You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 50

Quote

50

மனோதிடம்

          மும்பையில் உள்ள அதிநவீன மருத்துவமனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று வீ.ஜே மருத்துவமனை. அந்த நகரத்தின் ரொம்பவும் முக்கியமான இடத்தில் அமைந்திருந்த அந்த மருத்துவமனையின் கட்டிடங்களை  பார்வையிடவே ஒரு நாள் கடந்துவிடும்.

அந்தளவுக்கு அந்த மருத்துவமனைக் கட்டிடங்கள் பரந்து விரிந்து கிடக்க, அங்கே எல்லாவகையான நோய்களுக்கும் தனித்தனியாக சிகிச்சைகள் அளிக்கப்பட வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதோடு அங்கே அதிநவீன மருத்துவ உபகரணங்களும் கூட அமைந்திருந்தன என்பது மற்றொரு சிறப்புக்குரிய விஷயம்தான்.

அதே நேரம் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடின்றி எல்லோருக்குமே சிறப்பான முறையில் மருத்துவ வசதிகள் கொடுக்கப்பட்டன. ஜெனித்தா டிரஸ்ட்  வசதியற்றவர்களுக்கான மருத்துவ செலவுகளை கவனித்துக் கொண்ட நிலையில், அத்தகைய பேறு பெற்ற மருத்துவமனையின் தலைமை நிர்வாகியாக இருப்பவர்தான் விக்டரின் மனைவி ஜெனிபஃர்.

அவரின் பெயருக்கருகில் வரிசையாய் நீளும் மருத்துவபட்டத்தைப் பார்க்கும் போதே எல்லோரும் வியப்படையக் கூடும். ஆனால் அவரோ அத்தனை எளிமையாகவும் இயல்பாகவும் பழகக்கூடியவர்.

சாக்ஷியை முழுமையாய் ஜென்னியாக மாற்றியதில் அவருக்கு அதிக பங்கு இருந்தது. அவளின் தைரியத்தையும் புத்திகூர்மையையும் மெருகேற்றி அவளைத் தனித்துவமாய் இயங்க வைத்த பெருமையும் அவரையே சாரும்.

அத்தகைய ஜெனிபஃரின் அறையில்தான் இப்போது ஜெனித்தா நின்று கொண்டிருந்தாள்.

அந்த மருத்துவ கட்டிடத்தில் நடுநாயகமாய் அமைந்திருந்த அறை அது.

பார்வைக்குள் அடங்காத அந்த விசாலமான அறையிலிருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக மக்களின் நடமாட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ஜெனித்தாவின் முகத்தில் சொல்லவொண்ணாத வேதனை.

அவள் பார்வையில் தெரிந்த தெளிவற்ற நிலையைக் கவனித்த ஜெனிபஃர் தன்  இருக்கையை அவள் புறம் திருப்பியபடி,

"ஜென்னி" என்றழைக்க,

"ஹ்ம்ம் சொல்லுங்கம்மா" வெறுமையான பார்வையோடு அவரை நோக்கினாள்.

"மலேசியாவில கான்பரஃன்ஸ் எல்லாம் நல்லா போச்சுதானே" என்றவர் கேட்டு அவள் எண்ணத்தை ஆழம் பார்க்க,

"அதெல்லாம் ரொம்ப நல்லா போச்சு... இட்ஸ் அ கிரேட் எக்ஸ்ப்பீரியன்ஸ்" என்க, அவள் முகத்தில் அந்த வார்த்தைகுண்டான சந்தோஷம் பிரதிபலிக்கவில்லை.

"அப்புறம் என்ன?  ஏன் அப்செட்டா இருக்க... வாட்ஸ் பாதரிங் யூ?" என்றவர் அவளை சந்தேகமாய் பார்க்க, அவள் தவிப்போடு மௌனமாய் நின்றிருந்தாள்.

"வாட் ஹேப்பன் ஜென்னி ?" என்றவர் அழுத்திக் கேட்கவும்,

அவள் அவரை நோக்கி அடியெடுத்து வைத்து,  "அது..." என்றவள் தயங்கி நிற்க,

ஜெனிபஃர் அவளை ஏறிட்டு, "எதுவாயிருந்தாலும் பரவாயில்லை சொல்லு" என்றார்.

