You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 8

Quote

8

சுயநலம்

சாரதா இல்லத்தை விட்டு வந்தபின்னும் கூட மகிழின் செவிகளில் மாயாவின் வார்த்தைகள் ஒலித்து அவன் மனதை வெகுவாய் காயப்படுத்திக் கொண்டிருந்தது. மாயா அவன் காதலை எப்படி 'லஸ்ட்' என்று சொல்லுவாள்? அப்படியா தான் சாக்ஷியோட பழகினோம்?

அந்த வார்த்தை பாரமாய் அவன் மனதைக் கனக்க செய்ய, தாங்க முடியாத வலியோடு ரேடியோ ஸ்கை அலுவலகத்திற்குள் நுழைந்தான். நேரம் கடந்துவிட எல்லோருமே தங்கள் வேலைகளை முடித்துவிட்டு வெளியேறிக் கொண்டிருந்த சமயம் அது.

மகிழ் உள்நுழைவதைப் பார்த்தவர்கள் எல்லோருமே அவனிடம் துக்கம் விசாரிக்கத் தொடங்கினர். அவர்கள் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுமளவுக்கு அப்போது மகிழுக்கு பொறுமை இல்லை.

நேராய் ஷாலினி இருந்த அறைக்குள் நுழைந்தான். தன் வேலையை முடித்துப் புறப்பட தயாரானவள் அவன் நிற்பதைப் பார்த்து வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தாள். அவன் பார்வை அவள் மீது கூர்மையாய் பாய்ந்தது.

தன் பிறந்த நாளன்று என்ன நிகழ்ந்தது என்று யோசித்தவனுக்குச் சாக்ஷியை தன் அலுவலகத்திற்கு அழைத்துவந்த நினைவு வந்தது. அங்கே கேக் வெட்டி கொண்டாட்டங்கள் நடைபெற்ற சமயத்தில் சில மணித்துளிகள் சாக்ஷி ஷாலினியோடு தனிமையாகப் பேசினாள்.

ஷாலினியிடம் பேசிய பின் சாக்ஷியின் முகத்தில் மாறுதல் ஏற்பட்டிருந்தது. அதோடு அல்லாது அங்கிருந்து புறப்பட்ட பின்னர் சாக்ஷி மகிழிடம்,

"ஷாலினி உங்களை காதலிச்சாங்களா மகிழ்?" என்று கேட்க அவன் கோபமாய் அவளைக் கடிந்து கொண்டான்.

"ஷாலு என் பெஸ்ட் ஃப்ரெண்ட்... யார் இப்படி சொன்னாலும் பரவாயில்லை... ஆனா நீ எங்க நட்பை கலங்கப்படுத்தி பேசினா என்னால தாங்க முடியாது சாக்ஷி" என்று அழுத்தமாய் கண்டிக்க,

"சாரி மகிழ்... தப்புதான்... நான் அப்படி கேட்டு இருக்க கூடாது" என்றவள் மேலே எதுவும் பேசாமல் அதோடு அந்த பேச்சை நிறுத்திக் கொண்டாள். ஆனால் அவள் ஏன் அப்படிக் கேட்டாள் என்று தான் ஆராயாமல் விட்டது இப்போது நெருடலாய் தோன்ற, அது குறித்து கேட்கவே ஷாலினியை அலுவலகத்தில் சந்திக்க வந்திருந்தான் மகிழ்.

அந்த எண்ணத்தோடே ஷாலினியை வழிமறித்து அவன் நிற்க அவனின் தோற்றத்தை பார்த்தவள் அதிர்ந்து போனாள். அந்த ஒரு வாரத்தில் வளர்ந்த தாடி... கவனிப்பாரற்று போன முகம் என அவள் இல்லாத அவன்... அவனாக இல்லை. .

சாக்ஷியின் இழப்பு அவனை எந்தளவுக்குப் பாதித்திருக்கும் என்பதை அவன் முகமே தெளிவாக எடுத்துரைத்தது. அவள் அவன் கன்னங்களைத் தடவி கண்ணீர் உகுத்தபடி,

"என்ன மகிழ் ? இப்படி இருக்கீங்க?" என்று கேட்க, அவள் கரத்தை அவசரமாய் தட்டிவிட்டு விலகி நின்றான். இத்தனை நாள் அவள் தொடுகையில் நட்பு மட்டுமே இருப்பதாக உணர்ந்தவனுக்கு இன்று அப்படி இல்லை என்று புரிந்தது.

