You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nee Enbathe Naanaga - 1

Quote

நீ என்பதே நானாக

1

ஜானவி

காலை மணி சரியாய் ஆறு. அந்தக் கடிகாரத்தில் அலாரம் டிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்... என்று சத்தம் கொடுக்க ஆரம்பித்தது. ஆனால் ஜானவியோ அந்த அலார ஒலியை துளியளவும் பொருட்படுத்தாமல் உறங்கிக் கொண்டிருந்தாள். அந்த அலாரமும் அவளை எழுப்பாமல் விடுவதில்லை என்று விடா முயற்சியோடு அடித்துக் கொண்டிருந்தது. அடித்துக் கொண்டிருந்தது. இன்னும் அடித்துக் கொண்டிருந்தது.

இப்போது மணி ஏழு! அவள் இன்னமும் எழுந்த பாடில்லை. தினமும் இது ஒரு தொடர் கதை தான். அந்த அலாரத்தின் நிலைமையோ பரிதாபத்திலும் பரிதாபம்! அந்தக் கடிக்காரதிற்கு மட்டும் கையிருந்தால் தூங்கிக் கொண்டிருந்த  ஜானவியை நேராய் சென்று அடித்தே இருக்கும். நல்ல வேளையாக அதற்கு கையில்லை. ஆனால் ஜானவிக்குக் காதிருந்ததே!

அவளுக்கு அலாரத்தின் ஒலி கேட்கவில்லையா என்ன? கேட்கும். கேட்டாலும் அதை எழுந்து அணைக்க மாட்டாள். அது அப்படி அடித்துக் கொண்டிருந்தால்தான் அவள் உறக்கம் எட்டு மணிக்காவது கலையும்.

ஜானவியின் வீடு. நடுத்தர வர்க்கம் என்பதை அப்பட்டமாய் பிரதிபலித்தது. கணிசமான அளவில் இரண்டு படுக்கை அறைகள். ஒருவர் மட்டுமே நின்று சமைக்கும் அளவிற்கான சமையலறை. சிறியதாக ஒரு ஹால். அந்த சிறிய ஹாலிற்குள் குளிர்சாதனப் பெட்டி, டிவி, தேவையில்லாமல் ஒரு டைனிங் டேபிள், ஒரு பெரிய சோபா செட்.

அந்த சோபாவில் தினமும் காலை அமர்ந்து கொண்டு செய்தித் தாள் படிக்கும் ஜானவியின் தந்தை சங்கரன். நான்கு வருடம் முன்பாகவே ஓய்வு பெற்றுவிட்ட அரசு பள்ளி ஆசிரியர்.  ஆசிரயராக பணி புரிந்திருந்தாலும் அவர் அதிகம் பேச மாட்டார். கணிதவியல்தான் அவர் பாடம் என்பதால் அதிகம் பேச வேண்டிய தேவையும் அவருக்கு இருந்ததில்லை. வீட்டிலும் கிட்டத்தட்ட அப்படிதான்.

இப்போது அவருக்கு காபி கொண்டு வந்து வைத்தாரே! அவர்தான் ஜானவியின் தாய் கிரிஜா. தினமும் காலை அவருக்கு ஒரு பழக்கம். தொலைக்காட்சி பெட்டியை இயக்கிவிட்டு சமையல் செய்து கொண்டே ராசிபலன் கேட்பது.

வயது முதிர்ந்த ஒருவர் பட்டை கொட்டை எல்லாம் போட்டுக் கொண்டு பக்திப் பழமாய் ராசி பலன் சொல்லிக் கொண்டிருக்க, கிரிஜாவிற்கு அதனைக் காதில் கேட்டுக் கொண்டே வேலை செய்தால்தான் வேலையே ஓடும்.