அவள் சற்று நிதானித்து, "ஸாரி மா... நீங்க எனக்கு கொடுத்த அங்கீகாரத்தை என் சுயநலத்துக்காக நான் பயன்படுத்திக்கிட்டேன்" அவள் முகத்தை கலக்கம் நிறைத்திருக்க, "என்ன சொல்ல வர்ற... புரியல" என்று கேட்டார்.

"நான் ஜெனித்தாங்கிற பெயரை என்னுடைய சுயநலத்துக்காக பயன்படுத்திக்கிட்டேன்னு சொல்ல வர்றேன்" என்று புரியும்படி அவள் தெளிவுற உரைத்தாள்.

அவர் சிரித்துவிட்டு, "அது உன்னோட அடையாளம்... அதை நீ எப்படி வேணா பயன்படுத்தலாம்" என்றார்.

"அது என்னோட அடையாளமா மட்டும் இருந்தா பரவாயில்லை... ஆனால் அதுல உங்களோட... விக்டர ப்பாவோட கௌரவமும் இருக்கு... நான் செய்யப் போற காரியத்துனால அதுக்கு பங்கம் வரலாம்... உங்க அந்தஸ்து பாதிக்கலாம்... ப்ச் இதைப் பத்தி எல்லாம் யோசிக்காம நான்" என்று மேலே பேச முடியாமல் ஜென்னி தலையைப் பிடித்துக் கொண்டாள்.

அப்போது ஜெனிஃபர் தன் இருக்கையிலிருந்து எழுந்து அவளருகில் வந்து, "நீ இவ்வளவு டென்ஷனாக கூடாது... முதல்ல உட்கார்ந்து... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு" என்று சொல்லி அவளை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தார்.

ஆனால் அவளோ மன உளைச்சலோடே காணப்பட ஜெனிபஃர் மேஜையின் மீதிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துத் தந்து, அவளைக் குடிக்க சொல்லிப் பணிக்க அவள் அதனை முழுவதுமாய் அருந்தினாள்.

அதனால் எல்லாம் அவள் மனதில் கனன்று  கொண்டிருக்கும் நெருப்பு அணைந்துவிடாது. அவள் ஜெனிபஃரின் முன்னிலையில் அமைதியடைய முயற்சிக்க, அது அவளுக்கு சாத்தியமற்ற ஒன்றாய் இருந்தது.

ஜெனிபஃர் அவள் அருகாமையில் இருந்த இருக்கையில் அமர்ந்தபடி, "நீ செய்ய போறேன்னு சொன்னியே... அந்த விஷயம் உன் மனசுக்கு சரின்னு படுதா?" என்று அவளை நேர்கொண்டு பார்த்து கேட்க,

"சரின்னு சொல்ல மாட்டேன்... அதே நேரத்துல அது தப்பான காரியமும் இல்ல" என்றாள்.

"உனக்கு தப்பில்லைன்னு பட்டா தைரியமா செய்... அதனால வர்ற எதுவா இருந்தாலும் நாம பேஃஸ் பண்ணிக்கலாம்" என்று அவர் திடமாய் உரைக்க,

"ஆனா ம்மா" என்றவள் தயங்கி நிறுத்தினாள்.

ஜெனிபஃருக்கு அவளின் தவிப்பும் பயமும் நன்றாகவே புரிய அவள் தோளைப் பற்றியவர், "அங்கே பாரு" என்று எதையோ சுட்டி காண்பிக்க, அவர் காட்டிய திசையில் ஜென்னியும் பார்த்தாள்.

சிலுவையில் அறையப்பட்டு குருதி வடிந்த நிலையில் ஏசுவின் சித்திரம் இருந்தது. அந்த நொடி அவள் குழப்பமாய் ஜெனிபஃரை நோக்க,

"நல்லது செய்யணும்னு இறங்கினா... இறைவனாகவே இருந்தாலும் சோதனையையும் அவமானத்தையும் வலியையும் கடந்து வர வேண்டி வரும்" என்றவர் விளக்கமளிக்க  அவள் அதனை ஏற்காமல்,

"எந்த வலியும் வேதனையும் எனக்கு மட்டும் நடந்தா பரவாயில்லையே" என்றவள் ஆதங்கப்பட்டான்.