"மகிழ்" என்று சொல்லி நெருங்கப் போனவளை,

"ஸ்டே தேர்" என்று சொல்லி பின்னோடு வந்தான்.

"என் மேல என்ன கோபம் மகிழ்?!" என்று கேட்டவளின் முகத்தில் ஏக்கமும் காதலும் அப்பட்டமாய் தெரிந்தது. அவளின் உணர்வுகளைப் பொருட்படுத்தாமல்,

"நான் கேட்கறதுக்கு நீ உண்மையை சொல்லணும்... சொல்லுவியா ஷாலு?!" என்று அவளிடம் தன் பார்வையை சுருக்கிக் கேட்டான்.

"கேளுங்க மகிழ்"

"லாஸ்ட் வீக் சாக்ஷியை நான் நம்ம ஆபிஸுக்கு கூட்டிட்டு வந்தேன்... ஞாபகம் இருக்கா ?"

"ஞாபகம் இருக்கே... அன்னைக்கு கூட உன் பர்த்டே"

"எஸ்.... அன்னைக்கு நீ சாக்ஷிக்கிட்ட என்ன சொன்ன?" என்று கேட்டதும் அவள் முகத்தில் லேசான தடுமாற்றம் தோன்றி மறைந்ததை மகிழின் விழிகள் கவனித்தன.

"பெருசா ஒண்ணும் பேசலயே" என்று அவள் உரைக்க, மகிழின் முகம் உக்கிரமாய் மாறியது.

"பொய் சொல்லாதே" என்றவனின் பார்வை மிரட்டலாய் மாறியது.

"நான் ஏன் பொய் சொல்லப் போறேன் மகிழ்" என்று இயல்பாகவே அவள் பதிலுரைக்க, மகிழின் கோபம் மாற்றமடையவில்லை.

சிறிது நேர யோசனைக்குப் பின் நிமிர்ந்தவன்,

"நீ என்னை காதலிக்கிறியா?" என்று கேட்க அந்தக் கேள்வி அவளை தடுமாற்றமடையச் செய்ய, அவளால் அதற்கு மேல் இயல்பாக இருப்பது போல் நடிக்க முடியவில்லை. நட்பு முலாம் பூசி வைத்திருந்த அவள் காதலின் சாயம் வெளுத்துப் போனது.

அலைபாய்ந்த அவள் விழிகளை உற்றுக் கவனித்தவன், சாக்ஷி அன்று கேட்டது உண்மைதான் என்று இப்போது தெளிந்தான். மனதில் குற்றவுணர்வோடு அவன் நின்றிருக்க ஷாலினி அவனை நெருங்கினாள்.

"நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன் மகிழ்... உன் கிட்ட சொன்னா நீ எப்படி எடுத்துப்பியோன்னு பயம்... நம்ம நட்பு என்னாகுமோன்னு பயம்... அந்த பயத்துனாலதான்" என்று பேச முடியாமல் அவள் வார்த்தைகள் திக்கி தடுமாற மகிழ் அவளை ஏற இறங்க குற்றவாளியைப் போல் பார்த்தான் .

"இதையெல்லாம் என்கிட்ட சொல்ல பயம்... ஆனா சாக்ஷிகிட்ட உன் காதலைப் பத்தி சொல்லி இருக்க... இல்ல"

அவன் விழிகளில் கோபம் தாண்டவமாட ஷாலினி நடுக்கமுற்றாள்.

அவள் அமைதியாய் நிற்க, "பதில் சொல்லு ஷாலு" என்று அழுத்தம் கொடுத்தான். பதட்டமடைந்தவள், "இல்ல மகிழ்... சாக்ஷிகிட்ட நான் உன்னை லவ் பண்றதைப் பத்தி சொல்லல" என்றதும் மகிழ் சந்தேகமாய் பார்த்தான். இவளாக சொல்லாமலா சாக்ஷிக்கு தெரிந்திருக்கும் என்று!

அவன் எண்ணம் புரிந்தவளாய், "சாக்ஷிகிட்ட நான் சொன்ன விஷயம் வேற" என்றாள்.

"அதான் என்ன விஷயம் ?" அவன் கடுமையாக கேட்க்,

"அது" என்று தயங்கியவளை அவன் பார்வையாலயே எரித்துவிடுவது போல் பார்க்கவும் அவள் பயத்தோடு பேசத் தொடங்கினாள்.