கிரிஜா சமையலை முடிக்கும் போது புறப்பட தயார் நிலையில் வெளியே வந்து நின்றான் ஜானவியின் தம்பி ஜெகன். பிபிஏ முதலாம் ஆண்டு மாணவன். கல்லூரிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கான காலை உணவும் டிபன் பாக்ஸையும் கிரிஜா எடுத்து தர,

“தோசையை சுட்டு வைக்காதம்மா... வறட்டி மாதிரி ஆயிடுது” என்று புலம்பிக் கொண்டே சாப்பிட்டான் அவரின் செல்லப் புத்திரன்.

“இல்லடா... நீ கிளம்பிட்டியோன்னு நினைச்சு சுட்டு வைச்சிட்டேன்” அவ்வளவு வேலையிலும் மகனிடம் முகம் சுளிக்காமல் பதில் சொன்னார் அவனின் குடியிருந்த கோவில்.

ஜெகன் மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த ஒரே மகன். ஆதலால் அவன் கிரிஜாவிற்கு கொஞ்சம் ஆதீத செல்லம்தான்.

வாசல் வரை மகனை வழியனுப்பிவிட்டு வந்த கிரிஜா திரும்பி சமயலறைக்குப் போக, அங்கே சாமான்களை எல்லாம் கழுவி வைத்துக் கொண்டிருந்தாள் ஓர் இளம்பெண். அவள்தான் ஜானவியின் தங்கை ஜமுனா.

கல்லூரி படிப்பு முடித்து விட்டு மும்முரமாய் வேலை தேடும் பேர்வழி என்று வீட்டில் இருக்கிறாள்.

“என்னடி... சொல்லாம எந்த வேலையும் செய்ய மாட்ட” என்று கிரிஜா மகளை சந்தேகமாய் ஏற இறங்கப் பார்க்க,

“எப்பவும் இந்த வேலையை நான்தானே செய்றேன்” என்று அவள் பூசி மொழுகினாலும் காரணம் வேறு.

“செய்வ... ஆனா அதுக்கு நான் பத்து தடவை உன்கிட்ட பாடமா படிக்கணுமே” என்று கிரிஜா சொன்னதும்,

“இல்லம்மா... அது... ஃப்ரெண்டுக்கு கல்யாணம்... அன்னைக்கு ஒரு இன்விடேஷன் வீட்டுக்கு வந்துச்சே... நீ கூட யாருன்னு கேட்டியே”

“ஆமா”

“அதான் கல்யாணத்துக்குப் போகணும்”

கொஞ்ச நேரம் யோசித்தவர், “எப்போ போக போற... எந்த இடம்” என்று கேட்க,

“மாதவரம்தான் ம்மா... இன்னைக்கு ஈவினிங் ரிசப்ஷன்” என்றாள்.

“சரி... ஜெகி காலேஜ்ல இருந்து வந்ததும் அவனைக் கூட்டிட்டுப் போயிட்டு வா” என்று சொல்லிவிட்டு கிரிஜா மீண்டும் தன் வேலையில் இறங்க,

“அவன் எதுக்கும்மா... நானே போயிட்டு வந்திருவேன்” என்றாள் ஜெயா.

“அப்படின்னா சீக்கிரம் கிளம்பிப் போயிட்டு நேரத்தோடு வீடு வந்து சேரணும்” என்று ஒரு தாயின் கண்டிப்போடு அவர் சொல்ல, அதற்குப் பிறகு தானே ஜமுனா சொல்ல வேண்டிய விஷயமே இருக்கிறது.

“ம்மா... போகும் போது கிஃப்ட் வாங்கிட்டுப் போகணும்” என்று ஜமுனா இழுக்க, “என்ன... காசு வேணுமா?” என்று அவர் அவளைக் கூர்மையாய் பார்க்க, பதிலில்லை.

மெளனமாக அவரை நெளிந்து கொண்டே பார்த்த மகளிடம் பருப்பு டப்பாவிலிருந்து ஒரு பர்ஸை எடுத்து அம்பது ரூபாயை நீட்டினார்.