அவர் புன்முறுவலோடு, "சந்தோஷத்தை பகிர்ந்துக்கிறது மட்டும் இல்ல உறவுங்குறது... துக்கத்தையும் பகிர்ந்துக்கிறதும்தான்... நாங்க உண்மையிலேயே உன்னை எங்க மகளாதான் பார்க்கிறோம் ஜென்னி" என்று அவள் தலையை தடவிக் கொடுக்க ஜென்னி அவர் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.

அவர் அவளை ஆதரவாய் அணைத்து, "நாங்க இருக்கோம்மா உன் கூட... நீ எதுவாயியருந்தாலும் தைரியமா பண்ணு" என்க, அவள் நெகிழ்ந்து போனாள்.

ஜென்னி தெளிவுப்பெற்று நிமிர, ஜெனிபஃர் அவள் கரத்தை அழுத்தமாய் பற்றிக் கொண்டு,

"நான் எப்பவும் சொல்றதுதான்... நீ என்ன செய்யணும்னு நினைக்கிறியோ அதை எவ்வளவு எதிர்ப்பும் பிரச்சனையும் வந்தாலும் செஞ்சு முடி... நெவர் கிவ் அப் அட் எனி காஸ்" என்று தீர்க்கமாய் உரைக்க, அவள் மனதில் நின்றிருந்த பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வந்தன.

'மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்

தனமும் இன்பமும் வேண்டும்

தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்

காரியத்தில் உறுதி வேண்டும்

பெண் விடுதலை வேண்டும்

பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்

வானகமிங்கு தென்பட வேண்டும்

உண்மை நின்றிட வேண்டும்'

அந்த நொடி ஜென்னியின் மனோதிடம் பன்மடங்கு பெருகியிருந்தது. ஆனால் இதற்குப் பிறகுதான் அவள் உறுதியைத் தகர்க்கும் சம்பவங்களை அவள் எதிர்கொள்ளப் போகிறாள் என்பது இப்போதைக்கு அவள் அறியாத ஓன்று.

ஜெனிபஃரிடம் பேசி முடித்த பின் ஜென்னி அந்த அறையை விட்டு வெளியேறி கீழ்தளத்திற்கு வரவும் அங்கே மனநலமருத்துவர் ஷெரிஃபின் அறை இருந்தது.

அவள் மனநலம் பாதிப்பட்டிருந்த போது அவளுக்குச் சிகிச்சை அளித்துக் குணப்படுத்தியது அவர்தான். அங்கே வந்து நின்றவள் செவிலியரை ஏதோ விவரம் கேட்க அந்த பெண்பவ்வியமாக அவள்  கேள்விக்கெல்லாம் பதிலுரைத்தாள்.

அதன் பிறகாய் அவள் ஷெரிஃபின் அறைக்குள் நுழைய, அங்கே மருத்துவரின் இருக்கை காலியாக இருந்தது. ஆனால் அதன் அருகாமையில் ஒரு பெண் மருத்துவர் லேப்டாப்பில் எதையோ தட்டிக் கொண்டிருக்க, ஜென்னி தன் இருகரத்தால் அவள் கண்களை மறைத்தாள்.

"ஜென்னி" என்று அவள் சரியாய் கண்டறிய, ஜென்னி தன் கரத்தை விலக்கிக் கொண்டு முன்னே வந்து நின்றாள்.

"எப்படி தியா கண்டுபிடிச்ச?" என்று கேட்க,

"நீ வந்த விஷயம் எப்பவோ ஹாஸ்பிடல் முழுக்க பரவிடுச்சு" என்றாள்.

"அதானா" என்று லேசாய் அவளுக்கு சுருதி இறங்கி பின் மெல்ல மீண்டு, "சரி அது போகட்டும்... அன்னைக்கு மீட்டிங் எப்படி இருந்துச்சு" என்று அவள் கண்சிமிட்டிக் கேட்க, தியாவின் முகம்  மாற்றமடைந்தது.

"இங்கே பேச வேண்டாம்... நீ வெளியே வெயிட் பண்ணு நான் வர்றேன்" என்றதும், "கம் சூன்" என்றுரைத்துவிட்டு அவள் அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் அறைவாசலில் நிற்க,  கடந்து செல்பவர்கள் எல்லோரும் அவளைப் பயபக்தியோடே ஒரு பார்வை பார்த்து விஷ் செய்துவிட்டுப் போக அவளுக்கு அங்கே நிற்பதற்குச் சங்கடமாய் இருந்தது.

அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்தவள், அங்கே வெளிப்புறம் அமைக்கப்பட்டிருந்த செயற்கையான புல்தரையில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

அவள் மனமெல்லாம் பழைய நினைவுகளை நோக்கிப் பயணித்தது. அவளுக்குச் சிகிச்சை அளித்த ஷெரிஃபின் அசிஸ்டென்ட் தியா.   வசீகரிக்கும் தோற்றமும் பொறுமையும் அன்பும் நிறைந்தவள். அவளின் துணையோடுதான் ஜென்னி தன் பழைய நினைவுகளை மீட்டெடுத்தாள்.

ஆதலால் அவளின் வாழ்வில் நடந்தவற்றை அனைத்தையும் தியா நன்கறிவாள். அவள் மனமுடைந்து போகும் போதெல்லாம் தியா ஒரு தோழி போல அவளுக்குத் துணையிருந்து கையாண்டவள்.

அதே நேரம் தியாவுக்கு டேவிட் பற்றியும் தெரியும். அவள் ஜென்னிக்காக செய்த எல்லாவற்றையும் தியாவுக்கும் தெரிந்திருந்தது. அவன் எந்த உறவுமில்லால் ஜென்னியின் மீது காட்டிய அக்கறை அவளை வியப்பில் ஆழ்த்தியிருந்தது.

அதோடு அவனின் குணமும் நடை உடை பாவனை அனைத்தும் அவளை வெகுவாய் ஈர்த்திருக்க ஒருமுறை பேச்சுவாக்கில் ஜென்னியிடம்,

"டேவிடை மேரேஜ் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப லக்கி... இல்ல ஜென்னி?" என்று கேட்க, அவள் சொன்ன விதத்தில்  ஏக்கமும் காதலும் எட்டிபார்த்ததை ஜென்னி கவனிக்கதவறவில்லை.

அதுதான் ஜென்னியின் மனதில் தியாவை டேவிடோடு இணைத்து வைக்கத் தூண்டியது. அதுவும் அல்லாது ஜென்னியின் சிகிச்சையின் மூலமாக டேவிடுக்கும் தியாவை அறிமுகம்தான். பேசியதில்லை எனினும் பார்த்திருக்கிறான்.

ஆதலால் அவர்களைச் சந்திக்க வைக்க எண்ணியவள், சரியான சமயத்துக்காக காத்திருந்து டேவிடின் பிறந்த நாளை தேர்ந்தெடுத்திருந்தாள்.  இருவரின் சந்திப்பும் எப்படி அமைந்தது என்று மலேசியாவில் இருந்தபடி தியாவிடம் கேட்க அவள் நேரில் சொல்வதாக உரைத்திருந்தாள்.

அதற்குப் பிறகாய் அவள் மனநிலை வேறு சில யோனைகளில் மூழ்கிவிட்டன. இன்று எப்படியாவது தியாவிடம் டேவிடை சந்தித்த அனுபவத்தைக் குறித்து கேட்டுவிடலாம்  என அவள் காத்திருக்க, தியா அவளை நோக்கி நடந்துவந்தாள்.

தியா வந்ததுமே ஜென்னி அவளை அருகாமையில் அமர வைத்து, "டேவிடை பார்த்த மொமன்ட் எப்படி இருந்துச்சு... நச்சுன்னு ஒரு வார்த்தையில சொல்லு பார்ப்போம்" என்று ஆர்வம் மிகுந்திட அவள் கேட்க,

"நோ வார்ட்ஸ்" அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள்.

"அப்போ நீ இம்பிரஸாயிட்டன்னு சொல்லு" அவள் முகம் மலரக் கேட்க,

"சீரியஸ்லீ... வாட் அ மேன்?!" வியப்புகுறியாய் மாறியிருந்தது அவள் முகம்.

"அவர் உன்னைப் பார்த்து இம்பிரஸானாரா?" கேள்விக்குறியோடு கேட்டவளின் முகத்தில் அவள் ஆம் என்று சொல்லிவிட வேண்டுமே என்ற  எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட்டிருக்க,

தியா ஜென்னியை கூர்மையாக நோக்கி, "ஒரு பொண்ணைப் பார்த்ததும் அப்படி இம்பிரஸாகுற ஆளா ஜென்னி டேவிட்" என்று கேட்டாள்.