"நான் தப்பா ஒண்ணும் சொல்லல... உண்மையைதான் சொன்னேன்"

"என்ன உண்மை ?" என்று கேட்க,

"அது... உனக்கு சாக்ஷி மேல இருந்தது காதல் இல்ல... பரிதாபம், இல்லன்னா அவ அழகு மேல உனக்கு ஈர்ப்பு... அவ்வளவுதான்" என்றதும் அவன் முகமெல்லாம் சிவந்தது.

"போதும் ஷாலினி... நிறுத்து" என்று அலுவலகம் என்றும் பாராமல் கத்திவிட்டான்.

அவள் அதிர்ந்து நிற்க வெறுப்பான பார்வையோடு,

"நீயும் ஒரு பொண்ணுதானே... இந்த வார்த்தையெல்லாம் சாக்ஷியை எந்தளவுக்கு காயப்படுத்தும்னு உனக்கு தெரியாது" என்று கேட்க அவள் கண்கள் உடைப்பெடுத்தன.

"இல்ல மகிழ்... அது" என்றவள் விளக்கம் சொல்ல எத்தனிக்க,

"உன் விளக்கம் எனக்கு வேண்டாம்... நான் சொல்றதை நீ நல்லா கேட்டுக்கோ... நான் சாக்ஷி மேல வைச்சிருந்தது காதல்தான்.. அதுக்கு பேர் பரிதாபமோ ஈர்ப்போ இல்ல... அப்படி எனக்கு ஈர்ப்பு ஏற்படணும்னா அது எனக்கு முதல உன் மேலதான் ஏற்பட்டிருக்கணும்... ஏன்னா இந்த ஆபீஸ்லயே நீதான் அழகு" என்று சொல்லியவன் முகத்தில் ஒரு வித வெறுமை.

அவன் சொன்ன வார்த்தை ஷாலினியின் மனதை ரொம்பவும் காயப்படுத்த, அவன் விரக்தியோடு அந்த அறையை விட்டு வெளியேற, "மகிழ்" என்று அவன் கரத்தைப் பற்றினாள் ஷாலினி.

அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல், "ப்ளீஸ்... ஷாலினி... என் கையை விடு... உன் கூட இனிமே நட்பாவும் என்னால இருக்க முடியாது... அப்படியே இருந்தாலும் இந்த ஜென்மத்தில அந்த உறவு காதலாவும் மாற முடியாது" என்றான்.

ஷாலினி உடைந்து போய் நின்றாள். தன் சுயநலத்தை மட்டும் கருத்தில் கொண்டதன் விளைவு ஒரு நல்ல நட்பும் அவளுக்கு இல்லாமல் போனது.

ஷாலினி அன்று சாக்ஷியின் மனம் காயப்படும்படி பேசியிருக்கிறாள். ஆனால் அதை அவள் காட்டிக் கொள்ளாமல் இயல்பாகவே நடந்து கொண்டாள். அப்படி இருக்க சாக்ஷி மாயாவிடம் அந்தளவுக்கு உடைந்து போய் பேச வேண்டிய அவசியமில்லையே என்ற எண்ணம் தோன்றியது மகிழுக்கு.

அப்போது அதைத் தாண்டி வேறேதோ அவளைக் காயப்படுத்துமளவுக்கு நிகழ்ந்திருக்குமோ?! என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டபடி அந்த நாளை மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டான்.

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நிறைவு பெற்று சாக்ஷியை மகிழ் தன் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வர அங்கே யாருமே இல்லை. வீடு பூட்டியே இருந்தது.

சாக்ஷிக்கு அவன் வீடு புதிய இடம் அல்ல. அடிக்கடி மாயாவோடு மகிழின் தோழி என்ற பெயரில் சாக்ஷி அங்கே வந்திருக்கிறாள். அதே சமயம் மகிழின் குடும்பத்தினர் சாக்ஷியின் இசை நிகிழ்ச்சிக்கு வந்து அவளைப் பாராட்டியிருக்க, அதன் பிறகே தன் காதலைப் பற்றி வீட்டில் உள்ளவர்களிடம் மகிழ் தெரியப்படுத்தினான்.

ஆனால் அவன் எதிர்பார்த்தது போல் சம்மதம் கிடைக்கவில்லை. அதுவும் அவள் குறையை சுட்டிக் காட்டி அவர்கள் வேண்டாம் என்று சொன்னதால் எல்லோர் மீதும் வருத்தம்.