ஜமுனா முகம் களையிழந்து போனது. “ம்மா... போயிட்டு வரவே அம்பது ரூபா ஆகும்... இதுல கிஃப்ட்டுக்கு” என்று அவள் சொல்லவும் அவளை முறைத்துப் பார்த்துவிட்டு அடுத்து ஒரு ஐம்பது ரூபாயயை பாவம் பார்த்து நீட்டினார் கிரிஜா!

“ம்மா... கிஃப்ட் எல்லாம் அம்பது ரூபாய்க்கு” என்று சொல்லி ஜமுனா இழுக்க, “நீ கல்யாணத்துக்கே போக வேண்டாம்... அந்த காசை கொடு” என்று கிரிஜா கடுப்பாகிக் கேட்டதும், “இல்ல இல்ல... போதும்” என்று ஜமுனா அந்தக் காசும் பறிபோய் விடப் போகிறது என்ற பயத்தில் ஓடிவிட்டாள்.

எப்போதும் போல உள்ள நடுத்தர குடும்பங்களில் நடக்கும் சுவாரசியமே இல்லாத காட்சிகள்தான். ஆனால் இந்த சுவாரசியமே இல்லாத கூட்டத்தில் சுவாரசியமாய் ஒருத்தி இருந்தாள். அவள்தான் மீனாகுட்டி. ஜானவியின் மகள்.

“ஏ மீனு... என்ன வயசாகுது உனக்கு?” என்று மிரட்டலாய் ஜானவியின் குரல் உச்சஸ்தாயில் கத்தத் தொடங்கியிருந்தது.

இந்த சத்தம் கேட்டு கிரிஜா அவசரமாய் ஜானவி அறைக்குப் போக, இன்னும் அந்த அலாரம் நிறுத்தப்படாமல் அடித்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால் அந்த அலாரத்தால் செய்ய முடியாத வேலையை மீனா செய்துவிட்டாள். ஜானவியை வெற்றிகரமாக எழுப்பிவிட்டாள். ஆனால் எப்படி?

ஈரமான படுக்கை விரிப்பைப் பார்த்துக் கடுப்பாகி ஜானவி எழுந்து மீனாவை அடிக்கப் போகும் சமயத்தில் அலறியடித்துக் கொண்டு மீனா தன் பாட்டி கிரிஜாவிடம் அடைக்கலம் புகுந்துவிட, ஜானவியின் கோபம் இன்னும் அதிகமாய் ஏறியது.

“பாரும்மா இவ... பெட்டை ஈரம் பண்ணிட்டா...” என்ற ஜானவி கோபமாய் மகளை அடிக்க வர, “விடுடி குழந்தைதானே” என்று கிரிஜா பேத்தியை அணைத்துக் கொண்டார்.

“குழந்தையா? ஃபர்ஸ்ட் ஸ்டேன்டர்ட் போயிட்டா உங்க பேத்தி” என்று இன்னும் ஜானவி உக்கிர கோலத்தில் நின்றிருந்தாள்.

“ஃபர்ஸ்ட் ஸ்டேன்டர்ட்னாலும் அவ குழந்தைதான்டி? அவளுக்கு அவசரமா வந்திருக்கும்... தூக்கத்திலேயே போயிட்டா போல” என்று கிரிஜா பேத்திக்குப் பரிந்து பேச, ஜானவியின் பார்வை மகளை விடாமல் படையெடுத்துக் கொண்டிருந்தது.

“சும்மா சமாளிக்காதீங்க.... ஸ்கூல் போறா... இன்னும் பெட்ல ஈரம் பண்ணிட்டு இருக்கா?” என்று ஜானவி கிரிஜாவையும் மீறி மகளை அடித்து விட்டாள்.