"உடனே... ஆக மாட்டாருதான்... ஆனா கரைப்பார் கறைச்சா கல்லும் கறையும்ல" என்று சொல்லி ஜென்னி சூட்சமமாய் சிரித்தாள்.

"அப்படிங்குறியா?!" புருவங்கள் சுருங்க தியா கேட்ட மாத்திரத்தில், "கண்டிப்பா" என்று தீர்க்கமாய் சொல்லி அவள் தலையசைக்க,

"அப்படின்னா நீதான் கரையணும் ஜென்னி... டேவிடோட காதலுக்கு"

அந்த வார்த்தை ஜென்னிக்கு ஷாக்கடித்தது போல இருந்தது.

தியா மேலும், "டேவிடோட காதலை உன்னால எப்படி ஜென்னி ரிஜெக்ட் பண்ண முடிஞ்சுது" அழுத்தமாய் அவள் கேட்க,

ஜென்னி பதிலேதும் பேசாமல் எழுந்து நின்று கொண்டாள்.

தியாவும் அவளருகாமையில் வந்து நின்று, "டேவிடை பத்தி எல்லாமே சொன்ன? ஆனா அவர் உன்னை லவ் பண்றாருங்குற விஷயத்தை ஏன் சொல்லவேயில்லை?" என்று கேட்டவளைக் கலக்கமாய் பார்த்தாள்.

"ஏன் ஸைலன்ட்டா இருக்க ஜென்னி?  பதில் சொல்லு" என்றவளை ஜென்னி பார்த்து,

"அவர் என்னை விரும்பினாருங்கிறது உண்மைதான்... பட் யூ டோன்ட் வொர்ரி... நான் டேவிட் கிட்ட பேசி புரிய வைக்கிறேன்" என்றாள்.

"அது முடியாது... டேவிட் உன்னைத் தவிர இன்னொரு பொண்ணை கனவில கூட நினைச்சுப் பார்க்க மாட்டாரு... ஒரு சைகியாட்டிரிஸ்ட்டா அவர்கிட்ட பேசினதை வைச்சு சொல்றேன்... அவரோட லவ் ட்ரூ... அவர் மனசு முழுக்க நீதான் இருக்க...  நீ மட்டும்தான் இருக்க" என்க,

ஜென்னி தோற்றுப் போன பார்வையோடு, "அப்படின்னா அவர் மனசை மாற்றவே முடியாதா தியா?!" அவள் ஆதங்கத்தோடு கேட்டாள்.

"அவர் மனசை மாத்துறதை விட நீ உன் மனசை மாத்திக்கலாமே... அவர் உன்னோட பிரச்சனை எல்லாம் தெரிஞ்சவர்... இன்னும் கேட்டா உனக்கு ரொம்ப ஸப்போர்ட்டா நின்னவர்... அவரை விட உனக்கு ஒரு பெட்டர் லைஃப் பாட்னரா வேற யாராலையும இருக்க முடியாது"

"இல்ல தியா... அது சரியா வராது..." அவள் மறுக்க,

"புரியுது... உனக்கு அந்த ஹீரோ ராகவை கல்யாணம் பண்ணிக்கணும்... அப்படிதானே" கோபம் கலந்த பார்வையோடு கேட்டாள்.

ஜென்னி மௌனமாய் நிற்க தியா அவளிடம்,

"ராகவுக்கு உன் லைஃப் பத்தின உண்மையெல்லாம் தெரியுமா?!" என்று வினவ, அவள் இல்லை என்பது போல தலையசைத்தாள்.

"இது பெரிய ரிஸ்க் இல்லையா? " என்றவள் கேட்க,

அவள் சிரித்துவிட்டு, "ரிஸ்க் எனக்கில்லை... ராகவுக்குதான்" என்றவளின் புன்னகையில் வஞ்சம் இழையோடியது.

தியா புரியாத குழப்பத்தோடு அவளிடம் ஏதோ கேட்க எத்தனிக்க, ஜென்னி அவளைத் தீர்க்கமாய் பார்த்து,

"தியா ப்ளீஸ்... என்னை இதுக்கு மேல எதுவும் கேட்காதே" என்று சொல்லி அவளைப் பேசவிடாமல் தடுத்துவிட்டு நழுவிக் கொள்ள பார்க்க,

"ஜென்னி ஒரு நிமிஷம்" என்று தியா அழைக்க, ஜென்னி செல்லாமல் தடைப்பட்டு நின்றாள்.