இந்த விஷயம் சாக்ஷிக்கு தெரிந்தால் அவள் வேதனையுறுவாளே என்று அவளிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தான். ஆதலாலேயே வீட்டில் யாரும் இல்லாத சமயமாகப் பார்த்து அவளை அழைத்து வந்திருந்தான்.

அதுமட்டுமே காரணம் இல்லை. சாக்ஷியிடம் தனிமையில் பேச வேண்டுமென்பது மகிழின் ரொம்ப நாள் விருப்பம். அவள் காதலுக்கு சம்மதம் சொன்ன நாளில் இருந்து இன்றுவரை தனியாக அவளிடம் பேசும் சந்தர்ப்பம் வாய்த்ததே இல்லை. எப்போதும் அவளோடு இணை பிரியாமல் மாயா இருப்பாளே!

இன்று மாயாவே அதிசயமாய் அவளைத் தனியாய் அவனுடன் அனுப்பியிருக்க, அரிதாய் கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பத்தை அவன் வீணடிக்க விரும்பவில்லை. வெளியே எங்கே அழைத்துச் சென்றாலும் அத்தகைய தனிமை கிடைக்காது. அதனாலேயே அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துவந்தான்.

மகிழ் வீட்டுக்கதவின் அருகில் இருந்த பூந்தொட்டி பின்னிருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்துவிட்டு, "உள்ளே வா சாக்ஷி" என்றழைக்க,

சாக்ஷி குழப்பமாய், "வீட்டுல யாரும் இல்லையா மகிழ்?" என்று கேட்டு தயங்கி நின்றாள்.

"ஏன்? யாரும் இல்லன்னா மேடம் உள்ளே வர மாட்டீங்களோ?!"

"அப்படி இல்ல" என்று தயங்கியவளின் கரத்தைப் பற்றி உள்ளே அழைத்து வந்தான்.

சாக்ஷி யோசனைக்குறியோடு, "என்ன மகிழ்? சிகரெட் ஸ்மெல் வருது... யாராச்சும் உங்க வீட்டில ஸ்மோக் பண்ணுவாங்களா?" என்று சந்தேகமாய் கேட்கவும்,

"எங்க வீட்டிலயா... ம்ஹூம்... யாருக்கும் அந்தப் பழக்கம் இல்லையே... அதுவும் இல்லாம அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது" என்றவன் முகர்ந்து பார்த்தான்.

"அப்படி ஒண்ணும் ஸ்மெல் வரலியே"

"லைட்டா வருது... மே பீ வெளியே இருந்து கூட வந்திருக்கலாம்"

"இப்போ இந்த ஆராய்ச்சி ரொம்ப தேவையா?!" என்று கேட்டபடி அவளை சோபாஃவில் அமர வைத்தவன், அவளைப் பார்த்தபடி எதிரில் அமர்ந்து கொண்டான்.

சந்தன நிற காட்டன் புடவையில் ரோஸ் வண்ணத்தில் சிறுசிறு பூக்கள் புடவை முழுவதும் பூத்துக்குலுங்க மடிப்புகள் கலையாமல் அவள் புடவை உடுத்தியிருந்த அழகில் மெய்மறந்து போனான்.

நெற்றியில் குங்கும நிற பொட்டு. தூக்கி ஏற்றி வாரி இருந்த அவள் கூந்தலின் பின்னலில் சூடியிருந்த பூக்கள் லேசாய் வாட்டமுற்றாலும் அதுவும் அவளுக்கு அழகூட்டியது. பார்வையற்றிருந்தாலும் அவள் உடையணிவதில் இருந்த நேர்த்தி அவனை வியப்பில் ஆழ்த்த,

இவற்றையெல்லாம் நுணுக்கமாய் அவன் விழிகள் ரசித்தபடி இருக்க, அங்கே நிலுவிய அமைதியைப் பொறுக்க முடியாமல், "எங்க இருக்கீங்க ?... ஏதாச்சும் வாய் ஓயாம பேசிக்கிட்டே இருப்பீங்க... ஏன் எதுவும் பேச மாட்டேங்குறீங்க மகிழ்?... இப்படி சத்தமில்லாம இருக்கிறது எனக்கு என்னவோ போல இருக்கு" என்றாள்.

அவன் புன்னகைக்க அவள் சோர்வோடு, "மாயாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்" எனறாள்.

"அவங்க எதுக்கு நம்ம இரண்டு பேர் நடுவுல?"