மீனா மிரட்சியோடு தன் பாட்டியைக் கட்டி கொண்டு அழ, “அறிவே இல்ல ஜானு உனக்கு... குழந்தையைப் போய்” என்று மகளை திட்டிய அதே நேரம், “சரி டா... சரி டா... அம்மாவை அடிக்கலாம்” என்று பேத்தியை அவர் சமாதானம் செய்தார்.

ஆனால் ஜானவியின் கோபம் இன்னும் இறங்கியபாடில்லை. “திரும்பியும் இதே போல பண்ணி பாரு” என்று மகளைப் பார்த்து அவள் கண்டிக்க, மீனா இன்னும் சத்தமாய் அழுதாள்.

“போதும் விடுடி” என்று கிரிஜா பேத்தியை வெளியே அழைத்துக் கொண்டு சென்றுவிட,  இந்த களேபரத்திலும் இன்னும் அந்த அலாரம் அடித்துக் கொண்டிருந்தது.

“இது வேற” என்று ஜானவி அதனை அணைக்க, “மணி எட்டா” என்று அப்போதே நேரத்தைப் பார்த்து அதிர்ச்சியோடு கண்களை அகல விரித்தாள்.

நேரம் கடந்து எழுந்தது என்னவோ இவள். ஆனால் வெளியே வந்து சமபந்தம் இல்லாமல் தன் அம்மாவிடம் எரிந்து விழுந்தாள்.

“என்னம்மா... என்னைக் கொஞ்சம் சீக்கிரம் எழுப்ப கூடாதா?”

‘ஆமா... எழுப்பிட்டாலும் இவ அப்படியே எழுந்திருவா... நம்ம மேலேயே எரிஞ்சு விழுவா?’ என்று கிரிஜா வாய்க்குள் முனக, “என்ன?” என்று ஜானவி உரக்க கேட்கவும்,

“ஒன்னும் இல்ல... நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா... பாப்பாவை நான் ஸ்கூலுக்கு ரெடி பண்றேன்னு சொன்னேன்” என்று கிரிஜா சமாளிப்பாய் சொல்லி விட்டு மீனாவை அழைத்து சென்றுவிட்டார். அந்த வீட்டில் எல்லோருக்குமே ஜானவியைப் பார்த்தால் கொஞ்சம் பயம். அதனால்தான் அவளை காலையில் எழுப்பக் கூட யாரும் வர மாட்டார்கள். சரியான டென்ஷன் பேர்வழி.

ஆனால் அது அவள் குணாதிசயம் அல்ல. அவள் கடந்து வந்த பாதையையும் செய்யும் வேலையும் அவளை அப்படி மாற்றிவிட்டது.

ஜானவிக்குத் திருமணமாகி ஆறு வருடம் ஆகிறது. அவள் இளங்கலை கணிதம் சேர்ந்த போது அவளுக்குத் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்த சங்கரன் அவள் படிப்பின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தில் திருமணம் முடித்துவிட்டார்.

பாவம்! சங்கரனும் என்ன செய்வார். மூன்று மகள் ஒரு மகன் என்று கட்டுப்பாடு இல்லாமல் குழந்தைகளைப் பெற்றுவிட்டார். அவரின் பணி ஓய்வு காலம் நெருங்கிவிட்ட நிலையில்  எல்லோரையும் கரை சேர்க்க வேண்டுமே என்ற எண்ணத்தில் அவளுக்கு சீக்கிரம் திருமணம் முடித்து வைத்தார்.

முதல் மகள் ஜோதிக்கும் அப்படிதான். என்ன? அவளுக்கு கல்லூரி சேர்ந்து முடிக்கும் வரை எந்த மாப்பிளையும் அமையவில்லை. அவள் கொஞ்சம் பூசினார் போல் தேகம். உயரம் குறைவு என்பதால் அவள் பார்க்க குண்டு போன்று தெரியும். இதெல்லாம் தாண்டி படிப்பு, உயரம், ஜாதகம், ஜோசியம், வரதட்சணை என்று திருமண சந்தையின் எதிர்பார்ப்புகளில் பெண் பார்க்கும் படலத்திலேயே வருடங்கள் நீட்டித்துவிட்டது. ஆனால் அதுவும் நல்லதுக்குத்தான் என்ற வகையில் ஜோதிக்கு அவளைப் புரிந்து கொண்ட  அருமையான கணவன் அமைந்தான்.