"நான் சொல்றதை தப்பா எடுத்துக்காதே...ஜென்னி" என்று ஆரம்பித்தவள்,

அவள் முன்னே வந்து நின்று, "டேவிடாலதான் உனக்கு கண்ணு கிடைச்சுது... உனக்கு புது வாழ்க்கை புது அடையாளம் கிடைச்சுது... இதுக்கெல்லாம் பதிலா நீ அவருக்கு என்ன செய்ய போற?" என்று கேட்க அவளால் பதில் பேச முடியவில்லை.

"பதில் சொல்ல முடியல இல்ல... உன்னால முடியாது... டேவிட் உனக்கு செஞ்சதுக்கு நீ எதை கொடுத்தாலும் ஈடாகாது" என்றவள் இறுக்கமாகக் கூற,

"இப்ப நான் என்ன கொடுக்கணும்னு சொல்ல வர்ற?!" என்று ஜென்னி கேட்க,

"அதை நீ உன் மனசாட்சிக்கிட்ட கேளு" என்றவள் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

ஜென்னிக்கு தியாவின் வார்த்தைகள் குற்றவுணர்வை விதைத்திருந்தது. அதே நேரம் டேவிடின் மனதை எப்படியாவது மாற்றிவிடலாம் என்ற அவளின் எண்ணம் மொத்தமாய் அடிப்பட்டுப் போக, உடைந்தது தான் போனாள்.

டேவிட் எதற்கு தியாவிடம் தன்மீதான காதலை சொல்ல வேண்டும் என்ற கோபம் எழ அவனுக்கு அவள் அழைப்பு விடுத்துப் பேசினாள்.

அவன் எடுத்த மாத்திரத்தில், "என்னாச்சு ஜென்னி? காலே பண்ணல... பிஸியா ?!" என்று இயல்பாய் கேட்க,

"தியாகிட்ட என்ன சொன்னீங்க டேவிட்" நேரடியாகவே அவள் மனத்தாங்கலை வெளிப்படுத்த, அவன் மௌனமானான்.

"டேவிட்" என்றவள் அழைக்கவும்,

"ஹ்ம்ம்... உன் கோபம் எனக்குப் புரியுது... ஆனா அதை விட கோபமா நான் இருக்கேன்... டூ யூ நோ தட்?"என்றவனின் குரல் உயர்த்தலாய் மாறியது.

அவள் பேசுவதற்கு முன்னதாக அவனே மீண்டும், "யாரை கேட்டு நீ தியாவை நான் மீட் பண்றதுக்கு அரேஞ்ச்மென்ட்ஸ் பண்ண" அவனின் கோபம் தன் சுயரூபத்தைப் பெற்றிட,

"நீங்க தியாவை மேரேஜ் பண்ணிக்கிட்டா உங்க லைஃப் நல்லா இருக்கும்னு நினைச்சேன்... அதிலென்ன தப்பு?"

"தப்புதான் ஜென்னி.. என்னைக் கேட்காம அப்படி ஒரு முடிவை நீ எடுத்தது தப்பு... அதுல இன்னொரு பொண்ணோட வாழ்க்கையும் இருக்கு... விளையாட்டில்ல"

"நான் விளையாட்டா இத பண்ணல... உங்க லைஃப் பாட்னரா வர்ற பொண்ணு பெஸ்ட்டா இருக்கணும்னுதான் தியாவை சூஸ் பண்ணேன்"

"ஸாரி ஜென்னி... உன்னைத் தவிர வேற எந்த பொண்ணோட விரல்லையும் இந்த டேவிட் மோதிரம் போட மாட்டான்"

அந்த வார்த்தை ஜென்னியை அதிர வைத்த அதே நேரம் அவனின் உறுதியையும் அவளுக்குப் புரிய வைத்துவிட அவள் இறங்கிய குரலோடு,

"என்ன பேசுறீங்க டேவிட்?" என்று கேட்டாள்.