"அவ என் கூட இருந்தா ஏதாச்சும் பேசிக்கிட்டே இருப்பாளே"

"எப்பவுமே பேசிக்கிட்டே இருக்க முடியுமா?"

"எனக்கு சைலன்ஸ் சுத்தமா பிடிக்காது மகிழ்... அதனாலதான் உங்களைக் கூட எனக்கு ரொம்ப பிடிக்கும்"

மூச்சை இழுத்துவிட்டவன், "புரியுது... ஆனா எப்பவுமே நம்ம கூட மாயா இருக்க முடியாது நீ புரிஞ்சுக்கணும்... அப்புறம்... நம்ம இரண்டு பேருக்கும் கொஞ்சமாச்சும் ப்ரைவஸி வேண்டாமா சாக்ஷி ?!" என்று கேட்டான்.

"ப்ரைவஸியா ? எதுக்கு" என்று வினவினாள்.

"நாசமா போச்சு"

"ஏன் ?" என்று அவள் கேட்க அவள் முகத்தில் தெரிந்த வெகுளித்தனம் அழகாய் இருந்தாலும் அவனுக்கு அது இக்கட்டாகவும் இருந்தது.

அவளை நோக்கி, "லவ்வர்ஸ் எல்லாம் எப்படி இருப்பாங்கனு உனக்கு தெரியுமா?" என்று ஏக்கமாய் அவன் கேள்வி எழுப்ப,

"எப்படி இருப்பாங்க?" என்று அவளுமே பதில் கேள்வி கேட்டாள்.

அவன் கோபத் தொனியில், "நான் உன்னைக் கேட்டா நீ என்னைத் திருப்பிக் கேட்குறியா?" என்றான்.

"தெரியாததுனாலதானே கேட்குறேன்... சொல்லுங்க மகிழ்... லவ்வர்ஸ் எல்லாம் எப்படி இருப்பாங்க ?" என்று அவள் ஆர்வமாய் கேட்க அவன் முகம் சோர்ந்து போனது.

"சில விஷயங்கள் ப்ரக்டிக்கலா ஈஸி... தியரிட்டிக்கலா சொல்றது ரொம்ப கஷ்டம் சாக்ஷி" என்றான்.

"கஷ்டமாயிருந்தாலும் நீங்க சொன்னாதானே எனக்கு புரியும்... பிராக்டிக்கலா பண்ணா எனக்கெப்படி தெரியும்" என்று கேட்டுக் கொண்டிருந்த அவள் முகபாவனைகளை பார்த்து சிரித்தவன் அவள் கரத்தைப் பிடிக்க.

அவள் பின்னோடு இழுத்துக் கொண்டு "கையெல்லாம் பிடிக்காதீங்க... என்னால கவனமா கேட்டு புரிஞ்சுக்க முடியாது" என்றாள்.

கொஞ்சம் அலுத்தபடி, "விளங்கிடும்" என்றான்.

"ஏதாச்சும் தெளிவா சொன்னாதானே விளங்கும்"

"உனக்கு புரிய வைக்க முடியும்னு எனக்கு தோணல"

"ஏன் அப்படி சொல்றீங்க?... நான் ரொம்ப ஷார்ப்... நீங்க சொல்லுங்க... நான் புரிஞ்சுக்கிறேன்"

"சாக்ஷி... சொல்லாம கூட சில விஷயங்களைப் புரிய வைக்க முடியும்"

"எப்படி?" என்று கேட்டவளின் கன்னங்களை மகிழ் தன் கரங்களால் ஏந்திக் கொண்டான். அத்தனை நேரம் ஓயாமல் பேசிக் கொண்டிருந்த அவளின் உதடுகள் அவன் தொடுகையால் ஸ்தம்பித்து விட, அவன் நெருங்கி வருவதை அவன் சுவாசத்தின் மூலம் உணர்ந்தவள் அவன் கரத்தை இடையில் நிறுத்தி தடுத்தாள்.

"சாக்ஷி ப்ளீஸ்" என்று முன்னேற வந்தவனை விடாமல் தடுத்தவள்,

"எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்... நான் போகணும்" என்றவள் எழுந்து நின்று கொள்ள,

அவன் புன்முறுவலோடு, "நீ ஷார்ப்தான்... எதுவும் பண்ணாமலே உனக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சு... இவ்வளவு நேரம் என்கிட்ட நடிச்சதானே" என்றான்.