ஆனால் ஜானவிக்கு அப்படியே நேர்மார். ஒல்லியான தேகம். உயரம் வேறு. அவளிடம் அழகு என்பதைத் தாண்டி ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது. அதனால் விரைவாக அவளுக்குத் திருமணம் கூடி வந்தது. இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதும் போது அவள் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தாள்.

குழந்தை பிறந்ததினால் மூன்றாம் ஆண்டு படிப்பு தடைப்பட்டது. அப்படியும் அவள் விடவில்லை. படிப்பை முடித்தே தீருவேன் என்ற உறுதியோடு அவள் கல்லூரிப் படிப்பை முடித்தாள்.

அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சங்கரனின் பிள்ளைகள் நால்வரும் புத்திசாலிகள்தான். பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு எல்லாவற்றிலும் பள்ளி முதல் இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்கள்.

ஆனால் ஜானவி கொஞ்சம் அதிபுத்திசாலி. படிப்பின் மீது ஆர்வத்தைத் தாண்டிய ஒரு காதல். அதனால் அவள் பன்னிரெண்டாம் வகுப்பில் மாவட்டத்தில் முதலிடம். கணக்கில் முழு மதிப்பெண்.

அவள் மதிபெண்ணிற்கு பொறியியலே கிடைத்திருக்கும். ஆனால் அவளுக்குத் திருமணம் செய்து வைக்கும் முடிவோடு சங்கரன் இருந்ததால் தேவையில்லாத செலவை அவர் இழுத்துப் போட்டுக் கொள்ள விரும்பவில்லை. ஜானவியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஜானவிக்குத்  திருமணம் ஆன பின்பும் சங்கரன்தான் அவளுக்குக் கல்லூரி கட்டணம் கட்டினார். இதற்கிடையில் ஜானவிக்கும் அவள் கணவன் ராஜனுக்குமான உறவு ஆரம்பத்திலிருந்தே சுமூகமாக இல்லை.

அவள் கல்லூரிக்குப் போய் கொண்டிருந்ததால் வீட்டு வேலைகள் சரியாக செய்வதில்லை என்று ராஜனின் தாயிற்கு பெரிய குறை. படிப்பு வருமளவுக்கு ஜானவிக்கும் வீட்டு வேலை செய்ய வருவதில்லை என்பது உண்மைதான். அதற்காக தினமும் ஜானவியின் மாமியார் அவள் கணவனிடம் குற்றப்பத்திரிக்கை வாசிக்க, இவளுக்குத் தலைவலிதான்.

ஆனால் அந்த களேபரத்திலும் அவள் படிப்பாள். இன்னும் கேட்டால் கணக்கு போடுவது தான் அவளின் அனைத்து உளைச்சல்களையும் தீர்த்து வைக்கும் அவளின் ஸ்ட்ரெஸ் பர்ஸ்டர். அவள் கணக்குப் போட ஆரம்பித்தால் நேரம், இடம், சூழ்நிலை என்று எல்லாமும் மறந்து போகும். அதிலேயே முழுவதுமாக மூழ்கிவிடுவாள்.

இவள் படிப்பதே பிடிக்காதவர்களுக்கு வேலைக்குப் போகிறேன் என்று சொன்னால் சம்மதிப்பார்களா? பிரச்சனைகள் குழப்பங்கள் என்று ஜானவி ராஜனின் உறவு சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை.