"உன்னை நான் கட்டாயப்படுத்தல ஜென்னி... அதே நேரத்தில என் மனசையும் என்னால மாத்திக்கவும் முடியாது" என்க, ஜென்னியின் கோபம் தலைதூக்கியது.

"அப்படின்னா நமக்குள்ள இனிமே எந்த பேச்சுவார்த்தையும் இல்லை"

"ஜென்னி நோ"

"எஸ்... இனிமே நாம பேசிக்கவும் மீட் பண்ணிக்கவும் வேண்டாம்"

"ஜென்னி... திஸ் இஸ் நாட் பேஃர்...  நீ என்கிட்ட சொல்லியிருக்க... வாழ்க்கை பூரா நீ ஒரு ஃப்ரெண்டா என் கூடவே இருப்பேன்னு... மறந்துட்டியா?!" அவன் தவிப்புற கேட்க,

"நீங்க நமக்குள்ள இருக்கிற நட்புங்கிற பாண்டிங்கை உடைச்சுட்டீங்க... இனி அது பாஸிபிள் இல்லை" என்று முடிவாய் உரைத்தாள்.

டேவிட் அதிர்ச்சியில் அமைதியாயிருக்க ஜென்னி இறுதியாய், "நான் ஃபோனை கட் பண்றேன்" என்று சொல்ல,

"நம்ம உறவையும் சேர்த்தா?" என்றவன் கேட்க, "ஆமாம்" என்று இறுக்கமாய் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

தன் மனசாட்சியைக் கொன்றுவிட்டு அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லியவள், அவன் மனம் தன் வார்த்தைகளால் எந்தளவுக்குக் காயப்பட்டிருக்கும் என்பதை எண்ணி அவளுமே காயப்பட்டாள்.

அதற்கு ஒரே காரணம்தான். அவனை எப்படியாவது நிராகரிக்க!

தான் அவன் அருகில் இருக்கும் வரை அவனின் மனநிலை மாறாது என்று எண்ணியதாலே அத்தகைய முடிவை எடுத்துத் தொலைத்தாள். ஆனால் அந்த முடிவினால் அவள் நெருப்பிலிட்ட புழுவைப் போல துடித்துக் கொண்டிருக்க, அவள் நிலைமை புரியாமல் ரூபா அந்தச் சமயம்

"சென்னைக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு ஜென்னி... ஃப்ளைட் டைமிங் நைட் செவனோ க்ளாக்" என்று தகவல் கொடுக்க,

"கேன்சல் தி டிக்கெட்ஸ்" என்றாள்.

"ஜென்னி" என்று ரூபா புரியாத பார்வையோடு நிற்க,

"கேன்சல் தி டிக்கெட்ஸ் ரைட் நவ்" என்க,

"ஒகே ஜென்னி" என்று ரூபா அவளின் வேதனை நிரம்பிய முகத்தைப் பார்த்தபடி வெளியேறினாள்.

அவளுக்கோ உடனே சென்னைக்கு  சென்றால் டேவிடை பார்க்க நேர்ந்துவிடுமோ என்ற பயம். அவனின் ஒற்றை பார்வை போதுமே.  அவள் மனதின் உறுதியெல்லாம் மொத்தமாய் தளர்ந்து போகும்.  இந்த காரணத்தினால் ஜென்னி சென்னைக்கு போகாமல் தவிர்த்து மும்பையிலேயே சில நாட்கள் தங்கியிருக்க,

அன்று ஜென்னி அலுவலக வேலைகளில் ஆழ்ந்திருந்த நேரம். ரூபா அவசரமாய் தலைதெறிக்க ஓடிவந்தாள்.

"என்னாச்சு ரூப்ஸ்?" ஜென்னி அவளின் பதட்டத்தைப் பார்த்து வினவ,

"நியூஸ் சேனல் வைச்சு பாருங்களேன்" என்றாள்.

ஜென்னி யோசனைகுறியோடு அவளைப் பார்த்துவிட்டு தொலைக்காட்சியை இயக்கி நியூஸ் சேனலை மாற்றினாள் .

அந்தக் கணமே அவள், "சையத்" என்று கூறி அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

நாம் செய்யும் எல்லா வினைக்கும் ஓர் எதிர்வினை நமக்காகக் காத்திருக்கும். அதை ஒவ்வொருவரும் எதிர்கொண்டே தீர வேண்டும்.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content