை மறுக்க முடியால் சிரித்துவிட்டார்.

ஜென்னி புன்முறுவலோடு, "சும்மா இரு அஃப்சானா... இன்னைக்கு உங்க அண்ணா எவ்வளவு பெரிய டைரக்டர்... நீ பாட்டுக்கு அவரை கலாய்ச்சிட்டிருக்க" என்று சொல்ல,

"நீங்களுமா ஜென்னி?!" என்று அவன் பரிதாபமாய் கேட்க,

"நான் மட்டும் பாவம் இல்லையா டைரக்டர் சார்... அம்மாவை இதோடு நிறுத்த சொல்லுங்க... இல்லாட்டி நான் உங்க படத்தில ஹீரோயினா கமிட்டாக மாட்டேன்... சொல்லிட்டேன்" என்றதும் சையத் அந்த வார்த்தையைக் கேட்டு வியப்பின் விளம்பில் நின்றான்.

"நிஜமாவா க்கா ?" என்று அஃப்சானா சந்தேகமாய் கேட்க,

"நிஜம்தான்... ஆனா உங்க அண்ணன் எதுவும் சொல்ல மாட்டேங்குறாரே" என்க,

சையத் அவசரமாய் நிமிர்ந்து "அம்மா... போதும்... ஜென்னியை விட்ருங்க... வேண்ணா மிச்சம் மீதி எல்லாத்தையும் நானே சாப்பிடுறேன்" என்றான்.

இதைக் கேட்ட அஃப்சானா சிரித்தபடி, "அவ்வளவு பெரிய மனசா ண்ணா உனக்கு" என்று  கேட்க, எல்லோருமே வாய்விட்டுச் சிரித்தனர். அந்த சில நிமிடங்களில் ஜென்னி அவர்களுள் ஒருவராகவே மாறிப் போனாள்.

ஜென்னி படத்தில் கதாநாயகியாய் நடிக்க சம்மதித்ததை எண்ணி சையத் இன்ப அதிர்ச்சியில் பூரித்துப் போயிருந்தான். எல்லோருமே  சிரித்துப் பேசி ஆனந்தமடைந்திருக்க, அவர்கள் எல்லோருக்கும் அந்த தருணம் ரொம்பவும் அழகாய் மாறியிருந்தது. அதனைத் தடை செய்யும் விதமாய் ஜென்னியின் கைப்பேசி அழைத்தது.

பேசிக் கொண்டிருக்கும் போதே, "நான் உடனே வந்துடுறேன் ரூப்ஸ்" என்று அழைப்பைத் துண்டித்தாள்.

பின்னர் தயக்கத்தோடு, "நான் கிளம்பணும் சையத்" என்றதும் எல்லோரின் முகமும் சுருங்கிப் போனது.

சையத்தின் மனம் வருத்தம் கொண்டாலும் அவள் நிலையைப் புரிந்து, "ஒகே ஜென்னி... போயிட்டு வாங்க... ஆனா ஸ்க்ரிப்டை மறக்காம படிச்சிட்டு கால் பண்ணுங்க" என்றவன் ஒரூ ஃபைலை அவள் கரத்தில் கொடுத்தான்.

"கண்டிப்பா சையத்" என்று சொன்னவள் சாஜிம்மா, அஃப்சானாவிடமும் விடைப் பெற்றுக் கொண்டாள்.

அவள் புறப்படுவதற்கு முன் சையத்திடம், "இந்த விஷயத்தை மிஸ்டர்.ராகவ் கிட்ட நீங்களே சொல்லிடுறீங்களா?" என்று கேட்க,

அவனும் ஆமோதித்துவிட்டு, "இந்த விஷயத்தைக் கேட்டா ராகவ் ரொம்ப சந்தோஷப்படுவாரு" என்றான்.

ஜென்னியும் சூட்சமமான புன்னகையோடு, "ஆமாம் கண்டிப்பா சந்தோஷப்படுவாரு.." என்று சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றாள். அவள் மனதில் உள்ள எண்ணத்தை சையத்தால் கணிக்க முடியாமல் போனாலும், ராகவ் அதை உணர்ந்து கொள்ளக் கூடும்.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content