இதனால் ஜானவி அம்மா வீட்டிற்கு அடிக்கடி வந்து விடுவாள். ஆனால் வேறுவழியின்றி சில சமாதான உடன்படிக்கைகளுக்குப் பின்னர் மீண்டும் கணவன் வீடு செல்வாள்.

இப்படியே நிலைமை நீடித்துக் கொண்டிருந்தது.  மீனா வளர வளர அவளுக்கும் அவர்கள் சண்டைகள் பிடிபட ஆரம்பித்தது. அதனை விரும்பாத மீனா தன் அம்மம்மா வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அடம் பிடிப்பாள். ஜானவிக்கும் ஒரு விதத்தில் அங்கே இருப்பதுதான் சந்தோஷம்.

இப்படி அவர்கள் இருவரும் அடிக்கடி அங்கே தங்கிவிட்டுத் திரும்ப, அப்படி ஒரு நாள் ஜானவி அம்மா வீட்டிலிருந்து கணவன் வீடு திரும்பிய போது அவளுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

ஜானவி வீட்டின் கதவைத் தட்டித் தட்டிப் பார்த்துத் திறக்காமல் போக, பின்பக்கமாய் சென்றாள். அப்போது ராஜன் பின்வாசல் புறம் கதவைத் திறந்தான்.

அவன் முகத்திலிருந்த பதட்டத்தை அவள் கவனிக்கவில்லை. “நான் முன்னாடி தானே தட்டினேன்... ஏன் பின்னாடி வந்து திறக்குறீங்க?” என்று கேட்டுக் கொண்டே அவள் உள் நுழைந்துவிட, அப்படியே அதிர்ச்சியாய் நின்றுவிட்டாள். யாரோ முகம் தெரியாத பெண் அவள் கணவனின் பின்னோடு நின்று கொண்டிருந்தாள்.

“யாரும்மா இந்த ஆன்ட்டி?” என்று மீனு கேட்க ஜானவியும் அதே கேள்வியோடு கணவனை முறைத்துப் பார்க்க, “அது ஜானு... பக்கத்து வீட்டுல குடியிருக்காங்க. அம்மாவைப் பார்க்க வந்தாங்க... பேசிட்டு இருந்தோம்” என்று தடுமாறி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அந்தப் பெண் வேகமாக ஜானவியைக் கடந்து சென்றுவிட்டாள்.

ஜானவி சில நொடிகள் ஊமையாக நின்று கணவன் முகத்தைப் பார்க்க அவன் பார்வையில் உண்மை இல்லை.

அவனோ எதுவும் நடக்காதது போல் வெகு இயல்பாக,  “வீட்டுக்கு வர்றேன்னு சொல்லி இருந்தா... நானே வந்து உங்களைக் கூட்டிட்டு வந்திருப்பேன் இல்ல” என்று சொல்லியபடி அவன் மகளைத் தூக்கிக் கொள்ள, இத்தனை அனுசரணையாய் அவன் பேசியதே இல்லையே என்று அவனை நம்பாமல் பார்த்துவிட்டு வேகமாக அவள் அறைக்குள் நுழைந்தாள்.

பின்னிருந்து அவன், “ஜானு” என்று அழைப்பதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல்!

அறை வாசலிலேயே சிலையாக நின்றவளுக்கு அவர்கள் படுக்கை இருந்த கோலமே என்ன நிகழ்ந்திருக்கும் என்பது புரிந்தது. அழவோ கத்தவோ இல்லை கணவனின் சட்டையைப் பிடித்து கூச்சல் போடவோ செய்யாமல் மௌன கெதியில் தன் பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு மீனாவையும் அழைத்துக் கொண்டு வெளியேறிவிட்டாள்.

அதற்குப் பின் நிறைய சமாதானங்கள் சண்டைகள் என்று எல்லாவற்றுக்கும் உச்சம் வைத்தார் போல ராஜன் அவளிடம், “நீ ஒழுங்கா என் கூட இருந்திருந்தா நான் ஏன்டி இன்னொருத்தியைத் தேடிப் போறேன்” என்றான்.