"சத்தியமா நடிக்க எல்லாம் இல்லை... நீங்க ஏதோ முக்கியமா சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன்"

"இதுவும் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான விஷயம்தான்"

"மகிழ்... எனக்கு ரொம்ப எம்பாரஸிங்கா இருக்கு... இப்படி எல்லாம் பேசாதீங்க" என்றாள்.

"பேசவே கூடாதா...இதென்ன அநியாயம்?"

"அய்யோ மகிழ்... எனக்கு ரொம்ப பசிக்குது... லஞ்ச் சாப்பிடப் போலாமே"

"தப்பிச்சிக்க இப்படி ஒரு வழியா?"

"அய்யோ அந்த விஷயத்தை விடுங்களேன்" என்று அவள் அவனைக் கெஞ்சலாய் கேட்க,

"சரி விட்டுவிட்டேன்... ஆனா நம்ம லஞ்ச் சாப்பிட வெளியே போக வேண்டாம்... அக்கா எனக்கு பிடிச்ச மட்டன் பிரியாணி செஞ்சு எடுத்துட்டு வர்றேன்னு சொன்னா... ஆனா இன்னும் வரக் காணோம்... நான் கால் பண்ணி கேட்கிறேன்" என்றபடி தன் கைப்பேசியை எடுத்துப் பேசியவன்,

சாக்ஷியின் புறம் திரும்பி, "அக்கா இங்கதான் பக்கத்துல இருக்கா... நான் போய் கூட்டிட்டு வந்திடறேன்... நீ பத்திரமா இங்கயே இரு... நான் ஃபைவ் மினிட்ஸ்ல வந்திடுவேன்" என்று சொல்ல, அவளும் இயல்பாகத் தலையசைத்து சம்மதித்தாள்.

அவன் வெளியேறி அவசரமாய் பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டவன், எழிலின் வீட்டில் இருந்து அவளை அழைத்துக் கொண்டு வருவதற்குக் கொஞ்சம் தாமதமானது.

எழில் உள்ளே நுழையும் போதே, "சாக்ஷி" என்றழைத்து அவள் அருகாமையில் வந்து அமர்ந்தாள். அத்தனை நேரம் சிலையென அமர்ந்திருந்தவள் எழிலின் அழைப்பில் உயிர் பெற்றுக் கொண்டாள்.

அவள் முகம் பதட்டத்தை நிரப்பியிருக்க அந்த இடைவெளிக்குள் ஏதோ நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அதனைப் பெரிதாக மகிழ் எண்ணிக் கொள்ளவில்லை.

எழில் புன்னகையோடு, "உன்னை தனியா கூட்டிட்டு வந்து ரொமான்ஸ் பண்றானா?!" என்று கேட்க சாக்ஷி ஏனோ இயல்பு நிலையில் இல்லை.

மகிழ் அவள் காதில், "அக்காகிட்ட எதுவும் உளறி வைக்காதே" என்றதும் அவளும் அவன் சொன்னதன் அர்த்தத்தைப் புரியாமலே தலையசைத்தாள்.

சாக்ஷியின் மனநிலையை உணராமலே மகிழ் தன் சகோதரியிடம் உரையாடிக் கொண்டிருந்தான். அவனுக்குப் பிறந்த நாள் என்பதற்காக எழில் அவனுக்குப் பிடித்த உணவு வகைகளை எல்லாம் சமைத்து எடுத்து வந்திருந்தாள்.

எழில் உணவு பரிமாறி இருவரையும் சாப்பிடச் சொல்ல, அப்போது சாக்ஷிக்கு இருந்த பசியெல்லாம் காணாமல் போயிருந்தது. அவர்களின் கட்டாயத்திற்காக வேண்டி அவள் உணவருந்தினாள்.

அதன் பிறகு மகிழ் அவளைத் தன் காரில் மீண்டும் அழைத்து வந்து சாரதா இல்லத்தில் விட்டான். சாக்ஷி எதுவுமே பேசாமலேயே வந்தவள் இறங்கும் தருவாயில், "நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்பேன்... நீங்க மனசுல தோன்றினதை அப்படியே சொல்லணும்" என்றாள்.

அவன் யோசனைக் குறியோடு, "என்ன விஷயம் சாக்ஷி?" என்று கேட்க அவள் இறுக்கமான முகத்தோடு,

"என்னை முதல் முதலில் பார்த்ததும் என்ன நினைச்சீங்க?" என்று கேட்டதும் அவளைக் குழப்பமாய் பார்த்தவன்,

 "ஏன் இப்போ இந்த க்வஸ்டின்?" என்று கேட்க,

அவள் தவிப்போடு, "ப்ளீஸ் பதில் சொல்லுங்க" என்றாள்.