இத்தனை நாளாய் அவனுடன் தான் என்ன மாதிரியான வாழ்கையை வாழ்ந்திருக்கிறோம் என்று அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. இத்தனைக்குப் பின்னும் அந்த உறவை ஒட்ட வைத்துக் கொள்ள அவளுக்கு விருப்பமில்லை.

அந்த இழப்பும் வலியும் ஒரு வருட காலம் அவளை மொத்தமாய் முடக்கிப் போட்டது. சங்கரனும் கிரிஜாவும் கூட எப்படியாவது அவளை சமாதானம் செய்து கணவனோடு அனுப்பிவிடவே பார்த்தார்கள்.

இந்த சூழ்நிலையில்,  “நீ பொறுப்பா குடும்பம் நடத்தியிருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்குமா?” என்று வீட்டிற்கு வந்திருந்த அவள் தமக்கை ஜோதி இவள் மீதே குற்றம் சாட்டினாள்.

“அப்போ நடந்த எல்லாத்துக்கும்  நான்தான் காரணங்குறியா?”

“ஆமா... நீதான் காரணம்... உன் வாழ்க்கையை நீதான் நாசமாக்கிகிட்ட... ஒழுங்கா குடும்பம் நடத்தாம எப்ப பாரு சண்டை போட்டுட்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டு இருந்தா...” ஜோதியின் வார்த்தைக்கு ஜானவியும் விட்டுக் கொடுக்காமல் சரிக்கு சரியாய் நின்று சண்டை போட்டாள். வார்த்தைகள் வளர்ந்து, “நீ இங்க இருக்குற வரைக்கும் நான் இந்த வீட்டுப் பக்கமே வர மாட்டேன்” என்று கோபித்துக் கொண்டு ஜோதி சொல்ல,

“அதெல்லாம் உன் இஷ்டம்... ஆனா நான் இங்க இருந்து போகணும்னு நீ சொல்லக் கூடாது” என்றாள் ஜானவி. அந்த வீடே போர்க்களமாக மாறியது. அதற்குப் பின் யார் வார்த்தைகளும் ஜோதியிடம் எடுபடவில்லை. “அவசரப்படாதே ஜோதி” என்று கூறிய கணவனை ஒரு பார்வையில் அடக்கிவிட்டு தன் மகன்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு போய்விட்டாள்.

சங்கரனுக்கும் கிரிஜாவிற்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. அந்த சூழ்நிலையை அவர்கள் எப்படி சமாளிப்பதென்று புரியாமல் திணறினர். அடைக்கலமாக வந்து நின்ற மகளைத் துரத்தி அடிக்காவா முடியும். இருப்பினும் அவள் இருப்பதை அவர்களும் விரும்பவில்லை.  ஜானவிக்கு இளையவள் ஒருத்தி இருந்தாளே. அவள் திருமணத்தின் போது இவள் இப்படி நிற்பது சரியாக வருமா? தேவையில்லாத சங்கடங்கள்தான்.

இதையெல்லாம் யோசித்த கிரிஜா, “ஜோதி சொல்றதுலயும் நியாயம் இருக்கு ஜானு... உனக்கும் அவளுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசுலதானே கல்யாணம் பண்ணி வைச்சோம்... அவ எப்படி குடும்ப நடத்துறா பொறுப்பா... ஆனா நீதான் பிரச்சனை சண்டைன்னு எல்லாத்தையும் இழுத்துட்டு வந்து எங்க மானத்தை வாங்குற. உன்னால எங்க நிம்மதியே போச்சு? இப்ப அக்காவும் வீட்டை விட்டுப் போயிட்டா... ஜமுனாவுக்கு வேற கல்யாணம் பண்ணனும். உன்னை இப்படி வைச்சுக்கிட்டு” என்றவர் மேலும் பொறுமையோடு,

“நான் சொல்றதைப் புரிஞ்சுக்கோ ஜானு... ஆம்பளைங்களுக்கு இயல்பாவே சலன புத்தி... அந்த தப்புக்கு ஒரு வகையில நீயும் இடம் கொடுத்துட்ட... கொஞ்சம் பொறுப்பா நீ இருந்திருந்தா” என்றவர் சொன்னதும் ஜானவிக்குக் கோபம் பொங்கியது.

“ம்மா போதும்” என்று கை காட்டி அவர் பேச்சை நிறுத்தியவள்,

“அந்த வீட்டுக்குப் போய் என்னை அந்த ஆள் கூட வாழுன்னு மட்டும் சொன்னன்னு வைச்சுக்கோ... நான் செத்துப் போயிடுவேன்” என்றாள் தீர்க்கமாக!

கிரிஜா அதிர்ந்து மகளைப் பார்த்தவர் அதோடு மகளிடம் அது பற்றிப் பேசவே இல்லை. ஜானவியும் அதற்குப் பிறகு ஒரு ஷேர் மார்கெட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள். குறுகிய காலகட்டத்தில் அதிக அளவில் அவள் பணம் ஈட்டத் தொடங்க ஒரு வருடத்தில் சங்கரனின் குடும்பப் பொருளாதாரம் அவளை நம்ப ஆரம்பித்தது.

ஜெகன் கல்லூரிக்குக் கட்டணம் கட்டியது தொடங்கி நாளை ஜமுனாவிற்குத் திருமணம் என்றாலும் அது அவள் தயவில்தான். ஆனால் கிரிஜா தேவையென்று கேட்டால் ஒழிய ஒரு ரூபாய் கூட அவள் அகௌன்ட்டிலிருந்து வெளியே வராது.

சூழ்நிலைகள் மாறினாலும் ஜோதியின் கோபம் மாறவில்லை.  ஜோதி சொல்லிவிட்டு சென்றது போல அதற்குப் பிறகு அவள் வீட்டுப் பக்கமே வரவே இல்லை. ஆனாலும் எல்லோரையும் ஏதாவது குடும்ப விழாவில் பார்த்தால் பேசிவிட்டுப் போவாள். ஜானவியை மட்டும் தவிர்த்துவிட்டு!

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு விதம். ஒருவர் வாழ்க்கையின் அனுபவம் நிச்சயம் மற்றவர் வாழ்க்கைக்குப் பொருந்தாது. ஜோதியைப் போல் ஜானவியால் ஒருநாளும் பொறுப்பாக இருக்க முடியாது. விட்டுக் கொடுத்துப் போக தெரியாது. மற்றவருக்காக யோசிக்குமளவுக்கு பரந்த மனப்பான்மையும் கிடையாது. பொறுமைக்கும் அவளுக்கும் சம்பந்தமே கிடையாது.

ஆனால் அவளுக்கு கணிதவியல் தெரியும். பங்கு சந்தையில் எப்படி முதலீடு செய்தால் அதை எப்படி பன்மடங்கு லாபமாக மாற்றலாம் என்று தெரியும்.

பாசம் பந்தம் இவற்றை எல்லாம் தாண்டி பணம் இருந்தால்தான் இந்த சமுதாயத்தில் மதிப்பு என்ற மெடிரியலிஸ்டிக் மனநிலைக்கு வந்திருந்தாள் ஜானவி.

வாழ்கையில் எல்லாவற்றையும்  கணக்குப் போட்டு வெறும் கணக்கீடாக மட்டும் பார்க்கத் தெரிந்த இந்த காரிகைக்குக் காதல் பாடம்(ல்) கற்றுத் தர ஒருவன் வருவான்.

 

Rathi, Muthu pandi and rachel.kumar have reacted to this post.
RathiMuthu pandirachel.kumar
Quote

Nice

You cannot copy content