அவன் யோசனையோடு, "என்ன தோணுச்சுன்னா... ஆ... அழகு அறிவு திறமை எல்லா இருக்கிற உனக்கு போய் கண் பார்வையில்லையேன்னு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு" என்றான்.

அவன் இயல்பாகவே பதிலுரைத்தாலும் அந்த வார்த்தை சென்றடைந்த அர்த்தத்தை அவன் உணர்ந்திருக்கவில்லை.

"சரி சாக்ஷி... நான் கிளம்பட்டுமா ?" என்று கேட்டான்.

"ம்ம்ம்" என்றாள்.

"அப்புறம்... நான் இரண்டு நாளைக்கு ஃப்ர்ண்ட் மேரேஜுக்கு டெல்லி போறேன்... பேச டைம் கிடைக்குமான்னு தெரியல... முடிஞ்சளவுக்கு கால் பண்ண ட்ரை பண்றேன்... கால் பண்ணலன்னா கோவிச்சுக்க கூடாது?" என்று சொல்லவும் அவள் அதற்கும் மௌனமாகவே தலையசைத்தாள்.

அவளின் அந்த அழுத்தமான மௌனத்தின் பின்னணியை ஆராய வேண்டுமென்று அவனுக்கு அப்போது தோன்றவில்லை. ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால் அவன் வீட்டில் இல்லாத சமயத்தில் ஏதோ நிகழ்ந்திருக்கும் என்ற எண்ணம் தோன்ற அது என்னவாக இருக்கும் என்று அவனால் யூகிக்க முடியவில்லை.

அவன் மூளைக்கு எதுவும் எட்டவில்லை. சில கேள்விகளுக்கான விடையை நாம் எங்கெங்கோ தேட, அதன் விடை நம் அருகாமையிலேயே இருக்கும் என்பதைப் பல நேரங்களில் யாரும் அறிவதில்லை.

அப்படிதான் மகிழ் மாதங்கள் கடந்து சாக்ஷி அவனைத் தவறாக புரிந்து கொண்டதன் காரணத்தைத் தேடி தேடி மனதளவில் ரொம்பவும் பாதிக்கப்பட்டான். அவனின் தேடல் முடிவுறாமல் நகர்ந்து கொண்டிருக்க, அவன் கேள்விக்கான விடையைச் சொல்ல சாக்ஷியால் மட்டுமே முடியும்.

ஆனால் அதற்கு அவள் மீண்டும் உயிர்த்தெழுந்துதான் வர வேண்டும். அது சாத்தியப்படுமா என்ன?

ஏழு மாதங்கள் அசாதாரணமாய் உருண்டோடியது. அன்றுதான் சையத் இயக்கிய முதல் படத்தின் ப்ரிவ்யூ ஷோ. பிரபலங்கள் எல்லோருமே அந்தப் படத்தை பார்த்து வியந்து சையத்தையும் ராகவையும் பாராட்டினர்.

ராகவின் வெற்றிக்கான வரிசைப்பட்டியலில் அந்தப் படமும் இடம் பெறக் காத்திருந்தது. அது பல நடிகர்கள் மனதில் பொறாமை தீயைக் கூட வளரச் செய்தது.

இப்படி வெற்றி மேல் வெற்றியாய் அவன் குவித்துக் கொண்டிருக்க, அந்த வளர்ச்சி பலரின் பார்வைக்கும் உறுத்தலாகவே இருந்தது. அதோடு அல்லாது இந்த வெற்றியின் மூலம் மக்களின் மனதிலும் ராகவ் தனக்கென ஒரு நிலையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டான்.

அந்தப் படத்தின் மூலமாக ராகவுக்கும் சையத்திற்கும் பலமான நட்பும் உருவாகி இருந்தது. சையத்திற்கும் அந்தப் படம் புகழின் உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைக்கக் காத்திருக்க, அவனின் ஒரே எண்ணமெல்லாம் அந்த வெற்றியை தன் குடும்பத்தாரோடு பெருமிதமாய் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான். அதற்காகவே அந்தப் படம் வெளியாகி அதன் வெற்றி மக்களால் பறைசாற்றப்பட்ட அடுத்த கணமே தன் வீட்டிற்குச் சென்றான் சையத்.

அவன் வீட்டின் வாசலை அடைந்த போது அவனின் தம்பி தங்கை ஆஷிகும் அஃப்சானுவும்  அவன் கால்களைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினர்.

"வாப்பா நம்மள விட்டுட்டு போயிட்டாருண்ணா?" என்று அவன் தம்பி ஆஷிக் கதற அவன் அதிர்ந்து நின்றான்.

மூன்று மாதத்திற்கு முன்பு நிகழ்ந்த தந்தையின் மரணம் குறித்த செய்தி அவனுக்குத் தெரியாமலே போனது. அவன் படம் இயக்கும் மும்மரத்தில் குடும்பத்தாரோடு தொடர்பில்லாமல் இருந்தான்.

தன் இலட்சியத்தில் படாத பாடுபட்டு உழைத்து வெற்றி கண்டவன், அதற்கு விலையாய் கொடுத்தது அவன் தந்தையின் உயிரை. இலட்சியத்தை நோக்கிய ஓட்டத்தில், அவன் குடும்பத்தை அலட்சியம் செய்ததினால் ஏற்பட்ட விளைவு.

சாஜி தன் மகனின் முகத்தைப் பார்க்க கூட விருப்பமில்லாமல் கதவை தாளிட்டுக் கொண்டவர், "போயிடு சையத்... என் கண் முன்னாடியே வராதே" என்றார்

"நான் தப்பு செஞ்சுட்டேன்மா... என்னை மன்னிச்சிடுங்க" என்று மனமுருகி அவன் அழுது கேட்ட எந்தவித சமாதானங்களையும் மன்னிப்புகளையும் சாஜி ஏற்கத் தயாராயில்லை.

"இனிமே வாப்பாவோட இடத்தில இருந்து எல்லா பொறுப்பையும் ஆஷிக் பார்த்துப்பான்... எங்களுக்கு அந்த அல்லா துணையிருப்பார்... நீ இனி இந்த வீட்டுக்கு வரவே வேண்டாம்" என்றார் தீர்க்கமாக!

"அம்ம்ம்மா...தப்புதான் ம்மா... என்னை மன்னிச்சிடுங்க" என்று அவன் கதற, அந்த கதறல் அவன் தாயின் மனதைக் கரைக்கவில்லை. அவன் எதிர்பார்த்தது போல் தமிழ் சினிமா அவனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய அதே சமயம் அவன் குடும்பத்தாரால் துச்சமாக ஒதுக்கப்பட்டான்.

அவன் எதிர்பார்த்த பேரும் புகழும் கிட்டிய போதும் அந்த இன்பத்தை அனுபவிக்க முடியாத நிலையில் நின்றான் சையத்.

சையத்தின் வாழ்க்கைக்கு நேரெதிராய் மாறியிருந்தது மகிழின் வாழ்க்கை. மகிழின் போக்கு மாதங்கள் செல்ல செல்ல மோசமாகிக் கொண்டு போனதே தவிர அவன் பழைய நிலைக்குத் திரும்பவேயில்லை.

இப்படி இருந்தவன் சில நாட்களாகவே எங்கே சென்றான் என்றே பலராலும் அறிய முடியவில்லை. அவன் குடும்பத்தார் அவனைத் தேடி அலைந்து கொண்டிருந்தனர்.

கனடாவில் இருந்து வேந்தனும் அவசரமாகப் புறப்பட்டு வந்து, தன் தம்பியைத் தேடும் பணியில் மும்முரமாய் ஈடுபட்டான். அந்தத் தேடல் வேந்தனை குற்றவுணர்வில் ஆழ்த்தியது. சாக்ஷியின் மீது தான் கொண்ட வக்கிரம்தான் தன் தம்பியின் இந்த நிலைக்குக் காரணம் என்று அவன் மனம் அவனையே நிந்திக்கத் தொடங்கியது.

எல்லோருமே ஒருவிதத்தில் தங்கள் சுயலாபத்திற்காக இன்னொருவரின் வாழ்க்கையைப் பணயமாக்க, அதனால் உண்டாகும் விளைவுகளை யாராக இருந்தாலும் சந்தித்தே தீர வேண்டும். அது நடந்த நிகழ்வுகளை மாற்றிவிடப் போவதில்லை எனினும் நடக்கும் நிகழ்வுகளில் பெரியளவிலான மாற்றத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும். அத்தகைய மாற்றங்களே இந்த பூமியின் இயல்பு.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content